திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 10)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
6-10-10 தொடர்ச்சி
(புகலொன்றில்லாவடியேன்) “ப்ரபத்யே” என்கிறவிடத்தில், உத்தமனால் வந்த அதிகாரி ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது. அநந்யகதித்வமும், ஸ்வரூப ப்ரகாசமான அநந்யார்ஹசேஷத்வமுஞ் சொல்லுகிறது. “புகலொன்றில்லா” என்றும், “அடியேன்” என்றும் இரண்டுஞ் சொல்லவேணுமோ? என்னில்; ப்ரக்ருதி ஸம்பந்தத்தில் பாரமார்த்த்யத் தாலேயும், மயர்வற மதிநலமருளப் பெற்ற ஜ்ஞான வைபவத்தாலேயும் அருளிச்செய்கிறார். (உன்னடிக்கீழ்) “சரணௌ” என்கிற பதத்தில் விக்ரஹவத்தையைச் சொல்லுகிறது; சுபாச்ரயமுமாய், விஷயாந்தரங்களில் அருசி பூர்வகமாகத் தன்பக்கலிலே ருசியையுண்டாக்கி, பிறந்த ருசியையும் வளர்த்து ப்ராப்தி விரோதியையுந் தவிர்த்து, ஒரு தேச விசேஷத்திலே போனால் நித்ய கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியுமாய், ஸதாபச்யந்திக்கு விஷயமுமாவது விக்ரஹமாகையாலே. அடியிலே “துயரறு சுடரடி தொழுதெழு” என்று திருவுள்ளத்தைக் குறித்தருளிச் செய்து, தாம் பற்றுகிறவிடத்தில், “உன பாதங் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடி சேர் வண்ணமருளாய்” என்றும், “உன்னடி சேரவடியேற்காவா வென்னாயே” என்றும், “பூவார்கழல்களருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும், “உன பாதஞ் சேர்வதடியேனெந்நாள்?” என்றும், “மண்ணளந்தவிணைத் தாமரைகள் காண்பதற்கு” என்றும், “எந்நாளுன்னடிக்களடியேன் மேவுவதே?” என்றும், “நெடியார் பொழுதுமுன பாதங் காண நோலாதாற்றேன்” என்றும், “நோலாதாற்றேனுன பாதங் காண” என்றும், “அடியேனுனபாதமகலகில்லேனிறையும்” என்றும், “உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேன்” என்றும் இவரடி விடாமல் அநுஸந்தித்தபடி கண்டதே! (அமர்ந்து) அமருகையாவது உபாயாந்தரங்களை விட்டவோபாதி ப்ராப்யாந்தரங்களில் அருசியைச் சொல்லுகிறதோ? என்னில்; அது இங்கு ப்ரஸ்துதமல்லாமையாலே ப்ரஸங்கமில்லை. இதுக்குப் பொருள் “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” என்றும், “சரணம் வ்ரஜ” என்றும் சொல்லச் செய்தே ஏக பத ப்ரயோகம் பண்ணினவோபாதி, திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும் கொக்கு வாயும் படுகண்ணியும் போலே நிர்விவரமாகப் பொருந்தினபடி சொல்லுகிறது. (புகுந்தேனே) ப்ருதக் ஸ்த்தித்யாதிகளில்லாதபடி சரீரவச்சேஷமான தமக்கு அந்தர்யாமியாய் நிற்கிறபடியை அறிந்திருக்கிற இவர், “புகுந்தேன்” என்கிறவிது ஒரு போக்குவரத்து உண்டாயன்று; அவனுடைய ஸர்வ ஜகத்காரணத்வத்தையும் ஸர்வாத்மபாவத்தையும் ஸர்வரக்ஷகத்வத்தையும் அறிந்து, “அவனேயுபாயம்” என்கிற அத்யவஸாய ஜ்ஞானத்தைச் சொல்லுகிறது. “கத்யர்த்தா புத்த்யர்த்தா:” என்கிறபடியே. (புகுந்தேனே) “ப்ரபத்யே” என்கிற வர்த்தமாநம் கௌணம்; “அடைந்தேன்” என்கிறாப்போலே, “புகுந்தேனெ”ன்கிற இதுவே முக்கியம். “பாபாநாம் வா” பிராட்டியுடைய அபயப்ரதாநம் இச்ச்லோகம். “ராவணனும் பட்டு, பெருமாளும் விஜயிகளானார்” என்று பெரிய ப்ரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பஞ் செய்ய, பிராட்டியும் ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாயிருக்க, இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம்போலே (கிந்நு சிந்தயஸே தேவி கிம் த்வம் மாம் நாபிபாஷஸே) என்று “பெரிய ப்ரியத்தை வந்து விண்ணப்பஞ் செய்த எனக்கு ஒரு மறுமாற்றஞ் சொல்லாதே தேவரீர் எழுந்தருளியிருக்கிற இருப்பு என்தான்?” என்று திருவடி விண்ணப்பஞ் செய்ய, பிராட்டியும் “உனக்கு ஸத்ருசமமாகத் தரலாவதொன்றில்லாமை காண் நான் பேசாதிருந்தது” என்ன, இவனும் “இவ்வளவிலே நம் அபேக்ஷிதத்தை விண்ணப்பஞ் செய்து கொள்ளவேணும்” என்று பார்த்து, “தேவரைச் சுற்றும் முற்றும் நலிந்த ராக்ஷஸிகளாகிறார் க்ரூரைகளாய் ததநுகுணபாவைகளாயிற்று; ராவணனுக்கு முன்பே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளையாயிற்று; அவனும் இவர்களோபாதி கேடனல்லன்; இவர்கள் இப்போது பாம்பு படமடங்கினாற்போலே யிருக்கிறார்களித்தனையாயிற்று; இவர்களை பஹுப்ரகாரமாக ஹிம்ஸிக்கப் பாராநின்றேன். (முஷ்டிபி: பாணிபிச்சைவ) என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சாதித்தும் பற்களாலே கடித்தும் துண்டித்தும், (சிந்நம் பிந்நம் சரைர்தக்தம்) என்று பெருமாள் திருச்சரங்கள் செய்ததெல்லாம் நானே பண்ணப் பாராநின்றேன்; பகவதபசாரிகளையும் பாகவதாபசாரிகளையும் தண்டிக்கும் க்ரமத்திலே தண்டிக்கக்கோலா நின்றேன்; முன்பு வந்தபோது இடமில்லாமை விட்டுப் போனேனித்தனை; இப்போது எனக்கு எல்லா ப்ரத்யுபகாரங்களும் பண்ணியருளிற் றாகலாம்; இது இத்தனையும் திருவுள்ளமாக வேணும் என்தான்?” என்ன, “பாபாநாம் வா” என்றருளிச்செய்கிறாள். (பாபாநாம் வா சுபாநாம் வா) இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாபைகளாகவுமாம், நான் நினைத்திருக்கிறபடியே சுபைகளாகவுமாம். அதுதானேயன்றோ உத்தேச்யம்; (தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத்) என்றாற்போலே, அழுக்குடையவனன்றோ குளிக்க ப்ராப்தியுடையான்; அவர்கள் பாபைகளாகிலன்றோ நாம் முகங் கொடுக்கவேண்டுவது. சுபைகளாகில் உன் வால் வேணுமோ? அவர்கள் புண்யங்களே அவர்களுக்குக் கைகொடுக்குமே; கைம்முதலில்லாதார்க்கன்றோ நாம் கைம்முதலாக வேண்டுவது” என்றாள். “(வதார்ஹாணாம்) தண்ட்யரைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிர்க்கவும் சொல்லுகிற தர்மசாஸ்த்ரம் தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ?" என்ன, “ஆரேனுமாக சரணாகதரை ரக்ஷிக்கக் கடவதென்கிற விசேஷ சாஸ்த்ரம் உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ" என்கிறாள். “சரணம்” என்று வந்த ஸ்ரீவிபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும், (ந த்யஜேயம்) என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடலோசையாகக் கடவதோ?” என்கிறாள். (ப்லவங்கம) பின்னையும் இவன் புத்தி திரியவிடாமையினாலே “ஹரி! ஹரி!” என்கிறாள். “ப்லவங்கம்” என்கிறாள், நச்சினத்தை நச்சும் ஜாதியானமை கண்டோமே யென்கிறாள். “வசிஷ்டாதிகள் மந்த்ரிக்குங் குடியான இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தாயல்லை; யோகிகளான ஜநக குலத்தில் பிறந்தாயல்லை; காட்டிலே பணையோடு