திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 4)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா தேவா சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே
இந்த லோகத்தைக் கண்டு “ஐயோ ஐயோ” என்று இரக்கம் கொள்ளாமல், அனைவரையும் வருத்துகின்ற அஸுரப் பிறவிகளுடைய உயிர் மீது, நெருப்பு நுனிகளைக் கொண்டதான அம்புகளை மழை போன்று சொரிந்தபடி உள்ள ஸ்ரீசார்ங்கம் என்ற வில்லைக் கொண்டவனே! அந்த “விரோதிகளை அழித்தல்” என்ற செயலால் மகிழ்ந்து, வீர பத்னியாக உள்ள மஹாலக்ஷ்மிக்கு ஏற்ற ரூபம் கொண்டவனே! அதன் விளைவாக ஒளிர்ந்தபடி உள்ளவனே! இந்த விரோதிகளை அழித்தல் என்பதையே காரணமாகக் கொண்டு தேவர்களும், ரிஷிகளும் கூட்டம் கூட்டமாக வந்து ஆதரிக்கும்படியாக திருவேங்கடமலையில் வாழ்பவனே! அவர்கள் இட்ட மலர்கள் கொண்டு நிறைந்த திருவடிகளை, அவற்றை அனுபவிக்க வேண்டிய தகுதி உள்ளபோதிலும் இழந்து நிற்கும்படியான பாபங்கள் கொண்ட நான், அவற்றைக் கிட்டும் விதத்தை நீயே எனக்குக் கற்பிக்கவேண்டும்.
உன்னை ப்ராபிக்கைக்கு உறுப்பாக நீ கண்டு வைத்த ஸாதநங்கள் எனக்கு ஒன்றும் உடலாகிறனவில்லை; ஆன பின்பு, தேவரை நான் ப்ராபிக்கைக்கு எனக்கென்னத் தனியே ஒரு ஸாதநங் கண்டு தரவேணுமென்கிறார். நம்பிள்ளை சீயரை ஒருநாள் “ ‘பஞ்சமோபாயமென்று கொண்டு ஒன்றுண்டு’ என்று சொல்லாநின்றார்கள்; நாட்டிலேயும் அங்ஙனேயிருப்பதொன்று உண்டோ?” என்று கேட்டருள; “நான் அறிகிறிலேன்; இனி சதுர்த்தோபாயந்தான் பகவானேயாயிருக்க, வ்யோமாதீதஞ் சொல்லுவாரைப் போலே ‘அவனுக்கும் அவ்வருகே யொன்றுண்டு’ என்கையிறே, அது நான் கேட்டறியேன்” என்றருளிச்செய்தார். “ஆனால், ‘ஆவா’ என்கிற பாட்டு அருளிச்செய்யும்போது ‘எனக்குத் தனியே ஒரு ஸாதநங் கண்டு தரவேணுமென்கிறார்’ என்று அருளிச்செய்கையா யிருக்குமே” என்ன; “அதுவோ! அது உன் ப்ரதிபத்தியில் குற்றங் காண்; அதுக்கு இங்ஙனே காண் பொருள்; நீயும் உளையாயிருக்க நான் இங்ஙனே யிழப்பதே யென்கிறார் காண்” என்று அருளிச்செய்தார். “ஸாஹம் கேச க்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி ப்ரபோ”; நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும்படி நான் பரிபூதையாவதே! உன் ஸத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தியுண்டு? (ப்ரபோ) நீயும் என்னோடொக்க ஸ்த்ரீயானாயாகில் நான் ஆறியிருக்கலாயிற்றே; நீ பரிப்ருடனா யிருக்கச் செய்தே நான் நோவுபடுவதே! நஞ்சீயர் ஸ்ரீபாதத்திலே ஆச்ரயித்தானொருவன், “எம்பெருமானே உபாயமாகில் ப்ரபத்தி கொண்டு இங்குச் செய்கிறது ஒன்றுங் கண்டிலேன்” என்ன; செவியைப் புதைத்து, “நாதமுநிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசார்யர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து ஓராண் வழியாய்க் கொண்டு போந்த இத்தை, இதின் சீர்மையறியாத உனக்கு மஹாபாபியேன் இத்தை வெளியிடுவதே!” என்று திருமுடியிலே அடித்துக் கொண்டு திருப்பள்ளியறையிலே புக்கருளினார். திவ்யமங்கள விக்ரஹமும் விக்ரஹ குணங்களும் திவ்யாத்ம ஸ்வரூபமும் ஸ்வரூப குணங்களும் நித்யமுக்தர்க்கு ப்ராப்யமானாற்போலே, முமுக்ஷுவாய் ப்ரபந்நனான இவ்வதிகாரிக்கு த்வய சரீரமே ப்ராப்யமாயிருக்குமிதே.
