திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 9)

ஆறாம்பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ

நெஞ்சம் கலங்கும்படியாக, ஐந்து இந்த்ரியங்களும் “தா, தா” என்று பீடிக்கும் அற்பமான ஸாரமாகிய உலக விஷயங்கள் பலவிதங்களில் வெளிப்படுத்தி, இவற்றை விலக்கவல்ல சக்தி கொண்ட நீ, எல்லையில்லாத அயோக்யனும் பாபியும் ஆகிய என்னை, இந்த நித்யமான துக்கம் நிறைந்த இடத்தில் வசிக்கும்படிச் செய்து, முடிக்க எண்ணுகிறாயோ? இந்தப் பூமியானது வேறு யாருக்கும் உடைமையாகாதபடி, உனக்கே சொந்தமாகிற விதத்தில் அளந்து எடுத்துக் கொண்ட, இனிமை பொருந்திய திருவடித் தாமரைகளில் நான் எப்போதும் பொருந்தியிருக்கும்படி என்னை உன்னிடம் அழைத்துக் கொள்ளும் காலமானது, “மற்ற விஷயங்களின் பார்வை அழிவிற்குக் காரணம்” என்ற நிலை உள்ளபோதிலும், விரைவாகக் குறுகாதோ?

– “உம்மை இங்கு கெடுத்ததென்?” என்ன; “கண்ட காட்சியிலே இழுத்துக் கொள்ளக் கடவதான விஷயங்கள் பரிமாறுகிறவிடத்தே வைத்தாயாகில், இனிக் கெடுக்கையென்று ஒன்றுண்டோ?”, என்கிறார். “என்னை இங்கே வைத்தபோதே, குழியைக் கல்லி மண்ணையிட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ?” என்கிறார். “தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி” என்னும்படியே.

ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நாம் உம்மைக் கெடுக்க எண்ணுவதாகக் கூறுகிறீர். நாம் உம்மை இங்கு எப்போது கெடுத்தோம்?”, என்றான். இதற்கு ஆழ்வார், “எந்தக் காட்சியை காண்கிறோமோ அதில் இழுத்துக் கொள்ள வல்லதான விஷயங்கள் நிறைந்த இந்தப் பூமியில் வைத்துள்ளாய். இதனை விட இனி என்னைக் கெடுப்பதற்கு வேறு ஒன்று உள்ளதோ? என்னை நீ இங்கு வைத்து நேரத்திலேயே குழியைத் தோண்டி, அதில் மண்ணை நிரப்பி என்னை அழுத்தப் பார்த்தாய் அல்லவோ?”, என்றார். ஆனால் “ஸம்ஸாரத்தில் வைத்தல்” என்பது அநுக்ரஹம் செய்வதன் எதிர்த்தட்டாகுமோ என்றால், கீதை (16-19) - தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்! க்ஷிபாமி - என்பது காண்க.

