திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 10)

ஆறாம்பத்து

பத்தாம் திருவாய்மொழி

6-10-10 தொடர்ச்சி

ஸகல சாஸ்த்ரங்களிலும் வ்யாபரிப்பதொன்றாய், இச்சாஸ்த்ரங்களுக்கெல்லாம் அடியான வேதாந்தங்களுக்குக் கிழங்காய், நம் ஆசார்யர்களெல்லாரும் ஒக்க ஆதரித்துப் போருவதோர் அர்த்தவிசேஷத்தை, இப்பாட்டாலே அருளிச்செய்கிறார். ப்ரதமாசார்யருமாய், “மயர்வற மதிநலமருளினன்” என்கிறபடியே பகவத் ப்ரஸாத லப்த ஜ்ஞான வைபவருமான இவர் பரிக்ரஹிக்கையாலே வந்த ஏற்றமுமுண்டு. – இவ்வுபாயந் தன்னைப் பரிக்ரஹித்து ப்ரயோஜநாந்தரத்தைக் கொள்வாரும், ஸாதநாந்தரத்தைப் பரிக்ரஹித்து இவனையே ப்ரயோஜநமாகப் பற்றுவாருமாயிருப்பர்கள் புறம்புள்ளார்; அங்ஙனன்றிக்கே, இவனையே ப்ராப்யமும் ப்ராபகமுமாக அத்யவஸித்திருக்கிற ஏற்றமுண்டு இவர்க்கு. ப்ராப்யம் இவனேயாகில் ப்ராபகாந்தரங்களை பரிக்ரஹித்தால் வரும் குற்றமென்? என்னில், அவை ஸாத்யமுமாய்ப் பலவுமாய் துச்சகமுமாய் ஸ்வரூபத்துக்கு அநநுரூபமுமாயிருக்கும். இப்படியிருக்கும் ஸாதநாந்தரங்கள் பல. அவையெவை? என்னில், கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள். கர்மயோகமாவது ஆத்மயாதாம்ய ஜ்ஞாந பூர்வகமாக ஸ்வவர்ணாச்ரமோசிதமாய் விஹிதமான கர்மத்தை பலாபிஸந்தி ரஹிதமாகவும், கர்த்ருத்வ த்யாகத்தையும், ஸங்க த்யாகத்தையும் பண்ணி, பகவத் ஸமாராதந புத்த்யா பண்ணவே, விரோதியான பாபம் க்ஷயித்து மநஸ்ஸு நிர்மலமாய் ஸ்வரூபகமுமுண்டாய், பகவத் ஜ்ஞாந ப்ரேமங்கள் பிறந்து, அது பரபக்தி பரஜ்ஞான பரமபக்தியாய்ப் பேற்றோடே சந்திப்பிக்கும். ஜ்ஞாநயோகமாவது இந்த்ரியங்களை நியமித்துக் கொண்டு ஸ்வரூபத்தை விஷயமாக்கி பகவத் ஜ்ஞாநம் பிறந்து தத் விஷய ப்ரேமமும் பிறந்து, மேல் பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளும் பிறந்து, பேற்றோடே சந்திப்பிக்கும். அங்ஙனன்றிக்கே, இக்கர்மஜ்ஞாநங்களிரண்டையும் பகவத் விஷயத்திலேயாக்கி, “மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு” என்கிறபடியே, பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாய் பேற்றோடே தலைக்கட்டுமது பக்தியோகமாவது. இவை போல் துச்சகமன்றியிலே, திருநாமத்தை ஸுசகோபாயமாக விதித்தது, எங்கே? என்னில், தர்மபுத்ரனுக்கு அநேக தர்மங்களையுஞ் சொல்ல, “கோ தர்மஸ் ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத:” என்கிறபடியே, உன்னெஞ்சால் அறுதியிட்டிருக்கும் பரமதர்மத்தைச் சொல்ல வேணுமென்ன; “ஏஷ மே ஸர்வதர்மாணாம்” இத்யாதிப்படியே அதிகதமமான தர்மம் திருநாமமென்று சொன்னாரிறே. திருநாமம் ஸாதநாங்கமன்றோ? ஸ்வயம் ஸாதநமோ? என்னில்; “ஜந்ம ஸம்ஸார பந்தநாத் முச்யதே” என்று விரோதி நிவ்ருத்தியையும், “யாதி ப்ரஹ்ம ஸநாதநம்” என்று பலப்ராப்தியையுஞ் சொல்லித் தலைக்கட்டுகையாலே, விரோதி நிவ்ருத்தி பூர்வகமான அபிமத பலஸித்திக்கும் ஸ்வயம் ஸாதநமே. – “தேசோயம் ஸர்வ காமதுக்” என்று ஸர்வாபிமத ஸாதநமாக தேசவாஸத்தைச் சொல்லிற்று. “ஆராதநாநாம் ஸர்வேஷாம்” என்று தொடங்கி, “ததீயாராதநம் பரம்” என்று தலைக்கட்டுகையாலே ஸர்வாபிமதஸித்தியும், ததீயரை யாராதிக்கவே கிடைக்கும் என்று சொல்லிற்று; அப்படி சொன்ன துச்சகமான ஸர்வோபாயங்களும் அஹங்கார ஸ்பர்சமுண்டாகையாலே த்யாஜ்யமாகச் சொல்லிற்று. ஒன்றாய் ஸித்தமாய் ஸுசகமாய் ப்ராப்தமாய், தனக்கவ்வருகொன்றின்றிக்கே, “தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு” என்கிற ப்ரபதநத்தைச் சொல்லுகிறது இப்பாட்டால். கீழ் ஒன்பது பாட்டாலும் சரண்யன் ஸ்வரூபத்தையும் அதிகாரி ஸ்வரூபத்தையுஞ் சொல்லி, சரணாகதி ப்ரகாரத்தைச் சொல்லுகிறது இப்பாட்டில். சரண்யன் ஸ்வரூபமாவது நிரதிசய போக்யமுமாய், வகுத்த விஷயமுமாய், விரோதி நிவர்த்தகமுமாய், ஸர்வஸுலபமுமாயிருக்குமது. அல்லாதவை போலன்றியிலே ஆச்ரயணத்துக்கு ஏகாந்தமாயிருப்பது ஸௌலப்யம். பரத்வம் சேதநனுக்கு ருசி பிறந்தபோதே யாச்ரயிக்கவொண்ணாதபடி தேச விப்ரக்ருஷ்டமாயிருக்கும். வ்யூஹமும், ப்ரஹ்மாதிகளுக்காமத்தனை யாகையாலே தத் ப்ராயம்; அவதாரங்கள் பாக்யாதிகராய் அக்காலத்தில் உதவினார்க்கொழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே கால விப்ரக்ருஷ்டமாயிருக்கும்; அக்குறைகளிரண்டுமின்றியிலே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து ஆச்ரயிக்கலாம்படி, “வானவர் வானவர்கோனோடும்” என்கிறபடியே நித்யஸூரிகளோடு, இவ்வருகுள்ள ப்ரஹ்மாதிகளோடு, இவ்வருகுள்ள மநுஷ்யர்களோடு, “கானமும் வானரமு”மாய்க் கொண்டு, அத்யந்த ஹேய ஜந்மாக்களானாரோடு வாசியற ஸர்வஸமாச்ரயணீய ஸ்த்தலம் திருவேங்கடமுடையான் திருவடிகளே. அஜஹத் ஸ்வபாவனாகையாலே அபிமதஸித்திக்கு உடலான ஜ்ஞாந சக்த்யாதி குணாஷ்டகங்களையு முடையனாகையாலே, ஸர்வகுணங்களாலும் பரிபூர்ணனான திருவேங்கடமுடையான் சரண்யன். – அதிகாரி ஸ்வரூபமாவது, அநந்யகதித்வமும், ப்ராப்ய ருசியும், ஸ்வரூப ப்ரகாசமுமென்கிற இவையிறே. திர்யக்குக்களுக்கு இப்படியாச்ரயணங் கூடுமோ? என்னில்; ஸ்ரீகஜேந்த்ராழ்வான் பகவத் ஸ்மாச்ரயணம் பண்ணினானாகத் துறைச்சுவடிகளிலே யெழுதியிட்டு வைத்துஞ் சொல்லியும் கேட்டும் போரா நின்றோமே; இங்கும் “வைப்பன் மணிவிளக்கா மாமதியை மாலுக்கென்றெப்பொழுதும் கைநீட்டும் யானையை” என்றும், “புகுமதத்தால் வாய் பூசிக் கீழ்தாழ்ந்தருவியுகு மதத்தால் கால்கழுவிக் கையால் மிகு மதத்தேன் விண்டமலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு” என்றும், ஸ்த்தலாந்தரத்திலே, “புனத்தினைக் கிள்ளிப் புதுவலிக் காட்டி யுன்பொன்னடி வாழ்கவென்றினக் குறவர் புதிய துண்ணுமெழில் மாலிருஞ்சோலையெந்தாய்” என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்து வைத்தார்கள். இனி, அவ்வோபாதியாகிலும் இத்தையும் விச்வஸிக்க வேண்டாவோ நமக்கு? இனி, ஜ்ஞாநாதிகளால் பூர்ணனான சரண்ய விஷயத்தில் சரணாகதி பலவ்யாப்தை யென்னுமோபாதி, ஆநுகூல்யாதி விசிஷ்டனான அதிகாரி சரணம்புக்கால் பலவ்யாப்தி யென்கிற அர்த்தத்தையுஞ் சொல்லுகிறது. – “அகலகில்லேனிறையுமென்றலர்மேல் மங்கையுறை மார்பா” என்கிற இத்தாலே தம்முடைய ஆகிஞ்சந்ய பூர்வமாகப் பெரியபிராட்டியார் புருஷகாரமாக, ஸர்வஸுலபனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார். (அகலகில்லேனிறையுமென்றலர்மேல் மங்கையுறை