திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 2)

ஏழாம்பத்து

இரண்டாம் திருவாய்மொழி

என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் ** முன் செய்த வினையேமுகப்படாய் என்னும் முகில் வண்ணா தகுவதோ என்னும் முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என் கொலோ முடிகின்றது இவட்கே

– “தொடக்கத்திலேயே என்னை உனக்கு மட்டுமே என்று செய்த தாமரை போன்ற திருக்கண்கள் கொண்டவனே! என்னை நீ காண எண்ணுகிறாயோ அல்லது மூலையில் வைக்க எண்ணுகிறாயோ! என்ன செய்ய நினைக்கிறாய்”, என்பாள். இதற்கு எந்த ஒரு மறுமொழியும் வராத காரணத்தால், அந்தத் தாபம் காரணமாகக் கண்களில் கண்ணீர் பெருகி, அசைவதற்கும் கூடப் பொறுமையின்றி இருக்கிறாள். “அலைகள் வீசும் நீர் சூழ்ந்த திருவரங்கத்தில், அருகில் உள்ளவனே! உன்னை அடைவதற்கான சக்தியை ஏற்படுத்தவல்லவனும், அடைவதற்குச் சுலபமாக உள்ளவனும் ஆகிய நீ ஏதும் செய்யாமல் உள்ளபோது, சக்தி அற்றவளும் துன்பம் நிறைந்தவளும் ஆகிய நான் என்னை செய்வேன்” என்பாள். இப்படிப்பட்ட சக்தியற்ற நிலையை உணர்த்திய பின்னரும் திருமுகம் காண்பிக்காமல் உள்ளதால், அந்தத் தாபம் காரணமாக உண்டாக்கும் வெப்பம் வெளிப்படும்படியாகப் பலமுறை பெருமூச்சு விட்டபடி உள்ளாள். “இவ்விதம் நான் துன்பம் அடைவதற்குக் காரணமாக உள்ள முன்பே செய்த பலவிதமான கர்மங்களால் நீ உனது திருமுகம் காண்பிக்காமல் உள்ளாய். ஸமுத்ரம் மற்றும் நிலம் போன்ற வேறுபாடுகள் ஆராயாமல் மழையைப் பொழியும் மேகம் போன்று நிறம் மற்றும் குணம் கொண்ட உனக்கு இது தகுமோ?”, என்பாள். இந்த அனைத்தையும் முன்பே ஸ்ருஷ்டித்து ப்ரளயத்தில் உட்கொண்டு, பின்னர் இவற்றை வெளியிட்டு, பின்னர் அளந்து எடுத்துக் கொண்டவனே! உன்னை அல்லாமல் வேறு எதும் இல்லை என்றுள்ள இவள் கதி எவ்விதம் முடியப்போகிறதோ?

– “இப்பெண்பிள்ளையுடைய தசை என்னாய் விளையக் கடவது?”, என்கிறாள்.

– “இந்தப் பெண்பிள்ளையின் நிலை எவ்விதம் முடியப்போகிறதோ?”, என்கிறாள்.

