திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 11)
ஏழாம்பத்து
முதல் திருவாய்மொழி
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் அப் புண்டரீகக் கொப்பூழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும் கண்டு பாட வல்லார் வினைபோம் கங்குலும் பகலே
– ஸத்யம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களைக் கொண்ட நான்முகன், விஷ்ணு மற்றும் ருத்ரன் ஆகிய வடிவங்களைக் கொண்டவனாக; இவர்கள் போன்று இரண்டாவது இல்லை என்னும்படி காரணபுருஷனாகிய மூன்று புருஷர்களின் வடிவில் நின்று, நான்முகனுக்கு அந்தர்யாமியாக இருந்து படைத்து, இவன் அவதாரமாகவே உள்ள விஷ்ணு ரூபமாக நின்று காத்து, ருத்ரனுடைய அந்தர்யாமியாக நின்று ஸம்ஹாரித்து நிற்பவனாக; இவை அனைத்திற்கும் மூலமாக ப்ரமாணங்களால் அறியப்படும் தாமரையைத் தனது திருநாபியில் கொண்டவனாக; காரண நீரில் திருக்கண்கள் வளர்ந்தருளியபடி உபகாரம் செய்பவனாக உள்ள அவனுக்குக் கைங்கர்யம் செய்தபடி உள்ளவர்களுடன் ஸம்பந்தம் கொண்டவர்களுடன் ஸம்பந்தம் கொண்டவர்களுக்குத் தொண்டராகிய நம்மாழ்வார் அருளிச்செய்த ஆயிரத்தில் உள்ள இந்தப் பத்தையும், இவற்றின் பொருள் அறிந்து, மகிழ்வுடன் பாடவல்லவர்களுக்கு, இரவு மற்றும் பகல் என்ற வேறுபாடு இன்றி அனைத்து காலத்திலும், பகவானை அடைய விடாமல் தடுக்கும் விரோதிகளான பாபங்கள் விலகும்.
– நிகமத்தில், “இத்திருவாய்மொழி அப்யஸித்தார்க்கு நிரந்தரமாக இந்த்ரியங்களால் ஆத்மாவுக்கு வரும் நலிவு போம்”, என்கிறார்.
“இந்தத் திருவாயொழியைக் கற்பவர்களுக்கு, இந்த்ரியங்கள் மூலம் ஆத்மாவிற்கு உண்டாகவல்ல துன்பங்கள் போகும்”, என்கிறார்.
(கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்) குணங்கள் கொண்ட மூர்த்தியோர் மூவராய்; ஸத்த்வாதி குணாநுரூபமான வடிவையுடைய மூவராய். குணாநுகுணமான ஸ்ருஷ்ட்யாதிகள் அந்தந்த வ்யக்திதோறும் பர்வளிக்குமிறே. இரண்டில் ஜீவவ்யவதாநேந நின்று, ஒன்றில் ஸ்வரூபேண நின்றபடி. (படைத்து இத்யாதி) ரஜோ குணத்தை யுடையனாய்க் கொண்டு ஸ்ருஷ்டித்து, தமோ குணத்தை யுடையனாய்க் கொண்டு ஸம்ஹரித்து, ஸத்த்வ குணத்தை யுடையனாய்க் கொண்டு இவற்றையடைய ரக்ஷித்துக்கொடு நிற்கிறபடி. (அப்புண்டரீகம் இத்யாதி) இவற்றை யெல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே வந்து கண்வளர்ந்தருளினபடியைச் சொல்லுகிறது. ஐகதுத்பத்திகாரணதயா ப்ரஸித்தமான திருநாபிகமலத்தையுடையனாய்க் கொண்டு ஸ்ருஷ்ட்யுந்முகனாய் ஏகார்ணவத்திலே கண்வளர்ந்தருளின் உபகாரகனானவனுக்கே. அப்புண்டரீகக் கொப்பூழென்கையாலே ப்ரஹ்மாதிகள் கார்யமென்னுமிடமும், அவன் காரணபூதனென்னுமிடமும் சொல்லிற்று. ஒருவனுக்கு உத்பத்தியிறே சொல்லவேண்டுவது; “ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய ச்ரேஷ்ட்டாய” என்று மற்றையவனுடைய உத்பத்தி தன்னடையே வருமிறே. “நான்முகனை நாராயணன் படைத்தான்” என்றால், மற்றையவன் பிறப்பும் அநந்தரம் சொல்லுமிறே. இப்படி வேதவைதிகங்கள் சொல்லா நின்றதிறே. (தொண்டரித்யாதி) விஷயங்களையும் இந்த்ரியங்களையும் அநுஸந்தித்த நெஞ்சாறல் தீர, சேஷத்வத்தினுடைய எல்லைநிலத்திலே போய் நிற்கிறார்; தாபார்த்தன் மடுவிலே தாழவிழியுமாபோலே. (கண்டு பாடவல்லார்) இவருடைய தசையை யநுஸந்தித்தால் பாடப் போகாதாகாதேதான். (கண்டு) நமக்குத் தஞ்சமென்று அநுஸந்தித்து, (வினை போம் கங்குலும்பகலே) இரவுபகலில் வினைபோம். திவாராத்ரமிந்த்ரிய வச்யதைக்கு ஹேதுவான பாபம் போம். “இராப்பகல் மோதுவித்திட்டு” என்கிற துரிதம் போம்.