– “உன்னை அடைவதற்கு ஏற்றபடி நீ செய்து வைத்த உபாயங்கள் ஏதும் எனக்குக் கைக்கொள்வதாக இல்லை. ஆகவே உன்னை நான் அடைவதற்கு எனக்காக ஒரு தனியான உபாயத்தைச் செய்து தரவேண்டும்”, என்கிறார்; “தனியே ஒரு ஸாதநம் கண்டு தர வேணும்” என்பதன் கருத்து என்ன என்பதை அரும்பதம் விளக்குகிறது. “நான் செய்த பாபங்களுக்கு நீ உண்டாக்கியுள்ள நரகங்கள் போதாது. எனக்கு ஒரு நரகம் வேண்டும் என்றால், அதனை உண்டாக்கித் தரவேண்டும் என்பதே ப்ரார்த்தனை” என்பது அல்ல; மிகுந்த தாராளகுணமும் சக்தியும் கொண்ட நீ, அந்தப் பாபங்களைப் போக்கித் தரவேண்டும் என்பதே கருத்தாகும் அல்லவோ? அதனைப் போன்று எப்போதும் தயாராக உள்ள நீயே காக்கவேண்டும் என்று கருத்து. “ஒன்றும் உடலாகிறனவில்லை” என்றால், கர்ம ஞான பக்தி யோகங்கள் போன்று, ஸித்தோபாயமும் ஸாதனம் அன்று என்பது தோன்றினாலும், ஸித்தோபாயமாக நீயே விரைந்து செய்யவேண்டும் என்பதே கருத்து. – இந்த விஷயத்தில் நான்காவது ஸாதனமான ஸித்தோபாயமாக உள்ள ஸர்வேச்வரன் அல்லாமல் வேறு உபாயம் இல்லை என்பதற்கு ஒரு நிகழ்வைக் கூறுகிறார்; நஞ்சீயரிடம் நம்பிள்ளை ஒருநாள், “பஞ்சமோபாயம் என்று ஒன்று உள்ளது கூறுகிறார்கள். இங்கு அது போன்ற ஒன்று உள்ளதோ?”, என்கிறார். இதற்கு நஞ்சீயர், “நான் அறியவில்லை. இனி நான்காவது உபாயம் என்பதே பகவானே ஆவான் என்றுள்ளபோது, ‘ஆகாயம் என்று கூறப்படும் நாராயணனுக்கும் அப்பால் ஒன்று உள்ளது’ என்பது போன்றும், ‘நாராயணனுக்கு அந்தர்யாமியாக ருத்ரன் உள்ளான்’ என்று கூறும் பாசுபதர் போன்றும், ‘நாராயணனைப் போன்று வேறு ஒரு நான்காவது உபாயம் உள்ளது” என்பதை நான் அறியேன்”, என்றார். அடுத்து அரும்பதத்தில் உள்ள ஒரு கருத்து: ஈச்வரன் நீங்கலாக ஓர் உபாயம் இல்லை என்றால், ஆசார்யன் மீது கொள்ளும் ஈடுபாடு என்பது “பஞ்சமோபாயம் என்பது இல்லை” என்றூ கூறும் இக்கருத்துடன் முரண்படாதோ என்று கேட்கலாம்; வ்யூஹ வாஸுதேவனுடன் அந்தர்பூதமாகச் செய்து மூன்று வ்யூஹங்கள் என்று கூறுவது போன்று, ஆசார்ய ஈடுபாடு தனியான ஓர் உபாயம் என்றபோதிலும், அதனை ஸித்தோபாயமான ஸர்வேச்வர அந்தர்பூதம் என்று கொண்டு, ஐந்தாம் உபாயம் என்று கூறப்பட்டது. பஞ்சமோபாயம் என்பது இல்லை” என்றூ கூறும் கருத்துடன் முரண்படாதோ என்று கேட்கலாம்; வ்யூஹவாஸூதேவனுடன் அந்தர்பூதமாக செய்து மூன்று வ்யூஹங்கள் என்று கூறுவது போன்று, ஆசார்ய ஈடுபாடு தனியன ஓர் உபாயம் என்ற போதிலும், அதனை ஸித்தோபாயமான ஸர்வேச்வரனுக்குள் அடக்கம் என்பதாகக் கொண்டு, ஐந்தாம் உபாயம் என்று கூறப்பட்டது. “பஞ்சமோபாயம் இல்லை” என்று நஞ்சீயர் கூறுவதைக் கேட்ட நம்பிள்ளை, “ஆனால், ‘ஆவா’ என்று திருப்பாசுரத்தை அருளிச்செய்த ஆழ்வார், ‘எனக்குத் தனியாக ஓர் உபாயம் ஏற்படுத்த வேண்டும்’ என்று என்று அருளிச்செய்தார் அல்லவோ?”, என்று கேட்டார். இதற்கு நஞ்சீயர், “அதன் கருத்தை நீவிர் அறியவில்லை. அதன் பொருள் என்னவென்றால், ‘நீ உள்ளாய் என்றபோதிலும், நான் இவ்விதம் உன்னை இழந்து நிற்கிறேன்’ என்று வெறுத்துக் கூறுகிறார் அல்லாமல், வேறு ஓர் உபாயம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கேட்கவில்லை”, என்றார். இவ்விதம் அவனை வெறுத்தவர்கள் உள்ளனரோ என்பதற்கு, “உள்ளனர்”, என்று கூறி, உதாரணமும் காண்பிக்கிறார்; மஹாபாரதத்தில் – ஸாஹம் கேச க்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி ப்ரபோ – நீ உள்ளபோதிலும், எனது தலைமுடியைப் பிடித்துச் சிலர் துன்பம் செய்யும்படியாக நான் ஆனேன். உனது