(என் செய்கின்றாய்) ஆற்றாமை மிகமிக அவனைக் கேட்குமித்தனையிறே. (என் தாமரைக்கண்ணாவென்னும்) - ஒரு நீர்ச்சாவியான பயிருக்கு ஒரு பாட்டம் வர்ஷிக்கக் கடவதன்றோ? என்கிறாள். “அவலோகந தாநோ பூயோ மாம்பாலய” என்னக்கடவதிறே. “தாமரைக்கண்ணென்றே தளரும்” என்றது; உணருகிறபோது கண்களை வாய்வெருவிக் கொண்டாயிற்று உணர்ந்ததும். கிட்டின ஸமயத்தில் “நானும் என்னுடைமையும் நீயிட்ட வழக்கன்றே” என்றது கண்ணாலேயிறே; அதிலேயிறே இவளெழுதிக் கொடுத்தது. கண்ணாலே நோக்கி அணைக்கும்படியை நினைத்து, அந்த பாவநா ப்ரகர்ஷத்தாலே கலந்து பிரிந்தாப்போலே கண்ணீர் மல்கவிருக்கும். (என் செய்கேனித்யாதி) என் தாபம் ஆறும்படி அவ்வலையேற்றிலே கொண்டு போய்ப் பொகடவல்லிகொளே என்னும். திருப்பொருநலில் நீர், பிரிந்தார்க்கு நிலாப்போலே உபதப்தமாயிராநின்றது போலே. (என் செய்கேன்) உன்னைக் கிட்டுகைக்கு நான் செய்வதென்? அப்போதே கிட்டப்பெறாமையாலே, “ஆசைப்பட்ட நாம் அழகிதாகப் பெற்றோம்” என்று நெடுமூச்செறியாநிற்கும். “தஹந்தீமிவ நிச்வாஸைர் வ்ருக்ஷாந் பல்லவதாரிண:”; நெடுமூச்சாலே தன் பகையறுக்கப் பாராநின்றாள். பல்லவ தாரிகளாயிருக்கை இப்போது இவளுக்குப் பகையிறே! ஒருபடிப்பட நின்று நலிகிறபடியிறே அவை. ராக்ஷஸிகளுறங்கும்போதுமுண்டிறே, உருவ இப்படியே நிற்கிறவித்தனையவை. (உருகும்) உருகுகிறபடியே நிற்குமத்தனை. இனி நெடுமூச்செறிகைக்கு தர்மியுமில்லையோ என்னும்படியுருகும். வெவ்விதாகப் பலகால் நெடுமூச்செறிந்து அவ்வுஷ்ணத்தாலே யுருகாநிற்கும். (முன் செய்த வினையே) வலிக்கைக்கு விரகு பார்க்கிறபடி. நான் முன்பு பண்ணின பாபமே, என் முன்னே வந்து நிற்கவல்லையே என்னும். நீ முகங்காட்டினாயாகில், “தாமரைக்கண்ணா என் செய்கின்றாய்” என்று அவனைக் கேளாதொழியலாயிற்றே. “நான் செய்த வினையின் பயன் இதுவான பின்பு நாம் ஆரை வெறுப்பது?” என்றிருக்கலாயிற்றே. ஸ்ரீஜநகராஜன் திருமகளுக்கும் இவர்க்குமுள்ளது ஒன்றாயிற்று; “நன்மை அவனாலே” என்றும், “தீமை தந்தாமாலே” என்றுமாயிற்று இருப்பது. “மமைவ துஷ்க்ருதம் கிஞ்சிந் மஹதஸ்தி ந ஸம்சய:” என்றாளிறே. (முகில்வண்ணா தகுவதோ என்னும்) நான் பண்ணின பாபம் கிடக்கிடும், கர்மாநுகுணமாகவோ நீர் காரியஞ் செய்யுமது? தகுவதோ சேருமோவென்றபடி. ஜல ஸ்த்தல விபாகம் பாராதே நீர் வர்ஷிக்கும் உம்முடைய ஔதார்ய குணத்துக்குப் போருமோ? என்னும். “ஒரு க்ரியா மாத்ரத்துக்கு இத்தனையுயிருண்டோ? நான் காண் இது விளைத்தேன்” என்று அவ்வடிவைக் கொடுவந்து காட்டவல்லையே என்னும். இது பக்தி கார்யமேயாகிலும், பகவதநுபவ விரோதியாகையாலே பாபமென்கிறது. அநிஷ்டாவஹம் பாபமாமித்தனையிறே. “தகவிதோ” என்ற பாடத்தில், நான் பண்ணின பாபம் எனக்கநுபவிக்க வேணுமாகில் உம்முடைய தகவுக்கு விஷயம் இன்னது என்னும். முன் செய்த வினையே