திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 8)

ஆறாம்பத்து

பத்தாம் திருவாய்மொழி

நோலாது ஆற்றேன் உன பாதம் காண என்று நுண் உணர்வின் நீல் ஆர் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே

– “உனது திருவடிகளை நான் காண்பதற்கு ஏற்றதான உபாயங்கள் எதனையும் கைக்கொள்ளாமல் உள்ளபோதிலும், அந்தத் திருவடிகளைக் காண்பதற்கு ஏற்படும் காலதாமதத்தைப் பொறுக்கமாட்டேன்”, என்று உரைக்கிறேன். அனைத்தும் அறிந்தவன் என்பதால் நுட்பமான விஷயங்களைக் கூடக் காணவல்லவனும், விஷம் காரணமாக நீல நிறமாக உள்ள கழுத்தைக் கொண்டவனும், இந்தக் காரணங்களால் ஜகத்தின் முதன்மையாக உள்ளவர்களில் ஒருவனும் ஆகிய ருத்ரன்; அந்த ருத்ரனைப் படைத்தவனும், ஸ்ருஷ்டி போன்ற செயல்களுக்கு ஏற்ற பூர்ணமான ஞானம் கொண்டவனும் ஆகிய நான்முகன்; மூன்று லோகங்களும் கொண்ட இந்திரன்; அழகான நீண்ட மீன் போன்ற கண்கள் கொண்ட பார்வதீ, ஸரஸ்வதீ, சசீ போன்ற பல பெண்கள் என்றுள்ள அனைவரும் தங்களுடைய கூட்டத்தினருடன் சேர்ந்து மிகவும் விருப்பத்துடன் அண்டியபடி உள்ள திருவேங்கடத் திருமலையில், அவர்கள் அருகில் நிற்பவனே! கருமையான நிறம் கொண்ட க்ருஷ்ணனாக வந்து, உனது குணங்கள் மற்றும் லீலைகள் ஆகியவற்றால் அனைவரையும் மயக்கி வந்தது போன்று, உன்னை அல்லாமல் வேறு எங்கும் செல்லாதபடி உள்ள என் அருகில் நீ க்ருஷ்ணனாக வரவேண்டும்.

– “‘உன்னைக் கிட்டுகைக்கு என் தலையில் ஒரு ஸாதநமில்லை’ என்னா நின்றீர்; இதொரு வார்த்தையோ! ஸாதநம் அநுஷ்டித்தார்க்கன்றி பலமுண்டோ?” என்ன; “தந்தாமுடைய அபிமத ஸித்தி ஸாதநாநுஷ்ட்டாநத்தாலே என்றிருக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும், கிட்டினால் பாசுரமிதுவன்றோ?” என்கிறார். தந்தாமுடைய ஆகிஞ்சந்யத்தை முன்னிடுமத்தனைபோக்கி, ஒன்று அநுஷ்டித்துப் பெறலாம்படியோ நீயிருக்கிறது?

– ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நீவிர் நம்மிடம் ‘உன்னை வந்து சேர்வதற்கு என்னிடம் எந்த ஒரு உபாயமும் இல்லை’ என்று கூறியபடி உள்ளீர். இது ஒரு பேச்சா? உபாயங்களைக் கைகொண்டவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்குப் பலன் உண்டோ?”, என்றான். இதற்கு ஆழ்வார், “அவரவர்கள் தங்கள் தங்கள் விருப்பங்களைப் பெறுதல் என்பது தக்க உபாயங்களைக் கைக்கொள்ளும் நன்முகன் போன்றவர்களுக்கும் பொருந்தும் என்று உள்ளபோது, அவர்கள் உன்னை வந்து அண்டினாலும், இதுவே அவர்களுடைய பேச்சாக இருக்கும்”, என்கிறார். தங்கள் தங்கள் நிலையில் “என்னிடம் கைம்முதல் இல்லை” என்று கூறி வருவதை விடுத்து, வேறு ஏதேனும் உபாயம் மூலம் பெறலாம்படியோ நீ உள்ளாய்?

