திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 10)

ஏழாம்பத்து

முதல் திருவாய்மொழி

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ

– “முன் ஒரு காலத்தில், பரந்து விரிந்த திருப்பாற்கடலைக் கடைந்து, அதன் ஸாரமான அமிர்தத்தைக் கொண்டு, தேவர்களுக்கு உபகாரம் செய்த ஸ்வாமித்தன்மையைக் கொண்டவனே! எனக்கு எல்லையற்ற ஒளி வீசும் சுடரே!” என்று இப்படியாக உன்னை நோக்கி உன்னிடம் கொண்ட ஆழ்ந்த ஈடுபாடு காரணமாக, பலவிதமான முறையில் கூப்பிட்டு, உன்னுடைய ஒன்றுக்கொன்று பொருந்திய திருவடித்தாமரைகளைக் குறித்து, காதலால் உருகி நிற்கும்படியான நிலையை நீக்கி, இந்த்ரியங்கள் சுமத்திய பாரங்கள் அனைத்தையும் நான் சுமக்கும்படியான “சரீரம் என்னும் தலையில் சுமக்கும் பாரம்” என்பதைத் தந்தாய். இதன் விளைவாக, தாழ்ந்த பாரங்கள் என்பதான உலக விஷயங்களை, இந்த ஐந்து இந்திரியங்களும் என் மீது ஏற்றி, என்னைத் தங்களுக்கு விருப்பமான திசைகளில் வலிமையுடன் இழுத்தபடி உள்ளன.

அடிமைக்கு விரோதியாய் விஷயாநுபவத்துக்குப் பாங்கான உடம்பைத் தந்தாய்; அதுவே ஹேதுவாக ஐந்து இந்த்ரியங்களும் நலியாநின்றன; அவற்றைப் பரிஹரித்தருள வேணுமென்று ஆர்த்தியோடே கூப்பிடுகிறார்.

– “உன்னுடைய கைங்கர்யத்திற்கு விரோதியாகவும், உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு ஏற்றபடியும் உள்ள சரீரத்தைத் தந்தாய். இதனையே காரணமாகக் கொண்டு, ஐந்து இந்த்ரியங்களும் என்னைத் துன்புறுத்தியபடி உள்ளன. இவற்றைப் போக்கி அருளவேண்டும்”, என்று துன்பத்துடன் அழைக்கிறார்.

(என் பரஞ்சுடரித்யாதி) எனக்கு உன் வடிவழகைக் காட்டி உபகரிக்குமவனேயென்று உன்னைக் குறித்து அடைவுகெடக் கூப்பிட்டு. (உன்னிணைத் தாமரையித்யாதி) ஒன்றுக்கொன்று ஒப்பாயிருப்பன இரண்டு செவ்விப்பூப்போலே யிருக்கிற உன் திருவடிகளில் போக்யதையை அநுஸந்தித்து ப்ரேம பரவசனாய் நெகிழ்ந்து நீராய் நிற்கை, இவ்வாத்மாவுக்கு ஸ்வருபமாகக் கடவது. (அது நிற்கச் சுமடு தந்தாய்) ஸ்வரூபமிதுவா யிருக்க, உன்பக்கலினின்றும் அகற்றி விஷயங்களிலே கொடுபோய் மூட்டக் கடவதான சரீரத்தைத் தந்தாய்; உன்னையநுபவிக்கைக்கு உறுப்பாக தேஹத்தைத் தந்தாயானாய் நீ ; அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று. ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக் கொண்டு வழியிலே நின்றால், அடியறியாதார் சுமையெடுத்திக் கொண்டு போமாபோலேயாயிற்று பகவதநுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்த்ரியங்களுக்குப் பணி செய்யும்படியாய்விட்டது. சுமடு - சும்மாடு. சரீரமாகிற சும்மாட்டைத் தந்தாய். (வன்பரங்களித்யாதி) “அப்ராப்த விஷயத்திலே போனேன்” என்றோ நான் இப்போது அஞ்சுகிறது? பொறுக்கலாமளவு சுமையெடுத்ததாகில் நான் சுமவேனோ? வலிய பாரத்தையெடுத்தி, கனத்த சுமையையெடுத்தி. (ஐவர்) அவர்கள்தான் ஒருவரிருவராகில் நான் ஆற்றேனோ? (திசை திசை வலித்து) இத்தனைவரும் ஒரு திக்கிலே போகவிழுத்தார்களாகில்தான் மெள்ளப் போகேனோ? (எற்றுகின்றனர்) உடையவனாகிலிறே போக்குவிட்டு நலிவது. ஒரு துர்பலன் தலையிலே அதிபாரத்தை யெடுத்திச் சுற்றும் நின்று தந்தாம் வழியேயிழுத்துக் கொண்டு போகத்தேடுமாபோலே காணும் இவையும். (முன்பரவையித்யாதி) கடலை நெருக்கி அதில் அம்ருதத்தை வாங்கி ப்ரயோஜநாந்தர பரரானவர்களுக்குங்கூடக் கொடுக்கக் கடவ மஹாபாஹுவை யுடையவனே! என்னுடைய இந்த்ரியங்களைப் பாற வடித்துப் பொகட்டு, கடல் கடைந்த போதை ஒப்பனையோடே கூடின வடிவைக் காட்டவல்லையே!

