திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 11)
ஆறாம்பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே
– கேட்பதன் மூலம் தெளிவடைந்து, மனதால் நினைத்து எப்போதும் எண்ணியபடி உள்ள த்யானத்தைச் செய்தாலும், அளவிட இயலாத அனைத்தும் பொருந்தியவனும், மஹாலக்ஷ்மியின் நாதனும் ஆகிய அவனுக்கு மட்டுமே அடிமை என்றும், மற்ற யாருக்கும் அடிமை என இல்லாதபடி உள்ளவர்கள் என்றும் இருப்பவர்களுக்கு அடிமை என்று கூறலாம்படி உள்ள நம்மாழ்வார், பகவத் மேன்மை மற்றும் ஆத்ம மேன்மை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை விரிவாக அருளிச்செய்த இந்தப் பத்துப் பாசுரங்களைக் கற்க வல்லவர்களை, அனைத்தையும் காப்பவனுக்கு ஏற்ற தொண்டர்களாக, இந்தப் பாசுரங்களே செய்யும்.
– நிகமத்தில் இப்பத்தும் கற்றவர்கள் ஸர்வேச்வரனுக்கு அந்தரங்க கிங்கரராவரென்கிறார்.
– “இந்தப் பத்துப் பாசுரங்களையும் கற்பவர்கள், ஸர்வேச்வரனுக்கு அந்தரங்க தொண்டர்கள் ஆவார்கள்”, என்கிறார்.
(தெரிதலித்யாதி) ச்ரண மநந நிதித்யாஸநங்களாலே பரிச்சேதிக்க முடியாத ஸ்ரீய:பதிக்கு. “நயமாத்மா ப்ரவசநேந” இத்யாதி; கேவல ச்ரவணாதிகளுக்கு அவிஷயமா யிருக்கும்; அல்லாதபோது இவைதான் அநுபவமாயந்வயிக்குமிறே. (திருமாலுக்கு) இதுக்கு அடி ஸ்ரீய:பதியாகை; அதிறே ஸர்வாதிக வஸ்துவுக்கு அடையாளம். (திருமாலுக்குரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்) ஸ்ரீய:பதியான ஸர்வேச்வரனுக்கு அநந்யார்ஹ சேஷபூதரான ஆழ்வார். ஸம்ஸார ஸ்வபாவாநுஸந்தாநம் பண்ணின கொடுமையாலும், பகவத் விஷயத்திலே அவகாஹித்த கனத்தாலும், பெருவிடாயன் மடுவிலே விழுமாபோலே சேஷத்வத்தினுடைய எல்லையிலே விழுகிறார். இது இவருடைய அஹம் புத்தியிருக்கிறபடி. தேஹாத்மாபிமாநியானபோது தேஹத்திலே அஹம் புத்தியைப் பண்ணும்; “தேஹாத் வ்யதிரிக்தம் ஒன்றுண்டு” என்று அறிந்தபோது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணும்; தன்னை பகவச்சேஷபூதனாக அநுஸந்தித்தபோது ப்ரகார மாத்ரத்திலே நின்று ஐச்வர்யாதிகளைக் கொண்டுபோம், “சேஷத்வமே புருஷார்த்தம்” என்று அறிந்தபோது தன்னை ததீய சேஷத்வ பர்யந்தமாக அநுஸந்திக்கக் கடவன். “பயிலுஞ் சுடரொளி”க்குப் பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயாயிற்று, இவருடைய அஹமர்த்தம் இருப்பது. இவ்வளவு வருகையிறே அநந்யார்ஹ சேஷத்வமாவது. (தெரியச் சொன்ன இத்யாதி) பகவத் வைலக்ஷண்யத்தையும், ஸம்ஸாரத்தினுடைய தோஷத்தையும் விசதமாகச் சொன்ன பத்தும். (உரிய தொண்டராக்கும் உலகமுண்டாற்கே) ஸர்வ ரக்ஷகனான ஸர்வேச்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத்திருவாய்மொழி. (உரிய தொண்டராக்கும்) ஸம்ஸாரம் நன்றுமாய் பகவத் விஷயம் தீதானாலும் அத்தை விடமாட்டாதவர்கள்.