பணை தத்தித் திரிகிற ஜாதியிலேயிறே பிறந்தது! அங்ஙனொத்தார்க்கு சரணாகதியோட்டையது தெரியாதிறே” என்கிறாள். (வாநரோத்தம) என்றவள், “ஹரி! ஹரி!” என்கிறாள் தானேயிறே; “ப்லவங்கம” என்கிறாள், “ராஜாக்களுமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்தறியார்; நீ வாநர ஜாதியாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? (கார்யம் கருணமார்யேண) இவர்கள் புண்ய பாபங் கிடக்க; இப்போது ஓடுகிற தயநீய தசையைப் பாராய். உன் கையிலேயகப்பட்டு ‘நாம் என்படக்கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய். இவர்களுக்கு வேறு ரக்ஷகரில்லையே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்! (ஆர்யேண) இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும்படியாவதே உனக்கு! (ஆர்யேண) ஐந்த்ர வ்யாகரண பண்டிதனென்கிறது பொய்யோ? அவையுமெல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது ராமகோஷ்டியில் பரிசயம் பின்னாட்டினபடியாகாதே. அக்கோஷ்டியிற் பழக்கமிறே நீ இங்ஙன் சொல்லவல்லையாயிற்று”. நான் போந்த பின்பு அக்கோஷ்டி இங்ஙனே நீரற்றதாகாதேயென்று கருத்து. (ந கஸ்சிந்நாபராத்யதி) ஸம்ஸாரத்தில் குற்றமில்லாதார் ஆர்! திரை நீக்கிக் கடலாடப்போமோ? நல்குதிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள்தான் குற்றவாளரல்லரோ! நான்தான் குற்றவாட்டியல்லேனோ? நீதான் குற்றவாளனல்லையோ? பெருமாள் குற்றவாளரானபடி யெங்ஙனே? என்னில்; தாம் காடேறப் போந்தார்; அவர் பின்னே மடலூருவாரைப்போலே இளையபெருமாளும் போந்தார்; தம்மோடே ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப்படுத்துக் கொண்டு நானும் போந்தேன்; என்னைப் பிரிந்து பத்து மாஸம் இருந்தார்; தாம் வாராவிட்டால் தம்மதோரம்பு இசங்கமாட்டாமையில்லையிறே இவ்வழி; இத்தனை நாள் பிரிந்திருக்க வல்லரானபோதே பெருமாள் பக்கலிலேயன்றோ குற்றம்? பாரதந்தர்யத்துக்கு அநுகுணமாகப் பேசாதிராதே, அது தன்னைச் சொன்ன என் பக்கலதன்றோ குற்றம்? இனி, நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரைத் தண்டிக்கப் பார்த்தவன்று, பெருமாளருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்படத் தண்டித்துக் கொண்டன்றோ ராவணன் சொன்ன கார்யஞ் செய்த இவர்களைத் தண்டிப்பது? ஆகையால், நீயல்லவோ குற்றவாளன்! “எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்தவன்று ஆறவிடுகைக்கு நானுண்டு; நானும் அவர் வழி போகவேண்டி இருந்தவன்றைக்கு நீயுண்டு” என்றிருந்தேன்; நீயும் இங்ஙனேயானால் அபராதஞ் செய்தார்க்குப் புகுவாசல் உண்டோ? என்கிறாள்.
– (புகலொன்றில்லாவடியேன்) - “ப்ரபத்யே” என்ற இடத்தில், தன்னை காரணமாக வரும் அதிகாரி ஸ்வருபம் கூறப்பட்டது. “புகல்” என்று இல்லை” என்பதால் ப்ரபத்திக்கு அங்கமாக உள்ள “ஆகிஞ்சந்யம் - வேறு கைம்முதல் இன்மை” என்பதும், “அடியேன்” என்பதன் மூலம் “அநந்யகதித்வம் – வேறு கதி இல்லை” என்பதும், “அடியேன்” என்பதன் மூலம் ஆத்ம ஸ்வரூபத்தை வெளிப்படுத்தவல்லதான “அநந்யார்ஹ சேஷத்வம் - அவனை அல்லாமல் வேறு யாருக்கும் இன்றி, அவனுக்கு மட்டுமே அடிமையாக இருத்தல்” என்பதும் கூறப்பட்டது. ஆனால் “புகல் ஒன்று இல்லை” மற்றும் “அடியேன்” ஆகிய இரண்டையும் கூறவேண்டுமா? அதாவது “புகல் ஒன்று இல்லை” என்பதே ஆகிஞ்சந்யத்தைக் கூறுகிறது; “அடியேன்” என்ற பதமும் ஆகிஞ்சந்ய ஸ்வரூபத்தை வெளிப்படுத்துவதாகிய “அநந்யார்ஹ சேஷத்வம்” என்பதைக் கூறுகிறது; இவ்விதம் உள்ளபோது, இரண்டுமே கூறப்பட வேண்டுமா? இதற்கு விடை அளிக்கிறார். மற்ற உபாயங்கள் ஏதும் இல்லை என்பதை உணர்த்துவதாகிய ஆகிஞ்சந்யத்தில் அஜ்ஞானம், “ஞானாதிக்யம் - ஞானத்தின் மேன்மை” மற்றும் “பக்தி பாரவச்யம் - பக்திக்கு வசப்படுதல்” ஆகிய மூன்று காரணங்களுமே உண்டு என்பதால், மேலே கூறப்பட்ட இரண்டுமே சொல்லப்படவேண்டும் என்கிறார். ப்ரக்ருதி ஸம்பந்தத்தில் இருப்பது உண்மை என்பதாலும், “மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஞானத்தின்” வைபவத்தாலும் அருளிச்செய்கிறார். இங்கு “ப்ரக்ருதி ஸம்பந்தம்” என்பதால், மேலே கூறப்பட்டதாக அஞ்ஞானம், “மதி” என்பதால் “ஞானத்தின் மேன்மை” மற்றும் “நலம்” என்பதால் “பக்திக்கு வசப்படுதல்” போன்றவை கூறப்பட்டன. – (உன் அடிக்கீழ்) – “சரணௌ” என்பது மூலம் கூறப்படும் திருமேனியானது கூறப்பட்டது. ஆனால் திருவடி என்பது திருமேனியைக் குறிக்குமோ என்றால், திருவடியானது திருமேனியின் ஒரு பகுதி என்பதால், திருவடியைக் கூறியதானது திருமேனிக்கும் பொருந்தும் என்று கருத்து. சரி, திருமேனி முழுமையும் என்பதாகக் கொண்டு பொருள் கூறியதன் ப்ரயோஜனம் என்ன என்பதைக் கூறுகிறார்; எளிதில் பற்றும்படியாக உள்ளதும், மற்ற விஷயங்களில் ஈடுபாடு இன்மையை ஏற்படுத்தி, தன்னிடம் ருசியை உண்டாக்கி, பிறந்த ருசியானது மேலும் வளரும்படிச் செய்து, தன்னை அண்டவிடாமல் தடுக்கும் விரோதிகளை விலக்கி, பரமபதம் சென்றால் எப்போதுமே கைங்கர்யம் செய்வதற்கு எதிர் தொடர்பாக உள்ளதும், எப்போதும் பார்த்தபடி இருப்பதற்கு ஏற்றதாக உள்ளதும் என்று இருப்பது அர்ச்சாவதாரத் திருமேனி அல்லவோ? இந்த ஆழ்வார், பகவத் ஸ்வருபத்தைக் காட்டிலும், குணங்களைக் காட்டிலும், அர்ச்சாவதாரத் திருமேனியில் மண்டி நிற்பார் என்பதைக் கூறுகிறார்; “துயர் அறு சுடர் அடி தொழுது எழு” என்று தனது திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்தார்; பின்னர் தாம் பற்றும்போது திருவாய்மொழி (6-10-1) - உன பாதங் கூடுமாறு கூறாய்” என்றும், திருவாய்மொழி (6-10-1) - உன்னடி சேர் வண்ணமருளாய்” என்றும், திருவாய்மொழி (6-10-3) - உன் அடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே - என்றும், திருவாய்மொழி (6-10-4) - பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்தும் ஆறு புணராயே - என்றும், திருவாய்மொழி (6-10-5) - உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே - என்றும், திருவாய்மொழி (6-10-6) - மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு - என்றும், திருவாய்மொழி (6-10-6) - எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே - என்றும், திருவாய்மொழி (6-10-7) - நொடி ஆர் பொழுதும் உன பாதம் காண நோலாது ஆற்றேனே - என்றும், திருவாய்மொழி (6-10-8) - நோலாது ஆற்றேன் உன பாதம் காண - என்றும், திருவாய்மொழி (6-10-10) - அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையும் - என்றும், திருவாய்மொழி (6-10-10) – உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் - என்றும் உள்ள பல இடங்களில் இவர் திருவடிகளை விடாமல் என்ணியபடி இருந்ததை நாம் காணலாம். – (அமர்ந்து) - “அமர்தல்” என்பது மற்ற உபாயங்களைக் கைவிட்டது போன்று மற்ற பயன்களில் ஏற்பட்ட பிடித்தம் இன்மையைக் கூறுகிறதா என்றால், அது குறித்து இங்கு கூறப்பட வேண்டிய இடம் அல்ல என்பதால், அந்தப் பொருள் இங்கு கூறபடவில்லை. பின்னர் இதன் பொருள் என்ன என்பதற்கு விடை அளிக்கிறார். கீதை (18-66) – ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய - அனைத்து உபாயங்களையும் கைவிட்டு - என்றும், கீதை (18-66) - சரணம் வ்ரஜ – சரணம் என்று புகுந்து – என்றும் கூறிய பின்னரும், கீதை(18-66) – ஏகம் - என்னை மட்டுமே - என்று கூறப்பட்டது போன்று, திருவேங்கடமுடையானின் திருவடிகளும் தனது தலையும், கொக்கு வாயும் பொறியும் என்பது போன்று இடைவெளி இல்லாமல் பொருந்தியபடி உள்ளதை இந்த “அமர்ந்து” என்ற சொல் காண்பிக்கிறது. (புகுந்தேனே) - முன்பு இரண்டுவிதமான கருத்துக்களில் “புகுந்தேன்” என்பதைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார். ஆத்மாவை விட்டுப் பிரிந்து நின்றால் இருப்பு இல்லாதபடி உள்ள சரீரம் போன்று, அடிமையான தனக்கு அந்தர்யாமியாக இவன் உள்ளதை அறிந்த இவர், “புகுந்தேன்” என்று கூறியது, வருவதும் போவதுமாக உள்ள நிலையைக் கூறவில்லை. அவனுடைய “அனைத்து ஜகத்திற்கும் காரணமாக உள்ள தன்மை”, “அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ள தன்மை”, “அனைத்தையும் காப்பாற்றும் தன்மை” போன்ற பலவற்றையும் அறிந்து, “அவனே உபாயம்” என்று ஏற்பட்ட உறுதி குலையாத ஞானத்தைக் குறிக்கிறது. சரி, “புகுந்தேன்” என்ற சொல்லிற்குத் தரப்பட்ட விளக்கம் நன்றாக உள்ளது; ஆயினும் இந்தச் சொல்லானது அந்தப் பொருளை உணர்த்துவதாக இருக்கவேண்டும் அல்லவோ என்பதற்கு விடை தருகிறார்; “கத்யார்த்தா புத்தியர்த்தா: - எது செல்லுதலைக் குறிக்குமோ, அது புத்தியைக் குறிக்கும் வினைச்சொல் ஆகும்” என்ற ந்யாயத்தின்படி கூறினோம் என்கிறார். – (புகுந்தேனே) - த்வய மந்திரத்தில் “ப்ரபத்யே – பற்றுகிறேன்” என்று நிகழ்காலமாகக் கூறியபோது, இங்கு “புகுந்தேன்” என்று கடந்த காலமாகக் கூறுவது சரியா என்பதற்கு விடை தருகிறார். த்வயத்தில் உள்ள நிகழ்காலம் முக்கியம் அல்ல, “அடைந்தேன்” என்பது போன்று “புகுந்தேன்” என்பதே முக்கியமாகும்; அதாவது த்வயத்தில், செயல்படும் செயலைக் குறிப்பதற்காக மட்டுமே அந்தப் பதம் உள்ளது என்று கருத்து; அதாவது “ஸக்ருத் ஏவ ஹி சாஸ்த்ரார்த்த: - ப்ரபத்தி ஒருமுறை மட்டும் செய்யத்தக்கதாகும்” என்பதைக் கருத்தில் கொண்டு இவ்விதம் கூறினார். அடுத்து, “அகலகில்லேன்” என்ற சொல்லிற்கான பொருளை அருளிச்செய்யும்போது, முதல் கருத்தில், தொட்டாரைத் தொட்டு, “ந கச்சித் ந அபராத்யதி - தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை” என்று கூறப்பட்ட ச்லோகத்தை எடுத்துக் கொண்டு, அதனை விரிவாக வ்யாக்யானம் செய்யத் திருவுள்ளம் கொண்டு