மார்பா) - நிரபேக்ஷமுமாய் ஸாபேக்ஷமுமாயிருக்கும் இவ்வுபாயம், ஆகார பேதத்தாலே நிரபேக்ஷமாகிறபடி எங்ஙனே? என்னில்; ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும் விரோதிகளைப் போக்குகையும், ஒரு தேச விசேஷத்தேறக் கொண்டு போகையும் ப்ராப்தமான கைங்கர்யத்தைக் கொள்ளுகையுமாகிற இவ்வோவிடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்; ஸஹகாரி வேண்டா. ஸாபேக்ஷமானபடியென்? என்னில்; அதிகாரி ஸாபேக்ஷமுமாய், புருஷகார ஸாபேக்ஷமுமாயிருக்கையாலே. இவ்வுபாயம் ஆர்க்கென்றால், அதிகாரிக்கு என்கையாலே, அதிகாரி ஸாபேக்ஷம்; அதிகாரி ஸாபேக்ஷமானவோபாதி புருஷகார ஸாபேக்ஷம். எங்ஙனேயென்னில்; இவ்வதிகாரி, பூர்வாபராதத்தையும் பார்த்து அவனுடைய ஸ்வாதந்தர்ய ஸார்வஜ்ஞ்யாதிகளையும் பார்த்துப் பிற்காலிக்க, “அஞ்சாதே" என்று புருஷகாரமானவள் சொல்லவேண்டுகையாலே. ஆகையாலே, அதிகாரி ஸாபேக்ஷமுமாய் புருஷகார ஸாபேக்ஷமுமா யிருக்கும். (அகலகில்லேனிறையும்) ஒரு க்ஷண காலமும் பிரிய பிரசக்தையல்லேன். இப்படி சொல்லுகிறவள்தான் ஆர்? என்னில்; த்ரிவித சேதநர்க்கும், ஸ்வாமிநியுமாய், உபயவிபூதி நாதனுக்கும் நியாமிகையுமா யிருக்குமவள்கிடீர்! த்ரிவித சேதநர்க்கும் ஸ்வாமிநியென்னுமிடத்தில் ப்ரமாணம் “ஈச்வரீம் ஸர்வபூதாநாம்” என்னக்கடவதிறே. உபயவிபூதி நாதனுக்கும் நியாமிகையென்னுமிடத்துக்கு ப்ரமாணம் “பும்ப்ரதாந் ஈச்வரேச்வரீம்” என்று ப்ரதாந புருஷர்களுக்கு ஈச்வரன் அவன்; அவனுக்கு இவள் ஈச்வரியென்று சொல்லுகையாலே. ஆக, ஸர்வர்க்கும் நியாமிகையென்னுமிடஞ் சொல்லிற்று. இவள் நியமிக்கும் ப்ரகாரமென்? என்னில்; த்ரிவித சேதநரையும் மாத்ருத்வ ப்ரயுக்தமாக நியமிக்கும். ஈச்வரனை ப்ரணயித்வ நிபந்தநமாக நியமிக்கும். மாத்ருத்வம் ஸ்வரூபாநுபந்தி; ப்ரணயித்வம் காதாசித்கமாகையாலே வந்தேறியாகாதோ? என்னில்; ஆகாது. எங்ஙனேயென்னில்? உபாதி நித்யமாகையாலே அதுவும் நித்யம். ஈச்வரன் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுமிடத்திலும் இவள் நியாமிகை. “யஸ்யாவீக்ஷ்யமுகம் ததிங்கித பராதீநோவிதத்தேகிலம்” என்று, அவள் கடாக்ஷமடியாக, ப்ருகுடி படனாய்க் கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணும். அது என்? “கரணகளேபரைர்க்கடயிதும் தயமாநமநா:” என்று, தன் தயை அடியாகவன்றோ ஸ்ருஷ்டிப்பது என்னில்? அவற்றின் செல்லாமை பார்த்து ஸ்ருஷ்டிக்கிலிறே தயையடியாவது; தன் செல்லாமையாலே அவள் கடாக்ஷமடியாகத் தன் ஸத்தையுண்டாய், அவள் ப்ரேரிக்க தயை பிறந்து, அத்தயையடியாகவிறே அவன் ஸ்ருஷ்டிப்பது. – நியமிக்குமிடத்தில் “அஸ்யோசாநா ஜகதோ விஷ்ணுபத்நீ” என்றும், “விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ” என்றுஞ் சொல்லுகிறபடியே தன் ஸ்வரூபங் குலையாமேயிறே நியமிப்பது. எங்ஙனேயென்னில்; ப்ரபை ப்ரபாவானுக்கு சேஷமாய் நின்றே அத்தலைக்கு நிறங் கொடுக்குமா போலவும், பரிமளம் புஷ்பத்துக்கு சேஷமாய் நின்று பெருவிலையனாக்குமா போலவும், ஈச்வரன் ஸ்வாதந்தர்யங் குலையாதே பரதந்த்ரனாமா போலேயுமிறே இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க் கொண்டே நிறங் கொடுக்கும்படி. விச்லேஷத்துக்கடி கர்மமன்றோ? கர்ம ஸ்பர்சமின்றிக்கேயிருக்க, இவள் “அகலகில்லேன்” என்னப்போமோ? என்னில்? கர்மத்தோபாதி, அவனுடைய வைலக்ஷண்யம் அடியாகச் சொல்லுகிறாள். வைலக்ஷண்யம் போக்யமாமத்தனை யன்றோ? என்ன; மஹார்க்கமாயிருப்பதொரு ரத்நத்தை லபித்தால், “இது நமக்குத் தொங்குமோ!” என்று துணுக்குத் துணுக்கென்னுமவனைப்போலே, “அவன் மார்விலேயிருந்து அகலிற் செய்வதென்?” என்று அஸ்த்தாநே பய சங்கை பண்ணுகிறாள். (இறையும் அகலகில்லேன்) ஸம்ச்லேஷாங்கமான விச்லேஷமும் பொறுக்கமாட்டேன். அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தை ஸகியாத சுணையுடைமைபோலே, ஸம்ச்லேஷாங்கமான விச்லேஷமும் பொறாத மார்த்தவம். அவன் மார்விலேயிருந்து அவன் முகத்தை நோக்கி, “உன்னையகல சக்தையாகிறிலேன்” என்று அவன் வைலக்ஷண்யத்தை யவனுக்குச் சொல்லுகிறாள். ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனா யிருக்கிறவன் தன்னுடைய வைலக்ஷண்யம் ஸ்வகீய ஜ்ஞாநத்துக்கு விஷயமன்றோ? இவள் சொல்ல அறியுமிடம் அவனுக்கு ஜ்ஞாநக் கொத்தையன்றோ? என்னில்; இவள் சொல்லவறிந்திலனாகில் அவன் ப்ரணயித்வத்துக்குக் கொத்தையாமே! “தனக்குந்தன் தன்மை அறிவரியான்” என்றுஞ் சொல்லாநின்றதிறே. ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளேயிறே ஜ்ஞாநத்துக்கு விஷயம்; “ஞானமஃதே கொண்டெல்லாக் கருமங்களுஞ் செய்” என்றதிறே. “அகலகில்லேன் இறையும்” என்கிற பாசுரமுஞ் சொல்லமாட்டாத தசையிறே அவன் தசை. அவள் வைலக்ஷண்யங் கண்ட இவளிலும் அவனுக்குண்டான ஏற்றம், விச்லேஷ தசையில் அவன் பாசுரத்தே காணுமத்தனை யிறே. “மாஸாதூர்த்வம் ந ஜீவிஷ்யே” என்றாள் இவள்; “ந ஜீவேயம் க்ஷணமபி” என்றான் அவன். பரதந்த்ரராயிருப்பார்க்கு உடையவன் வருந்தனையும் பொறுக்கவேணுமிறே; ஸ்வதந்த்ரனுக்கு அது வேண்டாவே. இப்படி உபயமும் விலக்ஷணமான மிதுநம் உத்தேச்யமாகவிருக்கிற முமுக்ஷுக்களுக்கு ஒரு குறையுண்டோ? இவர்களைத் தனித்தனியே பற்றினார்க்கு ஸ்வரூப விநாசமிறே. “மிதுநமே யுத்தேச்யம்” என்றிருப்பார்க்கு ஸ்வரூபோஜ்ஜீவநமிறே. ராவணாதிகள் பக்கலிலே இவ்வர்த்தம் காணவுமாம். (அலர்மேல் மங்கை) பூவில் ருஜீஷமான தாதும் சுண்ணமுங் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே யிருந்துள்ள ஸௌகுமார்யமும், நித்யாநுபாவ்யமான பருவமுமுடையவள். அவனை “அகலகில்லேன்” என்னப் பண்ணவல்ல பரிகரத்தையுடைய இவள், “அகலகில்லேன்” என்கிறாளிறே. (உறை மார்பா) அவன் மார்விற் சுவடறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சிமுள்ளோபாதியாயிற்று. ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீமிதிலையை நினையாதாப் போலவும், முக்தன் “நோ பஜநம் ஸ்மரந்நிதம் சரீரம்” என்று ஸம்ஸாரத்தை நினையாதாப் போலவும், அவன் மார்வில் போக்யதையறிந்த பின்பு பூவை நினைத்திலள். அஸங்குசிதஜ்ஞகரா யிருக்கச் செய்தே ஸம்ஸாரத்தைக் காணாதவிடம் ஜ்ஞாநக் குறையன்றே: போக்யதாதிசயமிறே; இவளும் போக்யதையாலேயிறே காணாதொழிகிறது. (உறை மார்பா) இவள் பூவைக் காணாதவோபாதி திருமார்வுக்கு அவ்வருகு அவயவங்களைக் காணாள். மற்றுள்ள அவயவங்கள் குமர் கிடந்து போமத்தனை. இவ்வளவால் சொல்லிற்றாயிற்று - ஸ்ரீசப்தமும், மதுப்பிலர்த்தமும். ஸ்ரீசப்தம் புருஷகாரம் வேண்டுகையாலே சொல்லிற்று; மதுப்பில் நித்யயோகத்துக்கு ப்ரயோஜநமென்? என்னில்; ஆச்ரயிப்பார்க்குக் காலம் பார்க்கவேண்டாதபடி ஸதா ஸந்நிஹிதம். (நிகரில் புகழாய் இத்யாதி) நாராயண சப்தார்த்தம் சொல்லுகிறது. இதுக்குப் பொருள் – உபயவிபூதி யோகமும், “நராஜ்ஜாதாநி தத்வாநி” என்கிறபடியே ஜகத்காரணத்வமும் அர்த்தமாகச் சொல்லாநிற்கச்செய்தே, நம்மாசார்யர்கள் ஆச்ரயணத்துக்கு ஏகாந்தமான ஸௌலப்யாதி குணங்கள் நாலையும் சொல்லிப் போருவர்கள்; அக்குணங்களுக்கு க்ரமம் அருளிச்செய்கிறார் இவர். அக்குணங்கள் சொல்லுகிறவிடத்தில், வாத்ஸல்யம் முன்னாகச் சொல்லுவானென்? என்னில்; ஸாபராதனாகையாலே இவ்வபராதம் பொறுக்கைக்கு உறுப்பாகப் புருஷகாரம் வேண்டினால், அநந்தரம் இவ்வபராதம் போக்யமாவதொரு குணம் முன்னாக வேண்டுகையாலே. “நிகரில் புகழாய்” என்ன வாத்ஸல்யதைக் காட்டுமோ? என்னில்; இதுக்குப் பொருள் கத்யத்திலே “அபாரகாருண்ய ஸௌசீல்ய வாத்ஸல்ய” என்று குணங்களோடொக்கவெடுத்து, “ஆச்ரித வாத்ஸல்யைக ஜலதே” என்று இக்குணத்தை விசேஷிக்கையாலே சொல்லிற்று. (உலகமூன்றுடையாய்) கீழ்ச் சொன்ன வாத்ஸல்யத்துக்கடியான குடற்றுடக்கைச் சொல்லுகிறது. தன் வயிற்றிற் பிறப்பாலேயிறே ஜநநி வத்ஸலையாகிறது. “என்னையாள்வானே” என்று ஸௌசீல்யத்தைச் சொல்லுகிறது. “என்னையாள்வானே” என்று கைங்கர்ய தசைபோலே, உபகாரந் தோற்றச் சொல்லப் பெறுவரோ ஆகிஞ்சந்யம் முன்னாக ஆச்யிக்கிறவரென்னில்? அவன் கைவிடாமல் கைக்கொள்ளுகைக்காக. புருஷகாரத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார் ப்ரதம பதத்தில்; அநந்தரம் உபாயத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார்; இதில் நாட்டைப் பார்த்துச் சொல்லுகிறார். விஷயாந்தாங்களினுடைய லாபாலாபமே பேறிழவாகவிருக்கிறவர்களிலே அந்யதமராயிருக்கிற தம்மை, “கர்மாத்யுபாயங்கள் ஸ்வரூப விரோதி” என்றறியுந்தனையும் வர நிறுத்தி, பிராட்டி புருஷகாரமாகத் தானேயுபாயமும் தானே ப்ராப்யமும் என்னும்படி பண்ணின உபகாரத்தைச் சொல்லுகிறார். இது ஸௌசீல்யமானபடி யெங்ஙனே? என்னில்; “சீலம் ஹி நாம மஹதோ மந்தைஸ் ஸஹ நிரந்த்ரேண ஸம்ச்லேஷ:” என்கிறபடியே, தன் மேன்மையையும் என் சிறுமையையும் பாராதே ஒரு நீராகக் கலந்தானென்கிறார். “நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே” என்று ஸௌலப்யம். “அமரர் முனிக்கணங்கள்” என்கிற த்வைவித்யம் “வைகுந்தத்தமரரும் முனிவரும்” என்றும், “பக்தைர் பாகவதைஸ் ஸஹ” என்றுஞ் சொல்லுகையாலே. “நிகரில்” என்பானென்? என்னில்; இவர்களுக்கு ஒருவருமொப்பல்ல. ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே ஸம்ஸாரிகளொப்பல்லர்; ப்ரக்ருதி ஸம்பந்தாத் நிர்க்கதராகையாலே முக்தரொப்பல்லர்; ஜகத்வ்யாபாராதிக ளுண்டாகையாலே ஈச்ரவரனொப்பல்லன். “ஜகத் வ்யாபார வர்ஜம்” என்று நிஷேதித்து, “போகமாத்ர ஸாம்யலிங்காச்ச” என்று பகவதநுபவத்திலே அந்வயம். (விரும்புந் திருவேங்கடத்தானே) இவர்களுக்கு விருப்பமாவது, இருட்டறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும் “கானமும் வானரமும்” என்கிறபடியே எத்தனையேனுந் தாழ்ந்தார்க்கும் முகங் கொடுக்கிற சீலாதி குணங்கள் இங்கேயுண்டாகையாலே, அங்கில்லாததும் இங்கே பெறுகையாலே விரும்புவர்கள்; ஸௌலப்யமாவது உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசியற ஸர்வஸுலபமான அர்ச்சக பராதீநத்வம்.

– இந்தப் பாசுரமானது ப்ரபத்தியை அருளிச்செய்கிறது என்பதற்கு மூன்றாவதாக ஒரு கருத்தை அருளிச்செய்கிறார். ப்ரபத்தியில் அனைவருக்கும் ஈடுபாடு ஏற்படவேண்டும் என்பதற்காக, ப்ரபத்தியின் வைபவத்தை முதலில் அருளிச்செய்கிறார். இதிஹாஸம், புராணம் போன்ற அனைத்துவிதமான சாஸ்த்ரங்களிலும் வ்யாபித்து நிற்பதும்; இப்படிப்பட்ட சாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் அடியாக உள்ள வேதாந்தங்களுக்குக் காரணமாக உள்ளதும்; அனைத்து ஆசார்யர்களும் ஒரே போன்று ஆதரித்தபடி கைக்கொள்வதும் ஆகிய ப்ரபத்தியை இந்தப் பாசுரம் மூலம் அருளிச்செய்கிறார். நம்முடைய ஆசார்யர்களுடைய ஆதரவு மட்டும் இல்லாமல், இந்த ஆழ்வார் ஏற்றுக் கொண்டதுமாக உள்ளது என்பதைக் கூறுகிறார்; இந்த அனைத்து ஆசார்யர்களுக்கும் முதன்மையான ஆசார்யராக, “மயர்வற மதிநலம் அருளினன்” என்பதற்கு ஏற்ப, பகவானுடைய க்ருபையால் பெற்ற தெளிவான ஞானத்தைக் கொண்டவராக உள்ள இந்த நம்மாழ்வார், இத்தகைய ப்ரபத்தியை ஏற்பதால், இதற்கு மேலும் ஏதும் ஓர் ஏற்றம் வந்தது. – இவளுடைய அங்கீகாரம் காரணமாக ப்ரபத்திக்கு மேலும் ஓர் ஏற்றம் வந்தது என்றால், இவருக்கு உண்டான அத்தகைய ஏற்றம் யாது என்பதைக் கூறுகிறார்; இப்படிப்பட்ட ப்ரபத்தியைப் பின்பற்றாதவர்கள் செய்வது என்னவென்றால், இவனையே உபாயமாகக் கொண்டு மற்ற ப்ரயோஜனங்கள் பின்னே செல்வர் அல்லது மற்ற உபாயங்கள் மூலம் இவனையே ப்ரயோஜனம் என்று கொள்வர். ஆனால் அவ்விதமாக இன்றி, இவனையே உபாயமாகவும் உபேயமாகவும் கொண்டவர் என்னும் ஏற்றம் நம்மாழ்வாருக்கு உள்ளது. அடுத்து, மற்ற உபாயங்களில் உள்ள தோஷங்களையும், ப்ரபத்தியில் இப்படிப்பட்ட தோஷங்கள் ஏதும் இல்லை என்பது தொடக்கமாக உள்ள ப்ரபத்தியின் மேன்மைகளையும் காண்பிக்கிறார்; அடையப்படும் இலக்கு இவனே ஆவான் என்றுள்ளபோது மற்ற உபாயங்களைக் கைக்கொள்வதில் உள்ள குற்றம் என்ன என்பதைக் கூறுகிறார்; அவை அனைத்தும், சேதநர்களுடைய சொந்த முயற்சியால் மட்டுமே இயற்றப்படுவதாகவும், தர்மம் போன்றதான இந்த உபாயங்கள் பலவாக உள்ளதாகவும், செய்வதற்குக் கடினமாகவும், பகவானுக்கு மட்டுமே வசப்படுதல் என்பதாக உள்ள ஸ்வ்ரூபத்திற்கு விரோதமாகவும் உள்ளன. வ்யாக்யானத்தில் “ஸாத்யமும்” என்று கூறியதை விளக்குகிறார். இப்படிப்பட்ட மற்ற உபாயங்கள் பல உள்ளன. அதாவது கர்மயோகம், ஞானயோகம் போன்றவைகளும், திருநாம ஸங்கீர்த்தனம் போன்றவைகளுக்கும், வேதாந்தங்களில் கூறப்பட்டதன் காரணமாக, அங்கங்களாக உள்ளன. ஆயினும் இதிஹாஸம் மற்றும் புராணங்கள் கூறுவதற்கு ஏற்ப அவை சுதந்திரமான உபாயங்களாகவும் உள்ளன என்கிறார்; மற்ற உபாயங்களாக உள்ள பலவும் எவை என்றால் கர்மயோகம், ஞானயோகம் மற்றும் பக்தியோகம் ஆகியவை ஆகும். இவற்றில் கர்மயோகமானது, சரீரம் மற்றும் ஆத்மாவைக் குறித்து, உள்ளது