திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 7)

ஏழாம்பத்து

முதல் திருவாய்மொழி

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல் அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே

– எப்போதும் உன் மீது உள்ள விச்வாசம் காரணமாக உன்னிடம் சரணம் புகுந்த அன்று, தேவர்களும் அஸுரர்களும் பிடித்து இழுக்கும்படியாக, அலை வீசும் திருப்பாற்கடலில், வாசுகி என்ற ஒரு பாம்பை, இதனைப் போன்று இரண்டாவது இல்லை என்று கூறலாம்படி உள்ள மந்த்ர மலையைச் சுற்றி, அந்த மலையானது அசையாமல் நிலை நிறுத்திய உபகாரத்தன்மையைக் காண்பித்து, எனக்கு ஸ்வாமியாக உள்ளவனே! அவர்கள் போன்று அந்த அமிர்தத்தை விரும்பாமல், “உன்னையே பருகவேண்டும்” என்னும் ஆசை இருப்பினும் பருக இயலாதபடி கொடுமையுள்ள நான், உன்னைப் பருகுவதற்கு ஏற்ப எல்லையற்ற இனிமையானவனே! “ஒரு விஷயத்தை தேடித் தா” என்று என்னிடம் கூறி, அதனைப் பெற்று அனுபவிப்பது முடிய ஒரு நிலையில் நிற்காமல், ஒன்றுக்கொன்று சேராதபடி தனித்தனியாக சுதந்திரமான இந்த்ரியங்கள் என்றுள்ள, பழகியும் முகம் அறியாத கயவர்களை, உனது எல்லையற்ற தயை இன்றி, எனது முயற்சியால் நான் வெல்லவல்லவனோ?

– “நீ உபேக்ஷித்தால், அதிபலமான இந்த்ரியங்களை எள்னாலே வெல்ல உபாயமுண்டோ?”, என்கிறார்.

“நீ என்னை ஒதுக்கினால், மிகுந்த பலம் கொண்ட இந்த்ரியங்களை என்னால் வெல்லும் வழி ஏதும் உள்ளதா?”, என்கிறார்.

(ஒன்று சொல்லி) “ராமோ த்விர் நாபிபாஷதே” என்பாரைப் பற்றிப் பயங் கெட்டிருக்கிறேனோ? அங்ஙனேயாகில், “ஏதத் வ்ரதம் மம” என்றதுவும் தப்பாதிறே. (ஒன்று சொல்லியொருத்தினில் நிற்கிலாத) ஒரு வார்த்தையைச் சொல்லி அதுக்கீடான ஓரர்த்தத்திலே நிற்கக்கடவதல்லாத ஒரு விஷயத்தைச் சொல்லி, அது அனுபவிக்குந்தனையும் ஓரிடத்திலே நில்லாத. ஒருத்து - ஒருமைப்பாடு. (ஓரைவர்) இப்படியிருப்பார் அநேகர். (வன்கயவரை) பழகப்பழக நிர்க்குணரானவர்களை. (என்று யான் வெல்கிற்பன்) “இன்றல்லவாகில் நாளை வெல்லுகிறான், தானே வென்று வருகிறான்” என்றிருக்கிறாயோ? (உன் திருவருளில்லையேல்) அவன் ப்ரஸாதமுண்டாகில் ஜயிக்கவுமாமாகாதே. “அருளென்னும் ஒவ்வாளுருவி எறிந்தேனைம்புலன்கள்” என்னக்கடவதிறே. உன்னை யண்டை கொள்ளாதே பாண்டவர்கள் துர்யோதனை வெல்லுமன்றன்றே, நான் இந்த்ரியங்களை வெல்லுவது. க்ருஷ்ணனை யாச்ரயித்து அர்ஜுநன் சத்ருக்களை ஜயித்தானிறே; “க்ருஷ்ணாச்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதாச்ச பாண்டவா:”. (அன்று தேவரசுரர் வாங்க) “நம்மருள் பெற்று வென்றாருண்டோ?” என்ன; துர்வாஸச் சாபத்தினின்று உன் ப்ரஸாதம் பெற்றன்றே தேவர்கள் கடலைக் கடைந்தது? தேவர்களும் அசுரர்களும் கைவாங்கக் கடைந்தானென்னுதல். அன்றிக்கே, வாங்குதல் வலித்தலாய், அவர்கள் தங்களுக்கே கடையலாம்படி பண்ணிக் கொடுத்தானென்னுதல். (அலை கடல் இத்யாதி) பெரிய அலையையுடைத்தான கடலிலே, ஒரு சித் வஸ்துவான வாஸுகியைக் கயிறாகக் கொண்டு, சலிப்பிக்கவொண்ணாததொரு பர்வதத்தை மத்தாகக் கொண்டு, அத்தை வாசுகியையிட்டுச் சுற்றி வைத்த நொய்ப்பம் எல்லார்க்கும் கடையலாம்படியிருக்கை; நமக்கும் கடையப்போம்படியாயிருக்கை. (எந்தாய்) தாமும் ஒரு பிரயோஜநம் பெறப் பார்க்கிறாராகையாலே அது தம் பேறாயிருக்கிறபடி. (கொடியேன் பருகு இன்னமுதே) கடைந்தத்தையே ஆசைப்படப் பெற்றிலேன். நீ செய்தது கொண்டு திருப்தனாக வேண்டியிருக்க, “அட்டதொழியச் சுட்டது கொடுவா” என்று உன்னை நிர்ப்பந்திக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன்.

