திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 7)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே கொடியா அடு புள் உடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே நொடி ஆர் பொழுதும் உன பாதம் காண நோலாது ஆற்றேனே
– இயல்பாகவே அடிமைத்தன்மையை ஸ்ரூபமாகக் கொண்ட நான், அடைந்து, எப்போதும் அனுபவிக்கும்படி இருக்கவல்லதான நித்யமான இனிமை கொண்டவனே! இப்படியாகவே நித்யஸூரிகளையும் அனுபவிக்கும்படிச் செய்து, அவர்களுக்கு நிர்வாஹகன் என்றுள்ள மேன்மை கொண்டவனே! அடியார்களுடைய விரோதிகளை விலக்கவல்ல கருடனைக் கொடியாகக் கொண்டவனே! இப்படிப்பட்ட இனிமையை உள்ளடக்கியதான ஸௌந்தர்யம் போன்றவற்றுடன் கூடியதாக, பக்குவமான பழம் போன்று சிவந்த வாயைக் கொண்டவனாக, இந்த இனிமைக்கு எல்லை காண இயலாதபடி பெருமை மிக்கவனே! இப்படிப்பட்ட இனிமைக்குத் தடையாக, புதர் போன்றுள்ள பாபங்களை தீர்ப்பதற்கான மருந்தாக உள்ளவனே! திருவேங்கடத் திருமலையில் அருகில் வந்து நின்று என்னை அடிமை கொண்ட ஸ்வாமியே! உனது திருவடிகளை நான் காண்பதற்கு நொடிப்பொழுதும் இனி பொறுக்கமாட்டேன்.
– “‘மெய்ந்தாளெய்தி’ என்கிற இந்த ஜ்ஞாந லாபம் உமக்கு உண்டாயிற்றிறே; அது பலத்தோடே வ்யாப்தமாயல்லது நில்லாதிறே; ஆன பின்பு அவ்வளவும் நீர் ஆறியிருந்தாலோ” என்ன; “அத்தனை க்ரம ப்ராப்தி பார்த்திருக்கப் போகிறதில்லை உன் போக்யதை” என்கிறார். உன்றனை யாறியிருக்க நான் மாட்டுகிறிலேன்.
– ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “மெய்ந்நாள் எய்தி” என்பதான இந்த ஞானம் உமக்குக் கிட்டியது அல்லவோ? இது பலனுடன் சேர்ந்து நிற்கச் செய்வது அல்லாமல் இருக்காது அல்லவோ?”, என்றான். இதற்கு ஆழ்வார், “உனது இனிமை என்பது, அது போன்று ஒரு வரிசை முறையில் நான் காத்திருக்கும்படி செய்ய விடுவதில்லை”, என்கிறார். “நீ திருவேங்கடமுடையானாக உள்ளபோதிலும் என்னை ஏற்காமல் பொறுமையுடன் உள்ளாய். இவ்விதம் இருக்கும் உன்னைப் போன்று நான் பொறுமையுடன் இருக்கமாட்டேன்”, என்கிறார்.
(அடியேன் மேவியமர்கின்றவமுதே) தேவஜாதிகளுடைய உப்புச்சாறு போலன்று; ஒரு திரளாய் அநுபவிக்குமதன்று; அநந்ய ப்ரயோஐநரநுபவிக்கும் அம்ருதமாயிற்று! (இமையோரதிபதியே) இது புஜிக்கைக்குக் கூட்டாவதொரு திரள் அங்கே உண்டாயிருக்கிறபடி. (கொடியாவடு புள்ளுடையானே) ப்ரதிபக்ஷ நிரஸநத்தை ஸ்வபாவமாகவுடைய பெரிய திருவடியை த்வஜமாக வுடையவனே! (கோலக் கனிவாய்ப் பெருமானே) அழகியதாய்க் கனிந்திருந்துள்ள திருவதரத்தின் சிவப்பைக் காட்டி என்னை யடிமை கொண்டவனே! வாய்க்கரையிலே தோற்றார்காணும். ஆச்ரிதரை இவ்வழகை யநுபவிப்பிக்கைக்குக் கொடி கட்டிக் கொண்டிருக்கிறபடி (செடியார் வினைகள் தீர் மருந்தே) செடி பாபம்; பாபத்தோடே பொருந்தின அஸத் கர்மங்களாலுண்டான து:கத்தைப் போக்குகைக்கு மருந்தானவனே! அது புஜிப்பிக்கைக்கு விரோதிகளைப் போக்கும்படி. அன்றிக்கே, தூறு மண்டின கர்மங்களைப் போக்குகைக்கு மருந்தானவனே! அவ்வம்ருதந்தானே