திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 5)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே
நேர்த்தியாக உள்ளதைக் கண்டு இலக்கைக் குறி வைக்க இயலாதபடி, திரளாக நின்ற மராமரங்கள் எழையும், சுக்ரீவன் இராமனின் பலத்தை எண்ணி சந்தேகம் கொண்ட அந்த நாளில், அவனுக்கு விச்வாஸம் ஏற்படும்படியாக அம்பு எய்த ஒரே வில் வீரனாகவும்; நன்கு சேரும்படியாக நின்ற இரண்டு மரங்களின் நடுவே சென்ற, இந்த ஜகத்தின் காரணமாக உள்ளவனாகவும், “திண்மை பொருந்திய மழைமேகம்” என்று கூறலாம்படியாக உள்ள யானைகள் சேர்ந்து வாழ்கின்ற திருவேங்கடமலையில் வாழ்பவனாகவும் இருப்பவனே! பிடித்த கரம் நிரம்பும்படியான பெருமை கொண்ட ஸ்ரீசார்ங்கம் என்ற வில்லைக் கொண்ட உனது திருவடிகளை, உனது வீர சரிதங்களுக்குத் தோற்று உனக்கு அடிமையான நான் எந்த நாளில் சேருவேன்?
– “நீர் இங்ஙன் தவரிக்கிறதென்? உம்முடைய அபேக்ஷிதஞ் செய்கிறோமிறே”, என்ன; “அது என்று?” என்கிறார்.
ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நீவிர் இப்படியாக விரைவு காண்பிக்கிறது ஏன்? உமது விருப்பத்தை நாம் பூர்த்தி செய்து தருவோம்”, என்றான். இதற்கு ஆழ்வார், “அது எந்த நாளில்?”, என்கிறார்.
(புணரா இத்யாதி) - க்ஷத்ரியர் விற்பிடிக்கிறது ஆர்த்த த்வநி கேளாமைக்கன்றோ? “க்ஷத்ரியைர்தார்யதே சாபம் நார்த்த சப்தோ பவேதிதி”. இலக்குக் குறிக்கப் போகாதபடி திரண்டு நின்ற ஏழு மராமரங்களை முஷ்டியாலும் நிலையாலும் நேர்நிற்கப் பண்ணி எய்த ஏகவீரனே! (ஓ) ஒ என்று விஷாதாதிசய ஸூசகம். ரக்ஷணத்தில் அதிசங்கை பண்ணினாரையும் விச்வஸிப்பித்துக் காரியங் கொள்ளும் நீ, ஆசைப்பட்ட எனக்கு உதவவாராதொழிவதே! “ஸுக்ரீவச்சாங்கிதச்சாஸீத் இத்யாதி” பெருமாளைக் கண்ட அன்று தொடங்கி மராமரங்களைப் பிளக்க எய்யுந்தனையும், முடிய சங்கித்தே யிருந்தான். அந்த சங்கா நிராகரணத்தைப் பண்ணி ரக்ஷித்த நீ, நிச்சங்கமாகப் பற்றின என்னை ரக்ஷிக்க வேண்டாவோ? (புணரா இத்யாதி) ஒரு நீராயாய்ச் சேர்ந்து நின்ற மருதுகளை ஊடறுத்து, ஒன்றிலே வெளிகண்டு போவாரைப்போலே போய், ஜகத்துக்கு வேர்ப்பற்றான உன்னைத் தந்தவனே! ப்ரளய காலத்திலன்று ஜகத்தையுண்டாக்கிற்று; இன்றாயிற்று. அற்றைக்கு இவன்தான் உண்டாகையாலே உண்டாக்கலாம்; இங்கு நிரந்வய விநாசமிறே பிறக்கப்புக்கது. (முதல்வாவோ) ஜகத்தை உண்டாக்கினவனே! ஜகத்துக்கு வேர்ப்பற்றான தன்னையிறே நோக்கித் தந்தது; “ஸதேவ ஸோம்யே தமக்ர ஆஸீத்” என்கிறபடியே. தான் உளனாகவே உண்டாமதிறே ஐகத்து. இப்படியிருக்கிற தன்னளவிலே வந்த ஆபத்தோ பரிஹரிக்கலாவது! (திணர் இத்யாதி) திண்மை மிக்கிருந்துள்ள மேகமென்னும்படி ஆனைகளானவை சேராநின்றுள்ள திருமலையிலே நின்றருளினவனே! மேகங்களோடே ஸர்வதா ஸாம்யமுண்டாகையாலே, மேகங்களைக் கண்டபோது ஆனையென்னலாம்; ஆனைகளைக் கண்டபோது மேகம் என்னலாயிருக்கும். “மத யானை போலெழுந்த மாமுகில்காள்” என்னக்கடவதிறே. ஸமாந தர்மத்தால் வந்த ஸம்சயம் த்விநிஷ்டமிறே! விஷயங்களால் வரும் அந்யதாஜ்ஞாநத்தைக் கழித்து, அத்தேசத்தே பிறக்கும் அந்யதாஜ்ஞாநத்தை யாகாதே இவர் கணிசிக்கிறது. அங்குள்ளதெல்லாம் போக்யமாய்த் தோற்றுகிறபடி. (திணரார் சார்ங்கத்துனபாதம்) திண்மை மிக்கிருந்துள்ள ஸ்ரீசார்ங்கத்தையுடைய உன்னுடைய திருவடிகளை. “சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம்” என்கிறபடியே சரண்யமான திருவடிகளை. சக்ரவர்த்தி பிள்ளைகள் எடுக்குமத்தனை காணும் வில்லு. (திணரார் சார்ங்கம்) தன் வளைவிலே விரோதிகளைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகை. (உனபாதம்) அவ்வளைவுக்கு அகப்படாதாரை முதலடியிலே யகப்படுத்திக் கொள்ளுமது. (சேர்வதடியே யெந்தாளே) கையில் வில்லிருக்க இழக்கவேண்டா, விரோதியுண்டென்று; இனி உன்னைப் பெறும் நாளையாகிலும் சொல்லவேணும்.