முகப்படாயென்கிறவிடம் “க்ரியை அத்ருஷ்ட ரூபத்தாலே நின்று பலந்தரும்” என்பார் வார்த்தை; முகில்வண்ணா என்கிறவிடம் “ஒரு பரமசேதநனுடைய அநுக்ரஹமே பலப்ரதமாவது” என்றிருக்கும் வேதாந்திகள் வார்த்தை. “ஸதோஷராயிருப்பார் ராமகோஷ்ட்டிக்காளல்லர்” என்கிற மஹாராஜர் தொடக்கமானார் வார்த்தை போலே கீழ்ச்சொன்னது. “தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத்” என்ற ராமஸித்தாந்தம் போலே மேல். “மாம் நமஸ்குரு” என்றாப்போலே கீழ்ச்சொன்னது. “மாசுச:” என்றாப்போலே “தகவிதோ” என்கிறது. – “முகில்வண்ணா” என்கைக்கு நம் ஔதார்யம் எங்கே பலிக்கக் கண்டு சொல்லுகிறது? என்ன, (முன் செய்து இத்யாதி) நிர்ஹேதுகமாக முன்பு ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணி, “தகவிதோ” என்கைக்கு உபகரணமில்லாதவன்று இத்தையுண்டாக்கி நோக்கினாய் நீயன்றோ? கரணகளேபர விதூரமான இத்தை வெறும் உன் க்ருபையாலே உண்டாக்கினா யித்தனையன்றே? உண்டாக்கி விட்டளவேயோ? ப்ரளயாபத்திலே வயிற்றிலே வைத்து ரக்ஷித்து, உள்ளே கிடந்து நோவுபடாதபடி புறப்பட விட்டு, எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, ஸர்வவித ரக்ஷணமும் பண்ணிற்றிலையோ! (என்கொலோ முடிகின்றதிவட்கே) இவளளவில் தர்மி லோபமேயோ பலிக்கப் புகுகிறது? நீர் ரக்ஷிக்கிற பூமிக்கும் இவளுக்கும் ஒரு வாசியுண்டாக நினைத்திருக்கிறிலீரோ? (அநந்யபரையாய் அநந்யகதியாய் அபலையாயிருக்கிறவள்; இவளுடைய கர்மமோ, உம்முடைய அநுக்ரஹமோ பலிக்கப் புகுகிறது? இவளிடையாட்டத்தில் நீர் செய்யப் பார்த்தபடி எங்ஙனே யென்னுதல், இவளுடைய தசை என்னாய் விளையக் கடவதென்னுதல்.

– (என் செய்கின்றாய்) - “என்ன செய்கிறாய்” என்று திருத்தாயார் அவனைப் கேட்பது ஏன் என்றால், மிகுந்த ஆற்றாமை காரணமாக இவ்விதம் கேட்கிறாள். (என் தாமரைக்கண்ணா என்னும்) – “நீர் வேண்டியதால் பட்டுப் போகக்கூடிய நிலையில் உள்ள பயிருக்காக ஒரு பாட்டம் மழை பெய்யலாம் அல்லவோ?”, என்கிறாள். அவனுடைய கடாக்ஷம் ப்ரார்த்தனை மூலம் பெறப்படும் ஒன்றா என்பதற்கு ப்ரமாணம் காண்பிக்கிறார்; ஸ்ரீவிபு. (1-20-16) - அவலோகந தாநோ பூயோ மாம்பாலய - உனது பார்வையால் என்னைக் காப்பாயாக - என்று கூறப்பட்டது ஆகும். (என் தாமரைக் கண்ணா என்னும்) - தளர்வதற்குக் காரணமாக உள்ளதும், அத்தகைய தளர்ச்சி நீங்கக் காரணமாக உள்ளதும் அவனுடைய திருக்கண்களே ஆகும் என்பதைக் கூறுகிறார்; “தாமரைக்கண்கள் என்றே தளரும்” என்று கூறப்பட்டது என்னவென்றால், மயக்கம் தெளிந்து எழும்போது, அவனுடைய திருக்கண்களைத் தனது வாய் கொண்டு அழைத்து உணர்தல். அதாவது அந்தத் திருப்பாசுரத்தில் “தளரும்” என்று மயக்கத்தைக் கூறி, இங்கு “என் தாமரைக்கண்ணா” என்பதால், இது மயக்கம் தெளிந்து கூறும் சொற்கள் ஆகும் என்று கருத்து. அதாவது அங்கு தளார்ச்சிக்குக் காரணமாக