திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 6)
ஏழாம்பத்து
முதல் திருவாய்மொழி
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய் பரம் ஈசனே வந்து என் கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஒன்று சொல்லாயே
– பரமபதத்தில் இருப்பவர்களாக, அனைத்தையும் நியமிக்கும் உனக்குக் வைங்கர்யம் செய்தபடி உள்ள வைநதேயன் போன்றவர்களையும் கூட, உனக்கு அடங்கியுள்ள இந்தப் பூமியில் கொண்டு வந்து, அவர்களையும் துன்புறுத்தவல்லதான இந்த ஐந்து இந்த்ரியங்களானவை, அவற்றை வெல்வதற்கு ஈடாக உள்ள பலமற்ற என்னைத் துன்புறுத்தும்போது, இவற்றுக்கும் மேலே நீயும் கைவிட்டால், அவை என்னதான் செய்யாமல் இருக்கும்? ஈடுபாட்டுடன் அழைக்கும் எனது துன்ப பண்ணில் உள்ளாய், கவியில் உள்ளாய், ஈடுபாட்டில் உள்ளாய்; இவை மட்டுமல்லாமல் அனைத்தும் உனக்கு அடங்கி நடக்கும்படியாக அனைத்தையும் நியமிப்பவனாக உள்ளாய், எனது கண்களில் உள்ளாய், எனது நெஞ்சத்தில் உள்ளாய், எனது சொல்லில் உள்ளாய். இப்படிப்பட்ட நீ, எனது தளர்ச்சி நீங்கும்விதமாக ஒரு வார்த்தை கூறவேண்டும்.
– “அளவுடையாரையும் நலியக் கடவ இந்த்ரியங்கள், நீயும் கைவிட்டால், துர்ப்பலனான என்னை என்படுத்தா?” என்கிறார்.
– “மிகுந்த ஞானம் கொண்டவர்களுக்கு கூட, துன்பம் உண்டாக்கும்படிச் செய்யவல்ல இந்த்ரியங்கள், நீயும் கைவிட்டால், பலம் அற்ற என்னை என்ன தான் செய்யாது?”, என்கிறார்.
(விண்ணுளார் பெருமாற்கு இத்யாதி) அயர்வறுமமரர்களதிபதிக்கடிமை செய்வாரையும் செறும். (பெருமாற் கடிமை செய்வாரையும் செறும்) ஒக்கப் பிறந்து இளையபெருமாளைப் போலேயடிமை செய்து திரிவாருண்டிறே. விண்ணுளாராய்ப் பெருமாற்கடிமை செய்வாரையும் செறும். திருவடியையுமகப்பட “எனக்கு” என்னப் பண்ணிற்றிறே, ஸுமுகனென்கிற ஸர்ப்ப விசேஷம் திருவடிகளிலே சென்று கிட்ட, பெரியதிருவடி ஓடிச் சென்று, “எனக்கு ஆமிஷமாயிருக்கிற இத்தைக் கைக்கொண்டு நோக்குவதே!” என்று வெறுத்து, “தேவரீரையும் நாய்ச்சிமாரையும் நெடுங்காலம் வஹித்துக் கொண்டு திரிந்தேன்; நான் என்பெற்றேன்?” என்றானிறே. இதிறே ஸம்ஸார ஸ்வபாவமிருக்கும்படி. அவன்தான் அவதரித்து சோகிப்பது மோஹிப்பதானாப் போலேயாயிற்று இவர்களும். – அன்றிக்கே, “அயர்வறுமமரர்களதிபதி”யாயிருக்கிற ஸர்வேச்வரனுக்கு, ஸம்ஸாரத்திலே முமுக்ஷுக்களாய்க் கைங்கர்யத்திலே யவகாஹித்திருக்கக் கடவரானவர்களையும் நெருக்கக்கடவ இந்த்ரியங்களிவை. ஒரு விச்வாமித்ர ஸுக்ரீவாதிகளைக் கண்டோமிறே. ஜ்ஞாநாதிகனான