(நோலாது இத்யாதி) உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதநாநுஷ்டாநம் பண்ணாதேயிருந்து வைத்து உன்னையொழிய ஆற்றமாட்டேன் என்றாயிற்று, அவர்கள் தனித்தனியே சொல்லுவது. ஒரு பாண யுத்தத்திலே தோற்றுப் போக்கடியற்றவாறே இங்ஙனே வந்து விழுவர்கள். ரஜஸ் தமஸ்ஸுக்கள் தலையெடுத்தபோது “ஈச்வரோஹம்” என்றிருப்பர்கள் முட்டினவாறே, “க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்” என்று ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குவர்கள்; “சரணம் த்வாமநுப்ராப்தாஸ் ஸமஸ்தா தேவதா கணா:”. விஷத்தைக் கண்டத்திலே தரித்த சக்தியையுடையனாய், அத்தாலே ஜகத் ப்ரதாநனாக அபிமாநித்திருக்கும் ருத்ரனும், அவனுக்கும் ஜநகனாய் அவனிலும் ஜ்ஞாந சக்திகளால் பூர்ணனான சதுர்முகனும், த்ரைலோக்ய நிர்வாஹகனான இந்த்ரனும்; “ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ்ஸேந்த்ர”. “இங்ஙனேயிருக்கச் செய்தேயும், அஹிர்ப்புத்ந்ய ஸம்ஹிதையிலே இவர்களுடைய வாக்யங்களை ப்ரமாணமாகக் கொண்டு போராநின்றோமே யென்னில்; ஸத்த்வம் தலையெடுத்தபோது சொல்லுமலையெல்லாங் கொள்ளக்கடவோம். இவை கைக்கொண்டோமென்னா, இவர்கள் தாங்கள் உத்தேச்யராகார்கள்; “‘காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்’ என்றுண்டே" என்று பட்டர் அருளிச்செய்வர். ஓராழ்வார், “பிதிருமனமிலேன்” - பேதிக்கப்பட்ட நெஞ்சை யுடையே னல்லேன்; “பிஞ்ஞகன்றன்னோடெதிர்வன்” – ருத்ரனெனக்கு ஸத்ருசன்; “அவனெனக்கு நேரான்” - அவனும் எனக்கு ஸத்ருசனல்லன்; அது என்னென்னில், “அதிருமித்யாதி” – பகவத் விஷயத்திலே நெஞ்சை வைத்து அனுபவிக்கையே யாத்ரையான எனக்கு அந்யபரனானவன் ஒப்பாகப் போருமோ? – “குறை கொண்டு” – தன் வெறுமையைக் கைதொடுமானமாகக் கொண்டு; “நான்முகன் குண்டிகை நீர் பெய்து” - நினைவறத் திருவடி சென்று கிட்டிற்று, உபகரணம் பெற்றிலன். தர்மதேவதையானது த்ரவீபூதமாயிற்றது; அத்தைக் கொண்டு “மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி” - வேதாந்தங்களில் பகவத் பரத்வ ப்ரதிபாதகமான மந்த்ரங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி; “கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேலேறக் கழுவினான்” - அவிநீதராய்த் திரியும் ப்ரஜைகள் தலையிலே ஸ்ரீபாத தீர்த்தங் கொண்டு தெளிப்பாரைப்போலே. (நுண்ணுணர்வில்) ஸத்த்வம் தலையெடுத்தபோது சொல்லுவது இதுவே. “ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே” ஜ்ஞாநமிறே. (நீலார் கண்டத்தம்மானும்) விஷத்தைக் கண்டத்திலே தரிக்கையாலே ஈச்வராபிமாநியான ருத்ரனும். (நிறை நான்முகனும்) அவனுக்குங்கூட ஐநகனாய் ஸம்பூர்ண ஜ்ஞாநனான