திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 8)
ஏழாம்பத்து
முதல் திருவாய்மொழி
இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குல முதலே
– எனக்கு இயற்கையாகவே ஸ்வாமியாகவும், அந்த ஸம்பந்தம் காரணமாக உனது ஸௌலப்யத்தை எனக்கு வெளிப்படுத்தியவனாகவும், நித்யஸூரிகளுடைய கூட்டத்திற்கு, அவர்களுடைய இருப்பின் காரணமாகவும் உள்ளவனே! “இவர்களைப் போன்று இரண்டாவது இல்லை” என்பதாக உள்ள ஐந்து இந்த்ரியங்களால், இனிய அமிர்தம் என்று இனிமையாகத் தென்பட்டு, எத்தனை ஞானம் கொண்ட நான்முகன் போன்றவர்களையும் கூட மயக்குவதற்காக, அனைத்து சக்திகளையும் கொண்ட நீ உண்டாக்கி வைத்த, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ளவையும், அறியாமையை உள்ளடக்கியதால் மாயா என்ற சொல் மூலம் கூறப்படுவதும் ஆகிய உலக விஷயங்கள் அனைத்தையும் முழுமையாக வேருடன் அறுத்து, ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ள என்னை, உனக்கே உரியதான சங்கு சக்கரம் போன்றவற்றையும், அவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ள உனது திருமேனியையும் நான் சிந்தித்து, வாக்கால் துதித்து, கையால் தொழுது என்பதைச் செய்யும்படியாக எனக்கு நீ சிறந்ததொரு கடாக்ஷம் செய்யவேண்டும்.
– “என் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை யறுத்து, நான் மநோவாக்காயங்களாலே உன்னை நிரந்தரமாக அநுபவிக்கும்படி பண்ணியருளவேணும்”, என்கிறார்.
– “எனது சரீர ஸம்பந்தத்தை அறுத்து, நான் எனது ‘மனம், வாக்கு, உடல்’ ஆகிய மூன்றாலும் உன்னை நிரந்தரமாக அனுபவிக்கும்படியாகச் செய்தருளவேண்டும்” என்கிறார்.
(இன்னமுதெனத்றோன்றி) விபாகத்தில் பலிக்குமது முகப்பிலேயாகப் பெற்றேனாகில் கைவிடலாம் கிடீர். “அக்ரேம்ருதோபமம்” இறே; பரிணாமத்தில் விஷமிறே. விபாகத்தில் பலிக்குமது உபக்ரமத்தே தோன்றிற்றாகில் மேல்விழா தொழியலாயிற்று. பழியும் தர்மஹாநியுமாய், மேல்நரகமானாலும் விடப்போகாதிருக்கை. ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு இங்ஙனேயொரு தன்மையுண்டு; த்ருதராஷ்ட்ரனோ டொக்கும். அகவாயில் தர்ம ருசியின்றிக்கே இருக்கச் செய்தே, வாயாலே அநுகூலம் போலே இருக்குமவற்றைச் சொல்லாநிற்கும் அவனும். (ஓரைவர்) தனித்தனியே ப்ரபலமாய் அத்விதீயமான சப்தாதி விஷயங்கள் ஐந்தும். (யாவரையும் மயக்க) க்ஷத்ரரான மநுஷ்யரோடு. அளவுடையரான ப்ரஹ்மாதிகளோடு வாசியற அறிவு கெடுக்கும்படிக்கீடாக. (நீ வைத்த) ஸர்வசக்தியான நீ வைத்த. தன்னாலே ஸ்ருஷ்டமாயிற்றது என்றறியாதே, “அதிலே ஒரு போக்யதையுண்டு” என்று ஸ்ப்ருஹை பண்ணுகிறானிறே ப்ரஹ்மா. (முன்னமாயமெல்லாம்) அநாதியான ஸம்ஸாரத்தையெல்லாம். (முழு வேரரிந்து) ஸவாஸநமாகப் போக்கி. (என்னை) ஸம்ஸார பய பீதனான என்னை. செய்த அம்சத்தே த்ருப்தனாயிருக்குமிறே அவன். “ஜ்ஞாநலாபம் பண்ணிக் கொடுத்தோம்" என்றிறே அவனிருக்கிறது. அது போராதிறே; ஸம்ஸாரத்தை ஸவாஸநமாகப் போக்கவேண்டியிருக்குமிறே இவர்க்கு. (உன் சின்னமுந் திருமூர்த்தியும்) “தவளவொண் சங்கு சக்கரம்” என்றும், “வலக்கையாழியிடக்கைச் சங்கம்” என்றும், “அரவிந்தலோசனன்” என்றுஞ் சொல்லுகிறபடியே, திவ்யாயுதங்களையும் அவற்றுக்கு ஸத்ருசமான திருமேனியையும். (சிந்தித்து இத்யாதி) இவற்றை நெஞ்சாலே யநுஸந்தித்து, உள்ளடங்காமல் வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணி, பின்னைத் திருவடிகளிலே விழும்படிக்கு ஈடாக எனக்கு அருளவேணும். வாயாலே யொன்று சொல்லாநிற்க, நெஞ்சு வேறேயொன்று நினைத்தல்; “உனக்கு சேஷம்” என்று வேறேயோரிடத்தே தொழில் செய்தல் செய்கையன்றிக்கே, மநோவாக்காயங்கள் மூன்றும் உன் பக்கலிலே ப்ரவணமாம்படி பண்ணியருளவேணும். (என்னம்மா) எனக்குத் தாய்போல் பரிவனானவனே! இச்சப்தம் வசிக்கிறபடி; “அம்மே” என்கிறதிலே ஸம்போதந வசநமாகையாலும் சேதநனைச் சொல்லுகையாலும் ஆகாரமேற்று விளியாய் “அம்மா” என்று கிடக்கிறது. (என் கண்ணா) அந்த அர்த்த க்ரியா காரியாக்கினவனே ! (இமையோர்தங் குலமுதலே) ஒரு நாட்டுக்காக உன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறவனல்லையோ? அநேகர் ஆசைப்பாடு ஒருவனுக்கு உண்டானால் கொடுக்கலாகாதோ? (என்னம்மா இத்யாதி) எனக்கு ஸ்வாமியாய், “ஸ்வத்தை நசிக்கக் கொடுக்கவொண்ணாது” என்று க்ருஷ்ணனாய் வந்து அவதரித்து என்னை நோக்கினவனே! அவதாரம் ஸர்வஸாதாரணமாயிருக்கச் செய்தே. இவர் தமக்காகச் செய்ததென்றிருப்பரே. மநோவாக்காயங்கள் மூன்றும் ஒருங்கி உன்பக்கலிலே ப்ரவணமாம்படி ஒரு நாட்டுக்குக் பண்ணிக் கொடுத்த நீ அத்தை எனக்கொருவனுக்கும் செய்யத்தட்டென்?
