திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 3)

ஏழாம்பத்து

இரண்டாம் திருவாய்மொழி

வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும் கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே

– தன்னை அடையாளம் இட்டுக் காண்பிக்கவில்ல வெட்கம் என்பதைச் சிறிதளவும் கூடக் கொண்டவளாக இல்லை; இதன் விளைவாக, தாயாகிய என் முன்பாக நிற்கிறோம் என்ற எண்ணமும் இன்றி “என் மணிவண்ணா” என்று அழைக்கிறாள். இப்படியாகத் துன்பம் நிறைந்த ஒலியைக் கேட்ட பின்னரும் அவன் வரவில்லை என்பதால் ஆகாயத்தைப் பார்த்து நிற்கிறாள். அங்கும் காணாமையால் மயங்குகிறாள். “அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தவல்ல அஸுரர்களுடைய உயிர்கள் அனைத்தையும், மீதம் வைக்காமல் அழித்த ஒரு வீரனே” என்கிறாள். அப்படிப்பட்ட விரோதிகளை அழித்த ஸாமர்த்யத்தை எண்ணி உருகியபடி உள்ளாள். “வேதங்களில் ‘ந சக்ஷு நாபச்யதி - கண்களால் காண இயலாதவன்” என்று கூறப்பட்டபடி, காண்பதற்கு அரியவனாக உள்ள நீ, உன்னை நான் காணும்படியாகச் செய்தருள வேண்டும்” என்கிறாள். உன்னை நீ காண்பிக்க எண்ணினால், “நாட்டில் உள்ளவர்கள் மற்றும் காட்டில் உள்ளவர்கள் என எந்தவிதமான வேறுபாடும் இன்றி உன்னைக் காணலாம்படிச் செய்த சக்கவர்த்தித்திருமகனாக வந்தவன் அல்லவோ? இடைச்சிகளுக்கு உனது வடிவைக் காண்பித்த க்ருஷ்ணனாக வந்தவன் அல்லவோ?”, என்கிறாள். இப்படிப்பட்ட அவதாரங்களுடைய காலகட்டத்தின் பின்னர் பிறந்தவர்களும் கூட உன்னை இழக்காதபடி உறுதியாக, கொடியுடன் கூடிய மதிள் சூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலில், மிகவும் அருகில் உள்ளவனே! இவள் இவ்விதம் துன்பத்தில் ஆழ்ந்தபடி இருப்பதற்கு நீ என்ன செய்தாய்?

– “இவள் இவ்வவஸ்த்தையை ப்ராப்தையாகைக்கு இவளிடையாட்டத்தில் நீர் செய்ததென்?” என்கிறாள்.

– “இவள் இந்த நிலையை அடைந்தமைக்கு நீ இவள் விஷயத்தில் என்ன செய்தாய்?”, என்கிறாள்.

