திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 2)
ஏழாம்பத்து
முதல் திருவாய்மொழி
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப் பகல் மோதுவித்திட்டு உன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய் ! கன்னலே அமுதே கார் முகில் வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே
– அனைத்துவிதங்களிலும் இனிமையைக் கொண்ட கரும்புக்கட்டியே! இது மட்டும் அல்லாமல், உயிர் பிழைக்க வைக்கும் காரணமாக உள்ள அமிர்தமே! இவ்விதம் இனிமையாக உள்ளபோது, அனைவருக்கும் அனைத்துவிதங்களிலும் உபகாரமாக உள்ள மழைமேகம் போன்று எந்தவிதமான வேறுபாடும் ஆராயாமல் உபகாரம் செய்யும் இயல்பு கொண்டவனே! இவ்விதம் உபகாரம் செய்யும்போது, ஸமுத்திரத்தால் சூழப்பட்ட இந்தப் பூமி முழுவதும் ஒளிரும்படியாகக் காக்கும் சக்கரத்தைக் கொண்டவனே! உன்னை அடைவதைத் தடுக்கும் விரோதியான பாபங்கள் நிறைந்த எனக்குக் கேட்கும்படியாக வேதங்களால் கூறப்படும் ஸர்வேச்வரனே! உனக்கு அடிமையாக உள்ள என்னை, தங்களுக்கு அடிமை என்பதாகக் கொண்டு, என்னை ஆண்டு, என் அளவில் சுதந்திரம் கொண்டதாகிய, ஒன்றுக்கு ஒன்று நிகர் இல்லாதபடி, ஒவ்வொன்றைப் போன்று மற்றொன்று இல்லை என்று கூறும்படியாக உள்ள இந்த ஐந்து இந்திரியங்களையும், எனக்கு பாதிப்பு ஏற்படும்படியாக நியமித்து வைத்து, இரவுபகல் என்ற வேறுபாடு இன்றி, எப்போதும் இவற்றால் தாக்குதல் நடந்தும்படிச் செய்து, உனது திருமுகத்தைக் காண இயலாதபடி உள்ளாய்.
– “துர்ப்பலனான என்னை இந்த்ரியங்களாலே ஸர்வ காலமும் நலிவித்து, இந்நோவை யறிவிக்கவொண்ணாதபடி போதி” என்கிறார்.
– “வலிமை ஏதும் இல்லாதவனாகிய என்னை, இந்த ஐந்து இந்த்ரியங்களால் அனைத்து நேரங்களிலும் துன்பம் ஏற்படும்படியாகச் செய்து, இந்த நோயை எனக்கு அறிவிக்க ஒண்ணாதபடி நீ செய்கிறாய்”, என்கிறார்.
(என்னையாளும் வன்கோ) ஸத்தை நோக்குவாய் நீயாய், பணி கொள்வார் வேறே சிலராவதே. அத்தலையித்தலை யாயிற்றுக்கிடாய். ஈச்வரனென்பான் ஒருவனுண்டாய், அவனுக்கு ஆத்மா சேஷமாய், அவனுக்கு மநஸ்ஸு அந்தரங்க பரிகரமாய், அதுக்கு இந்த்ரியங்களும் சேஷமாகை தவிர்ந்து, பள்ளிகள் கலகம்போலே என்னை இந்திரியங்களாளும்படி யாவதே! (வன்கோ) ப்ரபலருமாய் வந்தேறிகளானவர்களுக்குப் பணி செய்து வெறுத்தேன். “கோவா யைவரென் மெய்குடியேறிக் கூறைசோறிவைதாவென்று குமைத்துப் போகார்”. ஒரு நீர்மையுடையவன் சேஷியாகை தவிருவதே! ஸமஸ்த கல்யாண குணாத்மகன் சேஷியாகை தவிர்ந்து, நிர்குணர் சேஷிகளாயிற்று கிடீர். (ஓரைந்து) குண ப்ரதாந பாவத்தாலன்றிக்கே, ஸமப்ரதாநமாய் நலிகிறபடி. கடவானொருவனாய், பணி செய்வதும் அவனுக்கான நிலை