திருவாய்மொழி - ஆறாம்பத்து (பாசுரம் 4)
ஆறாம்பத்து
ஒன்பதாம் திருவாய்மொழி
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே
– சகடாசுரனுடைய உடலானது “கட்டுக்குலைந்தும், முறிந்தும், வேறாம்படி பிளந்தும், உருவம் தெரியாமல் மாய்ந்தும்” என்றாகும்படியாகத் திருவடியால் அந்தக் கார்யத்தைச் செய்வித்துக் கொண்ட ஸ்வாமியே! தாங்கள் ஈச்வரர்கள் என்ற எண்ணத்தை அகற்றி, நான்முகனும் ருத்ரனும் இந்த்ரனும் தேவர்களும் சூழ்ந்து வந்து வணங்க, அவர்களுக்கு நாயகனான உனது தேஜஸ் வெளிப்படும்படியாக, ஸ்ரீகஜேந்த்ரனுக்கு வந்தது போன்று ஒருநாள் ஆகாயத்தின் மேலே, எனது கண்களுக்குப் புலப்படும்படியாக வரவேண்டும்.
“தளரக் கடவீரல்லீர்; உம்முடைய தளர்த்தி பரிஹரிக்கக் கடவோமானாலும், ப்ரதிபந்தகம் கனத்திரா நின்றது காணும்” என்ன; “ஓம், அப்படியே; சகடாசுரனிலுங் காட்டில் வலியதிறே என்னுடைய விரோதி” என்கிறார். “உன் கால் கண்டபோதே போகாதோ” என்கிறார். “அடிபடிற் செய்வதென்?” என்று “சும்மெனாதே கைவிட்டோடு”மிறே.
– ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், “நீவிர் தளர்ந்து போகக்கடவர் அல்லர். உமது தளர்ச்சியை நாம் விலக்குவோம். ஆயினும், நாம் அவ்விதம் செய்வதற்கு உம்மிடம் தடைகள் உள்ளனவே” என்றான். இதற்கு ஆழ்வார், “ஓகோ! அப்படியா! சகடாசுரனைக் காட்டிலும் எனது விரோதிகள் வலிமையானதா? சகடாசுரனை அழித்த உனக்கு எனது தடைகளைப் போக்குவதில் சிரமம் உள்ளதோ? உனது காற்றும் திருவடியும் கண்டவுடன் அவை ஓடிவிடாதோ? இவனுடைய திருவடியால் நமக்கு அடிப்பட்டால் என்ன செய்வது என்று அவை திகைத்து, பெரியாழ்வார் திருமொழி (5-4-3) - சும்மெனாதே - ஓடும் அல்லவோ?”, என்றார்.
(தளர்ந்தும் இத்யாதி) - சகடாசுரன் கட்டுக்குலையா, முறியா, உடல் வேறாகப் பிளந்து வீய; “சிந்நம் பிந்நம் சரைர் தக்தம் ப்ரபக்நம் சஸ்த்ர பீடிதம்” என்கிறபடியே. பின்பு, திரளச் சொல்ல துகளுங் காணவொண்ணாதபடியாகை. சகடாசுர நிரஸநம் பண்ணினானென்று வமைந்திருக்க, “தளர்ந்தும்”, “முறிந்தும்” என்று தனித்தனியே சொல்லுகிறாரிறே, ப்ரதிபக்ஷ நிரஸநமாகையாலே அவ்வோ அவஸ்த்தைகள் தமக்கு இனிதாயிருக்கையாலே. (திருக்காலாண்ட) அடியாரையாண்டால் ஆபத்துக்கு உதவுவர்களிறே. இவன் மௌக்த்யத்தாலே யொன்றுமறியாதே கிடக்க, திருவடிகள் கிடீர் நம்மை நோக்கிற்று என்கிறார். “ஸ்தந்யார்த்தீ ப்ரருரோதஹ” என்கிறபடியே முலை வரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்; அவ்வளவிலே பொடிபட்ட வித்தனை; “உருளச் சகடமதுறக்கில் நிமிர்த்தீர்” என்று இவனும் அறிந்து செய்தானல்லன். தன்னையுணர்ந்து பரிமாறும்போது திவ்யாயுதமும், அவையுதவாதபோது கையும், அதுவும் உதவாதபோது திருவடிகளுமாயிருக்கிறபடி. நம்முடைய ஆபத்துக்களுக்கே யன்றிக்கே, அவனுடைய ஆபத்துக்கும் திருவடிகளே