உள்ள இத்திருக்கண்களே இங்கு மயக்கம் தெளியவும் காரணமாக உள்ளது. “என்” என்று கூறுவதன் கருத்து என்ன; நான் உன்னுடன் இருந்த காலத்தில், “நானும் எனது உடைமைகளும் உனக்கு வசப்பட்டவர்கள் ஆவோம்” என்று எழுதிக்கொடுத்தது இந்தக் கண்கள் காரணமாக அல்லவோ? “என் தாமரைக்கண்ணா” என்று கூறிய பின்னர், “கண்ணீர் மல்க இருக்கும்” என்று தன் கருத்தை அடுத்து கூறுகிறார்; கண்களால் நோக்கியே தன்னை அணைத்துக் கொண்ட விதத்தை எண்ணியவளாக, அந்தப் பாவனையின் மிகுதி காரணமாக, கலந்து பிரிந்தது என்பது உண்மையில் கற்பனையாக நடந்தபோதிலும், அவ்விதம் நேரடியாகப் பிரிந்தது போன்று, கண்ணீர் மல்க நிற்கிறாள். – (என் செய்கேன் இத்யாதி) – “எனது தாபம் தீரும்விதமாக அந்த எறியும் அலைகளில் கொண்டு சென்று சேர்க்கவேண்டும்”, என்கிறாள். இவள் உள்ள இடத்தில் திருப்பொருநல் என்பதான தாமிரபரணி நதி உள்ளது அல்லவோ, பின்னர் ஏன் இவ்விதம் கூறுகிறாள் என்பதற்கு விடை தருகிறார். தாமிரபரணி நதியானது, பிரிந்தவர்களுக்கு நிலவு சுடுவது போன்று, வெப்பமான தண்ணீராக இருந்தது. (என் செய்கேன்) - உன்னைக் கிட்டுவதற்கு நான் செய்வது என்? அந்த நேரத்திலேயே அவன் கிட்டாத காரணத்தால், “ஆசைப்பட்ட நாம் இவனை நன்றாகவே பெற்றோம்” என்று பெருமுச்சு விட்டபடி இருக்கிறாள். வெப்பத்துடன் பெருமூச்சு விடுவதற்கு ப்ரமாணம் ஸுந்தரகாண்டம் (17-29) – தஹந்தீமிவ நிச்வாஸைர் வ்ருக்ஷாந் பல்லவதாரிண: – தளிர்த்துள்ள மரங்களைத் தனது மூச்சுக்காற்றால் எரிப்பவள் போன்று உள்ளாள் - என்பதாகும். தனது பெருமூச்சால் தன்னுடைய பகையான மரங்களை அறுக்கப் பார்க்கிறாள். தளிர் இலைகள் நிறைந்த இவை அல்லவோ இப்போது இவளுக்குப் பகையாக உள்ளன! எப்படியென்றால், ராக்ஷஸிகள் உறங்கும்போதும் கூட இவை ஒன்றாக நின்று, இப்படியாகவே ஸீதையைத் துன்புறுத்தின. (உருகும்) - உருகியபடியே நிற்கிறாள். இனி பெருமூச்சு விடுவதற்கு, அத்தகைய மூச்சு விடுபவளும் இல்லையே என்னும்படியாக உருகுகிறாள். வெப்பத்துடன் பலமுறை பெருமூச்சு விட்டவளக, அந்த வெப்பத்தால் உருகியபடி உள்ளாள். – (முன் செய்த வினையே) - இவ்விதம் உருகும் நேரத்தில், “முன் செய்த வினையே முகப்படாய்” என்று கூறுவது ஏன்? இதற்கு விடை தருகிறார்; அவனை இழுப்பதற்கு ஒரு வழி பார்க்கிறாள். “நான் முன்பு செய்த பாபம் காரணமாகவே நீ என் முன்பாக வரவில்லையோ?”, என்கிறாள். இதற்கு அவன் திருத்தாயாரிடம், “நான் முன்பாக வந்து நின்றால் அவள் பெறுவது என்ன?” என்றான்; இதற்கு திருத்தாயார், “நீ வந்து முகம் காண்பித்தால், ‘தாமரைக் கண்ணா என் செய்கிறாய்’ என்று கேட்பதையாவது நிறுத்தலாம் அல்லவோ?”, என்றாள்; “நான் செய்த வினைப்பயன் இப்படியாக உள்ளபோது, நாம் யாரை வெறுக்க இயலும்?”, என்று சற்றே ஆறி