திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 1)
ஏழாம்பத்து
இரண்டாம் திருவாய்மொழி
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும் செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே
– உலகில் உள்ள அனைவரும் உறங்கும் இரவிலும், காதலில் ஈடுபட்ட நாயகிகள் உறங்கும் பகலிலும், தனது கண்களை மூடி உறங்கவேண்டும் என்ற அறிவு இவளுக்கு இல்லை. இவளுடைய கண்களில் உறக்கம் வராதபடி சோகத்தில் ஏற்படும் கண்ணீரானது வெள்ளமாக நிற்பதால், அதனை, கடலைக் கைகள் கொண்டு இறைப்பவர்கள் போன்று, தனது கண்ணீரை மாற்றுவதாக எண்ணி, கைகளால் இறைத்தபடி உள்ளாள். இந்த கண்ணீரைக் கண்டு இரக்கம் கொண்டு அவன் வருவான் என்று எண்ணியபடி, தனது விருப்பத்திற்கு ஏற்ப “கூராராழி வெண் சங்கு ஏந்தி” என்பதாக வரக்கூடும் என்பதால், “சங்கு சக்கரங்கள்” என்று அவற்றை உச்சரித்து, அவன் வரும்போது அஞ்சலி செய்தபடி இருக்கவேண்டும் என்று நிற்கிறாள். அவன் வந்தால் தன்னைக் குளிர நோக்கும் அவனுடைய திருக்கண்களை எண்ணியவளாக, “தாமரைக்கண்” என்று கூறி, அது கிட்டப்பெறாமையால் தளர்ந்து நிற்கிறாள். “இப்படிப்பட்ட ஆயுத அழகையும், அவயவ அழகையும் உள்ள உன்னை விட்டு நான் எப்படி உயிர் தாங்குவேன்?” என்று கூறுகிறாள். தனது அளவு கடந்த துக்கத்தால், இந்தப் பூமி முழுவதும் அவன் தனது திருவடிகளால் துழாவியது போன்று, தானும் தனது கைகளால் துழாவியபடி உள்ளாள். தொடர்ந்து அதற்குச் சக்தி இன்றி, ஏதும் செய்யாமல் இருக்கிறாள். இளைமையாக சிவந்த புகர் கொண்ட கயல்கள் மிகவும் உற்சாகத்துடன் பாய்ந்தபடி உள்ள நீரைக் கொண்டதான திருவரங்கத்தில் உள்ளவனே! இப்படி எண்ணற்ற மாற்றங்கள் கொண்டவளாக, நீரைப் பிரிந்த மீன் போன்று உன்னைப் பிரிந்து துடித்தபடி உள்ள இவள் விஷயத்தில் நீ என்ன செய்ய எண்ணுகிறாய்? இவள் துக்கத்தைத் தீர்க்க எண்ணுகிறாயா? அல்லது அதிகரிக்க நினைக்கிறாயா?
– “இப்பிராட்டியுடைய பேச்சுக்கு நிலமன்றிக்கே யிருக்கிற தசையைப் பெரியபெருமாளுக்கு அறிவித்து, இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறதென்?”, என்கிறாள்.
பராங்குசநாயகியின் நிலையானது வார்த்தைகள் கொண்டு கூறி முடிக்க இயலாதபடி உள்ளது என்பதைப் பெரியபெருமாளுக்குத் திருத்தாயார் உணர்த்தி, “இவள் விஷயத்தில் என்ன செய்தருள எண்ணுவதாக உள்ளாய்”, என்று கேட்கிறாள்.
