திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 7)

ஆறாம்பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

உலகில் திரியும் கரும கதி ஆய் உலகம் ஆய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்து அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே

இந்த உலகில் பரந்து நிற்கும் கார்ய வடிவத்தில் உள்ள உபாயங்களுக்கு நிர்வாஹகனாகவும்; அந்த உபாயங்களைக் கைகொள்ளும் கர்த்தாக்களாகிய லௌகீகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களுடைய அந்தராத்மாவாக நின்று அவர்களைச் செயலாற்றும்படி செய்பவனாகவும்; இவ்விதம் செயல் புரியத் தூண்டுபவனாக மட்டும் அல்லாமல் அனைத்து லோகங்களுக்கும் ஒரே ஆத்மாவாகவும், அண்டங்களுக்கு மேலே உள்ளவர்களாகிய எண்ணிக்கை இல்லாதபடி, ஞானதர்மம் மூலம் பத்து திசைகளிலும் வ்யாபித்து நிற்கும் முக்தாத்மாக்களை ப்ரகரமாகக் கொண்டவனாகவும் உள்ளவனே! எண்ணிறந்த அறிவுக் கேட்டை உடையவன் என்பதால், உன்னைப் பெறுவதற்கான வழி அறியாத எனக்கு, “உன்னை அடையும் உபாயமும், அந்த உபாயத்தால் அடையப்படும் பேறும் நீயே” என்பதாக எனக்கு க்ருபை செய்தருளவேண்டும். “அருவேயோ” என்பதில் உள்ள “ஓ” என்ற அசைச்சொல்லானது, துயரத்தின் மிகுதியால் வந்த அழைப்பைக் காண்பிக்கிறது.

– “‘உலகில் திரிவேனா’ என்கிற உறைப்பாலுண்டான ஸ்வாதந்த்தர்யம் உம்முடைய தலையிலே கிடந்ததே!” என்ன; “ஸாதநமும் ஸாதகரும் த்வததீநமான பின்பு, இவ்வாற்றாமை எனக்கு ஸ்வரூபமா யந்வயிக்குமித்தனை யன்றோ?” என்கிறார். அன்றியே, “பேறு உம்மதான பின்பு நீரும் சிறிது யத்நம் பண்ண வேணுங் காணும்” என்ன; “ஸர்வமும் த்வததீனமாயிருக்க, அதுக்குப் புறம்போ நான் என் கார்யம் செய்கைக்கு?” என்கிறாராகவுமாம்.

– ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நீவிர் ‘உலகில் திரிவேனோ’ என்று ஆற்றாமையால் உண்டான பதற்றம் காரணமாக, சுதந்திரமாக உள்ளது போன்ற தொனியில் கூறுகிறீரே!”, என்றான். இதற்கு ஆழ்வார், “உபாயங்களும், அவற்றைக் கைக்கொளும் சாதகர்களும் உனது வசம் என்றுள்ள பின்னர், இந்த ஆற்றாமையானது எனக்கு ஸ்வரூபமாக வந்து சேரும் அல்லவோ?”, என்கிறார். அல்லது, “நீவிர் அடைய உள்ள பேறு, உம்மையே வந்து சேரும் என்பதால், அதனைப் பெற நீரும் சிறிது முயற்சிக்க வேண்டும் அல்லவோ?”, என்றான். இதற்கு ஆழ்வார், “அனைத்தும் உன் வசப்பட்டு உள்ளபோது, அதற்குப் புறம்பாக நான் என்ன கார்யம் செய்யமுடியும்?”, என்கிறார் என்றும் கூறலாம்.

(உலகில் திரியும் கரும கதியாய்) லோகத்தில் பரிமாறுகிற கர்மமாகிற ஸாதநமாய். உன்னையொழிய பலப்ரதாநம் பண்ணவல்லதொன்றுண்டோ? (உலகமாய்) அநுஷ்ட்டாதாக்களோதான் ஸ்வதந்த்ரராயிருக்கிறார்? உலகமென்பது உயர்ந்தோர் மாட்டிறே; லோகத்திலுள்ளார்க்கு என்றும் வருமிறே. (உலகுக்கேயோருயிருமானாய்) ஒரு சரீரத்தை ஒரு சேதநன் ஆத்மாவாய் அபிமாநித்திருக்குமாபோலே, ஸகல பதார்த்தங்களுக்கும் ஏகாத்மாவானவனே! “அந்த: ப்ரவிஷ்டச்சாஸ்தா” பலபூதனான தானே, கர்த்தாவும் கர்மமும் உபகரணங்களுமாயிருக்கை. இரண்டும் உன் தலையிலே கிடந்தால், உன்னையொழிய எங்ஙனே நான் ஜீவிக்கும்படி? (புறவண்டத்து) அண்டாத்பஹி: என்றபடி. (அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ) அஸங்க்யேயராய், எம்பெருமான் ஸ்வரூபத்தாலே வ்யாபிக்குமா போலே ஜ்ஞானத்தாலே பத்துத் திக்கிலும் வ்யாபித்திருப்பாராய் ரூபி த்ரவ்யம்போலே கண்ணுக்கு விஷயமன்றிக்கே அரூபியாயிருக்கிற ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே! முக்தரோதான் ஸ்வதந்த்ரராயிருக்கிறார்? அங்கும் பத்துத் திக்காயிருக்குமோ? என்னில்; இங்கேயிருந்து அநுஸந்திக்கிற இவர்க்குச் சொல்லத் தட்டில்லையே. அங்ஙனன்றிக்கே, முக்தர் லீலாவிபூத்யநுஸந்தாநம் பண்ணும்போது இங்குள்ளபடியே ப்ரதிபத்தி பண்ணுவர்களிறே. (அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு) பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரிச்சேதிக்கிலும் தம் அறிவு கேடு பரிகணிக்கப் போகாதென்கிறார். “மயர்வற மதிநலமருளப் பெற்ற”வர் வார்த்தையிறே! (அருளாயே) பரிகரமுண்டான பின்பு அருளக்குறையென்? “அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா:” என்னுமாபோலே.

– (உலகில் திரியும் கரும கதியாய்) - இந்த லோகத்தில் எங்கும் இயங்கியபடி உள்ள கர்மம் என்ற உபாயங்கள். நீ அல்லாமல், பலனைத் தரவல்ல வேறு ஏதேனும் இந்த உலகில் உள்ளதா? (உலகமாய்) - அந்த உபாயங்களைக் கைக்கொள்பவர்கள், இந்த உலகத்தில் சுதந்திரமாக உள்ளனரோ? தொல்காப்பியம் - உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே - அல்லவோ? இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு என்றும் வரும் அல்லவோ? (உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்) - கர்மமும் கர்த்தாவும் அவனே என்று உள்ளதன் காரணம் என்ன என்பதற்கு “சரீரம் – சரீரி” என்ற உறவுமுறை ஆகும் என்பதைக் கூறத் திருவுள்ளம் கொண்டவராக விடை அளிக்கிறார்; ஒரு சரீரத்தை, ஒரு சேதநன், தனது ஆத்மாவாக எண்ணியபடி உள்ளது போன்று, அனைத்து வஸ்துக்களுக்குள்ளும் ஒரே ஆத்மாவாக உள்ளவனே! இதனை உபநிஷத் – அந்த: ப்ரவிஷ்டச்சாஸ்தா - அனைத்தின் உள்ளிலும் புகுந்து அவற்றை நியமிப்பவன் – என்றது. அனைத்து உபாயங்களுடைய பலனாக உள்ள தானே, “கர்த்தாவும், கர்மமும், உபகரணங்களும்” என்பதாக உள்ளான். கர்மமும் கர்த்தாவும் உன் வசப்பட்டு உள்ளபோது, உன்னை விடுத்து நான் எவ்விதம் உயிர் தரிப்பேன்? (புறவண்டத்து) - “அண்டத்திற்கு வெளியே” என்று கருத்து. (அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ) - எண்ணிக்கை அற்றவர்களாக; ஸர்வேச்வரன் எவ்விதம் தனது ஸ்வரூபத்தால் எங்கும் வ்யாபித்தபடி உள்ளனோ அது போன்று, தங்களுடைய ஞானம் மூலம் பத்து திசைகளிலும் வ்யாபித்தவர்களாக; கண்களுக்குப் புலப்படும் பொருள்கள் போன்று அல்லாமல், கண்களுக்குப் புலப்படாதபடி உள்ளவர்களாக இருக்கும் ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனே! முக்தர்கள் சுதந்திரமாக உள்ளனர்; ஆனால் அவர்கள் உள்ள பரமபதத்திலும் பத்து திசைகள் இருக்குமோ என்றால், இவர் இங்கிருந்து நினைப்பதால், இவ்விதம் கூறுவதில் தோஷம் இல்லை. அல்லது, முக்தர்கள் இந்த உலகை எண்ணும்போது, இங்குள்ளவர்கள் இந்த உலகை எவ்விதம் நினைப்பார்களோ அதனைப் போன்றே எண்ணுவார்கள் அல்லவோ? (அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு) - ஸர்வேச்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அளவிட முடிந்தால் கூட, தனது அறிவுக்கேட்டை அளவிட இயலாது என்கிறார். இவர் “அனைத்தும் அறிந்தவர்” என்றுள்ளபோது, “அறிவிலேனுக்கு” என்பது எப்படி? இதற்கு விடை, அவர் அவ்விதம் உள்ளபோதிலும், “மயர்வற மதிநலம் அருளப்பெற்ற”வருடைய வாக்கு என்றால், சரியாகவே இருக்கும் அல்லவோ? (அருளாயே) - “தன்னிடம் கைம்முதல் இல்லை” என்பதான சிந்தனை ஏற்பட்ட பின்னர், நீ எனக்கு க்ருபை செய்பவதற்கு என்ன குறை உள்ளது? ஸ்தோத்ரரத்னம் (24) - அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: – உன் அருளுக்குச் சிறந்த பாத்திரம் - என்பது காண்க.