திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 1)
ஆறாம்பத்து
பத்தாம் திருவாய்மொழி
உலகம் உண்ட பெருவாயா உலப்பு இல் கீர்த்தி அம்மானே நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆர் உயிரே திலதம் உலகுக்கு ஆய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே குல தொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே
– ப்ரளய ஆபத்தில் இந்த லோகங்களை உட்கொண்டபோது, இவற்றைக் காப்பாற்றுதல் என்பது மட்டும் அல்லாமல், பெரும் பாரிப்பைக் கொண்டதாகிய, காப்பாற்றுதலுக்கு உறுப்பான உள்ள வாயைக் கொண்டவனே! காப்பாற்றுதல் மூலம் உண்டாவதும், எல்லையற்றதும் ஆகிய ஞானம், சக்தி போன்ற அனைத்துவிதமான திருக்கல்யாண குணங்களுடைய ப்ரகாசத்தைக் கொண்டு, அனைத்திற்கும் இயல்பாகவே எஜமானனாக உள்ள ஸ்வரூபம் பொருந்தியவனே! இப்படிப்பட்ட காப்பாற்றுதல்களுக்கு ஏற்றதாக, உனக்கே உரியதான, இயல்பான ஸௌந்தர்யம் லாவண்யம் போன்ற பல குணங்களும் பரிபூர்ணமாக ஒளிரும்படியாக, இந்த உலகில் காணப்பட இயலாத ஒளி பொருந்திய திவ்யமங்கள திருமேனி கொண்டவனே! இவ்விதம் கூறப்பட்ட பலவிதமான சிறப்புகளையும் உடையவனாக உள்ள உனக்கு அடிமையாக உள்ள எனக்கு பரிபூர்ணமான உயிராக உள்ளவனே! இவ்விதம் திருமுகம் வெளிப்படுத்தாமல் நின்று காப்பாற்றுதல் மட்டும் அல்லாமல், அனைத்து லோகங்களுக்கும் ஊர்த்வபுண்ட்ர ரூபமாக நெற்றியில் அலங்கரிக்கவல்ல திலகம் போன்று, உறுதியாக நிற்கும் திடுவேங்கடமலையில், எனக்கு உன்னுடைய எஜமானத் தன்மையைப் ப்ரகாசித்தபடி உள்ளவனே! தொன்று தொட்டு வரும் தொண்டர் குலத்தில் பிறந்த நான், எஜமானனாகவும் காப்பவனாகவும் க்ஷமை பொருந்தியவனாகவும் உள்ள உனது திருவடிகளை அடையும் விதத்தை நீயே அருளிச்செய்ய வேண்டும்.
உன்னையொழிய வேறுகதி யின்றிக்கேயிருக்கிற என்னை உன் திருவடிகளிலே சேரும்படி பண்ணி யருளவேணுமென்கிறார்.
– “உன்னைத் தவிர வேறு கதியற்றவனாகிய என்னை, உனது திருவடிகளில் சேரும்படியாகச் செய்து அருளவேண்டும்”, என்கிறார்.