(வட்கிலள் இறையும்) இதுக்கு சீயர் அருளிச் செய்வது, “இவள் முடிந்தாள்” என்று. வட்கென்று லஜ்ஜை. லஜ்ஜையையிட்டிறே ஸ்த்ரீத்வத்தை அறிவது. ஸ்வரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் ஸ்வரூபமும் போயிற்றுமத்தனையிறே. நிரூபகத்தையொழிய நிரூப்ய ஸித்தியில்லையே. இவள் லஜ்ஜை குடிபோனமைக்கு ஸூசகமென்? என்னில், (மணிவண்ணாவென்னும்) பர்த்ரு நாமக்ரஹணம் பண்ணாநின்றாள். பெற்ற தாய் முன்னே வடிவழகைச் சொல்லா நின்றாள். நான் கேட்டாலும் மறைக்குமத்தைத் தான் வெளியிடா நின்றாள். காமிநி ஆசைப்படுவது வடிவழகையிறே. தான் அகப்பட்ட துறையைச் சொல்லாநின்றாள். மெய்யே நினைத்து, மெய்யே சொல்லி, மெய்யே யநுபவிக்கை இவர்க்கு ப்ரக்ருதியாய்விட்டதே! “உன் சின்னமுந் திருமூர்த்தியும் சிந்தித்தேத்திக் கைதொழவே யருளெனக்கு” என்று அவன்பாடு இவள் வேண்டிக் கொள்வதும் இதுவேயிறே. (மணிவண்ணாவென்னும்) வடிவழகைச் சொல்லுவது, ஸௌலப்யத்தைச் சொல்லுவதாக நின்றாள். “அத்ருஷ்டபூர்வ வ்யஸநா ம்ருதுசீலாமநஸ்விநீ | தேந து:கேந ருததீ நைவமாகிஞ்சிதப்ரவீத்” என்று, எல்லா தசையிலும் வாய்விடக் கடவதன்றிக்கே யிருப்பதொன்றிறே இது. (வானமே நோக்கும்) “மணிவண்ணா!” என்கிற ஆர்த்தத்வநி கேட்டிருக்க க்ஷமனல்லன், த்வநி வழியே ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்கு வந்து தோன்றினாப்போலே தோன்றியருளுமென்று ஆகாசத்தையே பாராநிற்கும். “பரமாபதமாபந்ந:” என்கிற அதுக்கும் அவ்வருகேயிறே இவளுடைய தசை. அங்கு வந்து தோற்றக் காணாமையாலே, (மையாக்கும்) மயங்காநின்றாள்; அறிவு கெடா நின்றாள். – “மயங்கத் தீருமோ விரோதி கனத்திருக்கில்?” என்ன, (உட்குடை இத்யாதி) நான் வரப் பார்த்தால் ப்ரதிபந்தகமுண்டத்தனையல்லது, நீயே வரப் பார்த்தால் நிவாரகருண்டோ? உட்கென்று - மிடுக்கு. எதிரிகள் மிடுக்கருமாய் பலருமாமத்தனை யன்றே வேண்டுவது அழியச் செய்கைக்கு. (உண்ட) “பபௌ ஜநார்தந: க்ருத்த:” என்கிறபடியே. (ஒருவனேயென்னும்) வடிவழகுக்குப் போலியுண்டாகிலும் வீரத்துக்குப் போலி சொல்லலாவதில்லை, (உட்குடை இத்யாதி) தான் வீரபத்நியென்னுமிடந் தோற்றச் சொல்லாநின்றாள். “த்வம்நீசசசவத் ஸ்ம்ருத:” என்னுமவளிறே. (உள்ளுருகும்) “என்ன குறையுண்டாயிழக்கிறேன்?” என்று சிதிலையாம். விளம்ப ஹேதுவின்றிக்கே யிருக்க, பலியாதொழிந்தவாறே