திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 8)
ஆறாம்பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே
அறிவு நிறைந்த மேன்மையானவர்களுக்கு உயிராக உள்ளவனே! அவர்களை உயிர் பிழைக்கச் செய்யும்படியான அனைத்து நறுமணங்கள் பொருந்திய தேஜஸ் நிறைந்த திருமேனி கொண்டவனே! என்னை உனக்கு மட்டுமே அல்லவோ வேறு யாருக்கும் வசப்படாதபடி உன்னிடம் சாபலத்தை ஏற்படுத்திய வ்யாமோஹம் நிறைந்தவனே! அத்தகைய உனது வடிவத்தை அனுபவிப்பதற்கான வழியை அறியாத எனக்கு உனது க்ருபையால், அனுபவிக்கும்படிச் செய்யவேண்டும். இவ்விதம் நீ செய்யாமல், உன்னைத் தவிர எனது நற்கதிக்கு வேறு எதனையும் அறியாதபடி, நீ கட்டளை செய்து வைத்தபடியான ஸ்வரூபம் கொண்ட என்னுடைய நெஞ்சமானது கலங்கும்படியாக, உன்னைக் குறித்த ருசியை ஏற்படுத்தி, ஆயினும் அதற்கு ஏற்ற அனுபவத்தை உண்டாக்காமல், உனது வடிவழகின் மேன்மையை அறிந்த என்னை மற்ற விஷயங்களில் அகப்படுத்தி, எல்லையற்ற காலம் உன்னை இழந்து போதாது என்று, உன்னை அடையவேண்டும் என்ற ஆசை பிறந்த இன்றும், கெடுக்க வழி தேடுகிறாயோ?
– “அருளாய்” என்ற வாயோடே வந்தருளக் கண்டிலர்; தன்பக்கல் நின்றும் பிரித்து என்னைக் கைவிடப் பார்த்தானாகாதே யென்கிறார்.
– “அருளாய்” என்று கூறினார். அதன் பின்னர் அவன் உடனே வரவில்லை என்று பார்த்தார். ஆகவே, தன்னிடமிருந்து என்னைப் பிரித்துக் கைவிடப் பார்த்தானோ என்று கூறுகிறார்.
– (அறிவிலேனுக்கருளாய்) “நின்னருளே புரிந்திருந்தேன்” என்னுமாபோலே உன்னருளொழிய வேறொன்றறியாத எனக்கு அருளவேணும். “அவ்வருளல்லன வருளுமல்ல” என்றிறே இவரிருப்பது. “வையகத்துப் பல்லாரருளும் பழுதி”றே. “பொய்ந்நின்ற ஞான”த்தையுடையவெனக்கு ஞானப்பிரானான நீ க்ருபை பண்ணி யருளாய். (அறிவாருயிரானாய்) அறிவார்க்கு உயிரானவனே என்னுதல்; அறிவாரை உயிராகவுடையவனே என்னுதல். “ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்” என்கிறபடியே, “த்விதீயம் மேந்தராத்மாநம்” என்கிறபடியே. (வெறிகொள் சோதி மூர்த்தி) அருளாதொழிந்தாலும் விடவொண்ணாத வடிவழகு; “ஸர்வகந்த:” என்னுமதிறே. பரிமளத்தை யுடைத்தாய், நிரவதிகமான தேஜஸ்ஸையுடைத்தான வடிவழகை யுடையவனே! (அடியேன் நெடுமாலே) எனக்கு இப்போது எட்டாதிருக்கிறவனே என்னுதல்; வடிவழகைக் காட்டி எனக்கு வ்யாமோஹத்தை விளைத்தவனே என்னுதல். (கிறி செய்து) நீ இப்போது உதவாமையாலே, முன்பு செய்தவையெல்லாம் விரகடித்தாயென்று தோற்றா நின்றது கிடாய்! (என்னைப் புறத்திட்டு) பிராட்டியை அசோகவநிகையிலே வைத்தாற்போலே, பகவத் குணங்கள் நடையாடாத சப்தாதி விஷயங்கள் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே பொகட்டு. (இன்னங் கெடுப்பாயோ) முன்பு இழந்தது போராதோ? “ஸம்ஸாரம் த்யாஜ்யம்” என்றும், “பகவத் குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ? “புத்தி நாசாத் ப்ரணயதி” இறே. (பிறிதொன்று இத்யாதி) அநந்யகதியாய் அநந்யபரனாயிருக்கிற என்னை மநஸ்ஸு கலங்கும்படி கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னங் கெடுப்பாயோ?