குலைந்தது. “பதிம் விச்வஸ்ய” என்றும், “அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனன்” என்றும் ஒருவன் சேஷியாகை தவிர்ந்ததிறே. (ஐந்து) ஏகசேஷமாகை தவிர்ந்தது கிடீர். (இவை பெய்து) அவற்றின் பக்கல் குறையுண்டோ, அவற்றையிட்டு நலிவிக்கிறாய் நீயல்லையோ? ஸ்ரீப்ரஹ்லாதனைப் பாம்புகளைக் கூட விட்டுக் கட்டி நலிந்தாப் போலேயிருக்கிறது காணும் இவற்றை யுண்டாக்கி என் பக்கலிலே நீ விட்டது. (இராப்பகல் மோதுவித்திட்டு) காலத்துக்கு விநியோகம் இதுவேயாவதே! “ஒழிவில் காலமெல்லாம்” என்று அழகிதாக அடிமை செய்யவாசைப்பட்டேன். “அடியார்கள் குழாங்களை உடன்கூடுவதென்று கொலோ” என்று ப்ரார்த்தித்த எனக்கு. இவற்றினுடனே கூடும்படியாவதே. (உன்னை நான்) பெற்றல்லது தரிக்கவொண்ணாதபடியாயிருக்கிற உன்னை, கிட்டியல்லது ஜீவிக்க மாட்டாதபடியான நான். நிரதிசய போக்யனான உன்னை, புஜித்தல்லது தரிக்கமாட்டாத நான். (அணுகா வகை செய்து) கிட்டாதபடி பண்ணி. (போதி கண்டாய்) உன்னை யநுபவிக்க வேணுமென்று போந்த பிராட்டியை மாயமானைக் காட்டிப் பிரித்து ஏகாக்ஷி, ஏககர்ணிகைகள் கையிலே காட்டிக் கொடுத்து உன்னைக் கொண்ட கன்றாற்போலே கிடாய் இதுவும்! (கன்னலேயமுதே) ஒரு வகையால் வந்த போக்யதையாகில் நான் ஆறியிரேனோ? “ஸர்வகந்த: ஸர்வரஸ:” என்கிறபடியே ஸர்வவித போக்யமுமாய், “அளவிறந்து”, “கொள்ளமாளா இன்பவெள்ளமா”யிராநின்றதே. கன்னலென்று கருப்புக்கட்டி, அமுதென்று போக்யமுமாய், சாவாமல் காக்குமதுவுமா யிருக்கை. (கார்முகில் வண்ணனே) அந்த போக்யதையைத் தன் பேறாகத் தருமவன். பரமோதாரனென்றபடி. அன்றிக்கே, கார்காலத்தில் மேகம்போலே தர்சநீயமான வடிவையுடையவனே என்னுதல். (கடல்ஞாலம் இத்யாதி) “போதி கண்டாய்” என்று ஆர் காற்காட்ட நீ அன்று நோக்கிற்று! “இந்த்ரியங்களாலே நோவுபட்டோம்” என்று இவர்கள் அபேக்ஷித்தபோதோ நீ நோக்கிற்று! நீ போக்யன் என்றறியாதாரையுங்கூட நோக்குமவனல்லையோ? கடலோடு கூடின பூமியைக் கண்ணிலே வெண்ணையிட்டுக் கொண்டு நோக்கும் ஸ்வபாவனல்லையோ? (காக்கின்ற) ரக்ஷணந்தான் காதாசித்கமோ உனக்கு? (மின்னு நேமியினாய்) இயற்றியுண்டென்னா ஸங்கல்பத்தாலே நோக்குமவனோ? ஆசிலே வைத்த கையும் நீயுமாயன்றே நோக்குவது. “அருளார் திருச்சக்கரத்தாலகல் விசும்பும் நிலனுமிருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்” என்னக் கடவதிறே. உருவின வாள் உறையிலிடாதேயன்றோ நோக்குவது? விளங்கா நின்றுள்ள திருவாழி. (வினையேனுடை வேதியனே) “தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்யமதிதைவதம்” என்றும், “பொது நின்ற பொன்னங்கழல்” என்றுஞ் சொல்லுகிறபடியே ஊர்ப்பொதுவாயிருக்கிற நீ, என்னளவிலே வந்தவாறே வேதைக ஸமதிகம்யனானாய், இன்றிருந்து ஓலைப்புறத்திலே கேட்கும்படியான பாபத்தைப் பண்ணுவதே நான்!