நீர்ப்பண்டம் போலே யுருகும். “உருகுங்காட்டில் அதீந்த்ரிய வஸ்து கண்ணுக்கிலக்காமோ?” என்பர்களே; “அருளாலே பெறுவார்க்கு அங்ஙனொரு நியதியுண்டோ?” என்னுமாயிற்று இவள். “ந சக்ஷுஷா பச்யதி” என்கிறது, தந்தாமே காண இழிவார்க்கு; “தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்று அவன்தானே காட்டுமன்று அருமையில்லை. அர்ஜுநாதிகளுக்கு திவ்ய சக்ஷுஸ்ஸைக் கொடுத்துக் காட்டிற்றிலையோ? (கட்கிலீ) கண்ணுக்கிலீ! என்றபடி. (உன்னைக் காணுமாறருளாய்) உன்னைக் காணவரிது ஸ்வயத்தத்தாலே பெறவிருப்பார்க்கன்றோ? உன்னருளடியாகக் காண்பார்க்கும் அரிதோ? அருளாலே நாம் ஆர்க்குக் காட்டினோம்? என்ன, (காகுத்தா) “ரூபௌதார்ய குணை:” என்றும், “ரூப ஸம்ஹநநம் லக்ஷ்மீம்” என்றும், நாகரிகர்க்கும் வநவாஸிகளுக்கும் காட்டிக் கொடுதிரிந்திலையோ? ஒருகால் செய்தது கொண்டோவென்ன, (கண்ணனே) ஸஜாதீயைகளான பெண்களுக்கு உன்னைக் காட்டிற்றிலையோ? (தாஸாமாவிரபூத்) ஒரு நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தாப்போலே யிருக்கை. (ஸ்மயமாகமுகாம்புஜ:) அவர்கள் முன்னே தோற்றின பின்பு வடிவில் பிறந்த செவ்வி. (பீதாம்பரதரஸ் ஸ்ரக்வீ) பெண்கள் நெஞ்சில் மறத்தை மாற்றுவது, பரிவட்ட வாய்ப்பையும் தோளில் மாலையையுங் காட்டியாயிற்று. (ஸாக்ஷாந் மந்மத மந்மத:) காமன் கையிலே நாடு படுமத்தைக் காமன் தான் படும்படி யிருக்கை. (திட்கொடியித்யாதி) “அவதார காலத்தில் உதவிற்றிலீரே!” என்ன; அவதார காலத்தில் உதவப் பெறாதார் இழவு தீர்க்கவன்றோ இங்கு வந்து சாய்ந்தருளிற்று. உகந்தார்க்கு காட்சிக் கொடுக்கக் கொடி கட்டிக்கொண்டன்றோ கிடக்கிறது. திண்ணிய மதில் என்னுதல்; திண்ணிய கொடி யென்னுதல்; அவிழ்த்துக் கட்டாத கொடியென்கை. “வருவாரெல்லாரும் வாருங்கோள்” என்று கட்டின கொடி. (இவள் திறத்தென் செய்திட்டாயே) இவள் இப்படி பிச்சேற என்ன மருத்திட்டாய்? அவன் இவளறியாதபடி ஒரு முகத்தாலே மருந்திடுமே. “மையலேற்றி மயக்க உன் முகம் மாயமந்திரந்தான் கொலோ” என்று தன் முகத்தைக் காட்டுகையிறே அவன் மருந்திடுகையாவது. இவள் கேட்கிறதென்? என்னில்; அதுவாகில் அதுக்கு ப்ரதிக்ரியையாக, “த்ரைலோக்ய ராஜ்யம் ஸகலம் ஸீதாயாநாப்நுயாத்கலாம்” என்கிற இவளை அவன் முன்னே நிறுத்தி, இவள் பட்டதெல்லாம் அவனைப் படுத்துவளாக நினைக்கிறாள்.

