திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 2)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
கூறாய் நீறு ஆய் நிலன் ஆகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம் சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வக் கோமானே சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே
– க்ரூரராகவும் வலிமை நிறைந்தவராகவும் உள்ள அஸுரர்களுடைய கூட்டம் அனைத்தையும் பல துண்டுகளாகவும் துகள்களாகவும் வீழ்த்திய பின்னரும் சீறியபடியும் ஜ்வலித்தபடியும் உள்ள வெற்றி லக்ஷ்மியைக் கொண்ட சக்கரத்தாழ்வானை அடங்கியாளும் சக்தி கொண்டவனே! இப்படியாக அடியார்களுடைய விரோதிகளை அழிப்பதன் மூலம் நித்யஸூரிகளுக்குத் தலைவனாக உள்ளவனே! தாமரையானது நீரில் பிறப்பதற்குக் காரணமாக உள்ள சேற்றால் பூர்ணமாக உள்ள சுனைகளில் தாமரையானது சிவந்த அக்னி போன்று நிறம் கொண்டதாக மலரும்படி உள்ள திருவேங்கட திருமலையில் எப்போதும் உள்ளவனே! எப்போதும் அளவிட இயலாத ப்ரேமத்தைக் கொண்டுள்ள நீ க்ருபை செய்தருளவேண்டும்.
– “கூடக் கடவீர்; அதுக்கு ஒரு குறையில்லை; ஆனாலும், ப்ரதிபந்த கங்கள் கனத்திரா நின்றதே” என்ன; “உன் கையில் திருவாழியிருக்க, நீ இங்ஙனே சொல்லலாமோ?” என்கிறார்.
– கடந்த பாசுரத்தில் ஆழ்வாருடைய சொற்களைக் கேட்ட திருவேங்கடமுடையான் ஆழ்வாரிடம், “நீவிர் நம்முடன் வந்து சேர்வீர். அதற்கு எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் நீவிர் நம்மை அடைவதைத் தடுக்கும் தடைகள் வலிமையாக உள்ளனவே”, என்றான். இதற்கு ஆழ்வார், “உனது திருக்கரத்தில் சக்கரத்தாழ்வான் உள்ளபோது நீ இவ்விதம் கூறலாமா?”, என்கிறார்.
(கூறாய் இத்யாதி) நீ “கை கழலா நேமியானா”யிருக்கிறதுக்கும் என் ப்ரதிபந்தகம் கிடக்கைக்கும் என்ன சேர்த்தியுண்டு? அப்ரதிஹதமான சக்தியையுடைத்தான திவ்யாயுதங்களானவை இவனுடைய ஸகல பாபங்களையும் போக்கி உத்தரிப்பிக்கக் கடவதாயிருக்கும்: அவனாலே வருமவையும் பரிஹரிக்க வற்றாயிருக்கும். “ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய:” இறே; “ஸகல” சப்தத்துக்குள்ளே இவனுமுண்டே. இனித்தான், பாபங்கள் “ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி” என்கிறபடியே இவன்பக்கல் தோஷங்கண்ட அவன் நிக்ரஹத்தாலே வருமவையிறே; அங்ஙனே வருமவையும் பரிஹரிக்கக் கடவதாயிருக்கும் இவை. அதுக்கு அடி, அவன் அடியில் பண்ணின அநுக்ரஹத்தையே நினைத்திருக்கையாலே. இனித்தான், “இவற்றின் தோஷங் கண்டு நாம் ஔபாதிகமாகச் சீறினபோதும் நீங்கள் கைவிடாதே, நாம் அடியிற் பண்ணின ஸ்வாபாவிகமான நம்முடைய ப்ரஸாதத்தைப் பார்த்து நீங்கள் ரக்ஷியுங்கோள்” என்று அவன் பக்கலிலே பெற்றுடையராயிருப்பர்களிறே. “அருளார் திருச்சக்கர”மிறே. பண்டே அவனைக் கைகண்டிருக்குமிறே. அவன் அருள் மறுத்தபோதும் இங்குத்தை அருள் மாறாதேயிறே யிருப்பது. ஆகையாலே, அவன் ப்ரஸாதம் பெற்றவர்கள் திருவாழியில் கூர்மையையிறே தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது. (கூறாய் நீறாய் நிலனாகி) திருச்சரம்போலே “சிந்நம் பிந்நம்” என்கிற பரும்பணிக்கு விட்டுக் கொடாத திருவாழி. திருச்சரத்துக்கு ஒரு குண ஸ்பர்சமுண்டென்கிறார், இத்தைப் பற்ற. முற்பட, இரு துண்டமாக்கிப் பின்னை நீறாக்கிப் பின்னை அது காணவொண்ணாதபடி வெறுந்தறையாக்கும். (ஆகி) ஆக்கியென்னுதல், ஆம்படியென்னுதல். (கொடுவல்லசுரர்) சீறுகைக்கு ஹேது இருக்கிறபடி. க்ரூரமான செயல்களைச் செய்யக்கடவராய், ஒருவரால் வெல்லவொண்ணாதபடி வலியை யுடையரான அசுரர். (குலமெல்லாம்) ஒருவன் செய்த தப்பே ஜாதியாக முடிக்க வேண்டும்படி யிருக்கையாலே, ஒருவரையும் தப்பாமல் கோலி முடித்தபடி. அநுகூலரோடு ப்ரதிகூலரோடு வாசியற இவன் வளைவிலகப்படாதாரில்லை. “வளைவாய்த் திருச்சக்கரத் தெங்கள் வானவனார்” என்று அவன் வளைவிலே யகப்பட்டுப் பின்பிறே மேல்போயிற்று. “கூறாய் நீறாய் நிலனா”கைக்குப் பண்ணின வ்யாபாரமேதென்னில், (சீறாவெரியும்) இவை முடிந்து போகச் செய்தேயும் கொண்ட குதை மாறாதே, இரை பெறாப் பாம்பு போலே ஜ்வலியா நிற்கும். (திருநேமி வலவா) நீ வலவருகே திருவாழியைத் தரித்திருக்க, நான் க்லேசத்தை தரித்திருப்பதே! (தெய்வக்கோமானே) இப்படி ஆச்ரிதர்க்காக வந்து படுகிறவன் ஆளில்லாதவனல்லகிடீர்! “அயர்வறுமமரர்களதிபதி” கிடீர். அங்குக் கையுந் திருவாழியுமான அழகையநுபவிப்பாரேயிறே யுள்ளது; இரு துண்டமாக விடுகைக்கு ஆளுள்ளது இங்கேயிறே. இரண்டு விபூதியையும் ஆளுவது திருவாழியாலே காணும்! “அகல் விசும்பும் நிலனுமிருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்” என்கிறபடியே, அழகாலே அங்குள்ளாரையாளும், கூர்மையாலே யிங்குள்ளாரையாளும். அங்குக் கூர்மை குமரிருக்கும், இங்கு அழகு குமரிருக்கும். அங்குள்ளார்க்குக் கைமேலே ஜீவநமாயிருக்கும், இங்குள்ளார்க்கு விரோதியைப் போக்கிப் பின்னையாயிற்று ஜீவநமிடுவது. அங்குள்ளார் அவன் கையே பார்த்திருக்கையாலே, இவர்களுக்கு அதில்லையே. என்? நாம் இப்போது அஸந்நிஹிதரன்றோ என்னில்; (சேறார் சுனையித்யாதி) சேறுகளார்ந்திருந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீ போலே மலராநிற்கும். எண்ணெயாலே எரியும் விளக்கொழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக்காணும் இவர் ஆசைப்படுகிறது. நீரிலே நெருப்பெழுந்தாற் போலேயிறே யிருக்கிறது! (ஆறா அன்பிலடியேன்) இவர்க்கு நிரூபகம் இருக்கிறபடி. சுனைகளில் நீர் வற்றிலாயிற்று இவருடைய அன்பு வற்றுவது. “மயர்வற மதிநலமருள” அது அடியாக வந்த அன்பிறே. ஊற்றுடைத்தே. க்ரம ப்ராப்தி பற்றாதபடியான ப்ரேமமிறே. (உன்னடி சேர் வண்ணமருளாயே) உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி என் பக்கலிலே க்ருபை பண்ணியருளவேணும். நீ திருமலையிலே நிற்கிற நிலைக்கு ப்ரயோஜநம் பெறப் பாராய்! என் அன்புக்கு இரையிடப் பாராய்!!
