திருவாய்மொழி - ஏழாம்பத்து (pravesam 1)

ஏழாம்பத்து

ப்ரவேசம் - முதல் திருவாய்மொழி

உண்ணிலாவிய ப்ரவேசம்

– “அமர்ந்து புகுந்தேன்” என்று தம்மால் ஆனவளவும் புகுரநின்றார். அநந்தரத்தில் அவனைப் புகுர நிற்கக் கண்டிலர். “இனிக் கைவிடப்பார்த்தானாகாதே” என்று விழுந்து கிடந்து கூப்பிடுகிறார். விளம்ப ஹேதுவில்லாத ஸாதநத்தைப் பரிக்ரஹித்தவன் அது பலப்ரதமாந்தனையுங் கிடந்து கூப்பிடுமத்தனையிறே. இவர்தாம் கீழ்ச் செய்ததாயிற்று திருவேங்கடமுடையான் திருவடிகளிலே பெரியபிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய ஆகிஞ்சந்யத்தை விண்ணப்பஞ் செய்து கொண்டு சரணம் புக்காராயிறே யிருக்கிறது. அது “மாமேவயே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” என்கிறபடியே கடுகப் பலித்துக் கொடுநிற்கக் கண்டிலர். இனி, “நம்மைக் கைவிடப் பார்த்தானாகாதே” என்று இன்னாதாகிறார். ஸம்ஸார ஸ்வபாவத்தை அநுஸந்தித்துப் போக்கடியற்று அவ்வடியைப் பற்றி சரணம் புக்கவிடத்திலும் தம்மபேக்ஷிதம் செய்யாமையாலே, சரணம் புக்கார் மேலே வேற்காரரை ஏவி ஹிம்ஸிக்கும் ந்ருசம்ஸரோபாதியாக அவனை நினைத்து பீதராய், ஈச்வரன் க்ருபை பண்ணுகைக்கு வேண்டுவது ஸம்ஸாரத்தினுடைய ஹேயதை நெஞ்சிலே படுகையும், அத்தலையில் வைலக்ஷண்யத்தை யநுஸந்திக்கையும் ப்ரபத்தி பண்ணுகைக்கு மேற்படவில்லையிறே; இவ்வளவிலும் பலிக்கக் காணாமையாலே, “வைப்பனாக வைத்த ப்ரஹ்மாஸ்த்ரம் வாய் மடிந்தது கிடீர்!” என்று கூப்பிடுகிறார். – “இனித்தான் க்ஷிபாமியாதல், ததாமியாதல் இரண்டேயிறே; அதில் க்ஷிபாமி என்னுமளவிலேயாகாதே நாம்” என்றிருந்தார். அதுவென்? இவர்க்கு “ததாமி” என்ற புத்தியோகம் பண்ணிக் கொடுத்தானேயென்னில்; “அதுவும் நோவுபடுகைக்கு உடலாகத் தந்தான்” என்றிருக்கிறார். தம்முடைய சக்தி கொண்டு பெறவிருந்தாரல்லர்; அவனுக்கு அசக்தியுண்டா யிழக்கிறாரல்லர். பேற்றுக்கு வேண்டுவது முன்பே செய்து நின்றார்; ஆனபின்பு, இவர்க்கு இப்போது இழக்க வேண்டுவதில்லையிறே. ஆனால் பலியாதொழிவானென்? என்னில்; “இவர் குறையாலே வைக்கிலிறே பலித்ததில்லையாவது; நமக்காகவிருக்கிற பின்பு இவர் இங்கேயிருந்தால் நல்லது” என்றிருந்தான். அவனும் இவரைக் கொண்டு ஒரு கார்யங் கொள்ளவிறேயெண்ணி யிருக்கிறது. அதுவுமொழிய, இவருடைய சரம தேஹமாகையாலே, இவர் ப்ரபத்தி பண்ணினவிடத்திலும், இவர் திருமேனியில் தனக்குண்டான ப்ராவண்யத்தாலே கார்யஞ் செய்திலன். இவர் திருமேனியில் ப்ராவண்யமிறே ‘மங்கவொட்டு’ என்று அவனைக் காற்கட்டிற்றும். மெய்யான ப்ரேமமுண்டானால் இங்ஙனல்லதிராதே. இது ப்ரக்ருதியாயிற்றே அவனுக்கு. அவன் தம்மைக் கொண்டு கொள்ளவிருக்கிற கார்யந்தன்னை இதில் பொருந்துவாரை யிட்டுக் கொண்டாலாகாதோ என்றாயிற்று இவர் நினைத்திருக்கிறது. “பண்ணிக் கொடுத்த ஜ்ஞாந லாபம் இவர்க்கு, தரிக்கைக்கு உடல்” என்றிருந்தான் அவன்: அதுதானே த்வரைக்கு உடலாயிற்று இவர்க்கு, “க்ரமத்திலே காரியஞ் செய்கிறோம்” என்றிருந்தானவன்; அது தன்னையே கொண்டு, தம்மைக் கைவிட நினைத்தான் என்றிருக்கிறார் இவர். நித்யவிபூதியையும் திவ்யமங்கள விக்ரஹத்தையும் ஸாக்ஷாத்கரித்து “அங்கே போய் அப்படியே அநுபவிக்க வேணும்” என்னும் பதற்றத்தையுடைய இவர்க்கு, “ஸம்ஸாரம் ததீயமாயிருப்பதும் ஓராகாரமுண்டு” என்னும் ஜ்ஞாந மாத்ரத்தாலே தரித்திருக்கப் போகாதே. “யானுநீதானாய்த் தெளிதொறும் நன்றுமஞ்சுவன் நரகம் நானடைதல்” என்றிறே