உள்ளபடி தெளிந்து, இதன் மூலம் தனது வர்ணத்திற்கும் ஆச்ரமத்திற்கும் விதிக்கப்பட்ட கர்மங்களை, அவை மூலம் கிட்டவல்ல ஸ்வர்கம் போன்ற பலன்களில் எந்தவிதமான விருப்பமும் இன்றி, “நாம் செய்கிறோம்” என்ற எண்ணம் இன்றி, “பகவானுடைய துணையைக் கொண்டு நாம் செய்கிறோம்” என்று எண்ணியபடி, அவற்றைக் குறித்து ஏதும் சிந்திக்காமல் இயற்றியபடி, “இவை அனைத்தும் பகவத் ஆராதனமாகவே செய்யப்படுகின்றன” என்ற எண்ணத்துடன் கைக்கொள்ளுதல் ஆகும்; இதன் மூலம், ஞானம் ஏற்படத் தடையாக உள்ள பாபங்கள் நீங்கும்; பாபம் அழிந்தவுடன் மனதில் உள்ள களங்கங்கள் விலகும்; இதனால் ஆத்மஸ்வரூபம் நன்கு புலப்படும்; இதன் விளைவாக பகவானைக் குறித்து அறியவல்ல ஞானமும், அவனிடம் ப்ரேமையும் ஏற்படும்; தொடர்ந்து “பகவானைச் சேர்ந்துள்ளபோது இன்பம், பிரிந்திருக்கும்போது துன்பம்” என்பதான பரபக்தி, “பகவானைத் தேடி தெளிவாக அறிதல்” என்பதான பரஞானம் மற்றும் “அவனைப் பிரிந்தால் இருப்பிற்கே கேடு ஏற்படும் நிலை” என்பதான பரமபக்தி ஆகியவையாகிய பேற்றுடன் ஸம்பந்தம் ஏற்படும். ஞானயோகம் என்பது, இந்த்ரியங்களைத் தன்வயப்படுத்தி, ஆத்மஸ்வரூபத்திற்கு அவற்றைக் கொண்டு, அத்தகைய ஸ்வரூபத்தை அவற்றுக்கு விஷயமாக்கினால், பகவானைக் குறித்து அறியும் தெளிவும், பகவத் விஷயமான ப்ரேமையும் ஏற்படும்; அவை ஏற்பட, பரபக்தி பரஞானம் பரமபக்தி பிறந்து, பேற்றுடன் சென்று சேர்க்க வைப்பதாகும். அடுத்து பக்தியோகம் என்பது என்ன என்பதை விளக்குகிறார். இவ்விதம் அல்லாமல், கர்மத்தைப் பகவத் ஆராதனமாகவும் ஞானத்தைப் பகவத் விஷயமாகவும் செய்தல் என்னும் கொள்ளலாம். இப்படி இந்த இரண்டையும் பகவத் விஷயத்தில் ஆக்கினால், கீதை (9-34) – மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு - என்னிடம் மனம் வைத்தவனாக, எனது பக்தனாக, எனனை நமஸ்காரம் செய்தபடி இருப்பாயாக - என்பதற்கு எற்ப பரபக்தி, பரஞானம், பரமபக்தி பிறக்கும்; அதன் பின்னர் பேற்றோடு நிறைவு செய்தலானது, பக்தி யோகம் எனப்படும். – இவற்றைப் போன்று கைக்கொள்வதற்கு கடினமாக இல்லாமல் எளிதான உபாயமாக திருநாமம் ஸங்கீர்த்தனமானது மஹாபாரதத்தில் உள்ள ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் விதிக்கப்பட்டது. எங்கே என்பதற்கு விடை அளிக்கிறார். இதனை மஹாபாரதம் அநுசாசன பர்வத்தில் உள்ள பீஷ்மர் மற்றும் தர்மர் உரையாடலில் காணலாம் என்று கூறுகிறார்; பீஷ்மர் தர்மபுத்திரனுக்குப் பல தர்மங்களையும் உரைத்தார்; அப்போது தர்மன் பீஷ்மரிடம் மஹாபாரதம் - கோ தர்மஸ் ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத: - பல தர்மங்களில் எந்தத் தர்மமானது உம்மாம் உயர்ந்த தர்மமாக கொண்டாடப்படுகிறது - என்றான். அதாவது “உமது நெஞ்சத்தில் நீவிர் உயர்ந்த தர்மமாக உறுதி பூண்டுள்ளது எது எனக் கூறவேண்டும்”, என்றான். இதற்குப் பீஷ்மர் - ஏஷ மே ஸர்வதர்மாணாம் - இதுவே அனைத்து தர்மங்களிலும் உயர்ந்தது என்று என்னால் உறுதியாகப்பட்டது - என்றார். இதன் மூலம் மிகவும் உயர்ந்த திருநாம ஸங்கீர்த்தனமே உயர்ந்த தர்மம் என்று கூறினார் அல்லவோ? ஆனால், திருநாம ஸங்கீர்த்தனம் என்பது உபாயத்தின் அங்கமாக மட்டுமே உள்ளதாகும் அல்லவோ; அது தானாகவே ஸாதனமாக அமையுமோ என்பதற்கு விடை தருகிறார்; ஜந்ம ஸம்ஸார பந்தநாத் முச்யதே - பிறவி என்னும் ஸம்ஸார பந்தங்களிலிருந்து விடுபடுகிறான் - என்று விரோதிகள் விலகுவதையும், யாதி ப்ரஹ்ம ஸநாதநம் - ப்ரஹ்மத்தை அடைகிறான் - என்று பலனை அடைதல் குறித்தும் கூறி நிறைவு செய்யப்படுவதால், தடைகள் விலகி தனக்கு விருப்பமான பலனை அடையும்படிச் செய்வதால், திருநாமம் ஸங்கீர்த்தனமானது, தானே உபாயமாக அமைகிறது. கருடபுராணத்தில் – தேசோயம் ஸர்வ காமதுக் – இந்தத் தேசம், விரும்பிய அனைத்தையும் தருவதாகும் - என்று விரும்பிய அனைத்தையும் பெற்றுத் தருவதற்கு ஏற்ற ஒரு ஸாதனமாக திவ்ய தேசங்களில் வசித்தல் என்பது கூறப்பட்டது. மேலும் - ஆராதநாநாம் ஸர்வேஷாம் – அனைத்து ஆராதனங்களிலும் – என்று தொடங்கி, ததீயாராதநம் பரம் - பகவத் பக்தர்களை ஆராதிப்பதே சிறந்தது - என்று கூறி உள்ளதால், அனைத்து விருப்பங்களும் பகவத் அடியார்களை ஆராதிப்பதால் நிறைவேறும் என்று கூறப்பட்டது. இப்படியாகக் கூறப்பட்ட உபாயங்களாகிய கர்மயோகம் தொடக்கமாக பகவத் பக்தி ஆராதனை முடிய உள்ள அனைத்துமே கைக்கொள்ள கடினமாக உள்ளதுடன் மட்டும் அல்லாமல் “நான் செய்கிறேன்” என்னும் அஹங்காரத்தை உள்ளடக்கி உள்ளதால், அஹங்காரத்தின் ஸம்பந்தம் உண்டாவதால், கைவிடத்தக்கதாகக் கூறப்பட்டன; அதாவது இவை அனைத்தும் கைவிடத்தக்கவை என்று கீதையின் சரமச்லோகத்தில் கூறப்பட்டது. இப்படியாக மற்ற உபாயங்களின் தோஷங்களை அருளிச்செய்து, தொடர்ந்து ப்ரபத்தியின் மேன்மையை அருளிச்செய்ய எண்ணியவராக, நம்மாழ்வார் அத்தகைய மேன்மையை இந்தத் திருப்பாசுரத்தால் அருளிச்செய்கிறார் என்று அடுத்து கூறுகிறார். ஒன்றாகவும், எப்போதும் உள்ளதாகவும், கைக்கொள்வதற்கு எளியதாகவும், இவ்விதம் உள்ள தனக்கு சமமாக வேறு ஏதும் இல்லாததாகவும், தைத்தரீயத்தில் – தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு – இதுவரை கூறப்பட்ட தவங்கள் அனைத்திலும் ப்ரபத்தியானது மேன்மையானது என்று கூறுகிறார்கள் - என்று கூறப்படுவதாகவும் உள்ள ப்ரபத்தி உபாயத்தை இந்தப் பாசுரத்தால் கூறுகிறார். அடுத்து, அர்ச்சாவதாரமே ப்ரபத்திக்கு மிகவும் முக்கியமாக விதிக்கப்பட்ட ஒன்று என்பதையும் வெளிப்படுத்தவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டவராக, பரத்வம் போன்றே வ்யூஹ விபவ நிலையின் அடைவதற்கு அரிய தன்மைகளையும், அர்ச்சாவதாரத்தின் எளிமையையும் அருளிச்செய்கிறார்; மேலே உள்ள ஒன்பது பாசுரங்கள் மூலம் அடையத்தக்கவனாக உள்ள ஸர்வேச்வரனுடைய ஸ்வருபம் மற்றும் அவனை அடையும் அதிகாரியின் ஸ்வரூபம் ஆகியவற்றை கூறி, இந்தப் பாசுரம் மூலம் சரணாகதியின் விதத்தை கூறுகிறார். – அடையலாம்படி உள்ள ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம் என்பது திருவாய்மொழி (6-10-9) - நால்தோள் அமுதே - என்றும், திருவாய்மொழி (6-10-7) - அடியேன் மேவி அமர்கின்ற அமுதே – என்றும், திருவாய்மொழி (6-10-3) – அண்ணலே – என்றும், திருவாய்மொழி (6-10-2) - கூறாய் நீராய் – என்றும் உள்ள பலவற்றிலும் கூறப்பட்டது போன்று எல்லையற்ற இனிமை கொண்டதாகவும், இயல்பாகவே உள்ள ஸம்பத்துடன் கூடியதாகவும், அனைவரும் அனைத்துவிதங்களிலும் சுலபமாக அடையலாம்படி உள்ளதும் ஆகும். பரம் மற்றும் வ்யூஹம் போன்ற நிலைகளில் உள்ள அடைவதற்கு அரிய தன்மை மற்றும் அர்ச்சாவதாரத்தில் உள்ள எளிமை ஆகியவற்றை உணர்த்தும்விதமாக, மற்ற அனைத்து குணங்களைக் காட்டிலும் அவனை அடைந்து பற்றுதற்கு மிகமும் அவசியமாக விரும்பத்தக்கது “எளிமை” என்னும் “ஸௌலப்யம்” ஆகும் என்பதைக் கூறுகிறார்; மற்ற அனைத்து குணங்கள் போன்று அல்லாமல் அவனை அண்டி நின்று பற்றுவதற்கு ஒரே குணமாக உள்ளது ஸௌலப்யமே ஆகிறது. இப்படிப்பட்ட ஸௌலப்யமானது பரம் மற்றும் வ்யூஹம் போன்ற நிலைகளில் இல்லையோ என்பதற்கு விடை தருகிறார்; அவை தகுதி கொண்டவர்களுக்கு மட்டுமே உறுப்பாக உள்ளதால், பரம் மற்றும் போன்றவற்றில் ஸௌலப்யத்தின் ஆதிக்கம் இல்லை என்கிறார்; பரத்வம் என்ற நிலையானது, சேதநனுக்கு ருசி ஏற்பட்டவுடன், பற்ற முடியாமல் தூரமாக இருப்பதாகும்; ஆனால் வ்யூஹம் என்பது பூமியில் உள்ளது அல்லவோ என்றால், இந்த நிலையானது நான்முகன் போன்றவர்களுக்காகவே உள்ளது. சரி, ஆனால் அவதாரங்கள் அனைத்து சேதநர்களுக்கும் அருகில் உள்ளதால், அவற்றில் ஸௌலப்யம் குறையாது அல்லவோ என்றால், அவை புண்ணியம் நிறைந்தவர்களுக்கு, அந்தந்த காலகட்டத்தில் உதவியது போன்று, பிற்காலத்தில் வந்தவர்களுக்கு உதவவில்லை என்பதால், காலத்தால் கழிந்த ஒன்றாகவே உள்ளதாகும். “இடம் மற்றும் காலம் ஆகிய இரண்டாலும் தொலைவில் உள்ளது” என்ற இரண்டு குறைகளும் இல்லாமல், அனைத்து காலங்களிலும் அனைவராலும் வந்து அண்டும்படியாக, திருவாய்மொழி (3-3-2) - வானவர் வானவர்கோனோடும் - என்பதற்கு ஏற்ப நித்யஸூரிகளோடு, அருகில் உள்ள நான்முகன் போன்றவர்களோடு, இந்தப் பூமியில் உள்ள மனிதர்களோடு, நான்முகன் திருவந்தாதி (47) - கானமும் வானமும் - என்பதாக அறிவற்ற பிறவிகளோடு, என எந்தவிதமான வேறுபாடும் இன்றி, அனைவருடன் கலக்கலாம்படி நிற்பதால், அனைவரும் அண்டி நிற்கலாம்படி உள்ள இடம் எதுவென்றால் திருவேங்கடமுடையானுடைய திருவடிகளே ஆகும். அனைவராலும் அண்டப்படுபனாக உள்ளபோது, கார்யத்தைச் செய்து தருவதற்கு உபாயமாக உள்ள ஞானம், சக்தி போன்றவற்றுடன் கூடியவனாக இருக்கவேண்டாமோ, வெறும் ஸௌளப்யம் மட்டும் போதுமானதோ என்பதற்கு விடை தருகிறார். விடாத இயல்பு கொண்டவன் என்பதால், விரும்பிய அனைத்தையும் நல்குவதற்கு ஏற்ற ஞானம், சக்தி போன்ற எட்டு குணங்கள் கொண்டவன் என்பதால், அனைத்து குணங்களாலும் நிறைந்தபடி உள்ளதால், அனைவராலும் அண்டத்தக்கவனாக திருவேங்கடமுடையான் உள்ளான். – அனைவராலும் அடையத்தக்கவனாக உள்ள ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தை உறுதியாக்கிய பின்னர், அதிகாரியின் ஸ்வரூபம் இன்னது என்று காண்பிக்கிறான். அதிகாரியின் ஸ்வரூபம் என்பது “புகல் ஒன்று இல்லா அடியேன்” என்பதாக உள்ள “வேறு கதியற்ற தன்மை” மற்றும் “ஆறா அன்பில்” என்பதாக உள்ள “அடையத்தக்கதாக உள்ள பேற்றில் ருசியும், தான் பகவானுக்கு அடிமை என்ற ஞானம் என்பதாகிய ஸ்வரூப ப்ரகாசம்” ஆகியவையே ஆகும். ஆனால் முன்பு “கானமும் வானரமுமாய்” என்றுள்ள வாக்கியத்தால் விளங்கும் “விலங்குகளும் அவனை அண்டியபடியே நிற்கும்” என்பதை, “விலங்குகளுக்கும் இவ்விதம் அவனை அடைதல் கூடுமோ?”, என்று சந்தேகத்தை எழுப்பிக் கொண்டு, இதனை ஒரு உதாரணத்தால் விளக்குகிறார். ஸ்ரீகஜேந்த்ராழ்வான் எப்போதும் பகவானை எண்ணியபடியே இருத்தான் என்று புராணங்களில் எழுதியும், அதனை நாம் கூறியும் கேட்டு செய்கிறோம் அல்லவோ? இதனை ஆழ்வார்களும் அருளிச்செய்தனர் என்பதைக் கூறுகிறார்; இதனை நான்முகன் திருவந்தாதி (46) - வைப்பன் மணிவிளக்கா மாமதியை மாலுக்கென்றெப்பொழுதும் கைநீட்டும் யானையை - என்றும், மூன்றாம் திருவந்தாதி (70) – புகுமதத்தால் வாய் பூசிக் கீழ்தாழ்ந்தருவியுகு மதத்தால் கால்கழுவிக் கையால் மிகு மதத்தேன் விண்டமலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு - என்றும், பெரியாழ்வார் திருமொழி (5-3-3) - புனத்தினைக் கிள்ளிப் புதுவலிக் காட்டி யுன்பொன்னடி வாழ்கவென்றினக் குறவர் புதிய துண்ணுமெழில் மாலிருஞ்சோலையெந்தாய் - என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்ததன் மூலம் உணரலாம். ஆனால் கஜேந்த்ரன் பகவானை அண்டி நின்றான் என்பது ரிஷிகளுடைய சொற்களில் கூறப்பட்டதால் ப்ராமாணம் ஆகிறது; ஆழ்வார்கள் இதனை அருளிச்செய்தமை என்பது ப்ரமாணமானது எப்படி என்பதைக் கூறுகிறார்; இந்த ப்ரமாணங்களைக் காட்டிலும் ஆழ்வார்கள் சொற்களில் அதிகமாக நம்பிக்கை வேண்டும்; அவ்விதம் கொள்ளவில்லை என்றாலும், அந்த ப்ரமாணங்களின் அளவாவது நம்பிக்கை வேண்டும். மேலும் ஸர்வேச்வரன் விஷயத்தில் செய்யப்படும் சரணாகதியானது பலனுடன் சேர்ந்துள்ளது போன்று, ஆநுகூல்யம் முதலான தன்மைகளுடன் உள்ள ஒரு அதிகாரி சரணம் புகும்போது, பலனுடன் கூடியே இருக்கும் என்ற கருத்தும் கூறப்படுகிறது. அடுத்து “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கையுறை மார்பா” என்று தனது வெறுமையை முன்னிட்டுக் கொண்டு, பெரியபிராட்டியாரைப் பரிந்துரை செய்பவளாகக் கொண்டு, மிகவும் எளிதாக அடையக்கூடியவனாக உள்ள திருவேங்கடமுடையான் திருவடிகளில் விழுந்து சரணம் புகுகிறார். (அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கையுறை மார்பா) - ஸர்வேச்வரன், வேறு எதனையும் எதிர்பார்க்காமல் உள்ள உபாயமாக உள்ளான் என்னும்போது, பெரியபிராட்டியாரின் சிபாரிசு மற்றும் அதிகாரியின் தகுதிகள் ஆகியவற்றை ஏன் எதிர்பார்க்கவேண்டும். என்பதற்கு விடை தருகிறார்; ஸர்வேச்வரன் என்ற இந்த உபாயம், வேறு ஒரு சாதனம் மூலம் பெறப்பட வேண்டியது என அல்லாமல், எப்போதும் தயாராக உள்ள ஸித்தோபாயம் ஆகிறான்; எந்த எதிர்பார்ப்பும், வேறு ஒன்றை வேண்டிக் கொண்டு இருப்பதும் இல்லாத உபாயம் ஆவான்; ஏன் என்றால், தனது தன்மையில் உள்ள வேறுபாடுகளால் ஆகும். இவன் எந்தவிதமான எதிர்பார்த்தலும் இல்லாமல் உள்ளது எப்படி என்ற ஐயத்திற்கு விடை தருகிறார். தன்னை அடைவதில் உள்ள ருசியைப் பிறக்கும்படிச் செய்வதும், அவ்விதம் பிறந்த ருசியை வளர்ப்பதும், தன்னை வந்தடையத் தடையாக உள்ள