திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 9)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே
அடியார்கள் அல்லாதவர்கள் விஷயத்தில் வந்து கைப்புகுந்தது போன்று இருந்தாலும் அவ்விதம் கைப்புகாதவனாகவும்; அடியார்கள் விஷயத்தில், “நம்மிடம் எந்த கைம்முதலும் இல்லை” என்று எண்ணுவதால், “அவன் வருவதற்கு வாய்ப்பில்லை” என்று நினைக்கும்போது, நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப அனுபவிக்கலாம்படி வருபவனாகவும் உள்ளவனே! சிவந்த தாமரை போன்று காண்பதற்கு இனிமையாக, வெற்றியைப் பெறச் செய்யும் திருக்கண்கள் கொண்டும்; சிவந்த கனி போன்று இனிமையாக உள்ள திருவாய் கொண்டும்; அடியார்களைச் சேர்த்து அணைத்துக் கொள்ளும் நான்கு திருத்தோள்கள் கொண்டும்; அடியார்களுக்கு எவ்விதம் நித்யமான இன்பத்தை அளிப்பவனாக உள்ளாயோ அந்த இருப்பை எனக்கும் வெளிப்படுத்தி, எனக்கு உயிராக உள்ளவனே! நினைத்த அனைத்தையும் அளிக்கவல்ல ஒளி வீசும் இரத்தினங்களுடைய ஒளியானது, இருளை விலக்கி, பகல்பொழுது என்று செய்வதான திருவேங்கடத் திருமலையில் எப்போதும் அருகில் உள்ளவனே! ஐயோ! எல்லையற்ற இனிமை கொண்ட உனது திருவடிகளை, வேறு ரக்ஷகம் ஏதும் இல்லாதபடி, வேறு யாருக்கும் வசப்படாதபடி உள்ள நான், ஒருபோதும் விட்டு அகல்வதற்குப் பொறுத்துக் கொள்ளமாட்டேன்.
தாம் அபேக்ஷித்தபோதே காணப்பெறாமையாலே இப்போதே யுன்னைக் காணாவிடில் தரிக்கமாட்டேனென்கிறார்.
– தான் விரும்பிய உடனேயே காணப்பெறாத காரணத்தால், “இப்போதே உன்னைக் காணாவிட்டால் தரிக்கமாட்டேன்”, என்கிறார்.
(வந்தாய்போலே வாராதாய்) மாநஸாநுபவத்திலுண்டான கரைபுரட்சிதான் “பாஹ்ய ஸம்ச்லேஷமும் பெற்றோம்” என்று கொண்டு த்ருப்தி பிறக்கும்படியாய், அத்தை “மெய்” என்று அணைக்கக் கணிசித்தால் கைக்கெட்டாதபடியா யிருக்கை. (வாராதாய் போல் வருவானே) “ஒரு நாளும் கிட்டமாட்டோம்” என்றிருக்கச் செய்தே கடுகக் கைப்புகுந்துகொடு நிற்குமென்கை. அன்றிக்கே, அநாச்ரித விஷயத்தில் “கைப்புகுந்தான்” என்று தோற்றியிருக்கச் செய்தே புறம்பாய், ஆச்ரிதர்க்கு “இவன் கிட்டவரியன்” என்றிருக்கச் செய்தே உட்புகுந்திருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம். (செந்தாமரையித்யாதி) ஸகல தாபங்களும் ஆறும்படி குளிர்ந்த திருக்கண்களையுடையவனுமாய், சிவந்து கனிந்திருந்துள்ள திருவதரத்தையுடையனுமாய், கல்பகதரு பணைத்தாற் போலேயிருக்கிற நாலு திருத்தோள்களையுடையனுமாய் போக்யனுமானவனே! (எனதுயிரே) இவ்வடிவழகை என்னையநுபவிப்பித்து, வ்யதிரேகத்தில் நானுளனாகாதபடி பண்ணினவனே! (சிந்தாமணி இத்யாதி) விலக்ஷணமான ரத்நங்களினுடைய, பகருண்டு - ப்ரபை, அது அல்லைப் பகல் செய்யா நின்றதாயிற்று; திவாராத்ர விபாகம் அறுத்துக் கொண்டிருக்கை. “மணிகளினொளியால் விடிபகலிரவென் றறிவரிதாய” என்னக்கடவதிறே. இத்தால் நினைக்கிறது, “ந காலஸ் தத்ர வை ப்ரபு:” என்கிற தேசத்தே போய் அநுபவிக்கும் அநுபவத்தை இங்கே யநுபவிக்கக்காணும் நினைவு. (அந்தோ) போக்யமும் குறைவற்று, அவன்தானும் ஸந்நிஹிதனாய், எனக்காசையும் மிகுந்திருக்க, கிட்டி யநுபவிக்கப் பெறாதொழிவதே! என்கிறார். (அடியேனுன பாதம் அகலகில்லேனிறையுமே) என் ஸ்வரூபத்தைப் பார்த்து என் தசையை புத்தி பண்ணாய்; தர்சியா நிற்கச்செய்தே, அதுக்கு வர்த்தகமாகக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்கமாட்டேன்.
