பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 11)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய் வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் தோள்கள் இருந்த ஆ காணீரே சுரி குழலீர் வந்து காணீரே
திருஅவதரித்த நாள் தொடங்கி நாலைந்து மாதங்களிலே, சகடாசுரனைத் தனது திருவடி கொண்டு உதைத்து விட்டு, ஒளியுடையதும் வளைந்துள்ளதுமான பற்களையுடைய பூதனையின் முடிப்பதற்கு அரியதான உயிரை வாங்கினவனுடைய திருத்தோள் அழகினை வந்து காணுங்கள், சுருண்ட கூந்தலையுடைய பெண்களே, நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருமார்பில் நின்றும் திருத்தோளிலே பெருகுகிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருமார்வினழகை யநுபவித்த வநந்தரம், திருத்தோள்களினழகை யனுபவிக்கிறார்.
– திருமார்பின் அழகை அனுபவித்த பின்னர் திருத்தோள்களின் அழகினை அனுபவிக்கிறார்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (நாள்களித்யாதி) திருவவதரித்த நாள் தொடங்கி சென்ற மாஸத்தை நாலென்பது, அஞ்சென்பது, ஒன்பதென்பது, இருபதென்பதாய் காலத்தை மயக்குகிறது, காலக்ருத பரிணாம சக்தியில்லாமையிறே; அன்றிக்கே இது தன்னை திருஷ்டி தோஷ பரிஹாரார்த்தமாகவும் மயக்கி அருளிச்செய்கிறாராகவுமாம். (தாளித்யாதி) கண் வளருகிறவிடத்திலே சகடாஸுரன் வந்து கிட்டுகிறவளவிலே முலை வரவு தாழ்த்துச் சீறித் திருவடிகளை நிமிர்க்க, ப்ரதிகூலித்துக் கிட்டினவனாகையாலே அவன் முடிந்தமை தோன்றச் சாடினானென்கிறார். (சாடிப்போய்) என்றது சாடி விட்டென்றபடி. (வாள்கொளித்யாதி ) இதுக்கு முன்னே செய்ததை பின்னை அருளிச்செய்தது முன்புள்ள யுகங்களும் ப்ரகாசித்தபடியாலேயாதல்; அன்றியிலே அந்வயத்தை நினைத்தாதல், ஒளியையும் வளைவையு முடைத்தான எயிற்றையுடைய பேச்சியுடைய. (ஆருயிர் வவ்வினான்) முடித்தற்கரிய உயிரை வவ்வினான். தோள்களிருந்த ப்ரகாரத்தை வந்து காணீரென்கிறார். வவ்வுதல் - வாங்குதலாய், அப்போது நெளித்த தோள்களிறே. (சுரிகுழல்) தாந்த ரூப ப்ரபத்தி. மாமுனிகள் வ்யாக்யானம் - (நாள்களோரித்யாதி) திருவவதரித்த பின்பு சென்ற நாள்கள் ஒரு நாலைந்து மாஸத்தளவிலே. மாஸம் நாலென்றும், அஞ்சென்றும், ஒன்பதென்றும், இருபதென்றும் தெரியாதபடி, இப்படி மயக்கி அருளிச்செய்வது, மங்களாசாஸந பரராகையாலே த்ருஷ்டி தோஷ பரிஹார்த்தமாக. (தாளையித்யாதி) தனித்துக் கண்வளர்ந்தருளுகிற விடத்திலே அஸுராவேசத்தாலே நலிவதாக வந்து கிட்டுகிற சகடத்தை முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்து, திருவடிகளாலே கட்டழியவுதைத்து. இவன் ஸ்தந்யார்த்தமாகத் திருவடிகளை நிமிர்த்தாலும் ப்ரதிகூலித்து வந்து கிட்டுகையாலே சகடம் பக்கமாகத் தட்டில்லையிறே. (சாடிப்போய்) என்றது சாடிவிட்டென்றபடி. (வாள்கொளித்யாதி) ஒளியையுடைத்தாய் வளைந்திருக்கிற எயிறுகளையுடையளான பூதனையுடைய முடித்தற்கரிய உயிரை அபஹரித்தவனுடைய. “பேய்ச்சி பெருமுலையூடுயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான்” என்னக்கடவதிறே. சகடாஸுர நிரஸநத்துக்கு முன்னே பூதநா நிரஸநமாயிருக்க, மாறியருளிச் செய்தது க்ரம விவக்ஷயாவன்று; ஹர்ஷாதிசயத்தாலே இன்னபடி சொல்லவேணுமென்ற றியாமை. எயிற்றையுடையவளை “எயிறு” என்கிறது, “ஒண்டொடி” என்னுமாபோலே. (தோள்களித்யாதி) அவள் முலைப்பாலோடே உயிரை வற்ற வாங்குகிறபோது நெறித்த தோள்களினுடைய அழகிருக்கிறபடியைக் காணுங்கோள்; சுருண்ட குழலையுடையரான நீங்கள் வந்து காணுங்கோள்.
