பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 12)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
மைத் தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த் தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே கனங் குழையீர் வந்து காணீரே
கறுத்த விசாலமான கண்களையுடைய யசோதைப்பிராட்டி வளர்க்கின்ற, வளம் மிக்க வயலில் மலரும் நீலவர்ண அல்லி மலரின் நிறம் போன்ற நிறத்தை உடையவனான, சிறுபிள்ளையான க்ருஷ்ணனுடைய, கூர்மையான நுனியை உடைய திருச்சக்கரமும் திருச்சங்கமும் பொருந்தப் பெற்றுள்ள திருக்கரங்களை, வந்து காணுங்கள்! பொன்னால் செய்யப்பட்ட காது குண்டலங்களையுடைய பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருத்தோள்களில் நின்றும் திருக்கைத்தலத்திலே போகிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருத்தோனினழகை யநுபவித்த வநந்தரம், திருக்கைத்தலத்தினழகை யனுபவிக்கிறார்.
– திருத்தோள்களின் அழகை அனுபவித்த பின்னர் திருக்கரங்களின் அழகை அனுபவிக்கிறார்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (மைத்தடமித்யாதி) (மைத்தடங்கண்ணி யசோதை) ஒப்பனைக்கு உபலக்ஷணம். வளர்ப்பார் பலருண்டாயிருக்கச் செய்தேயும் தானேயிறே வளர்ப்பாள். (செய்த்தலையித்யாதி) பூஸாரமுள்ள க்ஷேத்ரத்திலே அப்போதலர்ந்த நிலம் போலேயிருக்கிற நிறத்தையுடைய. (சிறுப்பிள்ளை) இவனுடைய அதிமாநுஷங்களைக் கண்டாலும் சிறுப்பிள்ளையாகவிறே இவள் நினைத்திருப்பது. (செய்த்தலை நேமியும்) கூரிய தலையையுடைத்தான நேமியென்னுதல். அவன் நினைவை அறிகையாலே “கருதுமிடம் பொருது”, திருக்கையிலே நிற்கிற கூர்மையாதல்; ஆயுத ஸாமாந்யத்தாலே நெய் என்னவுமாம்; திருக்கைகளோட்டை ஸ்பர்சமாகவுமாம்; “கையெல்லாம் நெய்” என்னக்கடவதிறே. (சங்கும்) ஆழ்வானைப்போலே போக்குவரத்துச் செய்யாதே இருந்தவிடத்திலேயிருந்து கருதுமிடம் போரவல்ல ஓசையையுடைய ஸ்ரீபாஞ்சஜந்யமிறே. இவைதன்னை இவன்தான் ஒவ்வொருபோது காட்டக்காணுமிறே. “அப்பூச்சி காட்டுகிறான்” என்று இவற்றையிறே எம்பாரருளிச் செய்தது. நிலாவுதல் - வர்த்தித்தல். இப்படியிருக்கிற திருக்கைத்தலத்தை அனுபவிக்க வாருங்கோ ளென்கிறார். “கனங்குழை” என்றது காதுப்பணியாய், ச்ரோதாக்களைச் சொல்லுகிறது. மாமுனிகள் வ்யாக்யானம் - (மைத்தடங்கண்ணி) கறுத்துப் பெருத்திருந்துள்ள கண்ணையுடையவனென்னுதல்; அஞ்ஜாலங்க்ருதமாய் விஸ்த்ருதமா யிருந்துள்ள கண்ணையுடையவ ளென்னுதல். (அசோதை வளர்க்கின்ற) இப்படியிருந்துள்ள கண்ணழகையுடைய யசோதைப்பிராட்டி, வைத்த கண் வாங்காமல் நோக்கி வளர்க்கிற. வளர்ப்பார் பலருமுண்டாயிருக்கச் செய்தேயும், அவர்கள் கையில் காட்டிக் கொடாதே தானேயிறே வளர்ப்பாள். (செய்த்தலையித்யாதி) பூஸாரமுள்ள க்ஷேத்ரத்திலே அப்போதலர்ந்த குவளைப்பூவின் நிறம் போலிருக்கிற நிறத்தையுடையனான சிறுப்பிள்ளையினுடைய. அவள் சீராட்டி வளர்த்த முசுமுசுப்பெல்லாம் திருகிறத்திலே தோன்றும்படி யிருக்குமாயிற்று. மாமுனிகள் வ்யாக்யானம் - (நெய்த்தலைநேமியும் சங்கும் நிலாவிய) கூரிய நுனியை யுடைத்தான திருவாழி யென்னுதல்; ஆயுத ஸாமாந்யத்தாலே செய்யணிந்திருக்கும் திருவாழி யென்னுதல்; “கையெல்லாம் நெய்” என்கிற திருக்கையின் ஸ்பர்சர்த்தாலே நெய்ச்சுவடு மாறாத் திருவாழியென்னுதல். இப்படியிருக்கிற திருவாழியும், இதுபோலே கருதுமிடம் பொருது வந்து கையில் நிற்கவும் வேண்டாதே, கைவிடாதேயிருந்து தன்னோசையாலே எதிரிகளை அழிக்கவல்ல ஸ்ரீபாஞ்சஜந்யமும் நிரந்தரமாக வர்த்தியா நின்றுள்ள கையும் ஆழ்வார்களுமான சேர்த்தியை ஓரோ தசைகளிலே இவன்தான் இவளுக்கும் காட்டிக்கொடுக்குமிறே. (கைத்தலமித்யாதி) திருக்கைத்தலத்தினழகை வந்து காணுங்கோள். கனவிதாந காதுப்பணியையுடைய நீங்கள் வந்து காணுங்கோள், கநமென்று -பொன்னாகவுமாம்.