இருப்பிற்கும் எனது துன்பத்திற்கும் என்ன சேர்த்தி உள்ளது! (ப்ரபோ) – நீ என்னைப் போன்று பெண்ணாக இருந்திருந்தால், இவ்விதம் நான் பொறுத்திருப்பேனோ? நீ துன்பத்தைப் போக்குபவனாக உள்ளபோதிலும் நான் துன்பம் அடைக்கிறேன்!”,என்பது காண்க. – நான்காவது உபாயம் ஸர்வேச்வரன் ஆவான் என்று கூறினார்; இவ்விதம் கொண்டால், ப்ரபத்தியால் எந்த ஒரு விளைவும் இல்லையோ என்ற ஐயத்தை விலக்குகிறார்; நஞ்சீயருடைய திருவடிகளை அண்டி நின்ற ஒருவர், “ஸர்வேச்வரனே உபாயம் என்றால், ப்ரபத்தி மூலமாக இங்கு நிகழ்வது எதனையும் நான் காண இயலவில்லையே!”, என்றார். இதனைக் கேட்டவுடன் நஞ்சீயர் தனது காதுகளை மூடிக் கொண்டு, “நாதமுனிகள் தொடக்கமாக இந்த நாள் முடிய நம்முடைய ஆசார்யர்கள் மிகவும் இரகசியமாக உபதேசம் செய்து, ஓராண் வழியாகக் கொண்டு வந்த இந்த ப்ரபத்தியின் சீர்மையை அறியாத உனக்கு, மிகவும் பாபம் செய்த நான் வெளியிட்டேனே!”, என்று தனது தலையில் அடித்துக்கொண்டு, பெருமாள் அறையில் புகுந்து கொண்டார். ஆயினும் அந்த ஒருவர் கேட்டதற்குப் பரிகாரம் என்ன என்பதைக் கூறுகிறார்; திவ்யமங்கள விக்ரஹமும், விக்ரஹ குணங்களும், திவ்யாத்ம ஸ்வரூப குணங்களும் நித்யமுக்தர்களுக்குக் கிட்டியபடியே உள்ளன; முமுக்ஷுவான ப்ரபந்நன் ஒருவனுக்கு ப்ரபத்தியே அடையவேண்டிய இலக்காக இருக்கும் அல்லவோ? “திருப்பள்ளி அறை” என்பது பெருமாள் அறை ஆகும்; அங்கு சென்றது, அந்த ஒருவருக்கு நல்ல புத்தியைத் தரவேண்டும் என்று ப்ரார்த்திப்பதற்காகவே ஆகும் எனலாம். அல்லது, துக்கம் கொண்ட ஒருவன், தனது நெருக்கமான உறவினரிடம் அல்லவோ செல்வார் என்றும் கூறலாம்.
(ஆவா என்னாது) ஈச்வரனுக்கு ப்ரியஞ் செய்கையாகிறது - அவன் விபூதியிலே க்ருபை பண்ணுகையிறே. நஞ்சீயர் “ஒருவனுக்குப் பரார்த்தம் அஸஹ்யமாயிருந்ததாகில், ‘நமக்கு பகவத் ஸம்பந்தமுண்டு’ என்று அறுதியிடலாம்; ‘அது ப்ராப்தம்’ என்று இருந்தானாகில், ‘நமக்கு பகவத் ஸம்பந்தமில்லை’ என்று தனக்கே கைவாங்கவமையும்” என்றருளிச் செய்தார். பிறராகிறார் ஆரென்னில், ஸ்வவ்யதிரிக்தர். “ஆனால் ப்ரதிகூலர் பக்கலிலும் க்ருபையைப் பண்ணவோ?” என்னில்; அப்படியேயன்றோ இவர்களுக்கு மதம். “துர்வாஸநை கழிந்து அநுகூலராகப் பெற்றிலோம்" என்று இருக்கவன்றோ அடுப்பது. அவன் “யதிவா ராவணஸ் ஸ்வயம்” என்றால், அவன் விபூதியிலுள்ள இவனுக்கு இத்தனையும் வேண்டாவோ? ஆனால், “நண்ணாவசுரர் நலிவெய்த” என்கிறவிடத்தில் அது எங்ஙனே ஸங்கதமாகிறபடி யென்னில்; அதுக்கென்? நண்ணாமை நிலைநின்றவன்று வத்யனாகிறான். அக்நீஷோமீய ஹிம்ஸையோபதி அதுதானே ஹிதமாகக் கடவதிறே. இவனுடைய தண்ணிய சரீரத்தைப் போக்கி நல்வழியே போக்குகிறானிறே. (ஆவா என்னாது) “ஐயோ, ஐயோ” என்ன வேண்டியிருக்க, அதுக்கு மேலே நலியா நிற்பார்கள். ஒருவனோடே சாத்ரவம் பண்ணினானாகில், “அர்த்த காம நிமித்தமாகவிறே இது வந்தது, இருவரும் சபலர்” என்றிறேயிருக்கலாவது; அங்ஙனன்றிக்கே, உலகத்தை அலைப்பர்களாயிற்று. தன்னோடொக்க உண்டு உடுத்துத் திரிகிற இதுவே ஹேதுவாக நலியா நிற்பர்களாயிற்று. (அசுரர்) அதுக்கு அடி அவர்கள் ஆஸுர ப்ரக்ருதிகளாகையாலே. (வாணாள் மேல்) இவர்கள் வீரக்கோலத்தால் வந்த ஒப்பனை குறியழியாதேயிருக்க, உயிரிலே நலிகை. அதாவது, இவர்கள் ஜீவந ஹேதுவான காலத்தை நலிகை. (தீவாய் வாளி) பெருமாள் தொடுத்து விடும் போதாயிற்று அம்பு என்றறியலாவது; படும்போது