– (வட்கிலள் இறையும்) - வட்டு என்றால் நாணம்; சிறிதளவும் கூட நாணம் இல்லாதபடி. இதற்கு ஜீயர் அருளிச்செய்தது, “இவள் முடிந்தாள்” என்பதாகும். ஆனால் “முடிந்தாள்” என்று ஏன் கூறவேண்டும் என்றால், ஞானத்தைக் கொண்டு அல்லவோ பெண்மையானது அடையாளம் காண்பிப்படுகின்றது என்பதால் ஆகும். ஸ்வரூபத்தைத் தொடர்ந்தபடியே உள்ள குணம் அழிந்தால், ஸ்வரூபமும் அழியும் அல்லவோ? “குணம் போனால் ஸ்வரூபமும் போகும்” என்பது எப்படி என்பதற்கு விடை கூறுகிறார்; ஒரு பொருளை இன்னது என்று நிரூபிக்க ஏற்றதாக உள்ள அடையாளம் மறைந்தால், “அந்தப் பொருள் இன்னது” என்று அறிய இயலாது அல்லவோ? – இவளுடைய நாணமானது நீங்கியது என்று கூறுவதன் அடையாளம் என்ன என்பதற்கு விடை தருகிறார்; (மணிவண்ணா என்னும்) - தனது கணவனுடைய பெயரைக் கூறுகிறாள் என்பதே அடையாளம் ஆகிறது. தன்னைப் பெற்ற தாயார் முன்பாக அவனுடைய வடிவழகைக் கூறுதல், ஸௌலப்யம் போன்ற குணங்களைக் கூறுதல் என்பதைச் செய்தாள். பெற்ற தாய் கேட்டாலும் அவற்றைக் கூறக்கூடாதோ என்றால், “நான் கேட்டாலும் மறைப்பதை, தானே இப்போது வெளியிட்டபடி உள்ளாள்”. ஸ்வரூபம், ரூபம், குணங்கள் போன்ற பலவும் உள்ளபோது, வடிவழகை மட்டுமே ஏன் கூறவேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; காதலி ஆசைப்படுவது வடிவழகையே அல்லவோ? தான் அகப்பட்ட இடத்தில் அல்லவோ நிலை நின்று கூறவேண்டும் என்பதால் இவ்விதம் வடிவழகைக் கூறுகிறார். தான் அகப்பட்ட இடம் இதுவே ஆகும் என்பதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு ப்ரமாணம் காண்பிக்கிறார்; மெய்யே நினைத்து, மெய்யே சொல்லி, மெய்யே அனுபவித்தல் என்பதே இவளுடைய தன்மையாகிவிட்டது; திருவாய்மொழி (7-1-8) - உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு - என்று அவனிடம் இவள் வேண்டிக் கொள்வதும் இதுவே ஆகும் அல்லவோ? – (மணிவண்ணா என்னும்) - “வண்ணம்” என்பதற்கு அழகு மற்றும் ஸௌலப்யம் ஆகிய இரண்டு பொருள்கள் உள்ளதால், இரண்டையும் கூறுகிறார்; அவனுடைய வடிவழகைக் கூறுதல்; ஸௌலப்யத்தை கூறுதல். “மணிவண்ணா” என்றால் மணியின் தன்மையைக் கொண்டவன் என்று பொருள். “தான் கேட்டாலும் மறைக்கும்படியான வடிவழகு வாய்விடக் கூவுவது அல்ல அல்லவோ” என்பதற்கு விடை தருகிறார். அயோத்யாகாண்டம் (58-35) - அத்ருஷ்டபூர்வ வ்யஸநா ம்ருதுசீலாமநஸ்விநீ | தேந து:கேந ருததீ நைவமாகிஞ்சிதப்ரவீத் - தசரதனிடம் சுமத்திரர், “இதற்கு முன்பாக அறிந்திராத துக்கம் அடைந்தவளும், மென்மையான குணம் கொண்டவளும், ஆழ்ந்த மனம் கொண்டவளும் ஆகிய ஸீதை, அந்தத் துக்கத்தால் அழுதபடி இருந்து, என்னை நோக்கி ஒரு