திருவாய்மொழி - ஏழாம்பத்து (பாசுரம் 1)

ஏழாம்பத்து

முதல் திருவாய்மொழி

உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் எண் இலாப் பெருமாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே

– உடலில் எப்போதும் நிரந்தமாக வசிப்பதால், உள்ளேயே இருக்கின்ற சத்ருக்களாகிய ஐந்து இந்த்ரியங்களாலும் துன்பமானது உண்ணும்படிச் செய்து, இவற்றுக்கு அச்சம் கொண்டு உன்னிடம் சரணம் புகுந்த என்னை, என்னால் அடையப்படவேண்டியவனும் இனிமையானவௌம் ஆகிய உனது திருவடிகளைச் சேராதபடி செய்து, “காட்டிப் படுப்பாயோ” என்ற துன்பம் ஏற்பட்ட பின்னரும், ஸம்ஸாரத்தில் மேலும் நிறுத்தி நான் துன்பம் அடைய எண்ணுகிறாய். எண்ணற்றதும் எல்லையற்றதும் ஆகிய கார்யங்களை ஏற்படுத்தியபடி உள்ள வியக்கவைக்கும் மூலப்ரக்ருதியை உனது திருமேனியாகக் கொண்டவனே! ஸம்ஸார வாஸனை என்பதே ஏற்படாதபடி, எப்போதும் சுருக்கம் அடையாத ஞானம் கொண்டபடி உள்ள நித்யஸூரிகளால் துதிக்கப்படுபவனே! மூன்றுவிதமான சேதந அசேதந வஸ்துக்களை அடிமையாகக் கொண்ட எஜமானனே! தானாகவே வெளிப்படும் நித்யமான இனிமையைக் கொண்ட எனது அப்பனே! இப்படியாக என்னை நிர்வாகக் செய்தபடி உள்ளவனே!

– “உன்னாலல்லது செல்லாதபடியாய் உன் திருவடிகளிலே சரணம் புகுந்த என்னை இந்த்ரியங்களாலே நலியப் பாராநின்றாய்” என்கிறார்.

– “உன்னை விட்டு அகன்று செல்ல இயலாதபடியாக, உன்னால் அல்லது நீக்க இயலாதபடியாக உள்ள என்னை, உனது திருவடிகளில்ல் சரணம் என்று புகுந்த பின்னரும், இந்த்ரியங்கள் மூலம் துன்பம் அடையும்படிச் செய்கிறாய்”, என்கிறார்.

(உண்ணிலாவிய இத்யாதி) ரக்ஷகன் ஸந்நிதியாகை தவிர்ந்து பாதகர் ஸந்நிதியாயிற்று கிடீர் தேவர், எனக்குப் பகைப் புறம்பிட்டு வருகிறதென்றே இருக்கிறது? (நிலாவிய) உள்ளானாலும், போக்குவரத்துண்டாமாகில் படைப்போதறிந்து இறாய்க்கலாமிறே. (நிலாவிய) வர்த்திக்கிற. பாதகவர்க்கம் அந்தரங்கமாய் நின்று நலிகிறபடி. “தேஹாத் வ்யதிரிக்கமாயிருப்பதோர் ஆத்மவஸ்து உண்டு” என்று அறிகிறிலர்; இவையே வர்த்திக்குமத்தனை என்றிருக்கிறார். (ஐவரால்) இப்படி நலியா நின்றாலும், ஒருவரிருவராகில் அறிந்து பரிஹரிக்கலாமிறே. இவர்களிலே நால்வர் ஒருமுகமாய் நின்று நலிய, ஒருவருடலாந்தமாயிருக்கும். ரக்ஷகனொருவனாயிருக்க பாதகர் ஐவராயிருக்கிறபடி. அஞ்சாலென்னாதே, “ஐவரால்” என்றது, அசேதநங்களா யிருக்கச் செய்தேயும் சேதந ஸமாதியாலே சொல்லுகிறாராயிற்று, பாதகத்வத்தில் ஊற்றங் கொண்டு. ஆத்மாவென்று