– (அறிவிலேனுக்கருளாய்) – பெரியாழ்வார் திருமொழி (5-4-1) – நின் அருளே புரிந்திருந்தேன் - என்பதற்கு ஏற்ப, உனது க்ருபையைத் தவிர்த்து வேறு எதனையும் அறியாத எனக்கு க்ருபை செய்யவேண்டும். ஆனால் வேறு எந்த ஒரு க்ருபையையும் இவர் அறியாரோ என்பதற்கு விடை அளிக்கிறார். திருவாய்மொழி (9-9-6) – அவ்வருள் அல்லன அருளும் அல்ல - என்று அல்லவோ இவர் உள்ளார்? ஆனால் மற்றவர்களுடைய க்ருபையானது தகுந்த சாதனம் இல்லையோ என்பதற்கு, “இல்லை” என்று கூறி ப்ரமாணம் காண்பிக்கிறார்; முதல் திருவந்தாதி (15) - வையகத்துப் பல்லார் அருளும் பழுது - என்பது காண்க. அதாவது, திருவிருத்தம் (1) – பொய்ந்நின்ற ஞானம் - என்பதாக உள்ள எனக்கு, திருவிருத்தம் (99) – ஞானப்பிரான் - என்று உள்ள நீ க்ருபை செய்தருளாய். – (அறிவார் உயிர் ஆனாய்) - அறிந்தவர்களுக்கு உயிரானவனே! அல்லது அறிந்தவர்களை உயிராகக் கொண்டவனே! இதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; கீதை(18-7) - ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் - ஞானி எனக்கு உயிர் போன்றவன் என்பது எனது எண்ணம் - என்றும், அயோத்யாகாண்டம் (4-43) - த்விதீயம் மேந்தராத்மாநம் - எனது இரண்டாவது ஆத்மாவாக உள்ள உன்னை - என்றும் கூறப்பட்டது காண்க. (வெறிகொள் சோதி மூர்த்தி) - அவன் க்ருபை செய்யாமல் இருந்தாலும், விட இயலாத வடிவழகு. அதாவது உபநிஷத்தில், “ஸர்வகந்த: - அனைத்து நறுமணங்களும்” என்பதற்கு ஏற்ப பரிமளம் நிறைந்ததாகவும், எல்லையற்ற தேஜஸ் பொருந்தியதாகவும் உள்ள வடிவழகு கொண்டவனே! (அடியேன் நெடுமாலே) – “மால்” என்பது பெருமை, “நெடு” என்பது பெருமை என்று கொண்டு, எனக்கு இப்போது எட்டாமல் உள்ளவனே என்கிறார். அல்லது தனது வடிவழகைக் காண்பித்து எனக்கு மயக்கத்தை ஏற்படுத்தியவனே! – (கிறி செய்து) – நீ இப்போது உதவி செய்யாமல் உள்ளதால் முன்பு செய்தவை அனைத்தையும் நீயே அகற்றினாய் என்று தோன்றுவதாக நீ உள்ளாய்; இங்கு “விரகு அடித்தாய்” என்பது “எனக்கு ஸம்ஸாரத்திலும் பொருந்தாமல், நீயும் உனது திருமுகத்தைக் காண்பிக்காமல், என்னைத் தவித்தபடிச் செய்யப் பார்த்தாய்” என்பதாகிறது. (என்னைப் புறத்திட்டு) - சீதையை அசோகவனத்தில் வைத்தது போன்று, பகவத் குணங்கள் கலக்காமல் உள்ளதான, இந்த்ரிய விஷயங்களில் எப்போதும் நின்றுள்ளதான, ஸம்ஸாரத்தில் வைத்தாய். (இன்னங் கெடுப்பாயோ) – இதுவரை நான் உன்னை இழந்தது போதாதோ? “ஸம்ஸாரம் கைவிடத்தக்கது” என்றும், “பகவத் குணங்களே கொள்ளத் தக்கவை” என்றும் அறிந்த பின்னரும், என்னைக் கெடுப்பாயோ? உலக விஷயங்கள் மட்டுமே நிறைந்துள்ள ஸம்ஸாரத்தில் வைத்தால் என்ன கெடுதல் உண்டாகும் என்பதற்கு விடை அளிக்கிறார்; கீதை (2-63) – புத்தி நாசாத் ப்ரணயதி - புத்தி அழிந்து அனைத்தும் அழிகிறது – என்பது காண்க. (பிறிதொன்று இத்யாதி) - மற்ற கதி ஏதும் இல்லாதவனாகவும், மற்ற யாருக்கும் வசப்படாதவனாகவும் உள்ள என்னை, மனம் கலக்கும்படியாகச் செய்ய புரிந்து, என்னைப் புறந்தள்ளி, மேலும் கெடுக்க எண்ணுகிறாயோ?