திருவாய்மொழி - ஆறாம்பத்து (pravesam 1)
ஆறாம்பத்து
ப்ரவேசம் - பத்தாம் திருவாய்மொழி
உலகமுண்ட ப்ரவேசம்
– கீழில் திருவாய்மொழியில் ப்ராப்ய வேஷமிருக்கும்படி குறைவறச் சொன்னார்; இத்திருவாய்மொழியில் ப்ராபக வேஷம் குறைவறச் சொல்லுகிறார்; கீழில் அதில் உபாய ப்ரஸங்கமுண்டேயாகிலும், ப்ராப்ய ப்ரதாநமாகக் கடவது; இதில் உபேய ப்ரஸங்கம் உண்டேயாகிலும், ப்ராபக ப்ரதாநம். கீழில் திருவாய்மொழி திருமந்த்ரம்போலே, இத்திருவாய்மொழி சரம ஸ்லோகம் போலே. இரண்டும் ஒன்றிலேயுண்டிறே என்னில்? அது, சக்தி யோகத்தாலே வருமதிறே; அவஸ்த்தாந்தங்களைப் பற்றி வரும் இரண்டும் இரண்டாயே யிருக்கக் கடவதிறே. பெரிய ஆர்த்தியோடே பரமபதத்திலே கேட்கும்படி கூப்பிடச் செய்தேயும் ஸர்வரக்ஷகனானவன் வந்து முகங்காட்டாமையாலே மிகவும் அவஸந்நரானவர், ஸ்ரீய:பதியாய், அவாப்த ஸமஸ்தகாமனாய், உபயவிபூதி யுக்தனாய், ஸமஸ்த கல்யாணகுணாத்மகனாய், “வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயாஸார்த்தம் ஜகத்பதி, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்ப்பாகவதைஸ் ஸஹ” என்கிறபடியே ஸ்ரீவைகுண்டத்திலே நித்யஸூரிகளுக்குக் காட்சிக் கொடுத்துக் கொண்டிருக்கக் கடவ ஸர்வேச்வரன், “பலரும் நம்மையிழக்க, நாம் நெடுங்கை நீட்டாக இருக்கவொண்ணாது” என்று பார்த்தருளி ராமக்ருஷ்ணாத்யவதாரங்களைப் பண்ணி ஸமகாலத்திலுள்ளார்க்குத் தன் குணசேஷ்டிதங்களைக் காட்டி அநுபவிப்பித்தும், அக்காலத்திலும் பிற்பாடரான ஸம்ஸாரிகளுக்கும் இழக்கவேண்டாதபடி ருசிஜனகனாய்க் கொண்டு திருமலையிலே நாய்ச்சிமாருடனே கூட நின்றருளினபடியைக் கண்டு; அதிகாரி நியதி, கால நியதி, அங்க நியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றுமின்றிக்கே ஆச்ரயிக்கலாம்படி யிருக்கிற ஸௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே, பெரியபிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய அநந்யகதித்வத்தை விண்ணப்பஞ் செய்து சரணம் புக்குத் தம்முடைய அத்யவஸாயத்தை அறிவிக்கிறார். கீழேயும் பலவிடங்களிலே ப்ரபத்தி பண்ணினார்; அவ்விடங்களிலே “தர்மி புக்க விடத்தே நிரூபக தர்மங்களும் புகக் கடவது” என்கிற ந்யாயத்தாலே, லக்ஷ்மீ ஸம்பந்தஞ் சொன்னார்; இங்கு அது தன்னையே வாய்விடுகிறார். கீழில் ப்ரபத்திகள் திருமந்த்ரம் போலே, இது த்வயம் போலே. திருமந்த்ரத்திலும் லக்ஷ்மீ ஸம்பந்தத்துக்கு வாசகமான பதங்களுண்டாயிருக்கச் செய்தே, முக்த கண்டமாகச் சொல்லிற்று த்வயத்திலேயிறே; அது போலே இத்திருவாய்மொழி. – “தாவதார்த்திஸ்ததா வாஞ்சா தாவந் மோஹஸ் ததா ஸுகம்”; (தாவதார்த்தி) “இழந்தது பெறவேணும்” என்னுமதுவும் அவ்வளவே. (ததாவாஞ்சா) அப்ராப்த விஷயத்தில் பண்ணும் சாபலமும் அவ்வளவே. (தாவந் மோஹா) தேஹத்தையும் ஆத்மாவையும் ஏகீக்ருத்ய புத்தி பண்ணுகை. (ததா ஸுகம்) “ஏஷஹ்யேவாநந்தயாதி” என்கிறதுக்கு