– (கூறாய் இத்யாதி) - நேமி என்றால் சக்கரம். நீ, நான்முகன் திருவந்தாதி (87) - “கை கழலா நேமியான்” என்பவனாக உள்ளதற்கும், எனது தடைகள் நீடிப்பதற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதோ? அவை தானாகவே போகும். தடையில்லாத சக்தி கொண்ட இவனுடைய திவ்ய ஆயுதங்கள், ஒருவனுடைய அனைத்து பாபங்களையும் நீங்கி, அவனைக் காப்பாற்றவல்லதாகவே உள்ளன. ஆனால் திவ்யமான ஆயுதங்கள், வெறும் அலங்காரமாக இன்றி, விரோதிகளை அழித்துக் காப்பாற்றுமோ என்பதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; “ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய: - அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றுகின்றன” என்பது காண்க. மற்றவர்களால் வரும் ஆபத்து மட்டும் அல்லாமல், ஸர்வேச்வரன் மூலம் வரும் ஆபத்துக்களிலிருந்தும் காக்கும் என்றார். “ஸகல” என்பது “அனைத்தும்” என்பதாக உள்ளபோது, இவனும் அதில் உள்ளான் அல்லவோ? ஆனால் அனைத்து பிராணிகளுக்கும் நன்மையை மட்டுமே செய்யும் அவன், ஆபத்தை உண்டாக்குவானோ என்பதற்கு விடை தருகிறார்; பாபங்களானவை, கீதை (16-19) – ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி - பாபம் செய்தவர்களை நான் ஸம்ஸாரத்தில் தள்ளுகிறேன் - என்பதற்கு ஏற்ப, ஒருவனிடம் குற்றங்களைக் கண்ட அவனுடைய “தண்டித்தல்” என்பதால் ஏற்படுபவை அல்லவோ? அவ்விதம் வரும் பாபங்களையும் இந்த திவ்ய ஆயுதங்கள் விலக்கும் என்று கருத்து. – ஸர்வேச்வரன் மூலமாக ஏற்படும் ஆபத்தையும் இவை விலக்குவதற்கு அடிப்படை என்ன என்பதைக் கூறுகிறார்; அவன் சேதநர்களிடம் காண்பிக்கும் இயல்பான க்ருபையை இந்த ஆயுதங்கள் நினைத்தபடி உள்ளதால் ஆகும். அதாவது ஸர்வேச்வரன் இந்த திவ்ய ஆயுதங்களிடம், “நாம் இவர்களுடைய குற்றங்களைக் கண்டு, இயல்பாக நம்மிடம் இல்லாமல், நம்மிடம் வந்து சேர்ந்த தன்மையான கோபம் கொண்டு, இவர்கள் மீது சீறினாலும், நிங்கள் இவர்களைக் கைவிடக் கூடாது. நாம் இவர்களுக்கு முன்பு செய்த நம்முடைய இயல்பான க்ருபையை நீங்கள் நினைவில் கொண்டு இவர்களை நீங்கள் காப்பாற்றவேண்டும்”, என்று கூறுகிறான்; ஆகவே இவை அவனுடைய திருவுள்ளத்தை அறிந்தவையாகவே இருக்கும். ஆனால் அவன் சீறியபோதிலும், இவை காப்பாற்றும்படியாக, இவற்றுக்கு அவனைக் காட்டிலும் க்ருபை அதிகமாக இருக்குமோ என்றால், திருவிருத்தம் (33) - அருளார் திருச்சக்கரம் - என்பது காண்க. அவன் இவர்கள் விஷயத்தில் செய்தருளும் கிருபையை இவை அறிந்தது எப்படி என்பதைக் கூறுகிறார்; முன்பிலிருந்தே அவனுடைய திருக்கரங்களில் உள்ளவைகள் அல்லவோ? அவன் தனது க்ருபையை மறுக்கும்போதிலும், இவை தங்களுடைய க்ருபையை மறுப்பதில்லை. ஆகவே அவனுடைய க்ருபையைப் பெற்றவர்கள், சக்கரத்தாழ்வானுடைய கூர்மையை அல்லவோ தங்களுக்குத் தஞ்சமாக