நெருப்புப் பட்டாற் போலேயிருக்கை. ஸ்ரீசார்ங்கத்தில் நாணியைக் கழிந்தபோதே, காலாக்கி கவடு விட்டாற்போலே எரிந்து கொண்டு செல்லாநிற்கும். குணஹீநமானாலிருக்கும்படியிறே இது. (தீப்தபாவக ஸங்காசை:) படும் போதிருக்கும்படி. (சிதை:) பட்டமை தெரியாதே தொளையுருவி அவ்வருகே விழக்காணுமித்தனை. (காஞ்சநபூஷணை:) இவற்றுக்கு ஆகார த்வயமுண்டா யிருக்கிறபடி. “சரங்களாண்ட தண்டாமரைக்கண்ணனுக்கன்றி தாழ்ந்து நில்லாது” என்கிறபடியே அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி. (நத்வாமிச்சாமி:) இத்யாதி. இவ்வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க, எதிரிட்டு முடிந்து போக நான் இச்சிக்கிறிலேன். நீ எண்ணியிருக்கிறது நான் அறிகின்றிலேனிறே. இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராயிறே யிருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாதே, தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, “தயரதன் பெற்ற மரதக மணித்தடத்தை” எதிரிட்டு முடிந்து போக நான் காணமாட்டுகிறிலேன். (வாளி மழை பொழிந்த சிலையா) “சர வர்ஷம் வர்ஷஹ” என்கிறபடியே, பாட்டம்பாட்டமாக வர்ஷித்தபடி. (திருமாமகள் கேள்வா) விரோதிகளைப் போக்கினது கண்டு உகந்தணைக்குமவளைச் சொல்லுகிறது. (பர்த்தாரம் பரிஷஸ்வஜே) என்னுமவள் (தம் த்ருஷ்ட்வா) வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான அழகையுடையவரை, எதிரிகளை வென்ற வீரக்கோலத்தோடே கண்டாள். (சத்ரு ஹந்தாரம்) தந்திருமேனியிலே ஒரு வாட்டம் வாராமே, அவர்களைக் குற்றுயிராக்கி விடுவதுஞ் செய்யாதே, துண்டித்து அடுக்கினவரை. முன்பு திருவயோத்யையிலிருந்த நாள், “இவர் வேட்டைக்குப் போனவிடத்தே இன்னபடியும் இன்னபடியும் பொருதார்; இன்ன புலியைக் குத்தினார், இன்ன ஸிம்ஹத்தைக் குத்தினார்” என்றாற்போலே பந்துக்கள் சொல்லக் கேட்குமத்தனையிறே; இங்குப் பூசலுக்குப் புகுகிறபோதே பிடித்து மேலுள்ள வ்யாபாரங்கள் அடங்கலுங் கண்டாள். (மஹர்ஷீணாம் ஸுகாவஹம்) ருஷிகளுடைய விரோதிகளைப் போக்கி, அவர்களுக்குக் குடியிருப்புப் பண்ணிக் கொடுத்தவரை. தங்கள் தபோ பலத்தாலே வெல்லலாயிருக்க, தங்கள் பரத்தைப் பெருமாள் தலையிலே பொகட்டு முறையுணர்ந்து கொண்டிருக்குமவர்களுக்கு. (கர்ப்பபூதாஸ் தபோதநா:) தந்தாம் கைம்முதலழிய மாறாதே யிருக்குமவர்கள். தபோதநராயிருக்கச் செய்தே கர்ப்பபூதரா யிருப்பர்கள். தந்தாமுக்கென்ன இயற்றியுண்டாயிருக்கச்செய்தே கர்ப்பாவஸ்த்தையில் ஐநநியறிந்து ரக்ஷிக்குமத்தனையிறே; அப்படியே அவனேயறிந்து ரக்ஷிக்க இருக்குமவர்கள். அநுகூல ரக்ஷணமும் ப்ரதிகூல நிரஸநமும் இவளுக்கு ப்ரியமாகச் செய்யுமவையிறே. (பபூவ) பதினாலாயிரம் முருட்டு ராக்ஷஸரோடே தனியே நின்று பொருகிற இத்தைக் கண்டு அஞ்சி, “இதென்னாய் விளையுமோ?” என்று ஸத்தையழிந்து கிடந்தாள், இப்போது உள்ளானாள். (பூ ஸத்தாயாம்). (ஹ்ருஷ்டா) ஸத்தையுண்டானால் உண்டாமதுவும் உண்டாயிற்று. (வைதேஹீ) உபாத்யாயர்கள் பெண்பிள்ளைகளுக்குச் செவியேற்றாலே ஒத்துப் போயிருக்குமாபோலே; வீர வாசியறியுங் குடியிலே பிறந்தவளிறே; ஒரு வில்லு முறித்த இதுக்கு உகந்து என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று முடித்த இத்தைக் கண்டால் என்படுகிறார்தான்! (பர்த்தாரம்) முன்பு, இவர் ஸுகுமாரராகையாலே “குழை சரக்கு” என்றும், “ஐயர் நம்மை இவர்க்கு