காணும் உதவுவது! திருமேனிதான் ஆச்ரிதார்த்தமாகையாலே, அவர்கள் விரோதி போகைக்கும் அதுதானே யுறுப்பா யிருக்கை. (பெருமானே) அன்று சேஷியையுண்டாக்கின உனக்கு இன்று சேஷ வஸ்துவை உண்டாக்குகை பெரிய பணியோ? அவன் ப்ரகாரியானால், ப்ரகாரமாயுண்டாமதிறேயிது. (கிளர்ந்து இத்யாதி) “கும்பிடு நட்டமிட்டாடி” என்கிறபடியே அநந்யப்ரயோஜநரைப்போலே, அவசராய்க் கொண்டு ப்ரஹ்ம ருத்ராதிகள், ப்ரதாநரோடு அப்ரதாநரோடு வாசியறக் கிண்ணகம் சுழித்தாற்போலே சூழச் சூழப்பட்டு, இருட்டில் விளக்குப் போலே “தேஜஸாம்ராசிமூர்ஜிதம்” என்கிறபடியே தேஜஸ்ஸே வடிவான திருமேனியைக் கொண்டு, ஒருநாள் ஆனைக்கு வந்து தோற்றினாற்போலே, ஆகாசமடங்கலும் இடமடைக்கும்படி வந்து தோற்ற வேணுமென்கிறார். (விளங்க) இவன் ஸந்நிதியில் ப்ரஹ்மாதிகள் தேஜஸ்ஸு “தமஸ்ஸு” என்னும்படி யிருக்கிறபடி. (ஒருநாள்) “நூறாண்டு, பதினோராயிரமாண்டு” என்று அர்த்தித்தேனோ! (காண வாராய்) “நீணகர் நீளெரி வைத்தருளாயெ”ன்கிறேனோ! (விண் மீதே) இங்கே வந்தவதரிக்கச் சொல்லுகிறேனோ!
– (தளர்ந்தும் இத்யாதி) - சகடாசுரன் கட்டுக் குலைந்து, முறிந்து, உடல் வேறாகப் பிளக்கப்பட்டு விழுந்தான். இந்த மூன்றுக்கும் ப்ரமாணம் கூறுகிறார்; யுத்தகாண்டம் (94-22) - சிந்நம் பிந்நம் சரைர் தக்தம் ப்ரபக்நம் சஸ்த்ர பீடிதம் - இராமனால் அறுக்கப்பப்பட்ட, பிளக்கப்பட்ட, கொளுத்தப்பட்ட, முறிக்கப்பட்ட கத்தி போன்று ஆயுதங்களால் வெட்டப்பட்ட அரக்கர்களைக் கண்டனர் – என்பது காண்க. “வீய” என்பதற்கு “பின்பு” என்று தொடங்கி பொருள் கூறுகிறார்; தொடர்ந்து அவன் முறிந்து விழுந்த துகள்களைக் கூட காண இயலாதபடி இருந்தது. “சகடாசுரனைக் கொன்றான்” என்று மட்டும் கூறினால் போதாதோ; “தளர்ந்தும், முறிந்தும்” என்று ஏன் தனித்தனியே கூறவேண்டும்? இதற்கு விடை அளிக்கிறார்; இந்தச் செயலானது பகைவர்களை அழித்தல் என்பதால், அந்த விரோதி மாயும்போது உள்ள ஒவ்வொரு நிலையும் தனக்கு இனியதாக உள்ளதால் இவ்விதம் கூறுகிறார். – (திருக்காலாண்ட) – “திருக்காலால் அழித்த” என்று கூறாமல் “திருக்காலை ஆண்ட” என்று ஏன் கூறினார்? நமக்கு வசப்பட்டவர்களை ஆண்டால் ஆபத்து காலத்தில் உதவி செய்வார்கள் அல்லவோ என்பதால் ஆகும். இங்கு ஈச்வரன் சகடாசுரனை அழித்த போதிலும், “திருவடிகள் அழித்தன” என்று ஏன் கூறினார்? “இவன் தனது ஏதும் அறியாத வயது காரணமாக, ஒன்றும் அறியாமல் கிடந்தான்; அப்போது திருவடிகள் அல்லவோ நம்மை நோக்கின”, என்கிறார்; இதற்கு ப்ரமாணம் கூறுகிறார்; ஸ்ரீவிபு. (5-6-1) - ஸ்தந்யார்த்தீ ப்ரருரோதஹ - தாய்ப்பால் வேண்டியவனாக அழுதான் - என்பதற்கு ஏற்ப, தாய்ப்பாலை அளிப்பதற்குச் சற்று தாமதம் ஆயிற்று என்பதால், தூக்கத்தில் திருவடிகளை நிமிர்த்தான்; அந்த நொடியில் சகடாசுரன் பொடியானான். இவன் தூக்கத்தில் காலை