(கங்குலும் பகலும் கண் துயிலறியாள்) இவளை எப்போது கண் துயிலப் பண்ணவிருக்கிறீர்? விரஹிணிகளுக்கு ஓடுகிற வ்யஸநம் மாற்றுகைக்காக “இரா, பகல்” என்று ஒரு வரம்பு கட்டினவித்தனையிறே; அது இவளுக்குக் காரியமாகிறதில்லை. ராத்ரியில் விஷய லாபத்தாலே போதுபோக்கவும், பகல் இந்த்ரியங்களானவை விஷயாந்தரங்களிலே கொடுபுக்கு மூட்டி “அப்போதாயிற்று, இப்போதாயிற்று” என்று காலக்ஷேபத்துக்கு உடலாயிருக்குமிறே; “எங்ஙனே தரிக்கேனுன்னை விட்டு” என்று சொல்லுகையாலே, இவளுக்கு அங்ஙனொன்று சொல்லித் தரிக்கவொண்ணாதே. தனக்கு ஆச்வாஸ ஹேதுவாகப் பண்ணின திவாராத்ர விபாகமும் அறிகிறிலள். பகலும் இரவோடொக்க உறங்கக் கண்டதிறே. (பகலும்) நாட்டாரிரவு உறங்குவர்கள். ப்ரணயிநி யௌவநம் குடிபுகுந்தால் இராமாறு நாயகனுக்கு அலைகொடுக்கையாலே உறக்கமில்லை; அவ்விழவுக்கு எற்றி உறங்குவது பகலிறே! அதுவும் பெறுகிறதில்லை. “அநித்ரஸ்ஸததம் ராம:” என்று கொண்டு தன்படியாக்கினான். “பரமம் ஸாம்யமுபைதி” என்கிறபடியே தம்மோடு ஸாம்யாபத்தி கொடுத்தபடி. – (அறியாள்) கண்துயில் கொள்ளாளென்னாதே, அறியாளென்கிறது ஸம்ச்லேஷத்தில் அவன் உறங்கவொட்டான், விச்லேஷத்தில் விரஹ வ்யஸநம் உறங்கவொட்டாது; ஆகையாலே இவளுக்கு இரண்டுபடியாலும் உறக்கமில்லாமையாலே. இவள் கலந்தவன்று உறங்கினாலும், இவள் இப்போது படுகிற வ்யஸநத்தை யநுபவித்த திருத்தாயார்க்கு அது ஒன்றாய்த் தோற்றாதே! இவ்யஸநத்துக்குப் பூர்வரங்கமாய் வந்ததொன்றாகையாலே அத்தையொன்றாக நினைத்திருக்கிறிலள். என்றும் சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப்போலே, பிரிந்த நாளை யிழவேகாணும் இவள் நெஞ்சிலே பட்டுக்கிடக்கிறது. (அறியாள்) ஒக்கவிருக்கச் செய்தே “கைங்கர்ய விரோதி” என்று கைவிட்டவர்களிற்காட்டில் இவளுக்குண்டான வாசியிருக்கிறபடி. முன்பில்லையாகிலும் இஜ்ஜந்மத்தில் மெய்ப்பாடு பற்றிவிட வேண்டிற்று. (கண்ணநீர் கைகளாலிறைக்கும்) இவளுக்கு இவ்வறியாமை எங்குமொக்க அநுவர்த்திக்கப் பெற்றதில்லை! “இவ்வாற்றாமையில் ஸர்வதா நாயகன் வாராதிரான்” என்று பார்த்து, அப்போதாகப் பகை கொண்டாட வொண்ணாது; ப்ரதம பரிஸ்பந்தந் தொடங்கிக் காணவேணும்” என்று கண்ணநீரை மாற்றப் பாராகின்றாள். இதென்ன ஸாஹஸந்தான்! இது தன்னால் இயலுமென்று தொடங்கினாளே, “கடல் கொண்ட கண்ணீரி”றே. கோகுள் இலையைக் கொண்டு கடலை வற்ற இறைப்பதாக நினைப்பாளே! தன் கையாலே கண்ணநீரை இறைக்கப் பாராநின்றாள். “கிமர்த்தம் தவநேத்ராப்யாம்” என்னும்படி காணும் இருக்கிறது. (சங்கு) கண்ணநீரை மாற்றினால், கண்ணாலே காண வந்து தோற்றும்படியை நினையா