– (என் பரஞ்சுடரித்யாதி) – “எனக்கு உனது வடிவழகைக் காண்பித்து உதவி செய்பவனே!” என்று உன்னைக் குறித்து, பலவிதங்களில் அழைத்து. (உன்னிணைத் தாமரையித்யாதி) - ஒன்றுக்கொன்று பொருந்தியபடி உள்ளதும், இரண்டு செவ்விப்பூ போன்றும் உள்ள உனது திருவடிகளுடைய இனிமையை எண்ணி, காதலால் பரவசம் அடைந்து, உள்ளம் நெகிழ்ந்து, நீராக உருகி நிற்பது என்பதே இந்த ஆத்மாவின் ஸ்வரூபமாகும். (அது நிற்கச் சுமடு தந்தாய்) - இதுவே ஆத்மாவின் ஸ்வரூபமாக உள்ளபோது, இதனை உன்னிடம் இருந்து அகற்றி, உலக விஷயங்களில் கொண்டு ஈடுபடுத்தவல்ல சரீரத்தைத் தந்தாய். இதனைக் கேட்ட ஸர்வேச்வரன், “நம்மை அனுபவிப்பதற்கு ஏற்றபடியான ஒரு சரீரத்தை அல்லவோ நாம் அளித்தோம்?”, என்றான். இதற்கு விடை அளிக்கிறார்; உன்னை அனுபவிப்பதற்கு ஏற்றபடியான ஒரு சரீரத்தையே நீ கொடுத்தாய்; ஆனால் இந்தச் சரீரம் அல்லவோ நான் உன்னை இழப்பதற்கும் காரணமாக உள்ளது! ஒரு நாட்டின் இளவரசன், தன் தலையில் உள்ள முடியை (கிரீடம்) இறக்கி வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு சும்மாட்டை (சுமை தூக்குவதற்காகத் துணியைச் சுருட்டித் தலையில் வைப்பது) வைத்துக் கொண்டு வீதியில் நிற்கிறான். அவனைப் பார்ப்பவர்கள், அவன் ஒரு இளவரசன் என்று தெரியாமல், அவனை ஒரு சுமை தூக்கும் தொழிலாளி என்று நினைத்து, தங்கள் சுமையை அவன் தலையில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள். அவனும் அந்த பாரத்தைச் சுமந்து கொண்டு போகிறான். இதனைப் போன்றே, பகவத் அனுபவத்திற்காகத் தரப்பட்ட சரீரமானது, இந்த்ரியங்களுக்குப் பணி செய்வதற்கு என்றானது. இப்படியாக சரீரம் என்னும் தலைச்சுமையைத் தந்தாய். – (வன்பரங்களித்யாதி) - “தகாத விஷயங்களில் ஈடுபட்டுச் சென்றேன்” என்று எண்ணியோ இப்போது நான் அஞ்சுகிறேன்? என்னால் பொறுத்துக் கொள்ளும் அளவிற்குச் சுமை இருந்தால், நான் சுமக்காமல் விடுவேனா? அதிகமான பாரத்தைச் சுமத்தி; அதாவது, கனத்த சுமையை ஏற்படுத்தி. (ஐவர்) – இவர்கள்தான், ஒருவர் என்றால் நான் பொறுத்துக் கொள்ளமாட்டேனோ? (திசை திசை வலித்து) - இவர்கள் அனைவரும் சேர்த்து ஒரே திசையில் பிடித்து இழுத்தால், நான் மெள்ள அந்தத் திசையில் செல்லமாட்டேனோ? (எற்றுகின்றனர்) - ஒரு பொருளுக்கு (அல்லது உயிருக்கு) உண்மையான எஜமானனாக (உடையவனாக) இருந்தால் மட்டுமே, அந்தப் பொருளைத் தன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போக விட்டு (கட்டுப்படுத்தாமல்), பிறகு அது துன்பப்படும்போது வேடிக்கை பார்ப்பதோ அல்லது அதைத் தண்டிப்பதோ நிகழும். பலம் குறைந்த ஒருவன் தலையில் அதிக பாரத்தை ஏற்படுத்தி, சுற்றி நின்று, தங்கள் தங்கள் வழியே இழுத்துக் கொண்டு செல்வதற்கு வழி தேடுகின்றன. (முன்பரவையித்யாதி) - கடலைக் கடைந்து அதில் அமிர்தம் எடுத்து, உன்னைத் தவிர மற்ற பயன்களை விரும்பியபடி நின்றவர்களுக்கும் கூட, அந்த அமிர்தம் அளிக்கின்ற பெருத்த தோள்களைக் கொண்டவனே! எனது இந்திரியங்களை முற்றிலுமாக சிதறும்படிச் செய்து, திருப்பாற்கடலைக் கடைந்தபோதிலும் கூட கலையாத ஒப்பனையுடன் நின்ற உனது வடிவைக் காண்பிக்கவல்லவன் அல்லவோ நீ?