திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 10)
ஆறாம்பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவு இல் இன்பம் சேர்ந்தாலும் மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ தெரியிலே
– ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி சுருங்குதல் மற்றும் மலர்தல் ஆகிய தன்மைகள் இல்லாமலும், முடிவு என்பது இல்லாமலும், அனைத்து காலங்களிலும் குறைதல் மற்றும் பெருகுதல் இல்லாமலும், அளவு என்பது இல்லாமலும் உள்ளதான ஆத்ம ஆனந்தத்தை அடைய நேரிட்டாலும், சிறிதளவு காலம் மட்டுமே உண்டான அனுபவம் கூட எல்லையற்ற மேன்மை கொண்டதாக தோன்றும்படியாக ஒரு அனுபவத்தை உண்டாக்குபவனே! நன்கு ஆராய்ந்து பார்த்தால், மீண்டும் ஒரு காலம் இன்றி உனக்கு மட்டுமே கைங்கர்யம் செய்யும் சிறிய காலத்தை, நீண்ட அந்த ஆத்ம அனுபவம் ஒக்குமோ?
– “ஐச்வர்யாதிகள் அல்பாஸ்த்திரங்கள்” என்று “வேண்டா” என்கிறீராகில், அவ்வளவன்றிறே; அநந்தமுமாய் ஸ்த்திரமுமாயிருக்குமிறே ஆத்மாநுபவம்! அத்தை யநுபவித்தாலோ? என்ன, “நீ சொன்னது உபபத்தியாகிற் செய்யலாயிற்று; அவை ‘அல்பம், அஸ்த்திரம்’ என்றவிடம் ஸ்வரூப கதநம் பண்ணினேனத்தனை: போக்யதையைச் சொல்லிற்றும் ஸ்வபாவமிருந்தபடி சொன்னேனத்தனை; ‘அது தீது’ என்று விட்டும், ‘இது நன்று’ என்று பற்றுகிறேனுமல்லேன்; உன்னைப் பற்றிற்றும் நீயாகையாலே, அவற்றை விட்டதும் நீயல்லாமையாலே” என்கிறார். வகுத்த விஷயத்திலே குண ஸௌந்தர்யாதிகளும் உண்டாகப் பெற்றேனித்தனை.
– ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “ஐச்வர்யம் போன்றவை அற்பமானவை மற்றும் நிலையற்றவை என்பதால் அவற்றை நீவிர் ‘வேண்டாம்’ என்கிறீர். அப்படியானால், அவற்றைப் போன்று உள்ளது என்பது அல்லாமலும், நித்யமாகவும், நிலையாகவும் உள்ள ஆத்ம அனுபவம் உள்ளதே! அதனை நீவிர் அனுபவிக்கலாம் அல்லவோ?”, என்றான். இதனைக் கேட்ட ஆழ்வார் ஸர்வேச்வரனிடம், “நீ உரைத்தது பொருந்துவதாக உள்ளதால் செய்யலாம்படி இருக்கிறது. ஐச்வர்யம் போன்றவை அற்பமானவை மற்றும் நிலையற்றவை என்னும்போது எனது ஆத்மாவால் ஸ்வருபத்தை உணர்ந்து நான் தவிர்த்தேன். உனது இனிமையை உள்ளது உள்ளபடி எனது இயல்பு இருந்த நிலையைக் கூறினேன். அவை தீயவை என்னும், இது நல்லது என்றும் அறிந்து பற்றுவதில்லை. உன்னைப் பற்றியதற்கும் நீயே காரணம் என்பதால், அவற்றை விட்டதும் நீ அவையாக இல்லாமையால் ஆகும்”, என்கிறார். இயல்பகவே ஸ்வாமியாக உள்ள விஷயத்தின் குணங்கள் மற்றும் ஸௌந்தர்யம் ஆகியவை எனக்கு உணரப்பெற்றேன்.
(குறுகாநீளா) ஸ்வத: குறுகுகையும் நீளுகையுமின்றிக்கே யிருக்கை. (இறுதி கூடா) நிரந்வய விநாசமின்றிக்கே யிருக்கை. (எனையூழி யித்யாதி) காலோபாதியால் வரும் ஸங்கோச விகாஸங்களின்றிக்கே யிருக்கை. (அளவிலின்பஞ் சேர்ந்தாலும்) இங்ஙனே யிருக்கையாலே முடிவின்றிக்கேயிருக்கிற ஆத்மாநுபவ ஸுகத்தை ப்ராபித்தாலும். (மறுகாலின்றி) பகவதநுபவமானது ஒருகால் அநுபவித்தால் மற்றைப் போதின்றிக்கே யிருப்பது. (மாயோன்) மீண்டின்றிக்கே யொழிந்தாலும் விடவொண்ணாத கல்யாணகுண யோகஞ் சொல்லுகிறது. (உனக்கேயாளாகும் சிறுகாலத்தை யுறுமோ) “உன் திருவடிகளிலடிமையே புருஷார்த்தம்” என்றிருக்குமது, மறித்தின்றியிலே யிருப்பது, அதுதான் க்ஷண காலமாவது; இங்ஙனேயிருந்தாலும் அளவிலின்பஞ் சேருகையுறுமோ? இத்தைப் பார்க்க. (அந்தோ) பர்வத பாமாணுக்களுக்கு இருந்த வைஷம்யஞ் சொல்லும்படியாவதே! (தெரியிலே) தோற்றிற்றுச் சொல்லிற் செய்யலாவதில்லை: ஆராய்ந்து சொல்லுமன்று இங்ஙனல்லதில்லை. இவ்வர்த்தம் உபதேசகம்யம் ஆவதே!
– (குறுகாநீளா) - தனது ஸ்வரூபம் சுருங்குவது மலர்வதும் என்று இல்லாமை. (இறுதி கூடா) - முடிவு இல்லாமலும், மாற்றங்கள் இன்றியும், அழிவு இன்றியும் இருத்தல். (எனை ஊழி இத்யாதி) - காலம் என்ற வரையறை காரணமாக உண்டாகும் சுருங்குதல் மலர்தல் இல்லாமை. (அளவிலின்பஞ் சேர்ந்தாலும்) - இவ்விதம் உள்ளதால் முடிவு என்பதே இல்லாமல் உள்ள ஆத்மா அனுபவத்தை அடைந்தாலும். (மறுகால் இன்றி) - பகவத் அனுபவமானது ஒருமுறை அனுபவித்தால், வேறு ஒரு பொழுது இன்றிக்கே உள்ளது. (மாயோன்) - மீள்வது இல்லாமல் போனாலும், விட இயலாத கல்யாண குணங்களின் சேர்த்தி கூறப்பட்டது. (உனக்கேயாளாகும் சிறுகாலத்தை யுறுமோ) - “உனது திருவடிகளில் அடிமைத்தனம் கொள்ளுவதே புருஷார்த்தம்” என்று இருத்தலானது சிறிது காலம் என்பதாக உள்ளபோதிலும், அளவுடன் அடையும் ஆனந்தம் என்பதுடன் அந்த நிலை சேருமோ? (அந்தோ) - ஒரு பெரிய மலைக்கும், சிறிய அணுக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு அல்லவோ இங்கு கூறலாம்படி ஆகிறது! (தெரியிலே) - புலப்பட்டதைக் கூறினால், செய்ய இயலவில்லை; ஆராய்ந்து கூறினால், இவ்விதம் இல்லை; ஆகவே இந்தக் கருத்தை உபதேசம் செய்யும்படி ஆயிற்று.