பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 6)

முதல்பத்து

இரண்டாம் திருமொழி

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே

மதம் கொண்ட யானைகளை உடைய வஸுதேவருடைய இதயத்திற்குத் தகுந்தவாறு பணிவிடை செய்யும் தேவகிப் பிராட்டியின் வயிற்றிலே, ஹஸ்த நக்ஷத்திரம் கடந்த பத்தாம் நாளாகிய திருவோணத் திருநாளிலே தோன்றிய அச்சுதனின் இடுப்புப் பகுதி இருக்கும் விதத்தைக் காணுங்கள், புன்னகை மலர்ந்துள்ள பெண்களே வந்து காணுங்கள்.

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருத்துடையை அநுபவித்து திருக்கடி ப்ரதேசத்தை அநுபவிக்கிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருக்குடையிலழகை அநுபவித்த வநந்தரம் திருக்கடி ப்ரதேசத்திலழகை அநுபவிக்கிறார்.

– திருத்தொடையின் அழகை அனுபவித்த பின்னர் இடுப்புப் பகுதியின் அழகினை அனுபவிக்கிறார்.

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (மத்தவித்யாதி) மதித்த ஆனைகளையுடைய ஸ்ரீவஸுதேவர் தம்முடைய ஹ்ருதயத்துக்குத் தகுதியாகப் பரிமாறுகிற தேவகியுடைய திருவயிற்றிலே. (அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய வச்சுதன்) என்று அவதரித்த திருநக்ஷத்ரத்தை மங்களாசாஸந பரராகையாலே மறைத்தருளிச் செய்கிறார். (தோன்றிய) என்கையாலே “தேவகீ பூர்வ ஸந்த்யாயாம்” என்கிறபடியே சேதநனைப்போலே கர்மநிபந்தநமன்றிக்கே அநுக்ரஹத்தாலே ஆவிர்ப்பவித்தானென்கிறது. “அச்சுதன்” என்கிறது ஆச்ரிதரை எல்லா தசையிலும் நழுவ விடாதவனென்றபடி. முத்தம் - சண்ணம். முகிழ்நகை - மந்தஸ்மிதம். மாமுனிகள் வ்யாக்யானம் - (மத்தவித்யாதி) மத்தகஜங்களையுடையரான ஸ்ரீவஸுதேவர் தம்முடைய ஹ்ருதயத்துக்குத் தகுதியாகப் பரிமாறுகிற தேவகிப்பிராட்டி தன் வயிற்றிலே. (அத்தத்தினித்யாதி) அத்தத்துக்குப் பத்தாநாளிலே. மங்களாசாஸந பரராகையாலே விரோதிகள் அறிந்து அபிசரிக்கைக்கு அவகாசமில்லாதபடி திருவவதரித்த நாளை மறைந்தருளிச் செய்கிறார். (தோன்றிய வித்யாதி) “அச்யுத பாதுநா! தேவகீ பூர்வஸந்த்யாயாமாவிர்ப்பூதம்” என்கிறபடியே கர்ப்பவாஸ தோஷமற ஆவிர்ப்பவித்து, ஆச்ரிதரை ஒருகாலமும் நழுவ விடாதவனுடைய முத்தமிருந்தபடியைக் காணுங்கோள். (முகிழ்நகையீர் வந்து காணீரே) முகிழா நின்றுள்ள நகையையுடைய நீங்கள் வந்து காணுங்கோள். முத்தம் - சண்ணம், அதாவது கடி ப்ரதேசம். முகிழ்நகை - மந்தஸ்மிதம்.

– (மத்த இத்யாதி) - மதம் கொண்ட யானைகளை உடைய வஸுதேவருடைய இதயத்திற்குத் தகுந்தவாறு பணிவிடை செய்யும் தேவகிபிராட்டியின் வயிற்றிலே (அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்) - ஹஸ்த நக்ஷத்திரத்திலிருந்து பத்தாம் நாளான திருவோணத்தில். இங்கு ஒரு கேள்வி எழக்கூடும். க்ருஷ்ணன் அவதரித்தது ரோகிணியில் அன்றோ? பின் எதற்காக இவ்வாறு கூறவேண்டும்? ஆழ்வார் க்ருஷ்ணனைக் காக்கும் பொருட்டாகவே இவ்வாறு கூறுகிறார். கம்சன் அறிந்தால், எங்கே தன் பிள்ளைக்கு ஏதோ நேர்ந்துவிடுமோ என்று, அப்படி ஒரு காரியத்திற்கு இடம் கொடுக்காதபடி, அவதரித்த நாளினை மறைத்து அருளிச்செய்கிறார். (தோன்றிய) “பிறந்தான்” என்று கூறாமல் “தோன்றினான்” என்று ஏன் கூறினார்? ஸ்ரீவிபு. (5-3-2) – அச்யுதபாதுநா தேவகீ பூர்வஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் - அச்சுதன் என்னும் சூரியன், தேவகி என்னும் ஸந்த்யகால வேளையில் உதயமானான் – என்பதற்கு ஏற்ப, மற்ற சேதனனைப் போன்று கர்ம வசத்தினால் பிறந்தவன் அல்லனே இவன்! தன்னுடைய கருணையினாலே தோன்றியவள் அன்றோ. (அச்சுதன்) - தன்னை அண்டியுள்ள அடியார்களை எல்லா நிலைகளிலும், ஆலோசனை ஏதும் செய்யாமல், நழுவவிடாது காப்பாற்றுபவன். இப்படிப்பட்ட அச்சுதனின் (முத்தம் இருந்து ஆ) – இடுப்புப் பகுதியில் உள்ள அழகினைக் காணுங்கள். (முகிழ்நகையீர் வந்து காணீரே) – நன்கு புன்னகை வெளிப்படுத்தும் பெண்களே வந்து காணுங்கள்.