ஒன்று உண்டாய், அதினுடைய ஜ்ஞாந ப்ரஸரத்வார மாத்ரம் மநஸ்ஸாய், அதுக்கு இவை சேஷமென்று அறிகிறிலர். (குமை தீற்றி) நலிவுபடுத்தி. விடுநகங் கட்டுவாரை “நெகிழக் கட்டினாய்” என்று உறுக்கிக் கட்டுவிப்பாரைப்போலே, “இந்த்ரியங்கள் தண்ணளி பண்ணாமே ஒக்கவிருந்து நலிவிக்கிறான்” என்றிருக்கிறார். நலிகிற நலிவைக் கொண்டு, சேதந ஸமாதியாலே சொன்னோமாகில், இவற்றின் பக்கல் குறையுண்டோ? இவை நலிகிறபோதும் இவனில்லாமையில்லையிறே. இவனுக்கு இவைதான் அவிதேயமுமன்றே? ஹ்ருஷீகேசனே! (என்னை) “பல நீ காட்டிப்படுப்பாயோ”, “இன்னங் கெடுப்பாயோ” என்று அவற்றின் ஸந்நிதியிலே முடியும்படியான என்னை. (உன் பாதபங்கயம்) “தாவி வையங் கொண்ட தடந்தாமரைகள்” என்றும், “பூவார் கழல்கள்” என்றுஞ் சொல்லுகிற திருவடிகளை. (உன் பாதபங்கயம்) என்னையன்றே சொல்லவேண்டுவது? உன்னை நீ அறிதியிறே! உன்னடி அறியாமல்தான் அகற்றுகிறாயன்றே. “பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக்கமல”மிறே. ஸம்ஸாரத்தில் அருசி பிறவாதார்க்கும் விடவொண்ணாதபடி போக்யமான திருவடிகளை. “தேனே மலருந் திருப்பாத”மிறே. – (நண்ணிலா வகையே) காதாசித்கமாகக் கிட்டாதொழிகையன்றிக்கே கிட்டாதொழிகையே ஸ்வபாவமாக. “இனி நண்ணப் புகா நின்றோமோ?” என்றிருக்கிறார். (நலிவான்) நண்ணாமையென்றும் நலிவென்றும் இரண்டிலில்லை இவர்க்கு; திருவடிகளைக் கிட்டாதொழிகையே இவ்வாத்மாவுக்கு நலிவு. இக்க்ரூரமானவகையே நலிவான். (இன்னம்) “அகலகில்லேனிறையுமென்றலர்மேல்மங்கை யுறைமார்பா உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்” என்ற பின்பும். (எண்ணுகின்றாய்) “ஈச்வரனுக்கு வேறு க்ருத்யமில்லை” என்றிருக்கிறார். “யஸ்ய மந்த்ரீச கோப்தாச மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்த்தந:” என்று பாண்டவர்கள் கார்யம் மநோரதித்தாற்போலே, இங்கு கார்யம் செல்லா நிற்கச்செய்தே, மந்த்ரமும் செல்லுகிறபடி. “இவரை நம்பக்கலினின்றும் பிரித்தோமாம் விரகென்னோ?” என்று சிந்திக்கிறானென்றிருக்கிறார். (எண்ணிலாப் பெருமாயனே) “அஸ்மாந்மாயீ ஸ்ருஜதே விச்வமேதத்” என்றும், “மம மாயா துரத்யயா” என்றும் சொல்லுகிறபடியே எண்ணிறந்த செயல்களைச் செய்யவற்றாய், நீ வேண்டாதாரைச் சிறையிட்டு நலியக் கடவதான ப்ரக்ருதியை பரிகாரமாகவுடையனே! அன்றிக்கே, “எண்ணிறந்த மஹாச்சர்யமான குணங்களை யுடையவனே” என்று பிள்ளான் பணிக்கும்படி. இப்படி குணவானாயிருக்கிற உனக்கு என்னை