அருளிச்செய்கிறார். இது யுத்தகாண்டம் (116-45) - பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம கார்யம் கருணமார்யேண ந கச்சித் ந அபராத்யதி – என்னும் பெரியபிராட்டியாரின் அபயப்ரதான ச்லோகம் ஆகும். முதலில் இந்த ச்லோகத்திற்கான அறிமுகத்தை அருளிச்செய்கிறார்; “இராவணன் மடிந்து, இராமன் வெற்றியுடன் கூடியவர் என்றானார்” என்னும் மிகப் பெரிய மகிழ்வை ஸீதைக்கு அனுமன் வந்து கூறினன். இதனைக் கேட்ட பெரியபிராட்டியும், மகிழ்வின் மிகுதி காரணமாக, விம்மலும் பெருமூச்சும் என்பதாகச் செயலற்று நின்றாள். அப்போது அனுமன் அந்த விம்மலுக்கு ஆறுதல் கூறுவது போன்று, “யுத்தகாண்டம் (116-15) - கிந்நு சிந்தயஸே தேவி கிம் த்வம் மாம் நாபிபாஷஸே – தேவீ! இப்போது தாங்கள் என்ன எண்ணியபடி உள்ளீர்கள்? தாங்கள் ஏன் என்னிடம் ஏதும் பேசவில்லை”, என்று கேட்டான்; அதாவது, “மிகப் பெரிய மகிழ்வான செய்தியைக் கொண்டு வந்து உரைத்து எனக்கு ஒரு மறுமொழி கூறாமல், தாங்கள் இவ்விதம் இருப்பது ஏன்?” என்று அனுமன் ஸீதையிடம் கேட்டான். அப்போது ஸீதை, “நீ கூறிய செய்திக்கு ஏற்றபடியாக உள்ள மறுமொழி எதனையும் என்னால் கூற இயலவில்லை என்பதால்தான் நான் பேசாமல் இருக்கிறேன்”, என்றாள். இதனைக் கேட்ட அனுமான் தனது மனதில், “இப்போது நாம் நம்முடைய விருப்பத்தை தெரிவிக்கவேண்டும்”, என்று தீர்மானித்தான்; தொடர்ந்து ஸீதையிடம், “உம்மைச் சுற்றி நின்று துன்புறுத்திய இந்த ராக்ஷஸிகள் மிகவும் கொடூரமான குணம் கொண்டவர்கள் என்பதால், அதற்கு ஏற்ற கார்யத்தை செய்யவேண்டியதாக உள்ளது. இராவணனுக்கு முன்பாக, இந்தப் பெண்ணாக உருவம் கொண்ட இந்த ராஷஸிகளைக் கொல்லவேண்டியபடி உள்ளது. அவன் கூட இவர்கள் அளவிற்குக் கேடு செய்யவில்லை. இவர்கள் இப்போது, பாம்பானது தனது படத்தை அடக்கியது போன்று உள்ளனர். இவர்களை நான் பலவிதமாகத் துன்பம் செய்ய எண்ணம் கொண்டுள்ளேன். யுத்தகாண்டம் (118-33) - முஷ்டிபி: பாணிபிச்சைவ - கைகளால் குத்தி - என்பதற்கு ஏற்ப கைகளால் குத்தியும், கால்களால் துகைத்தும், நகங்களால் பிளந்தும், பற்களால் கடித்தும், துண்டித்தும், யுத்தகாண்டம் (94-22) - சிந்நம் பிந்நம் சரைர்தக்தம் – துண்டுதுண்டுகளாக – என்பதற்கு ஏற்ப இராமனுடைய பாணங்கள் செய்தவை அனைத்தையும் நான் இவர்களுக்கு இங்கு செய்ய எண்ணுகிறேன். பகவான் விஷயத்தில் தவறு இழைத்தவர்கள் மற்றும் பாகவதர்களுக்கு அபசாரம் செய்தவர்கள் ஆகியவர்களைத் தண்டிக்கும் விதத்தில் நான் தண்டிக்க தங்களிடம் விண்ணப்பம் செய்கிறேன். முன்பு நான் இங்கு வந்தபோது காலம் இடம் தாராத காரணத்தால் இவர்களை ஏதும் செய்யாமல் விட்டுச் சென்றேன். இப்போது நான் அனைத்து கைம்மாறுகளையும் அனைவருக்கும் செய்து முடித்துவிட்டேன். இவை அனைத்தையும் தாங்கள் திருவுள்ளம் கொண்டு அனுமதிக்கவேண்டும்”, என்றான். – இதனைக் கேட்ட ஸீதை “பாபாநாம் வா” என்னும் ச்லோகத்தை அருளிச்செய்கிறாள். (பாபாநாம் வா சுபாநாம் வா) - இவர்கள் நீ எண்ணியபடி பாபத்தைச் செய்தவர்களாகவே இருக்கட்டும்; நான் எண்ணுவதற்கு ஏற்ப, இவர்கள் நல்வினையைச் செய்தவர்கள் என்று கொள்ளலாம்; இவ்விதம் இவர்கள் பாபம் செய்தவர்களாக உள்ளதால் அல்லவோ நம்மால் காக்கப்பட வேண்டியவர்கள் என்று ஆனார்கள்? ஆனால் பாபம் செய்தவர்களைக் காப்பவர்கள் உண்டோ என்பதற்கு விடை தருகிறார். யுத்தகாண்டம் (18-3) - தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத் – அவனிடம் குற்றம் இருந்தால் இருக்கட்டும், நல்லவர்க்கு இது பழிக்கத்தக்கது அல்ல - என்பதற்கு ஏற்ப ஸீதை உள்ளாள். மேலும் ஸீதை அனுமனிடம், "அழுக்கு கொண்டவர்கள் அல்லவோ குளிக்கத் தகுந்தவர்கள் ஆகிறார்கள்; இவர்கள் பாபம் செய்தவர்கள் என்பதால் அல்லவோ நான் இவர்களுக்கு முகம் காண்பிக்கவேண்டும் என்றாகிறது", என்றாள். இதற்கு அனுமான், "புண்ணியம் செய்தவர்களுக்குத் தாங்கள் வேண்டாமோ?”, என்றான். இதற்கு ஸீதை, "அப்படிப்பட்ட நல்லவர்களுக்கு நானும் வேண்டாம், நீயும் வேண்டாம். பாபம் செய்தவர்களுக்கு மட்டுமே நாம் இரண்டும் பேருமே வேண்டும். நல்ல புண்ணியம் செய்தவர்களுக்கு உனது வால் வேண்டுமோ? அவர்களுடைய புண்ணியங்களே அவர்களுக்குக் கைக்கொடுக்கும். கைம்முதல் இல்லாதவர்களுக்கு மட்டுமே நாம் கைமுதலாக இருத்தல் வேண்டும்", என்கிறாள். இதனை கேட்ட அனுமான், " வதார்ஹாணாம்) - தண்டிக்க வேண்டியவர்களை தண்டிக்கவும், மற்றவர்களைத் தவிர்க்கவும் கூறும் தர்மசாஸ்த்ரமானது உமது இந்தக் கருணையால் கிழித்துப் போடும்படியாக ஆகவேண்டுமோ?", என்றான். இதற்கு ஸீதை, "சரணம் புகுந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை ரக்ஷித்தே தீரவேண்டும் என்ற தர்மசாஸ்த்ரமானது உன்னுடைய செயலால் கிழித்துப் போகும்படியாக ஆகவேண்டுமோ?", என்றாள். இதற்கு அனுமன், "சரணம் புகுந்தவர்களை ரக்ஷிக்கவேண்டும் என்று கூறிய இடம் உள்ளதோ?", என்பதற்கு விடையாக ஸீதை, "சரணம் என்று கூறி வந்த ஸ்ரீவிபீஷணாழ்வான் தோஷம் நிறைந்தவனாகவே இருந்தாலும், (ந த்யஜேயம்) – கைவிட மாட்டேன் - என்று இராமன் கடற்கரையில் கூறிய சொற்களானவை, கடல் ஓசை போன்று பயனற்றுப் போகலாமா?”, என்றாள். (ப்லவங்கம) - “வதார்ஹாணாம்" என்று கூறிய பின்னரும் அனுமன் தனது புத்தியை மாற்றிக் கொள்ளாமல் இருந்ததால், “ஹரி, ஹரி” என்கிறாள். அல்லது, “நச்சினத்தை நச்சும் ஜாதியாக உள்ளதை நாம் கண்டோம். வசிஷ்டர் போன்றவர்களுக்கும் கூட அறிவுரை கூறவல்ல இஷ்வாகு வம்சத்தில் நீ பிறந்தவன் அல்லன். யோகிகளாகிய ஜநக குலத்தில் நீ பிறக்கவில்லை. காட்டில் பணையோடு பணை தத்தித் தாவியபடி திரியும் ஜாதியில் அல்லவோ நீ பிறந்தாய்? இப்படி உள்ளவர்களுக்குச் சரணாகதியின் தன்மை புரியாது", என்றாள். “வாநரோத்தம” என்று கூறியவள் “ஹரி ஹரி” என்றாள். அரசரும், சாஸ்த்ரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நடக்காமல் உள்ளவரும் ஆகிய இராமனும் கூட, எங்கள் முன்பாக இந்தனை கோபம் கொள்வதை அறியமாட்டார்; சாஸ்த்ரங்களுக்கு நீ கட்டுப்பட்டாமல் உள்ளாய் அல்லது ஸர்வேச்வரன் போன்று சுதந்திரமானவன் அல்லாமல் மற்றவர்கள் வசப்பட்டு நிற்கும் நீ இவ்விதம் செய்கிறாய். நீ வானரமாக இருந்தும் இத்தனை கோபம் கொள்ளலாமோ?", என்றாள். ### ( கார்யம்) இவர்கள் செய்த புண்ணிய பாபங்கள் ஒரு புறம் இருக்கட்டும் ; இவர்கள் விஷயத்தில் இப்போது இவர்களிடம் நாம் தயை காண்பிக்கும் நிலையில் உள்ள