காணும் மருந்தாகிறது. “மருந்தும் பொருளுமமுதமுந்தானே”, “மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு” என்றும், அவன் தன்னையொழிய வேறு மருந்துமில்லையே; “மருத்துவனாய் நின்ற மாமணிவண்ண”னிறே. (திருவேங்கடத்தெம்பெருமானே) அவ்வம்ருதம், புஜிப்பார்க்கு மலைமேல் மருந்திறே. அவ்வம்ருதம், புழிப்பார்க்குச் சாய்கரகம்போலே உயரத்திலே யணித்தாக நிற்கிறபடி. “இமையோரதிபதியாய், கொடியாவடு புள்ளுடையானாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய், திருவேங்கடத்தெம்பெருமானாய், கோலக் கனிவாய்ப் பெருமானாய், அடியேன் மேவியமர்கின்றவமுதே!” என்கிறார். பட்டர் “நித்யத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும்போது ஸ்தோத்ரத்தை விண்ணப்பஞ் செய்வது’ என்று என்ன ஸ்தோத்ரத்தை விண்ணப்பஞ் செய்வது” என்ன; “‘அடியேன் மேவியமர்கின்ற வமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்கிற பாட்டுக்கள் போலேயிருக்குமவற்றை விண்ணப்பஞ் செய்வது” என்றருளிச்செய்தார். (நொடியார் பொழுதும்) நொடி நிறையுமளவும். (உன பாதம் காண நோலாதாற்றேனே) உன் திருவடிகளைக் காண்கைக்கு ஒரு ஸாதாநுஷ்ட்டாநம் பண்ணாதிருக்க, க்ஷணகாலமும் ஆற்ற மாட்டுகிறிலேன். ஸாதநத்தைக் கண்ணழிவற அநுஷ்ட்டித்து பலந்தாழ்ப்பாரைப் போலே படாநின்றேன். அதில்லாமையிறே இவர் இங்ஙனே கிடந்து படுகிறது. தனியே ஒரு ஸாதநம் அநுஷ்ட்டிக்குமவனுக்கு, “அது தலைக்கட்டினவாறே பெறுகிறோம்” என்றாதல், “அதிலே சில வைகல்யம் பிறக்கப்பட்டிறே பலந்தாழ்த்தது” என்றாதல். ஆறியிருக்கலாம்; அவனே ஸாதநமான இவர்க்கு விளம்பித்தால் “அவன் க்ருபையும் ஏறிப் பாயாதபடியானேனோ!” என்னும் பயமிறேயநுவர்த்திப்பது.
– (அடியேன் மேவியமர்கின்றவமுதே) - தேவர்கள்க்கு கிட்டும் அமிர்தம் போன்று அல்ல; ஒரு கூட்டமாக நின்று அனுபவிப்பது அல்ல; எந்தவிதமான பயனும் கருதாமல் உள்ளவர்கள் மட்டுமே அனுபவிக்கும்படியாக உள்ள அம்ருதம் ஆகிறான். (இமையோர் அதிபதியே) - “ஒரு கூட்டமாக நின்று அனுபவிப்பது அல்ல” என்று கூறிய பின்னர், “இமையோர்” என்று பன்மையில் ஏன் கூறினார் என்பதற்கு விடை அளிக்கிறார்; இந்த அமிர்தத்தை உண்பதற்கு ஒரு கூட்டம் அங்கேயும் உள்ளது என்று கருத்து. அதாவது அங்கு உள்ளவர்கள் மற்ற பயன்களைக் கருதாமல் உள்ளவர்கள் ஆவார்கள் என்று கருத்து. – கொடியாவடு புள்ளுடையானே) - அடியார்களுடைய விரோதிகளை அழிப்பதையே தனது இயல்பாகக் கொண்ட கருடனைக் கொடியாகக் கொண்டுள்ளவனே! (கோலக் கனிவாய்ப் பெருமானே) – அழகாகக் கனிந்துள்ள வாயின் சிகப்பு நிறத்தைக் காண்பித்து என்ன அடிமையக்கிக் கொண்டவனே! வாய் என்ற கரையில் தோற்றார். அடியார்கள் இந்த அழகை நன்கு அனுபவிகவேண்டும் என்பதற்காகக் கொடி கட்டிக் கொண்டுள்ள நிலை. (செடியார் வினைகள் தீர் மருந்தே) – “செடியார் வினைகள்” என்பதற்கு இரண்டு பொருள்கள் கூறுகிறார். முதல் பொருளில் செடி என்பது பாபம், வினை என்பது துக்கம்; பாபத்துடன் கூடியதான தீய