திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 10)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
– “ஒளி – ஒளியைக் கொண்ட வஸ்து” என்பது போன்று அவனுடன் உள்ள ஸ்வரூப ஸம்பந்தம் காரணமாகவும், அவனுடைய எதிர்த்தலையாக உள்ள விஷயத்தில் இருக்கும் எல்லையற்ற இனிமையாலும், அவனை விட்டு ஒரு க்ஷணம் கூடப் பிரிவதைப் பொறுக்கமாட்டேன் என்பதாலும், தாமரையில் பிறந்த காரணத்தால் ஏற்பட்ட மென்மைத்தன்மை போன்று பல இனிமைகளைக் கொண்டவளும், மங்கைப்பருவம் காரணமாக உள்ள பல இனிமைகளைக் கொண்டவளும் ஆகிய மஹாலக்ஷ்மி, அவள் தன்னுடைய “ஆபிஜாத்யம் – சிறந்த பிறப்பு, ஆத்மகுணம், ஆபிரூபம் – எல்லையற்ற ஸௌந்தர்யம்” ஆகியவை உள்ளபோதிலும் ஓர் சிறந்த அவயவத்தில் எப்போதும் வசிக்கும்படியாக எல்லையற்ற இனிமை கொண்ட திருமார்பு பொருந்தியவனே! இவளுடைய சேர்த்தி காரணமாக ஏற்படவல்லதான, “அடியார்களுடைய குற்றங்களை அறியாமல் இருத்தல்” என்பது போன்ற தன்மைகளால் நிரூபிக்கவல்லதான எல்லையற்ற வாத்ஸல்யம் கொண்டவன் என்ற புகழ் நிறைந்தவனே! இதற்குக் காரணமாக உள்ள மூன்றுவிதமான சேதந அசேதநங்களை உனது உடைமையாகக் கொண்டு ஸ்வாமியாக நிற்பவனே! அது மட்டும் அல்லாமல் மிகவும் தாழ்ந்தவனாகிய என்னையும் ஏற்றுக் கொள்ளும் எல்லையற்ற சௌசீல்யம் கொண்டவனே! அத்தகைய சீலத்துடன், அனைவரும் கண்டு அனுபவிக்கும்படியாக, ஞானம் ப்ரேமம் போன்ற உயர்ந்த தன்மைகள் கொண்ட நிலையில் வேறு யாரும் தங்களுக்கு ஒப்பில்லாமல், கைங்கர்யம் செய்தபடி உள்ள நித்யஸூரிகளும், முனிவர்களுடைய திரள்களும் விரும்பியபடி, திருவேங்கடத் திருமலையில் அவர்கள் அருகாமையில் ஸௌலப்யத்துடன் உள்ளவனே! உன்னைத் தவிர மற்ற உபாயங்களோ அல்லது மற்ற ரக்ஷகமோ ஒன்றும் இல்லாதபடி, வேறு சரண் ஏதும் இல்லாமல், உனக்கு மட்டுமே வசப்பட்ட நான், மேலே கூறப்பட்டபடி புருஷகார சேர்க்கை மற்றும் குணங்களுடைய சேர்க்கை ஆகியவை கொண்ட உனது திருவடிகளின் கீழே, வேறு கதியற்றவனாக வந்து புகுந்து நின்றேன்.
தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஸித்திக்கைக்காகப் பெரியபிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார். ஆக, ஒன்பது பாட்டாலும் சரண்யன் ஸ்வரூபத்தைச் சொன்னார். இதில் தம்முடைய ஸ்வரூபத்தைச் சொல்லி சரணம் புகுகிறார். கீழே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்வத்தையும், அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடுபோந்தார்; இங்கு, அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லி சரணம் புகுகிறார். இப்பாட்டுத் தன்னை த்வயத்திற் பதங்களோடொக்க யோஜித்துத் தலைக்கட்டக்கடவது. அதில் அர்த்த ப்ராப்தமான அஹமர்த்தத்தை இங்கு, அடியேனென்கிறது.
– “அலர்மேல் மங்கை உறை மார்பா” என்று பெரியபிராட்டியாருடன் உள்ள சேர்த்தியைக் கூறி சரணம் புகுவதன் ப்ரயோஜனத்தைக் கூறுகிறார்; தமது விருப்பமானது சட்டென்று கைகூடுவதற்காக பெரியபிராட்டியைச் சிபாரிசு செய்பவளாகக் கொண்டு, திருவேங்கடமுடையானின் திருவடிகளில் சரணம் புகுகிறார். இதன் மூலம “நோற்ற நோன்பு” தொடக்கமாக உள்ள நான்கு திருவாய்மொழிகளில் செய்த ப்ரபத்தியைக் காட்டிலும், இந்தப் பாட்டில் செய்யும் ப்ரபத்திக்கு உள்ள வேறுபாடு கூறப்பட்டது. அடுத்து, இந்தத் திருவாய்மொழிக்கு உயிரான பாசுரம் இதுவே ஆகும் என்று கூறுவதற்குத் திருவுள்ளம் கொண்டவராக, இதற்கு முன்புள்ள ஒன்பது பாசுரங்களில் கூறப்பட்ட பொருளுக்கும், இங்கு கூறப்பட உள்ள பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை அடுத்து கூறுகிறார். ஒன்பது பாட்டால், அடையப்படும் ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தைக் கூறினார்; இந்தப் பாட்டில் தனது ஸ்வரூபம் கூறிச் சரணம் புகுகிறார். அடுத்து, முன்புள்ள பாசுரங்களில் “அடியேன்”, “அருவினையேன்” என்பதாகக் கூறினார்; இந்தப் பாசுரத்தில் மீண்டும் “புகல் ஒன்று இல்லா அடியேன்” என்று கூறுகிறார்; இது “கூறியது கூறல்” என்பதான புநருக்தி தோஷம் ஆகாதோ என்பதற்கு, “கீழே” என்று வ்யாக்யானதில் தொடங்கும் இரண்டு வாக்கியங்களால் சமாதானம் கூறுகிறார். முன்பு “அடியேன்” என்றும், “ அருவினையேன்” என்றும் தனது கைம்முதல் இல்லாமை மற்றும் அடிமைத்தன்மை ஆகியவற்றைக் கூறி, இதன் மூலம் அவனிடம் சரணம் புகுவதற்கு உறுப்பாக உள்ள நிலையைக் கூறினார்; இங்கு அத்தகைய இரண்டு ஸ்வரூபங்களையே, பேற்றினை அடைவதற்குக் காரணமாக உள்ள ப்ரபத்திக்குச் சேரும்விதமாகக் கூறுகிறார். இந்தப் பாசுரத்தை த்வய மந்திரத்தின் பதங்களுடன் ஒப்பிட்டு நோக்கலாம். அத்தகைய த்வயத்தைக் காட்டிலும் இதற்குள்ள வேறுபாடு கூறுகிறார்; த்வயத்தில் உள்ள “ப்ரபத்யே” என்ற பதத்தின் “தன்மை ஒருவினை (வடமொழி இலக்கணத்தின் “உத்தமன்” எனப்படும்)” என்பதால் வெளிப்படும் “அஹம் – நான்” என்று சொல்லில் பொருளை இங்கு “அடியேன்” என்கிறார். அடுத்து அரும்பத உரையில், இந்த பாட்டில் உள்ள பதங்கள் மற்றும் த்வயத்தின் பதங்களை ஒப்பு நோக்குதல் குறித்துள்ளவற்றைக் காணலாம். “அலர்மேல்மங்கை” என்பதால் “ஸ்ரீ” என்பதன் பொருளும்; “அகலகில்லேன்” என்பதால் “மத்” என்பதன் பொருளும்; “உறைமார்பா” என்பதால் எப்போதும் சேர்ந்துள்ள சேர்த்தியும்; “நிகரில் புகழாய்” என்பது தொடங்கி, “திருவேங்கடத்தானே” என்பது முடிய “நாராயண” என்பதன் பொருளும்; “புகல் ஒன்று இல்லா அடியேன்” என்பதன் மூலம் அதிகாரியும்; “உன் அடிக்கீழ்” என்பதால் “சரணௌ” என்ற பொருளும்; “அமர்ந்து புகுந்தேன்” என்பதால் “ப்ரபத்யே” என்பதான செய்கையும் கூறப்பட்டது. ஆனால் த்வயத்தில் உள்ள “சரணம்” என்ற சொல் இங்கு காணப்படவில்லையே என்றால், “புகுந்தேன்” என்பதன் மூலம் “சரணம்” என்ற சொல்லானது வெளிப்படுகிறது.