(உலகமுண்ட பெருவாயா) தேவரீர் திருவடிகளைக் கிட்டாதவன்று எனக்கு உண்டான தளர்த்தி பத்து ப்ரளயாபத்தோபாதி போராதோ? ரக்ஷ்யத்தினளவன்றிக்கே யிருக்கும் பாரிப்பையுடையவனே! உன் பாரிப்புக்கும் என்னார்த்திக்கும் என்ன சேர்த்தியுண்டு? நீயறிந்த ஸம்பந்தமும் ஆபத்துமே கைம்முதலாக ரக்ஷிக்குமவனன்றோ! ஒரு விபூதிக்காக ஆபத்துவரிலோ நோக்கலாவது! விபூதிக்காக வுண்டான ஆபத்து எனக்கு ஒருவனுக்குமுண்டானால் நோக்கலாகாதோ? ப்ரளயார்ணவத்திலே யழுந்துவாரையோ நோக்கலாவது! ஸம்ஸாரார்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ? அபேக்ஷியாதாரையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ? சரீரத்துக்கு வரும் ஆபத்தோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்து நோக்கலாகாதோ? ஜல ப்ரளயத்திலே அகப்படிலோ நோக்கலாவது! விரஹ ப்ரளயத்துக்கு உதவலாகாதோ? பிறரால் வரும் ஆபத்தோ நோக்கலாவது! உன்னால் வருமாபத்து நோக்கலாகாதோ? “சரணம் புகாதாரை ரக்ஷிக்க வேணும்” என்கிற நியதியுண்டோ! சரணம் புக்காரை ரக்ஷிக்கலாகாதோ? ரக்ஷித்துச் சமைந்து பின்னையும் “ஒன்றும் செய்யப் பெற்றிலோம்' என்றிருக்கக் கடவ உனக்கு, என்னுடைய ரக்ஷணத்திலேயந்வயியாதே கைவாங்கியிருக்கை போருமோ? ப்ரளயாபத்தை ரக்ஷித்துப் பின்பும் “நாம் இவற்றுக்குச் செய்தது ஒன்றுண்டோ?” என்று உடன்கிடந்தாரை மடி தடவி, பின்னை “என் செய்தோமானோம்” என்று தபிப்பாரைப்போலே இழவுபட்டிருப்பானொருவனன்றோ நீ! (பெருவாயா) ரக்ஷ்யத்தினளவல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. அவற்றின் பக்கலுண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும் தம்பக்கல் உபேக்ஷை யென்றிருக்கிறார். (பெருவாயா) த்ரௌபதி “சரணம்” என்ற உக்தி யித்தனையும் திருவுள்ளத்தே கிடந்து, ஸதஸ்ஸில் அவன் பரிபவித்த பரிபவத்தையும் பரிஹரித்து, துர்யோதநாதிகளையும் நிரஸித்து, தர்மபுத்ரன் தலையிலே முடியையும் வைத்து, இவள் குழலையும் முடிப்பித்துப் பின்பும் “ருணம் ப்ரவ்ருத்தமிவமே” என்று குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிறபோதும் “நாதிஸ்வஸ்த்தமநா:” என்று திருவுள்ளத்தில் புண்ணோடேயிறே யெழுந்தருளிற்று. (உலப்பில் கீர்த்தியம்மானே) இவனுக்கு ரக்ஷகத்வம் வந்தேறியாய்ப் போய், பழையது கொண்டு வளைப்பிடுகிறேனல்லேன்; இப்படி லோகத்தை ரக்ஷித்து ஆர்ஜித்த புகழுக்கு முடிவில்லையென்கிறது. “பொழிலேழும் காவல் பூண்ட புகழி”தே. இப்படிகளால் வந்த குணவத்தா ப்ரதையையுடைய ஸர்வேச்வரனே! “தஸ்யநாம மஹத்யச:” என்றும், “யசஸச்சைக பாஜநம்” என்றும் உபதேசகம்யமன்றிக்கே, “விதித:” என்று சத்ரு கோஷ்ட்டியிலும் இப்படி ப்ரஸித்தமாயன்றோ உன் புகழிருப்பது! பாதகத்தின் ஸந்நிதியிலே பாத்யமும் ஜீவிக்கும்படியன்றோ உன்னுடைய ஆஜ்ஞையிருப்பது! அவன் நினைத்தவன்று பாதகந்தானே பாத்யத்துக்குப் பாலூட்டி வளராநிற்குமிறே. (உலப்பில் கீர்த்தியம்மானே) “குணாநாமாகரோ மஹாந்” என்றும், “ததா குணாஹ்யநந்தஸ்ய” என்றும், “வர்ஷாயுதைர்யஸ்ய