திருவாய்மொழி - ஏழாம்பத்து (pravesam 1)
ஏழாம்பத்து
ப்ரவேசம் - இரண்டாம் திருவாய்மொழி
கங்குலும் பகலும் ப்ரவேசம்
– “உண்ணிலாவி”யில் நமச்சப்தார்த்தம் பலவகையாலும், “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” என்று ததீய சேஷத்வ பர்யந்தமாகவுள்ளபடி அநுஸந்தித்தாராயற்றது. “உலகமுண்ட பெருவாயனில்”, பெரியபிராட்டியார் முன்னிலையாகத் திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கார்; விஷயங்களும் இந்த்ரியங்களும் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே வைத்தபோதே தன் பக்கலினின்றும் நம்மை யகற்றப் பார்த்தானாகாதே யென்று கூப்பிட்டார் “உண்ணிலாவி”யில். வ்யபிசாரமுமின்றிக்கே வ்யவதாநமுமின்றிக்கே யிருக்கிற ஸாதனத்தைப் பற்றின பின்பும் அது பலியாவிட்டால் அவன் தன்னையே இன்னாதாய்க் கொண்டு கூப்பிடுமத்தனையிறே. இப்படி கண்ணழிவற்றது பின்னையும் பலியாதொழிவானேன்? என்னில்; அது பலியாநிற்க, க்ரம ப்ராப்தி பொறுக்கமாட்டாமல் படுகிறார். ஈச்வரனுடைய ஸர்வஜ்ஞத்வத்துக்கும் அவ்வருகான இவருடைய மார்த்தவ வேஷமிருக்கிறபடி. பிராட்டியைப்போலே “தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்” என்றிருக்கமாட்டார், ருசி அளவில்லாமையாலே. ஸம்ஸாரத்தினுடைய தோஷத்தையும் அநுஸந்தித்து எம்பெருமானுடைய குணோத்கர்ஷத்தையும் அநுஸந்தித்தால் ஆறியிருக்கப் போகாதிறே. பகவத்விஷயம் அறியாத ஸம்ஸாரிகள் இவர்க்குக் கூட்டல்ல; பகவதலாபம் அறியவேண்டாத நித்யஸூரிகளும் இவர்க்குக் கூட்டன்று. அலாபத்தில் நோவுபடுகைக்கு இவரொருவருமேயுள்ளார். பட்டர், இத்திருவாய்மொழி யருளிச்செய்யும் போதெல்லாம் “ஆழ்வார்க்கு ஓடுகிற தசையறியாதே அவருடைய பாவவ்ருத்தியுமின்றிக்கே யிருக்கிற நாம் என் சொல்லுகிறோம்?” என்று திருமுடியிலே கையை வைத்துக் கொண்டிருப்பர். அவனும், “இவர் நமக்கே பரமென்னுமிடம் அறிவித்தாராகில், நாமும் இவர் கார்யம் செய்யக்கடவதாக அற்ற பின்பு செய்து தலைக்கட்டிற்றன்றோ? இவர் அங்குப்போய் அனுபவிக்கும் அநுபவம் இங்கேயிருந்தே குறைவற அநுபவியாநின்றாராகில், ‘விரோதி போயிற்றில்லையே’ என்று இவர் பண்ணுகிற அதிசங்கையும் போக்குகிறோம்; நாலுநாள் முற்பாடு பிற்பாடன்றோ? இதில் கார்யமென்?”, என்றிருந்தான். பிற்பாடு பொறுக்கமாட்டாத இவரை வைக்கப்போருமோ? என்னில்; ப்ரஜைகளைப் பட்டினியிட்டு வைத்தும், வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போலே, “இவர் தாம் நாலுநாள் நோவுபட்டாராகில் படுகிறார்; இவருடைய ப்ரபந்தத்தைக் கொண்டு நாட்டை வாழ்விப்போம்'' என்றிருந்தான். இவர் ஒரு முஹூர்த்தமிருக்கையாவது, தன்னாலும் திருத்தவொண்ணாத ஸம்ஸாரம் திருந்தி வாழும்படியாயிருந்தது என்றதுக்காக வைத்தான் அவன்; இவர், “நம்படி யறிந்தானாகில், தனக்கு சக்தியில் குறையில்லையாகில், இது பொருந்தாத நம்மையிட்டுக் காரியங் கொள்ள வேணுமோ? இவ்விருப்பில் பொருந்துவார் ஒருவரைத் திருத்திக் காரியங் கொள்ளத் தட்டென்?” என்றிருந்தார். அவனும், “இது பொருந்தாதாரையே கொண்டு காரியங் கொள்ளவேணும்” என்றிறே