(ஆவி திகைக்க) இந்த்ரியங்களுக்குக் கந்தமான மநஸ்ஸு கலங்க. (ஐவர் குமைக்கும்) சேதந ஸமாதியாலே சொல்லுகிறது, நலிவின் மிகுதியாலே. ஒரு துர்ப்பலனைப் பற்றி ஐஞ்சுபடர் நலியுமாபோலே, “என் விஷயத்தைக் காட்டு” என்று தனித்தனியே நலிகிறபடி. இப்படி நலிந்தாலும் ஆஸ்வாதமுண்டாகிலாமிறே. (சிற்றின்பம்) முள்ளிப்பூவில் தேன் போலே, “அற்ப சாரங்களி”றே. தேவரையகற்ற, வேண்டுவதுண்டாய், அநுபவிக்கலாவது ஒன்று இன்றிக்கே யிருக்கை. (பாவியேனை) அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த நான் சிற்றின்பத்திலே அந்வயிக்கும்படியாவதே. “வீவிலின்பமிகவெல்லை நிகழ்ந்தனன்” என்றவரிறே இங்ஙனே சொல்லுகிறார். (பல) ஒன்றிலே கால் தாழப் பண்ணவல்ல விஷயமில்லையே. (நீ காட்டிப் படுப்பாயோ) ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ? (காட்டிப் படுப்பாயோ) நாட்டார் “காணாவிடிற் பிழையோம்” என்றிருக்கிற விஷயம் இவர்க்கு தர்சநமாத்ரத்திலே மோஹிக்கும்படியா யிருக்கிறதிறே. அசுணமாவென்று சில பக்ஷிகளுண்டு; அவை பிடிகொடாது ஒன்றுக்கும்; அவை பிடிக்க நினைத்தார் முற்படப் பாடுவார்கள்; அது கேட்டு நெஞ்சு நெகிழும்; அநந்தரம் பறையை யடிப்பார்கள்; இதில் வன்மையாலே பட்டுக் கிடக்குமாம். அதுபோலே, இவர் பகவத் குணங்களிலே நைந்தபடி, இதர விஷய தர்சநத்தாலே முடியும்படியானார். நெடுநாள் அநுபவித்துப் போந்தாலும், கடக்கவிருந்தவன்று “நாம் இன்னது அநுபவித்தோம்” என்று ஸ்மரிக்கைக்கு ஒன்று இன்றிக்கே யிருக்குமிறே; இங்ஙனேயிருக்கச் செய்தேயும் அவற்றில் ச்ரத்தை பண்ணுகிறது பாபாதிசயமிறே. (தாவியித்யாதி) அந்ய பரோக்தியிலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார். (தாவி வையங் கொண்ட) நினைத்தது தலைக்கட்டவல்லனென்னும் சக்தி யோகஞ் சொல்லுகிறது. பூமிப் பரப்படங்கலும் அநாயாஸேந அளந்து கொண்டபடி. (தடந்தாமரைகட்கே) போக்யதையளவிறந்த திருவடிகளிலே. இத்தால், ப்ராப்யஞ் சொல்லுகிறது. “கூவிக் கொள்ளுங் காலம்” என்கையாலே, ப்ராபக வேஷஞ் சொல்லுகிறது. “இன்னம் குறுகாதோ” என்கையாலே, ருசி வேஷஞ் சொல்லுகிறது. இதர விஷய தர்சநம் முடியும்படியாய், உன் திருவடிகளில் போக்யதையறிந்து விடமாட்டாதவளவு பிறந்த பின்பு இன்னம் தாழ்க்குமத்தனையோ? பிள்ளானுடைய அந்திமதசையிலே நஞ்சீயர் நோவறியப் புக்கிருக்க, “கூவிக் கொள்ளுங்கால மின்னங் குறுகாதோ?” என்று பலகால் சொல்ல, இத்தைக் கேட்டுச் சீயர் அழ, “சீயரே! நீர் கிடந்தழுகிறதென்? அங்குப் போய் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றியிருந்ததோ?” என்று பணித்தான்.

