திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 3)
ஏழாம்பத்து
முதல் திருவாய்மொழி
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன் திருவடிச் சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே
– அனைத்திற்கும் காரண பூதனாக உள்ளவன் என்பதால், மிகவும் பரந்து விரிந்துள்ள இந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்து, ப்ரளய ஆபத்து ஏற்பட்டபோது அதனை வயிற்றில் வைத்துப் பாதுகாத்து, அதன் பின்னர் அதனை வெளியிட்டு, அதனை வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடும்போது அளந்து, நைமித்திக ப்ரளயத்தில் வராக ரூபம் எடுத்து இடர்ந்து, இதன் விளைவாக அனைத்திற்கும் எஜமானன் என்பதை மறைமுகமாக உணர்த்தவல்ல தேஜஸ்ஸையும் உயர்த்தியையும் கொண்ட நீண்ட க்ரீடம் உள்ளவனே! உன்னையே எப்போதும் அனுபவித்தபடி இருக்கவேண்டும் என்ற ஆசை கொண்டவனாக இருக்கும் என்னுடைய விரோதிகளை அழிக்கவல்லவனே! என்னை எப்போதும் ஊடுருவத் தயாராக உள்ள ஐந்து இந்த்ரியங்கள் மூலமாக, என்னை உனது பாதுகாப்பிற்கு விஷயமாகாதபடி செய்யவல்ல பாபம் கொண்ட என்னை, மேலும் தாக்கி, அனைத்தையும் காப்பாற்றும் உனது திருவடிகளை அடைய இயலாதபடி தடுத்து, நீ என்னை பயன் அடையப்போகிறாய்!
– “ஜகத்துக்கு ஸர்வவித ரக்ஷகனாய் வைத்து, என்னை உன் திருவடிகளிலே கிட்டாதபடி இந்த்ரியங்களாலே நலிவித்தால் உனக்கு என்ன ப்ரயோஐநம் உண்டு?” என்கிறார்.
– “இந்த ஜகத்திற்கு நீ அனைத்துவிதங்களிலும் ரக்ஷகனாக உள்ளாய். ஆயினும் என்னை அனைத்துவிதமாகவும் துன்புறுத்தி, நான் உனது திருவடிகளை அடைய இயலாமல் செய்கிறாய். இதனால் உனக்கு என்ன பயன்?”, என்கிறார்.
(வேதியாநிற்கும்) அழகிதாக எல்லா அவஸ்த்தைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டேன். “உடனாய் மன்னி” என்று பாரித்ததெல்லாம் இவற்றுக்குப் பணி செய்கைக்காவதே! (வேதியாநிற்கும்) வேதனையே பண்ணாநிற்கும். “யாவஜ் ஜீவமக்நிஹோத்ரம் ஜுஹுயாத்” என்றால், “ஸாயம் ப்ராத:” என்று ஒரு காலங்களிலே ஒதுக்கா நின்றதிறே; அங்ஙனன்றிக்கே, ஸர்வாவஸ்த்தைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டுச் சொன்னதெல்லாம் இவற்றின் பக்கலிலேயானபடி. (வினையேனை) போகத்திற்குப் பாரித்ததெல்லாம் க்லேசப்படுகைக்கு உடலாவதே. (உன் திருவடிச் சாதியாவகை நீ தடுத்து) என்ன உறவின் கனந்தான்! தம்முடைய குற்றத்துக்கும் அவனை வெறுக்கும்படி காணும் ஸம்பந்தமிருக்கிறபடி. ஸாதநாநுஷ்ட்டாநம் பண்ணி பலத்துக்கு விரோதம் பண்ணுவாரைச் சொல்லுமாபோலே சொன்னபடி பாரீர். உன் திருவடிகளை ஸாதியாதபடி தகைந்து. (என் பெறுதி) என் ஸ்வரூபமழியுமித்தனையோ வேண்டுவது? நான் படுகிற வ்யஸநத்தால் உனக்கு ஒரு ப்ரயோஜநமுண்டாகில் எனக்கு அதுவேயமையும்; உனக்காக இருக்குமதிறே எனக்கு வேண்டுவது. “ஜலாந் மத்ஸ்யா விவோத்த்ருதௌ” என்கிற இளையபெருமாள், துர்வாஸர் வர, “பெருமாளுக்கு ஓர் அவத்யம் வரவொண்ணாது” என்று