இருக்கிறது. தேசிகரையிட்டுக் காரியங் கொள்ள வேணுமே. பண்ணின ப்ரபத்தி சடக்கெனப் பலியாதொழிந்தது, ப்ரஹ்மாஸ்த்ரம் வாய்மடிந்த மாத்ரமிறே. இனித்தான் அவனும், ஸ்ரீபரதாழ்வான் மாதுலகுலத்தில் நின்றும் வந்து தாயாரை நமஸ்கரிக்க, அவள் “ராஜந்” என்ற வெம்மை பொறுக்கமாட்டாமைப் பெருமாள் திருவடிகளிலே தன் ஆற்றாமையோடே விழுந்து சரணம் புக்கு, “தேவர் மீண்டருள வேணும்” என்ன; பெருமாளும், மீளாமைக்கு ஹேதுவாயிருப்பன அனேகத்தை இவனுக்குச் சொல்லி, “பிள்ளாய்! நீ நிர்ப்பந்திக்கக் கடவையல்லை; உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னாரெதிரே, உன் ஸ்வரூபாநுரூபமான பாரதந்த்ர்யத்தைப் பெற்று நீ போ” என்று சொன்னாப்போலே; இவர் அபேக்ஷித்ததொழிய ஏதேனுமொன்றைக் கொடுத்துப் பொகட்டுப் போகவல்லானொரு ஸ்வதந்த்ரன்றே. ஆகையாலே, தான் நினைத்தபோது கார்யம் செய்யக்கடவனுமா யிருக்குமிறே. ஸர்வஜ்ஞனானவன் இவர்க்கு ஓடுகிற தசையறிந்து, தன்னுடைய ஸர்வசக்தித்வம் கொண்டு இவர்க்கு ஒரு பரிஹாரம் பண்ணவொண்ணாதபடி இவருடைய தசா விசேஷமிருக்கிறபடி. இவர்தாமும் “விண்ணுளார் பெருமானேயோ!” என்றும், “முன் பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ” என்றும், “பலமுதல் படைத்தாய்!” என்றும் சொல்லுகிறபடியே பரத்வம், அவதாரம், ஜகத்காரணத்வம் இவற்றைச் சொல்லியிறே கூப்பிட்டது. அதில், பரத்வம் லோகாந்தரமாகையாலே, கிட்டப்பெற்றிலோம் என்றாறியிருக்கலாம்; அவதாரம் காலாந்தரமாகையாலே, அக்காலத்தில் உதவப் பெற்றிலோம் என்றாறியிருக்கலாம். ஜகத்காரணத்வம் தானறிந்து செய்யுமதாகையாலே, நம்மால் செய்யலாவதில்லை என்று கொண்டு ஆறியிருக்கலாம். அவ்விழவுகளெல்லாம் தீரும்படி ஸதாஸந்நிதி பண்ணிக் கொண்டு கோயிலிலே கண்வளர்ந்தருளுகிற பெரியபெருமாள் திருவடிகளிலே விழுந்து தம்மபேக்ஷிதம் பெறாவிட்டால் தரிக்கவொண்ணாதிறே. விஷயம் அஸந்நிஹிதமாதல், ஜ்ஞானத்தில் கொத்தையுண்டாதல் செய்யிலிறே தரித்திருக்கலாவது. நீர்மையில் கண்ணழிவுண்டாயாதல், மேன்மையில் கண்ணழிவுண்டாயாதல் இழக்கிறாரன்றே. – இப்படியிருக்கச் செய்தேயும் அவன் திருவடிகளிலே தமக்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே தாமான தன்மை போய், ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய், அவ்வளவிலும் தமக்கு ஓடுகிற தசையைத் தாம் அறிந்து கூப்பிடப் பெறாதே, திருத்தாயார் கூப்பிடும்படியாய் விழுந்தது. ஸம்ச்லேஷ விச்லேஷங்களில் பிறக்கும் லாபாலாபங்களாலே தாம் பிராட்டிமார் தசையையுடையராகிறார். திருத்தாயாரான ஸ்வபாவம் விளைந்தபடி எங்ஙனே? என்னில்; கிண்ணகம் பெருகியோடா நின்றால் இரு கரையும் ஆறுகளாகப் பெருகிப் போகா நிற்கச்செய்தேயும், கடலிற்புகும் அம்சம் குறையாமல் போய்ப்புகுமாப் போலேயாயிற்று, இவருடைய “அதனிற் பெரிய வென்னவா” என்கிற அபிநிவேசமிருக்கிறபடி. ஆகையாலே இவர்க்கு எல்லார் பேச்சும் பேசக் குறையில்லை. இப்பெண்பிள்ளை மோஹித்துக் கிடக்க, இவளைக் கண்டு உறவுமுறையாரடங்கலும் மோஹித்துக் கிடக்க; பெருமாளிலும் இளையபெருமாளுக்குத் தளர்த்தி