இவர் இருப்பது. இப்படியிருக்கிற தம்மையும், அவனுக்கு ரக்ஷ்ய வர்க்கம். குறைவற்றிருக்கிறபடியையும், ரக்ஷகத்வம் ஸ்வரூபமாயிருக்கிறபடியையும், ரக்ஷிக்கைக்கு உடலான ப்ராப்தியிருக்கிறபடியையும், தமக்கு இவற்றில் அந்வயமற்றிருக்கிறபடியையும், ஸத்த்வாதி குணங்கள், அதுக்கடியான தர்ம தேஹேந்த்ரியாதிகள், இவற்றுக்கடியான மூலப்ரக்ருதி மஹான் அஹங்காரம், அதின் கார்யமான விஷயங்கள், அவித்யா கர்ம வாஸநாருசிகள் இவையெல்லாம் தததீநமாயிருக்கிறபடியையும் அநுஸந்தித்து, “விஷயங்களும் இந்த்ரியங்களும் நடையாடுகிற ஸம்ஸாரத்தே வைத்தபோதே இவற்றுக்கு நம்மை இரையாக்கி பொகட நினைத்தானித்தனை. ‘க்ஷிபாமி’ என்கிற கோடியிலே புக்கோம். இனித்தான் இவன் பரிகரங்கள் கண்டதும் நம்மையகற்றுகைக்கு உறுப்பாக. அதில், நித்யவிபூதியில் ஓலக்கமிருக்கிறது நாம் படுகிற நலிவு கண்டு அங்குள்ளாருடனே கூடச் சிரித்திருக்கைக்கு; லீலாவிபூதி கண்டது, நமக்குச் சிறைக்கூடமாக. ‘மயர்வற மதிநலமருளிற்’றும், அல்லாதாரைப் போலே ஸுகமேயிராதே துடித்து நோவு படுகைக்காக” என்று அறுதியிட்டு, அவன் திருவடிகளிலே தலையை மடுத்து, கேட்டாரடங்கலும் நீராம்படி கூப்பிடுகிறார். – “மின்னிடை மடவாரி”ல் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய், ப்ரணயரோஷம் தலையெடுத்துச் சொல்லிற்றெல்லாம் பிறர் வாயாலே சொன்னாற் போலேயிருக்கை யாலே, ஆழ்வாரான தன்மையிலே நின்று இன்னாதாம்படியான தசை விளைந்தது இவர்க்கு. இவரெல்லாவளவிலும் ஸ்ரீஜநகராஜன் திருமகளோ டொப்பாரொருவராயிற்று; அதாகிறது, அத்தலையில் குறையிடுவாரொருத்தரன்றிக்கே, “இவற்றுக்கெல்லாம் அடி நம்முடைய பாபம்” என்றிருப்பாரொருத்தரிறே. – இங்ஙனேயிருக்கக் கடவ இவர் அவன் தலையிலே குறையையேறிட்டுக் கூப்பிடுகிறாரிறே. இவர் தாம் தம்மாலே வந்தத்தை அவன் தலையிலே யேறிடுவானென்? என்னில்; ப்ராப்தியை யுணர்ந்தால், இத்தலையாலே வந்தத்தையும் அவன் பக்கலிலே ஏறிடலாயிருக்குமிறே. ப்ரஜை கிணற்றிலே விழுந்தால், “மாதவானவள் தள்ளினாள்” என்னக் கடவதாயிருக்கும். அதுக்கடி “தாயானவள் கண்ணிலே வெண்ணெயிட்டுப் பார்த்திருந்தாளாகில் இப்ப்ரஜை விழுமோ? இவள் நோக்காமையிறே அந்தரப்பட்டது” என்று கொண்டு அவள் தலையிலே குறை சொல்லக் கடவதாயிருக்கும். உதங்கன் க்ருஷ்ணன் பக்கலிலே வந்து, “உனக்கு இரண்டு திறத்தாரோடும் ஸம்பந்தமொத்திருக்கச் செய்தே, பாண்டவர்களை அழியச் செய்யாதே துர்யோதநாதிகளை அழியச் செய்தாய். இப்படி சார்வு செய்யப்போமோ?” என்றாற்போலேயிருக்க அவன் சொல்ல, க்ருஷ்ணனும் அவர்கள் குறைகளையெல்லாஞ் சொல்லி, “அவர்களுக்கு தர்ம ருசியில்லை காண்” என்ன; “நீ பின்னை அவர்களுக்கு தர்ம ருசியையுண்டாக்கிக் கொடாதொழிவானென்?” என்றானிறே. “பல நீ காட்டிப் படுப்பாயோ”, “கிறிசெய்தென்னைப் புறந்திட்டின்னங் கெடுப்பாயோ” என்று சொல்லுகிறபடியே அவற்றின் ஸந்நிதியும் அஸஹ்யமாம்படியாய், இனித்தாம் அறியாதிருக்கச் செய்தேயும் பகவத் விஷயத்தில் ப்ரவணமான “முடியானே”யிற் கரணங்களையுடைய இவர்க்கு இந்த்ரிய வச்யதை யுண்டென்னுமிடம் கீழோடு விருத்தமன்றோ? என்னில்; அசல் அகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால் தந்தாம் அகம் பரிஹரியாதிருப்பாரில்லையிறே; புற்றினருகே பழுதை கிடந்தாலும் “ஸர்ப்பம்” என்று புத்தி பண்ணி