நலிகைக்கு என்ன சேர்த்தியுண்டு? விடுநகங்கட்டி நலியா நிற்கச்செய்தே “தண்ணீர்” என்பாரைப்போலே, அவன் குணங்களைச் சொல்லுகிறபடி. (இமையோர்களேத்தும்) “தன்னாலல்லது செல்லாதாரை ஒருவன் பொகடவல்லபடியே” என்று கொண்டாட ஒரு விபூதியுண்டாவதே? “அவர்கள் முகங் கொடுக்கையிறே அவன் இங்கு வாராதிருக்கிறது” என்றிருக்கிறார். த்ரிசங்குவினுடைய ஓலக்கம் கிளர்ந்தாற்போலே கிளர்ந்ததாகில் அவனுக்கு என்னை விட்டிருக்கப்போமோ? (உலகமூன்றுடையண்ணலே) “தான் நினைத்தபோது கார்யஞ் செய்கிறான்” என்று இவரிருக்கைக்காகத் தன்னுடைய சேஷித்வத்தைக் காட்டினான் அவன்; “இப்படி ரக்ஷகனானவன் நம்மை நலியுமோ?” என்றிருக்கும்படி பண்ணிப் பின்னை நலிகைக்காகக் காட்டினான்” என்றிருக்கிறார் இவர். (அமுதே) அவன் தன்னுடைய யோக்யதையைக் காட்டிற்றும் தம்மை புஜிப்பிக்கைக்கல்ல; புறம்பு ஒன்று பொருந்தாதே நோவுபட” என்றிருக்கிறார். (அப்பனே) “ ‘இப்படி உபகாரகனானவன் நலியாநின்றானோ?’ என்று விச்வஸிக்கப் பண்ணிப் பின்னை அபகரிக்கைக்காகக் காட்டினான்'” என்றிருக்கிறார். (என்னையாள்வானே) “ப்ராங்ந்யாயம் பலிக்கும்” என்றிருக்கைக்காகக் காட்டினா னென்றிருக்கிறார். “இதுக்கு முன்பெல்லாம் நம்மை நிர்வஹித்துக் கொண்டு போந்தது நாமும் சில செய்தோ? அப்படியே மேலும் நம் கார்யம் அவன் செய்யும் என்று இருக்கைக்காகச் செய்தானத்தனை; நினைவு வேறேயென்றிருக்கிறார். (என்னையாள் வானே) “நலிவானின்னமெண்ணுகின்றாய்” என்கிறார்.

– (உண்ணிலாவிய இத்யாதி) – முதல் இரண்டு வரிகளுக்கான பொருளை அருளிச்செய்கிறார். காப்பாற்றவேண்டியவன் அருகில் இருக்கவேண்டிய நிலை இன்றி, கொலைகாரர்கள் அருகில் உள்ள நிலையைப் பார்ப்பாயாக. எனது இத்தகைய பகைகள் என்னை விட்டு அகலும்படியாக நீ வரும் நாள் என்று உள்ளது? (நிலாவிய) – உள்ளேயே இருக்கும் பகைவர்கள் என்றுள்ளபோதிலும், இவை எப்போது போர் செய்யும் என்ற காலம் அறிந்தாலாவது சற்று பொறுமையாக இருக்கலாம். (நிலாவிய) – இருக்கிற என்னை வருந்தும் கூட்டமானது எனக்கு உள்ளேயே இருந்து கொண்டு என்னைத் துன்புறுத்துகின்றது. “சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு ஆத்ம வஸ்து உண்டு” என்று அறியமாட்டனர்; இவை மட்டுமே சரீரத்தில் உள்ளன என்று உள்ளனர். (ஐவரால்) - இவ்விதம் துன்பம் ஏற்படுத்தியபடி உள்ளவர்கள் ஒருவர் அல்லது இருவர் என்றால் அவர்களை அறிந்து விலக்கலாம் என்றால், அவர்கள் ஐந்து பேர்கள் உள்ளனர் என்கிறார். இவர்கள் துன்பம் உண்டாக்கும் வரிசை