திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 6)
ஆறாம்பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ
ஓர் அடியைப் பரப்பி வைத்து, அதன் கீழ் ஸமுத்ரங்களால் சூழப்பட்ட அனைத்து லோகங்களும் உள்ளது போன்று தாவி அளந்து, மற்றொரு திருவடியால் மேல் லோகங்கள் முழுவதையும் அளந்து கொண்ட வியக்க வைக்கும் செயல் புரிந்தவனே! உன்னைக் காணவேண்டும் என்று எப்போதும் துக்கம் அடைந்து, தீயின் அருகில் சேர்ந்த மெழுகின் இயல்பை அடைந்து இந்த நாட்டில் திரிவேனோ? அதாவது முடியவும் இயலாமல், உறுதியாக இருக்கவும் முடியாமல் தவிப்பேனோ?
– “உம்முடைய அபேக்ஷிதம் செய்யக் கடவோம். அதில் ஒரு குறையில்லை; ஆனாலும், ப்ரயோஜநம் உம்மதான பின்பு நீரும் சில யத்நம் பண்ண வேணுங் காணும்” என்ன; “இந்த மர்யாதை என்று தொடங்கிக் கட்டிற்று”, என்கிறார். அன்றியே, காண்கைக்குத் தாம் அயோக்யர் என்று உபேக்ஷித்தானாக நினைத்து, “யோக்யதாயோக்யதை பாராதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த உன்னாலே யிழக்கப்படுவார் உண்டோ?”, என்கிறாராகவுமாம்.
– ஸர்வேஸ்வரன் ஆழ்வாரிடம், “உமது விருப்பத்தை நான் பூர்த்தி செய்வோம். அதில் எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால் அவ்விதம் செய்யும்போது, அதற்கான பலனை நீவிர் அனுபவிக்க உள்ளதால், அதற்கு நீரும் சில முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்”, என்றான். இதற்கு ஆழ்வார், “இப்படி ஓர் எதிர்பார்ப்பு எப்போதிலிருந்து உனக்குத் தொடங்கியது?”, என்றார். அல்லது, “இவன் பார்வையில் நாம் அயோக்யன் என்று இவன் எண்ணுவான் என்பதாகப் பலரும் சிந்திப்பார்கள் என நீ நினைத்தாய். ஆகவே தகுதி உள்ளவர்கள் மற்றும் தகுதி அற்றவர்கள் என்று வேறுபாடு ஆராயாமல், அனைவருடைய தலைகளிலு த்ரிவிக்ரமனாக வந்து உனது திருவடிகளை வைத்தாய். இப்படிப்பட்ட உன்னால் விடுபட்டவர்கள் என்று யாரும் இருப்பாரோ?”, என்கிறார். . வ்யாக்யானம் - (பாயோரடி வைத்து) சேதநர் தலையிலே திருவடிகளை வைக்கிறபோது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன் க்ருபையாலே செய்தருளினாய் அத்தனையன்றோ! (பாயோரடி வைத்து) ஓரடியைப் பாவி வைத்து. (அதன் கீழ்) அத்திருவடியின் கீழே. (பரவை நிலமெல்லாம் தாய்) கடல் சூழ்ந்த பூமிப் பரப்படங்கலும், தாவி - அளந்தென்றபடி. ஸங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பிறே யளந்து கொண்டது; “பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதனி”றே! (பாயோரடி வைத்து) - அளவு கடந்த உபாயங்களைக் கொண்டு சேதநர்கள் பலரும் உன்னை அடைய இயலாமல் வருந்தினார்களோ? இல்லையே! ஆயினும் உனது திருவடிகளை அவர்கள் தலையில் வைத்தாய். வசிஷ்டர் மற்றும் சண்டாளர் என்ற வேறுபாடு ஆராயாமல் உனது க்ருபையை மட்டுமே கொண்டு நீ அருளினாய் அல்லவோ? (பாயோரடி வைத்து) – ஓர் அடியைப் பரப்பி வைத்து. (அதன் கீழ்) - அந்தத் திருவடியின் கீழே. (பரவை நிலமெல்லாம் தாய்) - ஸமுத்ரங்களால் சூழப்பட்ட முழு பூமியையும். (தாவி) – “அளந்த” என்று பொருள். தனது ஸங்கல்பம் அல்லது எண்ணத்தால் மட்டும் செய்யவில்லை, திருவடிகளை உயர்த்தி அதன் பின்னர் அல்லவோ அளந்தான்? இவ்விதம் பரப்பி அளந்ததற்கு ப்ரமாணம் திருச்சந்தவிருத்தம் (32) - பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் - என்பது ஆகும்; இப்படிப்பட்ட தாமரைத் திருவடிகள் கொண்டவன் அல்லவோ?