விச்வாமித்ரனகப்பட ஒரு விஷயத்தின் காற்கடையிலே நெடுங்காலங் கிடந்தானிறே. பெருமாளுக்குப் பரிவரான மஹாராஜர், பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக விட்டு வைத்து நாலு மாஸம் இந்த்ரிய பரவசராய் அவ்வழியென்று நினைத்திலரிறே. (மண்ணுள் இத்யாதி) இவர் தாம் விண்ணுளாரில் ஒருவராகாதேதான்? இவற்றுக்குத் தந்நிலமாவது; நான் இவையிருந்த இடந் தேடிச் சென்று கழுத்திலே கயிறிட்டுக் கொடு நிற்க வல்லேனொருவனாவது; இங்ஙனேயிருக்கிற என்னைப் பெற்றால் இவை என் பண்ணா? (மற்று நீயும் விட்டால்) எல்லாரும் விட்டு,விழுந்து தரிக்கும் பூமியான நீயும் விட்டால். ரக்ஷகனான நீ விட்டிலையாகில், மஹாராஜர் வாலியை வென்றாப்போல நானும் இந்த்ரியங்களை வெல்லேனோ? “தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்” என்றானிறே. ஓரிடத்திலே கட்டி வைக்கிலிறே மநஸ்ஸை நியமிக்கலாவது? “‘இந்த்ரிய ஜயம் அரிது’ என்று சொல்லுகிறாயாகில், ‘நம் பக்கலிலே மநஸ்ஸை வை’ " என்றருளிச்செய்த நீயும் விட்டால். “நான் விட்டிலேனீ! உம்மை விடுகையாவதென்?” என்றான்; ஆகில் நீ அஸந்நிஹிதனாயோ அசக்தனாயோ நான் இழக்கிறது? (பண்ணுளாய்) ஏன்னார்த்த ஸ்வரம் கேளாதிருக்கிறாயல்லையே. (கவி தன்னுளாய்) என்னுடைய ஆர்த்தி கர்ப்பமான உக்தி கேளாதிருக்கிறாயல்லையே. (பக்தியினுள்ளாய்) இப்படி சொல்லுவிக்கிற ஆற்றமை யறியாதிருக்கிறாயல்லையே. (பரமீசனே) உனக்கு முடியாததொன்று உண்டாயிருக்கிறாயல்லையே. உன் சேஷித்வம் ஏறிப் பாயாத இடமுண்டோ? (இந்த்ரியங்களுக்குமீசனே) இது கிடக்கிடு; நீதான் முன்பே செய்யாததொன்றுண்டோ? என்கிறார். “ஆனால் இனிச் செய்யவேண்டுவதில்லையே” என்றான்; நானும் நீ செய்த அம்சத்தில் குறையுண்டென்கிறேனல்லேன்; நீ செய்யாத அம்சத்தையிறே சொல்லுகிறதென்கிறார். (என் கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய்) பாஹ்யகரணங்களுக்கும் ஆந்தரகரணத்துக்கும் உன்னையொழிய விஷயமுண்டோ? “நெடியானே”யென்று கிடப்பது, “உன்னை மெய்கொள்ளக்” காண விரும்புவது, “வஞ்சனே” என்பதாயிறே அவையிருப்பது. கவிதன்னுளாயென்று பாசுரஞ் சொல்லிற்று; சொல்லுளாயென்று வாகிந்த்ரியத்தைச் சொல்லுகிறது. ஆனால், நம்மைச் செய்யச் சொல்லுகிறதென்? என்ன, (வந்து ஒன்று சொல்லாயே) எனக்காக நாலடி நடந்து வந்து, “நீ யஞ்சாதே கொள்” என்று என்னை, “மாசுச:” என்ன வேணும். “உன் ஸத் பாவத்தில் எனக்கு அதிசங்கை உண்டோ? என் கண் காண வந்து ஒன்று சொல்லுகையன்றோ எனக்குத் தேட்டம்” என்கிறார்.