சொல் கூட உரைக்கவில்லை”, என்றான் - என்பது போன்று அனைத்து நிலைகளிலும் வாய்விடக்கூடாது என்பது இல்லாமல் இருப்பது இந்த ஒன்று மட்டுமே அல்லவோ? (வானமே நோக்கும்) - “மணிவண்ணா” என்று அழைத்த பின்னரும் அவன் வராமல் இருக்க, “வானம் நோக்கும்” என்பது ஏன் என்பதற்கு விடை தருகிறார்; “மணிவண்ணா” என்ற துயரத்துடன் கூடிய ஒலியைக் கேட்பதற்குச் சக்தி கொண்டவன் அல்லன்; அந்த ஒலியின் வழியே ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்கு வந்து தோன்றியது போன்று இங்கும் தோன்றி அருள்வான் என்று எண்ணியவளாக, ஆகாசத்தையே பார்த்து நிற்கிறாள். ஆனால் ஸ்ரீகஜேந்த்ராழ்வான் போன்று இவளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்பதற்கு விடை தருகிறார்; விஷ்ணுதர்மம் (68) - பரமாபதமாபந்ந: - மிகவும் பெரிய ஆபத்தை அடைந்தவன் - என்பதற்கு மேலாக அல்லவோ இவளுடைய நிலையும் உள்ளது! அங்கு வந்து தோன்றக் காணாத காரணத்தால், (மையாக்கும்) - இவன் மயங்கி அறிவு இழந்தாள். – இதற்கு, “அவனை அடைவதைத் தடுக்கும் பாபங்களுடைய கனம் அதிகமாக உள்ளபோது, இவ்விதம் மயங்கினால் மட்டும் அவை தீருமோ” என்பதற்கு விடை தருகிறார்; (உட்குடை இத்யாதி) - இதற்கு இவள், “நான் உன்னிடம் வருவதற்கு முயன்றால், அதற்கு தடையாகப் பலர் உள்ளனர். ஆனால் நீ இங்கு வருவதில் தடை ஏதும் உள்ளதோ? நீ வரவேண்டும் என்றால், உன்னை எதிர்த்து, பலம் கொண்ட பலரும் என்பதான விரோதிகள் இருந்தால் மட்டுமே, அவர்களை அழித்த பின்புதான் வருவாயோ?”, என்கிறாள். உட்கு என்றால் மிடுக்கு வலிமை. (உண்ட) - “போக்கினான்” என்று கூறாமல், “உண்ட” என்று ஏன் கூறவேண்டும் என்பதற்கு ப்ரமாணம் ஸ்ரீவிபு. (1-19-24) - பபௌ ஜநார்தந: க்ருத்த: - அந்த ஜநார்த்தநன் கோபம் கொண்டு சோஷணம் என்ற அந்தக் காற்றை விழுங்கினான் – என்பதற்கு ஏற்ப ஆகும். (ஒருவனே என்னும்) - அவனுடைய வடிவழகிற்கு யாரையேனும் ஒப்பு கூறலாம்படி இருந்தாலும் கூட, வீரத்திற்கு அவ்விதம் ஒப்பு கூற இயலாது என்பதால் “ஒருவனே” என்றாள். (உட்குடை இத்யாதி) - தான் வீரபத்னி என்பதை வெளிப்படுத்தியபடி உள்ளாள்; அதாவது “உட்குடை அசுரர்” என்று அவர்களுடைய வீரத்தைக் கூறி, “உயிரெல்லாம் உண்ட” என்று அவனுடைய வீரத்தைக் கூறுகிறாள். நாயகனுடைய வீரத்திற்கு ப்ரமாணம் ஸுந்தரகாண்டம் (22-16) - த்வம்நீசசசவத் ஸ்ம்ருத: - யானை போன்ற இராமனுக்கு முன்பு நீ முயல் போன்றவன் - என்று ஸீதை கூறியதாகும். (உள் உருகும்) - இவ்விதம் தனது தடைகள் அனைத்தையும் விலக்கக் கூடியவன் வரக்காணாமையால், “என்னிடம் என்ன குறை ஏற்பட்டது? எதனால் நான் இழக்கிறேன்?”, என்று