திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 9)

ஏழாம்பத்து

முதல் திருவாய்மொழி

குலம் முதல் அடும் தீவினைக் கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை வலம் முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய் நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள் பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே

– பூமி முதலாக உள்ள மற்ற அனைத்து லோகங்களிலும், அசையும் மற்றும் அசையாப்பொருள்கள் என்பதான பலவற்றையும் முதலில் படைத்தவனே! இந்த ஜகத்தை ரக்ஷிப்பதற்காக க்ருஷ்ணனாக அவதரித்த ஸௌலப்யத்தை எனக்குக் காண்பித்தவனே! என்னால் எப்போதும் அனுபவிக்கலாம்படி, எல்லையற்ற ஒளி வீசும் வடிவம் கொண்டவனே! ஒரு குலத்தையே அடியுடன் அழிக்கவல்ல தீவினைகள் என்னும் பாபத்தை ஏற்படுத்துகின்ற கொடுமையைக் கொண்டதான வலிமையான உலக விஷயங்கள் என்னும் கரையேற இயலாத படுகுழியில் தள்ளவல்ல ஐந்து இந்த்ரியங்களை, அவற்றின் பலமான வாஸனையுடன் அழிக்கவல்ல பலத்தை எனக்கு நீ தந்தருள வேண்டும்.

(ஸாநுபந்தமாக முடிக்குமதான பாபங்களை விளைக்கும்) விஷயங்களிலே ஆத்மாவைத் தள்ளும் இந்த்ரியங்கள் என்னை நலியாதபடி பண்ண வேணுமென்கிறார்.

– “பாபங்கள் விளைவிக்கும் உலக விஷயங்களில் ஆத்மாவைத் தள்ளுகின்ற இந்த்ரியங்கள் என்னைத் துன்புறுத்தாதபடி செய்யவேண்டும்”, என்கிறார்.

(குலமுதல் இத்யாதி) ஒருவன் பண்ணின பாபம் அவன் தன்னளவிலே போகையன்றிக்கே குலமாக முதலற முடிக்கவற்றான பாபங்களை விளைக்கக்கடவதாய் கொடியதாய், அநுபவித்து முடியவொண்ணாதபடியாய், வன்குழியாய், வலியதாய், கால்வாங்கவொண்ணாதபடியான சப்தாதி விஷயங்களாகிற குழிகளிலே தள்ளக் கடவதான இந்த்ரியங்களை. “நஹி தர்மவிருத்தேஷு பஹ்வபாயேஷ கர்மஸு! மூலகாதிஷு ஸஜ்ஜந்தே புத்திமந்தோ பவத்விதா:”. “செய்யக் கடவதல்லாதாய் சொல்லுகிற பலத்தினளவல்லாத அபாயங்களையுடைத்தாய், வம்சங்களை முதலற முடிக்கக் கடவதான செயல்களிலே, உன்போல்வராய்ப் புத்திமாந்களாயிருப்பார் ப்ரவர்த்தியார்கள் காண்!” என்றனிறே மால்யவான் ராவணனுக்கு. (வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்) இவற்றினுடைய பலத்தை முதலிலே முடிக்கக் கடவதான உன்னுடைய ப்ரஸாதத்தைப் பண்ணியருள வேணும். “நம்மாலே தனியே இங்ஙனே செய்யலாயிருக்குமோ?” என்ன; (நில முதலித்யாதி) நீ ஜகத்ஸ்ருஷ்ட்யாதிகள் பண்ணுகிறபோது உனக்கு ஆர் துணைப்படச் செய்தாய்? என்கிறார். ஸ்ருஷ்டி ப்ரயோஜனம் மோக்ஷமன்றே? அது பெறவேண்டாவோ? பூமி முதலாக மற்றும் இப்படியுண்டான எல்லா லோகங்களிலும் ஸ்த்தாவர ஜங்கமங்களான பல பதார்த்தங்களையும் முன்பேயுண்டாக்கினாய். (இனி மற்றும்) அப்படிப் பொதுவான ரக்ஷணமொழிய, கிருஷ்ணனாய் வந்தவதரித்து எனக்கு பவ்யனாய், வடிவழகை எனக்கு உபகரித்தவனே! ஒரு நாடாக அநுபவிக்கும் வடிவழகை என்னையொருவனையும் அனுபவிப்பித்தவனே ! அழிந்த ஜகத்தை உண்டாக்கின உனக்கு, உள்ளதுக்கு ஒரு குணாதாநம் பண்ணுகையரிதோ?