(இன்னமுது எனத் றோன்றி) – “இன் அமுதமாய்” என்று கூறாமல், “இனிய அம்ருதம் என்னலாம்படி தோற்றி” என்று கூறுவதால், உலக விஷயங்களானவை தொடங்கத்தில் அமிர்தம் போன்று இனிமையாகப் புலப்பட்டு, முடிவில் கெடுதலை உண்டாக்கும் என்ற கருத்து வெளிப்படுகிறது. இதனைக் கூறி, இந்த விஷயத்தில் வேறுபடும் ஆழ்வாருடைய இயல்பைக் கூறுகிறார். முடிவில் தென்படும் தாழ்ந்த விளைவுகள், தொடக்கத்திலேயே புலப்பட்டால், அவற்றைக் கைவிடலாம். சரி, இந்த உலக விஷயகளானவை முதலில் அம்ருதம் போன்று புலப்படுவதற்கான ப்ரமாணம் என்ன என்பதை கூறுகிறார்; கீதை (18-38) - அக்ரேம்ருதோபமம் - அம்ருதம் போன்று - என்று கூறியது காண்க. ஆனால், அந்த விஷயங்கள் மாற்றங்களை அடைந்தபடி உள்ளபோது விஷமாக மாறுகின்றன. முடிவில் தோன்றும் இத்தகைய விஷத்தன்மையானது, தொடக்கத்திலேயே தோன்றினால், அவற்றில் ஈடுபடாமல் இருக்க முடியும்! இவற்றின் மூலம் பழிச்சொற்கள், தர்மத்திற்குக் கெடுதல், அடுத்த நிலையில் நரகம் என்பதாக இருந்தாலும் கூட, விட இயலாதபடி உள்ளன. இருதியில் விஷமாகவும், தொடக்கத்தில் அமிர்தமாகவும் உள்ள இதுவே சரீரம் மற்றும் சரீரத்துடன் ஸம்பந்தம் கொண்டுள்ள பொருள்கள் ஆகியவற்றின் இயல்பு என்பதை “ப்ரக்ருதி” என்று தொடங்கும் இரண்டு வாக்கியங்களில் கூறுகிறார்; இவை இரண்டிற்கும் இப்படிப்பட்ட ஒரு இயல்பு உள்ளது; த்ருத்ராஷ்ட்ரன் போன்று ஆகும்; எப்படி? அவனுடைய ஆழ்மனதில் தர்மத்தின் மீது எந்த ஒரு ஈடுபாடும் இல்லாதபோதிலும், வாய் மூலமாக அனைவருக்கும் நல்லவன் போன்று பலவற்றையும் கூறியபடி இருப்பான். – (ஓர் ஐவர்) - தனித்தனியாக ஒவ்வொரு இந்த்ரியமும், அதன் தன்மையில் அனைவரும் அறிந்ததாகவும், இவற்றைப் போன்று வேறு ஏதும் இல்லை என்னலாம்படியும் உள்ள ஐந்து. (யாவரையும் மயக்க) - அற்பமான தாழ்ந்த ஞானம் கொண்ட மனிதர்கள், அளவுள்ள ஞானம் கொண்ட நான்முகன் போன்றவர்கள் என்பதான வேறுபாடுகள் ஏதும் இன்றி, அனைவருடைய அறிவையும் கெடுப்பதற்கு ஏற்றபடி உள்ள ஐந்தும். (நீ வைத்த) - அனைத்து சக்திகளையும் கொண்ட நீ உண்டாக்கி வைத்த “நான்முகனும் கூட இந்த்ரியங்களுடைய வசப்படுகிறான்” என்பதைக் கூறுகிறார். இந்த இந்த்ரியங்கள் அனைத்தும், தன்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்பதை நான்முகன் அறியாமல், “இவற்றில் ஒரு இனிமை உள்ளது” என்று தனது விருப்பத்தை அவற்றில் வைக்கிறான் அல்லவோ? (முன்னமாயமெல்லாம்) - தொடக்கம் என்பதே அறிய இயலாதபடி உள்ள ஸம்ஸாரத்தை எல்லாம். (முழு வேர் அரிந்து) - அவற்றின் வாஸனையுடன் போக்கி. (என்னை) - ஸம்ஸாரம் குறித்து அச்சத்துடன் உள்ள என்னை. “ழுழுவேர் அரிந்து கை தொழவே அருள்” என்று ஏன் ப்ரார்த்திக்கவேண்டும்; அனைத்தும் அறிந்த ஸர்வேச்வரன் அறியமாட்டானோ என்பதற்கு விடை தருகிறார்; தான் செய்த அம்சம் குறித்து மனமகிழ்வுடன் உள்ளவன் அல்லவோஅவன்? இதனை மேலும் விளக்குகிறார்; “ஞான லாபம் ஏற்படுத்திக் கொடுத்தோம்” என்று அல்லவோ அவன் உள்ளான்? ஆனால் அது போதாது அல்லவோ? ஸம்ஸாரத்தை, அதன் வாசனையுடன் போக்கவேண்டும் என்று அல்லவோ இவர் உள்ளார்? – (உன் சின்னமுந் திருமூர்த்தியும்) – திருவாய்மொழி (6-5-1) – தவள ஒண் சங்கு சக்கரம் – என்றும், திருவாய்மொழி (6-4-9) – வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் – என்றும், திருவாய்மொழி (6-5-8) – அரவிந்தலோசனன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, திவ்யமான ஆயுதங்களையும், அவற்றுக்கும் சேரும் விதத்தில் உள்ள திருமேனியும். (சிந்தித்து இத்யாதி) - இவற்றை நெஞ்சால் எப்போதும் சிந்தித்து, உள்ளே மட்டும் அடக்கிவிடாமல் வாயால் துதித்து, அதன் பின்னர் திருவடியில் விழுவதற்கு ஏற்றபடி கடாக்ஷிக்கவேண்டும். அதாவது, மூன்று கரணங்களும் உன் விஷயத்தில் இருக்கும்படிச் செய்யவேண்டும். வாயால் ஒன்றைக் கூறியபடி, நெஞ்சத்தால் வேறு ஒன்றை எண்ணுதல்; “உனக்கு அடிமை” என்று கூறிவிட்டு, வேறு ஒரு இடத்தில் தொழில் செய்தல் என்பது போன்றவற்றைச் செய்யாமல், “மனம், வாக்கு, சரீரம்” ஆகிய மூன்றும் உன்னிடம் மட்டுமே ஈடுபடும்படியாகச் செய்தருளவேண்டும். – (என் அம்மா) - எனக்குத்த் தாயாகப் பரிந்தபடி உள்ளவனே! தாயாரை அழைக்கும்போது “அம்மே” என்று அழைக்கவேண்டும்; ஆனால் இங்கு “அம்மா” என்று அழைப்பதன் காரணம், புருஷனைத் தாயாராக அழைப்பதால் ஆகும்; அதாவது “அம்மா” என்று “அ” பதம் சேர்ந்து அழைப்பதாக உள்ளது. (என் கண்ணா) - தாயாக நின்று காண்பிக்கின்ற அந்தப் பரிவை, அப்படிப்பட்ட உறவிற்கான செயலைச் செய்வது முடிய காண்பிப்பவனே! (இமையோர்தம் குலமுதலே) - ஒரு பரமபதம் என்னும் நாட்டிற்காக, உன்னையே அளித்தபடி நிற்பவன் அல்லவோ? இதற்கு, “பலரும் விரும்பும் நிலையால் நாம் அவ்விதம் உள்ளோம்” என்று ஸர்வேச்வரன் கூற, இவர், “அப்படிப்பட்ட நிலை ஒருவனுக்கு மட்டுமே உண்டானால், தரக்கூடாதோ?”, என்றார். (என் அம்மா இத்யாதி) - எனக்கு ஸ்வாமியாக; “எனது உடைமையை அழியுபடியாக யாருக்கும் தரக்கூடாது” என்று தீர்மானித்து க்ருஷ்ணனாக வந்து அவதரித்து, என்னை நோக்கியவனே! அவதாரங்கள் அனைத்துமே, அனைவருக்கும் பொதுவாக உள்ளபோது இவர் “என் கண்ணா” என்று சொந்தம் கொண்டாடுவது ஏன் என்றால், தமக்காகவே செய்தான் என்று இருப்பவர் அல்லவோ? “மனம், வாக்கு, சரீரம்” ஆகிய மூன்றும் ஒரே விஷயத்தில் ஒருங்கி நின்று, உன்னிடம் ஈடுபட்டபடி இருப்பதற்கான நிலையை பரமபதத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த நீ, அதே போன்ற நிலையை என் விஷயத்திலும் செய்வதற்கு என்ன குறை?