முறை என்ன என்பதைக் கூறுகிறார்; இவர்களில் நான்கு பேர்கள், அதாவது கண் மூக்கு செவி மற்றும் வாய் ஆகியவை முகத்தில் உள்ளதால், ஒரு முகமாக நின்று துன்பம் அளிக்கின்றனர். மெய் என்பது சரீரம் என்பதால், ஒருவர் உடல் முழுவதும் இருந்து துன்பம் உண்டாக்குகிறார். காப்பாற்றுபவன் ஒருவனாக இருந்து, துன்பம் அளிப்பவர்கள் ஐந்து பேராக உள்ளனர். இவை அறிவற்ற பொருள்களாக உள்ளபோதிலும், தீமை செய்தலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளதால், இவற்றை உயர்திணை பொருள்கள் போன்றே கூறுகிறார். “ஆத்மா என ஒன்று உள்ளது. அதன் ஞானம் வெளிப்படும் வழியானது மனம். இவை அனைத்தும் அந்த மனத்திற்கு அடிமைகள்”, என்று அறியமாட்டனர். – (குமை தீற்றி) - துன்பம் ஏற்படுத்தி. இரண்டு குச்சிகள் கொண்டு சித்ரவதை செய்யும்போது, “நெகிழ்வாகக் கட்டினாய்” என்று கூறி இறுக்கமாகக் கட்டுபவர்கள் போன்று, இந்த்ரியங்களின் செய்கைகளிலிருந்து விலகாமல், சேர்ந்து நின்று துன்பம் செய்கிறான். இவை துன்புறுத்தும் தன்மையை நோக்கி, இவற்றை உயர்திணையாகக் கூறியதில் இவை விஷயத்தில் குறை ஏதும் உள்ளதா? இல்லையே! காரணம், இவை துன்புறுத்தும்போது இவன் அருகில் இல்லை என்பது இல்லை என்பதால் ஆகும். இவை அவனுக்கு அடங்காமல் இருப்பவை அல்லவோ? காரணம் இவன் ரிஷீகேசன் அல்லவோ? – (என்னை) – திருவாய்மொழி (6-9-9) - பல நீ காட்டிப்படுப்பாயோ – என்றும், திருவாய்மொழி (6-9-9) - இன்னங் கெடுப்பாயோ - என்றும் கூறுவதற்கு ஏற்ப அவற்றின் அருகாமையில் சென்று முடிந்தபடி உள்ள என்னை. (உன் பாதபங்கயம்) – திருவாய்மொழி (6-9-9) - தாவி வையங் கொண்ட தடந்தாமரைகள் - என்றும், திருவாய்மொழி (6-10-4) - பூவார் கழல்கள் - என்றும் கூறப்படும் உனது திருவடிகளை. (உன் பாதபங்கயம்) - எனது ஆற்றாமையை உனக்குக் கூறவேண்டுமோ? உன் திருவடியின் இனிமையை நீ அறிவாய் அல்லவோ? நீ எனக்கு அடிப்படையாக உள்ளாய் என்பதை நீ அறியாமல் என்னை அகற்றுகிறாயோ? ஆனால் தனது திருவடியின் இனிமையை இவன் அறிவானோ என்பதற்கு ப்ரமாணம் பெரியாழ்வார் திருமொழி (1-2-1) - பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக்கமலம் - என்பதாக உள்ள திருவடிகள் அல்லவோ? அதாவது பருவத்திற்கு ஏற்ற அறிவற்ற குழந்தையானது தனது திருக்கரத்தால் பிடித்துத் தனது உதடுகளில் வைத்து ரசித்து உண்ணும் திருவடித்தாமரைகள். திருவடிகளில் இனிமையின் எல்லையைக் கூறி