பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 13)

முதல்பத்து

இரண்டாம் திருமொழி

வண்டு அமர் பூங் குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்த ஆ காணீரே காரிகையீர் வந்து காணீரே

வண்டுகள் சூழ்ந்துள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை உடைய யசோதைப்பிராட்டி, தன் மகனாகவே கொண்டு வளர்க்கின்ற ஸ்ரீநந்தகோபரின் புத்திரனுடைய, அண்டங்களையும் அதனுள் இருக்கும் சேதந அசேதநங்களையும் முழுவதுமாக விழுங்கும்படியான திருக்கழுத்து அமைந்திருக்கும் விதத்தைக் காணுங்கள். அன்பு மிக்க அழகிய பெண்களே வந்து காணுங்கள்.

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருக்கைத்தலத்தில் நின்றும் திருக்கழுத்திலே பெருகுகிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருக்கைத்தலத்தினழகை அநுபவித்த வநந்தரம், திருக்கழுத்தினழகை யநுபவிக்கிறார். திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (வண்டமரித்யாதி) பிள்ளை சீறாமல் நாட பூவைப் பலகாலும் முடிக்கையாலே வண்டுகளுக்கு வஸ்தவ்யபூமி இவன் குழலிறே. தன் மகனாக ஸ்நேஹித்துக் கொண்டு வளர்க்கிற ஸ்ரீநந்தகோபர் மகனுக்கு. இவர் அடியறிந்தவராகையாலே “மகனாக” என்றது இவளபிமாந மென்கிறார். (அண்டமித்யாதி) அண்டங்களும் அண்டாந்தர்கதமான சேதநாசேதநங்களும் திருவயிற்றில் ஒரு புடையிலே அடங்கும்படி இடமுடைத்தான கண்டமென்கிறார்.”காரிகையீர்” என்று பக்தி பாரவச்யமுடையாரை அழைக்கிறார். மாமுனிகள் வ்யாக்யானம் - (வண்டமரித்யாதி) பிள்ளைகன் அனுங்காமைக்காகத் தாய்மார் தங்களை அலங்கரித்துக் கொண்டிருப்பார்களாய்த்து; அப்படியே இவளும் காலபுஷ்பங்களைப் பலகாலும் முடிக்கையாலே மது பாநம் பண்ணும் வண்டுகளுக்கு வஸ்தவ்ய பூமி இவள் குழலிறே. ஆகையாலே வண்டுகள் படிந்து கிடக்கிற பூவோடே கூடின குழலைவுடையளான யசோதைப்பிராட்டி தன் மகனாக ஸ்நேஹித்துக் கொண்டு வளர்க்கிற ஸ்ரீநந்தகோபர் மகனுக்கு. இவர் அடியறிந்தவராகையாலே “மகனாகக் கொண்டு” என்கிறார்; அவள், “தன் மகன்” என்றிறே நினைத்திருப்பது. மாமுனிகள் வ்யாக்யானம் - (அண்டமித்யாதி) அண்டத்தையும் அண்டாந்தர்வர்த்திகளான சேதநாசேதநங்களையும் திருவயிற்றில் ஒரு புடையிலே அடங்கும்படி விழுங்கின வென்னுதல்; ஒன்றும் பிறிகதிர்ப்படாதபடி எல்லாவற்றையும் சேர விழுங்கின வென்னுதல், (கண்டமித்யாதி) இப்படியிருந்துள்ள திருக்கழுத்தினழகிருந்தபடியைக் காணுங்கோள்; அபிரூபைகளான நீங்கள் வந்து காணுங்கோள். காரிகையார் - அழகுடைய ஸ்த்ரீகள்.

– திருக்கரங்களின் அழகை அனுபவித்த பின்னர் திருக்கழுத்தின் அழகை அனுபவிக்கிறார். – தங்களது பிள்ளைகள் அஞ்சாமல் இருப்பதற்காகத் தாய்மார்கள் தங்களை மலர்களால் அலங்கரித்துக் கொள்வார்கள். அது போன்றே யசோதைப்பிராட்டியும் அப்போது மலர்ந்த மலர்களைக் கொண்டு நீண்டகாலமாகத் தனது கூந்தலை அலங்கரிப்பாள். இப்படி உள்ளதால், தேனை உண்டு பண்ணும் வண்டுகள், “இதுவே நாம் நிரந்தரமாகத் தங்கக் கூடிய இடம்“ என்று இவள் கூந்தலிலேயே படிந்து கிடக்கும். இவ்வாறு வண்டுகள் பல படிந்து கிடக்கும் கூந்தலை உடையவளான யசோதைப் பிராட்டி, சிநேகம் ததும்ப தன்னுடைய புத்திரனாகவே வளர்க்கும் ஸ்ரீநந்தகோபர் புத்திரனுக்கு. இங்கு, பெரியாழ்வார் உண்மையை அறிந்தவர் என்பதால், “யசோதை தன் புத்திரனாகவே கொண்டு வளர்க்கிறாள்” என்கிறார். ஆனால், யசோதை இவ்வாறு கருதி வளர்க்கிறாளா என்றால் இல்லை, காரணம் இவளுக்கு க்ருஷ்ணன் தன்னுடைய பிள்ளையே ஆவான் என்றே சிந்தனை உள்ளது. – (அண்டம்) - அண்டங்களையும், அண்டத்தில் உள்ள சேதந அசேதநங்களையும் திருவயிற்றின் ஒரு பக்கத்திலே அடங்கும்படியாக விழுங்கியவன். அதாவது, இத்தகைய விசாலமான கழுத்தை உடையவன். ஏதும் விடாதபடி ஒருசேர எல்லாவற்றையும் விழுங்கியவன். (கண்டம்) - இப்படிப்பட்ட திருக்கழுத்தின் அழகைக் காணுங்கள். அன்பு மிக்குள்ள அழகிய பெண்களே! நீங்கள் வந்து காணுங்கள்.