– (மைத்தடம் கண்ணி) கறுத்துப் பெருத்திருக்கும் கண்களை உடையவள். அஞ்சனமானது அலங்காரமாய் பரவியிருக்கும் கண்களை உடையவள். (அசோதை வளர்க்கின்ற) - இத்தகைய பெரியதான கண்களையுடைய யசோதைப்பிராட்டி, வைத்த கண் வாங்காமல் நோக்கி வளர்க்கின்ற. அதாவது க்ருஷ்ணனை வளர்ப்பவர்கள் பலர் இருப்பினும், அவர்களிடம் அவனை வளர்க்கும் பொறுப்பை அளிக்காமல், தானே வளர்ப்பாள். (செய்த்தலை) - வளமான மண் உள்ள இடத்தில், அன்றைக்கு மலர்ந்த நீல வர்ண அல்லிமலர் போன்ற நிறத்தை உடையவனான. (சிறுபிள்ளை) - மனிதனுக்கு அப்பாற்பட்ட காரியங்கள் செய்தானாகிலும், இவள் கண்ணுக்கு சிறு பிள்ளையாகவே விளங்குகிறான். அதாவது, எவ்வாறு வளமை மிக்க மண்ணில் மலரும் அல்லியானது நல்ல நிறத்துடன் வலிமை மிக்க தாளுடனும் விளங்குமோ அதே போன்று, யசோதை கொஞ்சி சிரத்தையுடன், “அரும்தெய்வம்” என்றெல்லாம் பாராமல், தன்னுடைய சிறுப்பிள்ளையாகவே வளர்த்த விதங்கள் எல்லாம் இந்தக் க்ருஷ்ணனுடைய நிறத்திலும் வடிவிலும் வெளிப்படுகிறது. – (நெய்த்தலை நேமியும்) - கூர்மையான நுனியை உடைய சக்கரம். அல்லது பொதுவாக உலகத்தில் ஆயுதங்களுக்கு நெய் தடவுவர்; இப்படி நெய்யினால் தடவப்பட்டிருக்கிற சக்கரம். அல்லது பெரியதிருமொழி (10-7-3) - கை எல்லாம் நெய் வயிறு பிள்ளை - என்கிறபடியே, நெய்யெல்லாம் பொருந்தப் பெற்றிருக்கிற கையில் உள்ளதால், நெய்ச்சுவடினைக் கொண்டிருக்கும் திருச்சக்கரம். இவ்விதம் உள்ள திருச்சக்கரமும். (சங்கும்) - திருச்சக்கரத்தை போன்று அங்குமிங்கும் செல்லாமல், க்ருஷ்ணனுடைய திருக்கரத்தை விடாமல் இருந்தாலும், திருவாய்மொழி (10-6-8) - கருதும் இடம் பொருது கைநின்ற – தன்னுடைய இச்சையாலே எதிரிகளை அழிக்க ஓசையுடன் சென்று போரை நடத்தி வந்து, திருக்கரத்தில் மீண்டும் பொருந்தியிருக்கும் சங்கமும். இங்கு ஒரு ஐயம் எழலாம். “உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூபம் ஏதத் சதுர்புஜம்” என்பதற்கு ஏற்ப, எதிரிகளை அழிக்கும் தொழிலில் ஈடுபட்டபடி உள்ள திருச்சக்கரத்தையும் திருச்சங்கத்தையும் யசோதையால் கண்டு கொண்டிருக்க இயலுமோ? இதற்கு விடை அருளிச்செய்கிறார். இப்படி திருச்சக்கரமும் திருச்சங்கமும், (நிலாவிய) – அழிக்க எவ்விதமான எதிரிகளும் இல்லாத நேரத்தில், நிரந்தரமாகப் பொருந்தியுள்ள திருக்கரங்களை, இவன் இவளுக்கு ஒவ்வொரு நிலைகளிலும் காட்டிக் கொடுக்கிறான். இவ்விதம் காண்பிப்பதால் அல்லவோ அவள் “அப்பூச்சி காட்டுகிறான்” என்று கூறுகிறா: என எம்பாரும் அருளிச்செய்துள்ளார். (கைத்தலம்) - இத்தகைய திருக்கரங்களின் அழகினைக் காணுங்கள். (கநம் குழையீர் வந்து காணீரே) – கனத்த பொன்னால் செய்யப்பட்ட குண்டலங்களை அணிந்துள்ள நீங்கள் வந்து காணுங்கள்.