– (குலமுதல் இத்யாதி) - ஒருவன் செய்த பாபங்கள், அவனுடன் மட்டுமே முடியாமல், அவனுடைய குலத்தையே தொடக்கம் முதல் முடிக்கவல்ல பாபங்களை ஏற்படுத்துகின்றன. கொடியதாகவும், அனுபவித்து முடிக்க இயலாதபடியும் உள்ளன. (வன்குழி) – வலிமை கொண்டதாக, பின் வாங்க இயலாதபடி உள்ள ஓசை முதலான புலன் விஷயங்கள் என்னும் குழிகளில் தள்ளக்கடவதாக உள்ள இந்த்ரியங்களை. உலக விஷயங்களில் கொள்ளும் ஈடுபாடு என்பது யுத்தகாண்டத்தில் - நஹி தர்மவிருத்தேஷு பஹ்வபாயேஷ கர்மஸு! மூலகாதிஷு ஸஜ்ஜந்தே புத்திமந்தோ பவத்விதா: - மால்யவான் இராவணிடம், “செய்யக்கூடியவை அல்லாதவையும், விலக்க இயலாதபடி உள்ள பலம் கொண்டதான அளவற்ற அபாயங்களைக் கொண்டவையும், குலத்தை முடிக்கவல்லவையும் ஆகிய செயல்களில் உன் போன்ற புத்திமான்கள் ஈடுபட மாட்டனர்”, என்றான் - என்பது காண்க. – (வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்) - இப்படிப்பட்ட இந்த்ரியங்களுடைய பலத்தை முதலிலேயே வெல்லவல்ல உனது கடாக்ஷ்த்தை நீ செய்தருளவேண்டும்; அதாவது தொடக்கம் முதலே இவை என்னை பாதிக்காதபடி செய்யவேண்டும். இதனைக் கேட்ட ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நீவிர் கூறும் இந்தச் செயலை நம்மால் தனியே நின்று செய்ய இயலுமோ?”, என்றான். இதற்கு ஆழ்வார் விடை தருகிறார்; (நிலமுதல் இத்யாதி) - நீ இந்த ஜகத்தைப் படைத்தல் போன்ற செயல்களைச் செய்தபோது உனக்கு யார் துணையாக நிற்க, இவற்றை நீ செய்தாய்? அல்லது வேறு ஒரு கருத்தும் கூறுகிறார்; ஸ்ருஷ்டியின் பயன் மோக்ஷம் அல்லவோ? இதனைப் பெற வேண்டாமா?பூமி முதலாக, இவ்விதம் உண்டான அனைத்து லோகங்களிலும் உள்ள அசையும் மற்றும் அசையாப் பொருள்களாகிய பலவற்றையும் நீ உண்டாக்கினாய். – (இனி மற்றும்) - இவ்விதம் பொதுவாக உள்ள காப்பாற்றுதல் மட்டும் அல்லாமல், க்ருஷ்ணனாக வந்து அவதரித்து, எனக்கு பவ்யமாக, உனது வடிவழகை எனக்கு உபகாரமாகத் தந்தவனே! பரமபதம் என்னும் ஒரு நாட்டில் உள்ளவர்க்ள் மட்டுமே எப்போதும் அனுபவித்தபடி உள்ள வடிவழகை, என்னையும் அனுபவிக்கும்படிச் செய்தவனே! ப்ரளயத்தால் ஆழ்ந்த இந்த ஜகத்தை மீண்டும் உண்டாக்கிய உனக்கு, நான் இருப்பதற்காக ஒரு குணத்தை அளித்தல் கடினமோ?