ப்ரமாணம் காண்பிக்கிறார்; ஸம்ஸாரத்தின் மீது வெறுப்பு ஏற்படாமல் உள்ளவர்களுக்கும் கூட விட இயலாத இனிமையான திருவடிகள்; அந்தத் திருவடிகளை; திருவாய்மொழி (1-5-5) - தேனே மலருந் திருப்பாதம் - என்பது காண்க. – – (நண்ணிலா வகையே) - ஒரு காலத்தில் அனுபவிக்கும்படியாகக் கிடைத்து, அதன் பின்னர் சிக்காமல் உள்ளது போன்று அல்லாமல், எப்போதும் கிட்டாமல் இருத்தல் என்பதையே இயல்பாகக் கொண்டு. “இனி இவனைக் கிட்டாமல், திருவடிகளும் கிட்டாமல் இருப்போமோ?”, என்று உள்ளார். (நலிவான்) – அவனைக் கிட்டாமல் அல்லது திருவடிகளைக் கிட்டாமல் இருத்தல் மற்றும் துன்பத்துடன் இருத்தல் என்று இவருக்கு இரண்டு வெல்வேறு நிலைகள் இருக்கவில்லை; திருவடிகள் கிட்டாமல் இருத்தலே இவருடைய ஆத்மாவிற்குத் துன்பம் ஆகிறது. இந்தக் கொடுமையான விதத்தையே தந்து துன்புறுத்துகிறான். (இன்னம்) - திருவாய் (6-10-10) – அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா … உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் – என்று கூறிய பின்னரும். (எண்ணுகின்றாய்) – “ஈச்வரனுக்கு வேறு வேலை இல்லை. நம்மை அகற்றித் துன்புறுத்துவதையே தனது வேலையாகக் கொண்டுள்ளான்” என்று உள்ளார். “இன்னம் எண்ணுகிறான்” என்று நிகழ்காலத்தில் கூறியதற்கு ஒரு உதாரணத்தையும், மேலும் ஒரு கருத்தையும் அருளிச்செய்கிறார். மஹாபாரதத்தில் – யஸ்ய மந்த்ரீச கோப்தாச மந்த்ரீச கோப்தாச ஸுஹ்ருச்சைவ ஜநார்த்தந: - எந்த ஒரு தர்மபுத்திரனுக்கு ஜநார்த்தனன் மந்திரியாகவும், காப்பவனாகவும், தோழனாகவும் உள்ளானோ - என்று கூறுவதற்கு ஏற்ப, பாண்டவர்களுடைய செயலைக் குறித்து எண்ணுவது போன்று, இங்கு கார்யம் நடக்காமல், மந்த்ரங்கள் என்பதாகச் சொற்கள் மட்டுமே செல்கின்றன. அதாவது, இவன் தனது திருவுள்ளத்தில், “இவரை நம்மிடமிருந்து பிரிக்க என்ன வழி உள்ளது?”, என்று சிந்தித்தித்தபடி உள்ளதாக இவர் எண்ணுகிறார். – (எண்ணிலாப் பெருமாயனே) – உபநிஷத்தில் “அஸ்மாந்மாயீ ஸ்ருஜதே விச்வமேதத் - தனது மாயையால் இந்த விச்வத்தை ஸ்ருஷ்டிக்கிறான்” என்றும், கீதையில் (7-14) - மம மாயா துரத்யயா - எனது மாயை கடப்பதற்கு அரிது - என்றும் கூறுவதற்கு ஏற்ப, எண்ணற்ற செயல்களைச் செய்ய ஆற்றல் கொண்டதாக, வேண்டாதவர்களை ஸம்ஸார சிறையில் வைத்து துன்புறுத்தவல்ல ப்ரக்ருதியைத் துணையாகக் கொண்டவனே! அல்லது, “எண்ணற்ற, மிகவும் வியக்கவைக்கும் திருக்கல்யாணகுணங்கள் கொண்டவனே” என்று