எண்ணியபடி உள்ளனர்? – (கூறாய் நீறாய் நிலனாகி) - அடுத்து “கூறாய், நீராய்” என்ற இரண்டு சொற்கள் மூலம், அம்புகளை நோக்கும்போது, அவற்றிலிருந்து இவற்றுக்கு வேறுபாடு உள்ளது என்கிறார்; அம்புகள் போன்று, “சிந்நம் பிந்நம்” என்பதான பரும்பணிக்கு விட்டுத்தராத சக்கரத்தாழ்வான். ஆனால் அம்புகளுக்கு மட்டும் பரும்பணி ஏற்படக் காரணம் என்ன என்பதைக் கூறுகிறார்; இந்தச் சக்கரத்தை நோக்கும்போது, அம்பிற்கு ஒரு குணத்தின் சேர்க்கை உள்ளது என்கிறார்; “குணம்” என்பது “வில்லின் நாண்” மற்றும் “க்ருபை” ஆகிய இரண்டையும் குறிப்பதாகும். சக்ரத்தாழ்வானுடைய வேறுபாட்டைக் கூறுகிறார்; முதலில் இரண்டு துண்டுகள் என்று செய்து, பின்னர் சாம்பல் என்றாக்கி, அதன் பின்னர் அதனையும் காண இயலாதபடி வெறும் தரை என்று ஆக்கிவிடும். (ஆகி) - ஆக்கி; அதாவது “செய்து” என்று பொருள். (கொடுவல்லசுரர்) - அஸுரர்களுடைய வலிமை மற்றும் க்ரூரமான தன்மை ஆகியவற்றை அருளிச்செய்ததன் பலன் கூறுகிறார்; அதாவது சக்கரத்தாழ்வான் சீறுவதற்கு ஒரு காரணம் உள்ளது என்று பொருள். கொடிய செயலைச் செய்தபடி உள்ளவர்களாக, யாராலும் தங்களிடமிருந்து தப்பிச் செல்ல இயலாதபடி வலிமை உள்ளவர்களாக இருக்கும் அஸுரர்கள். (குலம் எல்லாம்) - முழுமையாக குலத்தை அழிக்கும் காரணம் கூறுகிறார்; ஒருவன் செய்த தப்பு காரணமாக அந்தக் குலமே முடிக்க வேண்டும்படி உள்ளதால், யாரையும் தப்ப விடாமல் சுற்றி வளைத்து முடித்த விதம். “திரு” என்று அழகைக் கூறுவதால் அநுகூலரும், “நேமி” என்பதால் ப்ரதிகூலரும் என்று எந்த வேறுபாடும் இன்றி, சக்கரத்தாழ்வான் விஷயத்தில் அகப்படாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அநுகூலரும் சக்கரத்தாழ்வானுக்கு அகப்படுபவர்களோ என்பதைக் கூறுகிறார்; திருவிருத்தம் (70) - வளைவாய்த் திருச்சக்கரத்து எங்கள் வானவனார் - என்று அவன் வளைவில் அகப்பட்டு அதன் பின்பு அல்லவோ மேலே சென்றது? “கூறாய் நீராய் நிலன்” என்று ஆவதற்கு செய்த செய்கை என்ன என்பதற்கு “சீறா எரியும்” என்கிறார். (சீறா எரியும்) - இந்த விரோதிகள் அனைத்தும் முடிந்து போன பின்னரும், சக்கரமாகிய தான் கைக்கொண்ட உத்யோகமானது முடிந்துவிடாமல், இரை கிட்டப் பெறாத பாம்பு போன்று, ஜ்வலித்தபடியே இருக்கும். (திருநேமி வலவா) - நீ உனது வலது திருக்கரத்தில் இப்படிப்பட்ட சக்கரத்தாழ்வானைக் கொண்டுள்ளபோது, நான் துக்கத்தை ஏன் தரித்தபடி உள்ளேன்? – (தெய்வக் கோமானே) - இவ்விதம் அடியார்களுக்காகப் படாதபாடு பட்டபடி உள்ள அவன், தன் உடன் வேறு யாரும் இல்லாதவன் அல்லன். திருவாய்மொழி (1-1-1) – அயர்வறும் அமரர்கள் அதிபதி - ஆவான். பரமபதத்தில் இவன் திருக்கரமும் சக்கரமும் என்று நிற்கின்ற நிலையை மட்டுமே அனுபவிப்பவர்கள் உள்ளனர். ஆனால் அங்கு விரோதிகள் யாரும் இல்லையா