விரோதமாய் வரும் ஸுகங்களும் அவ்வளவே. “யாவந்நயாதி சரணம் த்வாமசேஷாகநாசநம்” ஐச்வர்யம் ஆத்மப்ராப்தி பகவத்ப்ராப்தி விரோதி இவையெல்லா முன்னைக் கிட்டுமளவேயிறே நிற்பதென்கிறது. இப்படியே தம்முடைய ஸகல விரோதிகளும் போய்த் தம்முடைய ஸகலாபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறையில்லையென்று, ஸதா ஸந்நிஹிதனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார். – இனித் தான், சரணாகதி பலப்ரதையாமிடத்தில் சரண்யன் பக்கலிலே பண்ணவும் வேணும்; தான் அதிகாரியாகவும் வேணும். வ்யதிரிக்த விஷயங்களிலே பண்ணுமிடத்தில் அதுதானே ஹநந ஹேதுவாகக் காணாநின்றோமிறே. இங்ஙனே யிருக்கச் செய்தேயும் அவ்வோவிடங்களிலேயும் பலிக்கிற இது, இவ்விஷயத்தில் பலியா நின்றதென்னுமிடம் கிம்புநர் ந்யாய ஸித்தம். இனித் தான் அதிகாரியாமிடத்தில், மெய்யே அநந்யகதியாகவும் வேணும்; சரணம் புகா, பலித்ததில்லையென்னா, “அஸமர்த்தம் விஜாநாதி” என்பாராகாது. – “மயர்வற மதிநலமருளினன்” என்னா, அநந்தரத்திலே மடலெடுத்துக் கொண்டு புறப்படுவார் வேணும். பண்ணின ப்ரபத்திக்கு பலந் தாழ்த்ததென்னா வேறே போக்கடி யுடையார்க்குக் காரியமாகாதிறே. “ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:” என்று அவன் தாழ்த்ததுவே ஹேதுவாக, ஜல தத்வத்தை யழித்துப் பொகட்டு மற்றை நாலையுங் கொண்டு கார்யங் கொள்ளுகிறேன் என்றறிறே. – “க்ஷமயாஹி ஸமாயுக்தம்” – “ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றத்தை ஸ்வீகரிக்கை யாவதென்?” என்று ராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்; இங்கே வருணனை வழிவேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டாநின்றார்; இது இருந்தபடியென்?” என்றாற் போலேயிருந்தார்கள் முதலிகள். – “இவன் வந்திலன்” என்று நாம் சீறவொண்ணாதபடி, வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்கட்டினவோபாதி, க்ஷமை வந்து நம்மைக் காற்கட்டா நின்றதென்றார்: (மாம்) “ஸுப்தமத்த குபிதாநாம் ஸ்வபாவ ஜ்ஞாநம் த்ருஷ்டம்” என்று, கோபம் விளைந்த வநந்தரம் ஐந்மத்தை யுணர்ந்தார். “பிறர் கை பார்த்திருக்கும் குடிப் பிறப்பன்று” என்றிருக்கிறதில்லை; நம்மை “ஐயர் மகன்” என்று அறிகிறதில்லை. (ஸுப்தேத்யாதி) தந்தாம் ஸ்வபாவத்தை மறைத்து வர்த்தித்தவர்கள், ஸ்வப்நாதி தசையிலே ஸ்வஸ்வபாவாநுகுணம் பாஷிப்பர்களிறே; அப்படியிவரும் க்ஷத்ரியத்வத்தை யுணர்ந்தார். (அயம்) மஹோததி யென்கிற பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறதில்லை. (மகராலய:) ஒரு அயோத்யாதிபதி கோசலாதிபதிகளோடொக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது; தன்னை மீன்படு குட்டமாக அறிகிறதில்லை. “அஸமர்த்தம் விஜாநாதி” செவ்வை கெடப் பறிமாறினாரையும் ஒக்க விட்டுக் காரியங் கொள்ளவல்லோமென்று அறிகிறதில்லை. இவ்வளவில் செய்ய வடுப்பதென்? என்னில் (திக் க்ஷமாம்) இப்போது க்ஷமையை