யுண்டாயிருக்கச் செய்தே, பெருமாளுடைய ரக்ஷணத்துக்காக இளையபெருமாள் உணர்ந்திருக்குமாபோலே, திருத்தாயாரும் இவருடைய ரக்ஷணத்துக்காக வுணர்ந்திருந்து, ஏதேனும் தசையிலும் தங்கள் காரியம் தாங்கள் செய்யக்கடவதன்றிக்கே இவன் காலிலே விழுந்து, தங்கள் காரியம் தலைக்கட்டுங் குடியாகையாலே, பெரியபெருமாள் திருவடிகளிலே இவளை யிட்டு வைத்துக் கொண்டிருந்து, “இவள் அழுவது, தொழுவது, மோஹிப்பது, ப்ரலாபிப்பது. அடைவுகெடப் பேசுவது, நெடுமூச்செறிவது, அதுதானும் மாட்டாதொழிவது, ஸ்தப்தையாயிருப்பது, இப்படி அரதிவிஞ்சிச் செல்லாநின்றது; இவள் திறத்திலே நீர் என் செய்யக்கடவீர்?” என்று கூப்பீடாய்ச் செல்லுகிறது. எல்லாவளவிலும் அவனையே பரிஹாரங்கேட்கும் குடியாகாதே. ஆண்டாள் ஒருநாள் ஆழ்வானுக்கு “பிள்ளைகள் விவாஹ ப்ராப்தரானார்கள்; இவ்விடையாட்டமொன்றும் ஆராயாதிருக்கிறதென்?” என்ன; “பகவத் குடும்பத்துக்கு என்னை இன்றிருந்து கரையச் சொல்லுகிறாயோ? நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு” என்ன; பட்டரையும் சீராமப்பிள்ளையையும் கொடுத்துப் போகவிட. வாசித்து சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க; “ஒன்று சொல்லுவாய் போலேயிருந்தாயீ!” என்று திருவுள்ளமாக; “இவர்கள் விவாஹ ப்ராப்தரானார்களென்னா நின்றார்கள்” என்று விண்ணப்பஞ் செய்ய; “எல்லாம் செய்கிறோம்” என்று திருவுள்ளமானார். பிற்றைநாளே மன்னியைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அகளங்க ப்ரஹ்மராயர் அடையவளைந்தான் செய்யா நிற்கச்செய்தே மதிள் போக்குகைக்காக பிள்ளையாழ்வானகத்தை வாங்கப் புக, பட்டர் அத்தைக் கேட்டருளி, “வாரீர் பிள்ளாய்! நீர் செய்கிற மதிள் பெருமாளுக்கு ரக்ஷகமென்றிராதே கொள்ளீர்; இங்குக் கிடக்கிற நாலுகுடியுங் காணும் பெருமாளுக்கு ரக்ஷை; ஆன பின்பு நீர் செய்கிறவையெல்லாம் அழகிது; இவையெல்லாம் நாம் செய்கிறோமென்றீராதே, பெருமாள் செய்விக்கிறாரென்றிரீர்; உமக்கு நல்வழி போகவுடலாங் காணும்” என்றருளிச் செய்தார். இத்திருத்தாயாரும் ஸர்வபரங்களையும் அவர் தலையிலே பொகட்டுப் பெண்பிள்ளையைத் திருமணத்தூணுக்குள்ளே பொகட்டு, அவருடைய அசரண்யசரண்யத்வாதி குணங்களை விண்ணப்பஞ் செய்யா நின்று கொண்டு, ஒரு காலநியதியாதல், ஒரு தேசநியதியாதல், அதிகாரி நியதியாதலின்றிக்கே ஸர்வஸமாச்ரயணீயராயிருக்கிறபடியை யநுஸந்தித்து, தன் பெண்பிள்ளையினுடைய தசையைத் திருவுள்ளத்திலே படுத்துகிறாள் இத்திருவாய்மொழியாலே.
– வ்யாக்யானத்தில் உள்ள “உண்ணிலாவிய நமச்சப்தார்த்தம்” என்பதற்கு முந்தைய திருவாய்மொழிகளுடன் இரண்டுவிதமான ஸம்பந்தங்களைக் கூறுகிறார். “உலகம் உண்ட பெருவாயா” என்பதில், த்வய மந்த்ரத்தின் முதல் பகுதியான ப்ரணவத்தை அருளிச்செய்தார்; “உண்ணிலாவிய” என்பதில், த்வயத்தின் பிற்பகுதியில் உள்ள “நம:” என்பதைக் கூறினார். இந்தத் திருவாய்மொழியில், “ஸ்ரீமத் பத நாராயணா” என்பதை அருளிச்செய்கிறார். “உலகம் உண்ட பெருவாயா” என்பதில், “புகல் ஒன்றிலா அடியேன்” என்று