– (கொண்ட மூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்) - குணங்கள் கொண்ட மூன்று மூர்த்திகளாக; அதாவது ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்பதற்கு ஏற்ற ரூபம் கொண்ட மூவராக. “படைத்து அளித்து கெடுக்கும்” என்று பொதுவாகக் கூறினால், அந்தத் தொழில்களைச் செய்பவர் இன்னார் என்பது எப்படி விளங்கும் என்பதற்கு விடை தருகிறார்; அந்தந்த குணங்களுக்கு ஏற்றபடி உள்ள ஸ்ருஷ்டி முதலான செயல்கள், அந்தந்த ரூபங்களில் வெளிப்படையாக நிறைந்திருக்கும் அல்லவோ? நான்முகன் மற்றும் ருத்ரன் ஆகிய இரண்டு ரூபங்களில் ஜீவனுடைய அந்தர்யாமியாக நின்றும், விஷ்ணு ரூபத்தில் தனது ஸ்வரூபத்துடன் நின்றும் இவற்றைச் செய்கிறான். (படைத்து இத்யாதி) - ரஜோ குணம் கொண்டவனாக நின்று ஸ்ருஷ்டித்து, தமோ குணம் கொண்டவனாக நின்று ஸம்ஹாரம் செய்து, ஸத்வ குணம் கொண்டவனாக நின்று இவை அனைத்தையும் காப்பாற்றி. (அப்புண்டரீகம் இத்யாதி) - இவை அனைத்தையும் உண்டாகுவதற்காக, ஒரு மிகப் பெரிய ஸமுத்திரத்தில் வந்து கிடந்து, திருக்கண்கள் வளந்தருளிய விதம் கூறுகிறார். இந்த ஜகத்தானது உற்பத்தி ஆவதற்குக் காரணமானதும், அனைவரும் அறிந்ததும் ஆகிய தாமரையைத் தனது திருநாபியில் வைத்தபடி, ஸ்ருஷ்டிப்பதில் நோக்கம் உள்ளவனாக, ஒரு பெரிய ஸமுத்திரத்தில் திருக்கண் வளர்ந்தருளி கிடந்த உபகாரகன் ஒருவனுக்கே. “அப்புண்டரீக கொப்பூழ்” என்று கூறுவதால், நான்முகன் போன்றவர்கள் இவனால் உண்டாக்கப்பட்ட கார்யவஸ்துக்கள் என்பதும், அவனே காரணவஸ்து என்பதும் விளங்குகிறது. “அப்புண்டரீக கொப்பூழ்” என்பது மூலம் நான்முகனுடைய பிறப்பிடம் கூறினால், ருத்ரனுடைய பிறப்பையும் கூறவேண்டாமோ என்பதற்கு விடை அளிக்கிறார்; இவர்களில் ஒருவனுடைய பிறப்பை மட்டுமே அல்லவோ கூறவேண்டும்? காரணம், “ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய ச்ரேஷ்ட்டாய – நான்முகனுடைய மூத்த புத்திரனுக்கு, உயர்ந்தவனுக்கு” என்று கூறுவதற்கு ஏற்ப, மற்றவருடைய பிறப்பு குறித்து தானாகவே வெளிப்படுகிறது அல்லவோ? நான்முகன் திருவந்தாதியில் - நான்முகனை நாராயணன் படைத்தான் - என்று கூறும்போது, மற்றவனுடைய பிறப்பும் இதனுடன் சேர்ந்தே கூறப்படும் அல்லவோ? இப்படியாக அல்லவோ வேதங்கள் கூறின? (தொண்டரித்யாதி) - உலக விஷயக்களையும், இந்த்ரியங்களையும் எப்போதும் சிந்தித்தபடி உள்ள நெஞ்சத்தின் துடிப்பும் பிடிப்பும் நீங்கும்விதமாக அடிமைத்தனத்தின் எல்லை முடிய செல்கிறார். தாகம் மற்றும் வெப்பத்தால் வருந்திய ஒருவன் குளத்தின் நடுவில் ஆழமாகச் செல்பவன் போன்று ஆகும். (கண்டு பாடவல்லார்) - இவருடைய நிலையைச் சற்று ஆராய்ந்தால், பாடவும் இயலாது. (கண்டு) - நமக்குத் தஞ்சம் என்று எண்ணியபடி. (வினை போம் கங்குலும்பகலே) - இரவு பகலில் வினைகள் அனைத்தும் விலகும். இரவும் பகலும் இந்த்ரியங்களில் நம்மை வசப்படுத்தக் காரணமான பாபங்கள் போகும். இப்படியாக இரவும் பகலும் நம்மைத் துன்புறுத்திய அனைத்தும் விலகும்.