வேண்டோம். விநியோகமுள்ளவிடத்தேயன்றோ கார்யங் கொள்வது? கோபத்தோபாதி, கார்யகாலத்தே யழைத்துக் காரியங் கொள்ளப் பார்த்தோம். அதுவென்? இக்ஷ்வாகு வம்ச்யராயிருப்பார்க்கு க்ஷமை கொண்டு கார்யங் கொள்ள வேண்டாவோ? என்னில்; (ஈத்ருசே ஜநே) அத்தால் பெற்றதென்? அது இங்கு ஜீவிக்கிறதில்லை. இதுக்கு இங்குள்ளாருடைய ஸம்பந்தமே பலியா நின்றதே. ஒன்பது பாட்டாலும் சரண்யன்படி சொல்லி, பத்தாம் பாட்டிலே சரணம் புகுகிறார்.
– இந்தத் திருவாய்மொழியில் சரணம் புகுகிறார் என்னும் விஷயம் கூறப்படுவதால், சரணாகதனாகிய ஸர்வேச்வரனுக்குப் பக்தனை காட்டிலும் உள்ள ஏற்றம் என்னவென்றால், அடைய வேண்டிய இலக்கு மற்றும் அடைய வைக்கும் உபாயம் ஆகிய இரண்டும் அவனே என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திருவாய்மொழியிலும், கடந்த திருவாய்மொழியிலும் ஸர்வேச்வரனுடைய இத்தகைய இரண்டு தன்மைகளைக் கூறுகிறார் என்று கருத்து. கடந்த திருவாய்மொழியில் ப்ராப்யத்தின் தன்மை, அதாவது அடைய வேண்டிய இலக்கின் தன்மை, அவனுக்கு உள்ளதைக் குறைவு இன்றி உரைத்தார்; இதனை “கோலத் திருமாமகளோடு உன்னை” என்றும், “தடந்தாமரைகட்கே” என்றும் கூறியதைக் கொண்டு காணலாம். இந்தத் திருவாய்மொழியில் ப்ராபகத்தன்மை, அதாவது அடைய வைக்கும் உபாயம், அவனுக்கு உள்ளதைக் குறைவறக் கூறுகிறார்; இதனை “அகலகில்லேன்” என்பதில் காணலாம். கடந்த திருவாய்மொழியில் உபாயம் குறித்து அதிகம் கூறப்பட்டாலும், அடையவேண்டிய இலக்கே முதன்மையாகக் கொண்டு கூறப்பட்டது. ஆனால் கடந்த திருவாய்மொழியில் “காப்பேன்” என்றுள்ள உபாயத் தன்மையும், இந்தத் திருவாய்மொழியில் “நாற்றோளமுதே” என்றுள்ள உபேயத் தன்மையும் கூறப்படவில்லையோ என்பதற்கு விடை அளிக்கிறார்; இரண்டும் இரண்டிலும் இருந்தாலும், ஒவ்வொன்றில் ஒவ்வொன்று முதன்மையக உள்ளதற்கு உதாரணம் கூறுகிறார்; கடந்த திருவாய்மொழியானது திருமந்திரம் போன்றும், இந்தத் திருவாய்மொழியானது சரமச்லோகம் போன்றும் உள்ளன; திருமந்திரமானது இலக்கைக் கூறுவதில் நோக்கம் கொண்டது, சரம ச்லோகமானது உபாயத்தில் நோக்கம் கொண்டதாகும். – ஆனால், பேறு மற்றும் உபாயம் ஆகிய இரண்டுமே ஒன்றிலேயே உள்ளது அல்லவோ என்று கேட்கலாம்; அதாவது, பேறு மற்றும் உபாயம் ஆகிய இரண்டுமே நித்யம் என்பதால், பால் மருந்தாவது போன்று, பேறாக உள்ள நிலையிலும் உபாயமாக இருத்தல் என்ற தன்மை ஈச்வரனிடம் உள்ளது என்னும்போது, “கடந்த திருவாய்மொழியானது பேறு குறித்தும், இந்தத் திருவாய்மொழியானது உபாயம் குறித்தும் உள்ளது” என்று கூறலாமோ என்று கேட்கலாம்; இதற்கு விடை தருகிறார். அது சக்தியின் சேர்க்கையால் வரும்; அதாவது பேறாக உள்ள வஸ்துவே, உபாயமாகவும் இருக்கவல்ல சக்தி காரணமாக, இந்த இரண்டு தன்மைகளும் ஒரே வஸ்துவில் உள்ளபோதிலும், சேதநன் பற்றும் நிலை மற்றும் பேற்றை அடைந்து அனுபவிக்கும் நிலை என்பதான வேறுபாடுகள் காரணமாக, பேறு