ப்ரணவத்தில் பொருள் கூறினார். ”உண்ணிலாவிய” என்பதில், “நம:” பொருள் கூறினார்; “கங்குலும் பகலும்” என்ற இதில், “நாராயணா” என்பதன் பொருள் கூறுகிறார். இதில் “நாராயண” என்பதன் பொருள் கூறப்பட்டதாகக் கொள்வது எப்படி என்பதற்கு அரும்பத உரைக்காரர் விடை தருகிறார்; “நாராயணாய” என்பதில் உள்ள “ஆய” என்னும் நான்காம் வேற்றுமையானது கைங்கர்யத்தைக் கூறுவதாலும், அத்தகைய கைங்கர்யமானது பகவத் அனுபவத்தால் உண்டாகும் ப்ரீதியின் விளைவாக உள்ளதாலும், அந்த அனுபவமானது ஆழ்ந்த ஈடுபாட்டின் விளைவாக உள்ளதாலும், அப்படிப்பட்ட ஈடுபாடு குறித்து இந்தத் திருவாய்மொழியில் கூறுவதாலும், இத்திருவாய்மொழியானது “நாராயண” என்பதன் பொருள் கூறுவதாக ஆகிறது. – அடுத்து இந்தத் திருவாய்மொழிக்கும், முன்புள்ள திருவாய்மொழிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதற்காக, கடந்த இரண்டு திருவாய்மொழிகளில் கூறப்பட்ட விஷயங்களை, “உலகம் உண்ட” என்று தொடங்கி வ்யாக்யானத்தில் உள்ள இரண்டு வாக்கியங்களில் கூறுகிறார்; “உலகம் உண்ட பெருவாயா” என்பதில், பெரியபிராட்டியார் முன்னிலையில் திருவேங்கடமுடையானின் திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்தார்; “உண்ணிலாவிய” என்ற திருவாய்மொழியில், “உலகவிஷயங்களும் இந்த்ரியங்களும் உலாவியபடி உள்ள இந்த ஸம்ஸாரத்தில் நம்மை வைத்தபோதே, நம்மைத் தன்னிடமிருந்து அகற்றப் பார்த்தான் அல்லவோ?” என்று எண்ணியவராக அவனை அழைத்தார். ஆனால் ஒரு உபாயத்தைக் கைக்கொண்டவர், அந்த உபாயமானது பலன் அளிக்கும்வரை பொறுத்திருக்காமல், அவனை அழைத்தபடி இருப்பது ஏன் என்பதற்கு விடை தருகிறார்; பலனுடன் எப்போதும் சேர்ந்துள்ளதும், காலதாமதம் இன்றி பலன் அளிக்கவல்லதும் ஆகிய ஒரு சாதனத்தைக் கைக்கொண்டு பின்னர், அது பலிக்காவிட்டால், அவனை வெறுத்து அழைப்பர் அல்லவோ? – இவ்விதம் சரணாகதியானது எந்தக் குறையும் அற்றது என்றால், அது பலனைத் தராமல் இருப்பது ஏன் என்பதற்கு விடை தருகிறார்; இந்தச் சரணாகதியானது பலன் தரும் வரிசை முறையாகக் காத்து நிற்க இயலாமல் இவ்விதம் துன்பம் கொள்கிறார். பொறுக்க இயலாமைக்குக் காரணம், ஸர்வேச்வரனுடைய அனைத்தும் அறிந்த தன்மைக்கும் ஏற்புடையபடி உள்ள இவருடைய மென்மையின் ஸ்வரூபம் உள்ளதால் ஆகும். ஆனால் ஸீதையைப் போன்று இவரால் உயிர் தாங்கி இருக்கமுடியாதா என்பதற்கு விடை தருகிறார்; ஸீதையைப் போன்று ஸுந்தரகாண்டம் (39-30) - தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் – அவரே வந்து என்னை அழைத்துச் செல்லுதல் என்பதே அவருக்குத் தகுந்தது ஆகும் - என்று இருக்க இயலாதவர்; இதன் காரணம் பகவத் விஷயம் குறித்த ருசிக்கு அளவில்லை என்பதால் ஆகும். ருசிக்கு அளவில்லாததற்குக் காரணம் கூறுகிறார்; ஸம்ஸாரத்தின் தோஷத்தையும், எம்பெருமானுடைய குணங்களின் உயர்வையும் எண்ணினால், பொறுமையுடன் இருக்க இயலாது அல்லவோ? இப்படி பகவத் விஷயம் கிட்டப் பெறாமையால் இவர் போன்று துன்பம் கொண்டவர்கள் என ஒப்பு கூறலாம்படி வேறு யாரும் உள்ளனரோ என்பதற்கு “பகவத் விஷயம் அறியாத” என்றுள்ள மூன்று