(அகலகில்லேனிறையுமென்று) இது, அகன்றிருந்து சொல்லுகிற பாசுரமுமன்று; நித்யஸம்ச்லேஷம் பண்ணா நிற்கச் செய்தேயாயிற்று. “இறையுமகலகில்லேன், இறையுமகலகில்லேன்” என்று உரைப்பது. நித்யாநுபவம் பண்ணுவார்க்கெல்லாம் பாசுரம் இதுவே. நாட்டாருடைய அகலகில்லேன் போலன்று, இவளுடைய அகலகில்லேன்; அது கர்மாதீநமாக வருவது: இது விஷயாதீநமாக விளையுமது. (அலர்மேல்மங்கை) அவன் தன்னை. “ந ஜீவேயம் க்ஷணமபி” என்னப் பண்ணவல்ல போக்யதையையும் பருவத்தையுமுடையவள். பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற் போலேயிருக்கை. (உறைமார்பா) இத்தால் நித்யயோகஞ் சொல்லுகிறது. எனக்கு ஒரு காலம் பார்த்து சரணம் புகவேண்டும்படியாயோவிருக்கிறது? இத்தலையில் அபராதத்தையும் ஈச்வர ஸ்வாதந்தர்யத்தையும் அநுஸந்தித்துப் பிற்காலிக்க வேண்டாதபடியா யிருக்கை. – “ஒருநாள் பட்டர், பிள்ளையழகிய மணவாளவரையர்க்கு த்வயமருளிச் செய்கைக்காக ‘எல்லாரும் போங்கோள்’ என்ன, நஞ்சீயரும் எழுந்திருந்துபோய், ‘நம்மை ‘இராய்’ என்றருளிச் செய்திலர்’ என்று வெறுத்திருக்க, அப்போதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடியழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்து த்வயத்தை அருளிச்செய்யா நிற்கச் செய்தே, அப்போது அருளிச்செய்த வார்த்தை” என்று சீயர் அருளிச்செய்வர். “இவ்வாத்ம வஸ்து சேஷமாகில் அவன் சேஷியாகில் இங்குப் பிராட்டி ஸம்பந்தத்தால் செய்கிறதென்?” என்று கேட்க, “அது இருக்கிறபடி கேளீர்! ராவணனுக்கும் காகத்துக்கும் ஸம்பந்தமும் அநுஷ்ட்டாநமுமொத்திருக்க, இனி ராவணன் சாபத்தாலே கிட்டமாட்டாதே யிருப்பதொன்றுண்டிறே; அங்ஙனன்றிக்கே, ஐநநி பக்கல் அபராதத்தில் கைதொடனாயிருக்கத் தலை கொண்டு தப்பினானிறே, அவள் ஸந்நிதியுண்டாகையாலே. அவள் கடக்கவிருக்கையாலே ராவணன் தலையறுப்புண்டான்”. போக்கற்றுச் செயல் மாண்டு நின்ற நிலையவனுக்கும் ஒக்குமிறே; இங்ஙனேயிருக்கச் செய்தேயும் கார்யமாயிற்றதில்லையிறே, அவனுக்குப் பிராட்டி ஸந்நிதியில்லாமையாலே. இனித்தான், மாதாவும் பிதாவுமானால் பிதாவைப் போலன்றிறே, ப்ரஜைகள் விஷயத்தில் மாதா இருக்கும்படி; இவன் செய்த குறைதான் காணாக் கண்ணிட்டிருக்கையன்றிக்கே, பிதாவின் பக்கலிலும் மறைத்துக் காட்டுவாளொருத்தியிறே. ஆகையிறே உத்தரார்த்தத்தில் அவனோடொப்புச் சொல்லி, பூர்வார்த்தத்தில் புருஷகாரமாகையாகிற நீர்மையில் ஏற்றஞ் சொல்லுகிறது. – தொட்டாரைத் தொட்டு “நகச்சிந்நாபராத்யதி” என்னக் கடவ இவள், “நம்மையொரு கார்யத்திலே ஏவுவது காண்” என்று அவஸர ப்ரதீக்ஷனாயிருக்குமவனைப் பெற்றால் விடாளிறே. தன் வார்த்தை கேளாதார்க்குங்கூட “மித்ர மௌபயிகம் கர்த்தும்” என்னக் கடவ இவள் தன் முகம் பார்த்து வார்த்தை கேட்குமவனைப் பெற்றால் விடாளிறே. “தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹ துர்ப்பலா:” என்றாளிறே. திருவடி, “ராக்ஷஸிகளை என் கையிலே காட்டித் தரவேணும்” என்ன; “பிறர் கண் குழிவு காணமாட்டாத துர்ப்பலை காண்” என்றாளிறே. ராவணன் பட்டானாகில், பெருமாள் விஜயத்தோடே நின்றாராகில், திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறொரு தௌர்ப்பல்யமில்லையிறே; இனி தௌர்ப்பல்யமாவது பிறர் நோவு காணமாட்டாமையிறே. (நிகரில் இத்யாதி) அதுக்கு அநந்தர பதத்தில் அர்த்தஞ் சொல்லுகிறது. “தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியாரது செய்யார்” என்னும் குணாதிக்யஞ் சொல்லுகிறது. (உலகமூன்றுடையாய்) தான் நிர்க்குணனென்னிலும் விடவொண்ணாத ப்ராப்தி சொல்லுகிறது. (என்னையாள்வானே) ப்ராப்தியை க்ரயஞ் செலுத்திக் கொடுக்கும்படி. மோக்ஷத்தளவும் செல்ல நடத்திக் கொடுபோந்து நடுவுள்ள அபேக்ஷித ப்ரதனாகையிறே ஆளுகையாவது. (நிகரிலித்யாதி) அப்பதத்தில் முடிகிற ஸௌலப்யஞ் சொல்லுகிறது. (புகலொன்றில்லா அடியேன்) ஆகிஞ்சந்யமும் ஸ்வரூபமும் ப்ரபத்திக்கு பரிகரமிறே. (உன்னடிக் கீழ்) “சரணௌ”. (அமர்ந்து) நடுவோர் இடையீடு இன்றிக்கே யிருக்கை. (புகுந்தேனே) இவ்வத்யவஸாயம் உபாயபாவத்தில் அந்வயியாமையாலும், உபகார ஸ்ம்ருதி ஸ்வரூபமாகையாலும், ஸ்வீகாரமும் சைதந்ய ப்ரயுக்தமாகையாலும். (இவையெல்லாம்) அதிகாரி விசேஷணமாக்கிற்றிறே. த்வயார்த்த விவரண ப்ரதேசங்களிலே இவையெல்லாம் பூர்வார்த்தத்தில் முடிகிற பதத்தோடே சேரக் கடவதிறே. (அகலகில்லேனித்யாதி) இதில், உபாயபாவஞ் சொல்லச் செய்தே, உபேய விஷய ஸூசகமுமாயிருக்கிறது. அதாகிறபடி யெங்ஙனே? என்னில்; இருவருமான சேர்த்தியிலேயிறே இவன் அடிமை செய்வது; அச்சேர்த்தி தன்னையேயிறே இவன் உபாயமாகப் பற்றுகிறதும். இத்தால் சொல்லிற்றாகிறது, நித்ய ப்ராப்யத்வமிறே. நித்யாபூர்வ விஷயமிறே நித்ய ப்ராப்யமாகவல்லது. (அகலகில்லேனிறையுமென்று) இது அகன்றிருந்து சொல்லுகிற வார்த்தையன்று. தனக்கு அகலுகைக்கு ஸம்பாவநையின்றிக்கே யிருக்கச் செய்தேயும், அங்குத்தை போக்யதையை அநுஸந்தித்து, க்ஷணகாலமும் நான் அகலுகைக்கு சத்தையாகிறிலே னென்னும். “அநந்யா” என்றும், “அநபாயிநீ” என்றுஞ் சொல்லாநிற்கச் செய்தே சொல்லுகிற வார்த்தையிறே இது! க்ஷணகாலமும் பிரிய க்ஷமையல்லேனென்று. (அலர்மேல்மங்கை) இங்ஙன் சொல்லுகிறவள் ஆரென்னில் தன் வடிவழகாலும் பருவத்தாலும் அவன் தனக்குங் கூட உத்தேச்யமாயிருக்கிறவள்; அவனை, “ந ஜீவேயம் க்ஷணமபி” என்னப் பண்ணுமவள். நாட்டாரகலகில்லேன் போலன்றிறே இவளுடைய அகலகில்லேன்; அது கர்ம நிபந்தநமாக வரும் அகலுகையிறே; இவளுக்கு அது இல்லாமையாலும், அவன்தான் மேல்விழும் ஸ்வபாவனாகையானும், அவனால் வரும் பிரிவுமில்லை, தன்னால் வரும் பிரிவுமில்லையானால், இவ்வுக்திக்கு ப்ரஸங்கமென்? என்னில்; அவனாகையாலே வந்தது. நாட்டாருடைய ப்ரார்த்தனை கர்மமடியாக வருமது; இவளுடைய ப்ரார்த்தனை விஷயாதீநமாக விளையுமது. (உறை மார்பா) ப்ரதம பதத்தில் மதுப்பால் சொல்லுகிற