இருப்பாள். “அவன் வராமல் இருப்பதற்குக் காரணம் தன்னுடைய பாபமே ஆகும் என்று உள்ளவர்கள் யாரேனும் உள்ளனரோ?”, என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; ஸ்ரீஜநகராஜனுடைய திருமகளுக்கும் இவருக்கும் இந்த நிலையானது ஒன்றாகவே ஆயிற்று. “நன்மை உண்டாவது அவனால்”, “தீமை ஏற்படுவது தம்மால்” என்றும் உள்ள நிலை. ஸீதை இவ்விதம் கூறியதற்கு ப்ரமாணம் ஸுந்தரகாண்டம் (38-48) - மமைவ துஷ்க்ருதம் கிஞ்சிந் மஹதஸ்தி ந ஸம்சய: - எனது பாபம் அதிகமாகவே உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை - என்பது ஆகும். – (முகில்வண்ணா தகுவதோ என்னும்) – இதனைக் கேட்ட ஸர்வேச்வரன், “நீ செய்த கர்மங்களுடைய பலனை நீ அனுபவிக்கவேண்டாமா? என்னை நோக்கி ‘என் செய்கிறாய்’ என்று கேட்பது ஏன்?”, என்றான். இதற்கு விடை அளிக்கிறாள். நான் செய்த பாபங்கள் இருக்கட்டும்; ஆனால் அந்தந்த கர்மங்களுக்கு ஏற்றபடியாகவே உனது செயல்கள் இருக்குமோ? நீர் நிலை என்றும், வெறும் தரை என்றும் வேறுபாடு ஆராயாமல் பெய்கின்ற மழை போன்று, நீ செய்யும் கடாக்ஷம் உள்ளபோது, தாராள குணம் கொண்ட நீ, இவ்விதம் என்னைக் கேட்பது பொருந்துமோ? “வினைகளுக்கு உயிர் இல்லை என்பதால், அதனை வெறுப்பதற்கு அவசியம் இல்லை. நான் அல்லவோ இவற்றை ஏற்படுத்தினேன்” என்று தனது திருமேனியைக் கொண்டு வந்து காண்பிக்கமாட்டாயோ என்கிறாள். இதற்கு ஸர்வேச்வரன், “உனது இந்தப் பிரிவாற்றாமைக்குக் காரணம் பக்தி அல்லவோ? இதனைப் பாபம் என்று ஏன் கூறினாய்?”, என்றான். இதற்கு இவள், “இது பக்தியின் விளைவே என்றுள்ளபோதிலும், பகவத் அனுபவத்திற்குத் தடையாக உள்ளதால், பாபம் என்றே ஆகிறது” என்றாள். இதற்கு அவன், “எப்படி இருந்தாலும், ப்ரேமையின் பலனாக ஏற்பட்ட இந்தப் பிரிவாற்றமையைப் பாபம் என்று கூறலாமோ?”, என்றான்; இதற்கு விடை தருகிறாள்; விருப்பம் இல்லாத ஒன்றை ஏற்படுத்துவது பாபம் அல்லவோ? பாசுரத்தில் உள்ள “தகுவதோ” என்பதை “தகவிதோ” என்றும் கொள்வர்; இப்படிக் கொண்டால், “நான் செய்த பாபத்தின் பலன்களை நானே இவ்விதம் அனுபவிக்கவேண்டும் என்றால், உனது கடாக்ஷத்திற்கு விஷயம் இன்னது என்பதையாவது நீ அருளிச் செய்யவேண்டும்” என்று கேட்பதற்காகக் கருத்து. இதற்கு வேறு ஒரு கருத்தும் கொள்ளலாம்; “முன் செய்த வினையே முகப்படாய்” என்று கர்மங்கள் தங்களுடைய பலன்களை அளிக்கின்றன என்று கூறப்பட்டதைப் பூர்வபக்ஷமாகக் கொண்டு, “முகில்வண்ணா தகவதோ” என்று ஈச்வரனைப் பலன் அளிப்பவனாகக் கூறியதை ஸித்தாந்தமாகக் கொள்ளவேண்டும்; இதனை இப்போது அருளிச்செய்கிறார்; “முன் செய்த வினையே முகப்படாய்” என்ற சொற்களானவை, “நமது கர்மங்கள் கண்களால் காண இயலாதபடி நின்று, தக்கதொரு காலத்தில் பலனை அளிக்கும்” என்பவர்களுடைய சொற்கள் என்று கொள்ளலாம்; “முகில்வண்ணா” என்பது “ஒரு