திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 3)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா மாய அம்மானே எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே
– காண்பவர்கள் மனதில் பிச்சு ஏறும்படியாக அழகைக் கொண்ட, மேகம் போன்ற வடிவு கொண்டவனே! வியக்க வைக்கும் குணங்களால் அனைத்தையும் நிர்வாகம் செய்பவனே! உண்ண வேண்டாதபடியாக நேரடியாக மனதில் புகுந்து ரசிக்கும்படியாக உள்ள அமிர்தமே! இப்படிப்பட்ட பலவற்றையும் நித்யஸூரிகள் அனுபவிக்கும்படியாகச் செய்யும் மேன்மையானவனே! தெளிவானதும் காண்பதற்கு இனிமையானதும் என்றுள்ள அருவிகள் மணிகளையும், பொன்னையும், முத்தையும் கொண்டு கொழித்தபடி உள்ள திருவேங்கடமலையில் அருகில் நிற்பவனே! உனக்கே உரிய எஜமானத் தன்மையை வெளிப்படுத்தியபடி நிற்பவனே! அடையவேண்டிய உனது திருவடிகளை, உனது அடிமைகளாகிய நாங்கள் வந்து அடையும்படியாக “ஐயோ ஐயோ” என்று இரக்கம் கொண்டு அருளவேண்டும்.
–“ ‘அருளாய்’ என்றீர்; இங்ஙனே நினைத்தபோதாக அருளப்போமோ?” என்ன; “வ்யதிரிக்த விஷயங்களில் போகாதபடியான ஜ்ஞாந லாபத்தைப் பண்ணித் தந்த உனக்கு, ப்ராப்தி பண்ணித் தருகை பெரியபணியோ?” என்கிறார். என்னால் வந்த குறையறுத்த உனக்கு, உன்னால் வரும் குறையறுக்கை பெரிய பணியோ?
– ஆழ்வாரிடம் ஸர்வேச்வரன், “என்னிடம் வந்து ‘எனக்கு அருள்வாயாக’ என்று கேட்கிறீர். இவ்விதம் நீவிர் நினைக்கும்போது நான் செய்ய முடியுமோ?”, என்றான். இதற்கு ஆழ்வார், “உன்னைத் தவிர மற்ற விஷயங்களில் எனது மனம் செல்லாதபடியாக எனக்கு ஞானத்தை அருளிச்செய்த உனக்கு, பெற்றை அளிப்பது மிகவும் பெஇய செயலா?”, என்கிறார். அதாவது, என்னால் எனக்கு ஏற்பட்டிருந்த குறைகளை நீக்கிய உனக்கு, உன்னால் வரும் குறையை நீக்குவது பெரிய செயலா என்று கருத்து.
(வண்ணம் இத்யாதி) வண்ணமானது ப்ரகாரமானது, அருள் கொண்டிருப்பதாய், தர்சநீயமான மேகம் போன்ற வடிவையுடையவனே! அன்றிக்கே, வண்ணமானது வடிவானது, கண்டார் நெஞ்சை இருளப் பண்ணக் கடவதாயிருக்கை என்றுமாம்; “மைப்படி மேனி”யிறே. அங்ஙனுமன்றிக்கே மேகத்தினுடைய அகவாய் கல்லென்னும்படியாயிற்றுத் திருமேனியிலுண்டான ப்ரஸாதாதிசயம் இருக்கிறபடி. (மாயவம்மானே) வெறும் வடிவழகே யன்றிக்கே, ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களால் பெரியனானவனே! (எண்ணம் புகுந்து தித்திக்குமமுதே) விலக்ஷண ஜந்மத்தே பிறந்து ஒரு ஸாதநாநுஷ்ட்டாநம் பண்ணி அத்தாலே பெற்று புஜிக்கும்போது இனிதாகையன்றிக்கே, இன்னார்க்கு என்றன்றிக்கே மநோரத மாத்ரத்திலே தானே வந்து புகுந்து போக்யமாகை. “உள்ளுந்தோறுந் தித்தி”க்கும் அமுதிறே! (இமையோரதிபதியே) மது வ்ரதம் போலே இவ்வம்ருதமே ஜீவநமாக இருக்குமவர்கள். (தெண்ணலருவியித்யாதி) தெளிந்து நன்றான அருவிகளானவை, விலக்ஷணமான மாணிக்கங்களையும் பொன்களையும் முத்துக்களையும் கொழித்து எறட்டுகிற திருமலையிலே நின்றருளுகிற ஸர்வேச்வரனே! (அண்ணலே) திருமலையிலே வந்து நின்று எனக்கு உன் சேஷித்வத்தை உதறிப்படுத்தவனே! “இமையோர் அதிபதியா யிருந்து வைத்து வண்ணமருள்கொளணி மேகவண்ணனாய் மாயவம்மானாய்த் தெண்ணலருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க் கொண்டு எண்ணம் புகுந்து தித்திக்குமமுதே” என்கிறார். (உன்னடி சேரவடியேற்காவா வென்னாயே) கிட்டி நின்று முறையை யறிவித்த நீ, ப்ராப்தியையும் பண்ணித் தாராய்! உன் திருவடிகளை ப்ராபிக்கும்படி, அநந்யகதியான எனக்கு “ஐயோ! ஐயோ!” என்று தயையைப் பண்ணாய்! உன்னடியன்றோ? ப்ராபகமுமாய் ப்ராப்யமுமாய் போக்யமுமான திருவடிகளைச் சேரும்படி க்ருபை பண்ணியருளாய்!