நித்ய யோகத்தைச் சொல்லுகிறது; இதுவும் இங்ஙனே பலிக்கக் கண்டோமித்தனை. இச்சேர்த்திக்கு ப்ரயோஜநம் அவனுடைய ஸ்வாதந்தர்யத்தையாதல், தன்னுடைய ஸம்ஸாரித்வத்தையாதல் அநுஸந்தித்துக் கைவாங்க வேண்டாதபடியாயிருக்கை. அவன் ஸர்வஜ்ஞத்வத்தையும் தன்னுடைய ஸாபராதத்வத்தையும் அநுஸந்தித்து அஞ்ச வேண்டாதபடியாயிருக்கை. அதாகிறது இவனுடைய அபராத காலம் பார்த்திருந்து ப்ரதிபத்தி பண்ணுகைக்கு அவனுக்கு அவஸரமில்லை, அவள் கூட இருக்கையாலே. பிராட்டிபக்கல் அபராதம் காகத்துக்கும் ராவணனுக்கும் ஒத்திருக்கச் செய்தேயும், இவள் ஸந்நிதியாலே தலை பெற்றது காகம்; அத்தனை அபராதமின்றியிலேயிருக்க, ராவணன் தலையறுப்புண்டானிறே, இவள் ஸந்நிதியில்லாமையாலே. இத்தனையுண்டிறே இவள் ஸந்நிதிக்கும் அஸந்நிதிக்கும் வாசி. தமப்பன் பகையாக, மாத்ரு ஸந்நிதியிலே ப்ரஜையை யழியச் செய்யமாட்டாமையும் ஒன்றுண்டே. அவன் பண்ணின அபராதத்துக்கு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டு, அது தொடர்ந்து கொண்டு திரிந்தவாறே புகலற்று விழ, இவளை நோக்கி, ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு கண்ணழிவு சொல்லிவிட்டான் அத்தனையிறே. “தமேவ சரணம் கத:” என்றதுவும், “ந நமேயம்” என்றதுவும், இரண்டும் அப்ரயோஜகம். அதென்? என்னில், காகத்துக்கும் போகிறபோது அகவாயில் நினைவு அதுவேயிறே. அங்ஙனன்றாகில் “ஸ்வகமாலயம் ஜகாம“ என்று போகப்பாரானே; செயல் மாட்சியாலே விழுந்த இத்தனையிறே. இது ராவணனுக்குமுண்டா யிருக்கச்செய்தே கார்யமாயிற்றதில்லையிறே, இவள் அஸந்நிதியாலே. கீழ்ச்சொன்ன அர்த்தம் இத்தனையும் த்வயத்தில் முதற் பதத்தோடேயற்றது. மேல் “நிகரில்” என்று தொடங்கி, “திருவேங்கடத்தானே” என்னுமளவும் வர, அநந்தர பதத்தில் அர்த்தஞ் சொல்லுகிறது; (நிகரில் புகழாய்) இப்படியிருக்கிறவள் தானே சிதகுரைக்குமன்றும் அவளுடனே மன்றாடும் குணாதிக்ய விசேஷஞ் சொல்லுகிறது. அதாகிறது, “என்னடியார் அது செய்யார்” என்று என்னைப் பற்றினார்க்கு அதில்லை காண் என்கை. “இல்லை, நான் இப்போது இன்ன குற்றஞ் செய்யக்கண்டேன்” என்று காட்டிக் கொடுத்தாலும், “ஆனாலென்? தர்மாதர்மங்களும் பரலோகமுமில்லை யென்று செய்கிறார்களோ? ப்ராமாதிகத்துக்கு நாமுளோம் என்றன்றோ செய்கிறது” என்கை. இவளுடைய உத்கர்ஷத்துக்கு அடிசொல்லும்போது அவனைப் பற்றிச் சொல்லலாம்; அவனுடைய உத்கர்ஷத்துக்கு ஒன்று தேடிச் சொல்லலாவதில்லை. இதுவோதான் அர்த்த ஸ்வரூபமிருக்கும்படி! இத்தால் சொல்லிற்றாயிற்று இவள் அவனுடைய ஸ்வாதந்தர்யத்தை யநுஸந்தித்து “இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?” என்றிருக்கையும், அவன் இவளுடைய மார்த்தவத்தையும் மௌக்த்யத்தையும் அநுஸந்தித்து “இவற்றின் பக்கல் எவ்வளவாயிருக்கிறாளோ?” என்றிருக்கையும். ஆக, ஒருவரையொருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றியிறே உபயவிபூதியுங் கிடக்கிறது. (உலகமூன்றுடையாய்) தான் நிர்க்குணனென்றாலும் விடவொண்ணாத ப்ராப்தியைச் சொல்லுகிறது. “சிதகுரைக்குமேல்” என்றவிடத்தில், அவளுக்கு ஸ்வரூபாநுரூபமான குணங்கள் கூடாதவன்றிறே அவள் அது சொல்லுவது; அப்படியே இவனுக்கும் இக்குணங்களின்றிக்கே யிருந்தாலும் விடவொண்ணாத குடற்றொடக்கைச் சொல்லுகிறது. அவன் “அல்லேன்” என்று கைவிடுமன்றும் செங்கற்சீரை கட்டி வளைக்கலாம்படியிறே இஸ்ஸம்பந்தமிருப்பது; இனி இவன்தான் காதாசித்கமாக ப்ரணாமம் பண்ணிப் பின்பு கைகழியப் போகப்பார்க்கிலும், காலிலே விலங்கைத் தைத்துக் காரியங்கொள்ளலாம்படியான உரிமை சொல்லுகிறது. (என்னையாள்வானே) அடிமைதன்னை கார்யஞ் செலுத்திக் கொடுக்கும்படி. “சேஷத்வ ஸாமாந்யத்தைப் பற்றச் சொல்லுகிறீராகில் அவ்வளவிறே யுமக்கும்” என்னவொண்ணாதபடி, என்னை “மயர்வற மதிநலமரு”ளி இவ்வளவும் வர நிறுத்திப் பொகடப்போமோ? (நிகரிலமரர் இத்யாதி) அங்குள்ளாரும் விரும்பி வந்து அடிமை செய்கிறதும் இங்கேயிறே. “வைகுந்தத்தமரரும் முனிவரும்” என்று இரண்டு கோடியாயிறேயிருப்பது, குணநிஷ்ட்டரும் கைங்கர்யநிஷ்ட்டரும். (திருவேங்கடத்தானே) அதுக்கு முடிந்த பொருள் ஸௌலப்யமென்னக் கடவதிறே; குணயோகமும், சேஷித்வமும், விசேஷ கடாக்ஷமும், ஸௌலப்யமும், இவையித்தனை யும் உண்டிறே இப்பதத்துக்கு. இவனுக்கு ஸகலாபேக்ஷித பலப்ரதனாகைக்காக, அந்தராத்மதயா ஸ்த்திதி பண்ணுமென்றிறே நாராயண சப்தத்திற் சொல்லுகிறது; அந்த ஸௌலப்யம், இங்கு ஸதா ஸந்நிதி பண்ணுகையாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமிறே. இந்த ஸௌலப்யம் உபாயமாகிறபடி எங்ஙனே? யென்னில்; “மாமேகம்” என்கிறவிடத்தில் ஸாரத்ய வேஷத்தையிறே காட்டுகிறது. இன்னமும் அவ்வளவன்றிறேயிங்கு; அதுக்கு முன்புமில்லை பின்புமில்லையிறே அந்த ஸௌலப்யந்தான்; நித்யஸந்நிதி பண்ணுகிறவிடமிறே இவ்விடம். அங்குத்தானும் “மய்யாஸக்தமநா: பார்த்த” என்று ஒரு தேவையிட்டிறே சொல்லிற்று; அதுவும் இல்லையிறே இங்கு. இனித் தம்படி சொல்லுகிறார். (புகலொன்றில்லாவடியேன்) கீழே “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய சேஷத்வத்தையும், ஆகிஞ்சந்யத்தையும் உருவச் சொல்லிக் கொடுபோந்தார்; இனித்தான் வெறுமையும் ஸ்வரூபமும், இரண்டும் ப்ரபத்திக்குப் பரிகரமிறே; அத்தை இங்கேயும் ப்ரயோகிக்கிறார்; அது தன்னைச் சொல்லவேணுமிறே. இங்குச் சொல்ல வேண்டுகிறதென்? என்னில்; அவனுக்கு உபாயபாவம் ஸ்வரூபமானவோபாதி இவனுக்கும் இப்ப்ரதிபத்தி ஸ்வரூபமாகையாலே, இவனுக்கு இதில்லாதவன்று ஸர்வமுக்தி ப்ரஸங்கமுமாமே. (அடியேன்) அதில் அர்த்தப்ராப்தமான “அஹம்” சப்தத்தை இங்கு வாசக சப்தத்தாலே சொன்னதுவே வாசி. (உன்னடிக் கீழ்) “சரணௌ” என்றது தன்னையே சொல்லுகிறது. “ஸ ப்ராது: சரணௌ” என்றாற்போலே சொல்லக்கடவதிறே; (அமர்ந்து புகுந்தேனே) “முமுக்ஷுர்வை சரண அஹம் ப்ரபத்யே” என்னுமாபோலே. (அமர்ந்து) அவனுக்கு ஒரு ஸஹகாரி வேண்டுதல், தன் தலையிலே யுபாயபாவங் கிடத்தல் செய்யிலிறே நடுவொரு வ்யவதாந விளம்பங்களுக்கு ஹேதுவுள்ளது. (புகுந்தேனே) போன எல்லையளவுமிறே புகுருவதும்; முன்பும் அர்த்தத்திலிழவில்லையிறே. இவனுடைய விப்ரதிபத்தியேயிறேயுள்ளது; அது போமித்தனையிறே வேண்டுவது. அத்யவஸித்தே னென்கிறார்; இங்குத்தை வர்த்தமாநம் ஸ்ம்ருதி ஸந்ததி போலன்றிறே; ருசி கார்யமாய் வருகையாலே ப்ராப்யத்தினுடைய ப்ராப்தியளவும் நிற்குமிறே.