இவர்க்ள் தன்மையைப் பார்ப்பாயாக. உனது கையில் அசப்பட்டு “ நாம் என்ன கதி அடைவோம்” என்று கலக்கிய படி இவர்கள் உள்ளதை காண்பாயாக. இவர்களைக் காப்பாற்ற வேறு யாரும் இல்லை. இப்போது இவர்கள் விஷயத்தில் நாம் இரக்கம் கொள்ள வேண்டும். (ஆர்யேண) இவை அனைத்தையும் நான் இப்போது உனக்குக் கற்றுத் தரவேண்டும் படியாக நீ உள்ளாயே! ஐந்து வ்யாகரண பண்டிதன் என்று உன்னைக் கூறவது பொய்யோ! இவ்விதம் அனைத்தையும் அறிநத அனுமான் இந்த ராக்ஷஸிகள் குறித்து போபம் அடைந்து கூறிய சொற்களுக்கு காரணம் இராமனுடைய கூட்டத்தில் பழகியதே ஆகும். என்றாள். இவை அனைத்தையும் நீ கற்றும் கேட்டும் இருந்தாலும், இப்போது இராமனுடிடைய கூட்டத்தில் பழக்கம் அல்ல்வோ உன் பின்னேஉள்ளது! அந்த கூட்டத்தில் பழகியதால் அல்லவோ நீ இவ்விதம் கூறினாய்! நான் அங்கிருந்து வந்தவுடன் இவ்விதம் இரக்கம் அல்லாமல் போயிற்று என எண்ணுகிறேன். சரி தவறு செய்தவர்களைத் தள்ளி, தவறு செய்யாதவர்களை சேர்த்திக் கொள்ளலாம் அல்லவோ என்பதற்கு விடை தருகிறார். ” நகச்சித்” தவறு செய்யாதவர்கள் யார் உள்ளார்”; இந்த ஸம்ஸாரத்தில் குற்றம் செய்யாதவர்கள் யார்? திரை நீக்கி கடல் ஆடப்போகுமா? இதற்கு அனுமான்” குற்றம் இல்லாதவர்கள் யார் என்று ஏன் கேட்கவேண்டும்? இராமன், தான் , தாங்கள் என நாம் மூவரும் குற்றம் இல்லாதவர்கள் அல்லவோ? என்றான். இதற்கு விடை கூறுகிறாள். தனக்கு நிகர் இல்லாதபடி இராமனும் குற்றம் செய்தவர். நானும் குற்றம் செய்தவள். நீயும் குற்றம் செய்தவன் அல்லவோ? – இராமன் குற்றவாளர் என்றானது எப்படி என்று கூறுகிறாள். தான் கானகம் சென்றார்; அவர் பின்னே, மடல் எடுப்பவர் போன்று லக்ஷ்மணன் சென்றார்; அவருடன் தனிமையில் இன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்று விரும்பி நானும் சென்றேன். என்னைப் பிரிந்து பத்து மாதம் இருந்தார். தாம் வராவிட்டால் தன்னுடைய ஓர் அம்பு மட்டும் வருவதற்கான வழியாக இந்த இடம் இல்லையோ? இத்தனை நாள்கள் பிரிந்திருக்க வல்லராக இருந்ததே இராமனிடம் உள்ள குற்றம் ஆகிறது. அவருக்கு மட்டுமே வசப்பட்டபடி உள்ள நான், அத்தகைய நிலைக்குத் தகுதியாகப் பேசாமல், அவரைக் குறித்து இவ்விதம் உன்னிடம் கூறுவது என்பது, என்னிடம் உள்ள குற்றம் ஆகிறது. அடுத்து, தங்களுடைய எஜமானனாகிய இராவணன் கூறிய சொற்களை ஏற்றுக் கார்யம் செய்த அவனுடைய வேலையாட்களாகிய இவர்களைத் தண்டித்து, இராமன் அருளிச்செய்த கார்யத்தைச் செய்ய முயன்ற உன்னை முதலில் தண்டித்து அதன் பின்னர் அல்லவோ இராவணனால் ஏவப்பட்ட இவர்களைத் தண்டிக்கவேண்டும்? ஆகவே நீயும் குற்றவாளனே ஆகிறாய். இராமன் கோபம் கொண்ட அனைத்து நேரங்களிலும் அவனைச் சமாதானம் செய்வதற்கு நான் இருந்தேன். ஸ்ரீவிபீஷணாழ்வான் இராமனிடம் சரணம் புகுந்தபோது, "இவன் கொல்லத்தக்கவன்" என்று அனைவரும் கூறியபோதிலும், நீ அங்கு புருஷகாரமாக சிபாரிசு செய்தாய். இதனைப் போன்று நான் இராமனை விட்டு பிரிந்து வந்தபோது, அவர் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் சமாதானம் கூறுவதற்கு நீ உள்ளாய் என்று இருந்தேன். ஆனால் நீயும் இவ்விதம் கோபம் கொண்டால், அபராதம் செய்தவர்கள் வேறு எங்கு செல்வார்கள் என்கிறாள்.