நின்றாள். “தவளவொண் சங்கு சக்கரம்” என்று திவ்யாயுதங்களோடே காணவிறே இவள்தான் ஆசைப்பட்டிருப்பது! உகவாத கம்ஸாதிகளுக்கிறே த்விபுஜனாக வேண்டுவது. “தேநைவ ரூபேண சதுர்ப்புஜேந” என்றானிறே காணவாசைப்பட்ட அர்ஜுநன். “கூராராழி வெண்சங்கேந்தி வாராய்” என்னக் கணிசித்து பலஹாநியாலே தலைக்கட்டமாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாப்போலே, குறையும் அஞ்சலியாலே தலைக்கட்டா நின்றாள். (தாமரைக் கண்ணென்றே தளரும்) அவ்வாழ்வார்களளவும் வந்து அலையெறிகிற கண்ணழகைச் சொல்லப்புக்கு, நடுவே தளராநின்றாள். “உன் தாமரைக்கண்களால் நோக்காய்” என்று சொல்லப்புக்கு, நடுவே தளராகின்றாள். “ராமம் ரக்தாந்த நயநமபச்யந்தீ ஸுது:கிதா” என்னுமாபோலே. “தளருகிறதென்? வேறென்றாலே போதுபோக்கினாலோ” என்பர்களே; (எங்ஙனே தரிக்கேனுன்னைவிட்டென்னும்) பர வ்யூஹ விபவங்களிலே யாசைப்பட்டேனாய் ஆறியிருக்கிறேனோ? (உன்னை விட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்) உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே, போதுபோக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டதென்னும். உம்முடைய வைலக்ஷண்யம் நீர் அறிந்தால், “நம்மைப் பிரிந்தார் தரிக்கமாட்டார்களெ”ன்னுமிடம் நீரே யறியவேண்டாவோ? (உன்னை விட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்) உன்னைக் கண்ணாடிப்புறத்திலும் கண்டறியாயோ? கண்டாயாகில் பிரியாய்; பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி. “எங்ஙனே தரிக்கேன்?” என்ற அநந்தரம் வரக்காணாமையாலே, (இரு நிலம் கைதுழாவிருக்கும்) கண்ணநீர் ப்ரவஹிக்கச் சேறாகையால், மஹாப்ருதிவி ஒரு பீங்கானுக்கு உட்பட்ட சந்தந பங்கம் பட்டது படாநின்றது. (செங்கயல்) அவ்வூரில் வர்த்திக்கிற திர்யக்குக்களின் ஸ்வபாவம் இவளுக்கு அரிதாவதே! அவை தந்நிறம் பெற்று வர்த்தியா நின்றன; இவள் நிறமிழந்தாள். நாரத்தைப் பற்றினது களித்து வர்த்தியா நின்றது, நாராயணனைப் பற்றின இவள் து:கிப்பதே? (செங்கயல்) அழகிய கயல். அக்கயல் ஜலத்தைப் பிரிந்து தரிக்கிலன்றோ இவன் உன்னை விட்டு தரிக்கவல்லது? “ஜலாந்மத்ஸ்யாவிவோத்த்ருதௌ” என்னக் கடவதிறே இவளையும். (இவள் திறத்து) “ஏஹி பச்ய சரீராணி” என்னுமாப்போலே, இவள்படி பேச்சுக்கு நிலமல்லாமையாலே காட்டுகிறாள். ராக்ஷஸர் தின்ற உடம்பைக் காட்டினாப்போலே, விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறாள். (என் செய்கின்றாயே) இவள் திறம் செய்யப் பார்த்ததென்? உம்முடையவூரில் பதார்த்தங்கள் பெற்றதும் பெறவேண்டாவோ, உம்மையாசைப்பட்ட இவள்.