– (அகலகில்லேன் இறையும் என்று) – “இவளுக்கு அகல்வதற்குக் காரணம் உள்ளதோ” என்பதற்கு விடை அளிக்கிறார்; இது அகன்று இருந்து கூறப்படும் பாசுரம் அல்ல, எப்போதும் சேர்ந்துள்ள காரணத்தால்தான் “இறையும்” என்று உரைக்கப்படுகிறது. இந்தக் கருத்தானது இவள் ஒருவளுக்கு மட்டுமே ஆகுமோ என்பற்கு விடை தருகிறார். அவளை எப்போதும் அனுபவித்தபடி உள்ளவர்கள் கூற்று இதுவே ஆகும்; இதற்கு ப்ரமாணம் “ந ச அஹம் அபி ராகவ - இராமா! உன்னைப் பிரிந்தால் நானும் இல்லை” என்பதாகும். ஸீதை இவ்விதம் கூறியது போன்று உலகில் உள்ள மற்றவர்களும் கூறலாம் அல்லவோ? அதற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை கூறுகிறார்; உலகில் உள்ளவர்கள் கூறுவது போன்ற “அகலகில்லேன்” அல்ல இவளுடைய “அகலகில்லேன்” என்பது; அவர்களுடையது கர்மம் காரணமாக வருவது; இவளுடையது இந்த விஷயம் காரணமாக வருவதாகும். – (அலர்மேல்மங்கை) - “அலர்மேல் மங்கை” என்ற கருத்தை அருளிச்செய்கிறார்; ஸுந்தரகாண்டம் (66-10) - ந ஜீவேயம் க்ஷணம் அபி – அவனைப் பிரிந்து ஒரு க்ஷணம் கூட உயிருடன் இருக்கமாட்டேன் - என்று கூறச் செய்யும்படியாக உள்ள பருவம் கொண்டவள்; இது “மங்கை” என்பதாகும். பரிமளமே ஒரு வடிவம் கொண்டவளாக உள்ளாள்; இது “மலர்” என்பதாகும். (உறை மார்பா) - இதனை நிகழ்கால வினையில் அருளிச்செய்கிறார். இதன் மூலம், எப்போதும் சேர்ந்து நிற்கும் நிலையானது கூறப்பட்டது. இவ்விதம் எப்போது சேர்ந்துள்ள நிலை காரணமாக, எனக்கு ஒரு தக்க காலம் பார்த்து சரணம் புகவேண்டும் என்பது இல்லாமல் உள்ளது. அதாவது, நம்மிடம் உள்ள அபராதங்களையும், அதனைத் தண்டிக்க முழு சுதந்திரம் கொண்ட ஈச்வரனுடைய சுதந்திரத் தன்மையையும் நாம் நோக்கி, அவனிடம் சரணம் புகுவதிலிருந்து பின்வாங்க வேண்டாம் என்பதாக இந்தச் சேர்க்கை எப்போதும் உள்ளது. – ஆனால் பெரியபிராட்டியாருடைய சிபாரிசு அவசியம் வேண்டுமோ என்பதற்கு, “வேண்டும்” என்று கூறி, அதற்கு ஒரு நிகழ்வையும் கூறுகிறார். ஒருநாள் ஸ்வாமி பராசரபட்டர், பிள்ளை அழகிய மணவாள அரையருக்கு த்வய மந்த்ரம் அருளிச்செய்வதற்காக, “அனைவரும் சிறிது நேரம் வெளியில் நிற்கவேண்டும்” என்றார்; நஞ்சீயர் வெளியில் செல்லும்போது, “நம்மை ‘இங்கேயே இருப்பாய்’ என்று கூறவில்லையே” என்று எண்ணியபடியே சென்றார். அப்போது பட்டர், “ஜீயர் எங்கு சென்றார்?” என்று கேட்டருளி, அவரைத் தேடி அழைத்துத் தன்னுடன் வைத்தபடி த்வயத்தை அருளிச்செய்தார்; இப்படியாக நஞ்சீயர் கூறினார். இங்கு, “இந்த ஆத்ம வஸ்துவானது அவனுடைய அடிமை என்றும், அவன் இதற்கு எஜமானன் என்றும் உள்ளபோது, பெரியபிராட்டியின் சிபாரிசு என்னும் ஸம்பந்தம் மூலம் என்ன பயன் உள்ளது?” என்று கேட்கலாம். இதற்கு விடை அளிக்கிறார்; “இந்த ஸம்பந்தம் உள்ளது எதற்கு என்பதைக் கேட்பீராக. இராவணனுக்கும் காகாஸுரனுக்கும் ஸீதையுடன் உள்ள ஸம்பந்தமும், அவர்கள் அவன் விஷயத்தில் செய்த செயலும் ஒன்றே ஆகும். ஆனால் இராவணன் தனது சாபத்தால் அவளை அண்ட இயலாமல் இருந்தான்; காகத்தின் விஷயத்தில் இது போன்று அல்லாமல், தாயிடம் குற்றத்துடன் வந்து தீண்டினாலும் தலைதப்பியது என்பதற்கு, சீதை அருகில் இருந்தமையே காரணம் ஆகும். ஆனால் இராவணன் விஷயத்தில், ஸீதை அருகில் இன்றி தொலைவில் இருந்ததால் இராவணன் தலை அறுந்தது”, என்றார். போக்கற்ற செயல் செய்த நிலையானது காகத்தைப் போன்றே இரவணனுக்கும் இருந்தது; இவ்விதம் உள்ளபோதிலும், சீதை அருகில் இல்லாத காரணத்தால் கார்யம் கைகூடவில்லை. தாயும் தந்தையும் என்று உள்ளபோதிலும் ஒரு குழந்தை விஷயத்தில் தாய் போன்று தந்தை இருப்பதில்லை அல்லவோ? தனது மகன் செய்த குற்றத்தைத் தான் காணாமல் இருப்பதுடன் மட்டும் அல்லாமல், தந்தையிடம் அதனை மறைத்தபடி இருப்பவள் தாய் மட்டும் அல்லவோ? அதனால்தான் த்வயத்தின் பிற்பகுதியில் அவனுடைய ஒப்புமை கூறப்பட்டு, முற்பகுதியில் “புருஷகாரம் - சிபாரிசு” என்பதான நீர்மையின் ஏற்றம் கூறப்படுகிறது. – தன்னைத் தகாத விதத்தில் துன்புறுத்திய ராக்ஷஸிகள் குறித்து அனுமனிடம் கூறும்போது யுத்தகாண்டம் (16-44) – ந கச்சித் ந அபராத்யதி - தவறு செய்யாதவர்கள் யார் உள்ளனர் - என்று கூறும்படி உள்ள இவள், தன்னிடம் வந்து “நம்மை உங்கள் கார்யத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறும் அனுமனை விடுவாளோ? ஸுந்தரகாண்டம் (21-19) - மித்ர மௌபயிகம் கர்த்தும் - இராமன் நட்புடன் இருப்பதற்குத் தக்கவர் - என்று இராவணனிடம் கூடத் தொடர்ந்து கூறுபவள், தனது முகம் பார்த்து நின்று தனது சொற்களைக் கேட்கும் அனுமனை விடாள் அல்லவோ? அதனால்தான் அனுமனிடம் யுத்தகாண்டம் (116-40) – தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹ துர்ப்பலா: - பலம் இல்லாத நான் இங்கு இந்த இராவணனுடைய வேலையாட்களின் குற்றத்தைப் பொறுக்கிறேன் – என்றாள். அனுமன் ஸீதையிடம், “இந்த ராக்ஷஸிகளை என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கூறவேண்டும்”, என்றான்; இதற்கு ஸீதை, “நான் பிறருடைய குற்றம் குறைகளை காண இயலாதவள் என்று அறிவாயாக”, என்றாள்; இங்கு “துர்ப்பலை - வலிமை இல்லாதவள்” என்பது என்ன? இராவணன் தனது தவறுக்கு ஏற்ற தண்டனை பெற்றாலும், இராமன் வெற்றி அடைந்தாலும், அனுமன் வந்து முன்பாக