மற்றும் உபாயம் ஆகிய இரண்டும் அந்தந்த முறையில் இருக்கவேண்டும்; எனவே இவ்விதம் பிரிப்பதால் எந்தக் குற்றமும் இல்லை. – பெரிய துன்பத்துடன், பரமபதம் முடிய கேட்கும் அளவிற்கு இவர் கூப்பிட்டபோதிலும், அனைத்தையும் காப்பாற்றும் அவன், இவரிடம் வந்து தனது திருமுகத்தைக் காண்பிக்காத காரணத்தால் மிகவும் தளர்ந்தார். ஆகவே இவர் செய்தது என்ன? இதனை அடுத்து விளக்குகிறார். மஹாலக்ஷ்மியின் நாதனாகவும்; தனது அனைத்து விருப்பங்களும் எப்போதும் நிறைவேறப் பெற்றவனாகவும்; இரண்டு விபூதிகளையும் கொண்டவனாகவும்; அனைத்துவிதமான கல்யாண குணங்களின் இருப்பிடமாகவும்; “வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயாஸார்த்தம் ஜகத்பதி, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்ப்பாகவதைஸ் ஸஹ - சிந்தனைக்கும் எட்டாத ஸ்வரூபம் கொண்டவனும், லோகங்களின் நாயகனும் ஆகிய மஹாவிஷ்ணு, தனது பிராட்டியாரோடும், பக்தர்கள் பாகவதர்கள் ஆகியோருடனும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளான்” என்று கூறுவதற்கு ஏற்ப ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளுக்குக்குக் காட்சி கொடுத்தபடி இருக்கக்கடவனும் ஆகிய ஸர்வேச்வரன் செய்தது என்ன? “பலரும் நம்மை இழந்தபடி உள்ளபோது, நாம் அவர்களுக்கு எட்டாத தூரத்தில் இருத்தல் கூடாது” என்று தீரமானித்து, இராமன் மற்றும் க்ருஷ்ணன் போன்ற பல அவதாரங்களைச் செய்தருளி, தன்னுடன் அந்தந்த அவதார காலங்களில் வாழ்ந்தவர்களுக்கு தனது குணங்களையும் லீலைகளையும் வெளிப்படுத்தி, அவர்களை அனுபவிக்கச் செய்தான். அந்தந்த காலகட்டத்தின் பின்னே வந்தவர்களாகிய ஸம்ஸாரிகள், தனது அத்தகைய அனுபவங்களை இழக்கக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு ருசி ஏற்படுத்த, திருமலையில் பிராட்டியாருடன் நின்றான். தசரதன், வஸுதேவன் போன்றவர்கள் மட்டுமே அனுபவிக்கலாம் என்ற அதிகாரி கட்டுப்பாடுகள்; க்ருதயுகம் போன்ற கால கட்டுப்பாடுகள்; நீராடுதல் போன்ற அங்க கட்டுபாடுகள் ஆகிய நிர்ப்பந்தங்கள் ஏதும் இல்லாமல், எளிதில் அடையலாம்படி நிற்கும் எளிமையைக் கண்டார். திருவேங்கடமுடையானின் திருவடிகளில், பெரியபிராட்டியின் முன்னிலையில், தனது “வேறு கதியற்ற நிலை” என்பதை விண்ணப்பம் செய்து, அவனிடம் சரணம் புகுந்து, தனது எண்ணத்தை உணர்த்துகிறார். – முன்பு நான்கு திருவாய்மொழிகளில் நான்கு முறை சரணம் புகுந்தார்; அவற்றுக்கும், இங்கு புகுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைக் கூறுகிறார்; முன்பு பல இடங்களில் ப்ரபத்தி செய்தார்; அந்தந்த இடங்களில், “குணத்தைக் கொண்ட ஒருவன் செல்கின்ற இடங்களில், அவனை நிரூபிக்கவல்ல குணங்களும் உடன் செல்லும்” என்னும் ந்யாயத்தால், மஹாலக்ஷ்மி ஸம்பந்தம் கூறினார்; இங்கு அதனையே வெளிப்படையாகக் கூறுகிறார். இதற்கு உதாரணம் கூறுகிறார்; முன்பு செய்த