திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 5)
ஏழாம்பத்து
முதல் திருவாய்மொழி
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே ஓ
– அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும்படிச் செய்வதற்கு அடிப்படையாக உள்ள யுத்தத்தொழிலை எப்போதும் கொண்டுள்ள சக்கரத்தாழ்வானை ஏந்தி, விரோதிகளான அஸுரர்களுடைய கூட்டங்களை, அவற்றின் பக்கவேருடன் அழித்தாய். பரமபதத்தில் உள்ளவர்களுக்கு எல்லையற்ற இனிமையை அளித்து, அவர்களை நிர்வாகம் செய்பவனே! வேறு எந்தப் பரிகாரமும் இல்லாதபடி, ஐந்து இந்த்ரியங்கள் என்பதான நோயால் முடிக்கவல்லதான மயக்க நிலையில் உள்ள சரீரம் என்ற செக்கில் வைத்து மயங்கும்படிச் செய்யும் ஐந்து இந்திரியங்களையும், ஏன் முன்பாகவும் பக்கங்களிலும் நெருக்கமாக நிறுத்தி, நெகிழவிடுபவன் போன்று நிற்கிறாய். விரோதியைப் போக்க வேண்டிய நீயே இவ்விதம் செய்தால், இந்த நோய்க்கு மருந்து யார்?
– “விஷயங்களாலும் இந்த்ரியங்களாலும் அப்ரதிக்ரியமாம்படி நலிந்து என்னை நீ கைவிட்டால் வேறு ரக்ஷகர் உண்டோ?”, என்கிறார்.
– “புலன் விஷயங்களாலும், புலன்களாலும் வேறு மருந்து இல்லாதபடி துன்புறுத்தி என்னை நீ இவ்விதம் கைவிட்டால், எனக்கு வேறு ரக்ஷகன் உண்டோ?”, என்கிறார்.
(தீர்மருந்தின்றி) வேறொரு ப்ரதிகரியையுண்டாகிலும் ஆற்றலாமிறே: ஸர்வசக்தியாலும் போக்கப் போகாதாகாதே. (ஐந்து நோயடும் செக்கிலிட்டு) சப்தாதி விஷயங்களாகிற நோயாலே இவ்வாத்மாவை முடிக்கும் சரீரமாகிற செக்கிலேயிட்டு. (திரிக்குமைவரை) பாதிக்கிற ச்ரோத்ராதிகளை. சரீரத்திலே ப்ரவேசிப்பித்து சப்தாதி விஷயங்களைக் காட்டி நெருக்குகிற ச்ரோத்ராதிகளை. (நேர்மருங்குடைத்தாவடைத்து) எதிரும் பக்கங்களுமாக அடைத்து. அபிமந்யு என்றொரு பாலனை நலிகைக்கு அதிரத மஹாரதர்களடங்கலும் சூழப்போந்தாப்போல, இந்த்ரியங்களைக் கையடைப்பாக்கி. (நெகிழ்ப்பானொக்கின்றாய்) இதுவோதான் எனக்கு நிலைநிற்கப்புகுகிறது? “இங்ஙனேதான் சொல்லுகிறதோ” என்று இருக்கவொண்ணாதபடி உன்பக்கல் பண்ணின விச்வாஸத்தையும் குலையாநின்றாய். ஆனால் நம்படி இதுவாகில், உமக்கொரு பரிஹாரந் தேடிக் கொண்டாலோ என்றான்; (ஆர் மருந்தினியாகுவார்) என்னிடையாட்டம் பிறர்க்குக் கொடு காரியமில்லை; நான் நோவுபடா நின்றேன், நீ கைவாங்கினாய்; ஆனபின்பு, எனக்கு ஒரு ரக்ஷகருண்டோ? நானும் பிறருமில்லாதவன்று நீயுண்டு; நீ விட்டவன்று ஆருண்டு? “ஆனால் நீரோ?” என்றான்; நானும் கையுந் திருவாழியுமாயிருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ? மருந்தாம்போதும் ஒரு சேதான் வேணுமாகாதே. “மருந்தும் பொருளும் அமுதமுந் தானே”யிறே யிவர்க்கு. (அடலாழியேந்தியசுரர் வன்குலம் வேர் மருங்கறுத்தாய்) யுத்தோந்முகமான திருவாழியை ஏந்தி அஸுரருடைய வலிதா குலத்தைப் பக்கவேரோடே வாங்கினவனே! அவ்வாஸநையோ உம்மை நலிகிறது? (விண்ணுளார் பெருமானேயோ) ஒருத்தன் சிறையிருக்க பிதாவும் மாதாவும் ப்ராதாக்களுமாய்க் கல்யாணஞ் செய்யக் கண்டு தான் கூடப் பெறாதே நோவுபடுமாபோலே, நித்யஸூரிகளும் பிராட்டியும் அவனுமாகப் பரமபதத்திலே யிருக்கிறபடியை அநுஸந்தித்து அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். “ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸுமித்ரே” என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற்போல, பரமபதத்திலிருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார்.
