திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 4)
ஏழாம்பத்து
முதல் திருவாய்மொழி
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன் அடிப் போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய் யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை மீது சேர் குழவி வினையேன் வினை தீர் மருந்தே
– அனைத்து அசேதநங்களையும், அனைத்து சேதநங்களையும், எதனையும் விடாமல், உனது திருவயிற்றின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே இருக்கும்படிச் செய்து, இன்ன இடத்தில் முளைத்து எழுந்தது என்று அறியாதபடியாக உள்ள ஓர் ஆலமரத்தின் முகிழ்விரிந்து நீண்டபடி உள்ள இலை மீது, “ப்ரளய ஆபத்தில் விழுவோம்” என்று அறியாதபடி திருக்கண்கள் வளர்ந்தருளும் குழந்தாய்! பாபத்தைக் கொண்டு அடையாளம் காண்பிக்கவல்லவனாக உள்ள எனது அந்த வினைகளைத் தீர்க்கும் மருந்தே! இவர்கள் போன்று பலம் கொண்ட இரண்டாவது யாரும் இல்லை என்பதான பலம் கொண்ட ஐந்து இந்த்ரியங்களைக் காண்பித்து, உயர்ந்த புருஷார்த்தத்தை அனுபவிக்கவல்ல தகுதி கொண்ட நான், சிக்கித் தவிப்பதை அறியாதபடி உலகவிஷயகளில் ப்ரமிக்கும்படிச் செய்து, ஆபத்து காலத்தில் துணை நிற்கும் உனது வியக்க வைக்கும் இனிமை கொண்ட திருவடித் தாமரைகளை, அணுகாதபடி செய்து, ஏதும் செய்யாமல் கடந்து நின்றாய்.
– “நீயே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தமென்னுமிடத்தை நான் அறியாதபடி சப்தாதி விஷயங்களைக் காட்டி என்னை ப்ரமிப்பித்துப் போகா நின்றாய்” என்கிறார்.
– “இந்த ஆத்மாவிற்கு, இதற்கு மேல் வேறு இல்லை என்பதான உயர்ந்த புருஷார்த்தமாக நீயே உள்ளாய் என்பதை நான் அறியாதபடி, உலக விஷயங்களைக் காண்பித்து என்னை மயங்கும்படிச் செய்து அகன்றாய்”, என்கிறார்.
(சூது இத்யாதி) சூது - உறுவது. “இவ்வாத்மாவுக்கு விஷய ப்ராவண்யம் நாச ஹேது, பகவதநுபவம் உஜ்ஜீவநம்” என்று. நான் அறியாவகை - இது நான் அறியாதபடி. (ஓரைவரைக் காட்டி - சுழற்றி) நான் உறுவதறியாதபடி சப்தாதி விஷயங்களைக் காட்டி ப்ரமிப்பித்து: உன்மத்தங்காய் தின்னப் பண்ணி. (உன்னடிப்போது நான் அணுகாவகை செய்து) உன் திருவடிகளாகிற செவ்விப்பூக்களை நான் கிட்டாதபடி பண்ணி. மயிர் கழுவியிருக்கிறவனைச் செவ்விப்பூச்சூடாமல் தடுப்பாரைப் போலே. (போதிகண்டாய்) கூடநிற்கில் இதெல்லாம் படவல்லேன் கிடீர்! “கூட நிற்கில் கண்ணோட்டம் பிறக்கும்” என்று கடக்கப் போவாரைப்போலே. – “நீர் சொல்லுகிறவையெல்லாம் நமக்குச் செய்யவரிது காணும்” என்ன; “ஓம், நீ அரியவை செய்யமாட்டாயிறே” என்கிறார் “யாதும் யாவரும்” என்று தொடங்கி. சேதநாசேதங்களென்றும் பிறிகதிர்ப்படாதபடி உன் வயிற்றிலே வைத்து, ஒருபவனாய் முகிழ்விரியாததோர் ஆலந்தளிரின்மேலே, உனக்கு ரக்ஷகர் வேண்டுவதோர் அவஸ்த்தையை ப்ராபித்துக் கண்வளர்ந்தருளுவானொருத்த னல்லையோ? அரியவை செய்யவல்லை என்னுமிடத்துக்கு ஒரு பழங்கதை சொல்லவேணுமோ? (வினையேன் வினை தீர் மருந்தே) பாபமே நிரூபகமான என்னுடைய பாபம் போக்கும் மருந்தாக வல்லவனே! என்னுடைய சப்தாதி விஷய ப்ராவண்யத்தைப் போக்கி என்னை இப்படித் துடிப்பித்தவனல்லையோ!
– (சூது இத்யாதி) - சூது என்றால் “வந்து சேர்வது” அதாவது வரும் இடர். “இந்த ஆத்மாவிற்கு உலக விஷயங்களில் ஈடுபடுதல் என்பது அழிவிற்கான காரணம், பகவத் அனுபவம் பிழைப்பதற்காண உபாயம்” என்று நான் அறியாபடி. (ஓரைவரைக் காட்டி - சுழற்றி) - நான் அழிவது அறியாதபடி புலன் விஷயங்களைக் காண்பித்து, என்னை மயக்கி, அதாவது உந்மந்தங்காய் என்பதை உண்ணும்படிச் செய்து. (உன்னடிப்போது நான் அணுகாவகை செய்து) - உனது திருவடிகள் என்னும் அழகாக மலர்ந்த மலர்களை நான் கிட்டாடபடி செய்து, தலைமுடியைக் கழுவி இருப்பவனை செவ்வி மலர் சூடாமல் தடுப்பது போன்று. (போதிகண்டாய்) – “எப்போதும் கூடவே இருந்தால் கண்களால் பார்க்கும்படி ஆகும்” என்று எண்ணி அகன்று செல்பவர்களைப் போன்று. – இதனைக் கேட்ட ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நீவீர் கூறுவது ஏதும் நான் செய்யமாட்டேன், எனக்குச் செய்யவும் தெரியாது”, என்றான். இதற்கு ஆழ்வார், “ஓகோ! நீ செய்ய இயலாத அரிய செயல்கள் ஏதும் செய்யமாட்டாய் அல்லவோ?”, என்று கிண்டலாக “யாதும் யாவரும்” என்று கூறுகிறார். அசேதனங்கள் மற்றும் சேதநங்கள் ஆகிய ஏதும் ஒன்று கூட விடாமல், உனது திருவயிற்றில் வைத்து, முகிழ்விரியாத ஓர் ஆலந்தளிர் இலை மீது, உனக்கு ஓர் ரக்ஷகன் வேண்டுமோ என்று அச்சம் கொள்ளும் நிலையை ஏற்படுத்தி, திருகண்கள் வளர்ந்தருளுபவன் அல்லவோ? நீ அரிய பல செயல்களைச் செய்யவல்லவன் என்பதற்கு இது போன்று பழங்கதைக்ளைக் கூறவும் வேண்டுமோ? (வினையேன் வினை தீர் மருந்தே) - பாபத்தை மட்டுமே கொண்டு அடையாளம் காண்பிக்கலாம்படி உள்ள எனது பாபங்களைத் தீர்க்கும் மருந்தாக உள்ளவனே! எனது இந்த்ரிய விஷயங்களில் ஏற்படும் ஈடுபாட்டினை விலக்கி, உன்னை எண்ணியே நான் துடிக்கும்படிச் செய்தவன் அல்லவோ?