ப்ரஹ்மாவும். (இந்திரனும்) இவர்களோடொக்க ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களில் ஓரந்வயமின்றிக்கே யிருக்கச்செய்தே, “ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ்ஸேந்த்ர” என்று கொண்டு ஒக்க எண்ணலாம்படியான இந்த்ரனும். (சேலேய் கண்ணாரித்யாதி) தந்தாமுக்கு ஓருயர்த்தியுள்ளபோது ஸ்த்ரீகள் ஸந்நிதியில் ஓரெளிமை தோற்றவிரார்களிறே; ஆபத்து வந்தவாறே, மணாட்டிமார் கழுத்திலும் தங்கள் கழுத்திலும் கப்படங் கட்டிக் கொண்டு வந்து விழத் தொடங்குவர்கள். “உமயாஸார்த்தமீசாந:” என்றும், “பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம்” என்றும், “ஸமுத்ரஸ் ஸரிதாம்பதி:” என்றும், “கிம்கோப மூலம்” என்றுஞ் சொல்லுகிறபடியே வந்து விழுவர்களிறே. (திருவேங்கடத்தானே) அவர்களுக்கு ஆச்ரயிக்கலாம்படி ஸுலபனாய் வந்து நிற்கிறபடி. (மாலாய் மயக்கி) “மயங்கல் கூடலும் கலவியும்”, “மாலாய், நான் மயங்கும்படிக்கீடாக வரவேணுமென்கிறாரென்னுதல்; அன்றிக்கே, மாலாம்படி மயக்கிக் கொண்டு வரவேணுமென்கிறார்” என்றுஞ் சொல்லுவர்கள்; அவையன்று பொருள். மாலென்று கறுப்பாய், அத்தால் நினைக்கிறது க்ருஷ்ணனென்கையாய், க்ருஷ்ணனாய்க் கொண்டு உன் குண சேஷ்டி தங்களாலே அவ்வவதாரத்தில் உள்ளாரைப் பிச்சேற்றிக் கொண்டு வந்தாற்போலே எனக்காகவும் ஒரு வரத்து வரவேணும்; “மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை” என்றுஞ் சொல்லுகிறபடியே.

(நோலாது இத்யாதி) - உனது திருவடிகளைக் காண்பதற்கு ஏற்றதான உபாயங்களைக் கைக்கொள்ளாமல் உள்ளபோதிலும், உனது திருவடிகளைக் காணாமல் நீங்குவதிலை என்பதால் அவர்கள் சேர்ந்து “நோலாது ஆற்றோம்” என்று கூறாமல், தனித்தனியே “நோலாது ஆற்றோம்” என்கிறார்கள். ஆனால் “ஈச்வரரோஹம் - நானே ஈச்வரன்” என்றுள்ள நான்முகன் போன்றவர்கள், இவ்விதம் “நோலாது ஆற்றோம்” என்று கூறுவார்களோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார். ஒரு பாணாசுர யுத்தத்தில் தோற்றுப்போய், வேறு போக்கிடம் இல்லாதவர்கள் இப்படி அல்லவோ வந்து விழுவார்கள்! முதலில் ஏன் அவ்விதம் யுத்தம் செய்யவேண்டும், பின்னர் வந்து ஏன் சரணம் புகவேண்டும் என்பதற்கு விடை அளிக்கிறார்; ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்கள் ஓங்கி நிற்கும்போது “ஈச்வரரோஹம் - நானே ஈச்வரன்” என்று இருப்பார்கள்; அங்கு சென்ற தடுமாறியவுடன், ஸ்ரீவிபு. (5-33-41) – க்ருஷ்ண க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் - க்ருஷ்ணா! க்ருஷ்ணா! சிறந்த தோள்கள் கொண்டவனே! பிறப்பற்றவனே! புருஷர்களில் உத்தமனே - என்று துதிக்கத் தொடங்குவார்கள். நான்முகன் முதலானோர் தங்களிடம் உள்ள