– (கங்குலும் பகலும் கண் துயிலறியாள்) – “கண் துயில் அறியாள்” என்று மட்டுமே கூறாமல், “கங்குலும் பகலும்” என்று ஏன் சிறப்பித்துக் கூறவேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; காதலனைப் பிரிந்து விரஹத்தில் உள்ளவர்களுடைய சோர்வை நீக்குவதற்காக “இரவு, பகல்” என்னும் ஒரு வரம்பு கட்டப்பட்டது, அந்த அளவு மட்டுமே ஆகும். அது இவளுக்கு ஒரு நடைபெறக்கூடிய செயலாக இல்லை. “இவளுடைய சோர்வு நீங்கக்கூடிய முறை என்ன?”, என்பதற்கு விடை தருகிறார்; இரவுப்பொழுதில் உலக விஷயங்களைப் பெறுவதால் பொழுது போக்கியபடியான நிலை உள்ளது; பகல் நேரத்தில், இந்த்ரியங்களை மற்ற சில விஷயங்களில் ஈடுபடுத்தி, “அப்போது ஆனது, இப்போது ஆனது” என்று காலத்தைக் கழிப்பதற்குக் காரணமாக உள்ளன அல்லவோ? சரி, இப்படிடியே இவள் தன்னுடைய பொழுதைப் போக்கலாம் அல்லவோ என்பதற்கு விடை தருகிறார்; “எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு” என்று இவள் கூறுவதால், இவளுக்கு இது போன்று முறைகளில் தரிக்க இயலாது. தனக்கு, ஆறியிருப்பதற்கான காரணங்களாக அமைந்துள்ள இரவு மற்றும் பகல் என்னும் வேறுபாட்டையும் இவள் அறியவில்லை. “பகலும் கண் துயில் அறியாள்” என்று ஏன் கூறுகிறார்? அப்படியானால் “பகலில் உறங்குவது உண்டா?” என்பதற்கு விடை தருகிறார்; பகல் மற்றும் இரவு என்று எந்த ஒரு நேரத்திலும் இவள் உறங்குவதில்லை. ஏன் என்பதற்கு விடை தருகிறார்; (பகலும்) - பொதுவாக ஊரில் உள்ள அனைவரும் இரவில் உறங்குவர். யௌவனம் வந்தால், இரவு நாயகனுடன் சேர்ந்து உள்ளதால், இரவில் உறக்கம் இல்லை; அவ்விதம் இரவில் தொலைத்த உறக்கத்தைச் சேர்த்து பகலில் உறக்கலாம்; ஆனால் அதனையும் பெறுவதில்லை; “அலை கொடுத்தல்” என்றால் சேர்தல். ஸுந்தரகாண்டம் (36-44) - அநித்ரஸ்ஸததம் ராம: - இராமன் எப்போதும் உறங்காமல் உள்ளான் - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளதால், இவளையும் அதே போன்று செய்தான்; அதாவது முண்டக உபநிஷத்தில் – பரமம் ஸாம்யம் உபைதி - தன்னுடன் ஒப்புமையை அடையும்படிச் செய்கிறான் - என்பதற்கு ஏற்ப இந்த உறக்கம் இன்மை என்னும் விஷயத்திலும், தன்னுடைய விதத்தை இவளுக்கும் அளித்தான். – (அறியாள்) - “கண் துயில் கொள்ளாள்” என்று கூறாமல், “கண் துயில் அறியாள்” என்று ஏன் கூறினார் என்பதற்கு விடை அளிக்கிறார்; சேர்க்கையின்போது உறங்குவதற்கு அவன் விடமாட்டாள். பிரிவில் உண்டாகும் விரஹம் காரணமாக அந்தச் சோர்வும் உறங்கவிடாது; ஆகவே இரண்டு விதங்களிலும் இவளுக்கு உறக்கம் இல்லை