பிள்ளான் அருளிச்செய்வார். அருத்து பிள்ளை திருநறையூர் அரையர் கருத்தை அருளிச்செய்கிறார்; இவ்விதம் குணங்கள் நிறைந்த உனக்கு, என்னைத் துன்புறுத்த என்ன சேர்த்தி உனக்கு உள்ளது? ஆனால் துன்பம் செய்தவனை “குணவான்” என்று ஏன் கூறினார் என்பதற்கு விடை அருளிச்செய்கிறார். சித்ரவதை செய்யும்போது இரண்டு குச்சிகளை நெருக்கமாகக் கட்டி துன்புறுத்தும்போது “தண்ணீர்” என்று கூறுவது போன்று, அவன் குணங்ககளைக் கூறுகிறார். – (இமையோர்கள் ஏத்தும்) - “தன்னாலல்லது செல்லாதாரை ஒருவன் பொகடவல்லபடியே – தான் இல்லாமல் இருக்கமுடியாமல் உள்ளவரை, ஒருவன் விட எண்ணுகிறானே” என்று கொண்டாட ஒரு நித்யவிபூதியே உள்ளதே!. “அவர்களுக்குத் தனது திருமுகத்தை அளிப்பதற்காகவே இங்கு வராமல் உள்ளான்” என்று இவர் உள்ளார். த்ரிசங்குவின் சபையானது வீழ்ந்தது போன்று அவனுடைய இந்த அவையும் விழுந்தால் அவனுக்கு என்னை விடுவதற்கு இயலுமோ? (உலகமூன்றுடையண்ணலே) - “ஸர்வேச்வரன், தான் எண்ணியபோது நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவான்” என்று இவர் பொறுமையுடன் இருப்பதற்காகத் தன்னுடைய எஜமானத்தன்மையை இவருக்குக் காண்பித்தான். “இவ்விதம் நம்மைக் காப்பாற்றுபவன் நம்மைத் துன்பப்படுத்துவானோ என்று என்னை இருக்கும்படிச் செய்து, அதன் பின்னர் துன்பத்தைக் காண்பித்தான்” என்று இவன் உள்ளார். (அமுதே) – “அவன் தனது இனிமையைக் காண்பித்தது என்பது, தன்னை நான் அனுபவிக்கவேண்டும் என்பதற்காக அல்ல. அவன் அல்லாமல் வேறு ஒன்றிலும் சென்று விடாமல் இருந்து துன்பம் அடையவே ஆகும்” என்று இவர் உள்ளார். (அப்பனே) - “இவ்விதம் நமக்கு உபகாரம் செய்யும் இவன் நம்மைத் துன்பப்படுத்துவானோ என்று நம்மை நம்பும்படியாகச் செய்து, பின்னர் நம்மை அபகரிப்பதற்காக இவ்விதம் துன்பங்களைக் காண்பிக்கிறான்” என்று உள்ளார். (என்னை ஆள்வானே) – “மயர்வற மதிநலம் அருளி”, தன்னால் அல்லாமல் வேறு யாராலும் இயலாது என்பதாக உள்ள ந்யாயதைக் காண்பிக்கவே “நமது இந்த நிலைக்கு முன்பு உள்ள காலங்களில் நம்மை இவன் நிர்வாகம் செய்தது என்பது, நாமும் இவனுக்குச் சில காரியங்கள் செய்தோம் என்பதாலோ? அல்லவே! இது போன்றே மேலும் நமக்கான செயல்களைச் செய்வான்” என்று நான் இருப்பதற்காக இவ்விதம் நோவு செய்கிறான். ஆனால், இவன் எண்ணங்கள் வேறாகும்”, என்று இவர் உள்ளார். (என்னை ஆள்வானே) - “என்னை ஆள்பவனே! என்னை மேலும் துன்புறுத்த எண்ணுகிறாய்” என்று கூறுகிறார்.