தம் நோவு பாராதே விடைகொண்டாரிறே. (என் பெறுதி) ஸ்ரீபரதாழ்வானை நீ ஸத்யப்ரதிஜ்ஞனாகைக்காகப் பிரித்து வைத்தாய்; என்னிருப்புக்கு உனக்கென்ன ப்ரயோஜனமுண்டு? (அந்தோ) ஸ்வப்ரயோஜநமின்றியிலே பராநர்த்தமே ப்ரயோஜநமாக நலியும்படி பிறந்தேனே. ரக்ஷணமே ப்ரயோஜநமாக இருக்கிறவன், ந்ருசம்ஸரைப் போலேயாவதே! (ஆதியித்யாதி) உனக்கொரு ப்ரயோஜநமின்றிக்கே யிருக்கச்செய்தேயும் ரக்ஷிக்குமவனல்லையோ நீ! ஆனபின்பு உனக்கு இது போருமோ? ஆதிராஜ்ய ஸூசகமான திருவபிஷேகந் தொடக்கமான திவ்யாபரணங்களை தரித்துக் கொண்டு நித்யஸூரிகள் நடுவே இருக்கக்கடவ நீ, ஜகத்காரணபூதனாய்ப் பரப்பையுடைத்தான பூமியை ஸ்ருஷ்டித்து, பின்னை ப்ரளயாபத்து வர வயிற்றிலேயெடுத்து வைத்து, அநந்தரம் வெளிநாடு காணப் புறப்படவிட்டு, பின்னை மஹாபலி அபஹரிக்க எல்லை நடந்து மீட்டுக் கொண்டு, பின்னை நைமித்திக ப்ரளயத்திலே மஹாவராஹமாயெடுத்துக் கொண்டேறி, இப்படிகளாலே ஸ்ர்வரக்ஷணங்களையும் பண்ணுமவனல்லையோ? (தொண்டனேன் இத்யாதி) இவன் ரக்ஷகன் என்னுமிடத்துக்கு முன்னேயொன்று தேடிச் சொல்லவேணுமோ? மதுவைப் போக்கினாப்போல என் இந்த்ரிய வச்யதையை இன்றிருந்து போக்கினவனன்றோ? தொண்டன் - இதர விஷய சபலன். தன் படிகளைக் காட்டியெனக்குப் புறம்புண்டான வாஸநையைப் போக்கி, இன்று கைக்கெட்டாதிருக்கிற இதுவேயிறே குறை.
(வேதியாநிற்கும்) – “வேதியா நிற்கும் - இடைவிடாமல் துன்புறுத்தியபடி” என்று நிகழ்காலத்தில் கூறுவதன் கருத்தை அருளிச்செய்கிறார்; எனது அனைத்து நிலைகளிலும், உனது அனைத்து நிலைகளுக்கும் கைங்கர்யம் செய்தபடி இருக்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஆனால் திருவாய்மொழி (3-3-1) – உடனாய் மன்னி - என்று நான் விரும்பிய அனைத்துவிதமான கைங்கர்யங்களும், இந்த இந்த்ரியங்களுக்குப் பணி செய்வதற்காகவே ஆயிற்றே! (வேதியா நிற்கும்) - வேதனை செய்தபடி உள்ளன. யஜுர்வேதம் - யாவஜ் ஜீவமக்நிஹோத்ரம் ஜுஹுயாத் - உயிருடன் இருக்கும்விதத்தில் அக்னிஹோத்ரம் செய்யவேண்டும் – என்றால், “ஸாயம் ப்ராத: - மாலை காலை” என்று ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே செய்தால் போதுமானதாகாது அல்லவோ? அது போன்று அனைத்து காலங்களிலும் கைங்கர்யம் செய்யவேண்டும் என்னும்போது, இவ்விதம் இவற்றால் துன்பம் அடைந்தால், கைங்கர்யம் செய்வதற்கு இயலாது அல்லவோ? அல்லது, அனைத்து நிலைகளிலும் கைங்கர்யம் செய்தபடி இருக்கவேண்டும் என்று விரும்பிக் கூறியவை அனைத்தும், இவற்றின் விஷயத்தில் ஆகின்றது. – (வினையேனை) - இன்பத்திற்காக எண்ணியவை அனைத்தும் துன்பம் அடைவதற்குக் காரணமாயின. (உன் திருவடிச் சாதியாவகை நீ தடுத்து) - என்னே அவனுக்கும் இவருக்கும் உள்ள உறவின் கனம்! தனது குற்றங்களுக்கு அவனை வெறுக்கும்படியாக ஸம்பந்தம் உள்ளதே! ஸாதனங்கள் பலவற்றையும் கைக்கொண்டு, பலன் கிட்டும்போது, அதனை தடுக்க எண்ணுபவர்களைக் கூறுவது போன்று இவர் கூறுவது காண்க. உனது