பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 5)

முதல்பத்து

இரண்டாம் திருமொழி

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே

முன்பு ஒரு நாள் ப்ரஹ்லாதன் மீது சினம் கொண்ட இரணியனுடைய மார்பைப் பிளந்த நரசிங்கத்தின் தொடைகள் இது என்று தோற்றும் வண்ணம், கொடுமையான கொலை உணர்வு ஓங்க வந்த ப்ரகாசத்தையுடைய பூதனையின் முலையைப் பசி ஆரச் சுவைத்து உண்டு ஏதும் அறியாதவன் உறங்குவது போன்று கிடக்கும் இப்பிள்ளையின் தொடைகள் உள்ளன. இதனை வந்து காணுங்கள்! குவிந்த முலைகளை உடைய பெண்களே நீங்கள் வந்து காணுங்கள்!

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருமுழந்தாளை விட்டு திருத்துடையை அநுபவிக்கிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருமுழந்தாளினழகை அநுபவித்த வநந்தரம், திருத்துடையினழகை யநுபவிக்கிறார்.

– திருமுழங்காலின் அழகை அனுபவித்த பின்னர் திருத்தொடையின் அழகினை அனுபவிக்கிறாள்.

திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (பிறங்கியவித்யாதி) விபரீத ப்ரகாசகையான பேய்ச்சியுடைய முலையைச் சுவைத்து, (உண்டிட்டு) ஆஸ்வாதித்து, அமுது செய்திட்டு. (இட்டு) ஜகத்துக்கு உபகரித்திட்டு. (உறங்குவான் போலே) கண்வளருவாரைப்போலே ஆடப் பார்த்துக் கிடந்த ப்ரகாரத்தைக் கண்டு “இப்பிள்ளை” என்கிறாள். (மறங்கொளித்யாதி) பிள்ளையைச் சீறி வெகுண்ட மறத்தாலேயிறே ஹிரண்யனைப் பிளந்தது. இப்படி பிளந்தவனுடைய திருத்துடைகளை ரக்த ஸ்பர்சத்தோடே காணீர் என்றாப்போலே இருக்கிறது. இப்போது இது சொல்லுகிறது விரோதி நிரஸந ஸாமர்த்தியத்தாலும், தர்ம்யைக்யத்தாலுமிறே; அன்றிக்கே ஸ்வாபாவிகமாகத் தழுவுகிற போதைத்திருக்குறங்குகளை வந்து காணீரென்கிறாரென்றுமாம். “குவி முலையீர்” என்று பக்தி வர்த்தகராகிறவர்களை அழைக்கிறார். மாமுனிகள் வ்யாக்யானம் - (பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்துண்டிட்டு) க்ரௌர்யத்தால் வந்த ப்ரகாசத்தை யுடையளான பூதனையுடைய முலையைப் பசையறச் சுவைத்து புஜித்து. “உண்டிட்டு” என்று ஒரு முழுச் சொல்லு. (உறங்குவான் போலே கிடந்தவிப்பிள்ளை) செய்த பராக்ரமம் ஒன்றும் தெரியாதபடி உறங்குமவன் போலக் கிடந்த இப்பிள்ளை. (மறங்கொளித்யாதி) ப்ரஹ்லாத விஷயமான சீற்றத்தையுடையனான ஹிரண்யனுடைய மார்வை முற்காலத்திலே பிளந்து பொகட்டவனுடைய அச்சுவடு தோற்றும்படியிருக்கிற திருத்துடைகளை வந்து காணுங்கோள். (குவி முலையீர் வந்து காணீரே) குவிகிற முலையையுடைய நீங்கள் வந்து காணுங்கோள்.

– (பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு) – “பிறங்குதல்” என்றால் ப்ரகாசம்; இங்கு, பூதனைக்கு எவ்வாறு ப்ரகாசம் உண்டாகிறது என்னும் ஐயத்திற்கு விடை அருளிச்செய்கிறார். க்ருஷ்ணனைக் கொல்ல வேண்டும் என்னும் விபரீதமான எண்ணத்தால் விளைந்த ப்ரகாசம். எவ்வாறு விபரீதமான எண்ணம் ப்ரகாசத்தை உண்டு பண்ண முடியும்? க்ருஷ்ணனைக் கொல்ல யசோதையைப் போன்று வருவதால், அந்தத் தாயுடைய பாவனையால் ப்ரகாசம் உண்டாகிறது; இப்படி ப்ரகாசத்துடன் உள்ள பூதனையுடைய முலையை, பெரியாழ்வார் திருமொழி (1-2-3) – பால் பாய்ந்து கொங்கை அணைத்து - என்று பசியார சுவைத்து உண்டு. (இட்டு) – பூதனைக்கும், இந்த உலகத்திற்கும் பெரிய உதவி செய்திட்டு. (உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை) - பூதனையை அழித்த இடத்தில், குருதியை வற்றப் பண்ணுவதும், மாமிசங்களை ஒழிப்பதும், எலும்புகளை முரிப்பதும் போன்ற எவ்விதமான கடினமான காரியங்களைச் செய்யாமல், “என்ன செய்து இவள் அழிந்தாள்” என்று யாவரும் வியக்கும் வண்ணம் எளிதாய்த் தீர்த்து முடித்து, உறங்குவது போன்று கிடந்த இப்பிள்ளை. (மறங்கொள் இத்யாதி) - பகவத் விஷயமான கோபமாகவே இருந்தாலும் பாகவதர்கள் மேல் உள்ள கோபமாகக் கொண்டு அருளிச் செய்கிறார். தன் பிள்ளையான ப்ரஹ்லாதன் மீது சினத்துடன் இருந்த இரணியனுடைய மார்பை முற்காலத்திலே பிளந்த நரசிம்மத்தின் தொடைகள் போன்றுள்ள, இவனுடைய சிவந்த தொடைகளை வந்து காணுங்கள். இங்கு நரசிம்மத்தைக் குறித்து ஏன் கூறவேண்டும்? இவனுடைய விரோதிகளை அழிக்கும் சாமர்த்தியத்தைக் கூறுவதற்கும், அடியார்களைக் காக்கும் தர்மத்தை உரைப்பதற்கும் ஆகும். (குவிமுலையீர் வந்து காணீரே) - என் பிள்ளை மீது மிகுந்த அன்பு ததும்புவதைத் தோற்றுவிக்கும் குவிந்த முலைகளை உடையவர்களே! நீங்கள் வந்து காணுங்கள்.