நின்றாலும், வேறு ஒரு வலி ஏதும் இல்லாத நிலை உள்ளதால், மற்றவர்களுடைய துன்பத்தைக் காண இயலாத துர்ப்பலை என்பதையே கூறுவதாகிறது. – (நிகரில் இத்யாதி) - த்வயத்தில் உள்ள “ஸ்ரீமத்” என்பதற்கு அடுத்துள்ள “நாராயண” என்ற பதத்தின் பொருள் கூறுகிறார். அதாவது பெரியாழ்வார் திருமொழி (4-9-2) - தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் - என்பதன் மூலம், ஓங்கிய குணங்கள் கூறப்பட்டது. (உலகம் மூன்று உடையாய்) - தனக்கு குணங்களே இல்லை என்று இருந்தாலும், தன்னை விட இயலாத ஸம்பந்தம் கூறப்படுகிறது. (என்னை ஆள்வானே) - ஸம்பந்தத்தை எழுதி வாங்கிக் கொண்ட தரும்படியாக உள்ள நிலை. இவ்விதம் ஆள்வதற்கு எல்லை எது என்பதைக் கூறுகிறார்; மோக்ஷம் முடிய நடத்தியபடி சென்று நடுவில் உள்ள காலங்களில் அவனைக் குறித்து த்வேஷம் ஏற்படாதபடி இருத்தல், விரோதமாகப் பார்த்தல் போன்ற நிலைகள் ஏற்படக்கூடாது என்ற விருப்பங்களை நிறைவேற்றியபடி உள்ளதால் அல்லவோ ஆள்பவனாக உள்ளான்? (நிகரில் இத்யாதி) – “நாராயண” என்ற பதத்தில் முடியும் ஸௌலப்யம் கூறப்பட்டது. அதாவது “நிகரில் புகழாய்” என்பது போன்றவற்றால் கூறப்பட்ட வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம் முதலானவற்றுக்குப் பின்னே “திருவேங்கடத்தானே” என்று கூறப்பட்டதால் முடியும் ஸௌலப்யம் என்று கருத்து. – (புகல் ஒன்று இல்லா அடியேன்) - இங்கு கைம்முதல் இன்மை மற்றும் ஸ்வரூபம் ஆகியவை குறித்து ஏன் கூறவேண்டும்? அதாவது ஸ்வரூபம் என்பது “எஜமானன் அடிமை” என்ற உறவுமுறை காரணமாக ஏற்படுகின்ற “வேறு புகலிடம் இல்லாத தன்மை” ஆகும். கைம்முதல் இன்மை மற்றும் ஸ்வரூபம் ஆகிய இரண்டும் ப்ரபத்தியின் அங்கங்கள் என்பதால் கூறப்பட்டது. (உன் அடிக்கீழ்) - இதன் மூலம் த்வயத்தில் உள்ள “சரணௌ” என்பது கூறப்பட்டது. (அமர்ந்து) - ப்ரபத்திக்கு முன்பாக, சரணாகதியானது ஓர் உபாயம் என்ற எண்ணம் ஏற்படாமல் இருந்து. (புகுந்தேனே) - சரணாகதி என்பது உபாயம் இல்லை என்றால், இது எந்த வகைப்படும் என்ற கேள்விக்கு விடை தருகிறார்; “அவனே உபாயம்” என்று எப்போதும் எண்ணியபடி உள்ள ஒருவனுக்கு “உபகாரமாக உள்ள சிந்தனை” போன்று, அதிகாரியின் சிறப்பில் சேரும் என்பதை அருளிச்செய்கிறார். இந்த உறுதியானது உபாயம் என்பதில் சேராமல் உள்ளதாலும், செய்ந்நன்றி அறிதல் என்பது ஸ்வரூபமாக உள்ளதாலும், பற்றுதல் என்பது ஞானத்தின் அடிப்படையில் வரும் செய்கையாக உள்ளதாலும், இவை அனைத்துமே அதிகாரியின் அடையாளம் என்று கூறப்பட்டன அல்லவோ? ஆனால் “புகல் ஒன்று இல்லா அடியேன்”, “அமர்ந்து” என்பது போன்ற சொற்கள், த்வயத்தில் உள்ள சொற்களுக்கு பொருள் தருவதாக இல்லை அல்லவோ என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்; இவை அனைத்தும், “ப்ரபத்யே” என்ற சொல்லில் மறைந்து நிற்கின்றன. – (அகலகில்லேனித்யாதி) - இதுவரை இந்தப் பாசுரத்திற்கான பொருளைச் சுருக்கமாக அருளிச்செய்தார். இந்தக் கருத்துக்களை விரிவாக அருளிச்செய்வதற்காகவும், மேலும் சில சிறப்பான கருத்துக்களை அருளிச்செய்வதற்காகவும், மேலும் ஒரு பொருளை அருளிச்செய்யத் திருவுள்ளம் கொண்டு, மீண்டும் “அகலகில்லேன்” என்று தொடங்குகிறார். த்வயத்தின் முதல் வாக்கியத்தின் கருத்தானது இந்தப் பாசுரத்தில் தெளிவாகவே உள்ளது; ஆயினும் இரண்டாவது வாக்கியத்தின் பொருளும் இதில் மறைமுகமாக உள்ளது என்பதை “இதில்” என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இந்தப் பாசுரத்தில், உபாயம் குறித்துக் கூறப்பட்டபோதிலும், உபேய விஷயமும் மறைமுகமாக உள்ளது. இருவரும் சேர்ந்து உள்ள நிலையே உபேயம் ஏன்றாகிறது. இதனை அருளிச்செய்கிறார். இருவரும் சேர்ந்துள்ள நிலையில் அல்லவோ ஒருவன் கைங்கர்யம் செய்தல் பொருந்துகிறது. அத்தகைய சேர்த்தி என்பதையே இவர் உபாயமாகப் பற்றுகிறார். “அகலகில்லேன் இறையும்” என்பதன் மூலம் கிடைக்கும் சிறப்பான பொருள் என்ன என்பதைக் கூறுகிறார்; பெரியபிராட்டியார் “அகலகில்லேன் இறையும்” என்று எப்போதும் அவனுடன் வசிப்பதால், எப்போதும் அடையத்தக்கதாக உள்ள நிலை ஏற்படுகிறது. ஆனால், “அகலகில்லேன் இறையும்” என்பதன் மூலம், இப்படிப்பட்ட நிலை எவ்விதம் ஏற்படும் என்பதற்கு விடை கூறுகிறார்; அவனை இவள் எப்போதும் அனுபவித்தபடி உள்ளபோதிலும், “இறையும் அகலகில்லேன்” என்பதால், இந்த விஷயம் எப்போதும் புதுமையுடன் கூறியதாக உள்ளது என்பது வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட விஷயம் அல்லவோ எப்போதும் அடையத்தக்கதாக இருக்கும் என்று கருத்து. – (அகலகில்லேன் இறையும் என்று) - முதல் கருத்தில், இந்த விஷயத்தில் மிகுதியான இனிமை காரணமாக “இறையும் அகலகில்லேன்” என்கிறாள் என்று சுருக்கமாக அருளிச்செய்தார். அடுத்து இந்தக் கருத்தில், அதனை மேலும் தெளிவாக அருளிச்செய்கிறார்; இப்படிப்பட்ட சொற்கள், அகன்று நின்று கூறப்படுபவை அல்ல; தனக்கு அகல்வதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்றுள்ளபோதிலும், இவனுடைய இனிமையை எண்ணியவளாக, “ஒரு க்ஷணம் கூட நான் இவனை விட்டு அகல்வதற்குச் சக்தி கொண்டவள் அல்லள்” என்கிறாள். ஆனால் இவனுடைய இனிமையை எண்ணியே “அகலகில்லேன் இறையும்” என்கிறாள் என்று கூறுவது ஏன்? “அகன்று நின்று கூறப்படும் சொற்கள்” என்றும் உரைக்கலாம் அல்லவோ என்பதற்கு விடை தருகிறார்; ஸுந்தரகாண்டம் (21-15) – அநந்யா - வேறாகாதவள் – என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-8-1-1) – அநபாயிநீ – பிரியாதவள் - என்றும் இவள் கூறுபவள் என்ற நிலையில் உள்ள இவள் கூறும் சொற்கள் அல்லவோ “அகலகில்லேன் இறையும்” என்ற சொற்கள்? அதாவது க்ஷண நேரம் கூடப் பிரிவதைப் பொறுப்பவள் அல்லள். – (அலர்மேல்மங்கை) - இவ்விதம் கூறுபவள் யார் என்றால், தனது