என்பதற்கு விடை அளிக்கிறார்; இரண்டு துண்டுகள் என்று செய்யும்படி உள்ளவர்கள் இங்கு அல்லவோ உள்ளனர்; இரண்டு விபூதிகளையும் இவன் ஆள்வது சக்கரத்தாழ்வானைக் கொண்டே ஆகும்; இதற்கு ப்ரமாணம் திருவிருத்தம் (33) - அகல் விசும்பும் நிலனுமிருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் – என்பதாகும். இப்படி சக்கரத்தாழ்வான் ஆள்கின்ற விதங்களைக் கூறுகிறார்; அங்குள்ளவர்களைத் தனது அழகால் ஆள்கிறான்; இங்குள்ளவர்களைத் தனது கூர்மையால் ஆள்கிறான். அங்கு கூர்மை பின்னே இருக்கும்; இங்கு அழகு பின்னே இருக்கும். இந்த இரண்டிற்கும் காரணம் என்ன என்பதைக் கூறுகிறார்; அங்கு உள்ளவர்கள் இவன் அழகை மட்டுமே நோக்கித் தரிப்பதால், திருக்கரம் மீதே அவர்கள் ஜீவனம் இருக்கும்; இங்கு உள்ளவர்களுக்கு, விரோதிகளை நீக்கிய பின்னர் அல்லவோ வாழ்க்கையை அமைக்கிறான்? அங்குள்ளவர்கள் தங்கள் முயற்சியை விடுத்து இவன் திருக்கரத்தையே நோக்கியபடி உள்ளதால், அவ்விதம் அங்கு உள்ளது; இங்குள்ளவர்கள் அவ்விதமாக இருப்பதில்லை அல்லவோ? – இதனைக் கேட்ட திருவேங்கடமுடையான ஆழ்வாரிடம், “நாம் இப்போது அருகாமையில் இல்லாதவன் அல்லவன் அல்லவோ?”, என்றான். இதற்கு ஆழ்வார் விடை கூறுகிறார். (சேறார் சுனை இத்யாதி) - சேறு நிறைந்துள்ள சுனைகளில் தாமரைமலர்கள் சிவந்த நிறம் பொருந்திய நெருப்பு போன்றே மலர்ந்தபடி உள்ளன. எண்ணெய் கொண்டு எரிகின்ற உண்மையாக தகிக்கின்ற அக்னியைக் காட்டிலும், நீரில் எரிகின்ற குளிர்ந்த இந்த விளக்கைக் காணவே இவர் விரும்புகிறார். நீரில் நெருப்பு எழுந்தது போன்று இந்தத் தாமரைகள் உள்ளன. (ஆறா அன்பிலடியேன்) - இவரை அடையாளம் காண்பிக்கவல்லதாக உள்ளது எது? சுனைகளில் நீர் வற்றினால் மட்டுமே இவர் அவன் மீது கொண்ட அன்பு வற்றும். இவ்விதம் அன்பு வற்றாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால், திருவாய்மொழி (1-1-1) – மயர்வற மதிநலம் - என்று அவன் அருள, அதன் அடிப்படையில் வந்த அன்பு என்பதால் ஆகும். “சுனை” என்பதுடன் சேர்ந்து இவரது அன்பைக் கூறுகிறார். சுனை வற்றாதோ என்றால், ஊற்றுடைய சுனை என்பதால் வற்றாது. “ஆறா அன்பு” என்று அருளிச் செய்ததற்கு “நித்யமான அன்பு” என்று கூறிய பின்னர், “மெய்யமர் காதல்” என்பதற்கு ஏற்ப, அவனை அனுபவித்தால் அல்லாமல் ஆறாத அன்பு என்பதாக வேறு ஒரு பொருளையும் “க்ரம” என்று தொடங்கி அருளிச்செய்கிறார்; சரியான வரிசையில் தகுந்த நேரத்தில் அடைதல் என்பதைப் பொறுக்க இயலாத ப்ரேமம் அல்லவோ? (உன்னடி சேர் வண்ணமருளாயே) - உன் திருடிகளில் நான் சேர்ந்து அடிமை செய்யும்படியாக எனக்கு நீ க்ருபை செய்தருளவேண்டும். நீ திருவேங்கடமலையில் வந்து நிற்பதற்கான ப்ரயோஜனத்தை அடைவதற்கு முயல்வாயாக! எனது அன்பிற்குத் தகுந்த இரையை இட முயல்வாயாக!