திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 5)
ஆறாம்பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவி உள் மீது ஆடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ
நித்யஸூரிகளால் எப்போதும் அனுபவிக்கும்படியாக, மேன்மைக்கு எல்லையான பரமபதத்தில் அனைத்திற்கும் ஆத்மாவாக நிற்பவனே! ஞானத்தால் தாழ்ந்தவர்களுக்கும் முகம் காண்பிப்பதற்காக, நீர்மைக்கு எல்லையான திருவேங்கடமலை மீது அர்ச்சாவதாரமாக நிற்பவனே! நான்முன் போன்றவர்கள் அண்டுவதற்காகத் திருப்பாற்கடலில் அநிருத்தன் போன்ற வ்யூஹங்களாக வருவதற்கு ஏற்ப திருக்கண்கள் வளர்பவனே! அறிவில் தாழ்ந்தவர்களை, அழகு கொண்டு வசீகரம் செய்வதற்காக, இங்குள்ளவர்களுடன் சேர்ந்து சமமாக ஸஞ்சரித்தவனே! இந்த ஜகத்தில் உள்ள அனைத்து வஸ்துக்களிலும் அந்தர்யாமியாக, இந்த்ரியங்கள் ஏதும் அவசியம் இன்றி வசிப்பவனே! எண்களுக்கும் அப்பாற்பட்டதும், புறம்புள்ளதும் ஆகிய அண்டங்களிலும் உள்ளவனே! நீ எனது நெஞ்சத்தில் அதிகமாக நடையாடிய பின்னர், கண்களுக்குப் புலப்படாமல் மறைவாயோ?
ஸர்வத்ர ஸந்நிஹிதனாய் என் ஹ்ருதயத்திலும் ஸ்பஷ்டமாக ப்ரகாசித்து, என் கண்ணுக்கு விஷயமாகாதொழிந்தால் நான் தளரேனோ?”, என்கிறார்.
– “அனைத்து இடங்களிலும் அருகாமையில் இருந்தும், எனது இதயத்தில் தெளிவாகப் ப்ரகாசித்தும் நீ உள்ளபோதிலும், எனது கண்களுக்குப் புலப்படாமல் இருந்தால் நான் தளர்ந்துபோக மாட்டேனோ?”, என்கிறார்.
(விண்மீதிருப்பாய்) ஸதாதர்சநம் பண்ணும்படியான பாகம் பிறந்தவர்களுக்குக் காட்சி கொடுத்திருக்கும்படி. இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரமபதத்திலிருப்புக் காணும் முற்படத் தோற்றுகிறது. (மலை மேல் நிற்பாய்) நித்யஸூரிகளையும் நித்யஸம்ஸாரிகளையும் ஒரு துறையிலே நீருண்ணப் பண்ணுகிறவிடம். இங்குள்ளாரும் தன்னிலையில் வாசியறியும்படி ருசி ஜநகனாய் நின்றபடி. “வேங்கடத்தாடு கூத்தனி”றே. (கடற் சேர்ப்பாய்) கால்நடை தந்து போகவல்ல ப்ரஹ்ம ருத்ராதிகளுக்காகத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தபடி. “விண்மீதிருப்பாயெ”ன்று இருப்பில் வீறு சொன்னார்; “மலை மேல் நிற்பாயெ”ன்று நிலையில் வாசி சொன்னார்; (கடற் சேர்ப்பாய்) கிடையழகு திருப்பாற்கடலிலே பர்யவஸிதம். (மண் மீதுழல்வாய்) அவ்வளவு போகமாட்டாத ஸம்ஸாரிகளுக்காக அவதரித்து, அவர்கள் கண்வட்டத்திலே திரியுமவனே! (உழல்வாய்) “தாம்பாலாப்புண்டாலும் அத்தழும்பு தானிளகப் பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும்” என்கிறபடியே அநுகூலராய்க் கட்டுவாரும் ப்ரதிகூலராய்க் கட்டுவாருமான ஸம்ஸாரமிறே. (இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்) கண்ணாலே காணில் சிவிட்கென்னு மவர்களுக்கு, அவர்கள் காணவொண்ணாதபடி மறைந்து வர்த்திக்குமவனே! விஷய ப்ரவணமான ப்ரஜை “தாய் முகத்திலே விழியேன்” என்றால், தான் மறைய நின்று அவனுகந்தாரையிட்டு ரக்ஷிக்குந் தாயைப்போலே. அதாகிறது, சிசுபாலாதிகள் நறுகுமுறுகு என்றால், அவர்கள் கண்ணுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி. (எண் மீதியன்ற புறவண்டத்தாய்) எண்ணுக்கு மேலே வர்த்திக்கிற மற்றுள்ள வண்டங்களிலும் இப்படி வர்த்திக்கிறவனே! “கோடி கோடி சதாநிச”இறே. (என தாவியுள் மீதாடி) என் ஹ்ருதயத்தினுள்ளே குறைவற ஸஞ்சரித்தென்னுதல், என்னாத்மாவுக்கு உள்ளும் புறம்பும் ஸஞ்சரித்தென்னுதல். (உருக்காட்டாதே யொளிப்பாயோ) வடிவு காணப் பெறாவிட்டால், மறந்து பிழைக்கவும் பெறாதொழிவதே. குண ஜ்ஞாநத்தாலே தரிப்பார்க்கன்றோ வடிவு காணாதொழிந்தாலும் தரிக்கலாவது?