வெறுமையை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுந்ததற்கு ப்ரமாணம் ஸ்ரீவிபு. (1-9-65) – சரணம் த்வாமநுப்ராப்தாஸ் ஸமஸ்தா தேவதா கணா: - அஸுரர்களால் வெல்லப்பட்ட அனைத்து தேவர்களும் நமஸ்காரம் செய்தவர்களாக வந்து உன்னைச் சரணம் புகுந்தனர் - என்பதாகும்; அல்லது விஷத்தைத் தனது தொண்டையில் தரித்த சக்தி கொண்டவனாக, அதன் காரணமாகத் தன்னை இந்த ஜகத்தில் முதன்மையானவனாக எண்ணும் ருத்ரன்; இப்படிப்பட்ட ருத்ரனுக்கும் தந்தையாக, அவனைக் காட்டிலும் ஞானம் மற்றும் சக்தி ஆகியவற்றில் பூர்ணமாக விளங்கும் நான்முகன்; மூன்று லோகங்களுக்கும் நிர்வாஹகனாக உள்ள இந்தரன் ஆகியோர்; நான்முகன் மற்றும் ருத்ரன் ஆகியோருடன் சேர்த்து இந்த்ரனும் படிக்கப்பட்டிருப்பானோ என்பதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; நாராயண அநுவாகத்தில் “ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ்ஸேந்த்ர - அவன் நான்முகன், அவன் சிவன், அவன் இந்த்ரன்” என்றுள்ளது காண்க. ஆனால் இவ்விதம் அஹங்காரம் கொண்டவர்களாக உள்ள இவர்களுடைய சொற்கள், ப்ரமாணங்கள் ஆகுமோ என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; இப்படி அஹங்காரம் கொண்டவர்களாக இவர்கள் உள்ளபோதிலும், அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் இவர்களுடைய வார்த்தைகளை ப்ரமாணங்களாக எடுக்கிறோமே என்றால், “இவர்களுக்கு ஸத்வம் ஓங்கி நிற்கும்போது, இவர்களுடைய சொற்கள் அனைத்தையும் எடுத்துக்கொள்வோம்” என்கிறார். இவர்களுடைய சொற்களைப் ப்ரமாணமாகக் கொண்டால் இவர்களை வணங்க வேண்டாமோ என்பதற்கு விடை அளிக்கிறார்; இவர்களுடைய சொற்களை நாம் கைக்கொண்டோம் என்றாலும், இவர்கள் அடையப்படுபவர்கள் அல்லர். ஆனால் இவ்விதம் அடையப்பட வேண்டியவர்கள் அல்லாதபடி உள்ளவர்கள் கூறும் சொற்களைக் கைக்கொள்ளலாமோ என்பதற்கு பட்டர் விடை அளிக்கிறார்; பெரியாழ்வார் திருமொழி (5-1-1) – காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் - என்பது உண்டு அல்லவோ? – அவர்கள் அடையப்படவேண்டியவர்கள் அல்லர் என்பதற்கு ஒரு ப்ரமாணம் காண்பிக்கிறார். இங்கு திருமழிசையாழ்வர் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி (84) – “பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் அவன் எனக்கு நேரான் அதிரும் கழற்கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில்” என்ற பாசுரத்தை விளக்குகிறார்; “பிதிரும் மனம் இலேன் - தடுமாறும் நெஞ்சம் கொண்டவன் அல்லன்”; “பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் - ருத்ரன் எனக்குச் சமமானவன்; அதாவது