– (நாள்கள் ஓர் இத்யாதி) - திருஅவதார நாள் தொடங்கி நாலைந்து மாதங்கள் கழிந்த பின்பு. “நாலைந்து” என்பது நான்கு மாதங்களா? ஐந்து மாதங்களா? ஒன்பது மாதங்களா? இருபது மாதங்களா? என்று நிச்சயமாகக் கூறாமல் ஏன் இவ்வாறு சந்தேகித்துச் சொல்லவேண்டும்? தன்னுடைய பிள்ளையான க்ருஷ்ணன் மீது அதிகமான பரிவு உள்ளதால், அவன் மேல் கண் த்ருஷ்டி ஏற்படாதபடி சொல்லுகிறாள். அதாவது பாலகனாக உள்ள காலத்திலே மனிதனுக்கு அப்பாற்பட்ட லீலைகளை இவன் செய்தான் என்றால், கண் த்ருஷ்டி ஏற்படும். இதனால் காலத்தை மயக்கிச் சொல்லுகிறாள். (தாளை இத்யாதி) - க்ருஷ்ணன் தனியாக உறங்கிக் கொண்டிருக்கும் இடத்திலே, அசுரவேகத்தில் அவனைத் துன்புறுத்துவதற்காக வந்து, சகடாசுரன் கிட்டின சமயத்தில், “யசோதை முலைப்பாலைத் தருவதற்குத் தாமதம் செய்கிறாளே” என்று சீறித், திருவடிகளை நிமிர்த்த, அசுர குணமுடைய அச்சகடாசுரன் கிட்டியதால் அவனை உதைத்து முடித்து. (வாள் கொள் இத்யாதி) – ஒளியுடையதும், வளைந்து இருப்பதுமான பற்களை உடைய பூதனையின், முடிப்பதற்கு அரியதான உயிர்ச்சாபத்தை வாங்கினான். பெரியதிருமொழி (1-3-1) - பேய்ச்சி பெருமுலையூடுயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் - என்பது போன்று, சகடாசுரனை அழிப்பதற்கு முன்பாக அன்றோ பூதனையை வதம் செய்தான்? இப்படியிருக்க, வரிசை மாறி அருளிச்செய்தது, முன்புள்ள யுகங்களும் ப்ரகாசமாகத் தோன்றியதாலே ஆகும். இல்லையெனில், அதிசயமான ப்ரீதி கிடக்க, இந்த முறையில்தான் சொல்லவேண்டும் என்னும் நியமம் இல்லாததாலே ஆகும். (தோள்கள் இத்யாதி) - அவளுடைய முலைப்பாலோடு சேர்த்து சாபத்தையும் வற்ற வாங்குகிறபோது, நெறித்துக் கிடக்கும் தோள்களினுடைய அழகு இருக்கிறபடியைக் காணுங்கள். சுருண்ட கூந்தலை உடைய பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்.