– (ஆவி திகைக்க) - இந்த்ரியங்களுக்கு அடிப்படையாக உள்ள மனம் கலங்கும்படி. (ஐவர் குமைக்கும்) - சேதநராக நிற்பதால் கூறுகிறார். குறிப்பாக நலிவின் மிகுதி காரணமாக. தான் ஒருவராக உள்ளபோதிலும், ஐந்து இந்த்ரியங்களும் சேர்ந்து நலிவதற்கான உதரணம் கூறுகிறார்; தவிப்பவன் ஒருவனை ஐந்து பேர் சேர்ந்து துன்புறுத்துவது போன்று, “எனக்கான விஷயத்தை எனக்குக் காண்பிப்பாயாக” என்று ஒவ்வொரு இந்த்ரியமும் தனித்தனியாக துன்புறுத்தியபடி உள்ளன. ஆனால் இவ்விதம் இவை துன்புறுத்தினாலும் சுவை ஏற்படுகிறது அல்லவோ என்பதற்கு விடை தருகிறார். ஆனால் சுவை இல்லையோ என்றால், முள்ளிப்பூவில் உள்ள தேன் போன்றதாக இருக்கிறது. அதாவது “அற்ப சாரம்” அல்லவோ? அவை அற்பமாக இருந்தாலும், “உள்ளது” என்ற நிலை அவற்றுக்கு உள்ளது அல்லவோ என்பதற்கு விடை அளிக்கிறார்; உன்னை என்னிடமிருந்து அகற்றத் தேவையானவற்றைக் கொண்டவையாகவும், அனுபவத்திற்கு ஏற்ற ஏதும் இல்லாததாகவும் உள்ளன. (பாவியேனை) – திருவாய்மொழி (10-9-11) - அந்தமில் பேரின்பம் – என்பதாக, முடிவற்ற ஆனந்தத்துடன் பரமபதத்தில் இருந்து அனுபவிக்கவேண்டிய நான், இங்குள்ள சிற்றின்பங்களை அனுபவிக்க வேண்டியபடி உள்ளதே! ஆனால் இவ்விதம் அங்கு ஆனந்தத்தைச் சிறு காலம் அனுபவித்தாரா என்பதற்கு விடை தருகிறார். திருவாய்மொழி (4-5-3) - வீவிலின்பமிகவெல்லை நிகழ்ந்தனன் - என்று கூறியவர் அல்லவோ இப்படிக் கூறுகிறார்! (பல) - ஏதோ ஒன்றில் மட்டும் சூழ்ந்து ஈடுபடலாம்படி உள்ள நிலை இந்த விஷயங்களில் இல்லை. (நீ காட்டிப் படுப்பாயோ) – “படுப்பாயோ” என்றால், “இம்சிப்பாயோ” என்று பொருள். அதாவது என்னைக் காப்பாற்ற வேண்டிய ரக்ஷகனாகிய நீ, இந்த விஷயங்களில் என்னை அழுத்தி முடிக்கப் பார்க்கிறாயா? (காட்டிப் படுப்பாயோ) - இந்த விஷயங்களைக் கண்ட நேரத்திலேயே இவை அழிவை ஏற்படுத்தும் என்பதைக் கூறுகிறார்; உலகில் உள்ளவர்கள் “இந்த விஷயங்களைக் காணாமல் இருந்தால் பிழைக்கமாட்டோம்” என்று தவித்தபடி உள்ள விஷயங்கள், இவருக்குக் கண்டவுடன் மயக்கம் அடையும்படியாகச் செய்கின்றன அல்லவோ? அசுணம் என்று ஒரு பறவை உண்டு. அவை எதற்கும் பிடிபடாமல் உள்ளதாகும்; அவற்றைப் பிடிக்க வருபவர்கள், அவற்றின் முன்பாகப் பாடுவார்கள்; அந்தப் பாட்டைக் கேட்டு அவற்றின் நெஞ்சம் நெகிழும்; அப்போது பறை வாத்யத்தை அடிப்பார்கள்; அந்த வாத்தியத்தின் வன்மையான ஓசை காரணமாக அவை மயக்கம் அடையும். அது போன்று பகவத் விஷயங்களில் ஈடுபட்டபடி இருந்த இவர், மற்ற விஷயங்களைக் கண்டவுடன் முடியும்படி ஆனார். உலக விஷயங்களை நீண்ட காலம் அனுபவித்தபடி இருந்தாலும், அவற்றை அனுபவித்து மீண்டபோது, “நாம் இத்தனை காலங்கள் இன்னது அனுபவித்தோம்” என்று நினைவில் கொண்டு வருவதற்கு ஒன்று கூட இல்லாமல் உள்ள நிலையே ஏற்படும். இப்படி உள்ளபோதிலும், அவற்றில் ஈடுபாடு கொள்ளுதல் என்பது, அதிகமான பாபம் காரணமாகவே ஆகும். – (தாவி இத்யாதி) - வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்தின் மூலம், பேற்றினை உறுதிபடுத்துகிறார்; அதாவது “கூவிக்கொள்ளும் காலம்” என்பது போன்று கால எல்லையை விண்ணப்பிக்கும் பாசுரம் மூலம், “தடந்தாமரைகட்கே” என்று “திருவடிகளே பெறுத்தக்கது” என உறுதிபட உரைப்பதாகக் கருத்து. (தாவி வையங் கொண்ட) - எண்ணியதை நிறைவேற்றி முடிக்கும் சக்தி கொண்டவன் என்பது கூறப்பட்டது. இந்தப் பூமியின் முழு பரப்பையும் எந்தவிதமான வருத்தமும் இன்றி எளிதாக அளந்து கொண்டான். (தடந்தாமரைகட்கே) - அளவற்ற இனிமை கொண்ட திருவடிகளில். இதன் மூலம், அடையப்பட வேண்டிய இலக்கு கூறப்பட்டது. “கூவிக் கொள்ளும் காலம்” என்பதன் மூலம் அடைய வேண்டி விண்ணப்பம் செய்பவருடைய தன்மை கூறப்பட்டது. “இன்னம் குறுகாதோ” என்பதன் மூலம், இலக்கின் மீது உள்ள ருசியின் தன்மை கூறப்பட்டது. மற்ற விஷயங்களின் மீது உள்ள ஈடுபாடு முடியும்படியாக, உனது திருவடிகளின் இனிமையை அறிந்து கொண்டு, விட இயலாதபடியான நிலை ஏற்பட்ட பின்னர், மேலும் தாமதம் செய்வாயோ? இவ்விதம் அழைத்தவர்கள் உள்ளனரோ என்பதற்கு ஒரு நிகழ்வைக் காண்பிக்கிறார்; பிள்ளான் தனது அந்திம நிலையில் உள்ளதை அறிந்த நஞ்சீயர் அருகில் அமர்ந்திருந்தார்; அப்போது பிள்ளான், “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?” என்று பலமுறை கூறியபடி இருந்தார். இதனைக் கேட்ட நஞ்சீயர் அழுதபோது பிள்ளான் அவரிடம், “சீயரே! நீவிர் இவ்விதம் அழுவது ஏன்? அங்கு சென்ற பின்னர் அடியேன் அடையப்போகும் பேறானது, இங்குள்ள நிலையைக் காட்டிலும் தாழ்ந்தது என்று உமக்குப் புலப்பட்டதோ?”, என்றார்.