– (விண்ணுளார் பெருமாற்கு இத்யாதி) – இங்கு “விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும்” என்பதற்கு இரண்டுவிதமாகப் பொருள் கூறுகிறார். முதல் பொருளில் “முமுக்ஷுக்கள்” என்று கொள்ளவேண்டும்; “அயர்வறும் அமரர்கள் அதிபதி”யான ஸர்வேச்வரனுக்கு, ஸம்ஸாரத்தில் இருந்தபடி கைங்கர்யம் செய்யும் முமுக்ஷுக்களையும் கூடத் துன்புறுத்தவல்ல இந்த்ரியங்கள்; அடுத்து, “நித்யஸூரிகள்” என்று இரண்டாவது பொருள் கொள்ளலாம்; (பெருமாற் கடிமை செய்வாரையும் செறும்) - ஆனால் நித்யஸூரிகள் இவ்விதம் கைங்கர்யம் செய்வார்களோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; லக்ஷ்மணன் போன்று ஸர்வேச்வரன் கூடவே பிறந்து, கைங்கர்யம் செய்து தரிப்பவர்கள் உண்டு; இவர்களையும் கூட இந்த்ரியங்கள் வருத்தும். இதற்கு ஒரு உதாரணம் காண்பிக்கிறார். கருடனும் கூட “எனக்கு” என்று கூறலாம்படிச் செய்தன; ஸுமுகன் என்ற சிறப்பான ஸர்ப்பமானது கருடனிடம் அகப்பட்டது; அப்போது கருடன் பகவானிடம் ஓடிச் சென்று, “எனக்கு உணவாக உள்ள இதனைக் கைக்கொண்டு, ஏதும் செய்யாமல் உள்ளேனே! உன்னையும் பெரியபிராட்டியாரையும் நீண்டகாலம் எனது மேல் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளேன். இதனால் என்ன கிடைத்தது”, என்று கூறலாம்படிச் செய்தன. ஸம்ஸார இயல்பு இப்படி அல்லவோ இருக்கும்? ஆனால் கர்மவசப்படாமல் உள்ளவர்களுக்கும் இவ்விதம் ஆகுமோ என்றால், அவன் இங்கு அவதரித்து, சோகம் அடைந்து, மயக்கம் உற்று இருந்தது போன்று, இந்த நித்யஸூரிகளும் உள்ளனர். – அல்லது வேறுவிதமாகவும் கூறலாம். முமுக்ஷுக்கள் இந்த்ரியங்களின் வசப்பட்ட இடம் உள்ளதோ என்பதற்கு விடை தருகிறார்; “அயர்வறும் அமரர்கள் அதிபதி” என்றபடி உள்ள ஸர்வேச்வரனுக்கு, ஸம்ஸாரத்தில் முமுக்ஷுக்களாக இருந்தபடியே கைங்கர்யம் செய்வதில் எப்போதும் மூழ்கியபடி உள்ளவர்களையும் கூட நெருக்கும்படி அமைந்துள்ள இந்த்ரியங்கள். ஒரு விச்வாமித்திரரையும் ஸுக்ரீவனையும் நாம் பார்த்துள்ளோம். ஞானம் மிகுந்த விச்வாமித்திரன் கூட ஒரு விஷயத்தில் சிக்குண்டு நீண்டகாலம் கிடந்தார் அல்லவோ? இராமனுக்கு மிகவும் பரிவுடன் உதவி செய்வதாகக் கூறிய பின்னர், இராமனை நான்கு மாத காலங்கள் மின்னலுக்கும் இடிக்கும் இரையாக விட்டு வைத்து, தான் இந்த்ரியங்களால் பரவசம் அடைந்தபடி இருந்த ஸுக்ரீவன், இராமனைக் குறித்து எண்ணவில்லை அல்லவோ? (மண்ணுள் இத்யாதி) - இவர் முன்பு விண்ணில் இருந்தவர் அல்லவோ? இவை இந்தப் பூமியில் வருத்தியபடியே உள்ளன; நான், இவை உள்ள இந்த இடத்தைத் தேடி வந்து கழுத்திலே சுருக்கு மாட்டிக் கொண்டு நிற்கும்படி ஆயிற்று; இப்படி உள்ள என்னை இவை அடையும்போது என்னதான் செய்யாமல் இருக்கும்? – (மற்று நீயும் விட்டால்) - அனைவரும் விட்டு, விழுந்து உயிர் பிழைத்தபடி உள்ள இடமான நீயும் விட்டால்; அதாவது, அவன் வந்து மேலே விழுந்து ரக்ஷித்தபடி உள்ள நிலை. ரக்ஷகனாக நீ விடாமல் இருத்தால் மட்டுமே, ஸுக்ரீவன் வாலியை வென்றது போன்று என்னால் இந்த்ரியங்களை