விரோதிகளை விலக்குவதும், பரமபதத்திற்குக் கொண்டு செல்வதும், அங்கு பெறப்பட்ட வேண்டிய கைங்கர்யத்தை ஏற்பதும் என்பதுமான அனைத்து நிலைகளிலும், எந்தவிதமான எதிர்பார்ப்ப்ம் இன்றி, தானே செய்கிறான். இவற்றுக்கு எந்தத் துணையும் அவசியம் இல்லை. அடுத்து, “அதிகாரியும், சிபாரிசும் வேண்டும்” என்பதைக் கூறுகிறார். இந்த உபாயம் யாருக்கு என்றால், “அதிகாரிக்கு” என்று கூறுவதால், “ஒரு அதிகாரி வேண்டும்” என்றாகிறது. அதிகாரி போன்றே சிபாரிசாகிய ஒரு புருஷகாரமும் வேண்டும் என்று கருத்து. “புருஷகாரம் வேண்டும்” என்பதை விளக்குகிறார்; அந்த அதிகாரி, தன்னுடைய “முன்னர் செய்த குற்றங்கள், ஸர்வேச்வரனுக்குத் தண்டிப்பதில் உள்ள சுதந்திரம்” ஆகியவற்றை எண்ணி, சரணம் புகுவதற்குப் பின்வாங்கும்போது, “அஞ்சாதே” என்று சிபாரிசு செய்யும் ஒருவர் வேண்டும் என்பதால், “அதிகாரி வேண்டும்” என்பது போன்று, புருஷகாரமும் தேவையாகவே உள்ளது. (அகலகில்லேனிறையும்) – “ஒரு க்ஷண காலம் கூடப் பிரிவதற்கு ஆற்றல் கொண்டவள் அல்லேன்”; இவ்விதம் கூறுபவள் யார் என்பதற்கு விடை தருகிறார். “அலர்மேல் மங்கை” என்ற சொல்லை விளக்குகிறார். “அலர்மேல் மங்கை” என்பதன் பொருளாக உள்ள “ஸ்ரீ” என்ற சொல்லில் இருக்கும் “ஸ்ரீயதே” என்பதான கர்மணி வ்யுத்பத்தியில், அதாவது செயல்பாட்டு வினையின், வணங்கப்படுபவர்கள் இன்னார் என்று சிறப்பித்துக் கூறப்படவில்லை; ஆகவே, மூன்றுவித சேதனர்களால், தங்களுடைய ஸ்வரூபம் காரணமாகவும், ஸர்வேச்வரனால் அவனுடைய காதல் காரணமாகவும், அண்டி இருக்கத்தக்கவள் என்பதை அருளிச்செய்கிறார். பக்தர் முக்தர் மற்றும் நித்யர் என்பதை மூன்றுவித சேதனர்களுக்கு எஜமானியும், நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டிர்ற்கும் நாதனான ஸர்வேச்வரனையும் நியமிப்பவளும் என்பதற்கு ப்ரமாணம் ஸ்ரீஸூக்தம் - ஈச்வரீம் ஸர்வபூதாநாம் – அனைத்து உயிர்களுக்கும் ஈச்வரி - என்பதாகும். இரண்டு விபூதிகளுக்கும் நாதனாக உள்ளவனையும் நியமிப்பவள் என்பதற்கு ப்ரமாணம் “பும்ப்ரதாந் ஈச்வரேச்வரீம் - புருஷர்களில் முதன்மையான ஈச்வரன், அவனுக்கு ஈச்வரீ” என்பதாகிறது. இப்படியாக அனைவரையும் நியமிப்பவள் என்பது கூறப்பட்டது. இவள் இப்படியாக அனைவரையும் நியமிக்கும் விதம் என்ன என்பதைக் கூறுகிறார்; மூன்றுவிதமான சேதநர்களைத் தனது தாயாக உள்ள தன்மையால் நியமிக்கிறார். ஈச்வரனைத் தனது காதல் மூலமாக நியமிக்கிறாள். ஆனால், தாயாக உள்ள தன்மையானது இயல்பாகவே ஸ்வரூபத்துடன் சேந்து இருப்பது ஆகும்; காதல் என்பது ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படுவது என்பதால், “வந்து சேர்ந்த தன்மை” என்றாகாதோ என்றால், “ஆகாது” என்கிறார். எப்படி? ஸர்வேச்வரனுடைய காதலுக்குக் காரணமாக உள்ள பெரியபிராட்டியின் மேன்மையானது நித்யமானது என்பதால், இவளுடைய காதலும் எப்போதும் உள்ளதாகிறது. இவள் நியமிப்பதை எங்கே காணலாம் என்பதைக் கூறுகிறார். மோக்ஷம் அளித்தல், ஸ்ருஷ்டி செய்தல் போன்ற செயல்களில் அவன் ஈடுபடும்போது, இவளுடைய நியமிக்கும் நிலையைக் காணலாம் என்கிறார்; ஸர்வேச்வரன் ஸ்ருஷ்டி போன்றவற்றைச் செய்யும்போது, இவள் நியமித்தபடி உள்ளாள்; இதற்கு ப்ரமாணம் ஸ்ரீஸ்தவம் - யஸ்யாவீக்ஷ்யமுகம் ததிங்கித பராதீநோவிதத்தேகிலம் – யார் ஒருவருடைய திருமுகத்தை நோக்கி, அவளுடைய கடைக்கண் பார்வைக்கு வசப்பட்டவனாக அனைத்தையும் செய்கிறானோ – என்பதாகும்; இப்படியாக அவளுடைய கடைக்கண் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, அவளுடைய புருவங்களுடைய நெரிப்பிற்கு ஏற்ப ஸ்ருஷ்டி போன்றவற்றைச் செய்கிறான். இவ்விதம் கூறுவது எப்படிப் பொருத்தம்? காரணம் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் - கரணகளேபரைர்க்கடயிதும் தயமாநமநா: - சரீரம் மற்றும் இந்திரியங்களுடன் சேர்ப்பதற்கு ஏற்ற கருணையான மனம் கொண்டவன் - என்பதற்கு ஏற்ப, தனது தயை என்பதை அடிப்படையாகக் கொண்டு அல்லவோ ஸ்ருஷ்டிக்கிறான்? அவற்றில் செல்லாமை நோக்கி ஸ்ருஷ்டிக்கும்போது அல்லவோ தயை காரணமாக உள்ளது; பெரியபிராட்டியாரின் மேன்மையில் ஈடுபட்டவனாக, அவள் கூறியதைத் தட்ட இயலாமல் நிற்பதாகிய தனது செல்லாமை காரணமாக, அவளுடைய கடாக்ஷத்தின் அடிப்படையாக தன்னுடைய இருப்பு உண்டாக, இவள் இவனிடம் கொண்ட காதல் விளைவாக அல்லவோ இவன் படைக்கிறான்? – சரி, இவள் அவனை நியமிப்பதால், “இவள் ஸர்வேச்வரனுக்கு வசப்பட்டவள்” என்ற நிலைக்குத் தாழ்வு ஏற்படாதோ என்பதற்கு விடை தருகிறார்; நீளா ஸூக்தம் - அஸ்யோசாநா ஜகதோ விஷ்ணுபத்நீ - இந்த ஜகத்தின் தலைவியாக, மஹாவிஷ்ணுவின் பத்னியாக - என்றும், ஸ்ரீவிபு. (1-8-17) - விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ – மஹாவிஷ்ணுவை விட்டு சற்று அகலாதவள் - என்று கூறுவதற்கு ஏற்ப, தனது ஸ்வரூபத்திற்கு எந்தவிதமான பங்கமும் ஏற்படாதபடி அவனை நியமிக்கிறாள். தனது ஸ்வரூபத்திற்கு எந்தவிதமான பங்கமும் ஏற்படாதபடி நியமிப்பது எப்படி என்பதைக் கூறுகிறார். ஒளியானது தன்னை வெளிப்படுத்துவதாகிய ஒளி கொண்ட வஸ்துவிற்கு அடிமை அடிமையாக நின்று, அந்தப் பொருளிற்கு மேன்மையை உண்டாக்குவது போன்றும்; நறுமணமானது மலர்களுக்கு அடிமையாக நின்று மலர்களின் மதிப்பை உயர்த்தியபடி உள்ளது போன்றும் அல்லவோ இவள் அவனுக்கு மட்டும் வசப்பட்டவளாக நின்று, அவனுக்கு மேன்மையை அளிக்கிறாள்! இவளுக்கு “அகலகில்லேன்” என்று வெளிப்படையாக கூறும்படியாக அகல்வது உண்டாகுமோ என்ற ஐயத்தை விலக்குகிறார்; பிரிவு ஏற்படக் காரணம் கர்மம் அல்லவோ? கர்ம ஸம்பந்தம் இவளுக்கு இல்லை என்னும்போது, இவள் “அகலகில்லேன்” என்று கூறுவது பொருந்துமோ? இதற்கு விடை அளிக்கிறார். கர்மத்தைப் போன்று அவனுடைய மேன்மையைக் காரணமாக் கூறுகிறார். ஆனால் மேன்மையானது இனிமையே ஆகும் அல்லவோ? அது ஒருவனுக்கு “மேன்மேலும் ஈச்வரனை அனுபவிக்க வேண்டும்” என்ற ஆசையை ஏற்படுத்துதல் அல்லாமல், “இறையும் அகலகில்லேன்” என்று கூறும்படிச் செய்யுமோ? இதற்கு விடை தருகிறார். ஒருவனுக்கு விலை மதிப்பற்ற இரத்தினம் ஒன்று கிடைத்தால், “இது நமக்கு நீடித்து நிலைக்குமோ” என்று எப்போதும் துணுக்குதுணுக்கு என்றே இருப்பான்; அது போன்று இவளும், “இவனுடைய திருமார்பிலிருந்து நாம் அகன்றால் என்ன செய்வது”, என்று அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லாத இடத்திலும், அச்சம் கொள்கிறாள். – (இறையும் அகலகில்லேன்) - புணர்ச்சிக்கு அங்கமாக உள்ள பிரிவை நான் பொறுக்கமாட்டேன்; புணர்ச்சிக்கு அங்கமான பிரிவு என்றால், இறுக்கமாகத் தழுவிக் கொள்வதற்காக சற்றே நெகிழ்த்துக் கொண்டு அணைத்தல்; அத்தகைய நெகிழ்வையும் கூடப் பொறுக்கமாட்டேன் என்கிறாள். இதனை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார். அவன் உபாயமாக உள்ளபோது, ஆநுகூல்ய ஸங்கல்பம் போன்ற ப்ரபத்தியின் ஆறு அங்கங்களைப் பொறுத்துக் கொள்ளாத அபிமானம் போன்று, புணர்ச்சிக்கு அங்கமாக உள்ள பிரிவு என்பதையும் கூடப் பொறுத்துக் கொள்ளாத மென்மை கூறப்பட்டது. “இறையும் அகலகில்லேன்” என்று யாரைக் குறித்துக் கூறுகிறாள் என்பதற்கு விடை தருகிறார். அவனுடைய திருமார்பில் அமர்ந்தவளாக, அவன் திருமுகத்தை நோக்கி, “உன்னை விட்டு அகலும் சக்தி அற்றவளாக உள்ளேன்” என்று அவனுடைய மேன்மையை அவனுக்குக் கூறுகிறாள். தனக்குத்தானே அவன் அனைத்தையு அறிந்தவன் ஆவான்; இப்படி உள்ள அவனுக்கு, அவனுடைய மேன்மை என்பது, அவனுடைய ஞானத்திற்கு விஷயமாகவே இருக்கும்; இவ்விதம் உள்ளபோது, இவள் கூறிய பின்னரே அவன் தன்னுடைய மேன்மையை அறிகிறான் என்பது, அவனுடைய ஞானத்திற்குக் குறை அல்லவோ என்பதற்கு விடை தருகிறார்; இவள் கூற அவன் கேட்டுக் கொண்டு அறியவில்லை என்றால், அவனுக்கு இவளிடம் உள்ள காதலில் குறை ஏற்படும் அல்லவோ? இவள் இவ்விதம் கூறவில்லை என்றால், அவனுக்கு இவளிடம் உள்ள காதலானது ஒரு தலைக்காமம் என்றாகிடும். அவன் தன்னுடைய மேன்மையைத் தானே அறியாமல் உள்ளதால், இவள் கூறுகிறாள் என்பதை வேறு ஒரு விதத்திலும் கூறுகிறார்; திருவாய்மொழி (8-4-6) – தனக்குந்தன் தன்மை அறிவரியான் - என்று கூறப்பட்டது அல்லவோ? இவ்விதம் கொண்டால், இவனுடைய “அனைத்தும் அறிந்த தன்மை” என்பதற்கு விஷயம் என்ன என்ற கேள்விக்கு விடை தருகிறார்; இந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்தல் போன்றவை அல்லவோ ஞானத்திற்கு விஷயங்களாக உள்ளன; இதற்கு ப்ரமாணம் திருவாய்மொழி (3-10-8) – ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களுஞ் செய் - என்பதாகும். இவள் “அகலகில்லேன்” என்று கூறினாள்; அவனும் அதற்குச் சமமாக “அகலகில்லேன்” என்று கூறவேண்டாமோ? கூறவில்லை என்றால் இவளுடையது ஒருதலைக்காமம் என்றாகிவிடும் அல்லவோ என்பதற்கு விடை தருகிறார்; “அகலகில்லேன் இறையும்” என்று அவன் இவளிடம் வெளிப்படையாகக் கூற வேண்டாபடி அல்லவோ அவன் நிலை உள்ளது! அந்த நிலையை நாம் எங்கு கண்டோம் என்பதைக் கூறுகிறார்; அவனுடைய மென்மையைக் கண்ட இவளைக் காட்டிலும் அவனுக்கு உள்ள ஏற்றம் என்பது இவளை விட்டு அவன் பிரிந்திருந்து நிலையில் கூறப்பட்ட சொற்களில் காணலாம். ஸுந்தரகாண்டம் (40-10) - மாஸாதூர்த்வம் ந ஜீவிஷ்யே - ஒரு மாதத்திற்கு மேல் நான் பிழைத்திருக்கமாட்டேன் - என்று இவள் கூறினாள்; ஆனால் அவனோ ஸுந்தரகாண்டம் (66-10) - ந ஜீவேயம் க்ஷணமபி - ஒரு க்ஷணம் கூட உயிருடன் இருக்கமாட்டேன் – என்றால் அல்லவோ! சரி, இவ்விதம் அவனைக் காட்டிலும் இவள் அதிக காலம் பிழைத்திருப்பேன் என்றால், இவளுடைய காதலுக்குத் தாழ்வு அல்லவோ என்பதற்கு விடை தருகிறார்; அல்ல, ஒருவனிடம் வசப்பட்டவர்கள், அவன் வரும் காலம் முடிய பொறுத்திருக்கவேண்டும் அல்லவோ; ஆனால் சுதந்திரமாக உள்ள ஒருவனுக்கு அது போன்று இருக்க வேண்டியதில்லை. இப்படியாக இரண்டு இடங்களிலும் மேன்மையுடன் கூடியுள்ள இந்த இருவரையும் உத்தேச்யமாகக் கொள்ளும் முமுக்ஷுக்களுக்கு ஏதேனும் குறை உள்ளதா? இருவரையும் சேர்த்துப் பற்றாமல், தனித்தனியே பற்றலாமே என்பதற்கு விடை தருகிறார்; அவ்விதம் பற்றுபவர்களுடைய ஸ்வரூபத்திற்கு நாசம் ஏற்படும்; “மிதுனமே உத்தேச்யம்” என்று இருப்பவர்களுக்கு, அவர்களுடைய ஸ்வரூபம் பிழைக்கும். இதனை ஸீதையிடம் மட்டுமே அண்டிய இராவணன் விஷயத்திலும், இராமனிடம் மட்டுமே அண்டிய சூர்ப்பணகை விஷயத்திலும் காணலாம். (அலர்மேல் மங்கை) - மலரின் தள்ளத்தக்கதாக உள்ள தாதுவும் சுண்ணமும் நீங்கிய பரிமளமே வடிவம் எடுத்தது போன்ற மென்மையும், எப்போதும் அனுபவிக்கலாம்படி உள்ள பருவமும் கொண்டவள். அவனை “அகலகில்லேன்” என்று கூறும்படியாகச் செய்யவல்ல பல தன்மைகளையும் கொண்ட இவள், தான் “அகலகில்லேன்” என்கிறாள் அல்லவோ? (உறை மார்பா) - அவனுடைய திருமார்பின் தன்மையை நன்கு அறிந்த பின்னர், இவளுக்குத் தனது பிறப்பிடமான தாமரை மலரும் கூட நெருஞ்சி முள் போன்று இருந்தது. ஆனால் நீண்ட காலம் பழகிய ஒன்றை மறக்க இயலுமோ என்பதற்கு விடை தருகிறார்; ஸ்ரீஜநகராஜனுடைய திருமகளாகிய ஸீதை, இராமனுடைய திருக்கரத்தைப் பற்றிய பின்னர், ஸ்ரீமிதிலையை நினைக்காதது போன்றும், முக்தன் ஒருவன் உபநிஷத்தில் - நோ பஜநம் ஸ்மரந்நிதம் சரீரம் - தனது முந்தைய சரீரத்தை நினைவு கொள்வது இல்லை - என்று ஸம்ஸாரத்தை எண்ணாதது போன்றும், அவன் திருமார்பின் இனிமையை அறிந்த இவள், தான் தோன்றிய தாமரையை நினைப்பதில்லை. இங்குள்ள இனிமையின் காரணமாகவே முக்தன் ஒருவன் ஸம்ஸாரத்தை நினைப்பதில்லை என்று கூறவும் வேண்டுமா? ஆனால், ஞானத்தின் குறைவு காரணமாகவே இவ்விதம் நினைப்பதில்லை என்னலாம் அல்லவோ? இதற்கு அருளிச்செய்கிறார். ஞானச்சுருக்கம் அடையாமல், மலர்ந்து இருக்கும் நிலையில் உள்ளபோதிலும் ஸம்ஸாரத்தை எண்ணுவதில்லை என்றால், அது ஞானத்தின் குறைவு காரணமாக அல்ல, அங்குள்ள இனிமையின் மிகுதியே காரணம் ஆகும். இவளும் இந்தத் திருமார்பின் இனிமையால் அல்லவோ தாமரையை எண்ணாமல் உள்ளாள்! – (உறை மார்பா) – “மார்பா” என்பதன் கருத்தைக் கூறுகிறார். இவள் தாமரையை காணாமல் உள்ளது போன்று, அவனுடைய மற்ற எந்த ஒரு திருமேனி அவயவங்களையும் காணாமல், திருமார்பை மட்டுமே காண்கிறாள் என்று கருத்து. மற்ற அவயவங்கள் அனைத்தும் இவளால் அனுபவிக்கப்படும் தகுதி இன்றி உள்ளன. இதுவரை கூறப்பட்டது என்ன? “ஸ்ரீ” என்ற சொல்லின் பொருளும், “மதுப்” என்பதன் பொருளும் கூறப்பட்டது. “ஸ்ரீ” என்பதன் பொருளானது புருஷகாரம் என்பதாகிய “சிபாரிசு வேண்டும்” என்பதால் கூறப்பட்டது. ஆனால் “ஸ்ரீமத்” என்பதில் உள்ள “மதுப்” என்ற விகுதியானது, எப்போதும் சேர்ந்திருத்தல் என்பதைக் குறிக்கிறது; இதனை