வினைகளால் ஏற்படும் துக்கத்தைப் போக்கும் மருந்தாக உள்ளவனே! இரண்டாவது பொருளில் செடி என்றால் தூறு, வினை என்றால் பாபம்; இதனை அருளிச்செய்கிறார்; தூறு மண்டிய பாபங்களைப் போக்குவதற்கான மருந்தாக உள்ளவனே! அந்த அமிர்தமே மருந்தாக உள்ளது; இதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; மூன்றாம் திருவந்தாதி (4) - மருந்தும் பொருளுமமுதமுந்தானே – என்றும், திருவாய்மொழி (9-3-4) – மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அவன் அல்லாமல் வேறு மருந்து இல்லை. பெரியாழ்வார் திருமொழி (5-3-6) - மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன் - அல்லவோ? – (திருவேங்கடத்து எம்பெருமானே) - அந்த அமிர்தம், பருகுபவர்களுக்கு மலை மேல் உள்ள மருந்து அல்லவோ? அந்த அமிர்தம், அதனைப் பருகுபவர்களுக்கு, தண்ணீர் பந்தலில் தண்ணீர் வைக்கப்படும் பானையைப் போன்று உயரத்தில் உள்ளபோதிலும், அருகாமையில் உள்ளதாகவே தோன்றும். பரத்வத்தைக் கூறி விரோதிகளை அழிப்பதற்கு உறுப்பான பரிகரத்தைக் கூறி, விரோதி அழித்தலைக் கூறி, ஸௌலப்யத்தைக் கூறி, இனிமையாகவும் உள்ளான் என்று இப்படி ஒரு வரிசையைக் கூறுவதற்காக “இமையோர்” என்று தொடங்குகிறார்; அதாவது “இமையோரதிபதியாய், கொடியாவடு புள்ளுடையானாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய், திருவேங்கடத்தெம்பெருமானாய், கோலக் கனிவாய்ப் பெருமானாய், அடியேன் மேவியமர்கின்றவமுதே” என்கிறார். எம்பெருமானார் தனது நித்யம் என்ற நூலில் “அமுது செய்யப் பண்ணும்போது ஸ்தோத்ரத்தை விண்ணப்பஞ் செய்வது” என்றார்; இது குறித்து பராசர பட்டரிடம், “என்ன ஸ்தோத்ரத்தை விண்ணப்பம் செய்வது” என்று கேட்டதற்கு அவர், “‘அடியேன் மேவியமர்கின்ற வமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பது போன்றுள்ள பாசுரங்களை விண்ணப்பம் செய்யலாம்”, என்றார். (நொடியார் பொழுதும்) - ஒரு நொடிப்பொழுது முடியும் அளவிற்கும் கூட. (உன பாதம் காண நோலாதாற்றேனே) - உனது திருவடிகளைக் காண்பதற்கு ஏற்றதொரு உபாயமோ விதிமுறைகளோ செய்யாமல் உள்ளபோதிலும், ஒரு க்ஷணகாலம் கூட பொறுத்திருக்க இயலவில்லை. அதாவது தகுந்த உபாயங்களை எந்தக் குறையும் இன்றிக் கைக்கொண்ட பின்னர், பலன் கிட்டுவதற்குத் தாமதம் ஆவது கண்டு பொறுக்காமல் உள்ளவர்கள் போன்று, அதனைப் போன்று ஏதும் செய்யாமல் உள்ள நான் பொறுக்க இயலாமல் நிற்கிறேன். அந்த விதிமுறைகள் இல்லாத காரணத்தால்தான் இவர் இவ்விதம் துக்கம் கொள்கிறார். தனியாக ஓர் உபாயத்தைக் கைக்கைக்கொள்ளும் ஒருவன், “இந்த உபாயம் நிறைவேறிய பின்னர் பயனை அடையப்போகிறோம்”, என்று இருப்பான்; அல்லது, “அந்த உபாயம் கைக்கொள்ளும்போது ஏற்பட்ட குறைகள் காரணமாகப் பலன் கிட்ட காலதாமதம் ஆகிறது”, என்று இருப்பான். ஆனால் “அவனே உபாயம்” என்றுள்ள இவருக்கு, இவ்விதம் காலதாமதம் ஏற்பட்டால், “அவனுடைய க்ருபையும் கூட நம் மீது ஏறிப் பாயாதபடியாக நான் உள்ளேனோ?”, என்று அச்சம் கொள்ளவே செய்கிறார்.