ப்ரமிக்கக் கடவதாயிருக்குமிறே. அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடே யிருக்கிறபடியைக் கண்டார்; நாட்டாரடைய இந்த்ரிய வச்யராய்க் கிடந்து நோவுபடுகிறபடியையுங் கண்டார். “இது நம்மளவும் வரிற் செய்வதென்?” என்றஞ்சிக் கூப்பிடுகிறார். (சாகாம்ருகா:) பூசலிலே புக்கு அங்குண்டான வாஸநை யின்றிக்கே யிருக்கை. பணையோடு பணை தத்தித் திரியுமவையிறே. (ராவணஸாயகார்த்தா:) திக்பாலர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையிலம்புகள். (ஜக்முச்சரண்யம் சரணம் ஸ்மராமம்) தங்களுடைய ஆபத்தையறிந்து பரிஹரிக்கவல்லவனையும் பார்த்துப் பற்றினார்கள். (ராக்ஷஸைர் வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ: | சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம்) முதலிகளடங்களும் ராக்ஷஸர் வாயிலே கிடந்து பெருமாளை சரணம் புக்காற்போலே, இவரும் “மனமாளுமோரைவர் வன்குறும்பரா”ன விந்த்ரியங்களுக்கு பயப்பட்டுக் கூப்பிடுகிறார். (ப்ரியம் ஜநம பச்யந்தீம் பச்யந்தீம் ராக்ஷஸீகணம் ஸ்வகணேந ம்ருகீம்ஹீநாம்ச்வகணைராவ்ருதாமிவ) என்று ஸ்ரீஜநகராஜன் திருமகள் பட்டது படுகிறார். பிள்ளை திருநறையூரரையர் இப்பாட்டுக்களில் பூர்வார்த்தமடைய “புலியின் வாயிலே அகப்பட்ட ப்ரஜை தாய் முகத்திலே விழித்துக் கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாபோலேயாயிருக்கிறது” என்று பணிப்பர். “தாவதார்த்தி:” இத்யாதி ச்லோகத்திற்படியே சரணம்புக்கால் தம்மை இன்னாதாக ப்ராப்தியில்லையே; அவனை இன்னாதாமித்தனையிறே. திருமலையிலே புகுந்து கிட்டி நின்றதுவும் இவர்க்குப் பேற்றுக்கு உடலாகை தவிர்ந்து கூப்பிடுகைக்கு உடலாயிற்றித்தனையிறே.

– கடந்த திருவாய்மொழியுடன் இந்தத் திருவாய்மொழிக்கு உள்ள ஸம்பந்தத்தை, “அமர்ந்து” என்று தொடங்கும் மூன்று வாக்கியங்களில் கூறுகிறார். “அமர்ந்து புகுந்தேன்” என்று தம்மால் முடிந்த அளவில் புகுவதற்கு முயன்றார். “தம்மால் முடிந்த அளவில்” என்றால், பெரியபிராட்டியைச் சிபாரிசு செய்பவளாகக் கொண்டு, வேறு கதி இல்லாத நிலையில் அவன் திருவடிகளில் புகுந்து, பற்றும்போது உபாய புத்தியைக் கொள்ளாமல் இருத்தல் ஆகும். இதன் பின்னரும், அவன் தனது விரோதியைப் போக்கி, பேற்றினை அளித்தலை இவர் காணவில்லை. ஆகவே, “இவன் இனி நம்மைக் கைவிட முயல்கிறானோ, அது ஆகாது” என்று விழுந்து கிடந்து அழைக்கிறார். ஒரு உபாயத்தைஜ் கைகொண்டவன், அந்த உபாயம் பலன் தரும் காலம் முடியக் காத்து நிற்பது போன்று அல்லாமல், இவர் தான் செய்த சரணாகதியானது பலன் தொடங்குவது முடியக் காத்து நிற்காமல், அவனை என் அழைக்கவேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; காலதாமதம் ஏற்படுவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லாத ஒரு உபாயத்தைச் செய்தவன், அது பலன் அளிப்பது முடிய அழைத்தபடியே இருப்பான் அல்லவோ? – இதுவரை சுருக்கமாக கூறியவற்றை அடுத்து விரிவாக உரைக்கிறார். இவர் செய்தது என்ன? பெரியபிராட்டியாரின் முன்னிலையில், வேறு கைம்முதல் இல்லாத தனது நிலையை உணர்த்தி, திருவேங்கடமுடையானுடைய திருவடிகளில் சரணம் புகுந்ததே ஆகிறது; இது மேலே வ்யாக்யானத்தில் உள்ள “அமர்ந்து புகுந்தேன் என்று தம்மால் ஆனவளவும்” என்பதன் விளக்கம் ஆகிறது. அடுத்து, “அநந்தரத்தில் அவனைப் புகுர நிற்கக் கண்டிலர்” என்பதை விளக்குகிறார். அத்தகைய செயலானது, கீதை (7-14) - மாமேவயே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே - என்னை மட்டுமே யார் சரணம் புகுகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள் – என்று கூறுவதற்கு ஏற்ப, விரைவாகப் பலன் அளிப்பதைக் காண இயலவில்லை. அடுத்து, “இனிக் கைவிடப்பார்த்தானாகாதே” என்பதை விளக்குகிறார்; இனி “இவ்விதம் இவன் நம்மைக் கைவிட முயன்றால் ஆகாது” என்று தவிக்கிறார். அடுத்து இவர் தவிக்கும் விதத்தை வ்யாக்யானத்தில், “ஸம்ஸார” என்று தொடங்கி, “கூப்பிடுகிறார்” என்பது முடிய அருளிச்செய்கிறார். அரும்பத உரையில், “வ்யாக்யானத்தில் உள்ள ‘ஈச்வரன் க்ருபை பண்ணுகைக்கு’ என்பது தொடக்கமாக உள்ள வாக்கியத்தை முதலில் படிக்கவேண்டும். அதன் பின்னர், ‘ஸம்ஸார ஸ்வபாவத்தை’ என்று தொடங்கும் வாக்கியத்தைப் படிக்கவேண்டும். அதன் பின்னர், ‘இவ்வளவிலும் பலிக்க’ என்று தொடங்கும் வாக்கியத்தைப் படிக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இவ்விதமே இங்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. ஸர்வேச்வரன் க்ருபை செய்வதற்கு வேண்டியவை எவையென்றால், “ஸம்ஸாரத்தின் தாழ்ச்சியானது நமது நெஞ்சத்தில் அறியப்படுதலும், ஸர்வேச்வரனுடைய மேன்மையை எப்போதும் எண்ணியபடி இருத்தலும், சரணாகதி செய்தலும்” போன்றவை ஆகும்; இவற்றைக் காட்டிலும் உயர்ந்த சிந்தனை வேறு இல்லை. இப்படியாக உள்ள ஸம்ஸாரத்தின் இயல்பை எண்ணியவராக, வேறு புகல் இடம் இல்லாதவராக, இவனுடைய திருவடிகளில் சரணம் புகுகிறார். இவ்விதம் சரணம் புகுந்தபோதிலும், அவன் தான் விரும்பிய செயலைச் செய்யாமல் உள்ளதைக் கண்டார்; சரணம் என்று புகுந்தவர்கள் மீது வேல்காரரை ஏவித் துன்புறுத்தும் கருணை அற்றவர்கள் போன்று அவனை எண்ணி அச்சம் கொண்டார். இதுவரை தனது சரணாகதியானது பலன் அளிக்கத் தொடங்காத காரணத்தால், “வைப்பனாக வைத்த ப்ரஹ்மாஸ்த்ரம் வாய் மடிந்தது கிடீர்” என்று அவனை அழைக்கிறார். – சரணாகதியானது விரைவாகப் பலன் அளிக்கவில்லை என்றாலும் தகுந்த முறையில் பலன் அளிக்கும் என்று நிற்காமல், “பலன் தராது” என்று தீர்மானித்து அவனை அழைப்பதன் காரணத்தைக் கூறுகிறார்; அவனைப் பொறுத்தவரை கீதை (16-19) - க்ஷிபாமி – தள்ளுகிறேன் – என்றும், கீதை (10-10) – ததாமி - அளிக்கிறேன் - என்றும் ஆகிய இரண்டுமே உள்ளன. உள்ளன. இவற்றில் “‘தள்ளுகிறேன்’ என்ற நிலையில் நாம் உள்ளோம்” என்று இருந்தார்; இவ்விதம் “அவனால் தள்ளப்படும் நிலைக்கு இலக்காக உள்ளோம்” என்று இவர் ஏன் எண்ணவேண்டும்? இவருக்கு “ததாமி - அளிக்கிறேன்” என்பதான புத்தியோகத்தை ஏற்படுத்தித் தந்தான் அல்லவோ? இந்த ஐயங்களுக்கு விடை தருகிறார். “அந்த நிலையும், நோவுபடுதல் என்பதற்காகவே தந்தான்” என்று உள்ளார். அடுத்து, வ்யாக்யானத்தின் தொடக்கத்தில் உள்ள “விளம்ப ஹேதுவில்லாத - காலதாமதம் ஏற்படுவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லாத” என்பதை விளக்குகிறார்; தனது சக்தியைக் கொண்டு ப்ரபத்தியின் பலனை விரைவாகப் பெறவேண்டும் என்று இவர் எண்ணவில்லை; அவனுக்குச் சக்தி இல்லை என்பதால் இழக்கிறோம் என்று எண்ணவில்லை; பேற்றுக்கு வேண்டியவற்றை முன்பே செய்து நின்றார்; இப்படி உள்ளபோது இவருக்கு இப்போது இவ்விதம் இழக்கவேண்டிய அவசியம் இல்லை அல்லவோ? பின்னர் இவருடைய விருப்பத்தை அவன் முடிக்காமல் வைப்பதற்கு என்ன காரணம்? ஏன் சரணாகதி