திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 6)

ஆறாம்பத்து

பத்தாம் திருவாய்மொழி

எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே

– “பூமி என்பது உட்பட அனைத்து லோகங்களையும் அளந்து, அனைவருடனும் சேர்வதான சீல குணத்தை மிகுதியாகக் கொண்ட திருவடித்தாமரைகள் இரண்டையும் நாம் காண்பதற்கு எந்த ஒரு நாளைக் கொண்டுள்ளோம்” என்று, கண்களை இமைக்காத நித்யஸூரிகள் எப்போதும் நின்று, இவ்விதம் உரைத்து, துதித்து, வணங்கி, திரள்திரளாக வந்து, தங்களுடைய “சரீரம் மனம் வாக்கு” ஆகிய மூன்றாலும் கைங்கர்யம் செய்தபடி உள்ளதான திருவேங்கடமலையில் அருகில் வந்து நிற்பவனே! வேறு கதி இல்லாதபடி உள்ள நான், கனவு போன்று, மனம் மூலம் மட்டுமே அனுபவித்தபடி இல்லாமல், நேரடியாகவே கண்டு, உன்னை அடைந்து, உனது திருவடிகளில் பொருந்துவது எந்த நாளிலோ?

– “ ‘எந்நாள்’ என்று ஸந்தேஹிக்கிறதென்? அதொரு தேச விசேஷத்திலே வ்யவஸ்திதமன்றோ?” என்ன; அங்குள்ளாரும் இங்கே வந்தன்றோ உன்னைப் பெற்று அநுபவிக்கிற தென்கிறார். அங்ஙனன்றிக்கே, ப்ரயோஜநாந்தரபரரான அந்தரஜாதிகளுங்கூட அநந்ய ப்ரயோஜநரைப்போலே வந்து ஆஸ்ரயிக்க நிற்கிறவிடத்தே நான் இழந்து போவதே என்கிறாராகவுமாம்.

– ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “எந்த நாளில் என்று ஐயம் கொள்வது ஏன்? அவ்விதம் வந்தடைவது என்பது ஒரு குறிப்பிட்ட திவ்யதேசமான பரமபதத்தில் அல்லவோ உள்ளது?”, என்றான். இதற்கு ஆழ்வார், “அங்கு உள்ளவர்கள் கூட இங்கு வந்து அல்லவோ உன்னைப் பெற்று அனுபவித்தபடி உள்ளனர்”, என்கிறார். அல்லது “வேறு பயன்களை எதிர்பார்த்தபடி உள்ள தேவர்களும் கூட, மற்ற பயன்களை விரும்பாமல் உள்ளவர்கள் போன்று வந்து சேரும்படியாக நிற்கும் இடத்தை நான் இழந்தபடி உள்ளேன்!”, என்கிறார் என்றும் கூறலாம்.

(எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று) “எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே” என்று இங்குள்ளார் அங்கே அடிமை செய்ய ஆசைப்படுமாபோலே காணும், அங்குள்ளாரும் இவனுடைய ஸௌப்யத்தைக் கண்டு அநுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி ஸர்வஸுலபமான திருவடிகளை நாம் காணப்பெறுவது என்றோ? பூமியையடங்கலும் அநாயாஸேந அளந்து கொள்ளக் கண்ட காட்சியிலே தலை மேலே எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்படியான போக்யதையையுடைய திருவடிகளை. (எந்நாளும்) மற்றொருபோது வேறொன்றைப் பற்றிப் போகிறார்களன்றே. (இமையோர்கள் இத்யாதி) நித்யஸூரிகள் காலமெல்லாம் நின்று ஸ்தோத்ரம் பண்ணிப் பின்னைத் திருவடிகளிலே விழுந்து, கிண்ணகத்தில் இழிவாரைப்போலே திரள்திரளாய். மநோவாக்காயங்களாலே ஆச்ரயியா நிற்பர்கள். அன்றியே, மெய்யான நாவாலும் மனத்தாலும் வழிபடுவர்களென்றுமாம். அதாகிறது அநந்யப்ரயோஜகமான கரணங்களைக் கொண்டு ஆச்ரயியா நிற்பர்களென்றபடி. நித்யஸூரிகளானபோது, கைங்கர்யமாகிறது; ப்ரஹ்மாதிகளானபோது, உபாஸநமாகிறது. (மெய்ந்நானெய்தி இத்யாதி) குணாவிஷ்காரத்தாலே மாநஸாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்டவொண்ணாது; நான் உன் திருவடிகளைப் பத்தும்பத்தாக வந்து கிட்டி, பின்னை விச்லேஷத்தோடே வ்யாப்தமாகாதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார். ஓரடிவிடில் ஸத்தையற்றிறே இவர்க்கு இருக்கிறது.