– (தீர்மருந்தின்றி) - வேறு பரிகாரம் ஏதேனும் இருந்தால் இந்தப் புலன்கள் மூலம் ஏற்படும் நோயைத் தீர்க்கலாம் அல்லவோ? ஸர்வேச்வரனுடைய சக்தியாலும் போக்கடிக்கப் போகாமல் அல்லவோ இவை உள்ளன! (ஐந்து நோயடும் செக்கிலிட்டு) - புலன்களின் விஷயங்கள் என்னும் நோயால் இந்த ஆத்ம ஸ்வரூபத்தை அழிப்பதான சரீரம் என்ற செக்கில் வைத்து. (திரிக்குமைவரை) - வருத்துகின்ற புலன் விஷயங்களை. சரீரத்தில் புகும்படிச் செய்து, ஓசை முதலான புலன் விஷயங்களைக் காண்பித்து, நெருக்கும் செவி போன்ற புலன்களை. (நேர்மருங்குடைத்தாவடைத்து) - எதிரிலும் பக்கங்களிலும் அடைத்து. அபிமன்யு என்ற ஒரு பாலகனை துன்புறுத்துவதற்காக, மஹாரதர்கள் என்று கூறப்படும் அனைவரும் சூழ்ந்து நின்றது போன்று, இந்த்ரியங்களுக்கு என்னைப் பிடித்துக் கொடுத்து. (நெகிழ்ப்பானொக்கின்றாய்) – இதனைக் கேட்ட ஸர்வேச்வரன், “இந்திரியங்கள் பாதகத்தை ஏற்படுத்தும் என்று அறியும் புத்தியை நாம் தந்தோம் அல்லவோ?”, என்பதற்கு விடை தருகிறார்; இவை நமக்கு பாதங்கள் என்ற புத்தி நிலைக்காதபடியும், உனது திருவடிகளில் உள்ள விச்வாஸத்தைக் குலைக்கும்படியும் நீ செய்து நிற்கிறாய். – இதற்கு ஸர்வேச்வரன், “உம்மை நாம் கைவிட்டோம் என்று உமக்குத் தோன்றினால், உமக்கு ஏற்ற ஒரு பரிகாரத்தை நீவிர் தேடிக்கொள்ளலாம் அல்லவோ?” என்றான். இதற்கு விடை அளிக்கிறார். (ஆர் மருந்தினியாகுவார்) - என்னுடைய செயலுக்கு மற்றவர்களால் செய்யக்கூடியது ஏதும் இல்லை; நான் துன்பம் அடைந்தபடியே உள்ளேன்; நீயும் என்னைக் கைவிட்டாய்; இதன் பின்னர் எனக்கு வேறு ஒரு ரக்ஷகர் என யாரும் உண்டோ? நானும் மற்றவர்களும் ஏதும் செய்ய இயலாத நிலையில், உதவ நீ உள்ளாய்; ஆனால் நீயும் விட்டால் யார் உண்டு? இதற்கு ஸர்வேச்வரன், “ஆனால் நீவிர் உம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் அல்லவோ?” என்பதற்கு விடை தருகிறார்; நானும் உன்னைப் போன்று திருக்கரமும் திருச்சக்கரமும் என்று இருந்தேன் என்றால், இவ்விதம் என்னை நானே நோக்கிக் கொள்ளமாட்டேனோ! மருந்து என்று உள்ளபோதிலும், ஒரு சேதநன் வேண்டும் அல்லவோ? இதற்கு ப்ரமாணம் மூன்றாம் திருவந்தாதி (4) - மருந்தும் பொருளும் அமுதமுந் தானே - என்பதாக, அவனே அல்லவோ இவருக்கு அனைத்துமாக உள்ளான்? (அடலாழியேந்தியசுரர் வன்குலம் வேர் மருங்கறுத்தாய்) - யுத்தத்தில் எப்போதும் தயாராக உள்ள சக்கரத்தாழ்வானைத் திருக்கரத்தில் ஏந்தி அஸுரர்களுடைய வலிமையான குலத்தை, அதன் பக்கவேருடன் அறுத்தவனே! “இவ்விதம் நாம் விரோதிகளை அழித்ததோ உம்மைத் துன்பம் அடையும்படிச் செய்கிறது?”, என்று ஸர்வேச்வரன் கேட்க இவர், “அப்படி அல்ல. வேறு ஒன்றும் உண்டு” என்று கூறுகிறார். (விண்ணுளார் பெருமானேயோ) - ஒருவன் சிறையில் உள்ளபோது, அவனுடைய தாயும் தந்தையும் உடன் பிறந்தோர்களும் என்று பலரும் கல்யாணத்தில் ஆழ்ந்து இருக்க, தான் அங்கு இல்லாதது குறித்துத் துன்பம் அடைவது போன்று, நித்யஸூரிகளும் அவனும் பெரியபிராட்டியாருமாகப் பரமபதத்தில் உள்ள நிலையை எண்ணியவராக, தனது கூக்குரல் அங்கு கேட்கும்படியாகக் கிடந்து அழைக்கிறார். இதனை ஓர் உதாரணத்தால் விளக்குகிறார்; ஸுந்தரகாண்டம் (28-8) - ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸுமித்ரே – ராமா லக்ஷ்மணா ஸுமித்ரா – என்று ஸீதை தனியாக நின்று அழைத்தது போன்று, பரமபதத்தில் உள்ள இருப்பானது கலங்கும்படி அழைக்கிறார்.