என்பதால் இப்படியாகக் கூறுகிறார். சரி, நாயகன் உறங்கும்போது இவள் உறங்கலாம் அல்லவோ, அப்போது உறங்கவில்லையோ என்பதற்கு விடை தருகிறார்; இவள், அவனுடன் சேர்ந்த அன்று உறங்கினாலும், இவள் இப்போது அடையும் துன்பத்தைக் கண்டு அனுபவிக்கும் திருத்தாயாருக்கு, இவள் அன்று உறங்கியது போன்று தோன்றவில்லை. இந்த நோய்க்கு முன்னரே செய்யப்படும் ஒரு செயலாக அதனைக் கண்ட காரணத்தால், அப்போது இவள் உறங்கியதை உறக்கமாக எண்ணவில்லை. சரி, இந்த நாயகியின் மனதில் உள்ளது என்ன என்பதைக் கூறுகிறார். சிறைச்சாலையில் பிறந்து வளர்ந்தவர்கள் போன்று, எப்போதும் பிரிந்த நாளில் உண்டான இழப்பு என்பதே இவள் நெஞ்சத்தில் ஓடியபடி உள்ளது. (அறிவாள்) – “அறியாள்” என்பதன் மூலம், லக்ஷ்மணனுக்கும் இவளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கூறுகிறார்; உறக்கம் இன்மை என்பது இந்த இருவருக்கும் ஒன்றாகவே உள்ளபோதிலும், “இந்த உறக்கமானது கைங்கர்யத்திற்கு விரோதி” என்று கைவிட்ட லக்ஷ்மணனைக் காட்டிலும், “நாயகன் வருவான்” என்ற நிலையில் உள்ள இவளுடைய உறக்கம் இழந்த நிலைக்கு வேறுபாடு உள்ளது. ஆதிசேஷனாகிய லக்ஷ்மணனுக்கு இந்த ஜந்மத்தின் விளைவாக உறக்கத்தைத் துறக்க வேண்டியதாக இருந்தது. – (கண்ணநீர் கைகளால் இறைக்கும்) - இவளுக்கு இந்த “உறக்கம் என்பது எப்படிச் செய்வது” என்ற அறியாமையானது ஒரே போன்று தொடர்ந்தபடி இருப்பதில்லை. “இந்தப் பிரிவாற்றாமையைப் போக்குவதற்கு எப்படியும் நாயகன் வராமல் இருக்கமாட்டான்” என்று பார்த்து, அவன் வந்த அந்த நேரத்தில், “கண்ணீர் மறைக்கிறது” என்று கண்ணீரைப் பகைமை பாடாட்ட இயலாது; ஆகவே முதலிலிருந்தே காணவேண்டும் என்பதற்காக, தனது கண்ணீரைத் தனது கைகளால் தள்ள முயல்கிறாள். இது என்ன ஒரு சாகஸம்! இதனைத் தன்னால் செய்யமுடியும் என்று எண்ணித் தொடங்கினாள்; திருவிருத்தம் (18) கடல் கொண்ட கண்ணீர் - கடல் போன்ற அளவுள்ள கண்ணீர். ஆனால் கைகள் கொண்டு கண்ணீரை இறைத்தல் என்பது ஒரு சாகஸமோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; கோகுள் என்பதான ஒரு சிறிய இலையைக் கொண்டு கடலை வற்றச் செய்வதற்காக, அதனை இறைப்பதாக எண்ணுகிறாள். தனது கைகள் கொண்டு கண்ணீரை இறைக்க முயல்கிறாள். “கண்ணீர் பெருகியபடி அளவிட இயலாதபடி இருக்கும் என்பதால் இறைக்கமுடியாது” என்று ஒரு பொருள் இதுவரை கூறப்பட்டது; ஆனால் கண்ணீர் சொரிதல் என்பது இந்த விஷயத்தில் இனிமையாக உள்ளபோது, அதனை ஏன் இறைக்கவேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; ஸுந்தரகாண்டம் (33-34) - கிமர்த்தம் தவநேத்ராப்யாம் - ஹனுமான் ஸீதையிடம், “உமது