வடிவழகாலும், தக்க பருவத்தாலும் அவனுக்கும் கூட உத்தேச்யமாக உள்ளவள். அதாவது அவனை, “ஸுந்தரகாண்டம் (66-10) - ந ஜீவேயம் க்ஷணம் அபி - அவளைப் பிரிந்து ஒரு க்ஷணம் கூட உயிர் தரிக்கமாட்டேன்”, என்று கூறச் செய்பவளாக உள்ளாள். அடுத்து, நாட்டில் உள்ளவர்கள் கூறும் “அகலகில்லேன்” என்பது போன்ற சொற்கள் அல்ல இவளுடைய “அகலகில்லேன்” என்ற சொற்கள்! அவர்களுடைய அந்தச் சொற்களானவை, கர்மம் காரணமாக வருவதாகும்; இவளுக்கு அத்தகைய கர்மங்கள் இல்லை என்பதாலும், அவன் இவள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு காரணம் என்பதாலும், அவனால் உண்டாகும் பிரிவு இல்லை; தன்னால் ஏற்படும் பிரிவும் இல்லை. அப்படியானால் இவள் “அகலகில்லேன்” என்று ஏன் கூறவேண்டும் என்பதை விளக்குகிறார்; காரணம், அவன் எல்லையற்ற இனிமை நிரம்பியவன் என்பதால் வந்தது. உலகில் உள்ளவர்களுடைய ப்ரார்த்தனையானது கர்மத்தின் விளைவாக வருவதாகும். இவளுடைய இந்த ப்ரார்த்தனையானது, இந்த விஷயத்தில் இவள் கட்டப்பட்டதால் விளைவதாக உள்ளது. – (உறைமார்பா) - “அலர்மேல் மங்கை” என்பது த்வயத்தில் உள்ள “ஸ்ரீ” என்பதற்கான பொருளைக் கூறுகிறது; “உறை மார்பா” என்பது த்வயத்தின் எந்தச் சொல்லைக் குறிக்கிறது என்பதற்கு விடை கூறுகிறார். “ஸ்ரீமந்” என்ற முதல் பதத்தில் உள்ள “மத்” என்ற இடைச்சொல்லால் கூறப்படும் நித்யமான சேர்த்தியைக் கூறுகிறது. “இதுவும் - இந்தச் சேர்த்தியும்” நமக்குப் பலன் தருவதை நாம் காணலாம்; அதாவது, சரணாகதி செய்வதற்குத் தகுந்த நேரம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாதபடியாக, பரிந்துரை செய்பவளாக உள்ள பிராட்டியின் நித்யமான சேர்த்தி; இவள் இவ்விதம் பரிந்துரைப்பவளாக உள்ளது போன்று, இவளுடைய நித்யமான சேர்த்தியும் உள்ளது என்று கருத்து. இந்தச் சேர்த்திக்குப் பயன் என்ன? அவனுடைய சுதந்திரமான தன்மை மற்றும் நாம் ஸம்ஸாரத்தில் உழன்றபடி இருத்தல் ஆகியவற்றை எண்ணி, அவனைச் சென்று சேர்வதற்கு அச்சம் கொண்டு, பின்வாங்கவேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்படுகிறது. அதாவது அவனுடைய அனைத்தும் அறிந்த தன்மை மற்றும் நம்முடைய குற்றங்களுடன் சேர்ந்துள்ள நிலை ஆகியவற்றை எண்ணி அச்சம் கொள்ளவேண்டாதபடி உள்ளது. – ஆனால் அவனுடைய “அனைத்தும் அறிந்த தன்மை“ என்பதை நோக்கும்போது அச்சம் கொள்ளவேண்டாமோ என்பதற்கு விடை அளிக்கிறார். அவள் அவனுடைய அருகில் எப்போதும் உள்ளதால், ஒருவன் எப்போது தவறு இழைக்கிறான் என்று அந்தக் காலத்தைப் பார்த்தபடி இருப்பதற்கு அவனுக்கு நேரம் இல்லை. இவளுடைய சிபாரிசு என்பது அவசியம் வேண்டும் என்பதை, இவள் அருகாமையில் இருத்தல் மற்றும் தள்ளி இருத்தல் ஆகிய நிலைகளில் உள்ள வேற்றுமை மூலம் உதாரணம் கூறி விளக்குகிறார். இவள் விஷயத்தில் தவறு இழைத்தமை என்பது காகத்திற்கும் இராவணனுக்கும் ஒன்றே ஆகும்; ஆயினும் இவள் அருகில் இருந்த காரணத்தால் காகத்தின் தலை தப்பியது; இவள் அருகில் இல்லாததால், இராவணனுடைய தலை அறுக்கப்பட்டது. இப்படியாக இவள் அருகில் உள்ளதற்கும், தொலைவில் உள்ளதற்கும் வேறுபாடு உள்ளது. இங்கு காகத்தின் நிலையை மேலும் விளக்குகிறார். தந்தை பகையாக நின்று, தாய் குழந்தையின் அருகில் நின்று அதனைப் பாதுகாத்தபடி இருத்தல் என்பது உண்டு அல்லவோ? ஆனால் ஸீதை அருகில் இருந்தபோதிலும் காகத்தின் ஒரு கண் போயிற்று அல்லவோ என்பதற்கு விடை அளிக்கிறார்; காகம் செய்த குற்றத்திற்காக ஒரு ப்ரஹ்மாஸ்திரம் விடப்பட்டு, அது அந்தக் காகத்தை தொடர்ந்தபடி செல்ல, காகமும் வேறு புகலிடம் இல்லாமல் இராமனுடைய திருவடிகள் பணிந்து நின்றது; அப்போது இராமன் ஸீதையை நோக்கியவனாக, ப்ரஹ்மாஸ்த்ரத்திற்கு ஒரு குறை ஏற்படாமல் இருக்க, காகத்தின் கண்ணை மட்டும் எடுத்தான். பிராட்டி அருகில் இருத்தல்ல் மற்றும் அவ்விதம் இராமை ஆகியவற்றை அவனுடைய காத்தல் மற்றும் காப்பாற்றாமல் இருத்தல் ஆகியவற்றுக்குக் காரணங்களாக ஏன் கூறவேண்டும்? காகம் சரணம் புகுந்ததால் காப்பாற்றினான்; இராவணன் சரணம் புகவில்லை என்பதால் காப்பாற்றவிலை என்றும் கொள்ளலாம். “தம் ஏவ சரணம் கத: - இராமனையே சரணம் புகுந்தான்” என்ற செயலும், யுத்தகாண்டம் (36-11) - ந நமேயம் – நான் வணங்கமாட்டேன் - என்ற செயலும் என இரண்டுமே ப்ரயோஜனம் அற்றதே ஆகும்; ஏன்? காகம் அங்கிருந்து பல இடங்களுக்குச் சென்றபோது அதன் நினைவும் “ந நமேயம் - நான் வணங்கமாட்டேன்” என்பதாகவே அல்லவோ இருந்தது? இவ்விதம் கூறுவது எப்படி என்றால், இவ்விதம் இல்லையென்றால், ஸுந்தரகாண்டம் (38-32) – ஸ்வகமாலயம் ஜகாம - தனது இருப்பிடத்திற்குச் சென்றான் - என்பதற்கு ஏற்ப, அங்கு செல்ல முயற்சி செய்திருக்க மாட்டான் அல்லவோ? ஆனால் பின்னர் வந்து சரணம் புகுந்தான் அல்லவோ என்பதற்கு விடை அளிக்கிறார்; செயல் மாட்சியால் விழுந்தான். இந்த நிலையானது இராவணனுக்கும் உள்ளதாகவே இருந்தது; ஆயினும் இவள் அருகில் இல்லை என்பதால், இந்தக் கார்யம் கைக்கூடவில்லை. இத்தகைய சிறப்பான க்ருத்துக்கள் அனைத்தும் த்வயத்தின் இந்தப் பதத்தால் கூறப்பட்டன என்பதால், முதல் பதத்தோடு சேர்வதாக உள்ளது என்கிறார். – இனி “நிகரில்” என்று தொடங்கி, “திருவேங்கடத்தானே” என்பது முடிய உள்ள பகுதிகள் அனைத்தும், த்வயத்தின் “நாராயணா” என்பதை கூறுகின்றன. (நிகரில் புகழாய்) - யுத்த கண்டத்தில், “ந கச்சித் அபராத்யதி - தவறு செய்யாதவர் யார் உள்ளனர்”, என்று கேட்ட இவள், தானே ஒருவர் மீது குற்றம் சுமத்தினாலும் அவளுடன் மன்றாடும் உயர்ந்த குணத்தின் ஆதிக்கம் கூறப்பட்டது. அதாவது பெரியாழ்வார் திருமொழி (4-9-2) - என்னடியார் அது செய்யார் – என்பதற்கு ஏற்ப “என்னை அடைந்தவர்களுக்கு அத்தகைய நிலை இல்லை என்று பார்ப்பாயாக”, என்கிறான். இதற்கு இவள் “அப்படி