(என்னையாளும் வன்கோ) – எனது இருப்பு என்பதை நீ பார்த்துக் கொள்கிறாய்; ஆனால் என்னை அடிமையாக்கி என் மூலம் பணி கொள்பவர்கள் வேறு சிலராக உள்ளனரே! ஈச்வரன் என்னை ஆள்வதை விடுத்து, இந்த்ரியங்கள் என்னை ஆள்கின்றனவே! ஈச்வரன் என்று ஒருவன் உள்ளான்; அவனுக்கு ஜீவாத்மா அடிமை ஆகும்; ஆத்மாவிற்கு மனமானது அந்தரங்கமான சேவகனாக உள்ளது; அந்த மனத்திற்கு அனைத்து இந்திரியங்களும் அடிமைகளாக உள்ளன; இப்படியாக உள்ள நிலை அல்லாமல், குறும்பு செய்பவர்கள் உண்டாக்கும் கலகம் போன்று, இந்திரியங்கள் என்னை ஆளும்படியான நிலை ஏற்பட்டதே. (வன்கோ) - ப்ரபலரும், ஆத்மாவிற்கு இயல்பாக இல்லாமல், இந்த இந்த்ரியங்கள் நடுவில் வந்து சேர்ந்தவையாக உள்ளன; இவற்றுக்கு நான் பணி செய்து வெறுத்தேன். இவை நடுவில் வந்து சேர்ந்தவை என்பதற்கு ப்ரமாணம் பெரியதிருமொழி (7-7-9) – கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப் போகார் - என்பதாகும். நீர்மை நிறைந்த ஒருவன் தலைவனாக இருத்தலை விடுத்து, இவை உள்ளனவே! அனைத்து கல்யாணகுணங்களும் நிறைந்த ஒருவன் எஜமானனாக உள்ளதை விடுத்து, எந்தவிதமான குணங்களும் அற்ற இவை எஜமானர்களாக உள்ள நிலை ஏற்பட்டது. – (ஓர் ஜந்து) - இந்த இந்த்ரியங்கள் ஒவ்வொன்றும், துன்புறுத்தும் காலத்தில் ஒன்று ப்ரதானமாகவும், மற்றவை அந்த நேரத்தில் முக்கியமாக அல்லாததாகவும் இருப்பதில்லை; அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே தன்மையுடன் சேர்ந்து துன்பம் அளிப்பவையாக உள்ளன. இதனால் உண்டான நிலை என்ன? நியமிக்கக்கூடியவன் என்பவன் அந்த ஈச்வரன் ஒருவனாக மட்டுமே என உள்ளபோது, கைங்கர்யம் செய்வதும் அவனுக்காக மட்டுமே என்ற நிலை இல்லாமல் போயிற்று. அதாவது “பதிம் விச்வஸ்ய - இந்த விச்வத்தின் நாதன்” என்றும், திருவாய்மொழி (6-7-10) – அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனன் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஒருவனே எஜமானன் என்ற நிலை தவிர்ந்தது. (ஐந்து) - ஒருவனே எஜமானன் என்பது அகன்றது. (இவை பெய்து) - இவை அசேதநமாக உள்ளபோதிலும், இவ்விதம் அவை துன்புறுத்தியபடி இருந்து, உன்னுடைய கைங்கர்யத்திலும் ஈடுபட வைக்காமல் அவை இருப்பதற்கு, அவற்றில் ஏதேனும் குறை உண்டோ? இல்லை, காரணம் அவற்றின் மூலம் இவ்விதம் செய்பவன் நீ அல்லவோ? இதற்கு உதாரணம் காண்பிக்கிறார்; ப்ரஹ்லாதனைப் பாம்புகள் அருகில் இருக்கும்படிச் செய்து துன்புறுத்தியது போன்று, இந்த இந்த்ரியங்களை உண்டாக்கி, அவற்றை என் அருகில் இருக்கும்படி நீ அல்லவோ செய்தாய்? (இராப்பகல் மோதுவித்திட்டு) - எனது காலத்திற்கு உள்ள பயன் இதுவாக ஆயிற்றே! திருவாய்மொழி (3-3-1) – ஒழிவில் காலம் எல்லாம் - என்று நன்கு கைங்கர்யம் செய்தபடி இருக்கவேண்டும் என்று அல்லவோ நான் விரும்பினேன்! மேலும் திருவாய்மொழி (2-3-9) - அடியார்கள் குழாங்களை உடன்கூடுவதென்று கொலோ - என்பதாக ப்ரார்த்தனை செய்த எனக்கு, இவற்றுடன் கூடியிருக்கும்படியாக இந்நிலை ஏற்பட்டதே! – (உன்னை நான்) - உன்னை அடைந்தால் அல்லாமல் தரிக்க இயலாதபடி உள்ள நான். அல்லது என்னைப் பெற்றால் அல்லாமல் இருக்க இயலாதபடி உள்ள உன்னை, உன்னை அடைந்தால் அல்லாமல் பிழக்க இயலாத நான். எல்லையற்ற இனிமை பொருந்திய உன்னை அனுபவித்தால் அல்லாமல் உயிர் பிழைக்க இயலாத நான். (அணுகா வகை