பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 9)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
அதிருங் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து பதறப்படாமே பழந் தாம்பால் ஆர்த்த உதரம் இருந்த ஆ காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே
ஆர்ப்பரிக்கும் கடல் போன்ற நிறத்தையும் அடங்காமையையும் உடைய க்ருஷ்ணனைப் பெற்ற தாயான யசோதை, இனிய முலைப்பாலூட்டி வஞ்சனை செய்து வைத்துக் கொண்டு, தன்னுடைய பிடியிலிருந்து தப்பாதாபடி பழகின கயிற்றினாலே அவனைக் கட்டினாள். இப்படி கட்டிய தழும்பை உடைய வயிற்றின் அழகினை வந்து காணுங்கள்! ஒளி மிக்க வளையல்களையுடைய பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருவுதரத்திலே பெருகுகிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருவுந்தியினழகை அநுபவித்தவநந்தரம், திருவுதரத்தினழகை அநுபவிக்கிறார்.
– திருவயிற்றில் உள்ள நாபியின் அழகை அனுபவித்த பின்னர், திருவயிற்றின் அழகை அனுபவிக்கிறார்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (அதிரும் கடலித்யாதி) கடல்நிறவண்ணனென்ன அமைந்திருக்கச் செய்தே, “அதிரும் கடல்” என்று விசேஷிக்கையாலே, இவனுடைய அடங்காமையும் தோற்றுகிறது. இப்பிள்ளையை ஆச்சியான வள், (மதுர முலையூட்டி) கட்ட நினைத்தவளாகையாலே இவன் அறிந்து ஓடாதபடியாக நினைத்து முலை கொடுத்தாளாதல்; கட்ட நினைத்தவளாகையாலே தான் கட்டவிழ்க்குமளவும் பிள்ளைக்கு தாரகமாக அவனறியாமல் முலை கொடுத்தாளாதல். வஞ்சித்து வைத்து, பழந்தாம்பாலே கட்டின திருவுதரத்தைக் காட்டுகிறாள். “பிள்ளைக்கு ரஸிக்க வேணும்” என்று தான் ரஸவத் பதார்த்தங்களை புஜிக்கையாலே இவள் முலைப்பாலும் மதுரமென்கிறது. பதரப்படாமை - தப்பாமை. “ஒளி வளை” என்று ப்ரகாசமான அநந்யார்ஹ சிந்ஹம். மாமுனிகள் வ்யாக்யானம் - (அதிரும் கடல்நிற வண்ணனை) கோஷிக்கிற கடலின் நிறம்போலே ச்ரமஹரமான நிறத்தையுடையவனை. “கடல்நிறவண்ணன்” என்னவமைந்திருக்கச் செய்தே, “அதிரும் கடல்” என்று விசேஷிக்கையாலே, இவனுடைய அடங்காமையும் தோற்றுகிறது. (ஆச்சி மதுரமுலையூட்டி வஞ்சித்து வைத்து) பெற்ற தாயானவள் மதுரமான முலைப்பாலையூட்டி, மேல், தான் இவனைக் கட்டத் தேடுகிறதறியாதபடி வஞ்சித்து வைத்து. (பதரவித்யாதி) தன் நினைவு தப்பாதபடி, கன்றுகளையும் பசுக்களையும் கட்டிப் பழகி ஒழிஞ்சான முட்டாய்க் கிடந்ததொரு தாம்பாலே கட்டின கயிற்றின் தழும்பு காணலாம்படி யிருக்கிற வயிற்றினழகிருக்கிறபடியைக் காணுங்கோள். (ஒளிவளையீர் வந்து காணீரே) ஒளியையுடைத்தான வளையையுடைய நீங்கள் வந்து காணுங்கோள்.
– (அதிரும் கடல் நிற வண்ணனை) - ஆர்ப்பரிக்கும் கடலின் நிறம் போன்று, காண்பவர்கள் களைப்பைப் போக்கவல்ல நிறத்தையுடையவனை. “கடல் நிற வண்ணன்” என்று சொன்னால் மட்டுமே போதுமானதாக உள்ளபோது, “அதிரும் கடல்” என்று ஏன் சிறப்பித்துக் கூறவேண்டும்? இங்கு நிறத்தை மட்டும் கூறவில்லை. யசோதை கயிற்றினால் கட்டுவதற்குக் காரணத்தையும் அருளிச்செய்கிறார். எவ்வாறு கடலானது ஓரிடத்தில் அடங்காமல் திரிந்து கொண்டு இருக்குமோ, அதே போலே க்ருஷ்ணனும் ஓரிடத்தில் நிற்காமலும் கைக்கு அடங்காமலும் அங்குமிங்குமாக திரிந்து கொண்டு இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தவே ஆகும். (ஆச்சி மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்து) - இப்படி குறும்பு செய்யும் பிள்ளையைக் கட்ட நினைத்து, தான் கயிற்றினைத் தேடினால் அதை அறிந்து தப்பி ஓடிவிடுவானோ என்று, பெற்ற தாயான யசோதை, வஞ்சனையால் தனது இனிமையான முலைப்பாலைக் காட்டித் தன்னோடு வைத்து, கட்ட நினைத்ததாலே கட்டினை அவிழ்க்கும் வரை இவனுக்குப் பசி எடுக்காதபடி அப்பாலை ஊட்டி, கன்றுகளையும் பசுக்களையும் கட்டிப் பழகி ஓய்ந்ததொரு பழமையான கயிற்றினைக் கொண்டு, அன்பினால் மயங்கி அவன் உண்டிருந்த நேரத்தில், அவன் அறியாதபடியும் தப்பிச்செல்லாதபடியும் கட்டினாள். “பிள்ளைக்கு ருசிக்க வேண்டும்” என்று தான் ருசியான உணவினை உட்கொண்டு வாழ்ந்ததாலே, இவளது முலைப்பால் இனிமையாக ஆனது. இப்படி கயிற்றால் ஆப்புண்ட தழும்பு காணலாம்படி இருக்கும் வயிற்றின் அழகினை வந்து காணுங்கள். க்ருஷ்ணனை அன்றி பிறகுக்கு நாங்கள் உரிமை இல்லை என்னும் சின்னங்களான ஒளிமயமான வளையல்களை உடைய பெண்களே, நீங்கள் வந்து காணுங்கள்.