– (விண் மீதிருப்பாய்) - எப்போதும் காணலாம்படியாக, நித்யஸூரிகளுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் விதம். இங்கு அருகாமையில் உள்ள அர்ச்சாவதார விக்ரஹத்தை முதலில் கூறாமல் “விண் மீது இருப்பாய்” என்று ஏன் கூறினார் என்றால், அவன் இங்குள்ள இருப்பைக் காட்டிலும் பரமபதத்தில் உள்ள இருப்பே முதலில் தென்படுகிறது. (மலை மேல் நிற்பாய்) - நித்யஸூரிகளையும் நித்யஸம்ஸாரிகளையும், ஒரே இடத்தில் நீர் பருகும் துறை போன்று செய்யவல்ல திருவேங்கடம். இங்கு உள்ளவர்கள் கூட, தனது நிலையின் மேன்மையை அறிந்து ருசி பிறக்கும்படியாகச் செய்பவன். ஆனால் திருவேங்கடமலையில் நிற்கும் நிலையானது ருசியை ஏற்படுத்துமோ என்பதற்கு ப்ரமாணம் பெரியதிருமொழி (2-1-9) - வேங்கடத்து ஆடு கூத்தன் – என்பது காண்க. (கடற் சேர்ப்பாய்) - மிகவும் அருகாமையாக உள்ளதால், கால்நடையாகவே வந்து தரிசனம் செய்யலாம்படி நான்முகன் ருத்ரன் போன்றவர்களுக்காக திருப்பாற்கடலில் வந்து கிடக்கும் நிலை. “விண் மீது இருப்பாய்” என்று அமர்ந்துள்ள கம்பீரம் கூறினார். “மலை மேல் நிற்பாய்” என்று நிற்கின்ற நிலையின் வேறுபாடு கூறினார். (கடற் சேர்ப்பாய்) - திருப்பாற்கடலில் சயனித்த அழகு நிரம்பி நின்றது. (மண் மீது உழல்வாய்) - அந்தந்த இடங்களுக்குச் செல்ல இயலாதபடி உள்ள ஸம்ஸாரிகளுக்காக அவதரித்து, அவர்கள் கண்பார்வை முன்பாகத் திரிபவனே! (உழல்வாய்) – விபவரூபம் எடுத்து ஸஞ்சாரம் செய்த நிலைகளை “திரிவாய்” என்று கூறாமல் “உழல்வாய்” என்று ஏன் கூறினார்? பெரிய திருவந்தாதி (18) – தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் - என்பதற்கு ஏற்ப, இவனுக்கு விருப்பமாக உள்ள யசோதை போன்றவர்களும், இவனுக்கு விரோதமாக உள்ள காளியன் போன்றவர்களும் இவனைக் கட்டி வைப்பது இந்த ஸம்ஸாரத்தில் ஆகும் என்பதால் “உழல்வாய்” என்றார். – (இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்) - கண்ணால் காணும்போது கோபம் கொள்பவர்களுக்கும் அல்லது பொறாமைப்படுபவர்களுக்கும், அவர்கள் காண இயலாதபடி மறைந்து நிற்பவனே! மறைந்து நிற்பதும் உபகாரமே ஆகும் என்பதை ஓர் உதாரணம் மூலம் கூறுகிறார். தாழ்ந்த விஷயங்களில் ஈடுபாடு கொள்வதன் காரணமாக ஒருவன் “நான் எனது தாயின் முகத்தில் விழிக்கமாட்டேன்” என்று கூறினால், அந்தத் தாயானவள் அவன் கண்களில் படாமல் மறைந்து நின்று, அவனுக்குப் பிடித்தவர்கள் மூலம் அவனைக் காப்பாற்றுவது போன்று இவனும் செய்கிறான். அதாவது சிசுபாலன் போன்றவர்கள் பொறாமை கொள்ளும்போது அவர்களுடைய கண்களுக்குப் புலப்படாதபடி அந்தர்யாமியாக நின்று, மற்றவர்களை நோக்கும் விதம். – (எண் மீதியன்ற புற அண்டத்தாய்) - எண்களுக்கும் அப்பால் உள்ள மற்ற அண்டங்களிலும் “பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை” என்பதான நிலைகளில் உள்ளவனே! இவ்விதம் பல அண்டங்கள் உள்ளன என்பதற்கு ப்ரமாணம், ஸ்ரீவிபு (2-7-97) - கோடி கோடி சதாநிச - இப்படிப்பட்ட அண்டங்கள் கோடிகோடியாக உள்ளன – என்பது ஆகும். (எனது ஆவியுள் மீது ஆடி) - “எனது ஆவி மீது” என்பதற்கு இரண்டுவிதமாகப் பொருள் கூறுகிறார். முதல் பொருளில் “மீது” என்பதற்கு, “மிகுதி மற்றும் குறைவு இல்லாமல்” என்று கூறுகிறார்; எனது இதயத்தில் எந்தக் குறைவும் இன்றி ஸஞ்சரித்தல். இரண்டாவது பொருளில் “மீது” என்பதற்கு, “மேலாக மற்றும் புறம்” என்று பொருள் கூறுகிறார்; அதாவது எனது ஆத்மாவின் உள்ளிலும் புறத்திலும் ஸஞ்சரித்தல். (உருக்காட்டாதே ஒளிப்பாயோ) – இதனைக் கேட்ட ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நம்முடைய வடிவத்தைக் காண இயலவில்லை என்றால் என்ன? நம் குணங்களை எண்ணிப் பிழைத்திருக்க முடியாதோ”, என்பதற்கு விடை கூறுகிறார்; குணங்களுடைய ஞானம் கொண்டு உயிர் தாங்க இயல்பவர்கள் மட்டுமே, வடிவத்தைக் காண இயலாதபோதிலும் தரிக்க இயலும் அல்லவோ?