(ஓரடியாலெல்லாவுலகுந் தடவந்த) மற்றைத் திருவடியாலே ப்ரஹ்ம லோகத்தளவும் சென்று ஸ்பர்சித்த. (எல்லாவுலகும்) நடுவுள்ள லோகங்களெல்லாம். (தட வந்த) தென்றல் உலாவினாற்போலே. (மாயோன்) தன்னுடைமையை ஸ்பர்சிக்கைக்குத் தான் வ்யாமோஹம் பண்ணுமவன். (உன்னைக் காண்பான் வருந்தி) என்னளவில் வந்தவாறே என்னை இரப்பாளனாக்குகிறாயோ? அத்தலை யித்தலையாயிற்றோ? (எனை நாளும்) அநேக காலம். “மயர்வற மதிநலமருளி”ய பின்பு ப்ராப்தியளவும் செல்ல இடையிலுண்டான நாலு நாளும், “அவனெதிர் சூழல் புக்குத் திரிந்த” நாளோபாதி பரப்பாய்த் தோற்றுகிறபடி. (தீயோடுடன் சேர் மெழுகாய்) அக்நியிலே ப்ரவேசித்துக் கரிந்து போகவும் பெறாதே, தூரவிருந்து அழியாதிருக்கவும் பெறாதே, உருகுவது வலிப்பதாகிறபடி. மாநஸாநுபவத்தாலே யுருகுவது வலிப்பது, பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமையாலே உருகுவது வலிப்பதாய்ச் செல்லுகிறபடி. நசை வலிக்கப் பண்ண, ஆசையுருகப் பண்ணச் செல்லுகிறபடி. (உலகில் திரிவேனோ) ஒன்றில் ஜீவித்தல், ஒன்றில் முடிதல் செய்யப் பெறாதே, குளிர்ந்த வழியில்லாத தேசத்திலே யாதநா சரீரம்போல நானாருவன் இங்ஙனே திரிவதே!
(ஓர் அடியால் எல்லா உலகுந் தடவந்த) - மற்றொரு திருவடியால் ப்ரஹ்மலோகம் முடியச் சென்று ஸ்பர்சித்த. (எல்லா உலகும்) - நடுவில் உள்ள அனைத்து லோகங்களும். (தட வந்த) - தென்றல் உலவியது போன்று. (மாயோன்) – தனது உடைமைகளை ஸ்பர்சிப்பதற்குத் தான் மயக்கம் கொள்பவன். (உன்னைக் காண்பான் வருந்தி) - “என் அளவில்” என்று தொடங்கி காணப்படும் இரண்டு வாக்கியங்கள் மூலம் தனது துயரத்தைக் கூறுகிறார். அனைவரிடமும் நீ யாசகம் பெற்ற பின்னர், என்னிடம் வரும்போது மட்டும் என்னை யாசிக்கும்படிச் செய்கிறாயோ? அவர்களிடம் யாசகம் கேட்டு நீ என்னை உன் நிலையில் வைத்தாயோ? – (எனை நாளும்) - எல்லையற்ற, தொடக்கம் அறியாத காலங்கள். ஆழ்வார் இங்கு சில காலம் மட்டுமே உள்ளவர்; ஆயினும் ஏன் “பல காலம்” என்றார்? இதற்கு விடை கூறுகிறார்; “மயர்வற மதிநலம் அருளப்” பெற்ற பின்னர், பேற்றின் அளவு முடிய செல்வதற்கு இடைப்பட்ட காலங்கள், “நான்கு நாள்கள்” என்று கூறலாம்படி குறுகியதாக உள்ளபோதிலும், அவன் திருவாய்மொழி (2-7-6) - எதிர் சூழல் புக்கு திரிந்த - என்று கூறுவதற்கு ஏற்ப இருந்த நாள்கள் போன்று மிகவும் பரந்து காணப்படுகின்றன. (தீயோடுடன் சேர் மெழுகாய்) - அக்னியில் சேர்ந்து எரிந்து போகவும் செய்யாமல், அதிலிருந்து சற்று தள்ளி இருந்து அழிவதும் அடையாமல், உருகுவதும் இறுகுவதும் என்பதாக உள்ள மெழுகு போன்று. மனதில் ஏற்படும் அனுபவம் மூலம் முழுவதும் உருகுவதும் இறுகுவதும் என்ற நிலையானது, நேரில் காணுதல் என்பது ஏற்படாமல் உள்ளதால் உருகுவதும் இறுகுவதும் என்பதைக் கூறுவதாகிறது. மனதால் ஏற்படும் அனுபவம் என்பது, ஒரு குணத்தை அனுபவிக்கும்போது, அது வேறு ஒரு குணத்தின் மீது ஆசையை உண்டாக்கும்; அப்போது அந்த வேறு ஒரு குணத்தின் அனுபவம் கிடைக்காமல் உள்ளதால், உருகுதல் மற்றும் அது கிட்டியவுடன் தரித்தல் என்பதாக உள்ள நிலை. நேரடியாக அர்ச்சாவதாரத் திருமேனியைக் காணும்போது அவன் கிட்டப் பெறாமையால் ஏற்படும் ஆசையால் உருகுதல்; “ஒரு வேளை காண இயலுமோ” என்ற சாபலத்தை ஏற்படுத்தி, அத்தகைய மேன்மையைக் காண இயலாததால் இறுகுவது என்பதாகும். அதாவது “காண இயலுமோ” என்ற சாபலம் இறுக்குகிறது, ஆசையானது உருக்குகிறது. (உலகில் திரிவேனோ) - ஒரு நிலையில் பிழைத்தலும், மற்றொரு நிலையில் முடிதலும் செய்ய இயலாமல். குளிர்ந்த வழி அறியாத தேசத்தில், நரகத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற சரீரம் கொண்டவனாக நான் ஒருவன் இவ்விதம் திரிகின்றேனே!