நீர் வார்த்துக் கொடுக்கையாலே நாம் இவர்க்கு சேஷம்” என்றும் அணைத்தாளத்தனை; “ஆண் பிள்ளை” என்று அணைத்தது இப்போது; (பரிஷஸ்வஜே) ராவண ஸமராய், அவன் மதித்த வீரத்தையுடையராயிருப்பார் பதினாலாயிரம் பேரும் விட்ட அம்புகளடங்கலும் இவர் மேலே பட்டு, கண்டவிடமெல்லாம் யுத்த வடுவாயிறே திருமேனி கிடக்கிறது; அவ்வோவிடங்கள் தோறும் திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். (திருமாமகள் கேள்வா) உனக்கு சக்தி வைகல்யம் உண்டா யிழக்கிறேனோ? புருஷகாரமில்லாம லிழக்கிறேனோ? (தேவா) இவளணைத்த பின்பு திருமேனியிற் பிறந்த புகர். அன்றியே விரோதிகளைப் போக்குகையாலே வடிவிலே பிறந்த காந்தியைச் சொல்லவுமாம். “நம்முடைய விரோதிகளைப் போக்கினவன் வர்த்திக்கிற தேசம்” என்று, தேவர்களும் ருஷிகளும் தங்களபிமதங் கிடைக்குமென்று ஆதரிக்கிற திருமலை. (சுரர்கள் இத்யாதி) அநுகூலர் அடையத் திரண்டு படுகாடு கிடக்கும் தேசம். (பூவார் கழல்கள்) பூவாலல்லது செல்லாத திருவடிகளென்னுதல். பூவோடொத்த திருவடிகள் என்னுதல். (அருவினையேன்) அவன் ப்ரதிபந்தகங்கள் போக்கவல்லனாயிருப்பது, எனக்கு ஆசை கரைபுரண்டிருப்பது, திருவடிகள் நிரதிசய போக்யமாயிருப்பது; இங்ஙனேயிருக்கச் செய்தே, கிட்டியநுபவிக்கப் பெறாத பாபத்தைப் பண்ணினேன். (பொருந்துமாறு புணராயே) அசோகவநிகையிலே இருந்த பிராட்டியோபாதிகாணும் தம்மை நினைத்திருக்கிறது; (புணராயே) உன்னைக் கிட்டும் வழி கல்பிக்க வேணுமென்னுதல், நான் கிட்டும்படி பண்ண வேணுமென்னுதல்.
(ஆவா என்னாது) - ஈச்வரனிடம் ப்ரியம் காண்பித்தல் என்பது, அவன் தனது விபூதியில் க்ருபை செய்தலே ஆகும் அல்லவோ? ஸர்வேச்வரனிடம் ப்ரீதிக்காக மட்டுமே அல்லாமல், பகவத் ஸம்பந்தம் ஏற்படும்போது “ஆ ஆ” என்பதாகவே இருத்தல் வேண்டும் என்பதை ஒரு உரையாடல் மூலம் நஞ்சீயர் கூறுகிறார்; “ஒருவனுக்கு மற்றவர்களுடைய துக்கத்தைக் காணும்போது பொறுத்துக் கொள்ள இயலாத தன்மை ஏற்பட்டால், அவன் ‘நமக்கு பகவத் ஸம்பந்தம் உண்டு’ என்று தீர்மானிக்கலாம்; ஆனால், ‘அவனுடைய இந்தத் துக்கமானது அவ்விதம் அனுபவிப்பவன் அடையவேண்டியதாகும்’ என்று எண்ணும் தன்மை வந்தால், ‘நமக்கு பகவத் ஸம்பந்தம் இல்லை’ என்று முடிவு செய்யலாம்” என்று அருளிச்செய்தார். இங்குள்ள “மற்றவர்கள்” என்பது யார் என்றால், தன்னைக் காட்டிலும் வேறுபட்ட மற்றொருவர் ஆவர். ஆனால் நமக்கு விரோதமாக உள்ளவர்களிடம் க்ருபை செய்யலாமோ என்றால், அவ்விதம் இருத்தல் அல்லவோ இவர்கள் பண்பாக உள்ளது! அவ்விதம் க்ருபை செய்தாலும், ஒருவனிடம் விரோதம் தங்கியிருக்கும் அல்லவோ என்பதற்கு விடை அளிக்கிறார்; இப்படிப்பட்டவர்களைக் குறித்து, “இவனுக்கு உள்ள கெட்ட சிந்தனை விலகி நம்முடன் நட்பாக இருக்கப் பெறவில்லையே” என்று எண்ணுவதே சிறந்தது ஆகும். ஆனால் நமக்கு விரோதியாக உள்ளவனுக்கும் நன்மை உண்டாகவேண்டும் என்று எண்ணுவதற்குக் காரணம் என்ன என்று கூறுகிறார்; அதாவது யுத்தகாண்டம் (18-35) – யதிவா ராவணஸ் ஸ்வயம் - வருபவன் இராவணனே என்றாலும் - என்று இராமன் கூறினான்; அதாவது அவனுடைய விபூதியில் உள்ள ஒருவனுக்கு இவ்விதம் நல்லது நடக்கவேண்டாமோ? அப்படியானால் திருவாய்மொழி (10-7-5) – நண்ணா அசுரர் நலிவு எய்த - என்பது எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம்; இதற்கு விடை தருகிறார்; அப்படிப்பட்ட நண்ணாமை என்பது நிலை