பலிக்கவில்லை? இதற்கு வ்யாக்யானத்தில் உள்ள அடுத்த இரண்டு வரிகளில் விடை தருகிறார்; “இவரிடம் ஏதோ குறை உள்ளது என்று நாம் இவரை இங்கு தொடர்ந்து வைத்தால் அல்லவோ இவருடைய சரணாகதி பலிக்கவில்லை என்றாகும். இவர் நமக்காகவே இருக்கிறார் என்ற பின்னர் இவர் இங்கு இருத்தலே நல்லது”, என்று அவன் இருந்தான். அவனும் இவரைக் கொண்டு இந்த உலகைத் திருத்துதல் என்ற கார்யம் செய்து கொள்ளவே முயல்கிறான். அது மட்டும் அல்ல; இவருக்கு இப்போது உள்ள திருமேனியே இவருக்கு இறுதியானது என்பதால், இவர் சரணாகதி செய்தபோதிலுல், இவருடைய திருமேனியில் தனக்கு உள்ள காதல் காரணமாக இவருடைய சரணாகதிக்கான பலனை அளிக்காமல் உள்ளான். இவருடைய திருமேனியில் இவன் கொள்ளும் ஈடுபாடு எதனால் விளக்குகிறது என்றால், அத்தகைய ஈடுபாடு அல்லவோ திருவாய்மொழி (10-7-10) - மங்கவொட்டு – என்று அவனை நிறுத்தியது! ஆனால் மற்ற எந்த இடத்திலும் இவ்விதம் ஈடுபாட்டைக் காண இயலவில்லை என்பதற்கு விடை தருகிறார்; மெய்யான காதல் ஏற்பட்டால் இவ்விதம் அல்லாமல், வேறுவிதமாக இருப்பதில்லை. மெய்யான காதல் கொண்டவர்கள் திருமேனியில் அவனுக்கும் காதல் ஏற்படுவது இயல்பே என்பதைக் கூறுகிறார்; இவ்விதம் அவன் காதல் கொள்வது இயல்பும் முதன்மையும் என்றாகிறது. – ஆனால் இவரோ “மயர்வற மதிநலம் பெற்றவர்” என்று உள்ளபோது, அவன் இங்கு தம்மை நிறுத்தி வைத்திருப்பதன் எண்ணம் அறியாமல், அவசரப்படுவது ஏன் என்பதைக் கூறுகிறார். அவன் தம்மைக் கொண்டு செய்ய நினைக்கும் செயல்களாகிய உலகத்தைத் திருத்துதல் போன்றவற்றை, திருமழிசையாழ்வார் முதலானவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் அல்லவோ என்று இவர் எண்ணுவதால் இவ்விதம் விரைவு கொள்கிறார். இந்த இரண்டு காரணங்களால் இவரை அவன் இங்கேயே வைத்துள்ளான் என்றாலும், துன்பம் அடைத்தபடி உள்ள இவரை உயிர் தரிக்க வைக்கவேண்டாமோ என்பதற்கு விடை தருகிறார்; “தான் இவருக்குச் செய்து தந்த ஞானலாபம் என்பது இவர் தரித்து நிற்பதற்குக் காரணமாக இருக்கும்” என்று அவன் இருந்தான்; ஞானலாபம் என்றால், எந்தப் பொருளைப் பற்றினாலும், அவன் தன்னையே பற்றியதாக அவன் ஏற்படுத்தும் நினைவுகள் ஆகும்; ஆனால் அத்தகைய ஞானலாபம் என்பதே இவருடைய விரைவிற்குக் காரணமாக அமைத்துவிட்டது. அவன் தனது திருவுள்ளத்தில் “தகுந்த காலத்தில், தகுந்த முறையில் இவரை ஏற்றுக் கொண்டு, இவருடைய விருப்பத்தை நிறைவு செய்யலாம்” என்று கருதினான்; ஆனால் இவரோ அவனுடைய அத்தகைய எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், “அவன் நம்மைக் கைவிட எண்ணுகிறான்” என்று உள்ளார். சரி, இவருக்கு அவன் காண்பித்துக் கொடுத்த, “அனைத்தும் அவனுக்கு உரிய பொருள்கள்” என்ற சிந்தனையுடன் இங்கு தரித்து நிற்கலாம் அல்லவோ என்பதற்கு விடை தருகிறார்; நித்யவிபூதி மற்றும் திவ்யமங்கள திருமேனி ஆகியவற்றை நேரடியாகக் கண்ட பின்னர், “அங்கேயே சென்று அனுபவித்தபடி இருக்கவேண்டும்” என்ற பதற்றுடன் இவர் உள்ளார்; இந்த நிலையில் உள்ள இவருக்கு, “ஸம்ஸாரமானது அவனுக்கு உரிய ஒரு இடம்” என்றுள்ள ஞானத்தால் மட்டும் தரிந்து நிற்க இயலாது. ஆனால் அத்தகைய ஞானத்தால் மட்டும் ஏன் தரித்து நிற்க இயலாது என்பதற்கு ப்ரமாணம் காண்பிக்கிறார்; திருவாய்மொழி (8-1-9) - யானுநீதானாய்த் தெளிதொறும் நன்றுமஞ்சுவன் நரகம் நானடைதல் - என்று அல்லவோ இவர் உள்ளார்! அதாவது, ஸம்ஸாரம் என்பது அடிமைத்தனத்திற்கு விரோதியாக உள்ளதால் அஞ்சுவதாகக் கூறுகிறார். – இவ்விதம் நடுவில் எழுந்த பலவிதமான ஐயங்களுக்குப் பதில் கூறிய பின்னர், இந்தத் திருவாய்மொழியில் உள்ள பத்துப் பாசுரங்களில் அடங்கிய சிந்தனையைக் கூறுகிறார். இதனை “இப்படியிருக்கிற” என்று தொடங்கி, “கிடந்து கூப்பிடுகிறார்” என்பது முடிய அருளிச்செய்கிறார். இப்படியாக அவனைப் பெறவேண்டும் என்ற துடிப்புடன் சரணாகதி செய்த தன்னையும்; அவனால் பாதுகாக்கப்பட வேண்டிய பொருள்கள் அவனுக்கு ஸ்வரூபமாகவே உள்ள விதத்தையும்; காப்பாற்றுவதற்கு ஏற்ற ஸம்பந்தம் உள்ள விதத்தையும்; தனக்கு இதில் தொடர்பு இல்லாதபடி உள்ள விதத்தையும் ஸத்வம் போன்ற குணங்கள், அவற்றுக்கு அடிப்படையாக உள்ள தர்ம சரீர இந்திரியங்கள், இவற்றுக்கு அடிப்படையாக உள்ள மூல ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், இவற்றின் கார்யமக உள்ள உலகவிஷயங்கள், அவித்யை கர்மவாஸனை மற்றும் ருசிகள் போன்ற அனைத்தும் அவனுக்கு வசப்பட்டு நிற்கும் வித்தையும் எண்ணிப் பார்த்தார்; தனது திருவுள்ளத்தில், “உலக விஷயங்களும், இந்தியங்களும் உலவியபடி உள்ள இந்த ஸம்ஸாரத்தில் நம்மை இவன் வைத்துள்ளான். எனவே இவற்றுக்கு இரையாக நம்மை இட நினைத்தான் போலும். என்ன ஆனாலும் சரி, நாம் கீதையில் (16-19) - க்ஷிபாமி – தள்ளுகிறேன் - என்று கூறப்பட்ட கூட்டத்தில் சேரக்கூடாது. இவன் தனது பரிகரங்களை இவ்விதம் வைத்துள்ளதும் நம்மை இவனிடமிருந்து அகற்றவே ஆகும். இவை மட்டும் அல்லாமல், நாம் அடையும் ஸம்ஸார துன்பங்கள் கண்டு அங்குள்ளவர்களுடன் சேர்ந்து சிரித்தபடி இருப்பதற்கு ஏற்ப, இவனுக்கு பரமபதத்தில் உள்ள சுவை உள்ளது. லீலாவிபூதியானது நமக்குச் சிறைசாலையாக உள்ளது. இவன் நமக்கு “மயர்வற மதிநலம் அருளியது” என்பது, இவ்விதம் இவன் விஷயத்தில் ஞானம் அற்றவர்கள் சுகமாக உள்ளது போன்று அல்லாமல், துடித்தபடி வைப்பதற்காக என்றே தோன்றுகிறது” என்று தீர்மானித்தார். ஆகவே அவன் திருவடிகளில் தனது தலையை வைத்து, புலம்பலைக் கேட்டவர்கள் அடங்கும்படியாக, கிடந்து அழைக்கிறார். – முன்புள்ள திருவாய்மொழியைக் காட்டிலும் இந்தத் திருவாய்மொழியில் துன்பம் அதிகமாக இருக்கும் என்பதை “மின்னிடை” என்று தொடங்கி அருளிச்செய்கிறார். “மின்னிடை” என்ற திருவாய்மொழியில் இவர் ஒரு பிராட்டியின் நிலையை அடைந்தவராக, ப்ரணய ரோஷம் மிகவும் அதிகமாக, அங்கு கூறிய அனைத்தும், இவருடைய சொற்களாக இல்லாமல், மற்றவர்கள் மூலம் கூறப்பட்டது போன்று இருந்ததால், ஆழ்வாரான தன்மையில் நின்று அவனை வெறுக்கும்படி உள்ள நிலை இவருக்கு ஏற்பட்டது. “வெறுத்தபடி உள்ள நிலை ஏற்பட்டது” என்றால், இவருடைய இயல்பான தன்மை என்ன என்பதற்கு, இவருடைய உண்மையான நிலை மற்றும் இவ்விதம் உள்ள இவர் அவனை வெறுப்பது என்பது ஒரு சிறப்பான நிலை ஆகியவற்றை அடுத்து அருளிச்செய்கிறார்; இவர் தனது அனைத்து நிலைகளிலும் ஸ்ரீஜநகராஜனுடைய திருமகளாகிய ஸீதையுடன் ஒப்புடைய ஒருவர் என்றானார்; எப்படி? அவன் விஷயத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காண்பிப்பவர் போன்று அல்லாமல், “இந்தத் தவிப்பு மற்றும் வெறுப்பு நிலைக்குக் காரணம் தனது பாபமே ஆகும்”, என்று இவர் ஒருவரே உள்ளார். – இவ்விதம் இருந்தபோதிலும், இவ்விதமாக தொடர்ந்து இருக்கக்கடவ இவர், அவன் மீது குறையை