வாக்கியங்களில் விடை தருகிறார்; பகவத் விஷயம் குறித்து அறியாத ஸம்ஸாரிகள் இவருக்குக் கூட்டு அல்ல; பகவானைப் பிரிதல் என்பதையே அறியாத நித்யஸூரிகளும் இவருக்குக் கூட்டு அல்ல; ஆக பிரிவில் துன்பம் கொள்பவர் இவர் ஒருவரே உள்ளார். – இவ்விதம் இருக்கின்ற இவருடைய துன்பத்தை வெளிப்படுத்துகின்ற இந்தத் திருவாய்மொழிக்கான பொருளானது, பகவத் விஷயத்தில் ஈடுபடுதல் என்ற ஆற்றின் கரை மீது மட்டுமே நிற்கும் நம் போன்றவர்கள் கூறினால் சுவையுடன் இருக்காது என்று கருதி, இதனை நம்பிக்கைக்குத் தக்க ஒருவருடைய நிலையால் கூறுகிறார்; பட்டர் இந்தத் திருவாய்மொழியை அருளிச்செய்யும் அனைத்து நேரங்களிலும், “ஆழ்வாருடைய எண்ண ஓட்டத்தில் ஓடும் நிலையை அறியாமல், அவருடைய உள்ளத்தின் தன்மையையும் அறியாமல் உள்ள நாம் என்ன கூறுவது்?”, என்று செய்வது அறியாமல் தனது திருமுடியில் கையை வைத்தபடி இருப்பார். “சரி, இவரை ஸர்வேச்வரன் இங்கு வைத்துள்ளதன் பின்னணி என்ன?”, என்பதற்கு விடை தருகிறார்; ஸர்வேச்வரன் தனது திருவுள்ளதில், “இவர், நமக்கே உயர்ந்ததான பரநிலை உள்ளது என்று அறிவித்தார் என்னும்போது, நாமும் இவருடைய கார்யம் செய்வதாக உறுதி பூண்டு, செய்து முடிக்கிறோம் அல்லவோ? இவர் அங்கு சென்று அனுபவிக்கும் அனுபவங்களை இங்கேயே இருந்து குறைவின்றி அனுபவித்து நின்றார் என்றால், ‘நம்முடைய விரோதிகள் போயிற்றோ இல்லையோ’ என்று இவருக்கு உண்டாகும் சந்தேகத்தையும் நாம் தீர்த்து வைப்போம். ‘நான்கு நாள்களுக்கு முன்பே பலன் ஏற்படவில்லை. அங்கேயே சென்று அனுபவிக்கவேண்டும்’ என்று உள்ள இவருடைய இருத்தலானது, நீண்ட நாள்கள் காத்திருத்தல் அல்ல அல்லவோ? இதில் இவ்விதம் துன்பம் கொண்டு கார்யம் என்ன?”, என்று இருந்தான். – “ஆனால் இப்படியாக தாமதம் என்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாத இவரை, இவ்விதம் விட்டு வைப்பது சரியோ?”, என்பதற்கு ஸர்வேச்வரன் விடை தருகிறான்; அவன் தனது திருவுள்ளத்தில், “குழந்தைகளைப் பட்டினி கிடக்கும்படி செய்து, வந்த விருந்தினர்களைக் கவனிப்பது போன்று, இவர்தான் நான்கு நாள்கள் துன்பம் அடைந்தால் அடைந்து விட்டுப்போகட்டும். இவருடைய ப்ரபந்தத்தைக் கொண்டு நான் நாட்டைத் திருத்துவோம்”, என்று எண்ணியபடி இருந்தான். இவர் இருந்தால் இந்த ஜகத்தானது திருந்துமோ என்பதற்கு விடை தருகிறார்; இவர் ஒரு முஹூர்த்தம் இருந்தார் என்றால் கூட, தன்னாலும் திருத்த இயலாத ஸம்ஸாரம் திருந்தி வாழும்படியாக இருந்தது என்பதற்காக இவரை இங்கு இருக்க வைத்தான்; இவரோ, “இவன் நம்முடைய நிலையை அறிந்தான் என்றால், ஸம்ஸாரத்தைத் திருத்தும் சக்தியில் அவன் தனக்குக் குறையில்லை என்று எண்ணினால், இந்த இடம் பொருந்தாத நம் மூலம் இந்தச் செயலை நிறைவேற்றிக் கொள்ள முயலவேண்டுமோ? இங்கு இருப்பதற்கு பொருமை உள்ள ஒருவன் மூலம் தனது கார்யத்தை முடித்துக் கொள்ளலாம். இதில் என்ன குறை?”, என்று உள்ளார். இதற்கு அவன் தனது திருவுள்ளத்தில், “இங்கு இருப்பு கொள்ளாமல் இருப்பவர் கொண்டு மட்டுமே