நின்றபோது, அப்படிப்பட்டவன் இவனால் கொல்லத்தக்கவன் என்றாகிறான் என்று கருத்து. ஆயினும், இவ்விதம் நண்ணாமை என்பது நிலைநின்றாலும், அவனை ஹிம்சித்தல் என்பது கைவிடத்தக்கது அல்லவோ என்பதற்கு விடை அளிக்கிறார். அக்னீஷோமீயம் போன்றவற்றில் செய்யப்படும் ஹிம்ஸையானது அந்தப் பசுவிற்கு நன்மை உண்டாக்குவது போன்று, இவனுக்கும் இவனுடைய தாழ்ந்த சரீரத்தை நீக்கிக் கொடுத்து நன்மை செய்கிறான் என்று கருத்து. (ஆவா என்னாது) - “ஐயோ ஐயோ” என்றுள்ளபோதிலும், மேலும் துன்புறுத்தியபடியே இருப்பார்கள். இங்கு “உலகத்தை” என்று ஏன் கூறினார்? ஒருவனை மட்டும் இவ்விதம் பகை கொண்டு துன்புறுத்தினால், “அந்த ஒருவனுடைய பொருளை விரும்பி எடுத்துக் கொண்டதால் அல்லவோ அந்த நிலை ஏற்பட்டது. இருவரும் சபலர்” என்று இருக்கவேண்டியதாகும். இவ்விதம் அல்லாமல் முழு உலகத்தையும் துன்புறுத்தியபடியே இருப்பார்கள். தங்களுடன் சேர்ந்து உண்டு, உடுத்து, திரிவதால் இதனையே காரணமாகக் கொண்டு துன்புறுத்துவர். (அசுரர்) - இதற்குக் காரணம், அவர்கள் அஸுரப்பிறவிகள் என்பதால் ஆகும். (வாணாள்) - அந்த அஸுரர்கள் பூண்டிருந்த வீரக்கோலத்தின் ஒப்பனை மாறாமல், அவர்கள் உயிரை எடுத்தல்; அதாவது அவர்கள் வாழ்வதற்குக் காரணமாக உள்ள காலத்தைத் துன்புறுத்தல் என்று கருத்து. வாணாள் என்றால் ஆயுள். “வாணாள் மேல்” என்பதன் மூலம், அவர்களுடைய சரீரத்தின் உருவம் அழியாமல் இருப்பது கூறப்பட்டது; “காலத்தை” என்பது “ஆயுளை” என்று கருத்து. (தீவாய் வாளி) – ஸர்வேச்வரன் தொடுத்து விடும்போது அது அம்பு என்று மட்டுமே அறியப்படுவதாக உள்ளது; ஆனால், அது சென்று இலக்கின் மீது படும்போது, நெருப்பு பட்டது போன்று உள்ளது. ஸ்ரீசார்ங்கத்தின் நாணிலிருந்து விடுபட்டுச் செல்லும் அம்பானது காலாக்னி சுவடு விட்டபடி செல்வது போன்று எரிந்தபடி செல்லும். ஒருவனுக்கு நாணமும் குணமும் தாழ்ந்தால் இவ்விதம் அல்லவோ ஆகும்? இந்த இடத்தில் யுத்தகாண்டம் (16-22) – தீப்தபாவக ஸங்காசை: - என்ற ச்லோகத்தை வ்யாக்யானம் செய்கிறார். இது இராவணனை நோக்கி விபீஷணன் கூறுவது ஆகும். (தீப்தபாவக ஸங்காசை:) - அம்பானது மேலே படும்போது அக்னி பட்டது போன்று உள்ள நிலை. (சிதை:) - அப்போது ஏற்படும் கொடிமையின் எல்லையைக் கூறுகிறார்; அந்த அம்பு தைத்தது தெரியாதபடி துளை ஏற்படுத்தி, ஊடுருவிச் சென்று அப்புறம் விழக் காணலாம். (காஞ்சநபூஷணை:) - இந்த அம்புகளுக்கு இரண்டுவிதமான தன்மைகள் உள்ளன; அதாவது “சிதை” என்பதன் மூலம் ஆயுதமாக உள்ள தன்மையும், “காஞ்சன பூஷணை:” என்பதன் மூலம் இனிமையாக உள்ள தன்மையும் வெளிப்படுகிறது. ஆனால் யாருக்கு இனிமையாக இருக்கும் என்பதற்கு விடை கூறுகிறார்; பெரியதிருமொழி (7-3-4) – சரங்கள் ஆண்ட தண் தாமரைக்கண்ணனுக்கு அன்றி தாழ்ந்து நில்லாது - என்பதற்கு ஏற்ப, அவனிடம் ப்ரியமாக உள்ளவர்கள் அவனிடம் அகப்படுவதற்கு அந்த அம்புகளே காரணமாக உள்ளன. (நத்வாமிச்சாமி:) - இப்படிப்பட்ட அழகிற்கு இலக்காக இருந்து, வாழ்ந்து போகலாம் என்பதை விடுத்து, அதனை எதிர் கொண்டு, முடிந்து போக நான் விரும்பவில்லை. நீ எண்ணியுள்ளதை நான் நான் அறியமாட்டேன் அல்லவோ? அதாவது உனது நினைவுகள் எனக்குத் தெரியாது. நன்கு நிறுத்தி பிடிக்கப்பட்ட வில்லும், அதில் நன்கு தொடுக்கப்பட்ட அம்பும் என்பதாக அவன் நிற்கும்போது, அபிராமனாக அல்லவோ உள்ளான்? அந்த