குணா ந சக்யா:” என்றும், “பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்திதே” என்றும் சொல்லுகிற குணங்களுக்கு முடிவின்றிக்கேயிருக்கை. இவற்றை எல்லை காண நினைத்தால் கரைகண்டு மீளவொண்ணாது; மதி க்ஷயத்தாலே மீளுமத்தனை. ஸ்வரூபமொழிய குணத்துக்காயிற்றுத் தோற்றது. (நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி) ரக்ஷகனன்றிக்கே காதுகனானாலும் விடவொண்ணாத வடிவழகிருக்கிறபடி. (நிலவும்) ஒரு கர்மமடியாக வந்து, அது வற்ற வற்றுகிறதன்றே. (சுடர் சூழொளி மூர்த்தி) உள்ளு மண்பற்றாய்ப் புறம்பு ஒளியூட்டி யிருக்கை யன்றிக்கே, “தேஜஸாம் ராசிமூர்ஜிதம்” என்கிறபடியே, தேஜ பதார்த்தங்களைத் திரட்டிப் பிடித்தாற்போலே யிருக்கை. “உயர்வினையே தருமொண்சுடர்க்கற்றை” என்னக் கடவதிறே. ரஜஸ் தமஸ்ஸுக்களா லளாவனன்றிக்கே சுத்தஸத்த்வமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய், நெய் திணுங்கினாற்போலே உள்ளும் புறம்பும் ஒக்க ஒளியேயா யிருக்கை. திருமேனி தன்னை “பஞ்ச சக்தி மயம்” என்றும் சொல்லாநின்றார்கள்; “ஷாட்குண்ய விக்ரஹம்” என்றும் சொல்லா நின்றார்கள்; ஆராய்ந்து பார்த்தால், அர்த்தஸ்த்தித்தான் பஞ்சசக்திமயமென்றே யிருக்கும்; ஷாட்குண்ய விக்ரஹமென்கிறது திருமேனிதான் குணங்களுக்குத் திரோதாயகமன்றிக்கே ப்ரகாசகமாயிருக்கையாலே. “ரூபவாந் ஸுபகஸ் ஸ்ரீமாந் கந்தர்ப்ப இவ மூர்த்திமாந்” என்றும், “தாஸாமாவிரபூத்” என்றும் சொல்லுகிறபடியேயிறே யிருப்பது. (நெடியாய்) கீழ்ச்சொன்ன குணங்களுக்கு எல்லையுண்டானாலும், ஸௌந்தர்ய லாவண்யாதிகளுக்கு எல்லை காணவொண்ணாதபடியா யிருக்கை. “மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும் தரைகாண வொண்ணாதிருக்கிறபடி. (அடியேனாருயிரே) வடிவழகையும் குணங்களையுங் காட்டி, என்னை வ்யதிரேகத்தில் ஜீவியாதபடி பண்ணினவனே! “திருவேங்கடத்தெம்பெருமானே” என்றத்தோடொக்க இத்தைக் கூட்டக் கடவது. (திலதமுலகுக்காய் நின்ற) சில ஸ்த்ரீகளுக்குப் பூர்ணமான ஆபரணம் போலாயிற்று பூமிக்குத் திருமலை. (திருவேங்கடத்தெம்பெருமானே அடியேனாருயிரே) திருமலையிலே நின்று என்னுடைய சேஷத்வ முறையை யறிவித்து, உன்னாலல்லது செல்லாதபடி பண்ணினவனே! இவ்வளவும் வர, அவன் ஸ்வரூபம் சொன்னார்; மேல், தம் ஸ்வரூபஞ் சொல்லுகிறார்; (குலதொலடியேன்) குலமாகப் பழையதான அடியேன். இத்தால், தமக்கு ஓர் ஆதிக்யஞ் சொல்லுகிறாரல்லர்; தம்முடைய அநந்யகதித்வஞ் சொல்லுகிறார். ஒருவற்கேயா யிருப்பாரை வேறு சிலர் நோக்குவாரில்லையிறே. (உன பாதம் கூடுமாறு கூறாயே) ஸ்வரூபம் இதுவான பின்பு, ஸ்வரூபாநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணியருளாய். (அடியேனுனபாதம் கூடுமாறு) சேஷபூதனானவன் உன்னைக்கூட என்னுமது “உனபாதம் கூட” என்றிறே. (உனபாதம் கூடுமாறு) இவருடைய ஸாயுஜ்யமிருக்கிறபடி. (கூறாயே) ஒரு சொல் உனக்கு, எனக்கு ஸ்வரூப லாபங் கிடாய். அவன் ஒரு வார்த்தையருளிச் செய்ய, தளப்பம் தீருமிறே இவர்க்கு. “மா சுச:” என்ன வேணும்.