இக்கார்யத்தை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்”, என்று அல்லவோ எண்ணுகிறான்? இருவன் இவ்விதம் எண்ணுவதற்கான காரணம் என்ன என்பதைக் கூறுகிறார்; “தேசிகர் - அனைத்தும் அறிந்தவர்” மூலம் மட்டுமே இந்தக் கார்யத்தை கைக்கொள்ள இயலும். சரி, இவ்விதம் இவனுடைய செய்கை இருப்பதை இவர் அறிந்தவர் என்றால், அவனை ஏன் கூக்குரல் இட்டு அழைக்கவேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; செய்த ப்ரபத்தியானது சட்டென்று பலன் அளிக்கவில்லை என்பதால் ஆகும். – “இவ்விதம் தாமதம் ஆவதைப் பொறுத்துக் கொள்ள இவரை மேலும் இங்கு வைக்க இயலுமோ?”, என்று மேலே எழுந்த ஐயத்திற்கு வேறு ஒரு பரிகாரத்தையும் அருளிசெய்கிறார். அதாவது பரதாழ்வானை வைத்தது போன்று தனது சுதந்திரம் காரணமாக வைத்தான் என்கிறார். பரதன் தனது தாய்மாமன் வீட்டிலிருந்து வந்து தனது தாயாரை வணங்கினான். அப்போது கைகேகி பரதனை அயோத்யாகாண்டம் (72-24) – ராஜந் - அரசே – என்று அழைத்தாள். அந்த சொல்லின் வெம்மையைப் பொறுக்க இயலாமல், கானகம் வந்து இராமனுடைய திருவடிகளில் ஆற்றாமையுடன் விழுந்து சரணம் அடைந்தான். மேலும் இராமனிடம், “நீவிர் மீண்டும் அயோத்தி திரும்பவேண்டும்” என்றான். இதற்கு இராமன், தன்னால் அயோத்தி திரும்ப இயலாமைக்கான பல காரணங்களைப் பரதனிடம் கூறி, “குழந்தாய் பரதா! நீ என்னைக் கட்டாயப்படுத்த இயலாது. உனக்கு முழு சுதந்திரமும் அளித்து, உனக்கு முன்பாக நின்று உனது பேச்சைக் கேட்டு மறுமொழி அளிப்பவர் முன்பாக, உனது ஸ்வரூபத்திற்கு ஏற்றதான பகவத் விஷயத்திற்கு வசப்படுத்தல் என்பதைப் பெற்றுக் கொண்டு செல்வாயாக”, என்று கூறினான். இது போன்று இவர் விஷயத்திலும் உள்ளான். அதாவது இவர் விரும்பியது அல்லாமல், அது நீங்கலாக வேறு ஒன்றை அளித்து, அதனைப் பெற்றுச் செல்லுமாறு செய்யவல்ல சுதந்திரம் கொண்டவன் அல்லவோ? ஆகவேதான் இவன், தான் நினைக்கும்போது மட்டுமே இவருக்குத் தகுந்த கார்யம் செய்யக்கடவது என உள்ளான். அனைத்தும் அறிந்த ஸர்வேச்வரன் இவருடைய நிலையை நன்கு அறிந்தவனாக, தனது அனைத்துவிதமான சக்திகளையும் கொண்டு இவருக்கு ஏற்றதொரு பரிகாரம் செய்ய விடாதபடி, இவருக்குள்ள சிறப்பன நிலை உள்ளது! – இதுவரை “உண்ணிலாவிய” என்ற திருவாய்மொழியில் கூறப்பட்ட விஷயங்களை ஒருமுறை எண்ணிப் பார்த்தார். இனி இந்தத் திருவாய்மொழிக்கான கருத்தைத் தொடங்குகிறார். பெரியதிருமொழி (7-3-7) - விண் உளார் பெருமானை – என்றும், திருவாய்மொழி (7-1-10) - முன் பரவை கடைந்தமுதங் கொண்ட மூர்த்தியோ – என்றும், திருவாய்மொழி (7-1-9) – பல முதல் படைத்தாய் – என்றும் கூறுவதற்கு ஏற்ப பரத்வம், அவதாரம், ஜகத்காரணத்வம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அழைத்தார். இதில் ஜகத்காரணமாக உள்ள தன்மை என்பது, வ்யூஹத்தைக் கருத்தில் கொண்டு ஆகும். இவற்றில் பரத்வம் என்பது வேறு லோகத்தில் உள்ளதால், “அதனை நாம் கிட்டப் பெறுவது இயலாது” என்று பொறுத்திருக்கலாம்; அவதாரங்கள் பலவும் வேறு வேறு காலகட்டங்களில் நடந்ததால், “அக்காலத்தில் நாம் இல்லாத