அழகைக் கண்டு அனுபவிக்காமல், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற ஏரியில் தலை கீழாக விழுந்து முடிபவர்கள் போன்று, திருவாய்மொழி (10-1-8) - தயரதன் பெற்றெடுத்த மரகதத் தடமணியை - எதிர்ந்து நின்று முடிந்து போவதை நான் காண விரும்பவில்லை. – (வாளி மழை பொழிந்த சிலையா) - “மழை பொழிந்த” என்பதைக் கூறுகிறார்; யுத்தகாண்ட (94-18) - சர வர்ஷம் வர்ஷஹ - அம்பு மழை போன்று அம்புகளைப் பொழிந்தாந் என்பதற்கு ஏற்ப, பாட்டம்பாட்டமாக மழை போன்று அம்புகளைப் பொழிந்தான். (திருமாமகள் கெள்வா) - “வாளி மழைபொழிந்த சிலையா” என்றதன் கருத்தைக் கூறுகிறார். அவ்விதம் விரோதிகளை நீங்கியது கண்டு உகந்து அணைத்துக் கொள்ளும் மஹாலக்ஷ்மியைக் கூறுகிறார். அவ்விதம் அவள் அணைத்துக் கொண்டாளோ என்பதற்கு ப்ரமாணமும் வ்யாக்யானமும் காண்பிக்கிறார்; ஆரண்ய (30-39) - தம் த்ருஷ்ட்வா - என்று ச்லோகத்தை வ்யாக்யானம் செய்கிறார்; (தம் த்ருஷ்ட்வா) - வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கவேண்டும்படியான அழகு கொண்டவனை, இந்த யுத்தத்தில் எதிரிகளை வென்ற வீரத் திருக்கோலத்தில் கண்டாள். (சத்ரு ஹந்தாரம்) - தனது திருமேனியில் எந்த ஒரு வாட்டமும் ஏற்படாமல், விரோதிகளைக் குற்றுயிரும் கொலையுயிரும் என ஆக்காமல், துண்டித்து அடக்கியவனை. முன்பு இவன் திருஅயோத்தியில் இருந்துபோது, வேட்டைக்குச் சென்ற இடத்தில், “இவ்விதமாகவும் அவ்விதமாகவும் வேட்டையாடினான். இன்ன புலியைக் குத்தினான். இன்ன சிங்கத்தைக் குத்தினான்” என்பது போன்று உறவினர்கள் கூறியதை மட்டுமே காதுகளால் கேட்டாள்; ஆனால் இன்று அவ்விதம் ஒரு பூசலுக்குச் செல்லும்போது தொடங்கி, மேலே கூறப்பட்ட அனைத்து செயல்களையும் நேரில் கண்டாள். (மஹர்ஷீணாம் ஸுகாவஹம்) - ரிஷிகளுடைய விரோதிகளைப் போக்கி, அவர்களுடைய இருப்பிடத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்தவனை. தங்களுடைய தவ வலிமை மூலம் மட்டுமே அந்த ராக்ஷஸர்களை வெல்ல இயலும் என்றாலும், “ஈச்வரனே ரக்ஷகன், நாம் காப்பாற்றப்படும் வஸ்துக்கள்” என்ற ஞானம் உள்ளவர்கள் என்பதால், தங்களுடைய பாரத்தை இராமனுடைய தலையில் வைத்தவர்களாக, இப்படி சரணாகதி முறை உணர்ந்தவர்களாக உள்ளவர்களுக்கு. இவ்விதம் அவனிடம் தங்கள் பாரத்தை வைத்தவர்கள் உள்ளவனரா என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்; ஆரண்யகாண்டம் (1-21) - கர்ப்பபூதாஸ் தபோதநா: - தங்கள் தங்கள் கைம்முதல் அப்படியே இருக்கும்படியாக உள்ளவர்கள். தவத்தில் சிறந்து விளங்கினாலும் தங்களுடைய கைம்முதலாக எம்பெருமானை மட்டுமே கொண்டுள்ளவர்கள். தங்கள் தங்கள் கர்ம பலன்களுக்கு ஏற்ப ஜன்மம் எடுத்தபோதிலும், கர்ப்பத்தில் உள்ள நிலையில் தாயானவள் கர்ப்பத்தை அறிந்து காப்பாற்றுகிறாள் அல்லவோ? அது போன்றே அவனே அறிந்து கொண்டு காப்பாற்றவேண்டும் என்று உள்ளவர்கள். இவ்விதம் அவன் காப்பாற்றுதல் என்பது யாருடைய ப்ரியத்திற்காக என்பதற்கு விடை அளிக்கிறார்; அநுகூலமாக உள்ளவர்களைக் காப்பாற்றுதலும், விரோதமாக உள்ளவர்களை அழித்தலும் அவளுக்கு ப்ரியமாக இருப்பதற்காக இவன் செய்பவை அல்லவோ? (பபூவ) - பதினான்காயிரம் முரட்டு ராக்ஷஸர்களுடன் இராமன் தனியே நின்று மோதியபோது, அச்சம் கொண்டவளாக, “இது எப்படி விளையுமோ?”, என்று இருப்பு கொள்ளாமல் தடுமாறினாள்; ஆனால் இங்கு இராவண யுத்தத்தில் தனது