பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 7)

முதல்பத்து

இரண்டாம் திருமொழி

இருங்கை மத களிறு ஈர்க்கின்றவனைப் பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன்தன் நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே

திருஆயர்ப்பாடியில் இடைப்பிள்ளைகள் தங்கள் விளையாட்டுப் பொருள்களால் வடிவமைத்த பெரியதொரு துதிக்கையுடைய யானையை, “இது மதம் கொண்டது” என்று கூவியபடி இழுத்துச் சென்று விளையாடுவார்கள். இப்படி விளையாடுபவர்களை கீழே தள்ளி, குறும்பாய் அந்த யானையின் கொம்பினைப் பறித்துக் கொண்டு ஓடி ஒளியும் பரமனுடைய, நெருங்கிய பவள வடத்தாலும், பொன் நாணாலும், முத்து வடத்தாலும் அலங்கரிக்கப்பட்ட இடையானது இருக்கும்விதத்தைக் காணுங்கள், ப்ரகாசமுடைய நெற்றியினை உடைய பெண்களே, வந்து காணுங்கள்.

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருக்கடி ப்ரதேசத்தில் நின்றும்போந்து திருமருங்கினழகை அநுபவிக்கிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருக்கடிப்ரதேசத்தினழகை யநுபவித்த வநந்தரம், திருமருங்கினழகை யநுபவிக்கிறார்.

– திருக்கடிப்ரதேசத்தின் அழகை அனுபவித்த பின்னர் இடுப்பின் அழகை அனுபவிக்கிறார்.

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (இருக்கையித்யாதி) பெரிதான கையையும் மதத்தையுமுடைத்தா யிருக்கிற குவலயாபீடத்தாலே கொலை கருதி வந்த பாகனைக் கொன்று, ஆனையையும் நிரஸித்து, கொம்பைப் பறித்துக் கொண்டு கம்ஸனிருந்த உயர்ந்தவிடத்தில் ஓடிச் சென்று குதித்த பரமனென்னுதல்; ஊரில் இடைப்பிள்ளைகள் “மதம்பட்டது” என்று இழுத்துக் கொண்டு விளையாடுகிற களிறுகளை, அவர்களை விழத்தள்ளி பறித்துக் கொண்டோடுகிற பரமனென்னுதல். இங்கு “பரமன்” என்றது ஓட்டத்தில் மிக்கவனென்றபடி. பரமன்றன்னுடைய (நெருங்கு பவளமும்) செறியக் கோத்த பவளமும் நேரிதான பொன்நாணும் முத்துவடங்களையுமுடைத்தான திருவரைக்கு மேலான திருமருங்குலை அநுபவிக்கிறார். (வாணுதல்) ப்ரகாசத்தையுடைய தாந்தி. மாமுனிகள் வ்யாக்யானம் - (இருங்கையித்யாதி) பெரிய துதிக்கையையுடைய மத்தகஜமான குவலயாபீடத்தைத் தன்வசமாக நடத்தாநின்றுள்ள பாகனைக் கொன்று, பருங்குதல் - கொல்லுதல். (பறித்தித்யாதி) அதின் கொம்புகளைப் பறித்துக் கொண்டு கம்ஸனிருந்த உயர்ந்த நிலத்திலே ஓடிச் சென்று குதித்த பரமனுடைய. அன்றிக்கே, ஊரில் இடைப்பிள்ளைகள் விளையாடுகிறவர்களிலே, ஸீலோபகரணங்களிலே ஆனையாகப் பண்ணி, பெரிய கையையுடைய மத்தகஜமென்று இழுத்துக் கொண்டு திரிகிறவர்களை, அடர்த்துப் பறித்துக் கொண்டோடாநிற்கும் பரமனென்னுதல். (நெருங்கித்யாதி) நெருங்கக் கோத்த பவள வடமும், நேரிதான பொன்நாணும், முத்து வடமும், இவற்றோடே சேர்ந்த திருமருங்கு மிருந்தபடியைக் காணுங்கோள். (வாணுதலீர் வந்து காணீரே) ஒளிவிடாநின்ற நெற்றியையுடைய நீங்கள் வந்து காணுங்கோள்.

– (இருங்கை இத்யாதி) - பெரியதுதிக்கை உடையதும், மதம் கொண்டுள்ளதும் ஆகிய குவலயாபீடம் என்னும் யானையைத் தன் வசப்படுத்தி, க்ருஷ்ணனாகிய தன்னைக் கொல்லும் நோக்கிலே வந்த பாகனைக் கொன்று, பின் அந்த யானையையும் கொன்று, அதனுடைய கொம்புகளை முறித்து பறித்துக் கொண்டு, கம்சன் இருந்த உயர்ந்த இடத்திற்கு ஓடிச் சென்று குதித்த பரமனுடைய. அல்லது வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம். திருஆயர்பாடியில் இடைப்பிள்ளைகள் விளையாடும்போது, தங்களிடம் உள்ள விளையாட்டுப் பொருள்களை சேர்த்து ஒரு பெரிய துதிக்கையுடைய யானையைப் போன்று வடிவமைப்பர். வடிவமைத்த பின் “இந்த யானை மதம் கொண்டுள்ளது” என்று கூவியபடி, மதமானது தோன்றும்படி, அதனை வேகமாக இழுத்துக் கொண்டு ஓடுவர். இப்படி ஓடும் சிறுவர்களை கீழே தள்ளி, அந்த யானையின் கொம்பினைத் தனது குறும்பினால் பறித்துக் கொண்டு க்ருஷ்ணன் ஓடுவான். இப்படிப்பட்ட பரமனுடைய. (நெருங்கு பவளமும்) - நெருக்கமாகக் கோர்க்கப்பட்டுள்ள பவள வடமும், நெருங்கிய பொன் நாணும், முத்து வடமும், இவற்றோடே கூடியுள்ள திரு அரைப் பகுதிக்கு மேலே உள்ள இடுப்பு இருக்கும்விதத்தை வந்து காணுங்கள் (வாண்நுதலீர் வந்து காணீரே) – ப்ரகாசிக்கும் நெற்றியினையுடைய பெண்களே! வந்து காணுங்கள்.