திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 4)

ஏழாம்பத்து

இரண்டாம் திருவாய்மொழி

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல் வண்ணா கடியை காண் என்னும் வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே

– மிகுந்த துயரத்தினால் பரவசம் அடைந்தவளாக, இட்டு வைத்த இடத்திலேயே கிடக்கும் காலையும் கையையும் கொண்டவளாக உள்ளாள். அந்தத் துயரம் முற்றியதால் ஜுரம் வந்தவர்கள் போன்று குலைந்து எழுந்து உலவியபடி இருக்கிறாள். தொடர்ந்து மயங்குகிறாள். பின்னர் நேரத்தை உணர்ந்தவளாக, மயக்கம் தெளிந்து எழுந்து, “அவன் வரக்கூடும்” என்று எண்ணித் தனது கைகளை குவித்து வணங்குகிறாள். அவன் வரவில்லை என்பதால், “காதலானது கஷ்டத்தையே தருகிறது” என்று வெறுத்து மூர்ச்சை அடைகிறாள். “தனக்குள்ளே அனைத்தையும் ஒதுக்கிக் காக்கின்ற, அளவற்ற ஸமுத்ரத்தின் இயல்பு கொண்டவனே! நீ எனக்குக் கொடியவனாக நின்றாய்”, என்கிறாள். “அடியார்களைக் காப்பதில் தயாராக அனைத்து திசைகளிலும் பார்த்தபடி உள்ள சக்கரத்தாழ்வானை வலது திருக்கரத்தில் கொண்டவனே”, என்கிறாள். இவ்விதம் புலம்பும்போது நடுவில் சற்று இளைப்பாறி, “திருக்கரமும் திருச்சக்கரமும் என வருவாய்” என்று பலமுறை கூறியபடி மயங்குகிறாள். இவ்விதம் இவளைத் துயரத்தில் ஆழ்த்தி தண்டிக்கும்விதமான ஒரு பாவனையைச் செய்யும் திருவரங்கத்தில் உள்ளவனே! இவள் விஷயத்தில் நீ என்ன சிந்திக்கிறாய்?

– “உம்மையொழிய ஜீவிக்கமாட்டாத இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறதென்?” என்கிறாள்.

– “உன்னை அல்லாமல் பிழைப்பதற்கு வழியற்ற இவள் விஷயத்தில் நீ செய்தருள நினைத்தது என்ன?”, என்று திருத்தாயார் கேட்கிறாள்.