ஞானம் காரணமாக ஆகும்; “அவன் எனக்கு நேரான் – எவன் எனக்கு நிகரானவன் அல்லன்”; அது எப்படி என்றால், “அதிரும் இத்யாதி - எப்போதும் ஓசை எழுப்பியபடி உள்ள வீரக்கழல் கொண்ட ராஜாவாக உள்ள க்ருஷ்ணன் விஷயத்தில் மட்டுமே எனது நெஞ்சத்தை வைத்து அனுபவித்தல் என்பதையே வாழ்க்கையாகக் கொண்ட எனக்கு, மற்ற விஷயங்களில் வசப்படுபவன் ஒப்பாக இருக்கமுடியுமோ?”; அதாவது “நாளும் – எப்போதும்”, “தொழக்காதல் - அனுபவிப்பதற்கு ஈடாக உள்ள விருப்பத்தை”, “தொழில் பூண்டேன் - அன்றாடம் செய்யும் தொழிலாக நான் ஏற்றுக் கொண்டேன்”; ஆகவே அவ்வப்போது ஏற்படும் பகவத் ஞானம் கொண்ட ருத்ரன் எனக்கு நேராக உள்ளவன் அல்லன். அதாவது “பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் அதிரும்” என்று தொடங்கி, “தொழக்காதல் – தொழில் பூண்டேன்”; ஆகவே “அவன் எனக்கு நேரான்” என்று வரிசை கொள்ளவும்; “நாளும்” என்பதைக் கருத்தில் கொண்டு, “அனுபவிக்கையே யாத்ரையான எனக்கு ஒப்பாகப் போருமோ” என்று சேர்க்கவேண்டும். – அடுத்து நான்முகன் திருவந்தாதி (9) - குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறை கொண்ட கண்டத்தான் - என்னும் பாசுரத்தைக் கூறுகிறார். “குறை கொண்டு” - நான்முகன் தனது வெறுமையைத் தனது உதவியாகக் கொண்டு அடைந்தான்; அந்த நேரத்தில் உபகரணம் ஏதும் கிட்டவில்லை; ஆகவே தர்மதேவதையே கமண்டலத்தில் தண்ணீராக வந்து நின்றாள். அந்த நீரைக் கொண்டு, “மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி” - வேதாந்தங்களில் பகவானுடைய உயர்ந்த நிலையைக் கூறும் மந்திரங்கள் கொண்டு துதித்து. “கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேலேறக் கழுவினான்” – அடக்கம் இன்றி கர்வம் கொண்டு திரிகின்ற பிள்ளைகள் தலையில் ஸ்ரீபாத தீர்த்தம் கொண்டு தெளிப்பவர்கள் போன்று. – (நுண்ணுணர்வில்) - ஸத்வகுணம் மேலோங்கும்போது கூறப்படுவது, “நோலாது ஆற்றேன்” என்ற வார்த்தைகளே ஆகும். “நுண்ணுணர்வு” என்று ஞானத்தை அல்லவோ கூறுகிறது? அது, “ஸத்வம் ஓங்கும்போது” என்பதைக் காண்பிக்குமோ என்பதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; “ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே - ஸத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது” என்பதே அல்லவோ ப்ரமாணமாக உள்ளது? (நீலார் கண்டத்தம்மானும்) - விஷத்தைக் கழுத்தில் எப்போதும் வைத்துள்ளதால், தன்னை ஈச்வரன் என்று எண்ணும் ருத்ரனும். (நிறை நான்முகனும்) - அந்த ருத்ரனைத் தோற்றுவித்தவனும், பூர்ணமான ஞானம் கொண்டவனும் ஆகிய நான்முகனும். (இந்திரனும்) - இவர்களைப் போன்று ஸ்ருஷ்டி