ஏறிட்டுக்கொண்டு அவனை அழைக்கிரார். இவர் அவனை வெறுப்பதற்கு இவருடைய நிலையின் ஒரு தன்மை என்பது அல்லாமல், ஸம்பந்தம் காரணமாகவும் வெறுக்கலாம் என்பதை ஒரு சந்தேகம் மற்றும் அதற்கான சமாதானம் மூலம் அருளிச்செய்கிறார். இவர் தன் மூலமாக ஏற்பட்ட இந்த நிலையை, அவன் மீது ஏன் ஏறிட்டுக் கூறினார்? இதற்கு விடை தருகிறார். ஸம்பந்தத்தை உணர்ந்தால், இவர் பக்கம் வந்ததையும் அவன் மீது ஏறிட்டுக் கூறலாம்படியே இருக்கும். ஒரு குழந்தை கிணற்றில் விழுந்தால், “தாய் தள்ளிவிட்டாள்” என்றே கூறுவார்கள்; அதாவது, தாயானவள் தனது கண்களில் வெண்ணெயை வைத்துக்கொண்டு கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால், இந்தக் குழந்தை இவ்விதம் விழுமோ? ஆகவே அவள் சரிவர நோக்காமல் இருந்ததால் அல்லவோ விழுந்தது என்று அவள் மீது குற்றத்தை ஏறிட்டுக் கூறுவர். இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறார்; உதங்கன் என்னும் ஒரு முனிவர் க்ருஷ்ணனிடம் வந்து, “உனக்கு இரண்டு குலத்துடன் உள்ள ஸம்பந்தம் ஒன்றே ஆகும். இப்படி உள்ளபோது பாண்டவர்களை அழிக்காமல், துரியோதனன் போன்றவர்களை மட்டும் நீ அழித்துள்ளாய். இவ்விதம் ஓரவஞ்சனை செய்யலாமோ?”, என்று சில சொற்கள் கூறினார். அவரிடம் க்ருஷ்ணன் கௌரவர்களிடம் இருந்து அனைத்து குறைகளையும் கூறி, “அவர்களுக்குத் தர்மத்தின் மீது ருசி இல்லை என்பதால் இவ்விதம் ஆயிற்று”, என்றான். இதற்கு உதங்க முனிவர், “அவ்விதமானால் அவர்களுக்குத் தர்மத்தின் மீது ருசியை உண்டாக்காமல் நீ விட்டது ஏன்?”, என்றார். – இப்படியாக இந்த்ரியங்களுக்கு அச்சம் கொண்டு இவ்விதமான இவர் அழைப்பது அஸம்பாவிதமோ என்று சந்தேகம் கொள்கிறார். திருவாய்மொழி (6-9-9) - பல நீ காட்டிப் படுப்பாயோ – என்றும், திருவாய்மொழி (6-9-8) - கிறிசெய்தென்னைப் புறந்திட்டின்னங் கெடுப்பாயோ - என்றும் கூறுவதற்கு ஏற்ப இப்படிப்பட்ட இந்த்ரிய விஷயங்களுடைய அருகாமை என்பது பொறுத்துக் கொள்ள இயலாதபடி, இனி, தான் அறிந்துள்ளபோதிலும் பகவத் விஷயத்தில் ஈடுபாடு கொண்டு கூறிய “முடியானே” என்ற திருவாய்மொழியில் கூறப்பட்ட, பல்வேறு உடல் உறுப்புகள் கொண்ட இவருக்கு, அத்தகைய இந்திரியங்களுக்கு வசப்படுதல் உண்டு என்று கூறினால், இந்தக் கருத்தானது இதுவரை கூறப்பட்டவைகளுக்கு முரணாகாதோ என்பதற்கு விடை தருகிறார்; பக்கத்து வீடு தீப்பற்றி எரிந்தால், தங்கள் தங்கள் அருகாமை வீடுகளைப் பாதுகாத்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் இல்லை அல்லவோ? ஒரு பாம்புப்புற்றில் பழுதை கிடந்தாலும், அதனைப் பாம்பு என்றே மயங்குபவர்கள் அல்லவோ? சரி, இந்த உவமைகளால் கூறப்படும் உபமேயமான இவர் விஷயத்தில், மயக்கத்தின் காரணம் என்ன என்பதைக் கூறுகிறார்; மற்றவர்களுக்கும் தனக்கும் சரீரம் என்பது பொதுவாகவே உள்ளதைக் கண்டார்; இந்த உலகில் உள்ள அனைவரும் இந்த்ரியங்களுக்கு அகப்பட்டு நிற்பதையும், அதனால் துன்பம் அடைவதையும் கண்டார்; “இந்த நிலை நமக்கும் வந்தால் என்ன செய்வது?”, என்று அச்சம் கொண்டு கூப்பிடுகிறார். – (சாகாம்ருகா:) - இவ்விதம் துன்பத்தில் அழைப்பதற்கு மூன்று உதாரணங்கள் காண்பிக்கிறார். முதலில் யுத்தகாண்டம் (59-45) - தே வத்யமாநா: பதித அக்ர்ய வீரா | நாநத்யமாநா பய சல்ய வித்தா: | சாகா ம்ருகா ராவண ஸாயக ஆர்த்தா | ஜக்மு: சரண்யம் சரணம் ஸ்ம ராமம் - இராவணனுடைய