சரணாகதிகள் அனைத்தும் திருமந்திரம் போன்றும், இங்கு செய்யும் ப்ரபத்தியானது த்வயம் போன்றும் ஆகும். இதனை மேலும் விளக்குகிறார்; திருமந்திரத்திலும் மஹாலக்ஷ்மியின் ஸம்பந்தத்தினை உணர்த்தவல்ல ஆற்றல் கொண்ட சொற்கள் உள்ளபோதிலும், அத்தகைய ஸம்பந்தத்தை வெளிப்படையாக த்வயம் அல்லவோ கூறுகிறது? இங்கு “வாசகமான சப்தங்கள்” என்று பன்மையில் ஏன் கூறினார் என்றால், திருமந்திரத்தில் உள்ள “உகார, நார” ஆகியவற்றைக் குறித்து ஆகும்; இதனைப் போன்றே இந்தத் திருவாய்மொழியும் ஆகும். – “ப்ரபத்தியானது மோக்ஷத்தைத் தரவல்லதோ” என்னும் கேள்விக்கு, “மோக்ஷத்தை மட்டுமே தரவல்லது என்பது கிடையாது, மற்ற பலன்களை அடைவதற்கும் உபாயமாக உள்ளது” என்பதை ப்ரமாணங்களுடன் கூறுகிறார்; ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் உள்ள “தாவத் ஆர்த்தி: ததாவாஞ்ச தாவந்மோஹ: ததா ஸுகம் யாவத் நயாதி சரணம் த்வாம் அசேஷாக நாசநம்” என்ற ச்லோகத்தை வ்யாக்யானம் செய்கிறார்; இந்த ச்லோகம் பகவானை நோக்கி நான்முகன், நான்குவிதமான உபாஸகர்கள் குறித்துக் கூறுவதாக உள்ளது. (தாவத் ஆர்த்தி) - “இழந்ததைப் பெறவேண்டும்” என்பது, அவனைப் பற்றும் காலம் முடிய மட்டுமே ஆகும். “இழந்ததைப் பெறவேணும்” என்பதன் மூலம், ஆர்த்தன் கூறப்பட்டான்; அதாவது, இழந்த செல்வத்தை மீண்டும் அடையவேண்டும் என்று விரும்பும் “ஐச்வர்ய காமன்” கூறப்பட்டான். (ததாவாஞ்சா) - இதற்கு முன்பு கிட்டாத செல்வம் போன்றவற்றை விரும்புவதும், அவனைப் பற்றும் காலம் முடிய மட்டும் ஆகும். “வாஞ்சா” என்பது செல்வத்தை விரும்பும் ஒருவனுடைய ஆசையைக் கூறுவதால், “ததாவாஞ்சா” என்பது, புதியதாக செல்வம் வேண்டுபவனைக் கூறுகிறது; “அப்ராப்த விஷயாம்” என்பது, இதுவரை பார்த்திராத செல்வம் என்று பொருள். (தாவந் மோஹா) - சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்று என்பதாக எண்ணுதல் என்பதும், அவனை அடையும் காலம் முடிய மட்டுமே ஆகும். “தாவந் மோஹ” என்பது ஆத்மாவை அடையவேண்டும் என்ற விருப்பம் உள்ளவனைக் கூறுகிறது. “மோஹம்” என்றால், ஆத்மாவை அடையவேண்டும் என்று எண்ணுபவனுக்கு, அவனுடைய ஆத்ம அனுபவத்திற்கு விரோதியாக உள்ள “சரீரமே ஆத்மா” என்று எண்ணும் அறியாமை ஆகும்; ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடைந்தால் அறியாமை விலகுவதால், அதுவரை மட்டுமே இவனுக்கு இத்தகைய அறியாமை உள்ளது என்று கருத்து. (ததா ஸுகம்) – “ஏஷ ஹி ஏவ ஆநந்தயாதி – இப்படி அல்லவோ இவனுக்கு ஆனந்தம் தருகிறான்” என்பதற்கு ஏற்ப உள்ள ஆனந்தத்திற்கு விரோதமாக உள்ள ஸுகங்கள்; இவையும் அவனைப் பற்றும் காலம் முடிய மட்டுமே ஆகும்; இதன் மூலம் ஞானி கூறப்பட்டான்; “ஸுகம்” என்பது ஆத்ம அனுபவம் மற்றும் செல்வ ஸுகங்கள் ஆகும்; இவை, பகவானை அடையவேண்டும் என்னும் ஆசை கொண்டவனுக்குத் தடைகள் ஆகும்; அவனை அண்டியவுடன் இவை விலகுவதால், அவனை அண்டும் காலம் முடிய