நிமிர்த்தான் என்பதற்கு ப்ரமாணம் பெரியதிருமொழி (10-8-3) - உருளச் சகடமதுறக்கில் நிமிர்த்தீர் - என்பதற்கு ஏற்ப, இவன் அறிந்து கொண்டு செய்யவில்லை. ஆனால் திருக்கரங்களில் திவ்யமான ஆயுதங்கள் உள்ளபோது, திருவடிகள் கொண்டு அழித்தது ஏன் என்பதற்கு விடை அளிக்கிறார். தன்னை உணர்ந்து செயலாற்றும்போது திவ்ய ஆயுதங்களும், அவை உதவாதபோது திருக்கரமும், அதுவும் உதவாதபோது திருவடிகளும் என்று உள்ளான். ஆனால் திருவடிகள் நம்முடைய பல ஆபத்திற்கு உதவுபவை அல்லவோ என்றால், நமது ஆபத்துக்களுக்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு நேரவல்ல ஆபத்திற்கும் திருவடிகளே உதவுகின்றன. அப்படியானால், திருவடிகள் அவனுடைய திருமேனிக்கு ஏற்படவிருந்த ஆபத்தைப் போக்கின; இவ்விதம் உள்ளபோது இவை அடியார்களுடைய விரோதிகளைப் போக்குவது எப்படி என்பதற்கு விடை அளிக்கிறார்; அவனுடைய திருமேனியாவது அடியார்களுக்காகவே என்றுள்ளதால், அடியார்களுடைய விரோதியைப் போக்குவது திருவடிகளே ஆகும். – (பெருமானே) - அன்று “சகடாசுரனைப் பிளந்து திருவடிகளை ஆண்ட எஜமான்” என்பதை நிலை நிறுத்திய உனக்கு, இன்று இந்த அடிமையை அவ்விதம் நிலை நிறுத்துவது பெரிய செயலோ? அவன் ப்ரகாரி என்றால், இவை அனைத்தும் ப்ரகாரங்கள் அல்லவோ? (கிளர்ந்து இத்யாதி) – திருவாய்மொழி (3-5-4) - கும்பிடு நட்டமிட்டாடி – என்பதற்கு ஏற்ப, உன்னை அன்றி மற்றொரு பயன் கருதாமல் உள்ளவர்கள் போன்று, தன் வசம் இல்லாதவர்களாகிய நான்முகன், ருத்ரன் போன்றுள்ள முதன்மையான தேவர்கள் மற்றும் அவ்விதம் முதன்மை அல்லாதவர்கள் என்பதாக உள்ள வேறுபாடுகள் இன்றி, அவர்களால் வெள்ளம் போன்று சூழப்பட்டு. இங்குள்ள “விளங்க” என்பதற்குப் பொருள், நான்முகன் ருத்ரன் போன்றவர்களுடைய தேஜஸ் என்பது இருளுக்குச் சமம் என்பதாகும். அந்த இருளில் ஒரு விளக்கு போன்று; இதற்கு ப்ரமாணம் ஸ்ரீவிபு. (1-19-67) - தேஜஸாம்ராசிமூர்ஜிதம் - ஒளிகளின் கூட்டம் - என்பதாகும். இவ்விதம் தேஜஸ் என்பதே ஒரு வடிவம் போன்றுள்ள திருமேனியைக் கொண்டு, ஒருநாள் யானைக்கு முன்பாக வந்து தோன்றியது போன்று, ஆகாசம் முழுவதும் அடைத்துக் கொள்ளும்படியாக இங்கு வந்து தோன்றவேண்டும் என்கிறார். (விளங்க) - இவன் அருகில் உள்ளபோது, நான்முகன் முதலானவர்களுடைய தேஜஸ் என்பது “தமஸ் - இருள்” என்று கூறலாம்படியாகவே உள்ளது. (ஒருநாள்) - நூறு ஆண்டுகள் க்ருஷ்ணனைப் போன்றும், பதினோராயிரம் ஆண்டுகள் இராமன் போன்றும் வரவேண்டும் என்று ப்ரார்த்தனை செய்தானோ? ஒருநாள் மட்டும் வந்தாலே போதுமானது என்கிறேன். (காண வாராய்) - திருவிருத்தம் (92) - நீணகர் நீளெரி வைத்தருளாய் - என்பது காண்க. (விண் மீதே) - இங்கே வந்து அவதரிக்க வேண்டும் என்று கேட்கிறேனோ? விண் மீது காட்சி கொடுத்தால் போதுமானது என்கிறேன்.