– (புணரா இத்யாதி) - க்ஷத்ரியர்கள் வில்லை ஏந்துதல் என்பது நாட்டில் உள்ளவர்களுடைய துயர ஒலி கேட்காமல் இருப்பதற்காக அல்லவோ? இதற்கு ப்ரமாணம், ஆரண்யகாண்டம் (10-3) - க்ஷத்ரியைர்தார்யதே சாபம் நார்த்த சப்தோ பவேதிதி - வருத்தம் கொள்கிறார்கள் என்ற சப்தம் கேட்கக்கூடாது என்பதற்காகவே க்ஷத்ரியர்களால் வில் ஏந்தப்படுகிறது - என்பது ஆகும். அம்பால் நேராகச் சென்று தாக்க இயலாதபடியாக, திரண்டு நின்ற எழு மராமரங்களை, முஷ்டியாலும் நிலையாலும் நேர் நிற்கும்படியாகச் செய்து அம்பு எய்த வீரனே. (ஓ) - துக்கத்தின் மிகுதியைக் காண்பிக்கிறது. துக்கத்திற்காண காரணத்தையும் ப்ரமாணத்தையும் அடுத்து கூறுகிறார். உனது காப்பாற்றுதலில் சந்தேகம் கொண்டவர்களையும், அவர்கள் விச்வாஸம் கொள்ளும்படியாகச் செயல்கள் புரியும் நீ, உன்னை அடையவேண்டும் என்ற ஆசை கொண்ட எனக்கு உதவ வராமல் இருப்பது ஏனோ? ஸங்க்ஷேப இராமாயணம் (63) - ஸுக்ரீவச்சாங்கிதச்சாஸீத் - ஸுக்ரீவன் இராமன் விஷயத்தில் சந்தேகம் கொண்டபடியே இருந்தான் - என்பதற்கு ஏற்ப, இராமனைக் கண்ட நாள் தொடக்கமாக, மராமரங்கள் அனைத்தையும் பிளப்பதற்கு அம்பு எய்த நாள் முடிய எப்போதும் ஸுக்ரீவன் இராமனுடைய பலத்தில் சந்தேகம் கொண்டபடியே இருந்தான். அப்படிப்பட்ட அவனுடைய சந்தேகத்தை விலக்கி, அவனைக் காப்பாற்றிய நீ, எந்தவிதமான ஐயமும் இன்றி உன்னைப் பற்றியுள்ள என்னைக் காப்பாற்றவேண்டாமோ? – (புணரா இத்யாதி) - ஒரு கூட்டமாகச் சேர்ந்து நின்ற மருதமரங்களைத் துளைத்தபடி சென்று, ஒரு மரத்தின் இறுதியில் வெளியே வருவது போன்று இந்த உலகிற்கு வேர்ப்பற்றாக உள்ள உன்னையே அளித்தவனே! “முதல்வா” என்பதற்குப் பொருளாக “ஜகத்தின் வேர்ப்பற்று” என்றார். ப்ரளய காலத்தில் இவன் ஜகத்தை உண்டாக்கவில்லை; இன்றுதான் உண்டாக்கினான்; அன்று இவன் இருந்ததால் உண்டாக்கி இருக்கலாம்; இன்று காரணபூதனாகிய தானே இன்றி இருத்தல். ஜகத்தை உண்டாக்கியது எப்படி என்பதற்கு விடை அளிக்கிறார்; (முதல்வாவோ) - இந்த ஜகத்தை உண்டாக்கியவனே! ஜகத்திற்கு வேர்ப்பற்றாகிய தன்னையே நோக்கித் தந்தான். ஆனால் தன்னையே நோக்கினால் ஜகத் உண்டாகுமோ என்பதற்கு விடை அளிக்கிறார்; உபநிஷத்தில் – ஸதேவ ஸோம்யே தமக்ர ஆஸீத் - தொடக்கத்தில் இந்த ஸத் என்பது மட்டுமே இருந்தது - என்பதற்கு ஏற்ப, தான் உள்ளபோது இந்த ஜகத்தும் உள்ளதாயிற்று. இப்படி உள்ளபோது என் அளவில் வந்த ஆபத்து நீக்கலாகாதோ? – (திணர் இத்யாதி) – திண்மை மிகுதியாக உள்ள மேகங்கள் என்று கூறலாம்படியான