பெரியாழ்வார் திருமொழி - முதல்பத்து (பாசுரம் 3)
முதல்பத்து
இரண்டாம் திருமொழி
பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்து ஆர உண்டு கிடந்த இப்பிள்ளை இணைக் காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும் கணைக்கால் இருந்த ஆ காணீரே காரிகையீர் வந்து காணீரே
மூங்கில் போன்ற தோள்களை உடையவளும், இளமையான பருவத்தை உடையவளுமான யசோதையின், பால் சொரிகிற முலையை, திருக்கரங்களால் அணைத்து, திருவயிறு நிறையும்படியாகப் பருகிக் கிடக்கும் இந்த க்ருஷ்ணனுடைய ஒன்றுக்கொன்று பொருந்தப் பெற்றுள்ள திருவடிகளில் உள்ள வெள்ளித்தண்டையை விடுத்து, நன்கு விளங்கியபடி உள்ள கணைக்கால் இருக்கின்றபடியைக் காணுங்கள்! சிநேகம் உடைய அழகிய பெண்களே! நீங்கள் வந்து காணுங்கள்.
திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேச அவதாரிகை - திருவுகிரை அநுபவித்துத் திருக்கணைக்காலை அநுபவிக்கிறார். மாமுனிகள் வ்யாக்யான அவதாரிகை - திருவடிகளை அநுபவித்த வநந்தரம், திருக்கணைக்காலினழகை அனுபவிக்கிறார்.
– திருவடிகளை அனுபவித்த பிறகு, திருக்கணைக்காலின் அழகை அனுபவிக்கிறார்.
– திருவாய்மொழிப்பிள்ளை ஸ்வாபதேசம் - (பணையித்யாதி) பசுத்த மூங்கில் போலேயிருக்கிற தோளையுடையளுமாய், பருவத்தால் இளையளுமான ஆய்ச்சி. இப்போது இவளை வர்ணிக்கிறது பர்த்ரு ஸம்ச்லேஷ யோக்யமான காலங்களிலும் பிள்ளையை அணைக்கையாலே. பிள்ளையை அணைத்து, பிள்ளை வாய் வைப்பதற்கு முன்னே நெறித்துப் பாய்ந்த முலையைக் கொடுக்க, வயிறார உண்டு நீர்ப்பரனாய்க் கிடந்தது கண்டு “இப்பிள்ளை” என்று ஸமுதாய சோபையை அநுபவிக்கப்புக்கு, ஒன்றுக்கொன்று ஒப்பான திருவடிகளில் ப்ரகாசிக்கிற வெள்ளித்தளை சித்தாபஹாரம் பண்ணச் செய்தேயும் அத்தை ஒழித்து அது மிகையான திருக்கணைக்காலை அநுபவித்து, இது இருந்த ப்ரகாரத்தை அநுபவ யோக்யரான நீங்களும் வந்து காணுங்கோ ளென்கிறார். “காரிகையீர்” என்கிறது காமதந்திர ந்யாயத்தாலே வடிவழகில் வாசியறிந்து ஸ்நேஹிகளுமாய் அவயவாந்தரத்தில் போகமாட்டாத யுவதிகளை அழைத்துக் “காணிகோள்”, “காணிகோள்” என்கிறார். “காரிகையீர்” என்கையாலே பக்திபாரவச்யமுடையாரை அநுபவிக்க வழைக்கிறார். மாமுனிகள் வ்யாக்யானம் - (பணைத்தோளிளவாய்ச்சி) பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்விக்கும் வேய் போலேயிருந்துள்ள தோளையுடையளாய், பருவத்தால் இளையளுமான ஆய்ச்சியுடைய. இப்போது இவளை வர்ணிக்கிறது, அழகுக்கும் பருவத்துக்குமீடாக போக பரவசையாயிருக்கையன்றிக்கே, பிள்ளையை ஸ்நேஹித்து நோக்கிக் கொண்டு போருமவளென்னுமிடம் தோற்றுகைக்காக. (பால் பாய்ந்த கொங்கை) ஸ்நேஹத்தாலே நெறித்துப் பால் சொரிகிற முலையை. (அணைத்தாரவுண்டு கிடந்த விப்பிள்ளை) திருக்கைகளாலே அணைத்து வயிறாரவுண்டு, அத்தாலே ஹ்ருஷ்டனாய்க் கிடந்த இப்பிள்ளையுடைய. (இணைக்காலிலித்யாதி) அந்யோந்யம் சேர்த்தியழகையுடைய திருவடிகளில் வெள்ளித்தண்டை நின்று விளங்கா நிற்கிற கணைக்காலின் அழகிருந்தபடியை, அநுபவ யோக்யரானவர்கள் வந்து காணுங்கோள். (காரிகையீர் வந்து காணீரே) அழகுடையவர்க ளாகையாலே அழகின் வாசியறியும் நீங்கள் வந்து காணுங்கோள்.
– (பணைத்தோள் இள ஆய்ச்சி) - பசுமையாகவும், வட்ட வடிவோடு கூடியிருப்பதாகவும், அழகாகவும் உள்ள மூங்கிலைப் போன்றுள்ள தோள்களை உடையவளாய், இளமையான உருவத்தை உடையவளுமான யசோதை. எதற்காக இப்போது இவளை வர்ணிக்கவேண்டும்? காரணம், அழகிற்கும் பருவத்திற்கும் ஏற்றவாறு போகங்களில் வயப்பட்டு இருப்பவள் என்னும் தோற்றத்திற்காக அல்ல. கணவனோடு கூடியிருக்கத் தகுதி உடைய காலங்களிலும், இவள் இவ்வாறு இல்லாமல், தனது பிள்ளையை ஸ்நேஹித்துக் கொண்டு அணைத்தே உள்ளாள் என்பதைக் காட்டுவதற்காகவே ஆகும். (பால் பாய்ந்த கொங்கை) - இப்படி பிள்ளையை ஸ்நேஹத்தாலே அணைத்து இருக்க, அவன் வாய் வைப்பதற்கு முன்னே நெறித்துப் பால் சொரிகிற முலையை. (அணைத்து ஆர உண்டு கிடந்த இப்பிள்ளை) - திருக்கரங்களால் அணைத்து, வயிறு நிறையும்படி உண்டு, அதனாலேயே மகிழ்ந்து கிடக்கும் இப்பிள்ளையையுடைய. (இணைக்கால் இத்யாதி) - ஒன்றுக்கொன்று பொருந்தியுள்ள அழகான திருவடிகளில் பொருந்தப் பெற்றிருக்கிற வெள்ளித் தண்டையானது, சித்தத்தை வசியம் செய்ய, அதில் ஈடுபடாமல், அதனைக் காட்டிலும் மேன்மையாக விளங்கியிருக்கும் கணைக்காலின் அழகினை அனுபவிக்க விரும்புவர்கள் வந்து காணுங்கள். (காரிகையீர் வந்து காணீரே) - சிநேகம் உடையவர்கள் ஆகையாலே, அழகுடைய திருமேனிக்கும் அதனை அலங்கரிக்கும் ஆபரணத்திற்கும் வேறுபாடு அறியும் அழகான யுவதிகளே! நீங்கள் வந்து காணுங்கள்.