– (தெரிதல் இத்யாதி) - கேட்டல், நினைத்தல், த்யானித்தல் ஆகியவை மூலம் அளவிட இயலாதபடி உள்ள மஹாலக்ஷ்மியின் நாயகனுக்கு. இவ்விதம் அளவிட இயலாதபடி உள்ளதற்கான ப்ரமாணம் முண்டக உபநிஷத்தில் - நயமாத்மா ப்ரவசநேந - இந்தப் பரமாத்மா மனனம், த்யானம், கேள்வி மூலம் அறியத்தக்கவன் அல்லன் - என்பதாகும். இவ்விதம் கூறினால், “காணத்தக்கவன், கேட்கத்தக்கவன், த்யானிக்கத் தக்கவன்” என்று கூறும் ச்ருதி வாக்கியங்களுடன் முரண்பாடு உண்டாகாதோ என்பதற்கு சமாதானம் கூறுகிறார்; ப்ரீதி அல்லாத கேள்வி ரூபமாக ஆராயும்போது அவற்றுக்கு அப்பாற்பட்டவனாக இருப்பான்; இது போன்று அல்லாமல், ப்ரீதியுடன் கூடிய கேள்வி ரூபமாக ஆராய்ந்தபோது இவை மூலம் அனுபவிக்கத்தக்கவனாக இருப்பான். – (திருமாலுக்கு) - இவ்விதம் இவன் உள்ளதன் காரணம், மஹாலக்ஷ்மியின் நாதன் என்பதால் ஆகும். ஆனால் கேள்வி போன்றவற்றால் அளவிட இயலாதபடி உள்ள நிலைக்கு, “மஹாலக்ஷ்மியின் நாதன்” என்பது காரணமாகுமோ என்றால், அது அல்லவோ அனைத்தையும் ஆள்கின்ற வஸ்துவின் அடையாளம் ஆகிறது! (திருமாலுக்குரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்) - மஹாலக்ஷ்மியின் நாதனான உள்ள ஸர்வேச்வரனுக்கு மட்டுமே, வேறு யாருக்கும் இல்லாமல், தொண்டராக உள்ள ஆழ்வார். ஸம்ஸாரத்தின் தன்மையை எண்ணிய கொடுமையாலும், பகவத் விஷயத்தில் மூழ்கிய கனத்தாலும், மிகுந்த தாகம் கொண்ட ஒருவன் குளத்தில் குதித்தது போன்று அடிமைத்தனத்தின் எல்லையில் விழுந்தார். இதன் மூலம் ஆத்மாவுக்கு அடையாளம், “அடியார்க்கு அடியவராக இருப்பதே ஆகும்” என்று தேறுகிறது; இதுவே ஆழ்வாரின் “நான்” என்பதாக உள்ளது. இந்த உலகில் உள்ளவர்கள், சரீரத்தையே “நான்” என்று ஆத்மாவாக எண்ணும்போது, இவர் இவ்விதம் சிந்திப்பதற்கு என்ன காரணம் என்பதற்கு விடை தருகிறார். சரீரமே ஆத்மா என்று எண்ணும்போது, சரீரத்தில் “நான்” என்ற எண்ணம் ஏற்படுகிறது; “சரீரத்தைக் காட்டிலும் வேறு ஒன்று உண்டு” என்று அறியும்போது, ஆத்மாவில் “நான்” என்ற எண்ணம் உண்டாகிறது. தன்னைப் பகவானுடைய தொண்டன் என்று எண்ணும்போது, சரீர அளவில் நின்று ஐச்வர்யம் போன்றவற்றின் பின்னே செல்வர்; “அடிமையாக இருத்தலே பேறு” என்ற அறிந்தபோது, தன்னைத் தொண்டர்களுக்குத் தொண்டன் என்பது முடிய எண்ணுவர். ஆனால் இவ்விதம் “தொண்டர்களுக்குத் தொண்டன்” என்று கூறுவதை மற்ற திருவய்மொழிகளில் காணவில்லையே என்பதற்கு விடை தருகிறார்; “பயிலும் சுடர் ஒளி” என்பதற்குப் பின்னர், “தொண்டர்க்குத் தொண்டர்” என்பது வரையே, இவருடைய எண்ணம் இருந்தது; இதுவே இவருடைய “நான்” என்பதன் பொருளாகவும் உள்ளது. ஆனால் இவ்விதம் கூறினால், “ஈச்வரனுக்கு அடிமை” என்று கூறும் ப்ரமாணங்களுடன் முரண்பாடு ஏற்படாதோ என்பதற்கு விடை தருகிறார்; “தொண்டர்க்குத் தொண்டர்” என்பது முடிய வருவது அல்லவோ, “மற்ற யாருக்கும் வசப்படாமல், ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்படுதல்” என்பதாகிறது. – (தெரியச் சொன்ன இத்யாதி) - பகவானுடைய மேன்மையில் உள்ள வேறுபாடு மற்றும் ஸம்ஸாரத்தின் தோஷம் ஆகியவை குறித்து விரிவாகக் கூறிய இந்த பத்துப் பாசுரங்களும். (உரிய தொண்டராக்கும் உலகமுண்டாற்கே) - அனைத்தையும் காக்கும் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்ட நிலையை ஏற்படுத்தும். (உரிய தொண்டராக்கும்) - ஸம்ஸாரம் நல்லதாகவும், பகவத் விஷயம் தீயது என்றாலும், அதனை விட மாட்டாதவர்கள்.