உருக்குலைந்து நிற்கிறாள். இவ்விதம் அவன் காலம் தாழ்த்துவதற்குக் காரணம் அறியாமல் உள்ளபோது தனது விருப்பங்களும் நிறைவேறாமல் இருக்க, நீர்ப்பண்டம் போன்று உருகியபடி உள்ளாள். “கட்கிலீ என்று கண்களால் காண இயலாதபடி உள்ள ஒருவன், இவ்விதம் உள்ளம் உருகி நின்றால் மட்டுமே கண்களால் காணும்படி இலக்காவானோ” என்று தாய்மார்களுக்கு ஐயம் ஏற்பட, அதற்குச் சமாதானம் கூறுகிறாள்; அவனுடைய அருளால் அந்த நிலையை அடையக்கூடியவர்களுக்கு இவ்விதம் ஒரு நியதி உள்ளதோ என்கிறாள். ஆனால் உபநிஷத்தில் – ந சக்ஷுஷா பச்யதி - கண்களால் அவனைக் காண இயலாது – என்று கூறப்பட்டது அல்லவோ என்றால், இதற்கு விடை தருகிறாள்; அந்த வாக்கியமானது, தாங்களே தங்கள் முயற்சி மூலம் அவனைக் காண முற்படுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்; உபநிஷத்தில் - தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் - தனது கடாக்ஷத்திற்கு இலக்கானவர்களுக்கு அவன் தன்னைக் காண்பித்துக் கொடுக்கிறான் - என்றும் கூறப்பட்டது காணலாம்; இதனைக் கேட்டபடி இருந்த அவன், “அவ்விதம் நாம் நம்மை யாருக்குக் காண்பித்தோம்”, என்றான். இதற்கு இவள், “அர்ஜுநன் முதலானவர்களுக்குத் திவ்யமான பார்வையை அளித்து உன்னைக் காண்பித்தாய் அல்லவோ”, என்றாள். (கட்கிலீ) - கண்ணுக்கு இலீ. – (உன்னைக் காணுமாறருளாய்) - மேலே கூறப்பட்ட இரண்டுவிதமான கருத்துக்களையும் நாயகியின் பாவத்தில் நின்று கூறுகிறார். “உன்னைக் காண்பதற்கு யாருக்குக் கடினம் என்றால், தங்களுடைய முயற்சியால் அவ்விதம் காண எண்ணுபவர்களுக்கே அல்லவோ? உனது கடாக்ஷத்தால் உன்னைக் காண முயல்பவர்களுக்கு அது கடினமோ?” என்றாள். இதற்கு இவன், “சரி, நம்முடைய கடாக்ஷம் மூலம் நாம் யாருக்கு நம்மைக் காண்பித்தோம்?”, என்று கேட்டதற்கு விடை தருகிறாள்; (காகுத்தா) - அயோத்யாகாண்டம் ( 3-29) - ரூபௌதார்ய குணை: - வடிவாலும், தாராள குணத்தாலும் - என்றும், ஆரண்யகாண்டம் (1-1) - ரூப ஸம்ஹநநம் லக்ஷ்மீம் – இராமானுடைய அழகையும் மென்மையையும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, உனது அழகையும் குணங்களையும் நீ முறையே நகரத்தில் உள்ளவர்களுக்கும், கானகத்தில் உள்ளவர்களுக்கும் காண்பித்துத் தந்தாய் அல்லவோ? – இதனைக் கேட்ட ஸர்வேச்வரன், “இராமனாக வந்து ஒருமுறை அவ்விதம் செய்தது கொண்டே நீ கூறுகிறாயா?”, என்றான். இதற்கு விடை தருகிறாள்; (கண்ணனே) - அது மட்டும் அல்ல; திருவாய்பாடியில் உன்னுடன் இருந்த பெண்களுக்கும் இவ்விதம் நீ உனது கடாக்ஷத்தை காண்பித்துத் தந்தாய் அல்லவோ? அதற்கு