(உலகமுண்ட பெருவாயா) - ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “ஜகத்திற்கு ப்ரளய ஆபத்து ஏற்பட்டது. அதனால் நாம் காப்பாற்றினோம். உமக்கு எந்த ஆபத்தும் இல்லையே!”, என்றான். இதற்கு ஆழ்வார் ஸர்வேச்வரனிடம், “உனது திருவடிகளை அடைய இயலாதபோது, எனக்கு உண்டாகும் தளர்வு என்பது பத்து ப்ரளய ஆபத்துக்கள் போன்று உள்ளது போதாதோ? பாதுகாக்கப்படும் பொருள்களின் அளவு இன்றியே, அதிகமாக பாரிப்பு கொண்டவனே! உனது பாரிப்பிற்கும் எனது துன்பத்திற்கும் என்ன சேர்த்தி உள்ளது?”, என்றார். இதற்கு ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “காக்கப்படும்போது ஒரு கைம்முதல் வேண்டாமோ?”, என்றான்; இதற்கு விடை அளிக்கிறார்; எனக்கும் உனக்கும் உள்ள ஸம்பந்தம் மற்றும் எனக்கு ஏற்பட்ட ஆபத்து ஆகியவற்றைக் குறித்து நன்கு அறிந்த நீ, அவற்றையே எனது கைம்முதலாகக் கொண்டு காப்பாற்றுபவன் அல்லவோ? “பலருக்காக உதவுவதை விடுத்து, ஒருவருக்காக மட்டுமே இவ்விதம் செய்ய இயலுமோ?”, என்று ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம் கேட்க, விடை தருகிறார்; ஒரு விபூதி முழுமைக்கும் ஆபத்து வந்தால் மட்டுமே நோக்குவாயா? விபூதிக்கு ஏற்படும் ஆபத்து, என் ஒருவனுக்கு உண்டானால் நோக்கவேண்டாமா? ஒரே ப்ரளயம் என்றபோதிலும், அதனைக் காட்டிலும் தனக்கு ஏற்பட்ட நிலையில் வேறுபாடு உண்டு என்பதை “ப்ரளய” என்ற இரண்டு வாக்கியங்களால் கூறுகிறார்; ப்ரளய ஸமுத்ரத்தில் அழுந்துபவர்களை மட்டுமே நோக்க வேண்டுமா? ஸம்ஸார ஸமுத்ரத்தில் அழுந்துபவர்களை நோக்க வேண்டுமா? உன்னிடம் விண்ணப்பம் செய்யாதவர்களை நோக்கும்போது, உன்னிடம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உதவினால் ஆகாதோ? ப்ரளய ஸமுத்ரத்தில் அழுந்துபவர்களுக்கு வந்த ஆபத்து என்ன, ஸம்ஸார ஸமுத்ரத்தில் அழுந்துபவர்களுக்கு வந்த ஆபத்து என்ன என்பதை அடுத்து கூறுகிறார்; சரீரத்திற்கு உண்டாகும் ஆபத்தை மட்டுமே நோக்கவேண்டுமோ, ஆத்மாவிற்கு உண்டாகும் ஆபத்தை நோக்கக்கூடாதோ? மேலும் ஒரு வேறுபாடும் கூறுகிறார்; நீரால் உண்டான ப்ரளயத்திலிருந்து மட்டுமே நோக்கவேண்டுமோ, விரஹம் என்ற ப்ரளயத்திலிருந்து காப்பாற்றலாகாதா? அதாவது மற்றவர்களால் உண்டாகும் ஆபத்துலிருந்து மட்டுமே காப்பாற்ற நோக்குவாயோ? உன்னால் ஏற்படும் ஆபத்தை நோக்கக் கூடாதோ? சரணம் புகாதவர்களை மட்டுமே காப்பாற்றவேண்டும் என்ற விதிமுறை ஏதும் உள்ளதா, சரணம் புகுந்தவர்களை