– (வண்ணம் இத்யாதி) - “வண்மை அருள்கொள் மணிவண்ணா” என்பதற்கு மூன்றுவிதமாகப் பொருள் கூறுகிறார். முதல் பொருளில் “வண்மை” என்பது இயல்பு என்பதாகக் கொள்கிறார். அதாவது, “க்ருபையுடன் கூடிய இயல்பு கொண்டவனாக, காண்பதற்கு இனிமையான மேகம் போன்று வடிவம் கொண்டவனே” என்பதாகக் பொருள்; அதாவது அருள் கொண்டிருப்பதாக, காண்பதற்கு இனிய மேகம் போன்ற வடிவம் கொண்டவனே! அதாவது “அருள் கொள் வண்ணம்” என்பதை மேகத்திற்கு அடைமொழியாகக் கொண்டார். அல்லது “அருளுடன் கூடிய இயல்பு கொண்டவன்” என்று இவனுக்கு அடைமொழியாகக் கொள்ளுதல்; இதில் “வண்ணம்” என்பது “வடிவம்” என்று பொருள். அதாவது வடிவானது காண்பவர்கள் நெஞ்சத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்துவதாக, காண்பதற்கு இனிய மேகம் போன்ற வடிவு கொண்டவனே! இரண்டாவது பொருளுக்கான ப்ரமாணம் திருவிருத்தம் (94) – மைப்படி மேனி - என்பதாகும். அடுத்து மூன்றாவதாக ஒரு பொருள் கூறுகிறார்; அதில் “அருள் கொள் வண்ணம்” என்பது அவனுடைய திருமேனிக்கு அடைமொழியாகிறது; அதாவது மேகத்தின் உட்புறம் கடினமாக உள்ளது என்று கூறலாம்படி, திருமேனியில் க்ருபை மிகுதியாக உள்ளது. – (மாய அம்மானே) - வெறும் வடிவழகால் மட்டும் அல்லாமல், வியக்க வைக்கும் குணங்கள் மற்றும் செயல்களால் உயர்ந்தவனே! (எண்ணம் புகுந்து தித்திக்குமமுதே) - “எண்ணம்” என்பது “நினைத்த அளவில்” என்பதாகும்; “எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுது” என்பதன் மூலம், தேவர்களுடைய அமிர்தத்திலிருந்து வேறுபடுத்துகிறார்; தெய்வப்பிறவியில் பிறந்து, ஒரு உபாயத்தைக் கைக்கொண்டு, அதன் மூலம் அமிர்தம் அடைந்து, அதனை உண்ணும்போது இனிமையாக உள்ள அமிர்தம் போன்று அல்லாமல், ஒரு குறிப்பிட்டவர் என்பது இல்லாமல், நினைத்த நேரத்திலேயே தானே வந்து உள்ளே புகுந்து இனிமையாகச் செய்தல். நினைத்த நேரத்திலேயே இன்பமாக இருக்குமோ என்பதற்கு ப்ரமாணம் திருவாய்மொழி (8-6-3) - உள்ளும் தோறும் தித்திப்பான் – என்பதாகும்; அப்படிப்பட்ட அமிர்தம் அல்லவோ? – (இமையோர் அதிபதியே) - மது அமிர்தம் போன்று இந்த அமிர்தத்தையே தங்களுடைய ஜீவனாகக் கொண்டு இருப்பார்கள். (தெள் நல் அருவி இத்யாதி) – “நல்” என்பதை “மாணிக்கம்” போன்றவற்றுக்கும் சேர்க்கவேண்டும்; தெளிந்து நன்றாக உள்ள அருவிகளானவை, மேன்மையான மாணிக்கங்களையும் பொன்னையும் முத்துக்களையும் கொழித்து, அனைத்து இடங்களிலும் பரப்பியபடி உள்ள திருவேங்கடமலையில் நின்று அருளும் ஸர்வேச்வரனே! (அண்ணலே) - திருவேங்கடத் திருமலையில் வந்து நின்று உனது எஜமானத்தன்மையை எனக்கு உறுதியாக்கியவனே! “இமையோர் அதிபதியாய் இருந்து வைத்து வண்ணமருள்கொள் அணி மேகவண்ணனாய் மாய அம்மானாய்த் தெள் நல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானாய் அண்ணலாய்க் கொண்டு எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே” என்று வரிசைப்படுத்துகிறார். (உன்னடி சேரவடியேற்காவா வென்னாயே) - அருகில் வந்து நின்று, உன்னை அடையும் முறையை அறிவித்த நீ, பேற்றையும் தருவாயோ! உனது திருவடிகளை அடையும்படியாக, வேறு கதி ஏதும் இல்லாத எனக்கு, “ஐயோ ஐயோ” என்று க்ருபை செய்தருளவேண்டும். உபாயமும், உபேயமும், இன்பமும் என்றுள்ளது உனது திருவடிகள் அல்லவோ? ஆகவே அவற்றைச் சேரும்படியாக நீ க்ருபை செய்தருளவேண்டும்.