மட்டுமே இந்தச் சுகங்களும் உள்ளன என்று கருத்து. (யாவந்நயாதி சரணம் த்வாம் அசேஷாகநாசநம்) - செல்வம், ஆத்ம அனுபவம், பகவானை அடைவதில் உள்ள தடை போன்ற பலவும் உன்னை அடையும் காலம் முடிய மட்டுமே உள்ளது. இதுவரை கூறப்பட்ட அனைத்தையும் தொகுத்து, “அசேஷாக நாசநம்” என்பதை “ஐச்வர்யம்” என்று தொடங்கும் வாக்கியத்தால் கூறுகிறார். மேலும் “அர்த்தி:, வாஞ்சா” ஆகிய இரண்டிலும் அதிகாரிகள் வேறுபாடு உள்ளது என்றாலும், பலன் ஒன்றாக உள்ளதன் காரணமாக ஒன்றாகச் சேர்த்து “ஐச்வர்யம்” என்றார். “விரோதி” என்ற பதத்தை “ஐச்வர்ய விரோதி, ஆத்ம ப்ராப்தி விரோதி, பகவத் ப்ராப்தி விரோதி” ஆகிய அனைத்திலும் சேர்க்கவும். இப்படியாகத் தனது அனைத்து விரோதிகளும் நீங்கி, தனது விருப்பங்கள் அனைத்தும் கிடைப்பதற்கு எந்த ஒரு குறையும் இல்லை என்று, அனைவருக்கும் எப்போதும் அருகில் உள்ளவனாகிய திருவேங்கடமுடையானுடைய திருவடிகளில் சரணம் புகுகிறார். – “ உலகம் உண்ட பெருவாயா” போன்றவை முதல் சரணம் புகத்தக்க ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தையும், “குலதொலடியேன்” என்பது போன்றவைகளால் அதிகாரி ஸ்வரூபத்தையும் கூறி சரணம் புகுகிறார். சரணாகதியின் மூலம் பலன் அடைவதற்கு இந்த இரண்டும் அவசியமாகிறது என்பதால், இவற்றை “இனித்தான்” என்று தொடங்கி கூறுகிறார். சரணாகதியானது பலனை அளிக்கும்போது, சரணம் என்று புகப்பட்ட ஸர்வேச்வரன் விஷயத்திலும், அதிகாரி விஷயத்திலும் வேண்டுவது உள்ளன. “சரண்யன்” என்பது குணம் நிறைந்தவணைக் குறிப்பதாகிறது. குணங்கள் இல்லாதவனிடம் சரணாகதி செய்தால் பலனில் தாழ்வு ஏற்படுவதுடன் மட்டும் அல்லாமல், கெடுதலும் உண்டாகும். நல்ல குணம் இல்லாதவர்களிடம் சரணம் புகுதல் என்பது கொல்வதற்குக் காரணமாகவும் அமைகிறது; இதனை, பரசுராமனிடம் சரணம் புகுந்த தசரதனிடம் காணலாம். ஆனால் பகவானைக் காட்டிலும் வேறுபட்ட சிபிச்சக்ரவர்த்தி போன்றவர்களிடம் சரணம் புகுந்த புறா போன்று சரணம் புகுந்தவர்களுக்கு, அந்தச் சரணாகதி பலன் தந்தது அல்லவோ என்பதற்கு விடை அளிக்கிறார்; அதாவது அந்தந்த இடங்களில் பலிப்பதான இந்தச் சரணாகதியானது, இந்த வஸ்து விஷயத்தில் பலிப்பது என்பது “மீண்டும் கூற வேண்டுமோ” என்ற ந்யாயத்தின் அடிப்படையில் அமைகிறது. ஆக சரணாகதிக்கு அதிகாரியாக வேண்டும் என்றால், உண்மையாகவே “மற்ற கதி இல்லை” என்று உணர்ந்து நிற்கவேண்டும். மற்ற கதி உள்ளவனுக்கு சரணாகதி பலன் தராது என்பதைப் ப்ரமாணம் மூலம் கூறுகிறார்; சரணம் புகும்போது பலிக்கவில்லை என்றால், யுத்தகாண்டம் (21-20) – அஸமர்த்தம் விஜாநாதி – பொறுமை உள்ள என்னை இந்த ஸமுத்ரமானது சக்தி இல்லாதவன் என்று எண்ணுகிறது - என்று எண்ணக்கூடாது. – அப்படியானால், யார் அதிகாரி என்றால், ஆழ்வார் போன்று உள்ளவர்களே ஆவர் என்கிறார்; அவன் “மயர்வற மதிநலம் அருளினான்” என்பதற்கு ஏற்ப, அவனுடைய க்ருபை என்பதையே