கண்களில் நீர் ஏன் பெருகிறது”, என்றான் - என்பது காண்க; இப்படியாக இவள் நிலையும் உள்ளது. – (சங்கு) - கண்ணீரை முற்றிலுமாக இறைத்த பின்னர், இந்தக் கண்களால் காணலாம்படியாக வந்து தோன்றும் காட்சியை எண்ணுகிறார். திருவாய்மொழி (6-5-1) - தவளவொண் சங்கு சக்கரம் - என்று திவ்யமான ஆயுதங்களுடன் கூடியவனாக உள்ள நிலையை அல்லவோ இவள் காண விரும்பியது! “ஆனால் பெரிய பெருமாளுக்கு இரண்டு திருக்கரங்கள் மட்டுமே உள்ளன. அவனுக்குச் சங்கு சக்கரம் உண்டோ” என்பதற்கு விடை கூறுகிறார்; தன்னைக் குறித்து மகிழாத கம்ஸன் போன்றவர்களுக்கு அல்லவோ இவன் இரண்டு தோள்களுடன் உள்ளான்? கீதையில் (11-46) - தேநைவ ரூபேண சதுர்ப்புஜேந - நான்கு தோள்களுடன் கூடிய அந்த உருவத்துடன் வருவாயாக - என்று அல்லவோ அர்ஜுநன் ஆசைப்பட்டான்? “சங்கு சங்கரங்களுடன் வரவேண்டும்” என்று கூறாமல், “சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்” என ஏன் கூறவேண்டும்? இதற்கு விடை அளிக்கிறார்; திருவாய்மொழி (6-9-1) - கூராராழி வெண்சங்கேந்தி வாராய் – என்பதாகவே விரும்பி, இதற்கு ஏற்ற வலிமையானது உடலில் இல்லாத காரணத்தால், அவ்விதம் கூறி முடிக்க இயலாமல், தாகம் எடுத்த ஒருவன் கைகள் கொண்டு சைகை காண்பித்துத் தண்ணீரைக் கேட்பது போன்று, இவள் அஞ்சலி மூலம் முடித்தாள். – (தாமரைக் கண்ணென்றே தளரும்) - இரண்டு ஆழ்வார்களுடைய நிலையில் வந்து அலைகள் வீசியபடி உள்ள திருக்கண்களின் அழகைக் கூற எண்ணியவளாக, நடுவில் தளர்ந்தாள். “உனது தாமரைக் கண்கள் கொண்டு நோக்கியருள வேண்டும்” என்று கூறத் தொடங்கி, நடுவில் தளர்ந்தாள். இவ்விதம் தளர்ந்ததற்கு ஒரு உதாரணம் காண்பிக்கிறார்; ஸுந்தரகாண்டம் (26-37) - “ராமம் ரக்தாந்த நயநமபச்யந்தீ ஸுது:கிதா - கடைக்கண்களில் சிவந்து காணப்படும் இராமனுடைய திருக்கண்களைக் காணாமல் துக்கம் கொண்டவள் ஆனேன் – என்பது காண்க. ஏன் தளர வேண்டும்? இவனை விட்டு வேறு விஷயங்களில் பொழுதைக் கழித்து ஆறியிருக்கலாம் அல்லவோ என்பார்கள்; இதற்கு விடை அளிக்கிறாள்; (எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டென்னும்) – பர வ்யூஹ விபவங்களில் நான் ஆசைப்பட்டேனோ, “தூரமாக உள்ளவன்” என்று எண்ணி ஆறுவதற்கு? அவதாரங்களில் ஆசை கொண்டேனோ, “ஸம காலம் அல்ல” என்று பொறுப்பதற்கு? அந்தர்யாமி நிலையில் ஆசைப்பட்டேனோ, “கண்களால் காணப்பட இயலாதவன்” என்று பொறுப்பதற்கு? (உன்னை விட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்) - உறக்கத்தின் மூலமாகவோ, சூது சதுரங்கம் மூலமாகவோ பொழுதைக் கழித்து