(ஒன்று சொல்லி) - அயோத்யாகாண்டம் (18-30) - ராமோ த்விர் நாபிபாஷதே - இராமன் இரண்டுவிதமாகப் பேசமாட்டாள் – என்பதற்கு ஏற்ப உள்ளவனைப் பற்றியதால், இந்த்ரியங்கள் குறித்த பயம் விலகி நிற்கிறேனோ? அவனைப் பற்றினால் பயம் நீங்கும்விதம் எப்படி என்பதைக் கூறுகிறார்; “இரண்டாவது சொல் என்பதே என்னிடம் இல்லை” என்று இராமன் கூறுவதால், யுத்தகாண்டம் (18-33) – ஏதத் வ்ரதம் மம – இது எனது விரதம் – என்ற வாக்கும் தப்பாது அல்லவோ? (ஒன்று சொல்லியொருத்தினில் நிற்கிலாத) - ஒன்று உரைத்து, அதற்கு ஈடாக உள்ள கருத்தில் நிலை நிற்காத. அதாவது ஒரு விஷயத்தைக் கூறி, அதனை அனுபவித்து முடிக்கும்வரை அந்த ஓர் இடத்தில் நிற்காத. ஒருத்து என்றால் ஒற்றுமை அல்லது ஒரே கருத்து கொண்டு. (ஓர் ஐவர்) - இவ்விதம் உள்ளவர்கள் பலர்; அதாவது பல இந்த்ரியங்களை. (வன்கயவரை) - இந்த்ரியங்களாகிய அவர்களுடன் அன்றாடம் பழகியபடி இருந்தாலும், பழகப்பழக அன்பு இல்லாதபடி உள்ளவர்கள்; அவர்களை. – (என்று யான் வெல்கிற்பன்) - “இன்று இந்த இந்த்ரியங்களை வெல்ல இயலவில்லை என்றால், நாளை வென்று நம்மிடம் வருவான்” என்று நீ பொறுத்துள்ளாயோ? (உன் திருவருளில்லையேல்) - அவனுடைய கடாக்ஷம் இல்லை என்றால், அவற்றை வெல்ல இயலாது. அவன் கடாக்ஷம் இருந்தால் இவற்றை வெல்லலாம் என்பதற்கு ப்ரமாணம் பெரியதிருவந்தாதி (6-2-4) – அருளென்னும் ஒவ்வாளுருவி எறிந்தேனைம்புலன்கள் – என்பது காண்க. இதற்கு ஒரு உதாரணம் காண்கிறார். பாண்டவர்கள், உன்னை அண்டி நிற்காமல் துரியோதனை வெல்லும் நாள் அல்லவோ நான் இவற்றை வெல்ல இயலும்? க்ருஷ்ணன் அண்டி அல்லவோ அர்ஜுநன் பகைவர்களை வென்றான்! பாண்டவர்கள் க்ருஷ்ணனையே அண்டினார்கள் என்பதற்கு ப்ரமாணம் ஆரண்யபர்வம் (18-3-24) - க்ருஷ்ணாச்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதாச்ச பாண்டவா: - பாண்டவர்கள் க்ருஷ்ணனையே அடைந்தவர்கள், க்ருஷ்ணனையே தங்கள் பலமாகக் கொண்டவர்கள், க்ருஷ்னனையே தங்கள் நாதனாகக் கொண்டவர்கள் – என்பதாகும். – (அன்று தேவரசுரர் வாங்க) – இதனைக் கேட்ட