இல்லை. இவன் இப்போது இன்ன குற்றம் செய்வதை நான் கண்டேன்” என்று காட்டிக் கொடுத்தாலும், இவன் அவளிடம், “அதனால் என்ன? தர்மம் மற்றும் அதர்மம் ஆகியவையும், பரலோகமும் இல்லை என்று எண்ணிச் செய்கிறார்களோ? தங்களையும் அறியாமல் செய்யும் குற்றத்திற்கு ‘நான் உள்ளேன்’ என்பதால் அல்லவோ செய்கிறார்கள்”, என்கிறான். இவளுடைய உயர்வுக்கு அடிப்படை கூறும்போது அவனைக் குறித்துக் கூறலாம்; ஆனால் அவனுடைய உயர்வுக்கு இவ்விதம் ஒன்றைத் தேடி உரைக்கலாம்படி ஏதும் இல்லை என்பதால் “நிகரில்” என்றார். ஆனால் இவனுடைய உயர்வுக்குக் காரணம் பெரியபிராட்டி என்றும், பெரியபிராட்டிக்கு உயர்வானது இயல்பாகவே உள்ளது என்றும் கூறப்பட்டதே என்றால், இது காதலின் காரணமாக ஏற்பட்டதாகும்; இது உண்மையான நிலை என்கிறார்; இதனை “இதுவோ” என்று அருளிச்செய்கிறார்; “பெரியபிராட்டியின் உயர்வானது ஈச்வரனுக்குக் கட்டுப்பட்டதாகவும், ஈச்வரனுடைய உயர்வானது அவளுக்கே அடங்கியுள்ளதாகவும் இருக்கும்” என்பதே இந்த வஸ்துவின் இயல்பாக உள்ளது! “அகலகில்லேன்” என்று தொடங்கி “நிகரில் புகழாய்” என்பது முடிய உள்ளவற்றால் கூறப்பட்டது என்னவென்றால், இவள் அவனுடைய சுதந்திரமான தன்மையை எண்ணியவளாக “இந்தச் சுதந்திரம் காரணமாக இவற்றுக்கு இவனுடைய சீற்றத்தால் ஏதேனும் ஏற்படுமோ?” என்று இருத்தலும்; அவன் இவளுடைய மென்மையான தன்மை மற்றும் இளமை ஆகியவற்றை எண்ணியவனாக, “இவள் இவற்றின் பக்கம் எந்த அளவிற்குப் பரிந்துரை செய்வாளோ?” என்று இருத்தலும் ஆகும். இப்படியாக ஒருவரை ஒருவர் எண்ணியபடி நோக்கும் நிலையில் உள்ளபோது, இந்த இருவருடைய நிழலில் அல்லவோ நித்யவிபூதியும் லீலாவிபூதியும் உள்ளன! – (உலகம் மூன்றுடையாய்) - இப்படிப்பட்ட இவன், “குணங்கள் இல்லாதவன்” என்று கொண்டாலும், விட இயலாத ஸம்பந்தம் கூறப்பட்டது. “விட ஒண்ணாத” என்பதை மேலும் விலக்குகிறார்; “சிதகு உரைக்கும் ஏல்” என்றால், “பெரியபிராட்டியாருக்கு ஈச்வரனுடன் ஆத்மாவைச் சேர்த்து வைக்கும் ஸ்வரூபத்திற்கு ஏற்றதான க்ருபை போன்ற குணங்கள் இல்லாத நேரத்தில் மட்டுமே இது போன்று உரைக்கிறாள்” என்று கருத்து. இவ்விதம் இவனுக்கும் இந்தக் குணங்கள் இல்லை என்று “க்ருத்வாசிந்யத - ஸம்பவிக்க இயலாத ஒன்றை ஸம்பவிக்கும் என்று எண்ணுதல்” மூலமாக எண்ணி, அப்படியே நிகழ்ந்தாலும் கூட, விட இயலாத குடல் ஸம்பந்தம் கூறப்பட்டது. “குணங்கள்” என்று கூறுவதால், “நிகரில் புகழாய்” என்பதற்கு “வாத்ஸல்யம்” என்பதை மட்டுமே கொள்ளாமல், குணங்களுடைய கூட்டத்தையே பொருளாகக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஸம்பந்தம் என்று நோக்கும்போது, இருவராலும் விட இயலாதபடி இருக்கும் என்கிறார். அவன் “அல்லேன்” என்று கைவிட்டாலும், “காஷாய வஸ்த்ரம் கட்டிக்கொண்டு இரப்பதற்கு வருகிறேன்” என்று கூறும்படியாக இவள் ஸம்பந்தம் உள்ளது என்கிறார். ஒருவன் ஏதேனும் ஒரு காலத்தில் வணங்குதல் என்பதைச் செய்து, பின்னர் இவனை விட்டு அகன்று செல்ல முயன்றாலும், காலில் விலங்கு மாட்டிக் கார்யம் செய்து கொள்ளலாம்படியாக உள்ள உரிமை கூறப்பட்டது. – (என்னை ஆள்வானே) - அடிமையைக் கிரயம் செலுத்தி அளிக்கும் விதம்; அதாவது சரியான வரிசை முறையில் நடத்துகை. ஆனால் “உலகம் மூன்றையும் ஆள்பவனே” என்று பொதுவாகக் கூறவேண்டும் அல்லாமல், “என்னை ஆள்வானே” என்று தனித்தன்மையில் கூறியது ஏன் என்பதற்கு விடை அளிக்கிறார்; “அடிமையின் பொதுவான நிலை குறித்துக் கூறும்போது, அந்த நிலையே அல்லவோ உமக்கு உள்ளது” என்று யாரும் கூற இயலாதபடி, எனக்கு “மயர்வற மதிநலம் அருளி”, என்னை இந்த நிலை முடியக் கொண்டு வந்து விட்டு, அகன்று செல்ல இயலுமோ என்கிறார் என்று கருத்து. – (நிகரில் அமரர் இத்யாதி) - “அப்படியானால் நீவிர் பரமபதத்திற்கு வாரும்“ என்று ஸர்வேச்வரன் கூற, இவர் பதில் கூறுகிறார்; அங்கு உள்ளவர்கள் கூட இங்கு வந்து அல்லவோ கைங்கர்ய செய்தபடி உள்ளனர்! பாசுரத்தில் “அமரர்” என்று கூறினால் போதாதோ, “முனிவர்” என்று தனியாக ஏன் கூறவேண்டும் என்பதற்கு விடை தருகிறார்; திருவாய்மொழி (10-9-9) - வைகுந்தத்தமரரும் முனிவரும் – என்று கூறுவதற்கு ஏற்ப குணநிஷ்டர்களும், கைங்கர்ய நிஷ்டர்களும் இரண்டு எல்லைகளில் அல்லவோ உள்ளனர்! (திருவேங்கடத்தானே) - “திருவேங்கடத்தானே” என்பது, “நாராயண” என்று த்வய மந்திர பதத்தின் பொருள் என்றானது எப்படி என்பதைக் கூறுகிறார். “நாராயணா” என்ற பதத்திற்கு எல்லையான பொருள், ஸௌலப்யம் என்பதால் ஆகும். “எல்லையான பொருள்” என்றால், முதலில் கூறப்படும் பொருள்கள் யாவை என்பதைக் கூறுகிறார்; குணயோகம் என்பதான வாத்ஸல்யம் , எஜமானத்தன்மை, விசேஷ கடாக்ஷம் என்பதான ஸௌசீல்யம் மற்றும் ஸௌலப்யம் ஆகிய அனைத்தும் “நாராயணா” என்பதற்குப் பொருள் ஆகின்றன. தத்புருஷன் [வேற்றுமைத்தொகை] மூலம் ஸ்வாமித்வம், பஹுவ்ரீஹி [அன்மொழித்தொகை] மூலம் வாத்ஸல்யம், ஸௌசீல்யம், ஸௌலப்யம் ஆகியவை கூறப்பட்டன; “நாராயணா” என்பது இந்த இரண்டான தத்புருஷன் மற்றும் பஹுவ்ரீஹி ஆகிய இரண்டாலும் விரிக்கப்படுவதாகும். ஆனால் “நாராயண” என்ற பதமானது அந்தர்யாமியின் ஸௌலப்யம் என்பதைக் குறிக்கும் அல்லாமல், இங்கு கூறப்பட்ட “திருவேங்கடமுடையான்” என்பதன் மூலம் அர்ச்சாவதார ஸௌலப்யத்தை குறிக்காது அல்லவோ என்பதற்கு விடை தருகிறார்; இவனை அண்டும் ஒருவனுக்கு, அவன் விரும்பும் அனைத்தையும் அளிப்பதற்காக, அந்தராத்மாவாக திருவேங்கடமுடையனாக நிலை பெற்றுள்ளான் என்று “நாராயண” பதம் மூலம் கூறப்பட்டது. மேலும் “அண்மையாக இருத்தல்” என்பது இந்த இந்த இரண்டு பதங்கள் முலமும் கூறப்படுவதால் இவ்விதமாகப் பொருள் கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட ஸௌலப்யமானது இங்கு எப்போதும் நிலை பெற்று நிற்பதால், திருவேங்கடமுடையானிடம் எப்போதும் உள்ளது