மற்றும் ஸம்ஹாரம் ஆகியவற்றில் எந்தவிதமான ஸம்பந்தமும் இல்லை என்றாலும், “ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ்ஸேந்த்ர - அவன் நான்முகன், அவன் சிவன், அவன் இந்த்ரன்” என்று உள்ளது கொண்டு ஒரே போன்று படிக்கப்படும் இந்த்ரனும். – (சேலேய் கண்ணாரித்யாதி) - இவர்கள் தங்கள் தங்கள் மனைவிமார்களுடன் வந்து திருவேங்கடமுடையானைப் பணிவதற்கு ப்ரயோஜனம் என்ன என்பதைக் கூறுகிறார். தங்கள் தங்கள் நிலையில் உயர்த்தி உள்ளபோதிலும், பெண்கள் அருகில் உள்ளபோது, எளிமையை வெளிப்படுத்தியிருக்கமாட்டனர் அல்லவோ? ஆபத்து என்று வந்தபோது தங்கள் கழுத்திலும், தங்கள் மனைவிமார்கள் கமுத்திலும் வறுமைக்கு ஏற்றதான ஒரு உடையை அணிந்தபடி வந்து விழத் தொடங்குவார்கள். அதாவது, தங்கள் தங்கள் மனைவிமார்களுடன் வந்து பணிந்தால் அவன் இரக்கம் கொள்வான் என்று எண்ணி அண்டுகிறார்கள். அவரவர்கள் தங்கள் மனைவிமார்களை முன்னிட்டபடி வந்து பணிந்தார்கள் என்பதற்கு ப்ரமாணம் ஹரிவம்ஸம் (279-15) - உமயாஸார்த்தமீசாந: - பார்வதியுடன் சேர்ந்தபடி - என்றும், ஸ்ரீவிபு. (5-7-57) - பர்த்ருபிக்ஷா ப்ரதீயதாம் - எனது கணவனுடைய இந்த யாசகம் தரப்படவேண்டும் – என்றும், ஸங்க்க்ஷேப ராமாயணம் (79) - ஸமுத்ரஸ் ஸரிதாம்பதி: - நதிகளின் கணவனாகிய ஸமுத்ரராஜன் – என்றும், கிஷ்கிந்தா காண்டம் (33-40) - ஸமுத்ரஸ் ஸரிதாம்பதி: - கோபத்தின் காரணம் என்ன – என்றும் கூறுவதற்கு ஏற்ப மனைவிமார்களுடன் வந்து பணிவர். – (திருவேங்கடத்தானே) - இவர்களுக்கு எளிதில் அடையலாம்படி சுலபனாக வந்து நிற்கும் நிலை. (மாலாய் மயக்கி) - “மயக்கி” என்பதன் பொருள் கூறுவதற்காக நிகண்டுவிலிருந்து ப்ரமாணம் கூறுகிறார்; “மயங்கல் கூடலும் கலவியும்” என்பது காண்க; கூடல் என்றால் ப்ரணயகலகம் கழிந்த பின்னர் சேர்வது; கலவி என்றால் சேர்க்கைக்கு அடிப்படையான உணர்வு. இங்கு “மயங்கி” என்பதற்கு முதல் கருத்தில், “கூடல்” என்று கொண்டால் “நீ மயக்கம் அடைந்தவனாக, நான் மயங்குபடி வரவேண்டும்” என்றாகும். அல்லது “மயங்கி” என்பதற்கு இரண்டாவது கருத்தில் “கலவி” என்பதாகக் கொண்டால், “நான் மயங்கும்படியாக வரவேண்டும்”. இந்த இரண்டிலும், “வந்தாய் போலே” என்பதற்கு ஸ்வாரஸ்யம் இல்லை என்பதால், “அவையன்று பொருள்” என்று தொடர்கிறார்; மால் என்றால் கறுப்பாக, இதன் மூலம் நினைக்கப்படுபவன் க்ருஷ்ணனாக, அப்படிப்பட்ட க்ருஷ்ணனாக உனது குண லீலைகளால், அந்த அவதாரத்தின் காலத்தில் உள்ளவர்களை மயக்கம் ஏற்றியபடி நீ வந்தது போன்று, எனக்காகவும் ஒருமுறை வரவேண்டும். நாச்சியார் திருமொழி (14-3) - மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை - என்பது காண்க.