உயர்ந்த சேதநனுடைய கடாக்ஷமே பலன்களை அளிப்பவை ஆகும்” என்று கூறும் வேதாந்திகளுடைய சொற்கள் என்று கொள்ளலாம். இந்தப் பூர்வபக்ஷ ஸித்தாந்தங்களுக்கு முறையே இரண்டு உதாரணங்களைக் கூறுகிறார். விபீஷணன் இராமனிடம் சரணம் புகுவதற்காக வந்தபோது, ஸுக்ரீவன் தொடக்கமாக உள்ள அனைவரும், “குற்றம் நிறைந்தவர்கள் இராமனுடைய கோஷ்டிக்குத் தக்கவர்கள் அல்லர்”, என்று கூறினர்; இது மேலே கூறப்பட்ட பூர்வபக்ஷம் போன்று ஆகும்; அதாவது ஸுக்ரீவனுடைய சொற்களைப் பூர்வபக்ஷமாகக் கொண்ட இராமன், இதற்கு ஸித்தாந்தமாக யுத்தகாண்டம் (18-3) - தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத் - அவர்கள் குற்றம் உள்ளவர்கள் என்றபோதிலும் – என்று கூறினான். இது போன்று, மற்றொரு உதாரணம் கூறுகிறார்; கீதையில் (9-34) - மாம் நமஸ்குரு – என்னை வணங்கி நிற்பாயாக - என்று பக்தியைப் பூர்வபக்ஷமகக் கொண்டு, கீதை (18-66) - மாசுச: - வருத்தம் கொள்ளாதே – என்று ப்ரபத்தியை ஸித்தாந்தமாகக் கொண்டு, “முகில்வண்ண தகவிதோ” என்பதன் மூலம், உயர்ந்த சேதநன் ஒருவனே பலன் தருவதாகக் கூறப்பட்டது. – “ஆனால் ‘முகில்வண்ணா’ என்பது நம்முடைய ஔதார்யத்தை வெளிப்படுத்துவதாகக் கூறுவதும், அது அவ்விதம் பலன் தந்தது என்று கூறுவதும் எங்கு?”, என்று ஸர்வேச்வரன் கேட்பதற்கு விடை தருகிறாள்; (முன் செய்து இத்யாதி) - எந்தவிதமான காரணமும் இன்றி முதலில் இந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்து, “தகவிதோ” என்பதற்கு “உபகாரணம் ஏதும் இல்லாத அன்று இதனை ஸ்ருஷ்டித்து நீ காப்பாற்றினாய் அல்லவோ?”, என்று கூறப்பட்டது; “சரி, இது உனக்குப் பொருந்தமோ” என்று எப்படி கேட்கப்பட்டது என்பதற்கு விடை தருகிறார்; எந்தவிதமான சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் ஆகியவை இல்லாதபோது இவற்றை நீ உனது கடாக்ஷத்தால் உண்டாக்கினாய் அல்லவோ? வெறும் படைத்து விட்டது மட்டுமே என்று இருந்தாயோ? ப்ரளய ஆபத்து ஏற்பட்டபோது இவற்றைத் திருவயிற்றில் வைத்துக் காப்பாற்றி, நீண்ட நாள்கள் உள்ளே இருந்து நோவு அடையாதபடி வெளியே விட்டு, இவை அபகரிக்கப்பட்டபோது இவற்றை எல்லை முடிய நடந்து சென்று மீட்டுக் கொண்டு, இப்படியாக அனைத்துவிதமான காப்பாற்றும் செயல்களையும் நீ செய்தாய் அல்லவோ? இப்படிப்பட்ட உனக்கு “தகவிதோ” என்று முடிக்கவேண்டும். (என்கொலோ முடிகின்றதிவட்கே) - இவளுடைய விஷயத்தில் இவளை இழத்தல் என்பதோ பலிக்கவேண்டும்? நீவிர் பாதுகாக்கும் இந்தப் பூமிக்கும் இவளுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது என்று எண்ணுகிறாயா? இவளுடைய பாபம் அல்லது உனது கடாக்ஷம் ஆகியவற்றில் எது பலன் அளிக்கப் போகிறது? இவளுடைய வாழ்வில் நீ செய்யப் பார்ப்பது எப்படி உள்ளது? இவளுடைய நிலை எப்படி முடியப்போகிறது?