சரணாகதிக்கு உபாயமாக உறுதியாக்க வேண்டும். அது உடனே பலிக்கவில்லை என்றால், தனது சொந்த முயற்சி ஏதும் செய்யாமல், “மடல் எடுக்கிறேன்” என்று அச்சத்தை உண்டாக்கி, அதன் மூலம் அவனால் கார்யம் செய்து கொள்ள வேண்டும். “மடல் எடுத்தல்” என்பது ஆத்ம ஸ்வருபத்திற்கு விரோதம் என்றாலும், அவன் மூலமாகவே தனது கார்யத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவும்படி உள்ளதால், “வேறு கதி இல்லை” என்ற நிலைக்கு, அதனால் தோஷம் ஏற்படாது என்பதைத் திருவுள்ளத்தில் கொண்டவராக “மடல் எடுத்துக் கொண்டு புறப்படுவார் வேணும்” என்றார். – யுத்தகாண்டம் (21-20) – அஸமர்த்தம் விஜாநாதி – சக்தி இல்லாதவன் என்று எண்ணுகிறது – என்று கூறுவதற்கு ஏற்ப அவனை எண்ணுபவர்கள் அதிகாரிகள் என்னும்போது உண்டாகும் தாழ்வு என்ன என்பதற்கு விடை தருகிறார்; செய்த ப்ரபத்தியானது பலனைத் தாமதமாக அளிக்கும்போது, வேறு கதி உள்ளவர்களுக்கு, கார்யம் செய்ததாக அமையாது அல்லவோ? வேறு கதி உள்ளவர்கள் யார் என்பதைக் கூறுகிறார்; யுத்தகாண்டம் (21-22) - ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா: – ஸமுத்ரத்தை வற்றும்படிச் செய்கிறேன்; இந்த வானர வீரர்கள் கால்களால் நடந்தே இதனைக் கடப்பார்கள் - என்று, ஸமுத்ரராஜன் காலம் தாழ்த்தியதையே காரணமாகக் கொண்டு ஸமுத்ரராஜனை அழித்து, வேறு நான்கு பொருள்கள் மூலம் தனது செயலை நிறைவேற்றிக் கொள்கிறேன் என்றான் அல்லவோ? – அடுத்து யுத்தகாண்டம் (21-21) - க்ஷமயாஹி ஸமாயுக்தம் - என்ற ச்லோகத்தில் உள்ள “திக்க்ஷமாம்” என்ற பதத்தில் நோக்கம் வைத்து அருளிச்செய்கிறார்; இதனை “ஒரு பெண் பெண்டாட்டி” என்று தொடங்கி உரைக்கிறார். “ஒரு பெண், அதாவது தசரதருடைய மனைவி, தனக்கு வேண்டும் என்னும் ராஜ்யத்தை நாம் விரும்புவது ஏன்?” என்று எண்ணியவனாக, அந்த ராஜ்யத்தைத் துறந்து, பொறுமையுடன் சென்றான்; அதாவது, கைகேயியிடம் பொறுமை காண்பித்தான். அந்தப் பொறுமையை இங்கும் ஸமுத்ரராஜனிடம் காண்பித்திருக்கவேண்டாமோ? இங்கு ஸமுத்ரராஜனை வழி விடும்படி விண்ணப்பித்தும், அவன் முகம் காட்டவில்லை என்பதால் சீற்றம் கொண்டு, வில்லின் காலை மிதித்தபடி, கைகளால் வில்லை வளைத்தான். இது ஏன் என்று வானரர்கள் திகைத்தனர். ஆனால் இங்கு “கை” என்பது வில்லின் சரட்டையைக் கூறுமோ என்றால், “கை புடை கோதை கைகட்டியாகும்” என்று நிகண்டு கூறுவதால் ஆகும்; அதாவது கை, புடை, கோதை என்பவை வில்லின் சரட்டு ஆகும். அடுத்து வானரவீரர்கள், “இராமன் ஏன் கைகேயியிடம் ஒருவிதமாகவும் ஸமுத்ரராஜனிடம் வேறுவிதமாகவும் நடக்கிறார்?”, என்று கொண்ட ஐயத்திற்கு விடை அளிக்கிறார். அதாவது ஸமுத்திரமானது இராமனை ஸாமர்த்தியம் இல்லாதவன் என்று எண்ணியது போன்று கைகேயி எண்ணவில்லை; அபலை என்பதால் ராஜ்யத்தில் ஆசை கொண்டாள்; ஆகவே பொறுமையுடன் விட்டு வந்தான்; ஆனால் ஸமுத்ரமானது இராமனை ஸாமர்த்யம் அற்றவனாக