மறக்கலாம்படி உள்ள ஒரு விஷயத்திலோ நான் அகப்பட்டேன்! மிகவும் உயர்ந்த வேறுபட்ட விஷயத்தில் அல்லவோ நான் அகப்பட்டேன்? இதற்கு ஸர்வேச்வரன், “நீ இவ்விதம் வேறுபட்ட உயர்ந்த விஷயத்தில் அகப்பட்டால், அதற்கு நாம் என்ன செய்வது?”, என்றான். இதற்கு இவள், “உம்முடைய கண்ணழகின் மேன்மையை நீ அறிந்தாய் என்றால் ‘நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் தாங்கமாட்டார்கள்’ என்று நீ அறியமாட்டாயோ?” என்கிறாள். (உன்னை விட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்) - இதற்கு ஸ்ரீரங்கநாதன், “நம்முடைய கண் அழகை நாம் அறிவோமோ?”, என்றான். இதற்கு இவள், “உன்னை ஒருமுறை நீ கண்ணாடியில் பார்த்து அறிந்துள்ளாயோ? அவ்விதம் அறிந்தால், நீ கண்ணாடியை விட்டு அகலமாட்டாய். அப்படிப் பிரிந்தால் இவள் படும் பாட்டை நீ அடைவாய்”, என்கிறார். “எங்ஙனே தரிக்கேன்” என்றவுடன் இவன் வராத காரணத்தால், (இரு நிலம் கைதுழாவிருக்கும்) – இவளுடைய கண்ணீரால் சேரானதால், பெரிய இந்த நிலமானது, ஒரு பீங்கான் கோப்பையில் உள்ள சந்தனக்குழம்பு போன்று, இவளால் துழாவியபடி இருந்தது. பின்னர் அதனைச் செய்யும் சக்தியற்றவளாகவும் இருந்தாள். – (செங்கயல்) - அந்த ஊரில் வாழ்கின்ற விலங்குகளின் தன்மையைக் கூட இவளுக்கு அடைவது அரிதாக உள்ளதே! அவை தங்களுடைய நிறம் பெற்று வாழ்கின்றன; இவள் தனது நிறத்தை இழந்தாள். தண்ணீரைப் பற்றிய மீன்கள் களிப்புடன் வாழ்கின்றன; நாரயணனைப் பற்றிய இவள் துக்கத்துடன் உள்ளாளே! (செங்கயல்) – அழகான மீன்; அந்த மீனானது தண்ணீரை விட்டுப் பிரிந்து உயிர் தரித்தால் அல்லவோ இவள் உன்னை விட்டுப் பிரிந்து நிற்க வல்லவள் ஆவாள்! அயோத்யாகாண்டம் (53-31)- ஜலாந்மத்ஸ்யாவிவோத்த்ருதௌ – “தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் போன்று சில நொடிகள் மட்டுமே நாங்கள் பிழைப்போம்”, என்று லக்ஷ்மணன் இராமனிடம் கூறினான் - என்பது போன்று அல்லவோ இவளையும் கூறலாம்? (இவள் திறத்து) - ஆரண்யகாண்டம் (6-16) – ஏஹி பச்ய சரீராணி - ராக்ஷஸர்களால் தின்னப்பட்ட எங்கள் சரீரங்களைக் காணவேண்டும் - என்று ரிஷிகள் இராமனிடம் கூறியது போன்று இவளுடைய நிலையானது, வார்த்தைகளால் விவரிக்க இயலாதபடி உள்ளதால், திருத்தாயார் இவளுடைய திருமேனியைக் காண்பிக்கிறாள். அஸுரர்கள் தின்ற சரீரங்களை ரிஷிகள் காண்பித்தது போன்று விரஹம் தின்ற இவள் திருமேனியைக் காண்பிக்கிறார். (என் செய்கின்றாயே) - உன்னை மட்டுமே ஆசைப்படும் இவள், உனது ஊரில் உள்ள அனைத்து பொருள்களும் பெற்றவற்றை இவளும் பெறவேண்டாமா?