பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 4)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
உழந்தாள் நறு நெய் ஓரோர் தடா உண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் பழந் தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே
களைத்துத் தடாவில் சேர்த்த யசோதையின் நறுமணம் மிக்க நெய்யை, ஒவ்வொரு தடாவாக உண்ண, “பிள்ளையை இழந்துவிட்டோமே” என்று நினைத்தவளாக, வயிறு எரிய, க்ருஷ்ணனின் கையைப் பிடித்து இழுத்து, அழகிய மத்தில் வெகு காலம் பழகின கயிற்றாலே அடிப்பதாக ஓங்க, பயந்து தப்பிப் பிழைக்க தவழ்ந்தவனுடைய முழங்கால்களின் அழகினைக் காணுங்கள், வளர்ந்த முலைகளை உடைய பெண்களே, நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருக்கணைக்காலை அநுபவித்த வநந்தரம் திருமுழந்தாளை அநுபவிக்கிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருக்கணைக்காலி னழகை யநுபவித்த வநந்தரம், திருமுழந்தாளினழகை யநுபவிக்கிறார்.
– திருக்கணைக்காலின் அழகை அனுபவித்த பின்னர் திருமுழங்காலின் அழகை அனுபவிக்கிறார்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (உழந்தித்யாதி) ஆயாஸித்துக் கடைந்து ஓரோ தடாக்களிலே சேர்த்து வைத்த நெய்யை உண்ணக் கண்டு, “உண்ட நெய் பிள்ளைக்கு ஸாத்மியாது” என்று பிள்ளையை இழந்தாளாக நினைத்து பயப்பட்ட உழற்றியாலே. “ஈர்த்து” என்றது இழுத்தென்றபடி. “எழில் மத்து” என்று எயிறு விளங்காநின்ற மத்தென்றபடி. மத்திலே சுற்றிக் கடைந்த பழந்தாம்பாலென்றபடி. நல்ல தாம்பு தேடும்போது இவனை விடவேணுமே. அத்தாலே, கண்டதோர் கயிற்றை எடுக்கையிறே உள்ளது. தாம்பாலே ஓங்கினவளவிலே அடித்தாளாக நினைத்து பயத்தாலே தவிழப் புகுந்தவாறே கோபத்தை மறந்து “தவழ்ந்தான்”. “தவழ்ந்தான்” என்று தவழ்ந்து கன்றின பின்னே போன முழந்தாளை வெறும்புறத்திலே அவள் அநுபவித்த ப்ரகாரத்தை தாமும் அநுபவித்து அநுபவ யோக்யரைக் “காணீர்” “காணீர்” என்று காட்டுகிறார். (முகிழ் முலையீர்) பக்த்யங்குரம். மாமுனிகள் வ்யாக்யானம் - (உழந்தாள்) ஆயாஸித்தவள். கறந்து காய்ச்சித் தோய்த்துக் கடைந்து வெண்ணெயாக்கி உருக்கித் தடாக்களிலே சேர்த்து வைத்த வருத்தத்தையெல்லாம் சொல்லுகிறது. (நறு நெய் ஓரோ தடாவுண்ண) நறுவிதான நெய்யை ஒவ்வொரு தடாவாக ஒன்றும் சேஷியாதபடி உண்ண. (இழந்தாள் எரிவினால் ஈர்த்து) “உண்ட நெய் பிள்ளைக்கு ஸாத்மியாது” என்று பிள்ளையை இழந்தாளாக நினைத்து பயப்படுகையால் வந்த வயிற்றெரிச்சலாலே கையைப் பிடித்திழுத்து. (எழில் மத்தின் பழந்தாம்பாலோச்ச) அழகிய மத்திலே சுற்றிக் கடைந்து பழகின தாம்பாலே அடிப்பதாக ஓங்க. (பயத்தால் தவழ்ந்தான்). பயத்தாலே அத்தைத் தப்புவதாகத் தவழ்ந்தவனுடைய, (முழந்தாளிருந்தவா காணீரே) திருமுழந்தாளினழகிருந்தபடியைக் காணுங்கோள். (முகிழ் முலையீர் வந்து காணீரே) முகிழ்த்த முலையையுடையீர் வந்து காணுங்கோள்.
– (உழந்தான்) - களைப்புற்றவள். பாலினைக் கறந்து காய்ச்சித் தோய்த்துக் கடைந்து வெண்ணெயாக்கி உருக்கித் தடாக்களில் சேர்ந்து வைத்து, இப்படியாக உடல் வருத்தச் செய்து களைப்பு அடைந்துள்ளாள். (நறுநெய் ஓரோ தடா உண்ண) - இவ்வாறு களைப்பு அடைய ஒவ்வொரு தடா நிறையச் சேர்த்து வைத்த நறுமணம் மிக்க நெய்யினை, ஒவ்வொரு தடாவாக ஒன்றும் மிச்சமில்லாதபடிக்கு உண்ண. (இழந்தாள் எரிவினால் ஈர்த்து) – “உண்ட நெய்யானது பிள்ளைக்கு ஜீரணம் ஆகாது. பிள்ளையை இழந்தேனே” என்று இழந்தவளாக நினைத்து, அச்சம் கொண்டதால் வந்த வயிறு எரிச்சலாலே, க்ருஷ்ணனின் கையைப் பிடித்து இழுத்து. (எழில் மத்தின் பழந் தாம்பாலே) - இவள் கைப்பட்ட மத்து ஆகையாலே அழகான மத்தானது. இந்த அழகான மத்திலே சுற்றிக் கடைய உதவி செய்வதும், வெகுநாட்களாகக் கடையப் பழகின கயிற்றினாலே. ஏன் மத்தில் சுற்றியிருந்த பழையதான கயிற்றினைக் கையில் எடுத்தாள்? நல்லதான கயிற்றினை கையில் எடுத்து இருக்கலாமே என்றால், நல்லதான கயிற்றினைத் தேடும்பொழுதில் இவன் தப்பி ஓடிவிடுவான்; ஆகவே, கண்ணில் கண்ட ஒரு கயிற்றைக் கையில் எடுத்தாள். எடுத்த அந்தக் கயிற்றினாலே, (ஓச்ச பயத்தால் தவந்தான்) - அடிப்பதாக ஓங்க, அடித்தே விட்டாள் என்று நினைத்து, பயத்தாலே தவழ்ந்து தப்பிப் பிழைக்கும் அழகினைக் கண்டு கோபத்தை மறந்தவளாய், “தவழ்ந்தான்”, “தவழ்ந்தான்” என்று கன்றின் பின்னே தவழ்ந்து போன முழங்காலினைக் கண்டு. (முழந்தாள் இருந்த ஆ காணீரே) - இந்த முழங்காலின் அழகினை வந்து காணுங்கள் (முகிழ்முலையீர் வந்து காணீரே) - க்ருஷ்ணன் மீதுள்ள அன்பானது மொட்டு போன்று வளர்ந்துள்ள முலைகளை உடைய பெண்களே வந்து காணுங்கள்.