ஸர்வேச்வரன், “நம்முடைய கடாக்ஷம் பெற்று வென்றவர்கள் உள்ளனரா?”, என்றான். இதற்கு ஆழ்வார் விடை கூறுகிறார்; துர்வாஸர் மூலம் அடைந்த சாபத்தினைப் போக்க, உனது கடாக்ஷம் பெற்று அல்லவோ தேவர்கள் கடலைக் கடைந்தனர்? தேவர்களும் அஸுரர்களும் தங்களால் இயலாது என்று நிற்க, இவன் அல்லவோ கடைந்தான்! அல்லது வாங்குதல் என்பதற்கு வலித்தல் என்று பொருள் கொண்டு, அவர்கள் தாங்களாகவே கடையலாம்படிச் செய்து கொடுத்தான். (அலை கடல் இத்யாதி) - பெரிய அலைகள் கொண்ட திருப்பாற்கடலில், ஒரு சித் வஸ்துவாகிய வாசுகியைக் கயிறாகக் கொண்டு, தேய்மானம் ஏதும் இல்லாதபடியான ஒரு மலையை மத்தாகக் கொண்டு, அதனை வாசுகியை வைத்துச் சுற்றிய ஒரு நேர்த்தியானது, அனைவராலும் சேர்ந்து நின்று கடையலாம்படி இருந்தது. நாமும் சென்று கடையலாம்படி வைத்த. (எந்தாய்) - மற்ற பயன்களை எதிர்பார்த்தபடி உள்ளவர்களுக்காக அவன் செய்த செயலில் மயங்கி, “எந்தாய்” என்று ஏன் கூறவேண்டும் என்பதற்கு விடை தருகிறார். அடியார்களில் ஒருவர், அவர் விரும்பிய செயலைச் செய்தால், மற்றவர்கள் விரும்பிய கார்யமும் செய்யவேண்டும் என்பதால், தான் விரும்பிய கார்யத்தையும் செய்து தருவான் என்று தீர்மானித்து, அவர்களுக்காக இவன் செய்த அச்செயலைத் தனது பேறாகக் கொண்டு அருளிச்செய்கிறார்; தானும் ஒரு பயனை எதிர்பார்ப்பதால், இவ்விதம் அவ்ர்களுக்குச் செய்த செயலைத் தனது பேறாகக் கொண்டு “எந்தாய்” என்றார். (கொடியேன் பருகு இன்னமுதே) - அவ்விதம் கடைந்த செயலையே நான் ஆசைப்பட்டேன், ஆனால் பெறவிலை. அல்லது, நீ செய்த அந்தச் செயலை எண்ணி மட்டுமே நான் மனநிறைவு கொள்ள வேண்டியவனாக உள்ளபோதிலும், சிறுத்தொண்டர் நாயனார் புராணத்தில் ருத்ரன் “அட்டது ஒழியச் சுட்டது கொடு வா - தனது பிள்ளையை அறுத்து, உடலைச் சமைத்து, அந்த பிள்ளையின் தலையை அடுப்பு அருகில் வைத்துவிட்டு, உடல் மாமிசத்தை விருந்தளித்த சிறுத்தொண்டனிடம் ருத்ரன் கூறியவை” என்பது போன்று உன்னை நிர்ப்பந்திக்கும்படியான பாபம் செய்தேன் என்கிறார்.