திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 11)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் படிக் கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே
– “நம் வசப்பட்டு நிற்பவர்களே! நீங்கள் நம்முடைய திருவடிகளின் கீழே, வேறு உபாயங்கள் ஏதும் இன்றி, வேறு பலனை எதிர்பாராமல், சுகமாகப் புகுந்து நின்று, நம்மை எப்போதும் அனுபவித்தபடி வாழ்வீர்களாக", என்று உபாயமாகவும் உபேயமாகவும் தனது க்ருபையை அருளும் விதத்தில் எந்த ஒரு ஒப்புமையும் இல்லாத திருவேங்கடமுடையானைக் குறித்து அருளிச்செய்ததும்; களைப்பை நீக்கவல்ல நீர் நிலைகள் நிறைந்த ஆழ்வார்திருநகரிக்கு நீர்வாஹகராகிய நம்மாழ்வார், தனது கார்யங்கள் அனைத்தையும் முடிப்பதாக அருளிச்செய்த ஆயிரம் திருவாய்மொழிகளில், திருவேங்கடத் திருமலையைக் குறித்து உள்ளதும்; ஆகிய இந்தப் பத்தை நன்கு கற்றவர்களைப் பற்றியவர்கள், எல்லையற்ற மஹத்வம் நிறைந்த "உயர்ந்த ஆகாசம்" என்ற பதத்தில் கூறப்படும் பரமபதத்தில் வீற்றிருந்து, அவனை எப்போதும் அனுப்பித்தபடி இருப்பார்கள்.
நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றார், பரமபதத்திலே சென்று தாஸ்யத்திலே யபிஷிக்தராய் அடிமை செய்யப் பெறுவர்களென்கிறார்.
– இறுதியாக இந்தத் திருவாய்மொழியைக் கற்றவர்கள், பரமபதம் சென்று, கைங்கர்யத்தில் முடிசூடியவராக, அத்தகைய கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவார்கள் என்கிறார்.
(அடிக்கீழ் இத்யாதி) உங்கள் உத்தேச்யங் கண்டிகோளே, இத்தைப் பற்றி வாழ்ந்து க்ருதக்ருத்யராய்ப் போங்கோளென்று. (அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை) ஆச்ரித விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பில்லாத ஸர்வேச்வரனை. “மாசுச:” என்ற க்ருஷ்ணனும் ஒவ்வான் இவன்படிக்கு. (பழனக் குருகூர்ச் சடகோபன்) நல்ல நீர் நிலங்களையுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார். (முடிப்பான் சொன்ன) “பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிற ஸம்ஸார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே உத்ஸாஹித்தருளிச் செய்த ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தும் திருமலைக்குச் சொல்லிற்றின. “ரத்நஹாரீச பார்த்திவ:” என்கிறபடியே. (பிடித்தார் பிடித்தார்) பிடித்தவர்களைப் பிடித்தவர்கள்; பற்றினாரைப் பற்றினார். (வீற்றிருந்து) “ஸ ஸ்வராட் பவதி” என்கிறபடியே இருவர்க்கும் ஒக்குமாகாதே வீற்றிருக்கை. ஸ்வ வ்யதிரிக்தங்களையும் சேஷமாக வுடையனாகையால் வந்த ஆனந்தத்தையுடையனாயிருக்கும் இவன்; “ஏஷஹ்யேவாநந்தயாதி” என்கிறபடியே அவன் ஆநந்திப்பிக்க ஆநந்தியாயிருக்கும் இவன். (பெரிய வானுள் நிலாவுவரே) “மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றுஞ் சொல்லப்படுகிற பரமபதத்திலே வர்த்திக்கப் பெறுவர்கள். இந்த்ராதிகள் வர்த்திக்கும் இவ்வருகில் வெளியிலல்ல. மேல் வரும் அநுபவமொழிய ப்ராப்திக்கு ப்ரபத்தி பண்ண வேண்டாத தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். இவர் பண்ணின ப்ரபத்தியே நமக்குமெல்லாம், தனித்து வேண்டா; இப்பாசுரத்தைச் சொல்லி பலத்திலே அந்வயிக்கும் அத்தனை. நற்கன்றுக்கிரங்கினது தோல்கன்றுக்கு இரங்குமாபோலே, இவரை நினைத்து இப்பத்துங் கற்றார் பக்கலிலும் ஈச்வரன் ப்ரஸந்நனாம். ஸ்ரீவிபீஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன் பண்ணின ப்ரபத்தியே யமைந்ததிறே. “இவனுடையவன்” என்று எதிர்த்தலைக்குத் தோற்றவிருக்கும் அத்தனையே வேண்டுவது.