ப்ரமாணம் ஸ்ரீமத் பாகவதம் (10-32-2) – தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத: - பின்னர், தாமரை போன்ற தன் திருமுகத்தில் புன்னகையோடு அந்தக் கோபியர்கள் முன்பாக க்ருஷ்ணன் தோன்றினான். மாலை அணிந்து, மஞ்சள் நிற ஆடை (பீதாம்பரம்) தரித்து, சாதாரண மனிதர்களின் மனதையே மயக்கும் மன்மதனையே தன் அழகால் மயக்கக்கூடியவனாக அவன் நேரடியாகக் காட்சியளித்தான் - என்பதாகும்; இதனை வ்யாக்யானம் செய்கிறார்; (தாஸாமாவிரபூத்) - மழையை எதிர்நோக்கியபடி இருந்த நெற்பயிர்களில், ஒரு பாட்டம் மழை பெய்தது போன்று இருந்தாய். (ஸ்மயமாகமுகாம்புஜ:) - அவர்கள் முன்பாகத் தோன்றியபோது, அவன் வடிவத்தில் பிறந்த தேஜஸ். (பீதாம்பரதரஸ் ஸ்ரக்வீ) - அந்தப் பெண்களுடைய நெஞ்சத்தில் உள்ள கோபத்தை மாற்றுதல் என்பது, பரிவட்ட வாய்ப்பு மற்றும் தோளில் உள்ள மாலை ஆகியவற்றைக் காண்பித்து ஆகும். (ஸாக்ஷாந் மந்மத மந்மத:) - காமனுடைய கையில் சிக்கி இந்த உலகம் படும்பாடுகளைக் காமன் அடையும்படியாக. (திட்கொடியித்யாதி) - “ஆனால் அவன் அவதார காலத்தில் உனக்கு உதவவில்லை அல்லவோ?”, என்று தாய்மார்கள் கேட்க, இவள் விடை கூறுகிறாள்; அவதார காலத்தில் தனது உதவிகளை அடையமுடியாமல் இருந்தவர்களுக்கு, அத்தகைய இழப்பானது விலகும்படியாக அல்லவோ இங்கு வந்து சாய்ந்து கிடக்கிறான்! தன்னைக் கண்டு மகிழ்பவர்களுக்குக் காட்சி கொடுப்பதற்காகக் கொடி கட்டியபடி அல்லவோ உள்ளான்! உறுதியான மதிள், உறுதியான கொடி, அதாவது அவிழ்த்து கட்டாதபடி உள்ள கொடி; இங்கு வருபவர்கள் அனைவரும் வாருங்கள் என்று அழைப்பது போன்று கட்டிய கொடி. (இவள் திறத்தென் செய்திட்டாயே) - இவள் இவ்விதம் மயக்கம் கொண்டு தடுமாறும்படியாக நீ என்ன மருந்து அளித்தாய்? இதற்கு விடை தருகிறார்; அவன் இவளும் அறியாதபடி தனது திருமுகத்திலேயே மருந்து தருபவன் அல்லவோ? அவனுடைய திருமுகமே இத்தகைய மயக்க மருந்து என்பதற்கு ப்ரமாணம் நாச்சியார் திருமொழி (2-4) - மையலேற்றி மயக்க உன் முகம் மாயமந்திரந்தான் கொலோ - என்பதாகும். இதற்கு ஏற்ப தனது திருமுகத்தைக் காண்பித்து அல்லவோ அவன் மயக்க மருந்து தருகிறான். மையலேற்றி மயக்க உன் முகம் மாயமந்திரந்தான் கொலோ – என்பதாகும். இவள் கேட்பது என்ன? இதற்கு விடை தருகிறார்; அதுவாகில், அதற்கு மாற்றுச்செயலாக ஸுந்தரகாண்டம் (16-14) - த்ரைலோக்ய ராஜ்யம் ஸகலம் ஸீதாயாநாப்நுயாத்கலாம் – மூன்று லோகங்களில் உள்ள அனைத்தும் சேர்ந்தபடி உள்ள இராமனும் கூட, ஸீதையின் ஒரு பகுதிக்கு ஒப்பு இல்லை - என்று கூறப்படும் இவளை, அவன் முன்பாக நிறுத்தி, இவள் அடைந்தபடி உள்ள அனைத்தும், அவனை அடையும்படிச் செய்பவளாக எண்ணுகிறாள்.