காரணத்தால், இவனால் உதவப் பெறவில்லை” என்று பொறுக்கலாம்; ஜகத்காரணமாக உள்ள தன்மை என்பது, தான் அசித்துடன் வேறுபாடு இன்றி கிடந்த ஸ்ருஷ்டி காலத்தில் நடந்ததால், தான் அப்போது அறிந்து ஏதும் செய்வதற்கு இயலாது என்று பொறுமையுடன் இருக்கலாம். இப்படிப்பட்ட இழப்புகள் அனைத்தும் தீரும்படியாக, எப்போதும் அருகில் இருக்கும்படியாக திருவரங்கம் பெரியகோயிலில் திருக்கண்கள் வளர்ந்தபடி உள்ள பெரியபெருமாள் திருவடிகளில் விழுந்து, தனது விருப்பத்தைப் பெறாவிட்டால் உயிர் தரிக்க இயலாது அல்லவோ? தான் அண்டும் விஷயம் அருகில் இல்லாமல் இருத்தல் அல்லது ஞானத்தில் குறைவு ஏற்படுதல் போன்றவை நிகழ்தால் மட்டுமே, தான் விரும்பியது இங்கும் கிடைக்கவில்லை என்றாலும் உயிர் தரிக்க இயலும் அல்லவோ? நீர்மையில் குறை, மேன்மையில் குறை ஆகியவை இல்லை என்றால் இவர் இழக்க விரும்பமாட்டார் அல்லவோ? – இவ்விதம் மேன்மை மற்றும் நீர்மையில் குறை ஏதும் இல்லாத இடத்திலும் கூட, தான் விரும்பியவை கிட்டவில்லை என்பதால் வந்த ஆற்றாமையின் கனத்தை அருளிசெய்கிறார்; இவ்விதமாகப் பெரியபெருமாள் உள்ளபோதிலும், அவன் திருவடிகளில் தான் நினைத்தபடியாகக் கலந்து பழக இயலாத கரணத்தால், “நம்மாழ்வார்” என்பதான தனது நிலையிலிருந்து விலகி, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராக, அந்த நிலையிலும் தனக்கு ஏற்பட்டுள்ள நிலையைத் தன்னால் வெளிப்படுத்த இயலாமல், தனது திருத்தாயார் அவனை அழைக்கும்படியாக விழுந்தார். ஆனால் “பிராட்டி நிலை மற்றும் பிரட்டியின் திருத்தாயார் நிலை ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் ஏற்பட்டால், இவருடைய ஈடுபாடு குறையாதோ?” என்ற ஐயத்தை விலக்குகிறார்; சேர்க்கை மற்றும் பிரிவு ஆகிய நிலையில் ஏற்படும் லாபம் மற்றும் அலாபம் ஆகியவை காரணமாக, தான் பிராட்டி நிலையை உடையவர் என்றாகிறார். சரி, திருத்தாயார் இயல்பு எப்படி ஏற்பட்டது? இதற்கு விடை தருகிறார்; மிகுந்த வெள்ளம் ஏற்பட்டு, இரண்டு கரைகளிலும் வழிந்தபடி ஒரு நதி ஓடினாலும், ஸமுத்திரத்தில் சென்று கலக்கும் நீரின் அளவு குறையாது அல்லவோ? அது போன்றே இவருடைய “அதனில் பெரிய என் அவா” என்பதான விருப்பம் உள்ளது. ஆகவே இவருக்கு “தானான நிலையில் உள்ள பேச்சு, பிராட்டி நிலையில் உள்ள பேச்சு, திருத்தாயான நிலையில் உள்ள பேச்சு” என்று அனைவருடைய நிலையிலும் இருந்து பேசுவதில் எந்தக் குறையும் இல்லை. – இந்தத் திருவாய்மொழியில், நாயகியின் துன்பம் அடையும் விதங்களை விரிவாக அடுத்து அருளிச்செய்கிறார்; இந்த பெண்பிள்ளை மயக்கிக் கிடக்கிறது, இவளைக் கண்டு இவளுடைய உறவினர்கள் அனைவரும் மயங்கியபடி உள்ளனர். இரமனைக் காட்டிலும் லக்ஷ்மணனுக்கு உடல் தளர்ச்சி அதிகமாக இருந்தபோதிலும், இராமனைக் காப்பாற்றும் பொருட்டு லக்ஷ்மணன் கண் விழித்தபடி உள்ளது போன்று, திருத்தாயாரும் இந்தப் பெண்பிள்ளையின் நிலையை அறிந்து விழித்தபடி இருந்தாள். எந்த ஒரு நிலையிலும், தங்கள் கார்யத்தைத் தாங்கள் செய்து கொள்ள முயலாமல், பெரியபெருமாள் திருவடிகளில் விழுந்து