அம்புகளால் தக்கப்பட்டு, மிகுந்த காயக்களும் அச்சமும் அடைந்த வானரங்கள், தரையில் விழுந்தவர்களாக, அலறியபடி, இராவணனுடைய பாணங்களால் துன்பம் அடைந்தவர்களாக, அனைவருக்கும் தஞ்சம் அளிக்கவல்ல இராமனையே புகலிடமாகப் புகுந்தனர் - என்பதை விளக்குகிறார். இங்கு “வாநரா” என்று கூறாமல் “சாகா ம்ருகா” என்று ஏன் கூறினார் என்றால், இங்கு உண்டான பெரும் யுத்தத்தில், அந்த வானரர்களுக்கு எப்போதும் உள்ள பழக்கம் இல்லாமல் போயிற்று, கிளையிலிருந்து கிளை தாவும் இனம் அல்லவோ? எனவே இவ்விதம் கூறப்பட்டது. (ராவணஸாயகார்த்தா:) - திக்பாலகர்களையும் கூட அச்சுறுத்தியவன் கரங்களில் அம்புகள். (ஜக்முச்சரண்யம் சரணம் ஸ்மராமம்) - தங்களுடைய ஆபத்தை அறிந்து தங்களைக் காப்பாற்றவல்லவனை அண்டினார்கள். அடுத்து இரண்டாவது உதாரணம் கூறுகிறார். யுத்தகாண்டம் (94-16) - ராக்ஷஸைர் வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ: | சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் - ராக்ஷஸர்களால் துன்புறுத்தப்பட்ட வானரர்களுடைய கூட்டமானது, தங்களைப் பாதுகாக்கக் கூடியவனும் தசரதருடைய புத்திரனும் ஆகிய இராமனைச் சரணம் எனப் புகுந்து - என்பது காண்க. இப்படி அனைத்து வானரங்களும் ராக்ஷஸர்களிடம் அகப்பட்டு, இராமனைச் சரணம் புகுந்தது போன்று இவரும் பெரியதிருவந்தாதி (51) – மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பர் - என்பதான இந்த்ரியங்களிடம் அகப்பட்டு அச்சம் கொண்டு அழைக்கிறார். அடுத்து மூன்றாவது உதாரணம் கூறுகிறார்; ஸுந்தரகாண்டம் (15-24) - ப்ரியம் ஜநம பச்யந்தீம் பச்யந்தீம் ராக்ஷஸீகணம் ஸ்வகணேந ம்ருகீம்ஹீநாம்ச்வகணைராவ்ருதாமிவ – தனக்கு ப்ரியமான ஜனங்களைப் பார்க்க இயலாமல் உள்ளவளும், ராக்ஷஸிகள் கூட்டத்தை மட்டும் காண்பதாக உள்ளவளும், தனது கூட்டத்தால் விடப்பட்டதாகவும் நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டதும் ஆகிய ஒரு பெண்மான் போன்று உள்ளவளும் - என்பதற்கு ஏற்ப ஸ்ரீஜநகராஜனுடைய புத்ரியாக ஸீதை அடைந்து துன்பங்களை இவர் அடைந்தபடி உள்ளார். – பிள்ளை திருநறையூர் அரையர் பார்வையில் இந்தத் திருப்பாசுரங்களில் முதல் இரண்டு அடிகள் குணங்களை எண்ணுவதாகக் கொள்ளவேண்டும்; மற்றவர்கள் பார்வையில், பின் இரண்டு அடிகள் அனைத்தும் வெறுப்புத் தன்மையை வெளிப்படுத்துவதாகக் கொள்க. பிள்ளை திருநறையூர் அரையர், “இந்தப் பாசுரங்களில் முதல் அடிகள் இரண்டும், புலியின் வாயில் அகப்பட்ட ஒரு குழந்தையானது தனது தாயின் முகத்தைப் பார்த்தபடி புலியின் வாயில் கிடந்து துன்பம் அடைவது போன்று உள்ளது”, என்பார். அவனிடம் இவர் வெறுப்பு கொள்வதற்கு மூன்றாவது ஒரு காரணத்தையும் கூறுகிறார். “தாவத் ஆர்த்தி:” என்ற ச்லோகத்திற்கு ஏற்ப ப்ரபத்தியானது பலிக்கவில்லை என்பதால் வெறுக்கிறார். வெறுப்பிற்கான முதல் இரண்டு காரணங்கள் எவை என்றால், “மின்னிடை மடவார்” என்பதில் கூறப்பட்ட அளவு கடந்த ஆர்த்தியும், “ப்ராப்தியை உணர்த்தால்” என்று இங்கு கூறப்பட்ட ஸம்பந்தமும் ஆகும். ஆனால் அடியார்களுக்காக அவன் திருமலைக்கு வந்து அருகாமையில் உள்ளபோது ஏன் வெறுக்க வேண்டும் என்பதற்கான விடை தருகிறார். திருமலையில் அவன் வந்து நின்ற நிலையும் கூட, இவருடைய பேற்றுக்குக் காரணமாக அமையாமல், இவர் துன்பத்தில் அழைப்பதற்கு அல்லவோ காரணமாக இருக்கிறது!