செய்து) – அருகில் வராமல் செய்து, அதாவது கிட்டாதபடி செய்து. (போதி கண்டாய்) - உன்னை எப்போதும் தனிமையில் அனுபவித்தபடி இருக்கவேண்டும் என்று உன்னுடன் கானகம் வந்த பிராட்டியை, ஒரு மாயமானைக் காண்பித்துப் பிரித்து, ஒரு கண் கொண்டவள் மற்றும் ஒரு காது கொண்டவள் என்பது போன்ற ராக்ஷஸிகள் கையில் அகப்படுத்தி, உன் மூலமாகவே நீ அகன்றது போன்று இங்கும் செய்கிறாய் போலும். (கன்னலே அமுதே) – “கன்னலே” என்பது அனைத்துவிதமான சுவைகளுக்கும் ஒரு உதாரணம் மட்டுமே ஆகும். ஏதேனும் ஒரு வகையில் வந்த இனிமை என்றால், நான் சற்றே ஆறியிருப்பேன். ஆனால் இங்கு, உபநிஷத்தில் “ஸர்வகந்த: ஸர்வரஸ:” என்பதற்கு ஏற்ப அனைத்துவிதமான இனிய பொருள்களுமாக, அளவற்று, கொள்வதற்கு இயலாத இன்ப வெள்ளமாக அல்லவோ உள்ளது? கன்னல் என்பது கரும்புக்கட்டி, அமுது என்பது இனிமையான பொருள் மற்றும் இறப்பு ஏற்படாமல் காப்பாற்றும் வஸ்து. – (கார்முகில் வண்ணனே) - “வண்ணன்” என்பதற்கு “தாராளமானவன், மேகம் போன்ற நிறம் குணம் கொண்டவன்” என்று இரண்டுவிதமாகப் பொருள் கூறுகிறார். இத்தகைய இனிமையைத் தருவது தனது பேறு என்று எண்ணி அளிப்பவன். அதாவது தாராள குணம் நிறைந்தவன் என்று கருத்து. அல்லது மழைக்கால மேகம் போன்று காண்பதற்கு இனிமையான வடிவம் கொண்டவனே! (கடல்ஞாலம் இத்யாதி) - யாரால் ப்ரார்த்திக்கப்பட்டு நீ இவ்விதம் இந்த உலகத்தைக் காப்பாற்றுகிறாய்? “இந்திரியங்களால் நாங்கள் வருந்தியபடி உள்ளோம்” என்று இவர்கள் ப்ரார்த்தித்த பின்னரோ நீ காப்பாற்றுகிறாய்? நீ இனிமையானவன் என்று அறியாதவர்களையும் கூடக் காப்பாற்றுகிறாய் அல்லவோ? ஸமுத்திரத்தால் சூழப்பட்ட இந்தப் பூமியை, கண்களில் வெண்ணெய் இட்டுக் கொண்டு அல்லவோ நீ காப்பாற்றுகிறாய்? (காக்கின்ற) - இப்படிப்பட்ட காப்பாற்றுதல் என்ற இயல்பு உனக்கு ஒரு காலத்தில் மட்டுமே இருப்பது, வேறு ஒரு காலத்தில் இல்லை என்பதாகவோ உள்ளது? இல்லையே, எப்போதும் உள்ளது அல்லவோ? (மின்னு நேமியினாய்) - முயற்சி செய்யவேண்டும் என்பது இல்லை, தனது சாமர்த்யத்தால் நோக்குபவன். ஆயுதத்தின் பிடியில் வைத்த திருக்கரமும், சக்கரத்தாழ்வானும் ஆகிய நீயும் சேர்ந்து அல்லவோ ரக்ஷிப்பது! சக்கரம் கொண்டு அனைத்தையும் காப்பாற்றுவதற்கு ப்ரமாணம் திருவிருத்தம் (33) - அருளார் திருச்சக்கரத்தாலகல் விசும்பும் நிலனுமிருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் - என்பது ஆகும். உருவிய வாளை மீண்டும் உறையில் வைக்காமல் அல்லவோ காப்பாற்றுகிறான்! எப்போதும் ப்ரகாசித்தபடி உள்ள சக்கரதாழ்வான். (வினையேனுடை வேதியனே) – ஜிதந்தே (1-2) – தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்யமதிதைவதம் - தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும் பொதுவாக உள்ள உயர்ந்த தெய்வம் - என்றும், மூன்றாம் திருவந்தாதி (88) - பொது நின்ற பொன்னங்கழல் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அனைவருக்கு பொதுவாக உள்ள நீ, என் அருகில் வந்தவுடன், வேதங்களால் அறியப்படுபவனாக உள்ளாய். உன் அருகில் இன்று இருந்தாலும் கூட, உன்னைக் குறித்து, ஓலையில் எழுதப்பட்ட ராஜ ஆணையைப் படிப்பது போன்று அறியப்பட வேண்டிய பாபத்தைச் செய்தேன் (அதாவது நேரடியாக அனுபவிப்பதை இழந்து படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையை உண்டாக்கிய பாபம்).