ரக்ஷிக்கக்கூடாதா? அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய பின்னரும் உனது திருவுள்ளத்தில், “நான் ஒன்று செய்யவில்லையே” என்று உள்ளாய்; இப்படிப்பட்ட உனக்கு, என்னைக் காப்பாற்றுதலில் ஈடுபாடு காண்பிக்காமல் பொறுப்பிலிருந்து விலகி இருக்க இயலுமோ? “ஒன்றும் செய்யவில்லை” என்று இவன் இருந்த விதத்தை அடுத்து அருளிச்செய்கிறார்; “நாம் இவற்றுக்கு ஏதேனும் ஒன்று கூட செய்யவில்லை?” என்று ப்ரளய ஆபத்திலிருந்து காப்பாற்றிய பின்னர் நீ உள்ளாய்; அதாவது ஒருவருடைய மடியில் உள்ளதைத் திருடிக் கொண்டு சென்ற பின்னர், “என்ன கார்யம் செய்தோம்” என்று தவித்தபடி உள்ளவர்கள் போன்று, இழந்து நிற்பதாக நீ எண்ணியபடி உள்ளாய் அல்லவோ? – (பெருவாயா) - வ்யாக்யானத்தில் உள்ள “ரக்ஷித்து சமைந்து - காப்பாற்றிய பின்னரும்” என்பது மூலம் கூறப்பட்ட பொருளானது “பெருவாயா” என்பதைக் கருத்தில் கொண்டே ஆகும் என்பதை வெளிப்படுத்த, மீண்டும் அந்தச் சொல்லை விளக்குகிறார். தன்னால் பாதுகாக்கப்படும் பொருள்களின் அளவைக் காட்டிலும், காப்பவனுடைய பாரிப்பு அதிகமாக உள்ளது. அவற்றின் மீது உண்டான காப்பாற்றுதலில் உள்ள பாரிப்பு போன்று தன்னிடம் உதாஸீனமாக உள்ளதாக எண்ணுகிறார். (பெருவயா) - காப்பாற்றிய பின்னரும் “ஒன்றும் செய்யவில்லை” என்றுள்ள தன்மைக்கு ஒரு உதாரணம் கூறுகிறார்; இதற்காக மீண்டும் “பெருவாயா” என்பதை எடுக்கிறார். த்ரௌபதி “சரணம்” என்று கூறிய சொற்கள் இவன் செவியில் எப்போதும் கிடந்தன; ஆகவே, சபையில் துச்சாதனன் செய்த மானபங்கத்தையும் விலக்கி, துர்யோதனன் போன்றவர்களை அழித்து, தர்மபுத்திரன் தலையில் முடியை வைத்து, த்ரௌபதியின் அவிழ்ந்த கூந்தலை முடியும்படியாச் செய்து, அதன் பின்னரும், மஹாபாரதம் உத்யோகபர்வம் (58-22) - ருணம் ப்ரவ்ருத்தமிவமே – கடன் போன்று வளர்த்தபடியே இருந்தது - என்று த்ரௌபதியின் கூக்குரலை எண்ணி, குறை நிறைந்தவனாகவே இருந்தான்; இதன் விளைவாக, பரமபதத்திற்கு மீண்டும் திரும்பிய நேரத்திலும், “நாதிஸ்வஸ்த்தமநா: - நிம்மதி அற்ற மனம் கொண்டவனாக” என்பதற்கு ஏற்ப, திருவுள்ளத்தில் புண்பட்ட நிலையில் எழுந்தருளினான். (உலப்பில் கீர்த்தியம்மானே) – இவனுடைய காப்பாற்றும் தன்மையானது, இடையில் வந்து சேர்ந்து, பின்னர் மறைந்து, அதன் விளைவாக முன்பு செய்தவற்றை எண்ணி இப்போது கூறுகிறேன் அல்லன். இவ்விதம் லோகத்தைக் காப்பாற்றுதல் என்பது ஒரு காலத்தில் மட்டுமே அல்லாமல் எப்போதும் இருந்தபடி உள்ளது. ஆகவே இவ்விதம் எப்போதும் காப்பாற்றி நிற்பதன் மூலம் சேர்ந்த புகழுக்கு ஒரு முடிவே இல்லை; இதற்கு ப்ரமாணம் திருநெடுந்தாண்டகம் (10) - பொழிலேழும் காவல் பூண்ட புகழ் – என்பதாகும். இப்படியாக ஆபத்து காலங்களில் துணையாக இருத்தல் போன்ற குணங்கள் கொண்டுள்ளதால் ஏற்பட்ட ப்ரஸித்தி கொண்ட ஸர்வேச்வரனே! இதற்கான ப்ரமாணங்களைக் கூறுகிறார். கிஷ்கிந்தாகாண்டத்தில் வாலியிடம் தாரை கூறுவது (15-19) - தஸ்யநாம மஹத்யச: – அந்தப் பரமாத்மாவின் கீர்த்தி மிகவும் பெரியது - என்றும், (15-19) – யசஸச்சைக பாஜநம் - புகழுக்கு தானே இருப்பிடமாக உள்ளவன் - என்றும் உபதேசம் மூலம் மட்டுமே அறியலாம்படி இன்றி, பகைவர்கள் கூட்டத்திலும் உனது புகழ் பரவியுள்ளது அல்லவோ; இதற்கு ப்ரமாணம் ஸுந்தரகாண்டம் (21-20) – விதித: - அனைவராலும் அறியப்பட்டவர் - என்பது ஆகும். அடுத்து, காப்பாற்றுதல் என்பதன் எல்லையைக் கூறுகிறார்; பாதிக்கும் கருடனின் அருகாமையில் பாதிக்கப்படும் சுமுகனும் உள்ளதாக அல்லவோ உனது ஆணை இருக்கிறது! அவன் நினைத்தால், பாதிக்கும் பொருளானது, தானே பாதிக்கப்படும் பொருளையும் பால் ஊட்டி வளர்ப்பது போன்று காப்பாற்றும். – (உலப்பில் கீர்த்தியம்மானே) - கிஷ்கிந்தாகாண்டம் (15-21) - குணாநாமாகரோ மஹாந் - அனைத்து குணங்களுக்கும் நிலையுமாக உள்ளவன் – என்றும், மத்ஸ்ய புராணம் – ததா குணாஹ்யநந்தஸ்ய - அவனுடைய குணங்கள் எண்ணற்றவை - என்றும், மஹாபாரதம் கர்ணபர்வம் - வர்ஷாயுதைர்யஸ்ய குணா ந சக்யா: - க்ருஷ்ணனுடைய குணங்க்ளை அனைத்து லோகங்களும் சேர்ந்து நின்று பதினாயிரம் ஆண்டுகள் கூறினாலும் முடியாது – என்றும், அயோத்யாகாண்டம் (2-26) - பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்திதே - அரசனே! உனது புத்திரனாகிய இராமனுக்கு அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்துள்ளன - என்றும் கூறப்படும் குணங்களுக்கு முடிவு இல்லாமல் உள்ளது. எல்லை காண முயன்றாலும், கரை காண இயலாது; அறிவு குறைவு காரணமாகத் திரும்ப வேண்டியதாக இருக்கும். இவனுடைய ஸ்வரூபத்திற்கு அல்லாமல் குணங்களுக்கு அல்லவோ ஆழ்வார் தோற்றார்? – (நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி) - கடந்த வரியின் மூலம், பாதுகாக்கும் தன்மை கூறுகிறார்; அந்தத் தன்மை இல்லை என்றாலும், அவனுடைய வடிவழகு, நம்மால் அவனை விட இயலாதபடிச் செய்யும் என்கிறார்; ரக்ஷகனாக இல்லை என்றாலும், அவன் பாதிப்பை