– (இட்டகாலிட்டகையளாயிருக்கும்) இவளுக்கு நீர் உடம்பு கொடுக்க வேண்டா, இவளவயவங்கள் இவளதீநமாகப் பண்ணவமையும். “ஸகீபிர் ந்யஸ்த ப்ரகீர்ண பரதந்த்ரவிபாண்டுராங்கீ” என்று, தோழிமார் பொகட்டவிடத்தே கிடக்குமித்தனை. ஸ்வாதீநமல்லாமையாலே தோழிமாரிட்டு வைத்த காலும் கையுமாயிருக்கும். (எழுந்துலாய் மயங்கும்) அவியும் விளக்கு கிளர்ந்தெரியுமாப்போலே அடியற்ற வெழுச்சியும் அடியற்ற வுலாவுகையுமாயிரா நின்றது; அது கிளம்பின ஸமாந்தரத்திலே அவியுமாபோலே மயங்கா நின்றாள். (கைகூப்பும்) உணர்த்தியில் தொழுமவளல்லள், மயங்கினாள் தொழாதிருக்க வல்லளல்லள், ஸாதந புத்த்யா தொழுமதில்லை; ஆற்றமையாலே வருமது தவிரமாட்டாள். (கட்டமே காதலென்று) ஸாதந புத்த்யா தொழுதாளாகில் “கட்டமே காதல்” என்னக் கூடாதிறே. விச்லேஷத்தில் நலிவுக்குடலாகையாலே ப்ரேமம் தண்ணிதென்கிறாள். (கடல்வண்ணா கடியை காணென்னும்) கடல் ஸகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே யடக்கி, ஒன்றையொன்று நலியாதபடி நோக்குமாயிற்று; அப்படியே ஸர்வரக்ஷகனான நீ நிர்க்க்ருணனானாய் என்னும். அன்றிக்கே, பிரிந்தார்க்குத் தரிக்க வொண்ணாத வடிவு படைத்த நீ காதுகனாகா நின்றாய் என்னும். (வட்டவாய் நேமி) “சங்கு சக்கரங்கள்” என்று சொல்லும் நிலையும் போச்சு. இப்போது கண்ணுக்கு விஷயமன்றிக்கே யிருக்கச் செய்தேயும், அதினுடைய ஸந்நிவேசம் தீஸ்த்தமா யிருக்கிறபடி. பிடித்தவிடமெங்கும் வாயாய்க்கிடீரிருப்பது, விரோதி போக்கப் பரிகரமின்றிக்கே யிருக்கிறாயன்றே. (வந்திடாயென்றென்றே மயங்கும்) ஒருகால் “வந்திடாய்” என்றாலாறி யிருக்க வல்லளல்லளே. விடாய்த்தவன் தாஹம் சமிக்குந்தனையும் “தண்ணீர், தண்ணீர்” என்னுமித்தனையிறே; அப்படியே, “வந்திடாய், வந்திடாய்” என்றுருவ அத்தையே சொல்லும்; மற்றொன்றறியாள். (மயங்கும்) வாஸநையே உபாத்யாயராகச் சொல்லுமத்தனை. (என்றென்றே) வெண்கல த்வநிபோலே சொல்லுக்குச் சொல் ஓய்கிறபடி. (சிட்டனே) சிட்டன் திருமாலென்றபடி, பிராட்டி விஷயத்திலே வ்யாமோஹத்தை யுடையவனென்னுதல்; பிராட்டியைத் தன் பக்கலிலே பித்தாக்கித் துடிக்கப் பண்ணுமவனென்னுதல், உம்முடையபடி சால அழகிதாயிருந்தது. உம்மைப் போலே சில சிஷ்டர்களமைந்திருந்ததிறே அபலைகள் குடி கெடுகைக்கு, அழகிதாக ஆந்ருசம்ஸ்ய ப்ரதாநராயிருந்தீர். ப்ரஹ்மஹத்யைகளைப் பண்ணிப் பூணூல் வெளுக்க விட்டுக் கையிலே பவித்ரத்தையுமிட்டு ஓத்துச் சொல்லித் திரிவாரைப் போலேயிருந்ததி உம்முடையபடி. (செழுநீர்த் திருவரங்கத்தாய்) ச்ரமஹரமான நீரையுடைய கோயில். தண்ணீர்ப்பந்தலிலே காதுகரொதுங்கினவோ பாதியாகாதே நீர் இவ்வூரின் சாய்ந்ததும், (இவள் திறத்தென் சிந்தித்தாயே) ஸர்வஜ்ஞனுக்கும், இவளுக்கு ஓடுகிற தசைக்குப் பரிஹாரம் சிந்திக்க வேணுமென்றிருக்கிறாள் திருத்தாயார் தெளிவிருக்கிறபடி. “அவன் நினைவே கார்யமாய்த் தலைக்கட்டுவது” என்று அவனைக் காலைக் கட்டிக் கேட்கிறாள். “ச்ரேயோத்யாயதி கேசவ:” என்று அநுகூல விஷயத்தில் சித்திப்பானும் அவனிறே. இங்ஙனே மநோரதமாயே போமித்தனையோ, நிர்ணயாந்தமாகக் கடவதன்றே.

