பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 8)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே
தன்னொடு விளையாட வரும் சிறுபிள்ளைகளின் கூட்டத்தைப் பலவந்தகமாக வளைத்து, அவர்கள் வேறு எங்கும் செல்லாமல் ஒரு இடத்தில் இருக்க வைத்து, தந்தம் முளைக்கும் இளயானையைப் போன்று தானே முதன்மையானவனாக நின்று விளையாடும் நந்தகோபருடைய குழந்தையான எனது க்ருஷ்ணனுக்கு மிகவும் அழகான நாபி இருக்கிறபடியைக் காணுங்கள்! ஒளி மிக்க ஆபரணங்களை உடைய பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருமருங்குலின் நின்றும் திருவுந்தியிலே போருகிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருமருங்கினழகை அநுபவித்த வநந் தரம், திருவுந்தியினழகை அநுபவிக்கிறார்.
– திரு இடையின் அழகினை அனுபவித்த பின்னர், திருநாபியின் அழகினை அனுபவிக்கிறார்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (வந்தவித்யாதி) தன்னோடே விளையாட வந்த “தன்னேராயிரம் பிள்ளை”களான மதலைக்குழாத்தைத் தானும் மதலையாயிருக்கச் செய்தே வலி செய்து, கொம்பு முகிழ்த்த இளவானைக் கன்று போலே தானே ஓடி விளையாடா நிற்பானாய். ஸ்ரீநந்தகோபரைக் கண்டால் விநயம் தோன்ற நிற்கையாலே "நந்தன்மதலை" என்கிறது. இம்மதலைக்கு மிகவும் அழகியதாயிருக்கிற திருவுந்தியிருக்கிற ப்ரகாரத்தைக் காட்டுகிறார். “ஒளி இழை” என்றது ஆத்மபூஷணம். மாமுனிகள் வ்யாக்யானம் - (வந்தவித்யாதி) தன்னோடே விளையாட வந்த “தன்னேராயிரம் பிள்ளை”களான மதலைக்குழாத்தை, தானும் மதலையாயிருக்கச் செய்தே, அத்தனைபேரும் ஒருதலை, தானொருதலையாக நின்று பலாத் கரித்து, கொம்புமுகிழ்த்த இளவானைபோலே தானே ப்ரதாநனாய் விளையாடும். (நந்தனித்யாதி) இப்படி திரியா நிற்கச்செய்தே, ஸ்ரீநந்தகோபர் ஸந்நிதியில் ஸவிநயமாக வர்த்திக்கும் பிள்ளைத்தனத்தை யுடையவனுக்கு. (நன்றுமித்யாதி) மிகவும் அழகியான திருவுந்தி யிருக்கிறபடியைக் காணுங்கோள்; ஒளியையுடைத்தான ஆபரணங்களையுடைய நீங்கள் வந்த்காணுங்கோள். இழை - ஆபரணம்.
– (வந்த இத்யாதி) - தன்னோடு விடையாட வந்த பெரியாழ்வார் திருமொழி (3-3-1) - தன்னேர் ஆயிரம் பிள்ளைகள் – என்பதாக உள்ள மழலைக்கூட்டத்தை ஒரு பக்கம் வைத்து, அப்போதுதான் தந்தம் முளைத்திருக்கும் இளம் யானையைப் போன்றுள்ள என் பிள்ளையான க்ருஷ்ணன், தான் மற்றொரு பக்கம் மழலையாய் இருந்து, எவரையும் எங்கும் போகவிடாமல் வளைத்து நின்று, தன்னைத் தனித்துவப்படுத்தி விளையாடுகிறான். (நந்தன்) – இப்படி ஒருவரையும் திரியவிடாது தன் வளையுள் நிற்கச் செய்யும் இந்தப் பிள்ளை, ஸ்ரீநந்தகோபரைக் கண்டால் தன்னுடைய குறும்புகள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு மரியாதை தோற்றும் விதமாகப் பணிவுடன் நிற்பான். இப்படி நந்தகோபருடைய மழலையானவனும், பிள்ளைத்தனத்தைப் பெரிதும் கொண்டுள்ளவனும் ஆகிய என் க்ருஷ்ணனின். (நன்றும்) - மிகவும் அழகியதான நாபியைக் காணுங்கள். (ஒளி இழையீர்) - மயக்கங்கள் அழியப்பட்டதால் ப்ரகாசத்தையே ஆபரணமாகக் கொண்ட ஆத்ம நிலையிலே விளங்கும் பெண்களே! நீங்கள் வந்து காணுங்கள்.