யானைகள் சேர்ந்து நிற்கும் திருவேங்கடத் திருமலையில் நிற்பவனே! யானைகளைக் கண்டு ஏன் மேகம் என்று மயங்கவேண்டும் என்பதைக் கூறுகிறார்; மேகங்களுடன் இந்த யானைகளை அனைத்துவிதங்களிலும் ஒப்பிடலாம்படி உள்ளது என்பதால், மேகங்களைக் காணும்போது “யானை” என்று கூறலாம்; இது போன்று யானைகளைக் காணும்போது “மேகம்” என்று கூறலாம்படி உள்ளன. மேகங்களைக் கண்டால் “யானை” என்று கூறலாம்படி இருப்பதற்கு ப்ரமாணம் நாச்சியார் திருமொழி (8-9) - மத யானை போலெழுந்த மாமுகில்காள் - என்பதாகும். “மேகம் எனக் களிறு சேரும்” என்பதாக அல்லவோ வாக்கு உள்ளது? “மேகத்தைக் கண்டால் யானை என்று கூறலாம்படி இருக்கும்” என்று கூறும்படியான சொற்கள் இல்லையே என்பதற்குச் சமாதானம் கூறுகிறார்; “ஒன்றாக உள்ளது” என்று தன்மை காரணமாக எழுந்த ஐயம் மேகம் மற்றும் யனை ஆகிய இரண்டிலும் உள்ளது அல்லவோ? ஆனால், ஒரு வஸ்து என்று இல்லாத ஒன்றை, அந்த வஸ்துவாக எண்ணுதலாகிய அந்யதா ஞானம் என்பது கைவிடத்தக்கது அல்லவோ என்பதற்கு விடை கூறுகிறார்; மற்ற விஷயங்களில் இது போன்று உண்டாகும் அந்யதா ஞானத்தை விலக்கி, இந்தத் திருமலையில் உண்டாகும் இது போன்ற அந்யதா ஞானத்தை அல்லவோ இவர் விரும்புகிறார்? அங்குள்ள அனைத்துமே இவருக்கு இனிமையான பொருள்களாகத் தென்படுகிறது. (திணரார் சார்ங்கத்துனபாதம்) - திண்மை மிகுதியாக உள்ள ஸ்ரீசார்ங்க வில்லை மிதித்தபடி உள்ள உனது திருவடிகளை. “சார்ங்கத்து உன பாதம்” என்று கூறியதற்கான ப்ரமாணம் யுத்தகாண்டம் (94-17) - சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் – காப்பாற்றுபவனை, தசரதருடைய புத்திரனை, இராமனை, ரக்ஷகமாக அடைந்தன - என்பதற்கு ஏற்ப சரணம் புகும் இடமாகிய திருவடிகளை. வில்லுக்குத் திண்மை என்ன என்பதற்கு விடை தருகிறார்; சக்ரவர்த்தியின் புத்திரர்களால் எடுக்கப்படுவதால் அவற்றுக்குத் திண்மை என்று கருத்து. (திணரார் சார்ங்கம்) - தனது வளைவில் விரோதிகள் அனைவரையும் தப்பித்து விடாமல் அகப்படுத்திக் கொள்ளும் தன்மை. (உன பாதம்) - அந்த வில்லின் வளைவில் அகப்படாத அநுகூலர்களை, முதல் அடியிலேயே அகப்படுத்திக் கொள்ளும் தன்மை. (சேர்வது அடியேன் எந்நாளே) – “விரோதிகளைப் போக்கவேண்டும்” என்று விண்ணப்பிக்காமல், “சேர்வது எந்நாளோ” என்று காலத்தைக் குறித்து ஏன் வினவுகிறார் என்பதற்கு விடை தருகிறார்; திருக்கரத்தில் வில் உள்ளதால் விரோதிகள் விஷயத்தில் எந்த விசாரமும் இல்லை; ஆகவே உன்னை வந்தடையும் நாள் எது என்று கூறவேண்டும்.