எண்ணியதால் பொறுமை இல்லை என்று கருத்து. – “ஆனால் இராமன் ஏன் மூன்று நாள்கள், சரணம் புகுந்து, ஸமுத்ரக்கரையில் கண் வளர்ந்து, அதன் பின்னர் தனது வலிமையை காண்பிக்கவேண்டும்? முதலிலேயே காண்பித்திருக்கலாம் அல்லவோ?”, என்று வானரர்கள் எண்ணுவதைத் தனது திருவுள்ளத்தில் கொண்டவராக விடை அளிக்கிறார்; இராமன் தனது திருவுள்ளத்தில், “இந்த ஸமுத்ரராஜன் வரவில்லை என்று சீற்றம் கொண்டு புறப்படாதபடி, ஸுக்ரீவனைக் கொல்ல வாலி புறப்பட்டதுபோது அவனைத் தடுத்த தாரை போன்று, நம்மை நமது பொறுமை என்ற குணம் தடுத்தது”, என்று எண்ணுகிறான்; இதற்கு யுத்தகாண்டம் (21-20) என்ற ச்லோகத்தில் உள்ள “க்ஷமயாஹி” என்ற பதம் காணவேண்டும். அடுத்து அந்த ச்லோகத்தை வ்யாக்யானம் செய்கிறார். (மாம்) – “ஸுப்தமத்த குபிதாநாம் ஸ்வபாவ ஜ்ஞாநம் த்ருஷ்டம் - உறங்கியவன், மதம் கொண்டவன், கோபம் கொண்டவன் ஆகியோருக்கு அவர்களுடைய இயல்பான தன்மை வெளிப்படும்” என்பதைக் கருத்தில் கொண்டு, தனக்கு கோபம் பிறந்ததும் தன்னுடைய குலம் பிறப்பை இராமன் எண்ணினான். இராமனுடைய பிறப்பானது, “மற்றவர்கள் உதவியை எதிர்நோக்கும் குடியில் பிறப்பு அன்று” என்று ஸமுத்ரராஜன் அறியவில்லை; (ஸுப்தேத்யாதி) - தங்களுடைய இயல்பான தன்மைகளை மறைத்து வைப்பவர்களும் கூட, கனவு ஏற்படும் நிலையில் அந்த இயல்புகளை வெளிப்படுத்துவார்கள்; அது போன்றே இங்கு இராமனும் க்ஷத்ரிய தர்மத்தை உணர்ந்தான். (அயம்) – மிகப் பெரிய ஸமுத்திரம் என்று, இன்டஹ் ஸமுத்ரராஜன் தனது பெருமையை மட்டுமே எண்ணியபடி உள்ளான். தன்னை எண்ணி கோபம் கொண்ட நம்மை இவன் சிந்திக்கவில்லை. (மகராலய:) - இந்த ஸமுத்ரராஜன் தன்னை ஒரு அயோத்தியின் அரசன், கோசலத்தின் அரசன் ஆகியோருடன் ஒப்பிட்டு எண்ணிக் கொள்கிறான். தன்னை மீன்கள் வாழும் ஒரு குட்டையாக எண்ணவில்லை. (அஸமர்த்தம் விஜாநாதி) - தவறான வழியில் நடந்தவர்களையும் கூட நாம் சீர்திருத்தி, அவர்கள் மூலமாக நற்செயல் செய்யவல்லவர் என்று நம்மை இந்த ஸமுத்ரராஜன் அறியவில்லை. இவ்விதம் பலவாறு சிந்தித்த இராமன், “இனி செய்ய வேண்டியது என்ன? (திக் க்ஷமாம்) - இனி பொறுமையை நாம் கைக்கொள்ளவேண்டாம். தன்னையே தருபவர்களிடம் அல்லவோ உதவிகள் கேட்கலாம். கோபத்தைப் போன்று, தகுந்த காலத்தில் அழைத்து உதவி கேட்கலாம் என்று நாம் இருந்தோம்”, என்று எண்ணினான். இதற்கு ஒரு சிலர், “அது என்ன? இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த ஒருவருக்குப் பொறுமையுடன் நின்று கார்யம் செய்து கொள்ளவேண்டாமோ?”, என்றான். இதற்கு இராமன், “(ஈத்ருசே ஜநே) - அதனால் நாம் பெற்ற பலன் என்ன? அத்தகைய பொறுமை இங்கு பிழைக்கவில்லை. பொறுமைக்கு இங்கு உள்ள ஸமுத்ரம், இராவணன் ஆகியோருடைய ஸம்பந்தம் பலன் அளிக்காமல் உள்ளது”, என்றான். இப்படியாக ஒன்பது பாசுரம் மூலம் சரணம் புகத் தக்கவனுடைய விதங்கள் கூறி, பத்தாம் பாட்டில் சரணம் அடைகிறார்.