வெல்ல இயலும். அவன் கைவிட்டால் இந்த்ரியங்களை வெல்ல இயலாதோ என்பதற்கு விடை தருகிறார்; கீதை (6-34) – தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் – மனத்தை அடக்குதல் என்பது, காற்றை அடக்குவது போன்று மிகவும் அரிதான செயல் என்றே நான் எண்ணுகிறேன் – என்று அவனே கூறினான். காற்றை ஓர் இடத்தில் கட்டி வைக்க முடிந்தால் அல்லவோ மனத்தை அடக்கியாள இயலும்? அல்லது, “நீயும் விட்டால்” என்பதற்கு வேறு ஒரு பொருளும் கூறுகிறார். “இந்த்ரியங்களை வெல்வது அரிது” என்று நீ கூறிய பின்னர், “நம் பக்கம் மனத்தினை வைப்பாயாக” என்று கூறிய நீயும் கைவிட்டால். – இதனைக் கேட்ட ஸர்வேச்வரன், “நான் உம்மை விடவில்லை. உம்மைக் கைவிடுகை என்பது எப்படி நிகழும்?”, என்றான். இதற்கு ஆழ்வார் விடை தருகிறார்; அப்படியானால் நான் உன்னை இழந்து நிற்பது என்பது நீ எனது அருகில் இல்லை என்ற காரணத்தாலா அல்லது உனக்கு சக்தி இல்லை என்று காரணத்தாலா? (பண்ணுளாய்) – என் துன்ப ஒலியை நீ கேட்காமல் இருக்கவில்லையே! (கவி தன்னுளாய்) - எனது துன்பங்களை உள்ளடக்கிய சொற்களை நீ கேளாமல் இருக்கவில்லையே! (பக்தியினுள்ளாய்) - இவ்விதம் என்னைக் கூறும்படியாகச் செய்யும் எனது ஆற்றாமையை நீ அறியாமல் இல்லையே! (பரமீசனே) - உனக்கு இயலாது என்ற ஒன்று உண்டாகி, அதனால் நீ செய்யாமல் இருக்கிறாய் என்பதும் இல்லையே! உனது எஜமானத்தன்மை செல்லாத இடம் ஏதும் உள்ளதோ? (இந்த்ரியங்களுக்குமீசனே) - இவை ஒருபுறம் இருக்கட்டும்; நீ முன்பே “முடியானே” என்ற திருவாய்மொழியில் கூறியது போன்று செய்யாதது ஒன்று உண்டோ? இதற்கு ஸர்வேச்வரன், “சரி, இனிச் செய்யவேண்டியது வேறு ஏதும் உண்டோ? இல்லையே”, என்றான். இதற்கு ஆழ்வார், “நீ செய்த கார்யத்தில் குறை உள்ளது என்று நானும் கூறவில்லை. நீ செய்யாத கார்யத்தை அல்லவோ கூறுகிறேன்”, என்கிறார். (என் கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய்) - புற இந்த்ரியங்கள் மற்றும் அந்தகரணம் ஆகியவற்றுக்கு உன்னை அல்லாமல் வேறு விஷயம் உண்டோ? ஆனால் அனைத்து இந்த்ரியங்களுக்கும் அவனே விஷயமாக இருக்கமுடியுமோ என்பதற்கு விடை தருகிறார். “முடியானே” என்ற திருவாய்மொழியைக் கூறுகிறார்; “நெடியானே” என்று கிடப்பதானது “உன்னை மெய் கொள்ளக் காண விரும்பி” என்பதாகும்; “வஞ்சனே” என்பதாக இவை உள்ளன. “கவிதன் உளாய்” என்று பாசுரத்தைக் கூறுகிறார்; “சொல் உளாய்” என்று வாக்கு இந்த்ரியத்தைக் கூறுகிறார். இதனைக் கேட்ட ஸர்வேச்வரன், “ஆனால், நம்மை என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறீர்?” என்பதற்கு விடை அளித்தார். (வந்து ஒன்று சொல்லாயே) – எனக்காக நான்கு அடி நடந்து வந்து, “நீ அச்சம் கொள்ளாதே” என்று என்னிடம் கீதையில் (18-66) - மாசுச: - துக்கம் கொள்ளாதே – என்பது போன்று கூறவேண்டும். அல்லது வேறுவிதமாகவும் கூறலாம்; “உனது இருப்பில் எனக்கு ஐயம் உள்ளதோ? என் கண்களால் நாம் காணலாம்படியாக வந்து ஒன்று உரைத்தல் அல்லவோ என் விருப்பம்” என்கிறார்.