– (இட்ட கால் இட்ட கையளாயிருக்கும்) - இவளுக்கு நீ உனது திருமேனியைத் தரவேண்டும், இவளுடைய அவயவங்கள் இவளுக்கு அடங்கி நடப்பது போன்று செய்தலே போதுமானது. “யாரால் இட்ட கை, இட்ட கால்” என்பதற்கு விடை தருகிறார்; ஸகீபிர் ந்யஸ்த ப்ரகீர்ண பரதந்த்ரவிபாண்டுராங்கீ – தோழிகளால் இடப்பட்டு, பரந்து இருப்பதும், இவளுடைய கட்டுப்பாட்டில் இல்லாதவையும், மிகவும் வெளுத்திருப்பவையும் ஆகிய அவயவங்கள் கொண்டவள் - என்பதற்கு ஏற்ப, தோழிமார் இவளை எந்த நிலையில் கிடத்தினார்களோ அப்படியே கிடக்கிறாள். தனது கட்டுப்பாட்டில் இவ்ளுடைய சரீரமும் அவயவங்களும் இல்லை என்பதால், தோழிமார்கள் வைத்த நிலையிலேயே காலும் கையும் உள்ளன. – (எழுந்துலாய் மயங்கும்) - “இட்ட கால் இட்ட கை” என்று கிடக்கும் போது எழுந்து உலவுவது எப்படி என்பதைக் கூறுகிறார். அணையப் போகும் விளக்கானது பெரிதாக எரிவது போன்று, எந்தவிதமான பிடிப்பும் இல்லாத எழுச்சி மற்றும் எந்தவிதமான பிடிப்பும் இல்லாத உலவுதல் நடக்கிறது. அத்தகைய அக்னியானது கிளர்ந்து எழுந்தவுடன் அணைவது போன்று இவள் உடனேயே மயங்குகிறாள். (கை கூப்பும்) - விழித்திருக்கும்போது மட்டுமே தொழுதபடி உள்ளவள் அல்லள்; மயக்கம் அடைந்தபோதிலும், தனது பூர்வவாஸனையால் தொழாமல் இருப்பதில்லை. ஒரு ஸாதனமாக எண்ணித் தொழுவதில்லை, ஆற்றாமையால் வரும் அந்தத் தொழுதல் என்பதைத் தவிர்ப்பதில்லை. ஆனால் ஸாதனமாக எண்ணித் தொழுவதாகக் கொள்ளலாம் அல்லவோ என்பதற்கு விடை தருகிறார். (கட்டமே காதல் என்று) - ஸாதன புத்தியால் தொழுதாள் என்றால் “காதல் என்பது கஷ்டமே” என்று கூறமாட்டாள் அல்லவோ? பிரிவு ஏற்படும்போது துன்பம் அடைவதற்குக் காரணமாக உள்ளதால், காதல் என்பது தாழ்ந்ததே என்கிறாள். – (கடல்வண்ணா கடியை காணென்னும்) - வண்ணம் என்பதற்கு பாதுகாத்தல் அல்லது வடிவழகு என்பதாக இரண்டு பொருள்கள் கொண்டு, முறையே “கடல்” என்றும், “அன்றிக்கே” என்றும் தொடங்கி விளக்குகிறார். கடலானது அனைத்து பொருள்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு, ஒன்றை ஒன்று துன்புறுத்தாதபடி பார்க்கவல்லதாக உள்ளது. அதனைப் போன்று அனைத்தையும் காப்பாற்றும் நீ, என் விஷயத்தில் க்ருபை செய்பவன் ஆனாய். (வட்டவாய் நேமி) – “சங்கு சக்கரங்கள்” என்று கூறி வந்த நிலையும் அகன்றது. இவனைக் காணமுடியவில்லை என்றுள்ளபோது, “வட்டவாய்” என்று எப்படிக் கூறினாள் என்பதற்கு விடை தருகிறார். இப்போது கண்களால் காணலாம்படி இல்லை என்றாலும், முன்பு அவற்றைக் கண்டபோது புத்தியில் படிந்த அவற்றின் அமைப்பு அப்படியே இருக்கும் அல்லவோ? எங்கு நோக்கினாலும் வாயாக உள்ள சக்கரம். விரோதியைப் போக்க உதவி செய்பவர்கள் இன்றியே உள்ளாய் அன்றோ? – (வந்திடாயென்றென்றே மயங்கும்) – “என்றேன்றே” என்ற அடுக்குத்தொடருக்கான காரணம் கூறுகிறார்; “வந்திடாய்” என்று ஒருமுறை மட்டுமே கூறிவிட்டு, அதன் பின்னர் பொறுமையுடன் இருக்கவல்லவள் அல்லள். தாகம் எடுத்த ஒருவன், தனது தாகம் தீரும்வரை “தண்ணீர் தண்ணீர்” என்று கூறியபடியே இருப்பான்; இதனைப் போன்றே இவளும் “வந்திடாய், வந்திடாய்” என்று கூறியபடியே இருப்பாள்; வேறு எதனையும் அறியாள். (மயங்கும்) - வாஸனையை மட்டுமே ஆசானாகக் கொள்கிறாள். (என்றென்றே) - வெண்கல பாத்திரத்தின் ஒலி போன்று சொல்லுக்குச் சொல் ஓய்ந்தபடி உள்ளாள். (சிட்டனே) – ஸ்ரீக்கு இஷ்டமானவன் என்று கொண்டு சிட்டன் என்கிறார். பெரியபிராட்டி விஷயத்தில் ஆழ்ந்த மயக்கம் கொண்டவன். அல்லது பெரியபிராட்டியாரைத் தன் விஷயத்தில் பித்தாக்கி, அவளைத் துடிக்கும்படிச் செய்பவன் என்றும் கொள்ளலாம். அல்லது “சிட்டன்” என்பதற்கு “சிஷ்டன் - நல்ல ஒழுக்கம் கொண்டவன்” என்பதாகப் பொருள் கொண்டு, வெறுத்து வேறு ஒரு பொருள் கூறுகிறாள்; “உமது விதங்கள் மிகவும் நன்றாக உள்ளது. உம்மைப் போன்று சில சிஷ்டர்கள் அமைந்தார்களே இவளைப் போன்றுள்ள அபலைகளுடைய குடியைக் கெடுப்பதற்கு! அழகான கடாக்ஷத்தை நீவிர் மிகுதியாகவே கொண்டுள்ளீர்!”, என்று வெறுத்துக் கூறுகிறாள். இதனைக் கேட்ட ஸ்ரீரங்கநாதன், “கடாக்ஷம் இல்லாதவன் என்று நம்மை ஏன் வெறுக்கவேண்டும்? நம்முடைய வடிவத்தை பார்த்தாலே நாம் கடாக்ஷம் மிக்கவன் என்பது அறியலாம் அல்லவோ?” என்றான்; இதற்குத் திருத்தாயார் விடை தருகிறார்; “ப்ரஹ்மஹத்தி தோஷம் செய்துவிட்டு, பூணூலை வெண்மையாகக் கொண்டு, கையில் பவித்திரத்தையும் தரித்துக் கொண்டு, வேதங்களைக் கூறியபடி வருபவர்கள் போன்று உமது விதம் உள்ளது”, என்கிறாள். – (செழுநீர்த் திருவரங்கத்தாய்) - களைப்பைப் போக்கும்படியான திருக்காவேரியின் நீர் கொண்ட கோயில். ஸ்ரீரங்கநாதன் திருத்தாயரிடம், “நாம் கடாக்ஷம் இல்லாதவன் என்றால் பரமபதத்திலேயே இருந்திருப்போம் அல்லவோ? இங்கு திருவரங்கம் பெரியகோயிலில் வந்து சாய்ந்து கிடப்பதைக் கண்ட பின்னர், ‘இவன் கடாக்ஷம் மிக்கவன்’ என்று அனைவரும் அறிவார் அல்லவோ?”, என்றான். இதற்குத் திருத்தாயார், “தண்ணீர்ப்பந்தலில் ஒரு கொலைஞன் வந்து தங்கியது போன்று அல்லவோ நீவிர் இந்த ஊரில் வந்து சாய்ந்து கிடப்பது உள்ளது?”, என்றாள். (இவள் திறத்தென் சிந்தித்தாயே) - “என் செய்கிறாய்” என்று கேட்காமல், “என் சிந்தித்தாய்” என்று ஏன் கேட்க வேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; அனைத்தும் அறிந்தவனாக அவன் உள்ளபோதிலும், இந்த மகளுடைய நிலைக்கான பரிகாரம் குறித்து அவன் சிந்திக்கவேண்டும் என்று திருத்தாயார் நினைக்கிறார்; இதுவே இந்தத் திருத்தாயாருடைய சிந்தனையாகவும் உள்ளது. “அவனுடைய நினைவு என்பதே இங்கு கார்யமாக நிறைவேறி முடிக்கவேண்டும்” என்று அவனைக் கால்கட்டி கேட்கிறாள். ஆனால் அவன் இவ்விதம் சிந்திப்பானோ என்பதற்கு ப்ரமாணம் “ச்ரேயோத்யாயதி கேசவ: - தன்னை அண்டியவர்களுக்கு ஏற்படும் உயர்வையே கேசவன் எண்ணுகிறான்” என்பதற்கு ஏற்ப, அவன் தனது அடியார்கள் விஷயத்தில் சிந்தித்தபடியே உள்ளான். “இவ்விதம் சிந்தித்தபடியே இருப்பாயோ? இவள் விஷயத்தில் தீர்மானமாகச் செய்யவேண்டும்”, என்கிறாள்.