ஏற்படுத்துபவன் என்றாலும், விட இயலாதபடி வடிவழகு உள்ளது. (நிலவும்) - இந்த வடிவழகானது ஏதோ ஒரு கர்மம் காரணமாக வந்து சேர்ந்து, அந்தக் கர்மம் வற்றும்போது, வடிவழகும் மாறும்படியான நிலை என்பது இவனுக்கு இல்லை; கர்மத்தால் வந்தது அல்ல. (சுடர் சூழொளி மூர்த்தி) – “சுடர், ஒளி” என்று ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களைக் கூறியதை விளக்குகிறார்; உள்பக்கம் முழுவதும் மண்ணாகவும், வெளிப்பக்கம் மட்டும் ஒளியைக் காண்பிக்கும் பொம்மைகள் போன்று அல்லாமல், “தேஜஸாம் ராசிமூர்ஜிதம் - ஒளிகளின் கூட்டம்” என்று கூறலாம்படி, அனைத்து ஒளி வீசும் பொருள்களையும் ஒன்றாகத் திரட்டிப் பிடித்தது போன்று உள்ளான். திருவாய்மொழி (1-7-4) - உயர்வினையே தருமொண்சுடர்க்கற்றை - என்பது காண்க. “உள்ளு மண்பற்று” என்பதை விளக்குகிறார். ரஜஸ் மற்றும் தமஸ் கலந்தது அல்லாமல் சுத்தஸத்வமாக, எல்லையற்ற தேஜஸ் நிறைந்ததாக, நெய் உருகியது போன்று, உள்ளும் புறமும் ஒரே போன்று ஒளி ரூபமாக உள்ளதைக் கூறுகிறார். இது சுத்தஸத்வமயமான திருமேனி என்பதால், பஞ்சோபநிஷந்மயம் என்பதாகவும் கொண்டு, “ஷாட்குண்ய விக்ரஹம்” என்று கூறலாம்படி உள்ளபோது, “பஞ்சோபநிஷந்மயம்” என்று கூறுவது ஏன் என்பதை விளக்குகிறார். இவனுடைய திருமேனியை “பஞ்ச சக்திமயம்” என்று கூறுவ்ர்; “பஞ்ச சக்தி” என்பது இந்த உலகில் காணப்படாத ஐந்து பூதங்கள் ஆகும். அல்லது “ஷாட்குண்ய சக்தி மயம்” என்றும் கூறுவார்கள். நன்கு ஆராய்ந்து பார்த்தால், பொருளின் நிலை “பஞ்ச சக்தி மயம்” என்பதாகவே இருக்கும்; “ஷாட்குண்ய விக்ரஹம்” என்றது, திருமேனியானது அவன் குணங்களை மறைப்பது மட்டும் அல்லாமல், அவற்றை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என்பதால் ஆகும். “சுடர், ஒளி” என்பதற்கு, இதற்கு முன்பாக ஒரு பொருளை அருளிச்செய்தார்; அதாவது இரண்டும் சேர்ந்து ஒரே பொருளைக் குறிப்பதாக உரைத்தார், இங்கு அவற்றை வெவ்வேறு சொற்களாகக் கொண்டு, அழகு மற்றும் லாவண்யம் என்பதாகப் பொருள் கூறுகிறார்; ஸுந்தரகாண்டம் (34-30) - ரூபவாந் ஸுபகஸ் ஸ்ரீமாந் கந்தர்ப்ப இவ மூர்த்திமாந் - மன்மதனைப் போன்று அழகான வடிவமும், கவரக் கூடிய காந்தியும் உடையவன் - என்றும், ஸ்ரீமத்பாகவதம் (10-32-2) - தாஸாமாவிரபூத் - மன்மதனுக்கும் மன்மதனாக உள்ள க்ருஷ்ணன் அந்த கோபிகைகளுக்கு நடுவில் தோன்றினான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப திருமேனி உள்ளது. – (நெடியாய்) - இதுவரை கூறப்பட்ட குணங்களுக்கு ஒரு எல்லை உள்ளது என்று கூறினாலும் கூட, அழகு மற்றும் லாவண்யம் ஆகியவற்றுக்கு எல்லை காண இயலாதபடி உள்ளது. ஆனால் மேலே கூறப்பட்ட ஆத்ம குணங்கள் இருக்குமோ என்பதற்கு விடை அருளிச் செய்கிறார், “மஹாந்” என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு தன்மையும், எல்லையும் ஆழமும் காண முடியாதபடி இருக்கும். (அடியேன் ஆருயிரே) - வடிவழகையும் குணங்களையும் காண்பித்து, உன்னை விட்டுப் பிரிந்தால் நான் உயிர் வாழமாட்டாதபடி செய்தவனே! “அடியேன் ஆருயிரே” என்பதுடன் “திருவேங்கடத்து எம்பெருமானே” என்பதையும் சேர்க்கவேண்டும். (திலதம் உலகுக்காய் நின்ற) - சில பெண்களுக்கு பூர்ணமான ஆபரணம் போன்று இந்தப் பூமிக்குத் திருவேங்கடத் திருமலை உள்ளது. (திருவேங்கடத்தெம்பெருமானே அடியேனாருயிரே) – திருவேங்கடத்தில் நின்றபடி, எனக்கு எனது கைங்கர்ய முறையை உணர்த்தி, உனக்கு அல்லாது வேறு எங்கும் செல்லாதபடிச் செய்தவனே! – இதுவரை திருவேங்கடமுடையானுடைய ஸ்வருபம் கூறினார்; இனி தனது ஸ்வரூபத்தைக் கூறுகிறார். (குலதொலடியேன்) - குலம் என்பது பழையதாக உள்ள அடியேன். இதன் மூலம் தனது உயர்வையும் தகுதியையும் கூறிக் கொள்ளவில்லை; மாறாக, தன்னுடைய “வேறு கதியில்லாத நிலை” என்பதைக் கூறுகிறார். ஆனால் “குலதொல் அடியேன்” என்பதன் மூலம் “வேறு கதி இன்மை” என்பது வெளிப்படுமோ என்பதற்கு விடை அளிக்கிறார்; ஒவ்வொருவர்க்கு மட்டுமே என்று உள்ளவர்கள், வேறு யாரையும் நோக்குவதில்லை அல்லவோ? (உன பாதம் கூடுமாறு கூறாயே) - எனது ஸ்வரூபமனாது உனக்கே அடிமையாக இருத்தல் என்றுள்ளபோது, அந்த ஸ்வரூபத்திற்கு ஏற்ற பேறாகிய கைங்கர்யத்தைப் பெறும்படியாகக் செய்தருளாய். (அடியேனுனபாதம் கூடுமாறு) - “உன்னைக் கூறுமாறு” என்று உரைக்காமல் “உன பாதம் கூறுமாறு” என்று ஏன் கூறினார்; அடியவனாகிய நான் “உன்னைக் கூட” என்னும்போது “உன் பாதம் கூட” என்று பொருள் அல்லவோ? “பெறுமாறு” என்று கூறாமல் “கூறுமாறு” என்று ஏன் கூறவேண்டும்? இவருடைய மோக்ஷம் உள்ள விதம் காரணமாக ஆகும். (கூறாயே) - உனக்கு ஒரு சொல் கூறினாலே போதுமானது; ஆனால் அந்த ஒரு சொல்லே எனது ஸ்வருபத்தை நான் அடையும்படிச் செய்யும். அவன் ஒரு வார்த்தை அருளிச்செய்தாலே இவர்க்கு அனைத்து துக்கங்களும் விலகும். அந்த வார்த்தை என்ன என்பதை கூறுகிறார்; கீதை (18-66) – மா சுச: - வருத்தம் கொள்ளாதே - என்பதாகும்.