அல்லவோ? இப்படிப்பட்ட ஸௌலப்யமானது ப்ரபத்திக்கு உபாயமாக உள்ளது என்பதை உணர்த்துவதற்காக, ஒரு சந்தேகம் எழுப்பிக் கொண்டு, அதற்கு விடை தருகிறார். இந்த ஸௌலப்யமானது உபாயமாக உள்ளது எப்படி என்றால், “ஸாரதியாக உள்ள வேடத்தில் ஸௌலப்யம் வெளிப்படுகிறது” என்கிறார்; கீதை (18-66) - மாம் ஏகம் – என் ஒருவனை மட்டுமே - என்ற இடத்தில் ஸாரதியாக நின்று உபாயம் அருளிச்செய்தான் என்கிறார். ஸாரதியாக வந்தபோது உள்ள ஸௌலப்யத்தைக் காட்டிலும், அர்ச்சாவதாரமாக உள்ளபோது இருக்கும் ஸௌலப்யம் ஏற்றம் மிக்கது என்பதை இரண்டுவிதமாகக் கூறுகிறார்; இதனை அடுத்த ஐந்து வாக்கியங்களால் அருளிச்செய்கிறார்; ஸாரதியாக நின்ற அந்தக் காலத்திற்கு முன்பும் பின்பும் இத்தகைய ஸௌலப்யமானது இல்லை அல்லவோ? ஆனால் எப்போதும் ஸௌலப்யமானது நிலை பெற்றுள்ளது இந்தத் திருவேங்கடத் திருமலையில் ஆகும்; அங்கு, கீதையில் - மய்யாஸக்தமநா: பார்த்த - பார்த்தா! என்னிடம் மனம் வைத்தவனாக இருப்பாயாக - என்று ஒரு நிர்ப்பந்தம் கூறப்பட்டது; அத்தகைய நிர்ப்பந்தம் ஏதும் இங்கு ஸௌப்யத்தை வெளிப்படுத்த அவசியமாக இல்லை. (புகல் ஒன்று இல்லா அடியேன்) – “தன்னிடம் கைம்முதல் ஏதும் இல்லை” மற்றும் “தனக்குப் புகலிடம் வேறு ஏதும் இல்லை” என்று முன்பே அருளிச்செய்தார்; மீண்டும் அதனையே அருளிச்செய்வது ஏன் என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; முன்பு “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தனது அடிமைத்தன்மை மற்றும் கைம்முதல் இன்மை ஆகியவற்றை உறுதிபட உரைத்தார்; இனி, கைம்முதல் இன்மை மற்றும் வேறு கதி இன்மை ஆகிய இரண்டும் ப்ரபத்திக்குப் பரிகரங்கள் என்பதால் அவற்றைக் கூறுகிறார்; அதாவது முன்பு இவை இரண்டையும் சரணாகதிக்கு உறுப்பாக அருளிச்செய்தார்; இங்கு இவற்றைச் சரணாகதியின் அங்கங்களாக அருளிச்செய்கிறார். வ்யாக்யானத்தை “அது தன்னைச் சொல்ல வேணுமிறே, அத்தையிங்கேயும் ப்ரயோகிக்கிறார்” என்று படிக்கவேண்டும்; “சொல்லவேணும்” என்பது “இவை ப்ரபத்தியின் அங்கங்கள்” என்பதை ஆகும். இவற்றை இங்கு கூறுவது எப்படி? அதாவது ப்ரயாஜா போன்ற கர்மங்களை அங்கமாகக் கொண்டு, ஜ்யோதிஷ்டோமம் போன்ற கர்மங்கள் உள்ளன; இங்கு “வேறு கதி இல்லை” மற்றும் “கைம்முதல் இல்லை” ஆகியவற்றைச் சரணாகதியின் அங்கங்கள் என்றால், இவை சரணாகதிக்கு உபாயம் என்றாகிவிடும் அல்லவோ? பின்னர் இவற்றை இங்கு கூறுவது எப்படி என்பதற்கு விடை தருகிறார். அவனுக்கு, உபாயமாக உள்ள தன்மையானது ஸ்வரூபமாகவே உள்ளது; இதனைப் போன்று இவனுக்கு “கைம்முதல் இன்மை” மற்றும் “வேறு கதி இன்மை” ஆகியவை எப்போதும் எண்ணத்தில் நிலைத்தபடியே இருத்தல் என்பது ஸ்வரூபமாக உள்ளது. அவனுக்கு உபாயமாக உள்ள தன்மை என்பது ஸ்வரூபமாகவே உள்ளது என்றால், இவன் தனியே ஒரு ப்ரபத்தியைச் செய்யவேண்டிய அவசியம் என்ன என்பதற்கு விடை தருகிறார். இவனுக்கு இவ்விதம் ப்ரபத்தி தனியே அவசியம் இல்லை என்றால் “அனைவருக்கும் முக்தி கிட்டும்” என்றாகிவிடும். – (அடியேன்) - த்வயத்தில் “அடியேன்” என்பதை வெளிப்படுத்தும் பதமானது இல்லையே என்பதற்கு விடை தருகிறார். த்வயத்தில் உள்ள “ப்ரபத்யே” என்ற பதத்தின் பொருள் மூலம் கிடைத்த “அஹம் - நான்” என்ற சொல்லானது, இங்கு “அடியேன் “ என்று கூறப்பட்டது. (உன் அடிக்கீழ்) – “சரணௌ” என்று த்வயத்தில் உள்ள பதம் கூறப்பட்டது. ஆனால், திருவடிகளை மட்டுமே சரணம் என்று பற்ற வேண்டுமோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; அயோத்யாகாண்டம் (31-3) – ஸ ப்ராது: சரணௌ - தமையனாருடைய திருவடிகளை - என்று கூறுவது போன்று இங்கும் கொள்ளவேண்டும். (அமர்ந்து புகுந்தேனே) - ஆனால் ப்ரபத்தி செய்யும்போது “நான்” என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்கள் உண்டோ என்பதற்கு விடை தருகிறார்; ச்வேதாச்வதர உபநிஷத்தில் - முமுக்ஷுர்வை சரண அஹம் ப்ரபத்யே - முமுக்ஷுவாகிய நான் சரணம் அடைகிறேன் - என்பது போன்று இங்கும் பொருந்தும். (அமர்ந்து) - “அமர்ந்து” என்பதற்கு எந்தவிதமான தடையோ அல்லது தாமதமோ இல்லாமல், “பொருந்தி” என்னும் பொருள் கூறத் திருவுள்ளம் கொண்டார்; ஆகவே அவை ஏதும் இல்லை என்பதற்கான காரணங்களைக் கூறுகிறார்; ப்ரபத்தியின் பலன் தர அவனுக்கு, அவன் அல்லாமல் வேறு துணைக்காரணம் அவசியம் என்றாலோ அல்லது ப்ரபத்தி செய்பவனிடம் அவன் அல்லாமல் வேறு ஓர் உபாயம் உள்ளது என்றாலோ அல்லவோ, நடுவில் ஒரு தடையோ தாமதமோ ஏற்படக்கூடும். (புகுந்தேன்) - “புகுந்தேன்” என்பதற்கு “உறுதி கொண்டேன்” என்பதாகப் பொருள் கொள்ளத் திருவுள்ளம் கொண்டார்; அது ஏன்? உடல் மூலம் செய்யப்படும் ப்ரபத்தியைக் கொள்ளலாம் அல்லவோ என்பதற்கு, “அது ஏற்காது” என்று விடை தருகிறார்; அனைத்தையும் தனது சரீரமாகக் கொண்ட ஸர்வேச்வரனை முன்பு பிரிந்து மீண்டும் சேருதல் என்பது நடக்காது என்பதால், விபரீதமான எண்ணங்கள் விலகி, உள்ளது உள்ளபடி ஓர் உறுதி கொண்டேன் என்கிறார்; ஸர்வேச்வரனுடைய சேர்க்கை என்பதில் எந்தவிதமான இழப்பும் இல்லை என்கிறார். ப்ரபத்தி செய்யும் நம்முடைய மாறான எண்ணங்கள் மட்டும் இங்கு உள்ளது; அத்தகைய எண்ணங்கள் போக வேண்டும் என்று அல்லவோ வேண்டப்படவேண்டும்! இதனால் “உறுதி பட” என்கிறார். ஆனால் த்வயத்தில் உள்ள “ப்ரபத்யே - அடைகிறேன்” என்று நிகழ்காலத்தில் உள்ளபோது, இங்கு “புகுந்தேன்” என்று இறந்தகாலமாகக் கூறப்பட்டது ஏன்? “ப்ரபத்யே” என்பதில் உள்ள நிகழ்காலமானது எண்ணங்களின் தொடர்ச்சி போன்றது அல்ல; ருசியின் காரணமாக வருவதால், பேற்றினை அடையும் காலம் முடிய நிற்பதாகும். மேலும் இனிமை காரணமாக நிகழ்காலத்தில் கூறப்பட்டது. ப்ரபத்தி என்பது ஒருமுறை மட்டும் செய்யப்படவேண்டும் என்பதால், இறந்த காலத்தில் கூறுகிறார்.