தங்களுடைய கார்யத்தை நிறைவேற்றிக் கொள்ளும் குலமாக இவர்கள் உள்ளனர். ஆக்வே, பெரியபெருமாள் திருவடிகளில் இவளை இட்டு வைத்து, “இந்தப் பெண்பிள்ளையானவள் அழுவது, தொழுவது, மயக்கம் அடைவது, புலம்புவது, முறை தவறிப் பேசுவது, பெருமூச்சு விடுவது, மூச்சை விடுதலும் இயலாமல் இருப்பது, தன்னை மறந்து இருப்பது என இவ்விதம் துன்பமானது அளவு கடந்து நிற்கிறாள். இவள் விஷயத்தில் நீ என்ன செய்ய முயல்கிறாய்?”, என்று அழைத்தபடி இருந்தாள். “அவனை ஏன் கேட்கவேண்டும்? தாங்களே தீர்த்துக் கொள்ளலாம் அல்லவோ?”, என்பதற்கு விடை தருகிறார்; அனைத்து நிலைகளிலும் அவனையே அண்டி படிகாரம் கேட்கும் குலம் அல்லவோ? – ஸ்வாமி கூரத்தாழ்வானுடைய மனைவியான ஆண்டாள் ஒருநாள் கூரத்தாழ்வானிடம், “நம்முடைய புத்திரர்களுக்கு விவாகம் வேண்டிய காலம் வந்தது. இது குறித்து நீவீர் ஏதும் செய்யாமல் இருப்பது ஏன்?”, என்றாள். இதற்கு அவர், “பகவானுடைய குடும்பம் நம்முடையதாகும். அவனுடைய குடும்பத்திற்காக என்னை இங்கு நின்று புலம்பும்படிக் கூறுகிறாயா? நாளை நான் பெரியபெருமாள் திருமுன்பாகப் புராணம் படிக்கும்போது, அங்கு இவர்கள் அழைத்து கொண்டு வா”, என்றார். அடுத்த நாள் அதனைப் போன்றே பராசரபட்டரையும் சீராமப்பிள்ளையையும் அங்கு அழைத்துச் செல்ல, கூரத்தாழ்வான் புராணத்தைப் படித்து முடித்த பின்னர் ஏதும் பேசாமல் நின்றார். இதனைக் கண்ட பெரியபெருமாள், “தாம் ஏதோ ஒன்று கூற வந்தது போன்று நமக்குத் தோன்றுகிறது”, என்றான். இதற்குக் கூரத்தாழ்வான், “இவர்களுக்கு விவாகம் செய்யும் வயது வந்துவிட்டது”, என்றார். இதற்குப் பெரியபெருமாள், “நான் அனைத்தும் செய்வோம்”, என்றான். தொடர்ந்து அடுத்த நாளே தக்கதொரு கன்னிகையைக் கொண்டு வந்தனர். – அடையவளந்தான் வீதியைச் சுற்றி அகளங்க ப்ரஹ்மராயர் என்பவன் மதிள் சுவர் எழுப்பியபடி இருந்தபோது, இளையாழ்வான் வீட்டைத் தொந்தரவு செய்தான். அதனைக் கேட்டிருந்த பட்டர் அவனிடம், “வாரீர்! நீவிர் செய்யும் இந்த மதிளானது பெரியபெருமாளுக்கு ரக்ஷணம் என்று எண்ணவேண்டாம். இங்குள்ள நான்கு குடிகளும் அல்லவோ அவனுக்கு ரக்ஷணம்? இவ்விதம் உள்ளபோது நீவீர் செய்யும் இந்தச் செயல் அழகாக உள்ளது! இவற்றை நான் செய்கிறோன் என்று எண்ணாமல், பெரியபெருமாள் நம்மை இவ்விதம் செய்யும்படிச் செய்கிறான்” என்று இருப்பீராக. உனக்கு நல்ல மார்க்கம் கிட்டும்”, என்றார். – இந்தத் திருத்தாயாரும் தனது அனைத்து பாரங்களையும் பெரியபெருமாள் தலையில் வைத்து, தனது பெண்பிள்ளையை, திருவரங்கம் பெரியகோயில் கர்ப்பக்ரகத்தின் முன்பாக உள்ள இரண்டு திருமணத்தூண்களுக்கு நடுவில் நிறுத்தி, சரணம் புகாதவர்களையும் சரணம் புகச் செய்யும் பெரியபெருமாளுடைய திருக்கல்யாண குணங்களை விண்ணப்பித்தாள். காலம், இடம், அதிகாரி என்பது போன்ற தகுதிகள் ஏதும் இன்றி, அனைவரும் வந்து பற்றலாம்படி உள்ள விதத்தை எண்ணியபடி நின்று, தனது பெண்பிள்ளையின் நிலையை அவனுடைய திருவுள்ளத்தில், இந்தத் திருவாய்மொழி மூலமாக உணர்த்துகிறாள்.