– (வந்தாய்போலே வாராதாய்) - மனதில் ஏற்பட்ட அனுபவத்தில் உண்டான கரை புரண்ட நிலை என்பதுதான் “வெளியிலும் சேர்க்கை பெற்றோம்” என்று கொண்டு திருப்தி பிறக்கும்படியாக, அதனை “மெய்” என்று எண்ணி அணைக்க முயன்றால் கைக்கு எட்டாதபடி இருத்தல். (வாராதாய் போல் வருவானே) - “ஒருநாளும் நாம் கிட்ட இயலாது” என்று எண்ணியபடி உள்ளபோது, விரைந்து கைக்கு எட்டியபடி நிற்பான். அல்லது அடியார்கள் அல்லாதவர்கள் விஷயத்தில் “இவன் கைப்புகுந்தான்” என்று தோன்றும்படியாக வெளிப்புறத்தில் மட்டுமே புகுவான்: அடியார்கள் விஷயத்தில் “இவன் கிட்டுவதற்கு அரியவன்” என்று உள்ளபோதிலும், அவர்கள் நெஞ்சத்தில் புகுந்து நிற்பான். – (செந்தாமரை இத்யாதி) - அனைத்து துன்பங்களும் ஆறும்படியாகக் குளிர்ந்த திருக்கண்களைக் கொண்டவனாக, சிவந்த கனி போன்றுள்ள வாய் கொண்டவனாக, கற்பக மரத்தின் கிளை போன்றுள்ள நான்கு திருத்தோள்களைக் கொண்டவனாக, அனைத்துவிதங்களிலும் இனிமை மிக்கவனே! (எனது உயிரே) - இப்படிப்பட்ட வடிவழகை நான் அனுபவிக்குபடியாக என்னைச் செய்து, அவனை விட்டுப் பிரிந்த நிலையில் என்னை, “நான் உள்ளேன்” என்று கூறிக் கொள்ள முடியாதபடிச் செய்தானே! (சிந்தாமணி இத்யாதி) - கொண்டாடத்தக்க இரத்தினம். மேன்மையான இரத்தினங்களுடைய ப்ரபை உள்ளது. அவை, இரவுப்பொழுதையும் பகல் என்றாக்குகின்றன. இரவைப் பகலாக்குதல் எப்படி என்றால், இரவு-பகல் என்ற வேறுபாட்டினை அறுத்துக் கொண்டு நிற்பதால் ஆகும். இதற்கு ப்ரமாணம் பெரியதிருமொழி (4-10-8) – மணிகளின் ஒளியால் விடிபகல் இரவு என்று அறிவரிதாய - என்பதாகும். “சிந்தமணிகள் பகர் அல்லைப் பகல் செய்” என்று வர்ணித்ததன் கருத்தைக் கூறுகிறார்; இதனால் எண்ணப்படுவது, “ந காலஸ் தத்ர வை ப்ரபு: - பரமபதத்தில் காலத்துடன் ஆட்சி இல்லை” என்பதே ஆகும்; அதாவது அந்தப் பரமபதத்திற்குச் சென்று கிட்டவல்ல அனுபவத்தை இங்கேயே அனுபவிக்கவேண்டும் என்று நினைவு. – (அந்தோ) - இனிமையும் குறைவின்றி, அவனும் தானே அருகில் நின்று, எனக்கு அவனை அடையவேண்டும் என்ற ஆசையும் அதிகமாக இருந்து, இப்படியாக உள்ளபோதிலும், அவனை அடைந்து அனுபவிக்க இயலாமல் உள்ளதே என்கிறார். (அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே) - “எனக்கு வேறு கதியில்லை” என்பதான என்னுடைய ஸ்வரூபத்தை நோக்கி, என் நிலையை ஆராய்ந்து, க்ருபை செய்தருளவேண்டும். காணாமல் உள்ளபோதிலும், அந்த நிலை மேலும் வளர்வதற்கு கண்ணை மாற வைத்தாலும் நான் பொறுக்கமாட்டேன்.