பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 10)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
பெரு மா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திருமார்வு இருந்த ஆ காணீரே சே இழையீர் வந்து காணீரே
மிகவும் பெரிதான உரலோடு கட்டுண்டு இருந்த அந்த நிலையில், இரண்டு பெரிய மருதமரங்களை முறித்த இந்தப் பிள்ளையுடைய, மிகவும் சிறந்ததான ஸ்ரீகௌஸ்துப ஆபரணம் அசைந்து திகழும் திருமார்பின் அழகு இருக்கும்படியை வந்து காணுங்கள், சிவந்த ஆபரணங்களையுடைய பெண்களே, நீங்கள் வந்து காணுங்கள்.
– திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச - திருவுதரத்தில் நின்றும் திருமார்பிலே பெருகுகிறார். மாமுனிகள் வ்யாக்யானம் - திருவுதரத்தினழகை யநுபவித்த வநந்தரம், திருமார்வினழகை அனுபவிக்கிறார்.
– திருவயிற்றின் அழகை அனுபவித்த பின்னர் திருமார்பின் அழகினை அனுபவிக்கிறார்.
– திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (பெருமாவித்யாதி) மிகவும் பெரிய உரலோடே கட்டுண்டிரா நிற்கச்செய்தேயிறே இரண்டு பெரிய மருதுகளையும் தவழ்ந்து முறித்தது. முறிந்த ஓசையிலே புரிந்து பார்த்துச் சிரித்தபடி கண்டு “இப்பிள்ளை” என்றது. இப்பிள்ளையுடைய ஸ்ரீகௌஸ்துபம்போலே சிறந்து விளங்காநின்ற நீலரத்நமென்னுதல்; ஏதேனுமொரு ரத்நமாகிலும் திருமேனியின் ப்ரபையாலே நீலமாய்த்தென்னுதல்; ஏவம்ப்ரகாரமான திருமார்பைக் காணீரென்கிறார். “சேயிழை” என்று பக்தி ப்ரகாசகமான ஆத்மபூஷணம். மாமுனிகள் வ்யாக்யானம் - (பெருமாவித்யாதி) மிகவும் பெரியவுரலோடு கட்டுண்டிருந்து அத்தசையிலே அத்தையும் இழுத்துக் கொண்டு தவழ்ந்து போய், தன்னை நலிவதாகச் சேர்ந்து நின்ற இரண்டு பெரியமருதுகளின் நடுவே சென்று புக்கு அவற்றை முறித்த முக்தனானவனுடைய. (குருமாவித்யாதி) ச்ரேஷ்ட்டமாய் ச்லாக்க்யமான ஸ்ரீகௌஸ்துபமாகிற ஆபரணம் அசைந்து விளங்கா நின்றுள்ள திருமார்வினழ கிருக்கிறபடியைக் காணுங்கோள். (சேயிழையீர் வந்து காணீரே) சிவந்த ஆபரணங்களையுடைய நீங்கள் வந்து காணுங்கோள்.
– (பெருமாவித்யாதி) – “பெரு”, “மா” என்பது மிகவும் பெரியதானது என்பதைக் குறிக்கிறது. மிகவும் பெரிய உரலோடு கட்டுண்டு இருந்த அந்த நிலையில், அந்த உரலினையும் இழுத்துக் கொண்டு தவழ்ந்து போய், தன்னைத் துன்புறுத்தவே சேர்ந்து நின்ற இரண்டு பெரிய மருதுகளின் நடுவே சென்று அவற்றை முறித்தான். முறித்த ஓசையைக் கேட்டு, அதனைத் திரும்பி பார்த்து அழகு பொங்க சிரித்தபடி இருந்தான். (குருமாவித்யாதி) - மேன்மையானதும் கொண்டாடத்தக்கதுமான ஸ்ரீகௌஸ்துபமாகிற ஆபரணம் அசைந்தபடி உள்ள இப்பிள்ளையுடைய திருமார்பின் அழகு இருக்கிறபடியைக் காணுங்கள். (சேயிழையீர் வந்து காணீரே) - சிவந்த ஆபரணங்களையுடைய பெண்களே! அதாவது இயல்பாகவே அன்பானது ஆபரணமாய் ப்ரகாசிக்கும் பெண்களே, நீங்கள் வந்து காணுங்கள்.