– (அடிக்கீழ் இத்யாதி) - "அவனுடைய அடிமையாக உள்ளவர்களே! அவனுடைய திருவடிகளின் கீழ் பொருந்திப் புகுந்து வாழ்விர்களாக” என்று கருத்து. “அமர்ந்து” என்பது “மற்ற பயன்களைக் கருதாமல் இருந்து” என்பதாகும். அவனுடைய அடியார்களுக்குத் திருவடிகளே உத்தேசம் என்பதால், “உங்கள்” என்கிறார். இந்தத் திருவடிகளை நன்கு பற்றியவர்களாக. (அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை) - படி என்றால் இயல்பு, கேழ் என்றால் ஒப்பு. அதாவது அடியார்கள் விஷயத்தில் தனது க்ருபை அளிக்கும் இயல்பிற்கு ஒப்பு இல்லாத ஸர்வேச்வரனை “கேழ் இல்லா - ஒப்பு இல்லாத” என்று யாரை நோக்கிக் கூறுகிறார் என்பதற்கு, “மாசுச: - வருத்தம் அடையாதே” என்று தொடங்கிப் பதில் கூறுகிறார். அப்படிக் கூறிய க்ருஷ்ணனும் திருவேங்கடமுடையானுக்கு ஒப்பாக மாட்டான். ஏன் என்பதற்கு அரும்பத உரைக்காரர் விடை தருகிறார்; க்ருஷ்ணனைப் போன்று தனது காலகட்டத்தில் மட்டுமே இருந்த அர்ஜுனனுக்கு மட்டும் க்ருபை செய்தல் என்பது இல்லாமல், “அடியீர்” என்பதாக “கானமும் வானரமும்” என்றுள்ளவர்களுக்கும், "பின் ஆனார் வணங்கும் சோதி” என்பதாக அனைத்து காலங்களிலும் அனைவருக்கும் தனது திருமுகம் காண்பித்து நிற்பதால், க்ருஷ்ணனும் திருவேங்கடமுடையானுக்கு ஒப்பு அல்லன் என்று கருத்து. "அருள் கொடுக்கும்” என்ற நிகழ்கால வினை மூலம், "எப்போதும் க்ருபை செய்கிறான்" என்பதும், “அடியீர்” என்ற பன்மை மூலம் "அனைவருக்கும் க்ருபை செய்கிறான்" என்பதும் தேறுகிறது. – (பழனக் குருகூர்ச் சடகோபன்) - நல்ல நீர் நிலங்கள் நிரம்பிய ஆழ்வார்திருநகரிக்கு நிர்வாஹகராகிய நம்மாழ்வார். (முடிப்பான் சொன்ன) - "பல நீ காட்டிப் படுப்பாயோ” என்பதாக உள்ள ஸம்ஸாரம் என்ற தடையை முடிக்கும்போது திருவுள்ளத்தில் உத்ஸாகம் கொண்டவராக அருளிச்செய்த ஆயிரத்தில் உள்ள இந்தப் பத்தும், திருவேங்கடத் திருமலைக்குக் கூறப்பட்டன. அடுத்து "இவை" என்று பன்மையில் கூறப்பட்டதை விளக்குகிறார்; பாலகாண்டம் (53-9) - ரத்நஹாரீச பார்த்திவ: - இந்தக் காமதேனுவானது பசுக்களில் இரத்தினம் ஆகும் – என்பதற்கு ஏற்ப; அதாவது நல்லவை அனைத்தும் அரசருக்கே உரியதாக உள்ளன என்பதற்கு ஏற்ப, “இவை - இந்தப் பாசுரங்கள்” அனைத்தும் திருவேங்கடமலைக்கு உரியது என்றார். (பிடித்தார் பிடித்தார்) - அவனைப் பிடித்தவர்களைப் பிடித்தவர்கள், அவனைப் பற்றியவர்களைப் பற்றியவர்கள். (வீற்று இருந்து) - "வீற்று இருத்தல்” என்பது ஸர்வேச்வரனுக்கு அல்லவோ பொருந்தும், முக்தனைக் கூறலாமோ என்பதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; சாந். (7-25) - ஸ ஸ்வராட் பவதி - முக்தன் சுதந்திரன் ஆகிறான் - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரன் மற்றும் முக்தன் ஆகிய இருவருக்கும் இவ்விதம் வீற்றிருத்தல் ஒரே போண்று உள்ளது. அப்படியானால், ஈச்வரனுக்கு இவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைக் கூறுகிறார். தன்னைத் தவிர உள்ள மற்ற அனைத்தையும் தனது அடிமைகளாகக் கொண்டதால் வந்த ஆனந்தத்தை உடையவனாக ஸர்வேச்வரன் உள்ளான்; "ஏஷ இ ஏவ ஆநந்தயாதி" என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனால் ஆனந்தம் அடையும்படிச் செய்யப்பட்ட ஆனந்தம் நிறைந்தவனாக முக்தன் உள்ளான். – (பெரிய வானுள் நிலாவுவரே) - "பெரியவான்" என்பதற்கான பொருளை அருளிச்செய்கிறார். "மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றும் கூறப்படும் பரமபதத்தில் வாழப் பெறுவார்கள். இந்திரன் போன்றவர்கள் வாழ்கின்ற இடத்திற்கும் அப்பால் உள்ள இடம். பரமபதத்தின் பெருமை என்ன என்பதற்கு விடை தருகிறார்; மேன்மேலும் ஏற்பட்டபடி உள்ள அனுவத்திற்கு, மீண்டும் மீண்டும் சரணாகதி செய்யவேண்டிய அவசியம் இல்லாதபடி உள்ள பரமபதத்தில் புகுவர். ஆனால் இங்கு "பிடித்தவர்களைப் பிடித்தவர்கள்” என்று கூறினார்; அது மட்டுமே போதுமானதா; தனியாக ஒருவன் சரணாகதி செய்யவேண்டாமோ என்பதற்கு விடை தருகிறார்; இவர் செய்த ப்ரபத்தியே நமக்குப் போதுமானது; நாம் தனித்து ஏதும் செய்யவேண்டாம்; இந்தத் திருப்பாசுரத்தைக் கூறி அதன் மூலம் பலன் கிட்டுதல் அந்த அளவிற்கு உள்ளது என்று கருத்து. ஆனால் நமக்கு ஞான அநுஷ்டானங்கள் அவசியம் இல்லையா, இந்தத் திருவாய்மொழியில் கொள்ளும் ஈடுபாடு மட்டும் போதுமானதோ என்பதற்கு விடை தருகிறார். நல்ல கன்றுக்கு இரக்கம் கொள்ளும் பசு ஒன்று, தோல் கன்றுக்கும் இரக்கம் கொள்வது போன்று, இவரை எண்ணியபடி இந்தப் பத்தும் கற்றவர்கள் அருகிலும் ஈச்வரன் வந்து நிற்பான். இவ்விதம் ஒருவனுடைய ஸ்ம்பந்தம் காரணமாக, அவருடன் உள்ள மற்ற அனைவரையும் ஏற்றுக் கொண்ட இடம் உள்ளதோ என்பதற்கு விடை தருகிறார்; விபீஷணாழ்வான் செய்த ப்ரபத்தியில், அவனுடன் வந்த நால்வருக்கும் அந்த ப்ரபத்தியே பலித்தது அல்லவோ என்கிறார். ஆனால் ஆழ்வார் செய்த சரணாகதியே நமக்குப் போதுமானது என்றால், ஞான அநுஷ்டானங்கள் மற்றும் பஞ்ச ஸம்ஸ்காரம் போன்ற எதுவும் வேண்டாமோ? இந்தத் திருவாய்மொழியை மட்டும் கற்றாலே போதுமானதா என்பதற்கு விடை த்ருகிறார். அதாவது, “இந்தப் பாகவதரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன் இவன்” என்று நம்மைக் குறித்து ஸர்வேச்வரனுடைய திருவுள்ளத்தில் தோன்றும்படியாக வாழ்ந்தால் போதுமானது; அதிலேயே ஞான அநுஷ்டானங்கள் மற்றும் பஞ்ச ஸம்ஸ்காரம் போன்ற பலவும் அடங்கிவிடுகின்றன என்று கருத்து.