ஏன் கூறவேண்டும்? இதன் ப்ரயோஜனம் என்ன என்பதைக் கூறுகிறார். அவனைச் சரணம் என்று பற்றுபவர்கள், அதற்கான காலம் பார்த்து நிற்கவேண்டாதபடி, எப்போதும் அருகாமையில் இருத்தல் என்பதே அவர்கள் இருவரும் சேர்ந்திருத்தலின் பயன் ஆகும். – (நிகரில் புகழாய் இத்யாதி) - “நாரயண” என்பதன் பொருள் கூறப்படுகிறது. இதற்கு, “இரண்டு விபூதிகளை உடையவன்” என்றும், பாத்மபுராணத்தில் - நராஜ்ஜாதாநி தத்வாநி - நாரங்களுக்கு இருப்பிடமாக உள்ள நாராயணன் – என்று கூறுவதற்கு ஏற்ப ஜகத்காரணமாக உள்ள பொருளும் கூறப்படும். ஆயினும் நம்முடைய பூர்வாசார்யார்கள், “நாராயணா” என்ற சொல்லிற்கு, அண்டுவதற்கு அவசியமாக உள்ள ஸௌலப்யம் போன்ற குணங்களையே பொருளாகக் கொள்வர்; அந்தக் குணங்களுக்கான வரிசை முறையை இவர் அருளிச்செய்கிறார். ஆனால் இவ்விதம் இந்தக் குணங்களை கூறும்போது, வாத்ஸல்யத்தை ஏன் முதலில் கூறவேண்டும் என்பதற்கு விடை தருகிறார். சரணம் என்று புகும் ஒருவன், அபராதங்களுடன் கூடியவனாக உள்ளதால், அந்த அபராதங்களைப் பொறுத்துக் கொள்ள ஏற்றதோரு புருஷகாரமாகிய சிபாரிசு வேண்டும்; ஆயினும் இந்தக் குற்றங்களையும் குணமாகக் கொள்வதற்கு ஒரு குணம் வேண்டும். ஆகவே வாத்ஸல்யத்தை முதலில் கூறினார். சரி, ஆயினும் “நிகரில் புகழாய்” என்பது வாத்ஸல்யத்தை காண்பிக்குமோ என்பதற்கு விடை தருகிறார்; இவ்விதம் கூறியதன் காரணம், கத்யத்தில் - அபாரகாருண்ய ஸௌசீல்ய வாத்ஸல்ய - எல்லையற்ற ஸௌசீல்யம், வாத்ஸல்யம், கருணை -என்று மற்ற குணங்களுடன் வாத்ஸல்யத்தைச் சேர்த்து எடுத்து, கத்யத்தில் - ஆச்ரித வாத்ஸல்யைக ஜலதே – தன்னை அண்டுபவர்களுக்கு ஸமுத்திரம் போன்று வாத்ஸல்யத்தை காண்பிப்பவன் – என்று இந்த குணத்தைத் தனியாகச் சிறப்பித்துக் கூறியதால் ஆகும். (உலகம் மூன்றுடையாய்) - மேலே கூறப்பட்ட வாத்ஸல்யத்திற்குக் காரணமாக விளங்கும் “உடல் உயிர்” என்பதான ஸம்பந்தம் கூறப்பட்டது. ஆனால் இத்தகைய ஸம்பந்தம் என்பது வாத்ஸல்யத்தின் காரணமாக அமையுமோ என்றால், தனது வயிற்றில் பிறந்த காரணத்தால் அல்லவோ ஒருவனுக்கு தாயானவள் “வத்ஸலை” என்று ஆகிறாள். “என்னையாள்வானே” என்பதன் மூலம் ஸௌசீல்யம் கூறப்பட்டது. ஆனால் “புகல் ஒன்று இல்லா அடியேன்” என்று தனது வெறுமையை முன்னிட்டுக் கொண்டு, அவனை அண்டும் “என்னையாள்வானே” என்று “தன்னிடம் சில கைம்முதல்கள் உள்ளன, அதனைக் கொண்டு என்னை ஆள்கிறான்” என்பதாக இவர் கூறுவாரோ? அதாவது, கைங்கர்ய நிலை போன்று, தாம் ஒரு உபகாரம் செய்வது போன்று இவ்விதம் கூறுவாரோ என்பதற்கு விடை தருகிறார். புருஷகாரத்தைப் பார்த்து முதல் பத்தில் சில வார்த்தைகள் கூறினார். அதன் பின்னர் உபாயத்தை நோக்கியவராக உரைத்தார். தனது தகுதி இன்மையை எண்ணிப் பார்த்த உடனேயே “புருஷகாரத்தை” என்று தொடங்கி அருளிச்செய்கிறார்; அதாவது, அபராதங்களுடன் கூடியுள்ள ஒரு சேதநனை ஈச்வரனோடு சேர்த்து வைக்கும் புருஷகாரம் என்பதான சிபாரிசு செய்யும் மேன்மையைப் பார்த்து “அகலகில்லேன்” என்று கூறுகிறார். புருஷகாரம் என்பதும் மிகை என்று கூறலாம்படி சேதநன் ஒருவனுடைய தோஷங்களையே தகுதியாகக் கொண்டு காப்பாற்றும் உபாயத்தின் மேன்மையைப் பார்த்து “நிகரில் புகழாய்” என்றார். அடுத்து உலகில் உள்ள மற்றவர்களுடன் தனக்குள்ள வேறுபாட்டை நோக்கியவராக “என்னை” என்று கூறத் தொடங்குகிறார்; இவ்விதம் இருந்தால் அல்லவோ ஸௌசீல்யம் வெளிப்படும்! உலக விஷயங்களுடைய லாபம் அல்லது அலாபம் என்பதையே, முறையே பேறு மற்றும் இழப்பு என்பதாகக் கொள்ளும் மக்களின் நடுவில், வேறுபட்டவராக நிற்கும் தம்மை, “கர்மம் போன்ற உபாயங்கள் ஆத்ம ஸ்வரூபத்திற்கு விரோதி” என்று அறிந்து கொள்ளும்வரை நிறுத்தி, பெரியபிராட்டியாரைப் பரிந்துரை செய்பவளாகக் கொண்டு, ஸர்வேச்வரன் தானே உபாயம் மற்றும் உபேயம் என்பதாக நின்று செய்யும் உபகாரத்தைக் கூறுகிறார் என்று கருத்து. ஆனால் அது ஸௌசீல்யம் என்பதை வெளிப்படுத்துவதாகக் கூறுவது எப்படி என்பதற்கு விடை தருகிறார்; “சீலம் ஹி நாம மஹதோ மந்தைஸ் ஸஹ நிரந்த்ரேண ஸம்ச்லேஷ: - சீலம் என்பது அனைத்துவிதங்களிலும் உயர்ந்து நிற்கும் ஒருவனை சிரியவர்களுடன் ஒன்றாகக் கலக்கும் பந்தம்” என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனாகிய தனது மேன்மை மற்றும் எனது சிறுமை ஆகியவற்றை ஆராயாமல், நீரானது நீருடன் கலந்து ஒரு நீராவது போன்று கலந்தான் என்கிறார். “நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே” என்பதன் முலம் ஸௌசீல்யம் கூறப்படுகிறது. திருவாய்மொழி (10-9-9) - வைகுந்தத்தமரரும் முனிவரும் – என்றும், “பக்தைர் பாகவதைஸ் ஸஹ - பக்தர்கள் மற்றும் பாகவதர்களுடன் சேர்ந்து” என்றும் கூறுவதால், இரண்டுவிதங்களில் “அமரர் முனிக்கணங்கள்” என்கிறார். “நிகரில்” என்று ஏன் கூறுகிறார்? இவர்களுக்கு யாரும் ஒப்பு அல்லர். ப்ரக்ருதியின் ஸம்பந்தம் உள்ளதால், ஸம்ஸாரிகள் ஒப்பானவர்கள் அல்லர், ப்ரக்ருதியின் ஸம்பந்தத்திலிருந்து விடுபட்டவர்கள் என்பதால் முக்தர்கள் ஒப்பானவர்கள் அல்லர்; ஜகத்தை ஸ்ருஷ்டித்தல் போன்ற செயல்களுடன் கூடியபடி உள்ளதால் ஈச்வரனும் ஒப்பு அல்லன். இவர்களுக்கு ஜகத்தை ஸ்ருஷ்டித்தல் போன்றவை இல்லையோ என்பதற்கு விடை தருகிறார்; ப்ரஹ்மஸூத்ரம் (4-4-17) – ஜகத் வ்யாபார வர்ஜம் - ஜகத்தை ஸ்ருஷ்டித்தல் போன்றவை நீங்கலாக – என்றும், ப்ரஹ்மஸூத்ரம் (4-4-21) – போகமாத்ர ஸாம்யலிங்காச்ச – இன்பத்தை அனுபவிப்பதில் மட்டுமே ஒப்புமை கொண்டு - என்றும் கூறுவதால், பகவத் அனுபவத்தில் மட்டுமே ஸம்பந்தம் உள்ளது என்றாகிறது. – (விரும்புந் திருவேங்கடத்தானே) - இங்கு வருபவர்களுடைய விருப்பமானது, இருட்டு அறையில் விளக்கு போன்று, பரமபதத்தைக் காட்டிலும், நான்முகன் திருவந்தாதி (47) - கானமும் வானரமும் - என்பதற்கு ஏற்ப, எத்தனை தாழ்ந்தவர்களாக உள்ளபோதிலும் தனது திருமுகத்தை காண்பித்தபடி நிற்கும் சீலம் போன்ற குணங்கள் இங்கே உண்டாவதால், அங்கே கிடைக்கப் பெறாததும் கூட இங்கு கிட்டுவதால், இந்த இடத்தை விரும்புவார்கள். அடுத்து “திருவேங்கடத்தானே” என்பதற்கு சௌசீல்யம் என்று பொருள் அருளிச்செய்கிறார்; ஸௌசீல்யம் என்பது, உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற வேறுபாடு இன்றி, அனைவருக்கும் வசப்பட்டு நிற்கும் எளிதான அர்ச்சாவதாரமாகும்.