திருவடிகளை அடையாதபடி தடுத்து. (என் பெறுதி) - எனது ஸ்வரூபம் அழிவதை மட்டுமே காணவேண்டுமோ? அதாவது உனது திருவடிகளை அடையவிடாமல் என்னை நீ தடுத்து, என்ன பயன் பெறப்போகிறாய்? எனது ஸ்வரூபம் அழிவதை மட்டுமே நான் காண்கிறேன் அல்லாமல் வேறு எந்த ஒரு பயனையும் காணவில்லை. நான் அடையும் துன்பங்கள் மூலம் உனக்கு ஏதும் பயன் ஏற்பட்டால் எனக்கு அதுவே போதுமானதாகும். “உனக்காக நான் உள்ளேன்” என்ற நிலை மட்டுமே எனக்குப் போதுமானதாகும். இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறார்; அயோத்யாகாண்டம் (53-31) - ஜலாந் மத்ஸ்யா விவோத்த்ருதௌ - தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீனைப் போன்று - என்று கூறிய லக்ஷ்மணன், துர்வாசர் வந்தவுடன், இராமனுக்கு எந்த ஒரு துன்பமும் வரக்கூடாது என்று தன்னுடைய துன்பத்தைப் பாராமல் விடை கொண்டார் அல்லவோ? – (என் பெறுதி) - தனது ப்ரயோஜனத்திற்காக மற்றவர்களுடைய துக்கத்தைப் பாராமல் கார்யம் செய்த இடம் உள்ளதோ என்பதற்கு விடை தருகிறார்; நீ ஸத்யம் தவறாதவன் என்பதால், கொடுத்த வாக்கிற்காகப் பரதனைப் பிரித்து வைத்தாய். ஆனால் எனது இருப்பினால் உனக்கு என்ன பயன் உள்ளது? ஆகவே பிரிக்க எண்ணுகிறாய். (அந்தோ) – தனக்கு எந்த ஒரு பயனும் இன்றி, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதையே ப்ரயோஜனமாக நலியும்படிப் பிறந்தேனே! பாதுகாத்தல் என்பதையே தனது பயனாகக் கொள்பவன், கருணை இல்லாதவர்கள் போன்று இன்று ஆனானே! (ஆதியித்யாதி) - உனக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்றுள்ளபோதிலும் காப்பாற்றுபவன் அல்லவோ நீ? இவ்விதம் உள்ளபோது, என்னை இப்படியாகச் செய்தல் சரியா? ஆதிராஜ்யத்தின் நாதன் என்பதை வெளிப்படுத்தும்விதமாக க்ரீடம் தொடக்கமாக உள்ளிட்ட பல திவ்யமான ஆபரணங்களைத் தரித்தபடி, நித்யஸூரிகளுடைய நடுவில் இருக்கக்கடவ நீ, இந்த ஜகத்தானது உண்டாகக் காரணமாக உள்ளவனாக, மிக்க பரப்பு கொண்ட பூமியைப் படைத்து, அதன் பின்னர் ப்ரளய ஆபத்து வந்த நேரத்தில் அதனை உனது திருவயிற்றில் எடுத்து வைத்துக் காப்பாற்றி, பின்னர் வெளியே விட்டு, பின்னர் அதனை மஹாபலி அபகரித்தபோது எல்லை நடந்து சென்று மீட்டு எடுத்து, பின்னர் நைமித்திக ப்ரளயத்தின்போது மஹாவராஹமாக எடுத்துக் கொண்டு மேலே ஏறி, இப்படியாக உள்ள பலவிதமான காப்பாற்றும் செயல்களைச் செய்பவன் அல்லவோ நீ? – (தொண்டனேன் இத்யாதி) – “இவன் காப்பாற்றுபவன்” என்பதை உணர்ந்த பின்னரும், இவ்விதம் ஒன்றுக்கு முன்பு மற்றொன்று என்று தேடித் தேடித் திரிந்து கூறவேண்டுமோ? மது என்ற அஸுரனை அழித்தது போன்று, நான் எனது இந்த்ரியங்களுக்கு கட்டுப்பட்டு இருத்தலிருந்து இன்று காப்பாற்றியவன் அல்லவோ? தனது பல்வேறு விதங்களை எனக்குக் காண்பித்து, எனக்கு மற்ற விஷயங்களில் ஏற்பட்ட வாஸனைகளை விலக்கி, இன்று எனது கைக்கு எட்டாமல் அவன் உள்ளது மட்டுமே எனக்குக் குறையாக உள்ளது.