இருப்பை மீண்டும் அடைந்தாள். (பூ ஸத்தாயாம்) என்பது காண்க. (ஹ்ருஷ்டா) - இருப்பு ஏற்பட்டவுடன் உண்டாகும் அனைத்தும் ஏற்பட்டது. (வைதேஹீ) - இவள், வீரத்தன்மையில் உள்ள வேறுபாட்டை அறிந்த்து எப்படி என்பதற்கு விடை அளிக்கிறார்; உபாத்யாயர்கள் வீட்டில் உள்ள பெண்பிள்ளைகளுக்கு அவரவர் தந்தைமார்கள் வேதம் ஓதும்போது, அவை செவிகளில் விழுந்து, பதிந்து நிற்கும் அல்லவோ? அதனைப் போன்று இவளும் வீரத்தின் வேறுபாட்டை அறிந்த குலத்தில் பிறந்தவள் அல்லவோ? “ஒரு வில்லை முறித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்ட எனது தந்தை என்னை இவருக்குத் தந்தார். இங்கு பதினான்காயிரம் ராக்ஷஸர்களைத் தனியே நின்று முடித்ததைக் கண்டால், என்ன நிலை ஆவாரோ?” என்று மகிழ்ந்தாள். (பர்த்தாரம்) – முன்பு, இராமன் மென்மையானவன் என்பதால், “காக்கப்படும் பொருள்” என்றும், “நம் தந்தை இவருக்கு நம்மை தாரை வார்த்துக் கொடுத்ததால் நாம் இவருக்கு வசப்பட்டவள்” என்றும் எண்ணினாள்; ஆனால் இப்போது “ஆண்பிள்ளை” என்று அணைத்துக் கொண்டாள். (பரிஷஸ்வஜே) - இவனை இப்போது அணைத்துக் கொண்டதன் காரணம் கூறுகிறார்; இராவணனுக்கு நிகராக உள்ளவர்களான, அவனால் மதிக்கப்பட்ட வீரம் கொண்டவர்களான பதினான்காயிரம் ராக்ஷஸர்கள் தொடுத்த அம்புகள் அனைத்தும் இவர் மீது பட்டு, திருமேனியில் பார்க்கும் இடம் அனைத்தும் யுத்த தழும்புகள் காணப்படுகின்றன; அந்தந்த இடங்களில் தனது ஸ்தனங்களால் தடவிக்கொடுத்தாள். (திருமாமகள் கேள்வா) – “தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா” என்பதன் மூலம், “உனது சக்தியில் குறைவு ஏற்பட்டு அதன் காரணமக உன்னை இழக்கிறானோ?” என்றும்; “திருமாமகள் கேள்வா” என்பதன் மூலம் “உன்னிடம் என்னைக் குறித்துப் பரிந்து பேச யாரும் இல்லாமல் உன்னை இழக்கிறேனோ?”, என்றும் கூறுகிறார். (தேவா) - இவள் அணைத்துக் கொண்ட பின்னர் திருமேனியில் தோன்றிய புகர். அல்லது விரோதிகளை அழித்ததால் திருமேனியில் தோன்றிய காந்தியைக் கூறுவதாகவும் கொள்ளலாம். “நம்முடைய விரோதிகளைப் போக்கியவன் எப்போதும் வாழும் இடம்” என்று தேவர்களும் ரிஷிகளும் தங்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பதாக ஆதரித்து நிற்கும் திருவேங்கடத் திருமலை. (சுரர்கள் இத்யாதி) - அநுகூலமாக உள்ளவர்கள், அவனை அடையும் பொருட்டு திரண்டு வந்து ஈடுபட்டு நிற்கும் இடம். (பூவார் கழல்கள்) - மலர்கள் மீது நடத்தல் என்பது அல்லாமல் கடினமான இடங்களில் நடப்பதற்கு ஏற்றபடி இல்லாத மென்மையான திருவடிகள். அல்லது “ஆர்தல்” என்பதற்கு “பொருந்துதல்” என்று பொருள் கொண்டு, “மலர்களுடன் எப்போதும் சேர்ந்துள்ள திருவடிகள்” என்றும் பொருள் கூறலாம். (அருவினையேன்) - அவன் எனது தடைகள் அனைத்தையும் போக்கவல்லவனாக இருத்தல், எனக்கு அவன் மீது ஆசை கரை புரண்டு இருத்தல், அவனுடைய திருவடிகள் எல்லையற்ற இனிமையுடன் கூடியிருத்தல் என இப்படியாக உள்ளபோதிலும், அவனையும் அவன் திருவடிகளையும் கிட்டி அனுபவிக்க இயலாத பாபங்களையும் நான் செய்தேன். (பொருந்தும் ஆறு புணராயே) - அசோக வனத்திலிருந்த ஸீதையைப் போன்று தன்னை எண்ணிக்கொள்கிறார்; அதாவது முன்பு கூடியிருந்து, தற்போது பிரிந்துள்ள நிலை. (புணராயே) - உன்னை அடையும் வழியை நீயே எனக்குக் கற்பிக்கவேண்டும். நான் உன்னை அடையும்படிச் செய்தருள வேண்டும்.