– (எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று) -பரமபதத்தில் அவனுடைய திருவடிகளை எப்போது ஒரே போன்று அண்டி நிற்கும் நித்யஸூரிகள், “எந்த நாளில் காண்பது” என்று ப்ரார்த்திப்பதன் காரணம் என்ன என்பதைக் கூறுகிறார். அதாவது திருவாய்மொழி (3-2-1) - எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே - என்று இங்குள்ளவர்கள் அங்கு சென்று கைங்கர்யம் செய்வதற்கு ஆசைப்படுவது போன்று, அங்குள்ளவர்கள் இவனுடைய ஸௌலப்யம் கண்டு, இதனை அனுபவிக்கவேண்டும் என்று ஆசை கொண்டு இங்கு வரும் விதம் கூறப்பட்டது. “மண் அளந்த” என்பதை கருத்தில் கொண்டு அருளிச்செய்கிறார்; அனைவருக்கும் சுலபமாக உள்ள திருவடிகளை நாம் காணப்பெறுவது எந்த நாளிலோ? அதாவது பூமி உட்பட அனைத்து லோகங்களையும் எந்தவிதமான சிரமமும் இன்றி மிகவும் எளிதாக அளந்து கொள்வதாகக் கண்ட காட்சியில், தலை மீது எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்படி உள்ள இனிமை பொருந்திய திருவடிகளை. (எந்நாளும்) - எந்த ஒரு நேரத்திலும் வேறு விஷயங்களின் பின்னே செல்லாதவர்கள் என்பதால் “எந்நாளும்” என்றார். – (இமையோர்கள் இத்யாதி) - நித்யஸூரிகள் அனைத்து காலங்களிலும் நின்று துதித்து, அதன் பின்னர் திருவடிகளில் விழுந்து, வெள்ளத்தில் சிக்கிய பலவும் போன்று கூட்டம் கூட்டமாக வந்து. (மெய்) - “மெய்” என்பதற்கு சரீரம் மற்றும் ஸத்யம் என்று இரண்டு பொருள்கள் உள்ளன. இவற்றை அடுத்த இரண்டு வாக்கியங்களில் முறையே அருளிச்செய்கிறார்; “மனம், வாக்கு, சரீரம்” என்பவையால் அண்டி நிற்பார்கள்; அல்லது உண்மையாகப் பொருந்திய நாக்காலும் மனத்தாலும் வழிபடுவார்கள். அதாவது மற்ற பயன்களில் ஈடுபடாத உறுப்புக்கள் கொண்டு அண்டியபடி இருப்பார்கள் என்று கருத்து. “இமையோர்” என்பதற்கு நித்யஸூரிகள் மற்றும் தேவர்கள் என்று இரண்டு பொருள்களைக் கொள்ளலாம்; நித்யஸூரிகள் என்று கொண்டால், “கைங்கர்யம்” என்பதாகக் கொள்ளவேண்டும்; நான்முகன் போன்ற தேவர்கள் என்று பொருள் கொண்டால், “உபாஸனமாக” கொள்ளவேண்டும். – (மெய்ந்நானெய்தி இத்யாதி) - உனது குணங்களுடைய வெளிப்பாடு காரணமாக, வெறும் மனதால் மட்டுமே என்னை அனுபவிக்கும்படி நீ செய்து, என்னை ஏமாற்றுதல் கூடாது. நான் உனது திருவடிகளை மெய்யாகவே வந்து பற்றிக் கொண்டு, அதன் பின்னர் பிரிவு இல்லாதபடி பொருந்தியிருக்க வேண்டும்; அது எந்த நாளிலோ? “அடிகள்” என்று பன்மையில் ஏன் கூறினார் என்றால், ஒரு திருவடி இவரை விட்டால் கூட, இவர் தனது இருப்பு நீங்கியவர் ஆவார் என்பதால் ஆகும்.